சுடலையாண்டவர்

2

ரமேஷ் ரக்சன்

மாரடித்து அழுவது தன் கணவன் முன்பாகத்தானா என்று வேணிக்கு சந்தேகம் வராத அளவிற்கு முகத்தை கொஞ்சம்போல விட்டுவைத்துவிட்டு பூத உடலை பொதிந்து இறக்கி வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். நேராக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லவிருந்த உடலை “அந்தப் புள்ளைக்காகவாவது வீட்டுக்கு கொண்டு வந்துட்டு எடுங்கப்பா” என்பதை யாரோ சொல்ல யாரோ ஏற்றனர். ஊர் பக்கத்தில் வண்டி வந்துவிட்ட தகவல் சொன்னதும் ரோடேறியிருந்தாள். திருப்பத்தில் ஆம்புலன்ஸின் பின்சக்கரத்தில் சிக்க வேண்டியவளை யாரோ தன்பக்கம் வெடுக்கென எட்டி இழுத்தார். சேலை தெத்தி விழாமலிருக்க சேலையை ஏந்திப் பிடித்துக்கொண்டு வண்டி பின்னாடியே ஓடினாள். ராகேஷ் நடப்பவை யாவற்றையும் ஊமை நாடகமாகப் பார்த்துக்கொண்டு நின்றான். தன் தாயோடு சேர்ந்து ஊரார் ஓடுவதைப் பார்த்து அவனும் முட்டி மடங்காத ஓட்டம் ஓடினான்.

துக்க வீட்டிற்கு உண்டான எந்தச் சடங்கையும் செய்ய விரும்பாமல், அங்கு மண்டிக்கிடந்த துக்கத்தைக் கலைக்க மனமின்றி கோபாலு வெறுமனே வெள்ளை வானம் பார்த்துக்கொண்டு நின்றார். ஒப்புக்கு பச்சையோலை பந்தல் போடப்பட்டிருந்தது. அவருக்கு தன்னால் சங்கு ஊத முடியும் என்று தோன்றவில்லை. துண்டின் முனையில் கட்டி தோளில் தொங்கப்போட்டது முதுகில் அப்படியே கிடந்தது. அதன் எடையை முதல்முறையாக உணர்ந்தார். நேரம் சென்றதே ஒழிய எல்லோரும் அணக்கம் காட்டாமல் நின்றிருந்தனர். “நேரம் ஆவுதும்மோ” – சொல்ல முற்படும் போதெல்லாம் விம்மிக்கொண்டு வந்தது. அப்படியெல்லாம் ஊரார் முன் உரிமை கொண்டாடி அழுதுவிட முடியாதென கோபாலுக்கும் தெரியும். சும்மா நின்றார்.

பெண்களும் கூட வேணியை அப்படியே விட்டிருந்தனர். கோபாலுவின் முகத்திற்கு நேரே டவலை அசைத்துக்காட்டி “ஆகவேண்டியத பாரு இருட்டுது” என்றார் ஒருவர். இவர்களின் செய்கை வேணியின் அழுகையை திசை திருப்பியது. கோபாலின் கண்ணீர் விண் முட்டி நின்றது. தன்னைச்சுற்றி ஆண்கள் நிற்கும் ஓர்மை வர,  இரண்டாவது முறையாக ஜாக்கெட்டின் கடைசி ஊக்கைப் போட முயன்றும் அழுகையின் வழியே உண்டான கை நடுக்கம், போட முடியவில்லை. சுடலை வந்து ஆடும்போது, எரியும் தீப்பந்தத்தில் ஊடே ஊடே எண்ணெய் ஊற்றும் கோபாலுவைப் பார்த்தாள். கொண்டை போட்டபடி எழுந்தவள் மொத்த அழுகையையும் விழுங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி ஓட ஆரம்பித்தாள். “லூசுமட்ட வண்டில எதும் வுழுந்துறாம ஓடி போய் புடிங்க” என்று அங்கிருந்த பெண்கள், ஆண்களை விரட்டினர்.

தெருவோரம் நின்று சாமியாடி சேகர், சாமியாடி வரும் அழகைப்பற்றி பேசி நின்றவர்கள் மறைத்தற்கு, “சாவ மாட்டேன் விடுங்க” என்று ஓட்டமும் நடையுமாக சென்ற வேணியைப் பின் தொடர்ந்து சென்ற சிலரின் பெயர்களைச் சொல்லிவிட்டு, எட்டு வைத்து ஓடமுடியாத பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த கதையை  நிறுத்திக்கொண்டு வேணியின் வருகையை எதிர்பார்த்து நிற்கத் தொடங்கினர்.

கையில் அரிவாளோடு, எண்ணெய் ஊறிப்போய் கருத்த உடலோடு மைனர் செயினில் “சுடலைமாடன்” பெயர் மினுங்க, கிழக்கு நோக்கி முறுக்கு மீசையோடு நின்றிருந்த சுடலைமாடனைப் பார்த்து காரித்துப்பினாள். மூன்றுமுறை மண்ணள்ளித் தூற்றினாள். “இத்தன வருஷம் ஒண்ணைய சொமந்த அந்த மகராசன எடுத்துட்டு எங்கள நட்டாத்துல விட்டுட்டல்லா? எம்புருஷனோட போய்ரு. என் புள்ள மேல வராத. காலேஜ்லாம் படிக்கணும். இதோட போய்ரு. வேற யாரனா புடிச்சிக்க. எங்கள விட்ரு”

“சாமியாடினவன் குடும்பம் எவன் குடும்பம் வெளங்கியிருக்கு? சீரழிஞ்சி போவும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கானுவ.” 

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்குள் தலையில் நன்றாக முடி வளர்ந்திருந்தது கல்லூரி சேர்ந்த புதிதில், விடுதி அறையில் வைத்து ஒவ்வொரு முறை அரசு கொடுத்த மடிக்கணினியை திறக்கும் போதெல்லாம், பலிபீடத்தின் மீது ஏறி நின்ற பூட்ஸ் கால்களும், சுடலைமாடன் ஆடுபவரை மைக்கில் “என் கைய கட்டிருப்பா அந்தந்த இடத்துல பலி குடுத்துக்கிடுங்க” என்று சொல்ல வைத்த காக்கிக் கூட்டங்களும், கண்முன்னே வந்துகொண்டே இருந்தது. கேரளத்து மந்திரவாதிகளை வரவழைத்துப் பெண்கள் பயன்படுத்திய தீட்டுத்துணியை கற்சிலைக்கு நடுவே வைத்து ஒத்தப்பனை சுடலை ஆண்டவரை கட்டிப்போட்டதாக கொடை முடிந்து ஊருக்கு வந்துசேர்ந்த பிறகு, ராகேஷ்-க்கு சொல்லப்பட்ட கதையும் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பூட்ஸ்கால்கள் மட்டும் மனதில் தங்கிப்போனது. ஒரு கட்டத்தில் அந்தக் கால்களை தன் தலைமீது வைத்து நிற்பதாகப்பட்டது. கொடை என்றால் பத்து போல கிடா மட்டுமே கீறும் தன் ஊரினை சபித்திருக்கிறான். ஆயிரத்தில் வெட்டப்படும் பக்கத்து ஊரினை ஏக்கப்பெருமூச்சோடு நினைக்கையில், சைவ பூஜை அவனை நெடு நாட்களுக்கு தொந்தரவு செய்வதாக இருந்தது.

‘ஒரு புள்ள போதும் ஒரு புள்ள போதும்’ என்று கேட்போரிடத்தில் எல்லாம் சொல்லி வந்த வேணிக்கு அந்த ஒரு புள்ளையையும், ஊர்வாடையே வேண்டாமென ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வந்தபிறகு, களைவெட்டு வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் இருந்தது. காலை 6 மணிக்கு வேலைக்குச் சென்று 2 மணிக்கு கரையேறி, வாய்க்காலில் திறந்து விட்டிருக்கும் தண்ணீரில் வெயிலுக்கு இதமாக சேலைக்கு மேலேயே அரக்க பறக்க தண்ணீர் ஊற்றிவிட்டு, வீட்டிற்கு வந்தாள் என்றால், காலையில் தூக்கு வாளியில் ஊற்றிச்சென்ற கஞ்சி போக, குத்துச்சட்டியில் நுரையடித்துக் கிடக்கும் தண்ணீரை மாற்றி நாரத்தங்காய் ஊறுகாய் வைத்து சாப்பிடுவாள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு தூக்கம். ஐந்து மணி ஆகியிருக்கும்.

ஒவ்வொருமுறையும் கடைவீதிக்குச் சென்று குழம்பிற்குத் தேவையானதை வாங்கிவிட்டுத் திரும்பும் போது யாராவது ஒருவர், “பிடிவாதக்காரி இந்த வருஷம் மகன கொடைக்கு வரவிடாம வச்சிக்கிகிட்டாளே -அட விடுப்பா சாமி என்ன வேற யாரு மேலயுமா எறங்குச்சி. சின்ன பைய தான. கொண்டு வரணும்னு நெனச்சிட்டா யாரால தடுக்க முடியும்? எப்படி நாளும் கொண்டுட்டு  வருவாரு. என்ன ஒண்ணு கோயில்கொடதான் சுடலை ஆடாம பாக்க நல்லா இல்ல”

என்.சி.சி அவன் கனவை இன்னும் கூர்மையாக வளர்த்தெடுக்க உதவியது. முட்டி மடங்காத அவன் கால்களை முதலில் பழித்தான். பின்பு தன்னை வருத்தி மெருகேற்றினான். பாலிடெக்னிக் முடிக்கவேண்டும் என்ற இலக்கை விட, அவன் விரும்பும் உடலைக் கண்டுவிட வேண்டும் என்பது தீயில் எண்ணையூறிக் கிடந்தது. பெண்களே இல்லாத அவன் துறையில் அவன் கவனமெல்லாம் தன் உடல் மேலேயே குவிந்து கிடந்தது. கண் மூடினால் கல்லூரியின் அவ்வளவு பெரிய மைதானத்தில் அவன் ஒருவன் மட்டும் தனித்து ஓடிக்கொண்டும், ஈட்டி எறிந்து கொண்டும், தண்டால் எடுத்துக்கொண்டும் இருப்பான். கண் திறந்தாலும் அவன் அப்படித்தான். தான் வணங்கப்படப்போகும் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.                        

தன் அப்பாவைப்போல உடலில் முடி முளைக்காததற்காக மிகவும் சந்தோஷப்பட்டான். தன் உடல் தயார் ஆனதும் ஊர் பார்க்கப்போகும், கட்டுடலை நினைத்துப் பெருமை பூண்டான். தீப்பந்தம் ஏந்தி ஆடுகையில் கருகிப் போகும் நெஞ்சு முடிகள் பற்றிய கவலை அவனுக்கு அவசியப்படாமல் இருந்தது.

“சுடலைமாடன் கதை மகுட ஆட்டம்” என்ற தலைப்பிலிருந்த யூ டியூபை ஆடியோவாகத் தரவிறக்கம் செய்து மொபைலிலும் லேப்டாப்பிலும் வைத்திருந்தான். அவன் சோர்விற்கும், உற்சாக மனநிலைக்கும், ஊர் நினைப்பிற்கும் தீனி போடுவதாக அது அமைந்திருந்தது. கணியான் பாடும் குரல் வசீகரமாக இருந்தது. சொற்களில் கவனம் போகாத நாளில் கூட அந்தக் குரலை கேட்டுக் கொண்டிருந்தான். பறையிசையும் சலங்கை ஒலியும் அவனை அசைப்பதாக உள்ளுக்குள் பட்டது. அதை நினைத்து தான் அப்பாவின் ரத்தமென கர்வப்பட்டான். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் முட்டை கூட சாப்பிடாமல் தன்னை கட்டுக்கோப்பாக கொண்டு சென்றான்.

