Thursday, December 5, 2024
Homesliderசீன பட்டுப்பாதைத் திட்டமும் கடலாதிக்கமும்

சீன பட்டுப்பாதைத் திட்டமும் கடலாதிக்கமும்

ரூபன் சிவராஜா

சீனாவின் வெளியுறவு அரசியல் இலக்குகள் பற்றிச் சமகாலத்தில் நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. தென்சீனக் கடற்பிராந்தியத்தில் செயற்கைத் தீவுகளை உருவாக்குதல், ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களைக் கையகப்படுத்துதல், ஆப்பிரிக்க நாடுகளின் கனிமவளங்கள் மீது கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல், சூடானிலும் அங்கோலாவிலும் எண்ணெய் அகழ்வு, மத்திய ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள் என சீனாவின் உலகளாவிய தளம் அமைத்தல் செயற்பாடுகள் விரிவாக்கம் கண்டுவருகின்றன.

இவற்றைத் தாண்டிய பாரியதொரு திட்டத்தினை 2018-ல் சீனா தொடங்கியிருந்தது. அது பட்டுப்பாதை என அழைக்கப்படுகின்றது. சீனாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்திற்குரிய கடல் மற்றும் தரைப் பாதைகளுக்குரிய உட்கட்டுமானங்களை அமைப்பது பட்டுப்பாதைத் திட்டமாகும். சீன மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் இந்தத் திட்டம் கடல் மற்றும் தரை வழியாக 68 நாடுகளை இணைக்கின்ற பாரிய திட்டமாகும். இதற்காக பாரிய நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (4000-8000 பில்லியன் டொலர்கள் எனப்படுகிறது.)

‘புதிய பட்டுப்பாதை’ 2013-ல் அறிவிக்கப்பட்ட பாரிய திட்டம். மூன்று கண்டங்களை உள்ளடக்கிய இத்திட்டமானது கடல்வழிப் பாதையுடன் துறைமுகக் கட்டுமானங்களையும் உள்ளடக்கியதாகும். பழைய பட்டுப்பாதை என்பது பல கிளைகளைக் கொண்ட ஐரோப்பாவிற்கும் சீனாவிற்குமிடையிலான வரலாற்றுப் பாதை. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் தொடங்கப்பட்டதாகும். மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலிலிருந்து காஸ்பியன் கடலின் தெற்கு மற்றும் வடக்காக இப்பாதை அமைந்திருந்தது. அக்கால நாடுகடந்த வணிகப் போக்குவரத்துப் பாதையாக விளங்கிய போதும், சீனப்பட்டுகள் முதன்மையாகக் கொண்டு செல்லப்பட்டமையால் பட்டுப்பாதை எனப் பெயர்பெற்றது. வணிகப்பாதை என்பதைத் தாண்டி, மேற்கிற்கும் கிழக்கிற்குமிடையிலான சிந்தனை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான வழியாகவும் அது இருந்திருக்கின்றது.

பூகோள அரசியல் விளைவுகள்

சீனாவின் புதிய பட்டுப்பாதை பூகோள அரசியல் விளைவுகளை ஏற்படுத்துமென்றும் கருதப்படுகின்றது. அதாவது சீன ஆதிக்கத்திற்கு எதிரான  மற்றும் சீனாவில் தங்கி நிற்பதை விரும்பாத நாடுகள் மத்தியில் இத்திட்டம் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இத்திட்டம் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பலவீனப்படுத்துவதாகவும் அச்சுறுத்தக்கூடியதுமாகக் கருதவும் கணிக்கவும்படுகின்றது. எனவே அமெரிக்காவிற்கு இதில் உவப்பிருக்கப் போவதில்லை. ஐரோப்பாவின்  மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை சீன கையகப்படுத்துதல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அச்சம் கொண்டுள்ளது. சீனாவின் வல்லரசுக் கனவின் முக்கிய அம்சம் இன்றைய புதிய பட்டுப்பாதைத் திட்டம். மேற்கு நாடுகள் இந்தத்திட்டத்தினை சீன விரிவாக்கத்தின் அங்கமாகப் பார்க்கின்றன.

அவுஸ்திரேலியா சீனாவின் இத்திட்டத்துடன் இணைய மறுத்துள்ளது. சீன நிதியுதவியுடன் – காஷ்மீர் ஊடாக சீனாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான போக்குவரத்துப் பாதையமைப்புத் திட்டத்தினை இந்தியா எதிர்த்துள்ளது. சீன முதலீடுகளுக்காகத் தம் நாடுகளைத் திறந்துவிட்டுள்ள நாடுகள் பட்டுப்பாதை தமக்கான பொருளாதார நல்விளைவுகளுக்கான கதவுகளைத் திறக்குமென நம்புகின்றன. அதேவேளை வணிக மற்றும் முதலீட்டுத்திட்டங்கள் சீனத் தொழிற்சக்திகளைக் கொண்டு முன்னெடுக்கின்ற நடைமுறையிருப்பதால், அவை சம்மந்தப்பட்ட உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதாகப் பங்களிக்காது என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

ஐரோப்பாவுடனான வணிக உறவை விஸ்தரிக்கும் நோக்கிலான இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக ஜேர்மன் சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நலன்களுக்குச் சேவை செய்யாத, சீன அரச நலன்களை முதன்மைப்படுத்தி, சீன மேலாதிக்கத்திற்கு இட்டுச்செல்லும் திட்டம் இதுவென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகளின் கருத்து.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் சிறிலங்கா உட்பட 68 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.  இவற்றில் 23 வரையான நாடுகள் சீனாவிடம் பாரிய கடனுதவியைப் பெற்று, அதனை திரும்ப அளிப்பதற்கு திண்டாடும் நிலையிலுள்ளவை. பாகிஸ்தான், டியுபூதி, மாலைதீவுகள், மொங்கோலியா, கிர்சிஸ்தான், லாவோஸ் போன்ற நாடுகளின் நிலைமை மிகக் கவலைக்கிடமானவை. அந்நாடுகள் மிகப்பெரும் கடன்தொகையைச் சீனாவிடமிருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

புதிய பட்டுப்பாதை

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தல் – கேந்திர முக்கியத்துவம்

இத்திட்டத்தின் குவிமைய நோக்கம் சீனாவிற்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா, ஐரோப்பாவிற்குமிடையிலான கேந்திர முக்கித்துவம் வாய்ந்த துறைமுகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.

இலங்கைக்கும் அதன் பூகோள அமைவிடத்திற்கும் இத்திட்டத்தில்; முக்கிய வகிபாகம் உள்ளது. இந்துமா கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துப் பாதையை அமைவிடமாகக் கொண்டுள்ள இலங்கைத் தீவினூடாக வருடாந்தம் 60 000 வரையான வணிகக்கப்பல்கள் கடந்து செல்கின்றன என்கிறது ஒரு தகவல்.

இலங்கையைப் பொறுத்தவரை பெரிய அளவில் சீனா தனது செல்வாக்கினை விரிவுபடுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகர அமைப்பு திட்டத்திற்காக 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது – இது காலி முகத்திடலை அண்மித்து கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

துபாய், சிங்கப்பூருக்கு ஈடான வணிகப் பெருநகரமாக அமைக்கப்படவுள்ளது. உலகளவில் பெரு நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையிலான இத்திட்டம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது என்றபோதும் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. 99 வருடக் குத்தகை என்பது சீனாவிடம் சிறிலங்கா பெற்ற பெருவாரியான கடன் மீளளிப்பிற்கான மாற்றீடு என்பது ஒருபுறமிருக்க, இதுவொரு நிரந்தர தாரைவார்ப்பு என்பது இதன் மறுபக்கமாகும். 99 வருடங்கள் முடிய மீண்டும் குத்தகைக் காலம் புதுப்பிக்கப்படும். எனவே நடைமுறை அர்த்தத்தில் இதுவொரு நிரந்தரத் தாரைவார்ப்பு.

அதேபோல் ஹம்பாந்தோட்ட துறைமுகமும் 99 வருட குத்தகை ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தித் திட்டத்தோடு சமாந்தரமபக அப்பிரதேசத்திற்கான விமான நிலையம், மாநாட்டு மண்டபம், கிறிக்கெற் மைதானம் என்பன சீனாவின் கடனுதவியோடு கட்டப்பட்டன. கடனை மீளளளிக்க முடியாத நிலையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்ட துறைமுக மற்றம் அதனை அண்டிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக 2018-ல் உடன்பாடு எட்டப்பட்டது. சீனாவிற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக் கருதிய இடைத்தங்கல் துறைமுகமாக இவற்றின் பாவனை இருக்குமென சீனா கூறியிருக்கின்றது.

இந்தியாவின் தெற்கு மூலையின் ஆழ்கடலில் (இந்தியாவின் எதிர்ப்பினை மீறி) சீனாவின் ஆதிக்கத்திற்கு இடமளித்துள்ளது சிறிலங்கா. போருக்குப் பின்னான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களின் பெயரிலும் பாரிய கடனை சிறிலங்கா சீனாவிடமிருந்து பெற்றுள்ளது.

