Monday, December 9, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்சிகண்டி கவிதைகள்: பொருளும் படிமமும் பிரதிபலிப்பும்

சிகண்டி கவிதைகள்: பொருளும் படிமமும் பிரதிபலிப்பும்

ரூபன் சிவராஜா

விதாவின் மிகச் சிறந்த கவிதைகள் என்று மதிப்பிடக்கூடிய கவிதைகளிற் சிலவற்றைப் புரிந்துகொள்வதற்குரிய நிபந்தனையாக அவை வாசகரிடத்தில் முன்கூட்டிய அறிதலையும் தேடலையும் பார்வையையும் கோருபவை. குறிப்பாக கவிதையிற் கொண்டுவரப்படும் படிமங்கள், மேற்கோள் காட்டப்படும் இலக்கியங்கள், வரலாற்று மற்றும் புராண-இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய அறிதல் – வாசிப்பனுபவம் அவசியப்படுகின்றன. பெண்ணிய-சமூக-உலகப் பார்வையும் அவசியப்படுகின்றது

கவிதாவின் படைப்புத் தளம், அதாவது கலை இலக்கிய இயங்கு தளங்கள் பன்முகப்பட்டவை. நடனம் சார்ந்து ஆசிரியர், நடனக்கலைஞர், நடனப் படைப்புகளை உருவாக்குபவர். நடன நாடக நெறியாள்கை மற்றும் அவற்றுக்கான பிரதிகளையும் எழுதுபவர். எழுத்துச் சார்ந்து, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனவாக இயங்குபவர். கவிதாவின் இலக்கியத்தில் முதன்மையானது கவிதை. கடந்த 20 ஆண்டுகளில் (2002 – 2022) ஆறு கவிதைத்தொகுப்புகளும் ஒரு கதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் அவரிடமிருந்து வெளிவந்துள்ளன.

தன்னுணர்வும் சமூக வாழ்வனுபவங்களும்

கூர்மை, செறிவு, அழகியல், பல்பரிமாணம் கொண்ட கவிதைகள் அவருடையவை. இன்னும் சொல்வதானால் தனிமனித மற்றும் சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கிய வாழ்வனுபவப் பிரதிபலிப்புகளை அவருடைய கவிதைகளில் தரிசிக்கலாம். நடனம் தெரிந்தவர்களுக்கு உடல் நெகிழ்வானதும் இலகுவாக வளையக் கூடியதும் என்பது ஆச்சரியமில்லை. ஆனால் மொழியும் அவர்களுக்கு மிக லாவகமாக வளைந்து கொடுக்கும் அல்லது மொழியை லாவகமாக வளைக்கின்ற பக்குவமும் கலைத்துவ ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. காத்திரமாகவும் கூர்மையாகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவுமென பேசுபொருளுக்கும் இலக்கிய வடிவத் தெரிவுக்குமேற்ற வகையில் மொழியைக் கையாள்வதிலும் கவிதாவின் ஆளுமையை அவரது எழுத்துகளில் தரிசிக்கலாம் என்பது எனது அனுபவம். ஒரு உணர்வை, ஒரு கருத்தைச் சொல்வதற்கு எந்தச் சொற்கள் தேவையே அவற்றைக் கவனமாகத் தேர்ந்து எழுதுபவர். அளவுக்கு அதிகமான சொற்கள் இருக்காது. அலங்காரம் இருக்காது. ஒரு கவிதையில் ஒரு சொல்லைத் திரும்பப் பயன்படுத்த மாட்டார்.

இதெற்கெல்லாம் அடிப்படை அவரது ஆழ்ந்த வாசிப்பு. வாசிப்பினூடாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்கள், வளர்த்துக் கொண்ட தேடல்கள், சமூக- உலகப் பார்வைகள். சிறுவயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தினை வளர்த்துக் கொண்டவர். அதற்கு முக்கியமான உந்துதலாக இருந்தவர்கள் அவருடைய அம்மா மற்றும் மாமாமார் என்பதைக் கவிதா பலமுறை கூறியிருக்கின்றார். சமூகநீதி, பெண்ணிய, அரசியல் பார்வைகளுக்கான உந்துதலாக மாமாமாரும், தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தவராக அம்மாவும் இருந்திருக்கின்றனர். நோர்வேயில் 14 வயதில் வளர்நிலா என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையினை வெளியிட்டவர் கவிதா என்பது பலருக்கும் வியப்பான தகவலாக இருக்கலாம்.