நெஞ்சிறங்கி, தொப்பை விழுந்த வயிற்றை வைத்துக்கொண்டு பெண் வேடமிட்டு ஆடும் இரண்டு ஆண்களை முன்னும் பின்னுமாக துரத்தும் தன் அப்பாவின் நினைப்பை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றிருந்தான். தலையில் கட்டப்பட்டிருக்கும் சிகப்புத் துணிக்குப் பதிலாக தொப்பி வைப்பதுபோல கற்பனை செய்து கொள்வான். அறை நண்பர்கள் இல்லாத வேளையில் மெழுவர்த்தி ஏற்றி சுடரை சுடலைமாடனாக பாவித்துக் கொண்டான். அந்தச் சுடரை நெற்றியில் நிறுத்திப் பார்க்கப் பழகினான். நின்றாடும் அந்தச் சுடர் தான்தான் என்று நம்பினான். சீசன் டவல் மட்டும் கட்டிக்கொண்டு சுடரில் மினுங்கும் தன்னுடலை வெகுவாக ரசிக்கத் தெரிந்திருந்தான். அவன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் இவனின் சாமியாட்டம் காணுவதற்கென்றே கிளம்பி வந்து கூட்டம் நிரம்பி வழிவதுபோல கற்பனை செய்து கொண்டான். அவர்கள் குரலாகவே பேசிக் கிடந்தான். அப்பா இறந்தபின் வந்த, அந்த வருடக்கொடைக்கு வரிபோட்டதைக் கூட அம்மா சொல்லாமல் மறைத்துவிட்ட வருத்தம் அவனிடம் மிகுதியாகவே இருந்தது. தன் பக்தியின் ஓர்மையை இன்னும் கூட்டி சாமிக்கும் அவனுக்குமான உறவை பலப்படுத்தத் தொடங்கினான்.

நினைவின் அலைக்கழிப்பு வேணியின் தேகத்தை வெகுவாக குலைத்திருந்தது. கத்தை கத்தையாக முடி உருவி விழத் தொடங்கியது. சமைப்பது தனக்கு மட்டும் தான் என்றாலும், தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு சோறு வடித்தாள். பருப்பு, கீரை வகைகள் கடைந்தாள். சோற்றில் முடி எடுப்பது அவளுக்கு அருவருப்பாகவே மாறியிருந்தது. வேலைக்குச் செல்லாத நாட்களில் மணிக்கொருமுறை கேட்கும் வேதகோயில் வசனத்தில் தன் மனதுக்கு இதமாக உணரும் வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லியபடி அமைதி மனநிலைக்கு போராடினாள். தன்னைத் தானே ஆற்றுப்படுத்துகையில், உள்ளெழும் தன் குரல் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது.

அவ்வப்போது திண்ணையிலிருந்து ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் பேசிச் சென்று கொண்டிருந்த ஜெயமணி அக்காவை அதுவரை வீட்டிற்குள் அழைக்காதவள் வீட்டிற்குள் அழைத்து கதை கேட்க ஆரம்பித்தாள். ஜெயமணி அக்கா நெருங்கிப் பேசுவது போலத் தெரிந்தாலும் அவரின் உடையும் உடல் மொழியும் தொட்டுப் பேசிவிட அனுமதிக்காமல் இருந்தது. வெடித்து அழவும், வேணியின் தலையைத் தடவவும் ஜெயமணி அக்கா தேவைப்பட்டார். ஆனால் ஏதோ பயம் அவளை விட்டு விலகாதிருந்தது. பைபிளுக்கு வெளியே பைபிளைச் சுற்றி ஆங்காங்கு கேள்விப்பட்ட கதைகளை சொல்லி வந்தவர், சண்டே கிளாஸ் பிள்ளைகளை கவர்வதற்கு மனனம் செய்து வைத்திருந்த வசனங்களை மேற்கோள் காட்டி வேணியை ஆற்றுப்படுத்தத் தொடங்கினார். ஜெயமணி அக்காவின் குரலில் வசன உச்சரிப்பில் ஆறுதல் அடைந்தாள். அவள் மனதில் குமையும் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவே இருந்தது ஜெயமணி அக்கா சொன்ன வசனங்கள்.

நான்கு பக்க பாட்டு புஸ்தகத்தை வேணியிடம் ஜெயமணி அக்கா நீட்டினாள். என்னவென கேட்க நினைத்தபடி வாங்கிக்கொண்டாள். அந்தப் பாடலின் ராகம் அவளுக்குத் தெரியாமல் இருந்தது. உள்ளுக்குள்ளே பேசிப்பேசி இறுகி திக்குமுக்காடி நின்றவளுக்கு வாய்விட்டுப் பாட முடிந்தது, பெரும் தப்பித்தலாகப்பட்டது. வாய்விட்டுப் பாடுவதின் வழியே, அதிலிருந்த வார்த்தைகளின் வழியே தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்பினாள். கர்த்தரை ஆண்டவர் என்று சொல்லிப் பேசும்போது சுடலை ஆண்டவர் நினைவில் வந்துபோக  தடுமாறினாள். ஜெயமணி அக்காவிடம் தைரியமாக “மண்டியிட தோணல” என்றாள்.  

ஜெயமணி அக்காவின் கம்மல் இல்லாத காது வளைவு, முதலில் சுருக்குக்கயிறு போலத் தோன்றியது. முந்தானையெடுத்து தலையில் போட்டு முட்டி மடித்து வேணியின் முன்பு தரையில் அமர்ந்ததும் சகஜமானாள். இத்தனை நாள் பேசியதில் வேணியின் குடும்பம் பற்றி இன்றைய நிலவரம் தெரிந்திருந்தது. “உன் அக்கா, தங்கச்சிங்க  யாருமே பள்ளிக்கூடம் கூட போனது இல்ல. நீ மட்டும் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கன்னா எந்தப்பிள்ளை தன்கிட்ட வரணும்னு ஆண்டவருக்குத் தெரியும் ”இவ்வளவு நாள் சச்சரவா இருந்தது விலகி இப்பதான் உனக்குள்ள சமாதானம் வந்திருக்கு. ஆண்டவரோட பார்வை உம்மேல பட்டிருக்கு.

“கர்த்தர்னே சொல்லுங்கக்கா”. .

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு பேருந்து ஏறினால் நான்கு மணிநேர பிரயாணத்தில் வீடு வந்து விடும் ராகேஷ்-க்கு, இரவு உணவாக, வேணி அசைவம் எடுத்து சமைத்து வைத்திருப்பது அம்மா தன் மீது வைத்திருக்கும் பாசமாக தெரிந்தது. கொடை முடிந்து இரண்டாவது தடவை ஊருக்கு வருகையிலே அர்த்தம் புரிந்திருந்தது. டிவி ஸ்டாண்டின் கீழ்தட்டில் கிறிஸ்தவ நெடி தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்குப் போயிருந்தும், குறுக்கீடு செய்ய மனமின்றி தவித்தான். பளிச்சென்று அம்மா உடுத்தும் சேலையின் தேர்வு அவனுக்குத் தெரியும். அதுகூட மாறியிருந்தது கண்டு, இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென ஊருக்கு வந்தவன் வீட்டிற்குள் கிடக்காமல் கிரிக்கெட் மைதானத்திலும் குளக்கரையிலும் திரிந்தான். இருவருக்குமே சங்கடம் வராதவாறு சனிக்கிழமை அந்தியில் வந்து சென்றார் ஜெயமணி அக்கா.

வேதகோயில் படியேற தயங்கிக்கிடக்கும் சாமியாடி சேகரின் மனைவிக்கு, ஜெயமணி அக்கா எவ்வளவு முயன்றும் அந்த தயக்கத்தைப் போக்க கடினமாக இருந்தது. சுடலை மாடனை பழிவாங்க, ஜெயமணி அக்கா தொட்டும் தொடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார். “இங்கயே நல்லாதான்கா இருக்கு” என்கிறவளின் தெளிவு, ஜெயமணி அக்காளை சோதித்தபடியே இருந்தது. “நான்தான் வீட்ல இருந்தே கேக்கனே சாருக்கு ஒழுங்காவே பிரசங்கம் பண்ணத் தெரியல; .புள்ள வளக்கத பத்தி போன வாரம் அவரு சொன்ன கதைலாம் குடும்பத்துக்குள்ள ஆவாத கதை மாறியே இருக்கு”.

“கர்த்தருக்கு தெரியும். நீ ஆலயத்துக்குள்ள வரப்போற நாள். நம்ம பேசி என்ன பண்ணிட முடியும்?”

ராகேஷ்-க்கு அடுத்த தடவை ஊருக்கு வர வேண்டுமா என்ற யோசனை வலுப்பெற்றது. இன்னும் ஆறு மாதத்தில் கோயில் கொடை வரும். அதையொட்டி ஊருக்கு வந்தால் போதுமென்ற முடிவிற்கு வந்திருந்தான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அலைபேசியில் பேசிவிடும் அம்மாவிடம் இடைவெளி எடுத்துக்கொண்டான். அம்மாவும் தான் அழைக்காதது பற்றி அவனிடம் கேட்காதது வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. ஏனோ சண்டைபிடிக்கத் தோன்றியது. அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளும் அம்மாவை, உரிமை எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் தள்ளி வைக்கத் தொடங்கினான். உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்க கல்லூரி உடற்பயிற்சி கூடத்திலேயே பழியாகக் கிடந்தான். “நீ என்ன ஆணழகன் போட்டியிலயா சேர போறா? இப்டி கெடந்து போராடுதா” என்றும் கேட்டுப் பார்த்துவிட்டனர்.

கோபமும் வெப்ராளமும் ஒருசேர எட்டிப்பார்க்கும் வேளையில் பிளேட்டின் எடையை கூட்டிக்கொண்டே போவான். பார்ப்பவர்க்கு தசை நார்கள் கிழிந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கும். கலகலவென இருந்தவன் தனக்குள் பூட்டிக்கொள்ளத் தொடங்கினான். அந்த மாற்றத்தை, அவன் உடற்பயிற்சி வழியே பெற்றிருப்பான் என சமாதானம் சொல்லிக்கொண்டனர். அவனின் மெளனம் கலைக்க முடியாததாக இருந்தது.

எதற்காக இந்த அளவு போராடி உடலைத் தயார் செய்யத் தொடங்கினோம் என்பதே கேள்விக்குறியாக நின்றது. ஊருக்குச் செல்வதன் மூலம் காதில் விழும் அவமானத்தின் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை டெய்லர் வாயிலாக, டெய்லர் சொல்லாமலே யூகித்துக் கொண்டான். தான் தனித்து விடப்பட்டிருப்பதை எங்கு கொண்டு இறக்கி வைக்க என்பது தெரியாமல், விடுதிக்காப்பாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கடற்கரையில் கால் நனைத்துக் கிடந்தான். தவறவிட்ட அழைப்பைப் பார்த்துவிட்டு டெய்லர் திரும்ப அழைத்தார்.

பகல் பொழுதில் வீட்டிலிருக்கும் பெண்கள், தங்களுக்குள் குழுவாக பேசி மைக் பயன்படுத்தாமல் காலை 11 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் ஆலயத்திற்கு வந்து ஜெபித்துக்கொள்ள சபையிலிருந்து ஒரு சாவி கொடுக்கப்பட்டிருக்கிற கதையை ராகேஷிடம் சொன்னார். “இப்டியே போனா உங்க அம்ம வேத கோயிலுக்கு வரி குடுத்துருவாவ போலல்லா தெரியுது” என்றார். தன்னை அவமானத்தின் சின்னமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

“வேற ஏதாவது பேசுங்கணே இல்லனா பொறவு கூப்பிடுதேன்” என்றான் ராகேஷ். 

கடல் மணலில் பெருவிரல் நுழைத்து நுழைத்து நகக்கண் விண் விண்னென தெறித்தது. அந்த வலிதான் அப்போதைக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் இருந்தது. கிடா, வேண்டியவர்கள் அவரவர் அமர்ந்திருந்த இடத்தில் வைத்தே உத்தரவை நிறைவேற்ற கிடாவை மலர்த்திப்பிடித்து குரல்வளையிலிருந்து கீறிவிட்டது, கால் வைக்கும் இடமெல்லாம் திட்டு திட்டாக ரத்தம் உறைந்து ஈ மொய்த்துக் கிடந்த தரையே திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தது.  

“செங்கமால்காரன் பொண்டாட்டி, இளையபெருமாளுக்கு உண்டான கதை புருஷன்காரனுக்குத் தெரிஞ்சி அவனே பெத்துக்க ஒத்துக்கிட்ட பிறகும், “கடவுளின் பிள்ளை” லட்சுமணன் என்கிற லெனின் ஊடே நிற்கிற கதையையும் சொன்னார். குறிப்பிட்டு யாரைத் திட்டுவதென தெரியாமல் பொதுவாக “தேவடியாமக்க” என்று அமைதியானான்.

தன் காதில் எதுவுமே விழாதது போல தொடர்ந்தார். “சுடலை மாடனுக்கு டவுசரும் குல்லாவும் நேர்த்திக்கடன் இருக்கு. டவுன்ல போய் எடுத்தா வெலை அதிகமாம்.    உங்களுக்கு தைக்கத் தெரியுமாணேன்னு செல்வின் வீட்ல இருந்து கேட்டுட்டு நின்னப்ப, யார் கல்யாணத்துக்கோ போவணும்னு ஜெயமணி அக்காவும் தைக்க கடுத்துருந்த அளவு ஜாக்கெட்ட வாங்கிட்டு போவ வந்து நின்னுச்சி. உங்க அம்மகிட்ட எக்குதப்பா எதும் சொல்லிக் குடுத்துருமோன்னு பயத்துல முன்னாடியே உன்கிட்ட சொல்லுதேன்” என்றார்.

“என் பேண்ட் அளவு உங்ககிட்ட இருக்குல்லா அந்த அளவ கணக்குபண்ணி டவுசர் தைங்க. சாமியே வரலனாலும் இந்த வருசம் கொடைக்கு நான் ஆடுவேன்”.  

***

ரமேஷ் ரக்சன்

ஆசிரியரின் பிற படைப்புகள்:
16”, “ரகசியம் இருப்பதாய்”, “பெர்ஃப்யூம்” – சிறுகதைத் தொகுப்புகள்
நாக்குட்டி” நாவல்
[email protected]

2 COMMENTS

  1. “மாயன வாசல்” வாடை அடிக்கிறது சுடலையாண்டவர் பார்வையில்

  2. “தான் வணங்கப்படப்போகும் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்” _ராகேஷ்.

    “மண்டியிட மனம்மில்லா பக்குவம்” தான், ஏதேனும் ஒன்றில் தன்னை பொருத்தி சுயம் பழி தீர்த்துக் கொள்கிறது _வேணி.
    ஏனோ “மயான வாசல்” வாடை அடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here