சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம்

0

சு.கஜமுகன்

ண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் வாழ்வு குறித்தே வரலாற்றுப் புனைவுடன் பேசுகின்றது இந்நாவல்.    

பல நிகழ்வுகளை ஒரே தரத்தில் அல்லது ஒரே நேரத்தில் பேசுவதால் முதல் வாசிப்பில் இதனை புரிந்து கொள்வது மிகக் கடினம். ஏனெனில் ஒரே தரத்தில் வரலாறு ஒரு புறமாகவும், புனைவு ஒரு புறமாகவும், கதை அல்லது சம்பவங்கள் இன்னொரு புறமாகவும் செல்வதோடு மட்டுமல்லாமல் கதையின் போக்கில் இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் என்பன மாறி மாறி வருவதனால் கதையின் போக்கை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் எழக்கூடும். கதையின் சில இடங்களில் சமகால நிகழ்வும், இறந்தகால வரலாறும்  ஒரேயடியாகச் செல்லப்படுவதனால், இறந்தகால வரலாறு தெரியாதோர் நிகழ்கால சம்பவங்களுடன் அதனைப் பொருத்திப் பார்ப்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். படைப்பாளியுடனான உரையாடல் மற்றும் வாசகர்களின் விமர்சனம் மூலமமே இந்நாவலின் முழுப்பரிமாணத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். இதனை தனியே நாவலாகவும் அதே வேளை சிறு கதைகளின் தொகுப்பாகவும் பார்க்கமுடியும்.

யுத்தம் என்பது பல பரிமாணங்களின் தொகுப்பாகும். யுத்தத்தை பேசும் இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் யுத்தத்தின் பல பரிமாணங்களைப் ஒரேயடியாகப் பேசுவதால் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். மாறாக ஒவ்வொரு பரிமாணத்தையும் தனித்தனி அத்தியாயமாக எழுதி இருந்தால் இக்கதை வாசகர்களுக்கு புரிந்து கொள்ள இலகுவாக இருந்திருக்கும். ஆனால் யுத்தம் நிகழும்பொழுது தனித்தனி பரிமாணமாக நிகழ்வதில்லை, மாறாக  அனைத்துப் பரிமாணங்களின் தொகுப்பாகவே யுத்தம் நிகழும் என்பதனால் தனது கதை சொல்லும் முறையிலும் கதையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஒரேயடியாக நிகழ்த்துகிறார் ஆசிரியர். அந்த வகையில் இது ஒரு புது வகையான எழுத்து முயற்சி கூட  என்று சொல்லலாம். பழைய பாணியில் அல்லது வெறும் நேர்கோட்டுப் பாணியில் கதையை சொல்லாமல் ஒரு புது வகையான பாணியில் கதையை சொல்ல முயற்சித்துள்ளார்.

ஸ்பானிய போரின் கொடூரத்தைப் பேசுகின்ற பிக்காசோவின் குவார்ணிக்க ஓவியத்தில் எவ்வாறு சிறகு ஒடிக்கப்பட்ட பறவை, குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை, இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய், தீப்பற்றி எரியும் வீட்டில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண், வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய், காலில் நசுக்கப்படும் தலை கவசம், திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண் எனப் பல விடயங்கள் ஒரே ஓவியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளாதோ, அதே போல் இந்நாவலிலும் ஒரே தரத்தில் அல்லது ஒரே நேரத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிக்காசோ ஒவ்வொரு படங்களையும் தனித்தனியாக வரைந்திருக்காலம் ஆனால் யுத்தத்தின் அவலத்தைப் ஆழமாகவும் அழுத்தமாகவும் பிரதிபலிக்கவே ஒரே படத்தில் அனைத்தையும் கொண்டு வந்தார். அதே போல்தான் இந் நாவலிலும் பல வரலாற்று நிகழ்வுகள், புனைவுகள், புராணக் கதைகள், நிஜக் கதைகள், அரசியல் காய் நகர்த்தல்கள், யுத்தத்தின் பின்னால் அரசின் பங்கு, யுத்தத்தில் அகப்பட்ட எளிய மக்களின் தப்பித்தல் வாழ்வு என அனைத்தும் தனித்தனியாக பேசாமல் ஒரேயடியாக ஒரே தரத்தில் ஒரே தளத்தில் பல கதைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அல்லியின் கதையில் தொடங்கி, அல்லி ராணியின் வரலாற்றுக் கதை, இந்தியன் ஆமி பிரச்சனை, பங்கர் வாழ்வு, பங்கரில் முளைக்கும் காதல் கதை, குண்டுகளிலிருந்து தப்பி ஓடும் அகதி வாழ்வு, வெளிநாடு செல்வதற்கான ஏஜென்சி வாழ்க்கை, புலம் பெயர் வாழ்வின் சிக்கல்கள், புலம் பெயர் அரசியல் அமைப்பின் தில்லு முல்லுக்கள் என யுத்தத்தைக் கடந்து வந்த ஈழத்தமிழர்கள் சந்தித்த, கேள்விப்பட்ட முக்கியமான அனைத்துப் பிரச்சனைகளையும் கதைக் களமாக்கி உள்ளார் ஆசிரியர். இவற்றின் ஊடாக பயணிக்கும் சித்தார்த்தன், அல்லி மற்றும் சாதனாவின் போராட்ட வாழ்க்கையே இந் நாவலின் கருவாகும்.

இயக்கப் போராளியாக போராடும் அல்லி, அவள் சந்திக்கும் யுத்தக் களம் சார்ந்த சிக்கல்கள், யுத்தத்தில் அகப்பட்டு பின்னர் அதிலிருந்து தப்பி ஓடி புலம்பெயர் தேசத்திற்கு சென்று அங்கும் குடும்ப வன்முறையில் சிக்கி மீண்டெழும் சாதனா போன்ற பிரதான கதாபாத்திரத்திரங்களின் ஊடாக உயிர் வாழுதல் என்பதே தப்பி ஓடுதல்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்களை வழிப்படுத்தும் அல்லது குழப்பத்திற்கு உள்ளாக்கும் சித்தார்த்தன், அடிக்கடி தோன்றி மறையும் ஒரு கதாபாத்திரமாக, அடி மனத்துக் குழப்பத்தின் மாயத் தோற்றமாக கதையின் போக்கில் முன்னும் பின்னும் நகரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அது வாசகர்களுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தலாம். கதையின் போக்கில் அடிக்கடி தோன்றி மறைவதால் அதன் தொடர்ச்சியினைப் புரிந்து கொள்வது சற்று சிக்கலான விடயமாகும்.

சில இடங்களின் படைப்பாளி பேசும் தத்துவார்த்த வசனங்களானது ஜென் மனநிலை வாய்க்கப்பட்ட ஒருவர் அதி உச்ச நிலைக்கு சென்று ஆடும் ருத்ர தாண்டவத்தின் போது வெளிவரும் புரட்சி மிகு வார்த்தைகளாகவே காணப்படுகின்றது. “இறப்பின் நிச்சயம் இறப்பின் வேதனையை மறைத்துவிடுகிறது, மதிப்புறச் சாதல் செய்தால் மட்டும் கோழி சட்டிக்குள் போவதில் இருந்து தப்பி விட முடியுமா?”, “நிசத்தை அரூபமாக்கிய நிழல் பல தளங்களில் உயிர்புடையதாய் இருக்கின்றது”,” போதியின் நிழல்தானே அம்மரத்தின் புனிதத்தை நிறுவிற்று”. “இருப்பது இருந்தபடி இருத்தலின் தொடர்ச்சியாகத்தான் இந்த அமைதி நியாயங்கள் தென்டப்படுகின்றன போன்றன அவற்றுள் சிலவாகும். மேலும் சித்தார்த்தன் மற்றும் சீடன் மகிந்தவின் கதை, அல்லி மற்றும் அர்ஜுனனின் கதை போன்றவற்றின் மூலம் நேரடியாக ஒரு கதையும், மறைமுகமாக இன்னொரு கதையும் செல்வது ஆசிரியரின் எழுத்தாளுமையின் உச்சத்தைக் காட்டுகின்றது.

அர்ஜுனன் பெண்களை மணந்து அதன் மூலம் நிலங்களையும் சொத்துகளையும் தனதாக்கி கொள்கின்றான் என்பதன் ஊடாக பண்டைய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆதிக்கக் கூறையும், “தெற்கில் யு.என்.பி யின்ற மடிக்குள்ள படுத்துப் போட்டு இங்க வந்து சிங்களவனின்ட தோலை உரிச்சுக் கொண்டு வருவம் என உசுப்பேத்தியதுதான் மிச்சம்” என்பதின் ஊடாக தமது அரசியல் சுயலாபத்திற்காக நாடகமாடிய தமிழ் தலைமைகளின் இரட்டைப் போக்கையும், “போராடச் சக்தி அற்றவர்கள் மட்டும்தான் பொய்க்கதைகள் கட்டுவார்” என்ற வரிகளின் ஊடாக பொய் புரட்டு மூலம் மக்களை ஏமாற்றும் வலதுசாரிய அரசியலின் சூட்சுமத்தையும் பதிவு செய்கிறார். 

அதிகார வெறியின் கோரத்தாண்டவத்தினால் “மனிதம் குறுகி மிருகமாக மருவியது. நாலு கால்களில் நகர்ந்தனர் அனைவரும்” என்ற வரிகளின் ஊடாக ஒட்டு மொத்த அவலத்தையும் ஒரே வரியில் பதிவு செய்கிறார். ஒரு சிப்பாய் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாலும் வழங்க முடியாத பணத்தையும், வசதியையும் அவர் குடும்பங்களுக்கு வழங்கல், இறுதி வரை நிறுத்தாத நிரந்தர அடி, இராணுவச் சுற்றிவளைப்பு, போன்ற இறுதி யுத்தத்தை வெல்வதற்கான கோத்தபாயவின் ஐந்து கருதுகோள்கள் மூலம் இந்த யுத்தம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது என்பதனையும், அதன் பின்னணியிலுள்ள அதிகாரத்தின் சூழ்ச்சியையும் பதிவு செய்யத் தவறவில்லை ஆசிரியர்.

கோத்தபாய, மகிந்தா, நாராயணசாமி மற்றும் ஐ.நா அதிகாரி பிரவுண் போன்ற கதாபத்திரங்களின் உரையாடல்கள் இறுதி யுத்தத்தின் பின்னால் இந்திய, அமெரிக்க, ஐ.நா வின் பங்களிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அதிலும் குறிப்பாக “தவறுகள் நடக்காத யுத்தம் என்று ஒன்றில்லை” என்ற நாராயணசுவாமியின் கூற்றானது மக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, எந்தவிதமான போர்குற்றம் மற்றும் மனித உரிமைகளை மீறல்களில் நீங்கள் ஈடுபடலாம், அவர்களிற்குப் பின்னால் இந்தியா நிற்கும் என்ற தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்தது.

இலங்கை, இந்திய அமெரிக்க அதிகாரத்தின் இரத்த விடாயால் உருவான யுத்தம் இது என்பதை “யார் யாரோவினது இரத்த விடாயால் உங்கள் மண்டைகள் சிதறிக் கொண்டிருக்கின்றன” என்ற சித்தார்த்தனின் வரிகளின் ஊடாக நம்மால் உணர முடிகிறது. அதிலும் குறிப்பாக “இராணுவத்தினர் மட்டும் கீதா கிருஷ்ணனின் யுத்த வேட்கையுடன் பலனை நோக்கா பணி செய்து கிடந்தனர்” என யுத்தம் செய் எனத் தூண்டும் பகவத் கீதையினையும் போகிற போக்கில் எள்ளி நகையாடுகிறார். அத்துடன் அவர்கள் எடுக்கும் வெற்றிச் சின்ன புகைப்படங்களும், ஒளிப் பதிவுகளும் அவர்கள் வாழ்நாள் முடியும் வரை துரத்தும் என கலும் மாக்கிரேவைப் பற்றிய பதிவும் காணப்படுகின்றது.

“அவளது வாழ்க்கை பங்கரும் வீடுமாகக் கழிந்தது”, “வைத்தியசாலை இரத்தக் காடாக் கிடந்தது”, “உயிர்கள் இலக்கங்களாகச் சுருக்கப்பட்டுக் கணக்குக் காட்டப்படும்”, “தோட்டாவால் எல்லோரும் சாவதில்லை, அரைவாசிப்பேர்குருதி இழந்து குற்றுயிராய்க் கிடந்துதான் சாகின்றனர்” போன்ற சொல்லாடல்கள், மற்றும் “இங்கிருந்தால் என்ர குஞ்சுகளை குண்டுக்கு குடுக்க வேண்டியதுதான் இருட்டு” என்ற சாதானாவின் தாயாரின் வரிகளின் ஊடாக மனிதர்களின் அவலங்களும் “வழியெங்கும் மிருகங்கள் கருகிக்கிடந்தன”, “செல்லடி பட்டுத் தண்ணிக்குள் விழுந்து ஊதிப் பெருத்துக் கிடந்தது மாடு” என்பதன் ஊடாக விலங்குகளின் அழிவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

“இஞ்ச நடமாடுற ஆக்கள் எல்லாம் செத்த பேய்கள்”, “சனமெல்லாம் எப்பவோ செத்துப் போச்சு” எனப் பேசும், யுத்தத்தின் விளைவால் பைத்தியமாக்கப்பட்டு, நட்டு கழண்டுவிட்டது என்று ஒதுக்கப்பட்ட விமலாவின் கதாபாத்திரத்தின் மூலம் வாழ்வின் தரிசனத்தின் உச்சியை சித்தரிக்கப்பட்டுள்ளது, எனினும் விமாலாவின் ஒற்றைப் பார்வை சமூகத்தால் ஒதுக்கப்பட்டே விட்டது. அதே போல்தான் கிளியக்கா என்னும் கதாபாத்திரமும். “அந்த இடத்தில் ஒரு கிளி இருந்தது என்ற எந்த அடையாளங்களும் இன்று இல்லை. யாரும் அந்த கிளி பற்றிப் பேசுவதும் இல்லை” எனப் பதிவு செய்கிறார். இவ்வாறு பல கிளிக்களும், விமலாக்களும், குமுதாக்களும் மட்டுமன்றி கோழி உரிக்கும் இரத்தினசபாபதி, இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட குகன், மகனை இழந்த கிளாக்கர் சுந்தரம், சாகப் போக முதல் வீட்டுக்கு வந்த பாலா எனப் பலர் வரலாற்றின் மங்கலான பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டனர்.  

“சொத்துக்களின் மதிப்பும் செத்து போய் விட்டிருந்தது சாமான்களுக்கும் பெறுமதி இருக்கவில்லை உணவுப் பொருட்கள் மட்டும் உயர்வாக இருந்தது”. என்ற வார்த்தைகளின் ஊடாக சமகாலத்தில் கொரோனா வைரசினால் உலகில் ஏற்பட்ட உணவுத் தட்டுப் பாடினையும், உணவுக்கான தேவை மட்டுமே முன்னிலை வகித்து நின்றதையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தனது மகனை ஒருக்காக் கண்டாப் போதும் எனத் தவிக்கும் சதானாவின் தாயின் கதாபாத்திரமானது இன்றும் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் வடக்கு கிழக்கு தாய்மார்களையும் 23௦ மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மீன் தொட்டியானது, மக்களுக்கு பயன்படாத பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மாத்தளை விமான நிலையத்தையுமே நினைவுபடுத்துகின்றது.      

புலம்பெயர்நாடுகளில் நிகழும் குடும்ப வன்முறை, தொழிலாளிகளை ஒடுக்கும் தமிழ்க் கடைக்கார முதலாளிகளின் அட்டூழியங்கள், ராஜதந்திரம், யதார்த்தவாதம் என்ற பெயரில் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தாமல் தமது சுய லாபங்களை முன்னிலைப்படுத்தும் தமிழ் அமைப்புகளின் அரசியல் வங்கிறோத்துக்கள், இடதுசாரிய அரசியலின் முக்கியத்துவம் என பல விடயங்களை தொட்டுச்செல்கின்றது நாவல். அதிலும் குறிப்பாக “யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகி விட்டது, இன்று வரைக்கும் ஏதோ விசாரணை செய்வோம் என பேய்க் காட்டிக் கொண்டு திரிகிறது ஐ .நா. அதற்குப் பின்னால் இழுபட்டுத் திரிகிறார்கள் உங்கள் தலைவர்களிற் சிலர்” என்னும் ரோகினியின் ஆவேசத்தின் மூலம் அமைப்புகளின் அரசியல் தெளிவின்மை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. 

யுத்தம் எந்த தீர்வுகளையும் வழங்கிய வரலாறு இல்லை, எல்லா யுத்தங்களும் ஆரம்பிக்கும் முதலே தோல்வியைத் தழுவி விடுகின்றன. அவ்வாறு தோல்வியைத் தழுவிய இறுதி யுத்தத்தை அதன் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்து அறிந்து கொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்
நாவல்
தமிழ் ஸ்டூடியோ
₹250
நூலினை ஆன்லைனில் பெற

***

  • சு.கஜமுகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here