பெண் மீதான அக-புற அழுத்தங்கள்

சிகண்டி கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பக வெளியீடாக 2020 ஜனவரி வெளிவந்தது. இத்தொகுப்பில் பல்வேறு பேசு பொருட்களைக் கொண்ட கவிதைகள் உள்ளன. பெண் மீதான அக-புற அழுத்தங்கள் மீதும் அவற்றுக்குக் காரணமான சமூகக் கட்டமைப்பு மீதும் கூர்மையான கேள்விகளை எழுப்புகின்ற கவிதைகள் அதில் முக்கியமானவை.

உலகெங்கும் அளவுகளில் வேறுபட்டாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை ஒப்பீட்டளவில். நமது சமூகக் கட்டமைப்பில், ஆண் மையச் சிந்தனையுடைய சமூகக்கட்டமைப்பில் பெண்கள் மீது கலாச்சாரம், மதம், குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, உடல், உடை, சடங்குகள், புனிதம் எனப் பலவற்றின் பெயர்களாலும், இன்னும் சொல்வதானால் அவற்றின் போர்வைகளில் அழுத்தங்கள், கட்டுப்பாடுகள், சுமைகள், ஒடுக்குமுறைகள் கட்டமைக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுகின்றன. அவருடைய கவிதைகளை முதன்மையாகப் பெண்ணியக் கவிதைகள் என்ற வகைமைக்குள் மதிப்பிடலாம். பெண்ணின் உணர்வுகள், பிரச்சினைகள், சவால்களை அவை பேசுகின்றன. ஆண் – பெண் உறவு, குடும்பம் சார்ந்த முரண்களைப் பேசுகின்றன. இவற்றின் மீது கூர்மையான கேள்விகளை எழுப்புவன கவிதாவின் கவிதைகள். சமூகம், இயற்கை, காதல், புலம்பெயர் வாழ்வு, சூழலியல், தொழில் நுட்பம், மனதின் மென்னுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பல கவிதைகளையும் எழுதி வருகின்றார்.

புதுக்கவிதையின் பரிமாணம் – கருத்தியற் கட்டுடைப்பு

புதுக்கவிதை குறித்ததான மேம்பட்ட புரிதல் தமிழ்ச்சூழலிற் பரவலாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. சொற்களுக்கு வர்ணம் பூசுவது கவிதையாகிவிடாது. உலகின் வெவ்வேறு மொழிக்கவிதைகளும் தமிழ்க் கவிதைகளும் சொல்முறையிலும் சரி, சொற்தேர்விலும் சரி, பேசுபொருளிலும் சரி உத்தியிலும் சரி புதிய பல கட்டுடைப்புகளைச் செய்திருக்கின்றன. அந்தக் கட்டுடைப்புகள் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கின்றன. அழகியல் கவித்துவம் சார்ந்த புதிய பரிமாணங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கவிதாவின் கவிதைகள் கருத்தியல் ரீதியாகப் பல கட்டுடைப்புகளைச் செய்துள்ளன. அதாவது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கின்ற ஒழுங்குகளை மீறுவது, அவற்றின் மறுபக்கத்தைப் பார்ப்பது – அவற்றின் மீது கேள்விகளை எழுப்புவது – அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறை சார்ந்த அதன் கூறுகளை, கேள்விக்குட்படுத்துவது – பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை கட்டுடைப்பது –என்பதாக கவிதாவின் கவிதைகளின் கருத்தியல் சார்ந்த விடயங்களை மதிப்பிடலாம். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் அவர் தன்னைக் கடந்து நின்று நோக்குகின்றார். அதனைக் கவிதை வடிவில் வெளிப்படுத்துகின்றார். அதிகமாகப் பெண்ணியப் பார்வையில் அவற்றை நிகழ்த்துகின்றார் என்றபோதும் பெண்களின் சிக்கல்களை மட்டுமல்ல. பல்வேறு வகைகளிலும் ஒவ்வாத விடயங்களோடு முரண்படுகின்றார். கூர்மையான
கேள்விகளை எழுப்புகின்றார்.

தன்னைக் கடந்து நின்று பார்த்தல் – எழுதுதல்



சிகண்டி – என்ற இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பும் அதனோடு தொடர்புடைய ‘தன்னைக் கடந்து’ என்ற கவிதையும் முக்கியமானவை. சிகண்டி என்பது மகாபாரதப் புனைவில் வரும் ஓர் முக்கிய பாத்திரம். அந்தப் பாத்திரம் மிக வலிமையானது. ஆற்றல் மிக்கது. பெண்ணாகப் பிறந்து, ஆணாக வளர்க்கப்பட்ட பாத்திரம் அது. பின்னர் ஆணாகவே ஒரு கட்டத்தில் மாறுகின்றது. அதற்கும் அப்பால் ஆணுமாகி பெண்ணுமாகி நின்ற பாத்திரம். இன்னும் சொல்லப்போனால் ஆண்மையைக் கடந்து, பெண்மையைக் கடந்தது மட்டுமன்றித் தன்னைத் தானே கடந்து நின்ற பேராற்றலும் பேரனுபவமும் கொண்ட ஒரு பாத்திரம். சிகண்டி என்பது ஒரு குறியீடு. இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகளின் பேசுபொருளுக்கான, உணர்வுகளுக்கான, பிரதிபலிப்புகளுக்கான குறியீடாகவும் படிமமாகவும் அது சாலப் பொருந்துகின்றது.
பொதுவாகவே முன்னோக்குமிக்க சிந்தனைகளையும் அது சார்ந்த எழுத்துகளையும் சமூகம் திறந்த மனதோடு வரவேற்பதில்லை. அதிலும் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை ஒடுக்குகின்ற, அவமதிக்கின்ற, பாதிக்கின்ற கட்டமைக்கப்பட்ட சமூக விதிகளை, ஒழுங்குகளைப் பெண்களே கேள்வியெழுப்பும் போதும் அவற்றோடு முரண்படும் போதும் அவற்றைப் படைப்பிலக்கியங்களிற்; பிரதிபலிக்கும் போதும் அதற்குக் கொடுக்கநேரும் விலை அதிகம். ஆனால் எத்தகு விலைகொடுக்க நேர்ந்தாலும் கவிதா அந்தச் சலசலப்புகளையெல்லாம் பொருட்படுத்துபவரல்ல. தனது உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதில் அவரிடம் எவ்வித மனத்தடையும் இல்லை. சமூகம் சுமத்த எத்தனிக்கும் தடைகளுக்கும் அஞ்சுபவருமில்லை.

சொற்களுக்கு அப்பால்

தமிழ் வெகுஜனச் சூழலில் பெரும்பாலும் கவிதைகளைச் சொற்களாக மட்டும், அல்லது முதன்மையாகச் சொற்களுக்கூடாகப் புரிந்து கொள்கின்ற போக்குத்தான் நிலவுகின்றது. சொற்களை விலத்தி, அல்லது சொற்களுக்கு வெளியே கவிதையைக் கண்டடைதல் என்பது அரிதான போக்கு. கவிதை சொற்களால், மொழியினால், வார்த்தைகளினால் ஆனது எனும் போதும் நல்ல கவிதையின் கனதி, செழுமை, அழகு, கவித்துவம், இலக்கியப் பெறுமதி, வீச்சு, அது கடத்தும் உணர்வு- அனுபவம் என்பன சொற்களுக்கு அப்பாலானவை.

எழுத்தென்பது தனக்கு எத்தகையதென்பதை இப்படிச் சொல்கிறார் ஒரு கவிதையில்:

ஒரு காலக் கயிறிழுப்பு,
சாஸ்திரக் கட்டவிழ்ப்பு
தொலைதலுக்கான மொழிக்காடு
அகம் துறக்கும் மேலாடை
உணர்வின் உண்மை நிறம்
முழுநிர்வாணம்
பிறப்பின் எதிர்விளைவு

என் மகனின் காதலிக்கு என்ற மற்றொரு கவிதையில் அவரது கவிதைகளுக்கான ஓர் தன்னிலை விளக்கமாகக் கொள்ளக்கூடிய பின்வரும் படிமங்களைக் காணலாம்:

கூன்முதுகுக் கூட்டத்துக்
குத்தல்களின் பிடிரியிலேறி,
பிடுங்கப்பட்ட இறகுகளை
ஒவ்வொன்றாய்த் தன்னில் ஏற்றி
கனவுகளைக் கொய்து சூடி
தனது நிழல்களைத் தானே அள்ளி
அந்தக் கறுப்பினில் கவிதை நெய்து
ஆடிக் களைத்தொவொரு தாயினை
முத்தவிட்டவன்.


சுதந்திர மனமும் நேசிப்பும் அழகியல் உணர்வும் ஆசுவாசமும் மிடுக்கும் கொண்ட வீட்டுச்சூழல் காத்திருக்கின்றது என்று மகனின் காதலிக்குச் சொல்வதை அந்தக் கவிதை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றது.

படிமங்களைப் புரிந்துகொள்வதற்கான நிபந்தனைகள்

கவிதாவின் மிகச் சிறந்த கவிதைகள் என்று மதிப்பிடக்கூடிய கவிதைகளிற் சிலவற்றைப் புரிந்து கொள்வதற்குரிய நிபந்தனையாக அவை வாசகரிடத்தில் முன்கூட்டிய அறிதலையும் தேடலையும் பார்வையையும் கோருபவை. குறிப்பாக கவிதையிற் கொண்டுவரப்படும் படிமங்கள், மேற்கோள் காட்டப்படும் இலக்கியங்கள், கதைகள், நிகழ்வுகள், புனைவுகள், வரலாற்று மற்றும் புராண-இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய அறிதல் – வாசிப்பனுபவம் அவசியப்படுகின்றது. மட்டுமல்லாமல் பெண்ணிய-சமூக-உலகப் பார்வையும் அவசியப்படுகின்றது. அவை குறித்துச் செவிவழி கேள்விப்பட்டாவது இருத்தல் வேண்டும். அப்போதுதான் கவிதையின் பிரதிபலிப்பினை உணர அல்லது அதற்கான வெவ்வேறு புரிதல்களை அடையமுடியும்.
சிகண்டி தொகுப்பிலுள்ள ‘தன்னைக் கடந்து’ எனும் தலைப்பிலான கவிதை ஆண்-மைய புராண-இதிகாச, வரலாற்று மற்றும் இலக்கியப் பாத்திரங்கள் மீது கேள்வியெழுப்புகின்றது. மகாபாரதத்தின் கிளைக்கதைகளும் அதன் பாத்திரங்களும், கௌதமன் -யசோதரை, ராமன்-சீதை, சிலப்பதிகாரத்தின் கண்ணகி, கோவலன், மாதவி – உதயகுமாரன், மணிமேகலை காதல், துர்வாச முனிவர் – குந்தி, சிகண்டி எனப் பல்வேறு பாத்திரங்களும் கதைகளும் பற்றிய அறிதலுடன் அவை வாசிக்கப்படும் போதுதான் அக்கவிதையை உரிய முறையில் புரிந்துகொள்ள முடியும். அத்தோடு பெண்ணிய நிலைப்பாடும் இருக்கும் பட்சத்திலேயே இந்தக் கவிதை சொல்லவரும் செய்தியை, கடத்த நினைக்கும் உணர்வை, அனுபவத்தைப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் இந்தக் கவிதையின் பரிமாணம் புரிந்துகொள்ளப்படாமல் போகும் அபாயம் உள்ளது.

இத்தொகுப்பிலுள்ள ’என்னை வரையும் நான்’இ’என் முகம்’இ ’கிரவுஞ்சப் பறவை’ போன்ற வேறு சில கவிதைகளும் அத்தகையனவே. பிகாஸோ, இரவிவர்மா போன்றவர்களின் ஓவிய வடிவங்கள், தன்மைகள், நிறப்பாவனை, அவற்றின் வெளிப்பாடுகள், பேசுபொருள் குறித்த அறிதல் அவசியப்படுகின்றது. பாரதி, இப்சன் போன்றவர்களின் படைப்புலகம் பற்றிய அறிதல்; அவசியப்படுகின்றது.

இப்சன் கண்ட பெண்ணும் பாரதியின் கண்ணம்மாவும்
ஒன்றோ எனக் கேள்வியெழும் சமயங்களில்
பிரபஞ்சத்துள் ஒரு சிறு பந்தினைப்போல்
உருண்டு மறைகிறதென் உலகம்

சுதந்திரத்தோடு பெருங்காதல் குறித்த இக்கவிதையின் படிமத்தைப் புரிந்துகொள்ள ஹென்றிக் இப்சனின் கடலிலிருந்து ஒரு கன்னி படைப்பினையும் அப்படைப்பின் முதன்மைப் பாத்திரமான சுதந்திரத்துடனான காதலை அவாவி நின்ற எலிடாவையும், பொம்மை வீட்டின் நூராவையும் அறிந்திருக்க வேண்டும். ஒளி என்பது ஞானத்தையும் வாழ்வின் சாரத்தையும் சுட்டுவதாகவும் கொள்ளலாம்.

ஒளியை உணவாக உட்கொண்டு வாழ்வது கிரவுஞ்சப் பறவை என்று சொல்லப்படுவது வெற்றுப் புனைவுதானோ என்று கேள்வியெழுப்புகின்றது ஒரு கவிதை. அதனைப் புரிந்துகொள்வதென்றால் கிரவுஞ்சப் பறவை பற்றிய குறியீட்டினை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்தோடு பெருங்காதலைப் பெற்றவள்.
அந்த ஒருத்தி!
உணர்ந்திருக்கக்கூடும்
அப்பறவை மேவி அத்தனையும்!

‘வீடு’ என்ற கவிதை புலம்பெயர் சூழலின் வீடொன்றை அல்லது மேலைத்தேய வீடொன்றைச் சித்தரிக்கின்றது. மனித – குடும்ப உறவுகளுக்குள் நெருக்கமும் ஊடாட்டமும் வற்றிப்போன சூழலைக் காட்சிப்படுத்துகின்றது. பொருட்களாலும் தொழில்நுட்ப, தகவல் தளங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டினைப் படிமாக்கியிருந்தது அந்தக் கவிதை. ‘அப்பம்மாவின் வீடு’ என்ற கவிதை தாயகத்து வீட்டைப்பற்றியது. வீடு என்பது வெறும் கட்டடங்களாலும் சுவர்களாலும் கதவுகளாலும் ஆன ஒன்றல்லவே. அக்கவிதை ஒரு ஆத்மார்த்தமான நினைவுத் தெறிப்புகளை வெளிப்படுத்துகின்றது. அப்பம்மாவை, இளமைக்காலத்தை உறவுகளை, முற்றத்தை, சுற்றத்தை, மரம், செடி கொடிகளை, காற்றை இரண்டு காலங்களுக்கிடையிலான மாற்றங்களோடு ஒப்பிட்டு நினைக்கிறது மனம். வீட்டுச் சூழலின் நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கிறது. இல்லாமற் போனவை எவை, இருப்பவை எவை எனத் தேடுகிறது. வீடும் சுற்றமும் மரமும் உயிர்களின் வாசனையை நிரப்பியிருக்கின்றன.

இப்போதுகூடக் கேட்கிறது
அருகில் விழும் அந்தத்
துப்பாக்கிச் சத்தம்

என்று முடிகின்ற அந்தக் கவிதை, போர் என்பது மனதில் ஏற்படுத்திய ஆறாவடு தசாப்தங்கள் கடந்தும் வெளிப்படுவதை உணர்த்துகின்றது.

கடவுளர்கள் மற்றும் உலகத் தலைவர்களின் வெவ்வேறு அளவிலான தலைகள் விற்பனைப் பொருட்களாக்கப்பட்ட போக்கு மீதான ஒரு விமர்சனமாக ‘ஞானம் தேடிச் சென்றவர் கதை’ கவிதையைச் சொல்லலாம். தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடி, சமையலறை, காலணிகள் கழட்டுமிடம், வரவேற்பறை, குளியலறை, கழிவறை, கதவின் இடுக்கு, படுக்கையறை என வீட்டின் மூலைகளைத் தலைகள் அலங்கரிக்கின்றன. சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டதும் பிரக்ஞையற்றதுமான போக்கு மீதான எள்ளலாக அக்கவிதையின் படிமங்கள் வெளிப்படுகின்றன.

பெண்ணியம்

’நான் பெண்மையின் உச்சமாகிறேன்’ என்ற தலைப்பிலான கவிதையை முதற்பார்வையில் வேறுமாதிரியாகவும், அதன் இறுதிச் சிலவரிகளை வாசித்த பின் வேறுமாதிரியாகவும் புரிந்து கொள்ளலாம். முதற்பார்வையில் சமையலை ரசித்துச் சமைக்கும் பெண்ணின் அனுபவமாக… அடுத்தாற் போல் ஒரு சமையலைச் செய்யும் போதான அதன் படிநிலைத் தருணங்களைப் பெண் தனது சிருங்கார உணர்வுகளுக்கு உவமையாக்குவதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதன் இறுதிப் படிமங்கள் அதனை ஒரு அசலான, வீரியமான பெண்ணியக் கவிதையாக மாற்றிவிடுகிறது. பெண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று இந்தச் சமூகம் விரும்புகின்றது அல்லது கட்மைத்து வைத்திருக்கின்ற பிம்பத்தின் மீது ஒரு பலத்த அடி விழுகிறது. எள்ளலாகவும் அதேவேளை சீரான உத்தியுடனும் அதில் கவிதை வெளிப்படுகின்றது.

’பெண்கள் தினம்’; என்ற கவிதை நிலவுகின்ற ஒரு முரணைத் துல்லியமாகச் சித்தரிக்கின்றது. பெண்கள் எதற்காகவெல்லாம் போராடினார்கள், எந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முனைந்தனர் என்பதைச் சொல்லுகின்ற அந்தக் கவிதை, போராட்டக் காரணங்கள் அப்படியே இருக்க சடங்காகிப் போன பெண்கள் தினம் பற்றிய சமூக வெளிப்பாடுகளைக், குறிப்பாக ஆண்களின் வெளிப்பாடுகளை இப்படிச் சாடுகிறது:

நாங்கள் தெருவில்
இறங்கிப் போராடிக் கொண்டே இருந்தோம்
பெண்கள் தின வாழ்த்தென்றாய்
தேனீர் தந்தாய்
ரோஜாக்கள் தந்தாய்

மனநிலையில் மாற்றமில்லை, பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றமில்லை, சமூகக் கட்டமைப்பில் மாற்றமில்லை. ஆனால் வெறும் சடங்குபூர்வமான அடையாள நாளாகப் பொதுப்புத்தியில் பெண்கள் தினம் மாறிப்போன அவலத்தைப் பேசுகின்றது. பொதுவாகவே உரிமைகளின் அடையாள நாட்கள், அவற்றுக்குரிய அர்த்தங்களை இழந்து பரிசுப் பொருட்களின் நாட்களாக, நுகர்வுக் கலாச்சாரத்தின் நாட்களாக, பொருள்முதல் வாதத்தினால் தத்தெடுக்கப்பட்ட நாட்களாக ஆக்கப்பட்டுள்ளமையுடன் இணைத்து உரையாடக் கூடிய வெளியை இக்கவிதை திறக்கின்றது.

மனவெளியும் வாழ்வுவெளியும்

’மகனுக்கு’ கவிதை ஒரு பெரிய மன வெளியையும் வாழ்வு வெளியையும் தெரிவு வெளியையும் விரித்துக் காட்டுற கவிதை அது. கவிதா இதுவரை வெளிவந்த ஆறு கவிதைத் தொகுப்புகளிலும் இன்னும் வெளிவராத கவிதைகளையும் சேர்த்து குறைந்தது 400 வரையான கவிதைகளை எழுதியிருப்பார். அவற்றில் ஆகச் சிறந்த பத்துக் கவிதைகளில் ஒன்றாகவும் ஆகச் சிறந்த மனித மகத்துவத்தை வெளிப்படுத்துகின்ற கவிதைகளில் ஒன்றாகவும் நான் அந்தக் கவிதையை மதிப்பிடுவேன். அது விரித்து நிற்கும் பிரபஞ்சமளாவிய பார்வை மிக அழகானது, ஆழமானது. தன் பிள்ளைக்கு வாஞ்சையோடு எல்லா அம்மாக்களும் அப்பாக்களும் வாசித்துக் காட்டக் கூடிய அல்லது வாசிக்கக் கொடுக்கக் கூடிய கவிதை அது. அதன் பொருள் அத்தனை அழகானது, ஆழமானது, மானிட சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டது.

‘என் மகனின் காதலிக்கு’ என்ற கவிதை இன்னொரு கவிதை, மன உணர்விலும் வாழ்வு வெளியிலும் பிரவாகிக்கின்றது. சுதந்திர எண்ணங்களும் உணர்வும் கொண்ட மனமும் நேசிப்பும் அழகியல் உணர்வும் ஆசுவாசமும் மிடுக்கும் கொண்ட வீடும் சூழலும் காத்திருக்கின்றது மகளே என மகனின் காதலியை வாஞ்சையுடன் வரவேற்கின்றது.

சிறகுகளைத் தன் பார்வையில்
கொண்டிருப்பான
கைவசப்படும்
இந்தக் காதலினுடனான
சுதந்திரம் உனக்கு

ஒரு பறவையைக் கொல்வது எப்படி

’ஒரு பறவையைக் கொல்வது எப்படி’ எனும் கவிதை பேசுகின்ற பொருளும், கட்டமைக்கப்பட்ட விதமும் சொல்முறையும் படிமங்களும், அதன் பிரதிபலிப்பும் முக்கியமானவை. ஒரு பெரும்கதையாடலுக்கான உள்ளடக்கத்தினை அது கொண்டிருக்கின்றது. அதற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ளது. சுதந்திரமாகப் பறந்து திரியும் ஒரு பறவையின் வெளிகளையும் கனவுகளையும் உயரங்களையும் அறிந்து அதனோடு நட்பாகி, உதவிகள் ஒத்தாசைகள் செய்து தந்திரங்களால் அதன் சிறகுகளை ஒவ்வொன்றாக நறுக்கிக் கூண்டடைத்து, அது மெல்ல மெல்ல இறந்துகொண்டே போவதை பார்த்து ரசிக்கும் நிலையைப் பிரதிபலிக்கின்றது. இங்கே பறவை என்பது குறியீடு. அதுவொரு பெண்ணை உருவகப்படுத்துகின்றது. சிறகொடித்து நசுக்குகின்ற பாத்திரங்களாக ஆண்களும் பெண்களும இணைந்த சமூகம் உருவகப்படுத்தப்படுகின்றது. அதாவது கட்டமைக்கப்பட்ட சமூக மனநிலையின் துன்பியலை, அதன் உளவியலைப் பேசுகின்றது.; குறித்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இல்லாமல் இதற்குள் ஒரு உலகளாவிய பிரதிபலிப்பு உள்ளது. அடிப்படையில் அது ஆண்மைய வாதம், அதனால் கட்டமைக்கப்பட்ட சமூக உளவியல்.

நுண்ணுணர்வு

மனித உறவுகள் ஏற்படுத்தும் இன்பமும் துன்பமும் துரோகமுமான உணர்வுகளின் தாக்கங்களால் உருவான கவிதைகள். காதல், பிரிவு தூரம், ஏக்கம் சுமந்த கவிதைகள். பெரும்காதலை வெளிப்படுத்துகின்ற மென்மையும் வன்மையும் நிலவும் நெருப்புமான கவிதைகள் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் ‘சிகண்டி’ தொகுப்பில் உள்ளன.‘இரவல் முகத்தவர்’ நுண்ணிய அகவுணர்வினை வெளிப்படுத்தும் கவிதை இது. மனித உறவுகளின் முரண்களையும் அவை ஏற்படுத்தும் இன்பமும் துன்பமுமான உணர்வுகளின் தாக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. ‘இதயம் எனக்குச் சொந்தமில்லை’ என்ற கவிதை, மரணத்தின் பின் சடங்குகளற்ற ஓர் இறுதி நிகழ்வை வேண்டுகின்றது.

ஈழம் – உலகம் – அரசியல்

‘நோர்வேஜிய சுதந்திர தினம்’ என்ற கவிதையின் உள்ளடக்கம், நோர்வேஜிய சுதந்திர தினம் எப்படிக் கொண்டாடப்படுகின்றது என்ற ஒரு சித்தரிப்பு. மிக எளிமையானதும் சாதாரணமானதுமான சித்தரிப்பு. ஆனால் அதன் இறுதி ஒற்றை வரி அந்தக் கவிதையைக் குருதி வடியும் ஒரு துன்பியல் இலக்கியமாக மாற்றிவிடுகிறது. ஒரு இறுதி ஒற்றை வரியில் அற்புதமான கவிதை உருவாகுகின்றது என்பதற்கு இந்தக் கவிதை உதாரணமாகிவிடுகிறது. கவிதையின் வீரியத்தை சக்தியை உணர்த்தி விடுகிறது.

ஈழத்தமிழரையும் புலம்பெயர் தமிழரையும் அவர்களின் சமூக அரசியல் கையறு நிலையையும் இழிவையும் வெளியாருக்காகக் காத்திருக்கும் மனநிலையையும் கோயில்களே கதியென்று கிடக்கும் நடப்புகளையும் கூர்மையாக விமர்சிக்கின்ற கவிதையாக ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனும் கவிதையைக் காணலாம். அது கோபம், ஏக்கம் எள்ளலோடு வெளிப்படுகின்றது.ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் சகோதரப் படுகொலைகளை துயருடன் பேசுகின்றது ‘வேதாளம் சொல்லும் கதை’ எனும் தலைப்பிலமைந்த கவிதை.

பேதங்களற்று தேச விடுதலைக்காக உயிர் ஈகம் செய்த அனைத்துப் போராளிகளும் சமமாக நினைவுகூரப்பட வேண்டுமென்ற ஆதங்க வெளிப்பாடு. புறக்கணிப்பற்ற மனநிலையைப் பெறவேண்டும் என்பதைப் பிரதிபலிக்கின்றது ‘மனம் மனம் மனம்’ எனும் கவிதை. இக்கவிதை வெளிப்படுத்துகின்ற உணர்வும் கோருகின்ற செயலும் ஆத்மார்த்தமானது. ஒரு உயிர் பெரிதென்றும் இன்னொரு உயிர் சிறிதென்றும் எண்ணாத மன வெளிப்பாடு. அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பதற்கு முதலில் மனம்தான் வேண்டும், பிறகே மற்றவை. ஆதலால் ஒரு உன்னதமான அகக்குடிலை அவாவுகின்றது அக்கவிதை.
‘உலகினை ஒரு பந்தாக்கி அவர்கள் விளையாடத் தொடங்கினர்’ என்ற கவிதை சர்வதேச அரசியலைப் பிரதிபலிக்கின்றது. ஆதிக்கத்தை அடிநாதமாகக் கொண்ட அதிகார அரசியலின் இயங்குநிலையை, அதன் போக்கினை, போலித்தனங்களை, பாசாங்குகளைத் தோலுரித்துக் காட்டுகின்றது.

சங்க இலக்கியங்கள் முதல் நோர்வேஜிய இலக்கியங்கள் வரை

தமிழ் இலக்கியம், குறிப்பாகச் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் கற்பதுவும் ஆய்வுப் பார்வையோடு அவற்றை அணுகுவதும் எழுத்துச் சார்ந்த அவரது வெளிப்பாடுகளுக்குத் துணைநிற்கின்றன. நோர்வேஜிய மற்றும் உலக இலக்கியங்கள் மீதான வாசிப்பும் மொழிபெயர்ப்பு அனுபவங்களும் இன்னுமொரு வகையாக அவரின் எழுத்துகளின் செழுமைக்கு சேர்க்கின்றன. நோர்வேஜிய இலக்கியங்களில் அவருக்குப் பரிச்சயம் உண்டு. அந்தப் பரிச்சயம் என்பது, கல்வி, வாசிப்பு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றினூடாக வளர்க்கப்பட்டது. ஹென்றிக் இப்சனின் உலகப்புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘பேர் கிந்த்’ கவிதை நாடகத்தினை மொழிபெயர்த்து முடித்துள்ளார். இருபதிற்கும் மேற்பட்ட நோர்வேஜியக் கவிஞர்களின் பல்வேறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்து வருகின்றார். பாரதி கவிதைகளை ஆழமாக, தத்துவார்த்தமாக, சொற்களுக்கும் வரிகளுக்கும் அப்பாற் சென்று அதற்குள் இருக்கும் கவிதையைக் கண்டடைகின்ற அவருடைய ஆர்வமும் ஆய்வுப் பார்வையும் முக்கியமானவை.

கவிதாவின் கலை மனம், தேடல், கலை-இலக்கியப் பார்வை, சமூக-உலகப் பார்வை-சமூகநீதி மற்றும் பெண்ணிய நிலைப்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுநிரலே அவருடைய படைப்பாக்கங்களுக்கான உந்துதலாக விளங்குகின்றன. அவரது எழுத்தினதும் எழுத்திற் கையாளும் பேசுபொருள், சொல்முறை, மொழிநடை, வாசகர்களுக்குக் கடத்தும் உணர்வு என்பவற்றில் செழுமையைத் தருகின்றது.

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular