சுஷில் குமார்
லாராவின் இசைப் புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் இந்தப் பாடல் இருந்தது. மொழிபெயர்க்கப்பட்டதாகத்தான் இருக்கும்.
‘பார்வையற்ற அடியாழத்தில்
உறைந்திருந்தேன் நான்
முதல் முறை நீ வந்து
என் கதவைத் தட்டியபோது
சிறு குழந்தையாய் இருந்தேன்.
இரண்டாம் முறை தட்டியபோது
பயத்தில் என் கதவுகளை
இறுக்கமாக மூடியிருந்தேன்.
என் சுவர்களின் விரிசல்
படர்ந்து வர
நீண்ட இருளில்
சோர்ந்திருந்த ஒரு நாளில்
ஒரு புள்ளியாய் தெரிந்த
வெளிச்சத்தை உற்றுப் பார்க்க
என் கதவுகளை
லேசாகத் திறந்தேன்.
துரும்பென என் கண்களுக்குள்
விழுந்துவிட்டாய்.
உன்னைப் புறந்தள்ள முடியாமல்
என் நீர்மையில் உன்னைப்
பொதிந்து வைத்தேன்.
அந்த நீண்ட கர்ப்ப காலம் முடிந்து
நீ என்னைப் பிரிந்து விடுவாய்
என நான் அஞ்சியிருந்த நாளில்
என் மொத்த உலகையும் ஒளியாக்கி
பின் என்னை இருளில் விட்டு
விலகிச் சென்றாய்.
நான் என்ன
வெறும் சிப்பியா?”
…
“இன்று ஒரு மறக்க முடியாத நாள், என்னோடு ஒரு இடத்திற்கு வருவாயா கெவின்?” என்று லாரா அழைத்தபோது நான் உள்ளுக்குள் உறுதியே செய்து விட்டேன். அந்த நாள் வந்து விட்டது என்று.
நகரத்திற்கு வெளியே அடர் காட்டுப்பகுதியின் துவக்கமாக நின்ற சூரியகாந்தி மலைக்கு அழைத்துச் சென்றாள். உச்சியிலிருந்த சூரியகாந்திப் பூக்கள் நிறைந்த தோட்டத்தின் நடுவேயிருந்த ஒரு மேடை போன்ற பீடத்தில் ஒரு கற்தூண் நடப்பட்டிருந்தது. அங்கு வந்து மஞ்சள் பூக்களைத் தூவி வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை என்று சொன்னாள். எனக்கு அடக்க முடியாத மகிழ்ச்சி.
தோட்டத்திலிருந்து வெளிவந்ததும், “நன்றாகப் பசிக்கிறது. கிளப்பிற்குப் போகலாமா கெவின்? ஒரு ஷாடனை ஒயினும் கொஞ்சம் ஸீ ஃபுட்டும் சாப்பிடலாம், என்ன?” என்றாள் லாரா. என்ன நினைத்துப் பூக்களைத் தூவினாள் என்பதை இன்னும் அவள் சொல்வதாயில்லை. சரி, நீண்டு செல்லும் இந்த மௌனமும் ஒரு அழகுதான். முழங்கால் வரையிலான கருப்பு நிற கவுன், தோள்களை எப்போதும் சுற்றியிருக்கும் மெல்லிய வலை போன்ற சால்வை, வழக்கத்திற்கு மாறாக சிவப்பற்ற வெறும் உதடுகள், அலட்டிக் கொள்ளாத முத்துத் தோடுகள், கழுத்தில் வழக்கம் போல ஒற்றை வெண்ணிறச் சிப்பி மாலை, லென்சுகளிலிருந்து விடுபட்ட உணர்ச்சி பொங்கிய கண்கள். கூடுதலாக அன்று ஒரு கருப்புத் துணியால் தலையைச் சுற்றி முக்காடிட்டிருந்தாள்.
“நீண்ட நாட்களாக மனதில் வைத்து தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் கெவின். இன்று அந்தக் கற்தூணின் முன் நின்று வேண்டிய போது ஒரு முடிவு தெளிவாகி வந்தது.” கார் சன்னலின் வழியே பாதி முகத்தை வெளிக்காற்றிக்கு நீட்டியபடி கூறினாள். சாய்ந்த சூரியக் கதிர்களின் ஊடே முக்காட்டை மீறிக்கொண்டு இருபுறமும் பீரிட்டெழுந்த வண்ணமேற்றப்பட்ட முடிக்கற்றைகள் இசைக்கேற்ப நடனமாடின. அடிக்கடி அவற்றை இழுத்து கழுத்தோடு சேர்த்து நீவி விட்டவாறு திரும்பி என்னைப் பார்ப்பதும் பின் வெளியே பார்ப்பதுமாக இருந்தாள்.
தலையாட்டியபடி என்னவெனக் கேட்டு நீண்டு இழுத்த புகையை வெளிவிட்டேன்.
“பெரிய விசயமெல்லாம் இல்லை. ரோக்காவையும் சாப்பிட வரச்சொல்லியிருக்கிறேன்,” என்று என் முகத்தை கூர்ந்து பார்த்து சிரித்தாள்.
சட்டென வாய்விட்டுச் சிரித்து விட்டேன். “என்ன? அந்தக் கோமாளியையா? நீ எதற்கு? ஏய், அவனைப் பிடித்திருக்கிறது என்று மட்டும் சொல்லிவிடாதே. இப்போதே காரிலிருந்து குதித்து விடுவேன். ஹாஹாஹா.. ரோக்கா, கோமாளிப் பயல்.. அவனும் அவனுடைய மூஞ்சியும். ஒரு மோசமான ஹேங்க் ஓவரின் வாந்தி மாதிரி… அவனெல்லாம் ஒரு ஆளென்று சாப்பிட அழைத்திருக்கிறாயா?”
லாராவின் முகம் சட்டென இருண்டு போன மாதிரியிருந்தது. ஒருசில நொடிகளில் மீண்டும் புன்னகைத்தபடி, “சரி சரி, சிரிப்பில் என்னவெல்லாமோ உணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய் மிஸ்டர். ஆனாலும், இவ்வளவு ஆகாதுதான். அவன் வரட்டும். உன்னை மிரள வைக்கப் போகிறான் பார்,” என்றாள்.
ஒன்றும் சொல்லாவிட்டாலும் நான் நினைப்பதை அல்லது நினைக்கப் போவதை எப்படித்தான் இவள் கண்டுபிடிக்கிறாளோ என்று நினைத்தவாறு காரை வேண்டுமென்றே இடவலமாக வளைத்து வேகம் கூட்டி அவள் சொன்னதைக் கண்டுகொள்ளாததைப் போல மீண்டும் சத்தமாகச் சிரித்தேன். அவள் என் பக்கமாகச் சாய்ந்து விடாதபடி சன்னலை இறுக்கப் பிடித்தபடி நான் சிரித்ததைப் போலச் சிரித்தாள். பின் மீண்டும் வெளிக்காற்றோடு பேச ஆரம்பித்து விட்டாள். அடுத்த ஒன்றிரண்டு வேகத்தடைகளில் வேண்டுமென்றே காரைப் பறக்க விட்டேன்.
என் கைகள் பரபரத்தபடி தாறுமாறாக இயங்க, ஒவ்வொரு தவறான வளைப்பிற்கும் என்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தாள். ரோக்கோவின் முகம் வேறு மீண்டும் மீண்டும் என்முன் வந்து எரிச்சலைக் கூட்டிக் கொண்டிருந்தது. எங்கள் பல்பொருள் அங்காடியில் தான் அவனும் வேலை செய்கிறான். சரக்கு ஏற்றி இறக்கும் வேலை. அழுக்குப் பிடித்த பிசுபிசுப்பான அந்தச் சீருடையில் எப்படித்தான் முழு நாளும் இருக்கிறானோ? கற்றை கற்றையாக முகம் மறைக்கும் முடியும், சுருண்ட தாடியுமாக. அவனையெல்லாம் சரக்குக் கிடங்கைத் தாண்டி வெளியே வந்துவிடாமல் வைத்திருப்பது வியாபாரத்திற்கு நல்லது. மொத்த நிறுவனத்திலும் ஒருவர் கூட அவனுடன் நெருங்கிப் பேசி நான் பார்த்ததில்லை. மீன் வெட்டும் பகுதியில் நிற்கும் அந்த அசிங்கமான நீண்ட மூக்கைக் கொண்ட பெண்ணைத் தவிர. அவன் அவளுடன் உட்கார்ந்து சாப்பிடுவதை ஒருசில முறை பார்த்திருக்கிறேன். மற்றபடி, என்னிடமெல்லாம் அவன் வந்து நிற்கவே முடியாது. தேவையும் இல்லைதான். ஆனால், லாரா எதற்கு அவனைச் சாப்பிட அழைத்திருக்கிறாள்? அவனும், அவனது கஞ்சா வாடையும். மாலையும் இரவும் முழு கஞ்சா போதையில்தான் இருப்பானாம். அருகே சென்றாலே குமட்டிக் கொண்டு வருமளவு வாடை அவனுடலில் தங்கிவிட்டதாம். மற்றபடி அவனைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரிந்த மாதிரியில்லை. ஏதோ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான குடியிருப்புப் பகுதியில் இருக்கிறான். சரி, இந்த மாதிரி ஆட்கள் இருந்தால்தானே பல வேலைகள் நடக்கும். சீ.. என்ன கருமம் இது? நான் ஏன் அவனைப் பற்றி இப்படி யோசித்துக் கொண்டிருக்கிறேன்? என்னைப் புலம்ப வைத்துவிட்டு அவள் இசையை ரசிக்கிறாளாம்.
அப்படித் திட்டமிட்டு ஒரு விருந்திற்குச் செல்ல வேண்டுமென்றால் என்னிடம் ஏன் முன்னமே சொல்லவில்லை இவள்? அதுவும் மறக்க முடியாத நாள் என்று சொல்லிவிட்டு அவனை வரச்சொல்லியிருக்கிறாளே!
வண்டி சூரியகாந்தி மலைத் தொடரின் கொண்டை ஊசி வளைவுகளில் பெருமூச்சிட்டபடி இறங்கி சமவெளிப் பகுதியில் நுழைந்தபோது அவள் வாயைத் திறந்து வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். நேராக மாஹோ கடற்கரைச் சாலையைப் பிடித்து எங்கள் வழக்கமான மகாகனி விடுதியின் முன் வண்டியை நிறுத்தினேன். இமைகளைக் கசக்கியவாறு நெட்டி முறித்து அவள் கண் திறந்த போது கடல் நீலத்திற்குள் சூரியன் மூழ்கிக் கொண்டிருந்தது.
“ஒட்டு மொத்தக் கடலுமே ஒரு சிப்பி தான் இல்லையா கெவின்? இந்த ஒட்டு மொத்த வெளியும் கூட!” என்றவாறு எனைப் பார்த்து புன்னகைத்தாள்.
கருக்கல் பொழுதின் ஊளையிடும் காற்றும் விடுதியின் உள்ளிருந்து வந்த மெல்லிய இசையும் என் படபடப்பை மாற்ற, அவள் கைகளைப் பிடித்து இறங்கி வருமாறு அழைத்தேன். சிரித்தபடி அலட்டிக்கொண்டு இறங்கி நின்று சுற்றுமுற்றும் ஒரு பார்வையை விட்டு என்னை முன் செல்லுமாறு சைகை செய்தாள்.
“இன்றைய மொத்தச் செலவும் என்னுடைய கணக்கில். இன்றாவது என்னை செலவு செய்ய விடு,” என்றாள்.
அரங்கின் மையத்தில் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த உயர் ரக மது வகைகள். அவற்றைச் சுற்றியிருந்த நீள்வட்ட மேசையின் மீது சாய்ந்திருந்து பேசியும், முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகள். ஓர் ஓரமாக இருந்த பழைய படகு போன்ற மேடையின் மீதிருந்து வந்த அசர்பெய்ஜான் டிரம் இசை. அதற்கேற்ப ஆங்காங்கே ஆடிக்கொண்டிருந்த இளம் பெண்கள். கவிந்து கொண்டிருந்த இருளை வெட்டிப் போவது போன்ற சுழலும் ஒளிக் கற்றைகள். அன்று அந்த விடுதிக்கே ஏதோ சிறப்பான நாள் போலிருந்தது.
கடற்காற்று உள்வரும் வகையில் இருந்த ஓர் ஓரத்து மேசையை நோக்கி எங்களை அழைத்துச் சென்றாள் கருங்கூந்தலுடைய ஒரு பணிப்பெண். மேசையின் மையத்தில் ஒரு சிறிய வட்ட வடிவ மீன் குடுவை. அதனுள் ஒற்றைச் சிறிய மீன். அதன் வெண்ணிற இழை போன்ற துடுப்பு ஒரு தேவதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.
குளிர்ச்சியுடன் பரிமாறப்பட்ட ஷாடனை ஒயின் கோப்பையை மெல்லக் கையிலெடுத்து முகர்ந்து பார்த்தாள். சில நொடிகள் கண்களை மூடி பின் புன்னகையுடன் கண் திறந்து “சியர்ஸ் மிஸ்டர்,” என்றாள்.
மேசையைப் பாதி அடைத்துக் கொண்டிருந்த லாப்ஸ்டர், ஆய்ஸ்டர் மற்றும் மஸில் பிளாட்டர் தட்டைப் பார்த்து ஒவ்வொன்றும் என்னவென ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன் நான். லாப்ஸ்டருக்கு தொட்டுக் கொள்ள ஷ்யான் சாஸ் வேண்டுமென பணிப்பெண்ணிடம் கேட்டாள். ஷ்யான் என்றால் பிரெஞ்சில் நாய் தானே!
“என்ன! நாய் சாஸா? எப்படித்தான் பெயர் வைக்கிறார்களோ!” என்று நான் சொன்னபோது அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள். பக்கத்து மேசைகள் எங்கள் மீது கவனம் கொள்ள, நானொன்றும் அவளுக்குச் சளைத்தவன் அல்ல என்று காட்ட நினைத்து கிட்டத்தட்ட பச்சையாகவிருந்த ஆய்ஸ்டரை கீறிப் பிளந்து அதன் மீது எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விட்டு வழித்து வாயிலிட்டேன். புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவள் முன் சாய்ந்து என் விரல்களைப் பிடித்தாள்.
“ம்ம்.. நிஜமாகவே சுவையாகத்தான் உள்ளது. உன் சாய்ஸ் பரவாயில்லை” என்று கண் சிமிட்டினேன்.
லாராவிற்கு சிப்பிகளென்றால் அவ்வளவு விருப்பம். ஒவ்வொரு முறை இந்த விடுதிக்கு வரும்போதும் சிப்பிகளையே சாப்பிடுவாள். விசித்திரமாக, சாப்பிட்டு முடித்து அந்தச் சிப்பியோடுகளைத் தன் கைப்பையில் எடுத்துக் கொள்வாள். அவளது கழுத்திலிருக்கும் திறந்து மூடும்படி கோர்க்கப்பட்டிருந்த சிறிய சிப்பியினுள் அவளுக்கு நெருக்கமான யாருடைய புகைப்படமோ இருக்க வேண்டும்.
யாருமறியாமல் அவள் அதைத் திறந்து பார்ப்பதை நான் அறிவேன். இன்னுமொரு விசித்திரம், அவள் கிதார் வாசிப்பதற்கு ஒரு சிப்பியையே பயன்படுத்துகிறாள். யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
“இந்த முறை என் மகளுக்குப் பிறந்த நாள் பரிசாக ஒரு வயலின் வாங்கிக் கொடுக்க வேண்டும் கெவின். அவள் இப்போது என் பாடலுக்கேற்ப ஹம்மிங் செய்கிறாள் தெரியுமா?”
“ம்ம்… அவளுக்கு இசை வரவில்லையென்றால்தான் அதிசயம். ஒரு ஹம்மிங் பறவைக்குப் பிறந்தவள் இல்லையா?” என்று சொல்லி கையை மைக் போல வைத்து லாரா பாடுவதைப் போல நடித்தேன்.
அவளைச் சீண்டுவதில் எப்போதும் எனக்குத் தோல்விதான். சட்டென எழுந்த அவள் ஓடிச்சென்று அந்தப் படகு மேடையில் ஏறி தனக்குப் பிடித்த பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டாள். டிரம்ஸ் இசை தேய்ந்து கிதாரும் பியானோவும் மேலெழுந்து வந்தது. ஊடே அவளது தனித்துவமான குரல். பிறகு கேட்கவா வேண்டும்? சின்ட் மார்ட்டின் தீவின் மொத்த ஆடவர்களும் வாயைத் திறந்தபடி அந்த மேடையின் கீழ் ஐக்கியமாகி விட்டார்கள். ரசிகர்களின் வேண்டுகோள்படி நான்கைந்து பாடல்களைப் பாடி பெரும் கைத்தட்டல்களைத் தாங்கி பேரரசியைப் போல என்னருகே வந்து நின்று கண்களைச் சிமிட்டினாள்.
“உன் லாப்ஸ்டருக்கு இசை தெரியாது. உட்கார்ந்து சாப்பிடு.” என்றேன்.
உதடுகளைக் குவித்து காற்றில் என்னை முத்தமிடுவதைப் போலச் சீண்டியவாறு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஆமாம், எங்கே அந்த கோமாளி? அவனை வரச்சொல்லி விட்டு இப்படி முழுங்கிக் கொண்டிருக்கிறாயே? காதலுக்கு ஒரு மரியாதை இல்லையா மிஸ்.லாரா, தி கிரேட் சிங்கர்?”
“அவன் வரட்டும். பசிக்கு முன் காதலென்ன, கடவுளே வந்தாலும் தேவையில்லை மிஸ்டர். சரி, சரி. உங்கள் பொறாமை இன்னும் அடங்கவில்லை போலும்.”
“பொறாமையா? சீச்சீ… நான் ஏன் பொறாமைப்படப் போகிறேன்? அவனெல்லாம் என் முன்னால் நிற்கக்கூட மாட்டான்? சொல்லப் போனால் அவன் முகம் கூட எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அவன் ஜமைக்கா நாட்டவன் தானே?”
“ஓஹோ. அது சரி. உனக்கு அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது! சரி, சரி.” என்றவாறு கண்ணடித்தாள்.
“அவன் ஒரு கஞ்சா அடிமை என்று தெரியும். அவன் பக்கத்தில் கூடச் செல்ல முடியாதாமே?”
“அதெல்லாம் இருக்கட்டும். இன்று உன்னை ஒரு வழி செய்வான், பொறுத்திருந்து பார் மிஸ்டர்.”
ஒன்றும் சொல்லாமல் இன்னொரு ஒயின் கொண்டுவரச் சொன்னேன்.
*
ஒருநாள் ரோக்கோ வேலை செய்யும் பகுதியைக் கண்காணிக்கச் சென்றபோது வேலை செய்துகொண்டே தலையை ஆட்டி ஆட்டி தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இடையிடையே கையை ஒருபக்கமாக நீட்டுவதும் பின் மீண்டும் பேசுவதுமாக இருந்தான். ஒருவிதமாக சீறுவது போன்ற முகபாவம். ஆர்வமிகுதியில் அவனறியாமல் சரக்கு மூட்டைகளின் இடையில் சென்று நின்று என்ன பேசுகிறான் என கவனித்தேன். “க்ரேசி பிட்ச், க்ரேசி பிட்ச்.” என்று சொல்லிக் கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள். அவன் கை காட்டிய திசையில் பார்த்தேன். லாரா சரக்குகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவனைப் பற்றி என் மேலதிகாரியிடம் விசாரித்தபோது, “அவன் நமது தேசிய வங்கியில் நிர்வாக அதிகாரியாக இருந்தவன் கெவின். நம்ப முடியவில்லை, இல்லையா? எல்லாம் விதி. தலையில் ஒரு சிறிய இழை பிசகிப் போனால் எல்லாம் முடிந்தது, என்ன சொல்ல? போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தானாம். நிஜம்தானா என்று தெரியவில்லை. ஆனால், அவனை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நல்லவொரு வேட்டை நாய் தான்!” என்றார்.
*
கிட்டத்தட்ட நாங்கள் சாப்பிட்டு முடித்து விடும் நேரம் விடுதியின் முகப்பு வழியாக தயங்கித் தயங்கி வந்தான் ரோக்கோ. அழுக்கடைந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், பாப் மார்லியின் படம் போட்ட ஒரு கருப்பு நிற டி-ஷர்ட், வாராது குலைந்து கிடந்த கற்றை முடி. எவரையும் நேர் நோக்காது தரையைப் பார்ப்பதும் பின் தூரத்து சுவற்றையோ அங்குமிங்குமோ பார்ப்பதுமாக நடந்தான். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் ஒரு நொடி யோசித்து நின்று வைத்ததைப் போல நடந்தான்.
“வந்து விட்டான் உன் கோமாளிக் காதலன். போ, போய் ஒரு சிவப்பு ரோஜா கொடுத்து அவனை வரவேற்று அழைத்து வா. ஹாஹாஹா.”
அவசர அவசரமாக கடைசித் துண்டு லாப்ஸ்டரை விழுங்கிவிட்டு, கைக்குட்டையில் வாயைத் துடைத்தபடி என்னைப் பார்த்து முறைத்தாள் லாரா. அவள் சற்று பதட்டமடைந்ததைப் போலிருந்தது.
ரோக்கோ எங்கள் மேசையருகே வந்து நின்றான். மெல்லத் தலை தூக்கி லாராவைப் பார்த்ததும் அவன் கண்கள் கீழ் தாழ்ந்து கொண்டன.
“வா ரோக்கோ. உட்கார்,” என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் லாரா. அவன் தயங்கியபடி உட்கார்ந்து என்னை நோக்கி லேசாகத் தலையசைத்தான். நான் அதில் பாதியளவு தலையசைத்தபடி லாராவைப் பார்த்து சிரித்தேன். அவள் சைகையில் வேண்டாமெனக் கூறினாள்.
“இதோ வருகிறேன். பேசிக்கொண்டிருங்கள்,” என்றுவிட்டு எழுந்து கழிவறைக்குச் சென்றேன். நான் செல்வதைக் கூர்ந்து கவனித்த லாரா அந்த அறையிலிருந்து நான் மறைந்த கணம் ரோக்கோவின் காதருகே சென்று ஏதோ சொன்னாள்.
அவளருகே இருந்தபோது ஓரளவு நாகரிகமாகத்தான் நடந்திருந்தேன். ஆனால், தனிமை எனக்குள் எரிச்சலையும், காழ்ப்பையும் கொண்டு வந்தது. இவனை ஏதேனும் காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பிவிட்டால் என்ன? இருக்கவே இருக்கிறது அவனது கஞ்சா வாடை. இவன் எப்படி நம்முடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட வந்திருக்கிறான்? போயும் போயும் ஒரு மூடை தூக்குபவன்! லாரா எப்பேர்ப்பட்ட பாடகி! அவளது குரலுக்கு இணை தான் உண்டா, என்ன? அவள் எப்படி இவனைப் போய் வரச்சொல்லியிருப்பாள்? இது நிச்சயம் வேறு ஏதோ தான். அன்று ஏன் இவளைப் பார்த்து அப்படித் திட்டினான் இவன்? யாருடனும் எதுவும் பேசாதவன் இவளைப் பார்த்து எதற்காகத் திட்டியிருப்பான்? அவன் திட்டியது கூட இவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சூரியகாந்தித் தோட்டத்தில் ஏதோ நல்ல முடிவு கிடைத்ததாகச் சொன்னாளே, என்னவாக இருக்கும்? ஒருவேளை தற்செயலாக இருவருக்கும் இடையில் பழக்கம் ஏதாவது ஏற்பட்டிருக்குமோ? வீட்டிற்குக் கூட அழைத்துச் சென்றிருப்பாளோ? ஒருவேளை நான்தான் தேவையில்லாமல் யோசிக்கிறேனா? அவனுக்கு ஏதேனும் உதவி செய்வதற்காக வரச்சொல்லியிருப்பாளோ? ஆம், கடன் ஏதும் கேட்டிருப்பான். பாவம், அவன் வாங்கும் சம்பளம் அவன் ஒருத்தனுடைய சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் மட்டும்தான் சரியாக இருக்கும். இந்த மாதிரி விடுதியையெல்லாம் பார்த்திருப்பானோ என்னவோ? போய் அவனுக்கு ஒரு பியர் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
முகத்தைக் கழுவி நிமிர்ந்தபோது அரங்கிலிருந்து பலத்த ஆரவாரம் கேட்டது. ஊடாக ஒரு இனிய குரல் மங்கியபடிக் கேட்டது. ஆர்வம் மேலிட வெளிவந்து பார்த்தேன்.
கிதாரின் கம்பிகள் அவன் விரலுக்கு ஏற்றாற்போல் அசைந்து கொடுக்க, அதுவரை நான் கேட்டிராத ஓர் ஒலியை கிதாரிலிருந்து தட்டியெழுப்பிய பின் தலை குனிந்தபடி அடுத்த வரியைப் பாடினான் ரோக்கோ. அவன் குரல் கேட்டு ஒரு சில பெண்கள் எழுந்தே நின்றுவிட்டனர். ஒவ்வொரு வரிக்கும் உடன்சேர்ந்து மொத்த அரங்கமும் பாட ஆரம்பித்தது. விசில் சத்தங்களும் கைத்தட்டலும். ஒரே ஆரவாரம். புதியதொரு சுகத்தைக் கண்டுகொண்ட ஆதி மனிதர்களைப் போல ஒவ்வொருவரும் தன்னை மறந்து அவன் இசையோடு அசைந்தும் ஆடியும் நின்றனர். அடுத்த அரைமணி நேரத்திற்கு அந்த மொத்த அரங்கையும் தன் கிதார் கம்பிகளில் கட்டிப் போட்டான். ஒருமுறை கூட முகம் தூக்கி எவரையும் காணாது, தனக்கே தனக்கான ஒரு தனி உலகில் இருந்து அவனுக்காக மட்டுமே பாடுவதைப் போல பாடிக் கொண்டிருந்தான். இடையில் ஓரிரு முறை லாரா என்ன செய்கிறாள் என்று நோட்டமிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவளது கண்கள் அந்த மேடையை விட்டு விலகியதைப் போலவேயில்லை. முக்கியமாக, ஸ்பேனிஷ் மொழியில் அவன் ஒரு பாடல் பாடியபோது லாரா கண் கலங்கியதைப் போலிருந்தது. அந்தப் பாடலை நான் எங்கோ கேட்டிருக்கிறேன். நான்கைந்து சிகரெட்டுகளைப் புகைத்து விட்டு வந்து லாராவின் அருகே நெருங்கி உட்கார்ந்து அவள் கையைப் பிடித்தேன்.
மெல்லத் திரும்பியவள் என் காதருகே வந்து, “நான் சொன்னது போல உன்னை வீழ்த்தி விட்டான், இல்லையா மிஸ்டர்?” என்று கேட்டாள்.
என்னால் நிஜமாகவே அவன் அப்படிப் பாடியதை நம்ப முடியவில்லை. அல்லது, அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தாள் லாரா. தன் கடைசிப் பாடலைப் பாடி முடித்து எழுந்து நின்றான் ரோக்கோ. கைத்தட்டலும் ஊளையும் விசில் சத்தமும் முடிய சற்று நேரம் பிடித்தது. நான் நேராக அவனருகே சென்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கி, “அற்புதம். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை ரோக்கோ. உனக்கு இன்று நான்தான் பியர் வாங்கித் தருவேன்,” என்றேன். அவன் பெரிதாக ஏதும் மறுவினையின்றி தலையை மட்டும் ஆட்டினான். அவனுக்காக பியர் வாங்கிக் கொண்டு எங்கள் மேசைக்கு வர அவனும் வந்து உட்கார்ந்தான். சட்டென, லாரா எழுந்து கழிவறைக்குச் சென்றாள்.
குழம்பியபடி என்ன பேசவென்று தோன்றாமல், அவனது வசிப்பிடம், பூர்வீகம் என்று ஏதேதோ கேட்டேன். அவன் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளிலேயே பதிலளித்தான்.
அவனிடம் கஞ்சா வாடை அடிக்கத்தான் செய்தது. இன்னொரு பியர் வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்தவன் சாப்பிடவும் ஒன்றும் வேண்டாமென்றான். எதற்காக லாராவை ‘க்ரேசி பிட்ச்’ என்று திட்டினான் என்று கேட்டுவிடலாமா என தோன்றிக் கொண்டேயிருந்தது.
லாரா திரும்பி வந்ததும் இவன் எழுந்து புறப்பட்டான். ஒன்றும் புரியாமல் நான் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தேன்.
“இதோ வந்து விடுகிறேன் கெவின்,” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழுத்திவிட்டு லாரா அவன் பின்னே சென்றாள். விடுதி முகப்பில் பின்னிருந்து அவனைத் தட்டி நிறுத்திய லாரா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். எதையோ ஆழமாக விளக்குவதைப் போல ஒரு சில நிமிடங்கள் அவள் பேச அவன் ஒன்றும் சொல்லாமல் அவளது முகத்தைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாக நின்றான். பின், தன் கையிலிருந்த ஏதோவொன்றை அவனது கையில் வைத்துத் திணித்தாள் லாரா. அவன் தலையை ஆட்டியபடிப் புறப்பட என்னை நோக்கிப் புன்னகைத்தபடி நடந்து வந்தாள் லாரா. என் கடுப்பைக் கடந்து போலியாகப் புன்னகைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன் நான். கரையொதுங்கிய கப்பலொன்றின் நீண்ட சங்கொலி என் வரை வந்து மீண்டு சென்றது.
*
தனது இளமை குறித்தும் இந்தத் தீவில் தான் குடியேறியது குறித்தும் பல நேரங்களில் பல கதைகளைச் சொல்லியிருக்கிறாள் லாரா. எல்லாமே நம்பும்படியான கதைகள். அதில் உண்மையென நான் நம்பிய கதையின்படி புலம்பெயர்ந்து இங்கு வந்து அவளது தந்தைவழி அத்தையின் பயிற்சியில் பாட ஆரம்பித்தவள் பின்னாட்களில் இரவு விடுதிகளில் பாடினாள். புகழ் பெறப் பாடிய பின், சில நாட்களில் குடித்துக் கொண்டே பாட ஆரம்பித்தாள். குடி, பாடலுடன், ஆடலும், ஆடவரும் சூழ்ந்து கொள்ள, மெல்ல மெல்ல இசை விலகிச் செல்ல, குடி, குடி என்றானது. எல்லை மீறிய குடியுடன் மற்றெல்லா போதைகளும் சேர்ந்து கொள்ள, பெரும்பாலும் இரவு விடுதிகளிலேயே இருந்திருக்கிறாள்.
ஒருநாள், புகை சூழ்ந்த ஓர் அறையில் அவள் விழுந்து கிடந்தபோது தூரத்திலிருந்து மெல்லிய தீற்றலாய் ஒரு சங்கின் ஒலி கேட்டது. மெல்ல எழ முயற்சித்து தவழ்ந்து சென்று அந்த ஒலியைத் தீண்டிவிட முயற்சித்தாள். சங்கின் ஒலி மெல்ல மெல்ல வலுப்பெற்று ரீங்கரிக்கும் தேனீயாக, பின் ஒற்றைப் புல்லாங்குழலாக, பின் யாருமற்ற வெளியின் ஒற்றை அசரீரிக் குரலாக மாறி அவள் நெஞ்சம் சேர்ந்தது. அக்குரலுடன் நீண்ட கைகளின் தொடுகையில் தொலைந்து போன இசையும் குரலும் இருந்த திசை மெல்லத் தெளிந்து வந்தது.
*
லாரா தன் செல்ல மகளுக்காக ஒரு ரகசிய பாதுகாப்புப் பெட்டகத்தை வாங்கி வைத்திருந்தாள். சூதாட்டங்களின் போது அதிருஷ்ட வெற்றியீட்டும் பெரும் பணக்காரர்கள் தாராளமாகக் கொடுக்கும் அன்பளிப்புகளை மிகக் கவனமாகச் சேமித்து வைத்தாள். மகளின் மொத்தப் படிப்பிற்கான தொகையையும் சேமித்து விட்டிருந்த அந்த நாள் அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் பியர் வாங்கிக் கொடுத்தாள். விடிய விடிய அவர்களோடு அவர்களுக்காக கேட்பதையெல்லாம் பாடி மகிழ்வித்தாள்.
*
கட்டுக்கடங்காத கோபத்தில் ஒருவனது தலையில் ஒரு எடைமிக்க பாட்டிலால் அடித்தால் என்ன ஆகும்? அதுவும் சுக்குநூறாக உடையும்படி உடைத்தால்? பீறிட்டுத் தெறித்த இரத்தத்தில் அவன் சுருண்டு கிடக்க சற்றும் இரக்கம் கொள்ளாமல் உறங்கிக் கிடந்த மகளைத் தோளில் தூக்கிக்கொண்டு விருவிருவென்று நடந்தாள் அவள். அவளது மேசையின் இழுப்பறைக்குள் கைத்துப்பாக்கியொன்று எடைமிகுந்து இருந்தது விழுந்து கிடந்த அவனுக்குத் தெரிந்திருக்கலாம். அந்தத் துப்பாக்கி ஓர் உயிரைப் பறிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது ஒரு பெரும் கொள்ளைக்காக, அல்லது ஒரு பலாத்காரத்திற்காக, ஒருவேளை தற்கொலைக்காகவும் தான்.
அடுத்த சில மாதங்களுக்கு அவனுடைய நினைவுகள் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. தான் எப்பேர்ப்பட்ட இசைக்கலைஞன் என்பதை அவன் பின்பொரு நாள் தற்செயலாகப் பாடியபோது தனக்குள் தோன்றிய நினைவுக் கீற்றுகளின் வழி கண்டுகொண்டான். ஊடாக வந்து சென்ற பெண் முகமும் கோர்த்த கைகளும் யாருடையவை என்று கண்டுகொள்ள சில வருடங்கள் பிடித்தன.
ஊரின் ஒதுங்கிய பகுதியில் தனக்கான ஒற்றையறையில் போதையின் உச்சத்தில் சுவற்றில் அவன் வரைந்த ஓவியம் என்னவென்று அவனுக்கே புலப்படவில்லை. அது ஓர் துப்பாக்கி குண்டு மாதிரியும், ஒரு பறவை மாதிரியும் இருந்தது. அந்த மஞ்சள் நிறப் பறவை ஒரு சூரிய காந்திப் பூவைப் போலவும் இருந்தது.
- “பாடுவதை நீ உனக்காக வைத்துக் கொள். உன் வருமானத்திற்கு உன் பேச்சும் கம்பீரமும் போதும்.” என்று சொல்லி லாராவை அந்த இரவு விடுதியிலிருந்து எங்கள் பல்பொருள் அங்காடிக்கு வேலைக்கு அழைத்து வந்தேன். எனக்கென மட்டுமே அவள் பாடவேண்டுமென என்னவெல்லாமோ செய்து பார்த்து, பின் ஒருநாள் அவளது வீட்டிற்குச் சென்றேன். பெண் குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், உடைகள் எனப் பலவும் வாங்கியிருந்தேன். அந்த வீட்டின் பிரதான அறைச் சுவற்றில் ஒரு பெரிய ஓவியம் இருந்தது. நவீன ஓவியம்.
“இதென்ன ஓவியம் லாரா? எனக்கு ஒன்றும் புலப்படவில்லையே.” என்று கேட்டேன்.
“சற்று தூரத்தில் நின்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்,” என்றாள்.
அவள் சொன்னபடிச் செய்தபோது ஒரு வெண்பளிங்கு போன்ற சிப்பியும் அதனுள்ளே ஒளிர்ந்த ஒரு முத்தும் தெரிந்ததைப் போலிருந்தது.
“இது சிறு வயதிலிருந்தே என்னுடன் கூட வரும் தோழி. என் கனவுத்தோழி!” என்று சொல்லியபோது லாராவின் முகம் அந்த முத்தைப் போலவே ஒளிர்ந்தது. புரிந்தும் புரியாமலும் நான் விழித்து நிற்க அவள் தொடர்ந்து கூறினாள், “ஒரு முத்து எப்படி உருவாகிறது என்று உனக்குத் தெரியும் அல்லவா கெவின்? இந்த ஓவியத்தைப் போல ஒரு காலத்தில் நானும் என் அப்பாவும் இருந்தோம். இன்று நானும் என் மகளும் இருக்கிறோம்.”
சில கணங்கள் கழித்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி, “அப்போது நான் முத்தாக இருந்தேன், இப்போது சிப்பியாக,” என்றாள்.
*
சின்ட் மார்ட்டின் சூரியகாந்தி மலைக்கு வருடம் ஒருநாள் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்ட லாரா அதன் அடிவாரத்தில் இருக்கும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அடிக்கடி நன்கொடை அனுப்புவதைக் கண்டுபிடித்தேன். அது ஏனெனக் கேட்க ஒருபோதும் துணிந்ததில்லை.
*
திரும்பி வந்த லாரா, “என்ன மிஸ்டர்? எப்படி, நான் சொன்னபடி நடந்ததா? உன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!” என்றாள்.
“கொஞ்சம் உட்கார் லாரா. உன்னுடன் பேச வேண்டும்.” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தேன்.
“ஹேய். என்ன, கையைப் பிடித்து இழுக்கிறாய்? என்ன பேசிவிடப் போகிறாய் அப்படி? பயந்தாங்கொள்ளி,” என்றவாறு வாய்பொத்திச் சிரித்தாள்.
ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் யோசித்திருந்தேன். அவள் உட்கார்ந்து ஓர் எலுமிச்சைத் துண்டை தன் நாவில் அழுத்தி கண்களை மூடிக் கொண்டாள். சட்டென அவள் முன் ஒற்றைக் காலில் முழங்காலிட்டு என் சட்டைப்பையிலிருந்த அந்தச் சிறிய பெட்டியைத் திறந்து அவள் முன் நீட்டினேன்.
புளிப்பின் இறுதியில் திறந்த அவளது கண்கள் விரிந்த கணத்தில், “இசை மிகுந்த இந்த நாளில் சற்றும் இசைஞானமற்ற இந்தப் பாவி உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என்னுடன் டேட்டிங் வருவாயா லாரா தி கிரேட் சிங்கர்?” என்று கேட்டேன். அவள் அந்தச் சிறிய பெட்டியிலிருந்த மிகச் சிறிய வெண் சிப்பியைப் பார்த்து அசைவற்று நின்றாள். துப்பாக்கி மலையின் நன்னீர் ஏரியிலிருந்து நான் கண்டெடுத்தது அது.
“உங்களைத்தான் கேட்கிறேன் மிஸ்.ஹம்மிங் பேர்ட்.”
கனவிலிருந்து வெளிவந்தவள் போல தனக்கேயான பாணியில் ஒற்றைக் கண்ணடித்துத் தலையாட்டினாள் லாரா.
*
காரில் ஏறும்போது சற்றுத் தயங்கியபடி லாராவிடம் கேட்டேன், “ரோக்கோவை வழியனுப்பும்போது அவனிடம் ஏதோ முக்கியமாக சொன்னாயே? என்ன சொன்னாய்? எனக்கு மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறது.”
லாரா புன்னகைத்தபடி என் தலையைக் கோதிவிட்டுச் சொன்னாள், “நிச்சயமாக ஐ லவ் யு என்று சொல்லவில்லை மிஸ்டர். ஒருவேளை அவனது பாடலைப் பாராட்டியிருக்கலாம், இல்லையென்றால் அவனிடம் ஏதேனும் உதவி கேட்டிருக்கலாம். ம்ம்ம்… ஒரு கூடை நிறைய சிப்பி கொண்டு வரச் சொல்லியிருக்கலாம், ஒரு துப்பாக்கி வாங்கிவரச் சொல்லியிருக்கலாம். ஏன், அவனிடம் ஒரு சாரி கூட சொல்லியிருக்கலாம். என்ன இருந்தாலும் அவன் ஓர் அசாத்தியமான பாடகன், இல்லையா?”
சட்டென அவன் பாடிய ஸ்பேனிஷ் பாடல் வரிகள் என் முன் காட்சிகளாக எழும்பி வந்தன.
சுஷில் குமார் 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”..
sushilkumarbharathi2020@gmail.com