இராணுவ ரீதியிலான தளம் அமைத்தலிலும் சீனா முனைப்பு

பொருளாதார விரிவாக்கம் மட்டுமல்ல. ஏனைய நாடுகளில் தனது படைத்துறை இருப்பிலும் சீனா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.  மியான்மார், தாய்லாந்த், சிங்கப்பூர், இந்தோனேசியா, சிறிலங்கா, கென்யா, தன்சானியா, அங்கோலா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீசெல்ஸ், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் தனது இராணுவ ரீதியிலான தளம் அமைத்தலுக்குச் சாதகமானவையாக சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தகவல்களை மேற்கோள் காட்டிய தகவல்கள் அண்மையில் வெளிவந்திருந்தன.

ஆபிரிக்காவின் நிலப்பரப்பில் பெரிய நாடான சூடான் மற்றும் ஏனைய தென் ஆப்பிரிக்க நாடுகளில் சீனா தனது வாணிபச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருகின்றது. கம்பியா, சிம்பாவே, மொசாம்பிக் போன்ற நாடுகள் அந்தப்பட்டியலில் அடங்குகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் அபிவிருத்தி என்ற பெயரில் சீனாவின் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற மூலோபாயம் கையாளப்பட்டு சீனாவின் பொருளாதாரம் வளர்க்கப்படுகின்றது.  மேற்கின் எண்ணை அபிவிருத்தி நிறுவனங்கள் ஆபிரிக்காவில் குறைந்தளவு செல்வாக்கினைக் கொண்டுள்ளன. சீனா அந்த இடத்தை நிரப்பியும் விரிவுபடுத்தியும் வருகின்றது. 1990-களிலிருந்து சீன உயர்மட்டத் தலைவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு அவற்றுடனான வணிக, அபிவிருத்தி, கடன் சார் உறவுகளை வலுப்படுத்தி வந்துள்ளனர்.

2017-ல் சீனா தனது தேச ஆள்புலத்திற்கு வெளியில் தனது முதலாவது படைத்தளத்தினை ஆபிரிக்க நாடான டிஜிபூதியில் (Djibouti) திறந்ததாக ஆபிரிக்க பாதுகாப்பு கற்கை மையமும் (Institute for Security Studies) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் (Pentagon) தகவல் வெளியிட்டிருந்தன. நீண்டகால அடிப்படையில் வணிக மேலாதிக்கத்தைத் தாண்டி இராணுவ ரீதியிலும் சீனா தனது விஸ்தரிப்புகளை மேற்கொள்ளவும் சீனா தயங்காது என்ற அச்சம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மட்டத்தில் நிலவுகின்றது. அமெரிக்காவிற்கு எதிரான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உளவு நடவடிக்கைகளை பாரிய அளவில் சீனா செய்து வருகின்றது. தவிர சர்வதேச வணிக விதிமுறைகளை சீனா சரிவரப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

கடற்பாதையைக் கட்டுப்படுத்தலில் போட்டி

கிழக்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை தரைப்படைகளுக்கான முக்கியத்துவம் குறைவு. கடல், ஆகாயம், சைபர் சார்ந்த படைத்துறை ஆளணிகளும் தொழில்நுட்பங்களும் முக்கியமானவை. ஏனெனில் வணிக மேலாதிக்கத்தைப் பேணுவதற்குரிய கடற்பாதையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதென்பதே இங்கு முக்கியமானது. கடற்பாதையைக் கட்டுப்படுத்தலில்; அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையில் முறுகலும் போட்டியும் நிலவுகின்றது. காலப்போக்கில் மத்தியக் கிழக்கில் தமது படைத்துறைப் பிரசன்னத்தைக் குறைத்து அல்லது அங்கிருந்து கணிசமாக வெளியேறி கிழக்காசியப் பிராந்தியத்திற்கு நகர்த்தும் முடிவிற்கு அமெரிக்கா வரக்கூடும். அதேபோல ரஸ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளையும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்திற்கு நகர்த்தும் வாய்ப்புள்ளதாகவும் நோர்வேஜிய படைத்துறைக் கல்லூரிப் பேராசிரியரும் ஆய்வாளருமான Øystein Tunsjø அண்மையில் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் சீனாவுடனான மேற்கின் வணிக உறவு பரஸ்பரமானதாக நோக்கப்பட்டது. அதனால் ஒருவருக்கொருவர் இலாபமும் நன்மையுமென்று கருதிய மேற்கு தற்பொழுது சீனாவின் அபார வளர்ச்சியைக் கண்டு அஞ்சுகிறது. சீனாவின் வளர்ச்சி உலகின் ஏனைய பிராந்தியங்களின் மேலாதிக்க வலுச்சமநிலையைப் பாதிக்கின்ற அம்சமாகவும் மேற்கினால் பார்க்கப்படுகின்றது. சீனாவில் தங்கியிருக்கும் நிலையும் சீனா மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலைக்கும் இட்டுச் சென்றுவிடக் கூடாது. குறைந்தபட்சம் அதிலொரு மேலாதிக்கம் இல்லாத சமநிலையைப் பேணவேண்டுமென்ற முனைப்பு மேற்கிற்குண்டு.

மறுசீராக்க மூலோபாயம்

ஓபாமா ஆட்சியின் போது சீனாவின் வணிக மேலாதிக்க விரிவாக்கத்தையும் செல்வாக்கினையும் மட்டுப்படுத்தும் நோக்கில் மறுசீராக்க மூலோபாயம் (Strategic Rebalancing) வகுக்கப்பட்டது. அதன் விளைவாக பிராந்திய அளவில பல நாடுகளைக் கூட்டிணைத்து Trans-Pacific Partnership (TPP) og Transatlantic Trade and Investment Partnership (TTIP)  போன்ற வணிக உடன்பாட்டுக் கூட்டமைப்புகளும் உருவாக்கக்பட்டன. டொனால்ட் டிரம்ப் வருகையின் பின் இக்கூட்டமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகியது. ஓபாமாவின் மறுசீராக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா இணைத்து உருவாக்கப்பட்ட இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை (Indo-Pacific Strategy) நோக்க வேண்டும்.

சீன வெளியுறவு மூலோபாயங்கள்

சீனாவின் வெளியுறவுக் கொள்கை என்று நோக்குமிடத்து அவற்றை மூன்று மூலோபாய நோக்கங்களாக வரையறுக்க முடியும். இயற்கை வளங்கள், கனிமவளங்கள் மற்றும் மூலப்பொருட்களைக் பெற்றுக் கொள்ளுதல் என்பது முதலாவது அடிப்படையாக உள்ளது. இதில் எண்ணெய்ச் சந்தையை தனதாக்குதல் என்ற மூலோபாயம் முதலிடம் பெறுகின்றது.

இரண்டாவது சீன உற்பத்திப் பொருட்களுக்குரிய சந்தை வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற மூலோபாயம் ஆகும். அது ஏற்றுமதி விரிவாக்கம் சார்ந்த மூலோபாயம் ஆகும். தமக்குப் பொருளாதார நோக்கங்கள் மட்டுமே உள்ளன என்றும், ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும் சீனா தொடர்ந்து கூறி வருகின்றது. ஆயினும் பல்வேறு நாடுகளில், சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றமை, பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்ட விளைவுகளுக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு மூலோபாயங்களின் அடிப்படையில் ஏற்படுத்துகின்ற திறக்கப்படுகின்ற தளங்கள் மூலம் தொலைநோக்கில் செல்வாக்குச் செலுத்துதல் பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் என்பது சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் 3-வதும் முதன்மையானதுமான வெளியுறவு அரசியல் மூலோபாயமாக விளங்குகின்றது. சீனாவின் இந்தவகை மூலோபாயக் காய்நகர்த்தல்கள் அதன் அதிகார நலன்களுக்கும் தளம் அமைப்பு விரிவுபடுத்தல் சார்ந்த புவியியல் நலன்களுக்கும் உதவுகின்றன. சீனாவின் அதிகார விரிவுபடுத்தல் மறுவளத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் செல்வாக்கு வெளியைச் சுருக்கியும் வருகின்றது.

பொருளாதார அதிகாரம் என்பது அரசியல் அதிகாரத்திற்கான திறவுகோல். சீனாவிடமிருந்து கடன்பெறும் நாடுகள், தமது நாட்டு அபிவிருத்தி, உட்கட்டுமான, முதலீட்டுத் திட்டங்களில் சீன முதலீடுகளை அனுமதித்துள்ள நாடுகள் தமக்கான அரசியல் தீர்மானமெடுக்கும் வெளியையும் சுயாதீனத்தையும் இழக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் அந்நாடுகளைச் சீனாவுக்குக் கடன் அடிமைகளாக்கும் மூலோபாயம் இது. மட்டுமல்லாமல் அந்நாடுகள் மீது அரசியல் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கும் வழிகோலுகின்றது.

***

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular