Wednesday, April 17, 2024
Homesliderசிலை

சிலை

சுஷில் குமார்

                                                    

ஒரு சனிக்கிழமை மாலை, மாஹோ கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது  மாதவன்குட்டி எனைத்தேடி வந்தான். நிறைய குடித்திருந்தான்.

“வாடே, அம்மாட்ட பேசுனியா மக்கா?” என்று கேட்டேன்.

தொங்கிய தலையை நிமிர்த்தி, “ஆமா மக்ளே, அம்ம கம்பெனிக்கி போயிருக்காளாம் மக்கா.. இன்னும் அவளுக்க கூடப்பின்னல் நிக்க மாட்டுக்கு. நா எப்ப அவள உக்கார வெச்சிப் பாக்கப் போறேன் மக்கா? எளையவள கெட்டிக் குடுக்கணும்லா? அம்மக்கி அத நெனச்சி ஒரே சங்கடம்.. இப்பிடி இருந்தா எவன் மக்கா வருவான்?” என்று சொல்லி மீண்டும் முகத்தைத் தொங்கப் போட்டான் மாதவன்குட்டி.

“அதெல்லாம் தானா அமையும் மக்கா. நீ நெலச்சிட்டேலா டே.. பின்ன என்ன? பாப்பம் விடு..” என்றேன்.

“நீ இல்லன்னா நா தொலஞ்சேன் மக்கா.. சும்மாச் சொல்லல்ல கேட்டியா? நானே ஒரு கோம்பப்பய..எனக்கு சின்ட் மார்ட்டின்லயே பெரிய ரிசார்ட்ல மேனேஜர் வேல.. யாரு செய்வா மக்கா?”

“அடங்குல..ஒனக்கு ஓவராய்ட்டு பாத்துக்க.. வா போயி எதாம் சாப்பிடுவம்.. சரக்கு கொடலுக்குள்ள போனா ஒனக்குச் சும்மாக் கெடக்காது என்ன?”

கடற்கரைச் சாலையின் பிரபல விடுதியில் கடலைப் பார்த்தவாறு இருந்த மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். சுற்றிலும் மகாகனி மரங்களின் அடர்ந்த இருளும் இனிய தென்றலும். மாதவன்குட்டி பேச வந்த விசயத்தைப் பற்றி இன்னும் பேச ஆரம்பித்திருக்கவில்லை.

“செரி, என்ன டே மேட்டரு? பேசணும்னு சொன்னேல்லா?” என்று கேட்டேன்.

“கெவின்.. ஒரு வாரமா லோலாவக் காணல…நீ சொன்னமாதியே ஆய்ட்டு.. எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கு மக்கா?”

*****

மாதவன்குட்டி சின்ட் மார்ட்டின் தீவிற்கு வந்து மூன்று வருடங்கள் இருக்கும். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்த மாதிரி வந்த புதிதில் திறந்த சிலிக்கான் மார்புகளையும், உடல்முழுக்க பச்சை குத்திய ஆண்களையும், கிழவர்களுடன் கைகோர்த்துத் திரியும் கட்டிளங்குமரிகளையும் பார்த்து மலைத்தான். பல ஆண்டுப் பழைய ஒயின் பாட்டில்களைக் கையில் குடுத்தபோது ஒரே மூச்சில் அவற்றை பாட்டம் சிப் அடித்தான்.

அவனுடைய இருண்ட முகத்தில் கொஞ்சம் ஒளிவரத் துவங்கியபோது ஒருநாள், எனது பல்பொருள் அங்காடியில் வைத்து தற்செயலாக லோலாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்று மாலையே, “கெவின், மாப்ள.. அவளப் பாக்கணும் மக்கா” என்றான்.

“லே ராஸ்கல்.. பாக்கணுமா? இல்ல?..”

“இல்ல மக்கா.. என்னா அழகுல அவா, பாத்த ஒடனே ஒரு மாதிரி ஆய்ட்டு கேட்டியா? அவ என்ன வேல பாக்கா?” என்று வாயைப் பிளந்து கேட்டான்.

“சொன்ன பொறவு பேக் அடிக்க மாட்டேன்னா சொல்லுகேன்..”

“சேச்செ.. சொல்லு மக்ளே.. எனக்கெல்லாம் லைஃப்ல இப்டி நடக்கத நம்பவே முடில.. அவ மூஞ்சியப் பாக்க முடில மக்கா? ஒரு மாதிரி நடுங்கிட்டு..”

“ஆமா டே, ஆமா.. ஏஞ் சொல்லமாட்ட? பெரிய மேனஜர்லா? இப்ப பொண்ணு கேக்கத்தானச் செய்யும்.. நாளக்கி ‘நீ யாருப்போ’ன்னு கேப்ப, என்ன?”

“என்ன மக்கா இப்பிடிச் சொல்லிட்ட?.. கன்னியாரிக் கடலோட போயிருக்க வேண்டியது.. இன்னா, இங்க வந்து ஃபாரின் ஒயின் குடிச்சிட்டுத் திரியேன்…எனக்கு வந்த பவுசப் பாரு..” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“இவனுக்க அநியாயத்துல.. தீய வைக்க.. லேய், ஒனட்ட ஒரு பேச்சுக்கு ஒண்ணுஞ் சொல்ல முடியல்லய டே.. ஒடனே சோகப்பாட்டு பாட ஆரம்பிச்சிருக!”

அவன் அமைதியாக இருந்தான்.

“செரி டே, சமானப்படு.. சொல்லுகேன்.. லோலா எனக்க ஃபிரண்டு தான்..ஸ்பெயின்காரியாக்கும்.. நம்ம வோர்ஹவுஸ் இருக்குல்லா, சிம்ஸன்பேய்ல.. அங்கதா வேல..” என்று சொல்லி அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.

ஏதோ புரியாதவனாக முழித்து, “என்ன மக்கா சொல்லுக? வோர்ஹவுஸ்ல இவளுக்கு என்னடே வேல?” என்று கேட்டான்.

“ஆங்…அங்க வரவனுகளுக்கு செரச்சி விடுவா.. கேக்காம்பாரு மண்டையன்..”

“சொல்லுடே, தெரியாமத்தான கேக்கேன்.. நீ பலதும் பாத்தவன்…ஹிஹி…”

“மயிரு.. லேய் நீ செரியான ஆளு கேட்டியா? அவளப் பாத்த ஒடனே இவருக்கு லவ்வு வந்துட்டாம்.. இந்த ஊர்ல உள்ள எல்லாவனுக்கும் அவ லவ்வர்தான்.. அம்பது டாலர்தான் பாத்துக்க.. என்ன செய்யலாம் சொல்லு மக்கா? தூக்கிருவமா?”

மாதவன்குட்டியிடம் ஒரு அணக்கம் இல்லை.

*****

மற்றொரு நாள் நானும் என் மனைவி டெனிஸும் ஒரு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மாதவன்குட்டி லோலாவுடன் உள்ளே நுழைந்தான். எங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் வேறு வழியின்றி அவளை அழைத்துக்கொண்டு எங்கள் மேசையின் அருகே வந்து நின்றான்.

நான் லோலாவைப் பார்த்து லேசாகச் சிரித்து, “ஹேய்..ஆர் யு ஆல் ரைட்?” என்று கேட்டேன். அவனைக் கண்டுகொள்ளாத மாதிரி இருந்தேன்.

“மாப்ள, லேய்…சும்மா வழில பாத்தம் மக்கா…சாப்டுட்டுப் போலாம்னு கூட்டிட்டு வந்தேன்..” என்று நெளிந்தான். அவன் பேசுவது புரியாமல் லோலா அதே புன்னகையோடு நின்றாள். என் மனைவி அவர்களை எங்களோடு உட்கார்ந்து சாப்பிடச் சொல்லி என்னை இடித்தாள். நான் மாதவன்குட்டியை உற்றுப் பார்க்க, அவன் லோலாவுடன் என் எதிரே அமர்ந்தான்.

“செரிடே.. மன்னிச்சிரு.. ஒன்ட்ட சொல்லாம ஒரு நாள் அவளப் போயி பாத்தேன் பாத்துக்க..” என்று வழக்கம்போல தலையைத் தொங்கப் போட்டான்.

அவன் சொல்வதுபோல அது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயம் இல்லை. வோர்ஹவுஸ் என்றழைக்கப்படும் பாலியல் தொழில் இல்லங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் மிகவும் வறுமையான குடும்பங்களில் இருந்து வருபவர்கள். எனக்குத் தெரிந்தே அங்கிருக்கும் பலர் திருமணம் ஆனவர்கள், அவர்களது கணவர்களுக்குத் தெரிந்தே அந்தத் தொழிலில் இருப்பவர்கள். இன்னும் பலர் பிழைக்க வேறு வழியேயில்லாமல் அந்தத் தொழிலுக்கு வந்தவர்கள். இன்னொரு முக்கியக் காரணம் மற்றெந்தத் தொழிலை விடவும் இதில் பல மடங்கு சம்பாதிக்க முடியும். எனது ஒரு மாத சம்பளத்தை ஒரு சில இரவுகளிலேயே சம்பாதிக்கும் பல தோழிகள் இருக்கிறார்கள்.

ஒரு சில விசயங்களில் அவர்கள் மிகவும் கறாராக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் தங்களைப் புகைப்படம் எடுக்க அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. வோர்ஹவுஸ் தாண்டி வேறெங்கும் யாருடனும் அவர்கள் அவ்வளவு எளிதாகப் போவதில்லை. அப்படி ஒரு பெண் இன்னொருவனுடன் வெளியே வருகிறாள் என்றால், அவர்களுக்குள் மிக ஆழமான ஒரு நட்போ அல்லது காதலோதான் இருக்கும். அப்படிச் சிலர் திருமணம் செய்துகொண்டு மாறிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

*****

நானும் மாதவன்குட்டியும் மழலையர் வகுப்பிலிருந்தே சேர்ந்து படித்தோம். அவனுக்கு அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் என மகிழ்ச்சியான குடும்பம். பள்ளி முடிந்து தினமும் அவன் வீட்டிற்குச் சென்று தங்கச்சிகளுடன் சேர்ந்து விளையாடுவோம். அம்மா பஜ்ஜி, வடை, சுண்டல் என ஏதாவது செய்து தருவார்.

மாதவன்குட்டியின் அப்பா ஒரு சிற்பக் கலைஞர். கன்னியாகுமரியின் பல கோவில்களின் கோபுரச் சிற்பங்கள் அவரது கைவண்ணத்தில் உருவானவை. வீட்டில் இருக்கும்போதும் எப்போதும் வரைந்துகொண்டோ களிமண்ணில் ஏதாவது செய்துகொண்டோதான் இருப்பார்.

ஒருநாள் இரண்டு மகள்களையும் உட்கார வைத்து அவர்களைப் போலவே ஒரு களிமண் சிலை செய்துகொண்டிருந்தார் அப்பா. நானும் மாதவன்குட்டியும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் எங்கள் கண் முன் இரு கடவுள் சிலைகள் உயிரோடு இருந்தன.  பிரதிஷ்டை செய்யப்பட்ட மாதிரி. அந்த இடம் வேறொரு விதமாக மாறிப்போனது.

மாதவன்குட்டி படிப்பில் மிக மோசம். வகுப்பில் மூக்கை நோண்டிக்கொண்டோ, சன்னல் வழி வெளியே பார்த்துக்கொண்டோ, இல்லை, கால்சட்டைப் பையிலிருந்து நொறுக்குத் தீனியை எடுத்துக் கொறித்துக்கொண்டோ இருப்பான். விளையாடக் கூப்பிட்டாலும் வராமல் ஒதுங்கி நிற்பான். தினமும் மாலை எனது நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து மூத்தவள்தான் அவனுக்கு எழுதிக் கொடுப்பாள். பள்ளியில் பல மாணவர்கள் வேண்டுமென்றே அவனைச் சீண்டுவதும், அடிப்பதுமாக இருந்தனர். அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களிடமே போய் நிற்பான்.

எனக்கு மீசை அரும்பி வாலிப வயதுக் குறும்புகள் ஆரம்பித்தபோதும் மாதவன்குட்டி மற்றவர்களைச் சார்ந்து, அவர்கள் செய்வதை வாய்பார்த்து, உலகம் அறியாதவனாக அல்லது அறிந்துகொள்ள விரும்பாதவனாகவே இருந்தான்.

தினமும் என் வீட்டிற்கு வந்து இரவு வரை என்னோடு இருந்து படிப்பான். என் அம்மாவும் அவனிடம் மிகப் பாசமாக இருந்தார். “பாவம் மக்ளே, அப்பாவிப் பய கேட்டியா? பத்தாங்கிளாஸ் தேறிட்டான்னா பரவால்ல!” என்பார் அம்மா.

தேர்வுக்கு ஒரு மாதம் முன் ஒரு நாள் மாலை, நானும் அவனும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது அவனது தங்கை படபடத்து ஓடி வந்தாள். அழுதுகொண்டே, “அண்ணே, வீட்டுக்கு வாண்ணே…அப்பா கீழ விழுந்துட்டாளாம்.. ஆஸ்பத்திரில சேத்துருக்காம்..”

மாதவன்குட்டி கலக்கமடைந்தவனாக வீட்டிற்கு ஓடினான். நானும் பின்னாலேயே ஓடினேன். வீட்டிலிருந்து அம்மாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். கோவில் கோபுரத்தின் மீது நின்று வேலை செய்தவர் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார். தலையில் பலத்த அடி. சிக்கலான அறுவை சிகிச்சை செய்து நீண்ட ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை. ஆஸ்பத்திரிக்கும் பரிட்சைக்கும் இடையில் ஓடி ஓடி மிகவும் நொடிந்து போனான் மாதவன்குட்டி.

அப்பா ஓய்வில் படுத்ததும் அம்மா கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு கம்பெனிக்காக ஒயர்க் கூடை, சங்கில் செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், சணல் பொம்மைகள் என செய்துகொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தாள். அப்பா மூன்று மாதங்களில் எழுந்து நடமாடத் தொடங்கினாலும் முன்பைப் போல அவரால் வேலை செய்ய முடியவில்லை. அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். காரணமே இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தார். சில சமயங்களில் தங்கைகளை மாடலாக வைத்து செய்த சிலையைக் கட்டிப்பிடித்து சிலையோடு சிலையாக உட்கார்ந்திருப்பார். திடீரென்று வெறும் வேட்டியுடன் வெளியே சென்று விடுவார். எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. இரவில் அவராகவே வந்து எதுவும் பேசாமல் படுத்து உறங்குவார். மொத்தக் குடும்பமும் வறுமையின் பிடிக்குள் மெல்ல நழுவிச்சென்றது.

ஒரு நாள் மாதவன் குட்டி, “கெவின், ஒங்க மாமாட்டச் சொல்லி தந்திப் பேப்பர் போட வேல வாங்கித் தா மக்கா.. அம்ம ரொம்பக் கஷ்டப்படுகால்லா, நா காலைல பேப்பர் போட்டா கொஞ்சம் பைசா பாக்கலாம்லா மக்கா?” என்று கேட்டான்.

எங்கள் வீட்டுக்கு அதிகாலையில் வந்து என் நண்பன் பேப்பர் போட்டுச் செல்வதைப் பார்க்க எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக பத்தாம் வகுப்பில் தேறிவிட்டான். நான் கணிதப் பிரிவு எடுத்தேன், அவனை கணக்குப் பதிவியல் பிரிவில் சேரச் சொன்னேன்.

போகப்போக அவனது அப்பா வீட்டிற்கு வராமல் கடற்கரையிலோ, கோவில் மண்டபங்களிலோ படுத்துக் கிடக்க ஆரம்பித்தார். சாப்பிடக்கூட வீட்டிற்கு வருவதில்லை. அம்மாவும் தங்கைகளும் அவர் பின்னாலேயே போய் இழுத்துக் கொண்டு வந்தாலும் சிறிதுநேரத்தில் கிளம்பி விடுவார். ஒருநாள், அம்மாவும் தங்கைகளும் பகவதி அம்மன் கோவிலுக்குக் காலை நிர்மால்ய தரிசனம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அப்பா கோவில் வாசல் அருகே பிச்சைக் காரர்களுடன் உட்கார்ந்திருந்தாராம். கிழிந்த அழுக்கடைந்த வேட்டியுடன் உடல் முழுதும் சேறு.

அம்மா சென்று கையைப் பிடித்துத் தூக்கியபோது, “யாரு..யாரு.. போ.. போ.. பைசா.. பைசா தா.. பைசா தா..” என்றாராம்.

“மாப்ள, எப்பிடி இருந்த மனுசன்டா? எத்தன தெய்வத்தப் படச்சக் கையி அது? இப்ப சாக்கடைல அளஞ்சிட்டுக் கெடக்கு.. அப்பா தெருல கெடந்து சாவதப் பாக்க முடில மாப்ள.. எனக்கு அவர மாதி தெறம இருந்தாக்கூட கொஞ்சம் பைசா பாத்துரலாம் மக்கா..”

“என்ன செய்ய மக்கா? நீ கவலப்படாத டே..கொஞ்சம் நல்லாப் படி.. பி.காம். முடிச்சா எதாம் வேலைல ஏறிரலாம்.. வெளிநாட்டுக்கு எதாம் போயிரலாம்னு எங்க மாமா சொன்னாரு கேட்டியா.”

பேப்பர் போடுவதுடன் மாலை நேரத்தில் பரோட்டாக் கடை ஒன்றில் வேலைக்கு நின்றான் மாதவன்குட்டி. காலை நான்கு மணி முதல் இரவு பன்னெண்டு மணி வரை உழைப்பு, பள்ளிக்கூடம், மீண்டும் உழைப்பு. வெகுளியான அவனது முகத்தில் குடிகொண்ட ஒரு தீவிரம் அவனிடமிருந்த குழந்தைத்தன்மையைப் பறித்துக்கொண்டது. யாரிடமும் நின்று பேசக்கூட நேரமில்லாதவனாக, பேச விரும்பாதவனாக பறந்துகொண்டே இருந்தான் மாதவன்குட்டி.

கல்லூரிக் காலம்..

வசதியான வீட்டு விடலைப் பையனுக்கு உரித்தான ஆடம்பரம், குடி, ஊர்சுற்று, காதல் சேட்டைகள் என்று எல்லாம் எனக்கு அமைய, மாதவன்குட்டி ஒருநாளில் நான்கு வேலைகள் செய்து குடும்பத்தைப் பார்த்துக்கொண்டான். காலையில் பேப்பர் போட்டுவிட்டு, எங்கள் கல்லூரிக்குப் பக்கத்தில் இருந்த ஜெராக்ஸ் கடையில் எடுபிடி வேலைகள் செய்து கொடுத்தான், வகுப்புகளுக்கும் தவறாமல் சென்றான், மாலையில் ஒரு சில வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டான், பின் இரவில் பரோட்டாக் கடை. உடல் எவ்வளவுதான் ஒத்துழைக்கும்? தூக்கமின்மை, சரியாக உணவு உட்கொள்ளாமை, அப்பா குறித்த கவலை எல்லாம் சேர்ந்து அவனை அல்சரில் கொண்டு விட்டது.

“மாப்ள.. போதும் மக்கா.. ரொம்ப ஓடுற பாத்துக்க.. ஒடம்பப் பாக்காம இப்டி ஒடுனேன்னா பொறவு ஒனக்கு ஒண்ணுன்னா யாரு பாப்பா? கொஞ்ச நாளக்கி ஒழுங்கா சாப்ட்டு ரெஸ்ட் எடு மக்கா? நா கொஞ்சம் பைசா தாரேன்.. கொஞ்ச நாள் அப்டியே போட்டும்.. எனக்கு தேவப்பட்டா பொறவு கேக்கேன்.. என்ன?”

“எப்பிடி மக்கா ரெஸ்ட் எடுக்க முடியும்? ரெண்டு தங்கச்சிமாரயும் கர சேக்கணும்லா மக்கா? அவ்வோ போய்ட்டா நானும் அம்மாவுந்தான, சமாளிச்சிரலாம்.. மூத்தவளுக்கு அம்மா கம்பெனில நிக்க ஒரு பையன கெட்டி வைக்கலாம்னு பாக்கோம்..”

அதுவரை சேர்த்துவைத்த பணத்தில் பெரியவள் திருமணம் முடிந்தது. இரண்டாவது தங்கை அப்போதுதான் பூப்பெய்திருந்தாள்.

எனக்கு அரியர்கள் கூடிக்கொண்டே போக, அவன் எல்லா தேர்வுகளிலும் சுமாராக மதிப்பெண் எடுத்துத் தேறினான். அப்பா எங்கே போனார் என்று யாருக்கும் தெரியாமல் போக, மாதவன் குட்டியும் அப்படி ஒருத்தர் இருந்ததையே மறந்தது போல இருந்தான்.

ஒருநாள், கன்னியாகுமரி கடற்கரையில் உட்கார்ந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து என் முன் வைத்தேன். மாதவன் குட்டி ஏதும் பேசாமல் உம்மென்று இருந்தான்.

“என்ன டே? என்னன்னு சொல்லு, மூஞ்சி ஏன் இப்டி இருக்கு?”

அவன் ஒன்றும் பேசவில்லை.

“அப்பா எதும் வந்தாரா மக்கா?”

“அவரு இனி வந்தா என்ன? வராட்டா என்ன மக்கா? எங்கம்மயப் பாத்து அவருக்கு அடயாளமே தெரில.. அவரு அவருக்க ஒலகத்தோடயே இருக்கட்டும் மக்கா.. விடு..” என்று சொன்னவன் சட்டென பியர் பாட்டிலை எடுத்து வேகவேகமாகக் குடிக்க ஆரம்பித்தான்.

சட்டென அந்த பாட்டிலைத் தட்டிவிட்டு அவனை அறைந்துவிட்டேன்.

“என்னல? பெரிய மயிராயிட்டியோ? பீருல்லா குடிக்கான் செறுக்கிவுள்ள..எந்தி ல மொதல்ல ராஸ்கல், ஓடிரு.. இந்த தெசப்பக்கம் வந்துறாத..” என்று கத்தினேன்.

சற்று நேரம் அமைதியாக நின்றவன், “இல்ல மக்கா.. என்னால முடில பாத்துக்க.. தங்கச்சி..” என்று சொல்லி ஓவென அழ ஆரம்பித்தான்.

“லேய்.. லேய்.. மக்ளே.. என்னல ஆச்சி? அழாத மக்கா? என்னல? சொல்லுல..”

“மக்கா.. தங்கச்சிக்கி மண்டக்கி வழியில்ல மக்கா.. எங்கப்பா மாதியே பொலம்புகா மக்கா..”

“என்னல சொல்லுக.. நல்லாத்தான இருந்தா மக்கா? என்ன டே ஆச்சி?”

“தெரில மக்கா.. கொஞ்ச நாளாட்டு தனியா பெறைல ஒக்காந்து ஒரே பொலம்பக்கம்.. நம்ம கூப்புட்டா பதிலே வராது.. அப்பா செஞ்சால்லா ஒரு செல, தங்கச்சிய மாதி, அதக் கெட்டிப்புடிச்சிட்டு இருக்கா.. இன்னிக்கி தாவணிய கடிச்சிக் கிழிச்சி ஒரே ஊள.. என்னால பாக்கக் கழியல்ல மக்கா.. எனக்கு போதமில்லாம விழுந்து கெடக்கணும் மக்ளே.. ப்ளீஸ் ல.. எனக்கு சரக்கடிக்கணும் மக்ளே..” என்று அழுதான்.

அவனை அப்படியே அழைத்துக்கொண்டு ஸ்பார்ஸா ரிசார்ட்டுக்குச் சென்றேன். அவனது முதல் குடி மறக்க முடியாததாக இருக்கட்டும். ஒரு இம்போர்ட்டட் பியரை வாங்கி, “குடி மக்கா.. நா இருக்கம்ல ஒங்கூட.. எல்லாஞ் செரி ஆவும் மக்கா.. நீ குடி..” என்றேன்.

*****

சின்ட் மார்ட்டினில் மற்றொரு நாள். நானும் டெனிஸும் கற்சிலுவைக் கோவிலுக்குச் சென்று மஞ்சள் மலர்களை வைத்து ஜெபம் செய்துவிட்டு அங்கிருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தோம். பல நாடுகளைச் சார்ந்த பல தம்பதிகள் அச்சிலுவையின் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தனர். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் கூடத் தெரியாத இந்தத் தீவில் இந்தச் சிலுவையின் முன் இவர்கள் எதைத் தேடி நிற்கிறார்கள்?

டெனிஸ் என் கையக் கிள்ளி தூரத்தில் சுட்டிக் காட்டினாள். லோலாவும் மாதவன்குட்டியும் கைகோர்த்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு நொடி லோலாவுடனான எனது நாட்கள் ஞாபகம் வந்தது. டெனிஸை அருகில் இழுத்து, “மாதவன்குட்டி ஜோடிப் பொருத்தம் சூப்பர், இல்லையா டார்லிங்?” என்றேன்.

“ஆமாம் கெவின், ஆனால், அவர்கள் இருவரும் எப்படி நெருக்கமானார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவேயில்லை. உங்கள் நண்பருக்கு ஸ்பானிஷ் கூட தெரியாது இல்லையா?” என்று சிரித்தாள்.  

“வா, அவர்களிடமே கேட்கலாம்.” என்றவாறு மறைந்து சென்று மாதவன்குட்டியின் தோளில் தட்டி, “என்ன தம்பி? சும்மா சாப்ட வந்தியோ?” என்றேன்.

மாதவன்குட்டி நெளிந்துகொண்டே, “மக்ளே.. அது.. ஃப்ரீயா இருந்தா வான்னு கூப்ட்டா.. சும்மா கம்பெனிக்கி வந்தேன் மக்கா..” என்றான். லோலா வழக்கமான புன்னகையுடன் கைகுலுக்கினாள்.

“அடி ராஸ்கல்.. நீ எப்பிடி வந்தேன்னு பாத்தம்ல.. சர்ச்சுக்கு வர்ற மூஞ்சியப் பாரு..”

டெனிஸ் நாசூக்காக லோலாவை அழைத்துக்கொண்டு செல்ல, மாதவன் குட்டி படபடத்தவனாக நின்றான். அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டே, “மக்ளே, டெனிஸ் வர்ற முன்னாடி நா யார்கூட சுத்துனேன் தெரியுமா?” என்றேன்.

மாதவன்குட்டி ஏதும் பேசாமல் நின்றான்.

“லோலா கூடத்தான் மக்கா.. நீ என்ன நெனச்சி அவ கூடப் பழகுறன்னு எனக்குப் புரியல பாத்துக்க..”

“கெவின், ஒன்னப்பத்தி அவ ஏற்கெனவே சொல்லிட்டா.. அது எனக்கு ஒண்ணும் பெருசாத் தோணல்ல மக்கா..”

“அதில்ல மக்கா.. வோர் ஹவுஸ் பொண்ணுங்கள பத்தி ஒனக்கு இன்னும் செரியா புரியல்ல பாத்துக்கோ.. நாஞ் சொல்லுகம்லா டே.. சந்தோசமா இரி.. போ, வா.. ஆனா, வேறேதும் பெருசா யோசிக்காத பாத்துக்கோ..”

“என்ன மக்கா நீயே இப்பிடிப் பேசுக? என்னயெல்லாம் ஒரு ஆளுன்னு நம்மூர்ல எவளாவது பாத்திருப்பாளா? லோலா என்ன ஒரு ஹீரோவா பாக்கா மக்கா.. ஒருவேள அவ கூட இருக்கப்போ எனக்குதா அப்பிடித் தோணுகோ என்னமோ.. அவ என்ன ஒண்ணும் கஸ்டமராப் பாக்கல மக்கா..”

“ஆமாமா.. இப்ப சொகமாத்தா இருக்கும் டே.. அவ ஸ்பானிஷ்காரி வேற.. இங்க ஸ்பானிஷ் பொண்ணுங்கள என்ன சொல்லுவாங்க தெரியுமா?”

மாதவன்குட்டி தலையாட்டினான்.

“ஸ்பானிஷ் பொண்ணுங்க பெரிய தலைவலின்னு.. எல்லாத்தயும் உறிஞ்சிட்டு விட்ருவாளுக மக்கா.. நீ எத்தன டாலர அள்ளிப் போட்ட?”

“மாப்ள.. அவ என்ட்ட இதுவர அஞ்சி பைசா வாங்குனதில்ல பாத்துக்க..”

“ஓஹோ…கத அப்பிடிப் போகுதா?.. நீ வெர்ஜின் தானல?.. அதாக்கும் மேட்டரு.. இன்னொன்னும் சொல்லுகேங் கேளு.. வோர் ஹவுஸ் பொண்ணுங்க எங்க எப்ப காணாமப் போறாங்கன்னு தெரியாது மக்கா.. அவங்க வாழ்க்க அப்பிடி..”

சிறிது நேரம் அமைதியாக தூரத்தில் சென்ற லோலாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செரி விடு.. நடக்க மாதி நடக்கட்டும்.. ஆனா, நீ எப்பிடி மக்கா அவட்ட பேசிப் பழகுன? ஒனக்கு ஸ்பானிஷ் வராது, அவளுக்கு இங்கிலீஷ் சுத்தம்..” என்று கேட்டேன்.

“ஒலகம் பூரா கஷ்டப்படுறவங்க பாஷ ஒண்ணுதான மக்கா..” என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தான் மாதவன்குட்டி.. என் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது மூக்கொழுக அடிவாங்கிய அதே மாதவன்குட்டிதானா?

“ம்ம்ம்.. என்னத்த சொல்ல மக்கா? ஆனா, வோர்ஹவுஸ்ல ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு கத இருக்கும்.. நீ என்ன தியாகியா? வாழ்க்க குடுக்கதுக்கு..”

“கெவின்.. ஒனக்கு அவளப் பத்தி என்ன தெரியும்? ஒனக்கு அவ ஒடம்பத் தெரியும்.. வேறென்னத் தெரியும் சொல்லு?”

என்னிடம் பதில் இல்லை. அதன் பிறகு மாதவன்குட்டி பேசிய விசயங்கள் வாழ்க்கை குறித்த எனது பார்வையை உலுக்கிப் பார்த்தன.

லோலாவிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவளது ஒவ்வொரு வேளை உணவிற்கும் உத்திரவாதம் இன்றிதான் வளர்ந்திருக்கிறாள். அவளது அம்மா என்ன வேலை செய்தாள் என்பது அவளுக்குப் புரிய நீண்ட காலம் பிடித்தது. அவளது அப்பா ஒரு சிற்பி. நிர்வாணச் சிலைகளைச் செய்து பிளாட்பாரங்களில் வைத்து விற்பதுதான் தொழில். ஒரு சிலை செய்ய சில நாட்கள் வரை கூட ஆகும். ஒரு சிலை விற்றால் ஒரு சில நாட்களுக்குப் பசியின்றி உறங்கலாம்.

அப்பா சிலை செய்யும் அறைக்குள் யாரையும் விடுவதில்லை. அம்மா மட்டும் அவ்வப்போது போவாள். நீண்ட நேரம் கழித்துதான் வெளியே வருவாள்.

லோலா பதின் வயதடைந்த காலம். ஒருநாள், ஆர்வமிகுதியால் கதவிடுக்கின் வழியாக உற்றுப் பார்த்தாள். அம்மா நிர்வாணமாக சிலை போல் நிற்க, அப்பா அவளைக் கற்சிற்பமாகச் செதுக்கிக்கொண்டிருந்தார். அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க அப்பா அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டினார். அம்மாவின் தொங்கிய மார்பகங்களை தூக்கி மேலாக நிறுத்திப் பார்த்தார். அவை நெகிழ்ந்து கீழே போக அவளை மீண்டும் திட்டிக்கொண்டே சென்று ஒரு கயிற்றை எடுத்து வந்தார். லோலாவின் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. கயிற்றால் அம்மாவின் மார்பின் கீழே இறுக்கமாகச் சுற்றினார் அப்பா. பலமுறை சுற்றிய அழுத்தத்தில் அம்மாவின் மார்பகங்கள் மேலேறி வந்தன.

அம்மா பல நாட்கள் கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று தனது உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை போர்வைக்குள் இருந்து பார்த்தாள் லோலா. யாருமில்லாத போது அவளும் கண்ணாடி முன் அப்படி நின்று தன்னுடலைப் பார்க்க ஆரம்பித்தாள். அந்தச் சிலைகளுக்கும் இந்தத் தசையுடலுக்கும் என்ன தொடர்பு?

அப்பாவின் சிலைகள் முன்பு போல நன்றாக வரவில்லை. விற்பனையும் இல்லை. அம்மாவின் முகத்திலிருந்து சிரிப்பு முழுதாகக் காணாமல் போனது. அவளும் தொழிலுக்குப் போக முடியாமல் வீட்டில் இருந்தாள். அப்பா அவ்வப்போது பதற்றமாக வீட்டுக்குள் ஓடி வருவார். கையில் சில ரொட்டிப் பாக்கெட்டுகளும் பழங்களும் இருக்கும். பல நாட்கள் எதுவும் இல்லாமல் போக மீண்டும் பசி வந்து குடிகொண்டது.

ஒருநாள் லோலா வீட்டில் நுழைந்தபோது அப்பா அம்மாவைப் பலமாக அடித்துக் கொண்டிருந்தார். அவள் அலறிக் கொண்டு இடையே சென்று விழ அப்பா ஏதும் பேசாமல் அவரது சிற்பக் கூடத்திற்குள் சென்றுவிட்டார். அம்மா அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

“என்னம்மா? அப்பா எதற்காக உங்களை அடித்தார்?”

அம்மா தேம்பிதேம்பிச் சொன்னாள், “நீ எங்காவது போய்விடு லோலா.. உன் அப்பாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.. நீ போய்விடு..” என்றார்.

“எதற்காக அம்மா? என்னிடம் சொல்லுங்கள் அம்மா..”

“அப்பாவிற்குச் சிலை செய்ய இப்போதெல்லாம் நான் தேவையில்லாமல் ஆகிவிட்டேன்.. என்னால் அவருடைய கலை அழிந்துபோய் விட்டதாம்.. அவருக்கு முன்னால் நிற்கும் மாடல் இளமையாக இருக்க வேண்டும்.. உன்னை மாதிரி இளம் பெண்கள்தான் இப்போதெல்லாம் மாடலிங் செய்கிறார்களாம்.. வெளியிலிருந்து மாடல்களை அழைத்து வர நிறைய செலவாகுமாம்.. அவர் உன்னை..” என்று சொல்லி அம்மா லோலாவை இறுக்கிக் கட்டிக்கொண்டு அழுதார்.

அடுத்தநாள் அதிகாலை தூங்கும் அம்மாவையும் அப்பாவையும் முத்தமிட்டு அங்கிருந்து கிளம்பி திருட்டுப் படகில் வேறொரு தீவிற்குச் சென்றாள் லோலா. பின், பல தீவுகள், பல அலைக்கழிப்புகள்.. இறுதியாக எல்லோருக்கும் சொர்க்கமான சின்ட் மார்ட்டின்.. வோர்ஹவுஸ்..

மாதவன்குட்டி லோலாவின் கதையைச் சொல்லி முடித்து அமைதியாக இருந்தான். நீண்ட மௌனம்.

“மக்கா? எங்கப்பா எதுக்கு வீட்ட விட்டு வெளியப் போனாரு மக்கா? எந் தங்கச்சிங்க செலயக் கட்டிப் புடிச்சிட்டுக் கெடந்தார்லா, எதுக்கு? எங்கம்மய எப்பிடி அவருக்கு அடையாளங் கூடத் தெரியாமப் போச்சி?”

மாதவன்குட்டியின் முகம் அவ்வளவு தீர்க்கமாகத் தெரிந்தது. எதையோ கண்டறிந்துவிட்ட ஒரு பிரகாசம்.

“செரி, அதெல்லாம் விடு மக்கா.. அவரு படச்ச சாமிச் செலயெல்லாம் அவருட்ட வேறென்ன கேட்ருக்கும்? அவரு நிச்சயமா கோபுரத்துலருந்து வழுக்கி விழுந்துருக்க மாட்டாரு மக்கா.. வேணுன்னே விழுந்துருப்பாரு.. எனக்கு நல்லாத் தெரியும்.. பொறவு ஒரு நாள் அந்தக் கோபுரத்தப் போயிப் பாத்தேங் கேட்டியா.. அவரு செஞ்ச ஒரு செலயிலயும் உயிர் இல்ல.. எல்லாம் மழுங்கிப் போய் இருந்து.. அந்த ஒரு லெச்சணம் வரல்ல மக்கா.. எனக்கு அப்ப எந் தங்கச்சி ஞாபகந்தான் வந்து.. அவ பாக்கதுக்கு பகவதி அம்மன் மாதில்லா இருப்பா மக்கா.. ட்ரெஸ்ஸ கிழிச்சிட்டு அவ எதுக்கு கத்துனா? எங்கப்பாக்க மனசுக்குள்ள என்ன இருந்துருக்கும்? அப்ப, லோலாக்க அப்பாக்க எண்ணம் செரிதானா மக்கா? யாரு மக்கா பரிசுத்தமான ஆளு? நீயா? நானா? லோலாவா?”

மாதவன்குட்டியின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. அப்படியே அவன் தோளில் கையைப் போட்டு கழுத்தை நெருக்கி இழுத்து அணைத்து கட்டிக்கொண்டேன். தூரத்தில் கற்சிலுவையின் முன் மஞ்சள் மலர்களை வைத்து மண்டியிட்டு நின்றாள் லோலா.

*****

மற்ற வோர்ஹவுஸ் பெண்களை மாதிரித்தான் லோலாவும் காணாமல் போய்விட்டாளா?

இரவுணவை முடித்து கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். மாதவன்குட்டி சொன்னான், “கெவின், எனக்கு உள்மனசுல அவ திரும்பி வந்துருவான்னு தோணுகு பாத்துக்க..”

நான் கற்சிலுவையை மனதில் நினைத்து லோலா திரும்பி வரவேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

***

– சுஷில் குமார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular