Tuesday, April 23, 2024
Homesliderசாவூறும் சுவை

சாவூறும் சுவை

வேல்விழி

சாவூறும் சுவை

“அம்மா, இண்டைக்கு பின்னேரம் பனங்காய்க்காய் சுடுவமா..? “

சமையலறையில் உட்கார்ந்து மத்தியான சாப்பாட்டுக்கான அடுக்குகளை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்த அன்னக்கொடிக்கு அவள் மகள் கேட்ட கேள்வி காதில் விழவில்லை. வெங்காயக் கொட்டிலிலிருந்து அவள் அவிழ்த்து வந்த ஒரு முடிச்சு சின்னவெங்காயம் அடுப்படியில் குந்தியிருக்க, தன் முன்னேயிருந்த மற்றைய ஓலைப்பெட்டிகளைத் திறந்து என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து கொண்டிருந்தவளின் கவனம் முழுதும் அடுப்படியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அவளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் மதியத்திற்கு என்ன சமைப்பது என்பது தான். நினைத்த மாத்திரத்தில் வெளியில் சென்றுவர முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைப்பதைக் கொண்டு சமையல் செய்வதென்பது அவளைப் போன்றவர்களுக்கு மிகப் பெரியதொரு தண்டனை. பொதுவாகவே அவளுக்கு மறதிக்குணம் அதிகம். கறியை அடுப்பில் வைத்துவிட்டுதான் உப்பு முடிந்துவிட்டது, தூள் இல்லை, புளி வாங்க வேண்டும், எண்ணெய் முடிந்துவிட்டது என ஒவ்வொன்றிற்கும் சந்தி முகப்பிலிருந்த பெட்டிக்கடைக்கு  ஒவ்வொருவராக அனுப்புவாள். ஆனால் இப்போது, அடிக்கடி அதுபோல் ஊர்வலம் போக முடியாதென்பதால் அடுப்படி என்பதே அவளுக்கு அந்நியப்படையோடு மோதும் ஒரு போர்க்களம் போல் ஆகிவிட்டிருந்தது.

வீட்டு விறாந்தையில் அமர்ந்திருந்து தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் தமிழினி. தான் கேட்ட கேள்விக்கு அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையென்பது அவளுக்கு ஏமாற்றத்தையோ அல்லது கோபத்தையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னதான் வளர்ந்து பட்டம் பதவி என்று உத்தியோகத்திலிருந்தாலும் அவளுக்கு பிடிவாதக்குணம் கொஞ்சம் அதிகம், அப்படியே தர்சியைப் போல என்று அடிக்கடி அக்கா சொல்வாள். எது கேட்டாலும் உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவள் குரல் ஊரை இரண்டாக்கி உலகை நான்காக்கிவிடும் அளவிற்கு வளர்ந்து விடும். இப்போது அவளின் குரலிற்கு யாரும் காது கொடுக்கவில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாய் தோன்ற நேரே சமையலறைக்குள் போய் தாயின் முன் சிலையாய் நின்றாள்.

ஓலைப்பெட்டிகளில் தட்டித்தடவிக் கொண்டிருந்த அன்னக்கொடிக்கு மகள் வந்தது தெரிந்திருந்தும் பெரிதாக அதில் அக்கறை செலுத்தவில்லை. மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவ்வளவு தான். அவள் கோபம் எல்லையில்லாத அமானுஷ்யம் போல வளர ஆரம்பித்துவிட்டது.

“அம்மா எனக்கு பனங்காய்க்காய் வேணும்…” 

“இந்த நட்டநடு மத்தியான நேரத்தில என்ன பனங்காய்க்காய். மத்தியானத்துக்கு என்ன சமைக்கிற எண்டு தெரியேல்ல. நானே விசரில இருக்கிறன். இப்ப வந்து பனங்காய்க்காய் வேணுமெண்டு கேட்டா.. அடிவாங்காம ஓடிரு அங்கால..”

அவள் அம்மா அன்னக்கொடி எண்ணெயில் தெறிக்கும் கடுகாய் சொற்களால் வெடித்துப் பறந்தாள்.

 “இப்ப உடன சுடுவம் எண்டு ஆர் கேட்டது. சமைச்சு சாப்பிட்டுட்டு பின்னேரம் ஆறுதலா சுடுவமோ எண்டு தானே கேட்டனான்.” 

“சரி அத பிறகு யோசிக்கலாம். இப்ப முதல்ல சமைக்கிறதுக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு பாப்பம்.”

தமிழினிக்கு ஒரே புளுகம். ஆக, அம்மா ஒத்துக்கொண்டு விட்டாள். இனி பின்னேரம் அவர்கள் பனங்காய்க்காய் சுடப்போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட விடயமாகி விட்டது. எவ்வளவு காலமாகி விட்டது பனங்காய் சாப்பிட்டு. எத்தனை வகையான புதுப்புது இனிப்புப்பண்டங்கள் விதவிதமாக சந்தைக்கு வந்தாலும் பனங்காய்க்காய்க்கு கிட்ட யாருமே போட்டிக்கு நிற்க முடியாது. இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா வகையான இனிப்புக்களும் பிடித்து விடுவதில்லை. ஆனால், பனங்காய்க்காயை விரும்பாத தமிழர்கள் யாருமே இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். எத்தனை விதமான மேலைத்தேய தின்பண்டங்கள் வந்தாலும் அம்மா சுடுகின்ற பனங்காய்க்காய்க்கு நிகராக எதுவுமே இருந்துவிட முடியாது.

பனங்காய்க்காய் அல்லது பனங்காய்ப்பணியாரம் செய்ய வேண்டுமாகவிருந்தால், நன்கு விழுந்த பனம்பழங்களை தேடிப்பொறுக்கி எடுத்து வரவேண்டியது மட்டும்தான் அவளது வேலை. அதன் பின் மிச்சமெல்லாம் அம்மா பார்த்துக் கொள்ளுவார். முதலில், எடுத்து வந்த பழங்களிலிருந்து ஈ மொய்த்திருந்த பழங்களை தவிர்த்துவிட்டு மிகுதிப் பழங்களின் தோலை உரிக்க வேண்டும். அதன்பின், அவற்றிலிருந்து பனங்களியை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பனம்பழத்திலிருக்கும் அந்தக் களியை வழித்தெடுப்பது என்பது மிகுந்த சிரமமான ஒரு வேலைதான். அதிக அளவான உடல்வலு தேவைப்படும்.

ஆனால், அப்படி எடுக்கும் களி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாயிருக்கும். கடும்மஞ்சள் நிறத்தில் கட்டியாகவும் இல்லாமல் தண்ணித்தன்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட பதத்தில் இருக்கும் அந்தக் களி. அம்மா பனம்பழத்தை வார்ந்து வார்ந்து கஸ்ரப்பட்டு களி சேர்த்துக் கொண்டிருக்கும்போது அவளும் அக்காவும் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். இடைநடுவில், பனம்பழத்திலிருந்து வழியும் களி சட்டியில் விழமுன்னம் கையை குறுக்காக நீட்டி கொஞ்சத்தை அள்ளிக்கொண்டோடி, வேலிக்கரையோரமாக நின்ற அரசமர இலை இரண்டை பிடுங்கி, அதில் நல்ல தட்டையாக பரப்பி வீட்டுக்கூரையில் காயவைத்து ஆளாளுக்கு பினாட்டு ஆக்கி சாப்பிட்டுவார்கள்.

சின்னவயதில் பினாட்டு என்றால் அவளுக்கு அலாதிப்பிரியம். அவளுக்கு மட்டுமல்ல, அவள் அக்காவிற்கு அண்ணாக்களிற்கு என எல்லோருக்குமே பனம்பழம் என்றால் அவ்வளவு கெடு. ஒரு துண்டு பினாட்டிற்காக அத்தனை பேரும் அடிபிடிப்பட்டு நிலத்தில் விழந்துருண்டு கைகால்களில் சிராய்ப்பு காயங்கள் வேண்டுமளவிற்கு நாக்கில் ஊறியிருந்தது அந்தச் சுவை. இப்போதும் அவளிற்கு பனம்பழம் என்றாலோ, பினாட்டு என்றாலோ, பனங்காய்க்காய் சுடுவதென்றாலோ அவ்வளவு புளுகம் வந்துவிடும். ஆனால், அக்கா அப்படியல்ல. இப்போதெல்லாம் பனம்பழம் என்றாலே கடுப்பில் தெறித்து விழுகிற அளவிற்கு படுமோசமாய் மாறிப்போயிருந்தாள். அதனால், வீட்டில் பினாட்டு செய்வதோ, பனங்காய்க்காய் சுடுவதோ என்பது இப்போது மிகமிக குறைந்து விட்டிருந்தது. யாராவது உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தாலோ அல்லது ஆசைப்பட்டுக் கேட்டாலோ தவிர மற்றைய தருணங்களில் பனம்பழங்களை மாடுகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லவோ அல்லது வேலைக்கு போகவோ வேறு பிராக்குகளோ இல்லாமல் வீட்டை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் தமிழினிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருப்பது இந்த ‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’, மற்றும் இணையத்தள செய்திகளை பார்ப்பதுதான். அப்படி ‘பேஸ்புக்’ பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் அவளது நண்பி வாணி பதிவிட்டிருந்த படத்தைக் காண நேரிட்டது. பனங்காய்க்காய். சின்ன சின்ன மஞ்சள் நிற உருண்டையாய் பனங்காய்க்காய். அதுதான் இதுவரை சும்மா இருந்த அவளது மூளையை இப்போது உசுப்பி விட்டு சமையலறையில் திண்டாடிக் கொண்டிருக்கும் அம்மா முன்னே அவளைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

“அம்மா, நான் இப்பவே சொல்லிட்டன். பனங்களி எடுக்கவோ இல்லாட்டி பனம்பழம் பொறுக்க இவளோட கூட போகவோ நான் மாட்டன் ஆ.. இவளும் நீங்களும் தனியத்தான் சுடோணும் பிறகு என்னைச் சொல்லக்கூடாது..”

அம்மாவிற்கு சமையலில் உதவி செய்துகொண்டிருந்த அவளது அக்கா நிலா, தமிழினியைப் பார்த்து முறைத்தவாறே அம்மாவிற்கு பதில் சொன்னாள். அவளது பதில் தமிழினிக்கு கோபத்தை உண்டாக்கியது.

“நீ கெல்ப் பண்ணாட்டி என்ன, நானும் அம்மாவும் சுடுவம், எனம்மா. அம்மா நான் இப்ப உங்களுக்கு கெல்ப் பண்ணித்தந்தா பிறகு நீங்க சுட்டுத் தருவீங்களெல்லோ.. “

எதற்கும் ஒருமுறை உறுதி செய்துகொண்டாள் தமிழினி. அம்மா ஓம் என்பது போல இலேசாக தலையசைத்தாள். அவ்வளவு தான், பனம்பழம் அவள் நினைவில் இனிக்கத்தொடங்க கைகள் சின்ன வெங்காயத்தை உரிக்கத் தொடங்கின. நிலாவின் கண்களில் கண்ணீர் கசிய நினைவுகளில் நெருப்புப்பொறி பறந்தது.

அவர்கள் அப்போதுதான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்திருந்தார்கள்.  வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும். அவர்களது தாயார் கற்பிக்கும் பாடசாலையிலேயே அவளும் அவளது அண்ணன்களும் சேர்த்து விடப்பட்டிருந்தார்கள். அண்ணன்கள் எப்போதும் அவளை தம்முடன் கூட்டிப் போவதேயில்லை. அதனால் பாடசாலைக்கு   போகும்போதும் சரி, பாடசாலையை விட்டு வரும் போதும் சரி அவளும் அவளது தங்கை நிலாவும் எப்போதும் அம்மாவோடு தான் வருவார்கள். அன்று, பாடசாலையில் ஆசிரியர்களுக்கு ஏதோ கூட்டம் நடைபெற இருந்ததால் அவளும் அவளது தங்கையும் தனியாக வீடு வரவேண்டியதாகி விட்டது.

ஏற்கனவே பசி வயிற்றை குடையத் தொடங்கியிருந்ததால் வந்ததும் வராததுமாய் வெள்ளைச் சட்டையை கழட்டி வெளிக்கொடியில் போட்டுவிட்டு நேரே அடுப்படியில் போய் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் நிலா. நான்கு வாய் சாப்பிட்டிருப்பாள், ஐந்தாவது வாய் வைப்பதற்கிடையில் அவள் காது ஏதோவொரு ஒலியைச் சிறைப்பிடித்து மூளைக்கு அனுப்பிவிட, “உடனடியாக பதுங்கு குழிக்குப் போ” என மூளை கால்களிற்கு ஆணை பிறப்பித்தது. அடுத்த கணம் நிலாவை பதுங்கு குழிக்குள் காணக் கிடைத்தது.

பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்பது போல் தென்னிலங்கை பேரினவாத எண்ணங்கள் எல்லாம் வடஇலங்கையில் உயிர்குடிக்கும் குண்டுகளாய்க் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. சமாதானப்பொதி என்ற பேச்சுடன் அம்முறை நடந்த அரச தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, ஆட்சிக் கதிரையிலேறிய அடுத்த நொடியே தன் வார்த்தைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, முன்னெப்போதும் இல்லாத புது உத்வேகத்துடன் போர்ப்பூதங்களை தீனி போட்டு வளர்க்கத் தொடங்கியிருந்த காலம். எப்பெப்போ எங்கெங்கு எது நடக்குமென யாராலும் ஊகித்தறிய முடியாத சூழல். திருமணச் சடங்குகளில் சாவுகள் விழுந்ததுண்டு. பள்ளிக்கூரைகளில் குண்டுகள் விழுந்ததுண்டு. எல்லோர் வீட்டிலும் பதுங்குகுழிகள் கட்டாயச் சேர்க்கையாய் இருக்க காலம் உணர்த்திய பாடம்.

நிலாவிற்கு ஊர் முழுதும் அத்துபடி. யார்யார் வீட்டில் என்னென்ன விதமான ‘பங்கர்கள்’ இருக்கின்றன என அச்சுஅசலாய் நகலெடுத்தது போல் சொல்ல அவளால் மட்டுமே முடியும். செல்லையா ஐயா வீட்டில ‘மூடு பங்கர்’, தவமணி அக்கா வீட்டில ‘ஐ பங்கர்’, தெத்திப்பல்லு கணேசன் வீட்டில வீட்டு தலைவாசலுக்குள்ளேயே வெட்டி அதைச்சுற்றி சாணமிட்டு மெழுகியிருந்த ‘வீட்டு பங்கர்’, வைரவர் கோயில் செவ்வரத்தைக்கு கீழே ஐம்பது மீற்றர் நீளத்திற்கு பாம்பு போல நெளிந்த ‘மூவிங் பங்கர்’ என அங்கங்கு உள்ள அத்தனை பங்கர்களிற்கும் அவள் பிரவேசம் ஒருமுறையாவது கிடைக்கப் பெற்றிருக்காவிட்டால் தான் அதிசயம். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது, வைரவர் மடையில நிக்கும்போது, புளியம்பழம் பொறுக்கப் போனபோது என அவள் எந்த இடத்தில் நிக்கும்போதும் செல்லோ கிபிரோ வந்தால் கேட்டுக் கேள்வியில்லாமல் அவள் அக்கம் பக்கத்திலுள்ள பங்கருக்கு ஓடிவிடுவாள்.

எவ்வளவு வீராதி வீரனாக இருந்தாலும் இத்தகைய திடீர் தாக்குதல்களைச் சந்திக்கின்ற போது ஒருமுறை  நிலைகுலைந்துதான் போய்விடுவார்கள். என்ன, நிலாவிற்கு அந்த நிலைகுலைவின் அளவு ஆக உச்சத்தில் இருந்தது. ‘செல்’ குத்துற சத்தம், ‘சுப்பசொனிக்’ வாற சத்தம், சண்டை நடக்கிற சத்தம் இதுகளை கேட்டால் அவளுக்கு பேப்பயம். எல்லோருக்கும் முன்னர் அவள் தான் பதுங்கு குழிக்குள் இருப்பாள் . அது பள்ளிக்கூடத்திலும் சரி, வீட்டிலென்றாலும் சரி. இதோ இப்போதும் ‘சுப்பர்சொனிக்காரன்’ வாற சத்தம் அவளுக்கு கேட்டுவிட்டது. அடுத்த நொடி பதுங்குகுழிக்குள் பாய்ந்து விட்டாள்.

“அண்ணா, அண்ணா.. பங்கருக்கை வாங்கோ. எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு. அவன் திரும்பத்திரும்ப இதுக்குள்ள தான் சுத்திக் கொண்டிருக்கிறான். உள்ள வாங்கோ.எனக்கு பயமா இருக்கு… “

அவள் குரல் அழைப்பில் தொடங்கி, இரைஞ்சலாக மாறி கடைசியில் விம்மி வெடிக்கும் அழுகையாக மாறியிருந்தது. ஆனால், ஒன்பது, பத்து வயதுகளில் இருக்கும் அவளது அண்ணன்களுக்கு பதுங்குகுழியில் ஒளிவதற்கு பதில் அந்த வயதிற்கேயுரிய விளையாட்டுப்புத்திதான் முன்னணியில் நின்றது.

“ நீ பங்கருக்கு தானே இருக்கிறாய், பிறகென்ன. ஒரு பயமும் இல்ல அப்பிடியே இரு. இந்தா இப்ப நான் தமிழை கூப்பிட்டு விடுறன் “ என்ற அவளது சின்னண்ணா, கொய்யாமரத்திற்கு கீழே நின்று கொய்யாக்காய் ஆய்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் தலையில் சின்னதாக ஒரு கொட்டு வைத்து ‘ஓடு பங்கருக்கு’ என அனுப்பிவிட்டான். ஆனாலும், அவளுக்கு இன்னும் பயம் போகவில்லை. தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன்முள்ளாய் ஏதோ கிடந்து உறுத்திக் கொண்டேயிருந்தது.

“நீங்களும் ரெண்டு பேரும் உள்ள வாங்கோ. பிறகு போய் விளையாடுங்கோ. அண்ணா, எனக்குப் பயமா இருக்கெண்டுறன். சத்தமும் இங்க தான் கிட்டத்தில எங்கயோ கேக்குது. இங்கனைக்க எங்கையோ தான் அடிக்கப் போறானெண்டு நினைக்கிறன். வாங்கோ. உள்ள வாங்கோ..”

இம்முறை அவளது அழுகை பலமாயிருந்தது. இது ஒன்றும் அவளது அண்ணன்களிற்கு புதிய காட்சியில்லை. வாரத்தில் எப்படியாவது நான்கைந்து முறைக்கு மேல் நடந்தேறுகின்ற வழமையான விடயம் தான். சிலவேளைகளில் ஒரேநாளில் நான்கைந்து தடவைக்கு மேல் கூட. அதனால் அவளது அழுகையை கேட்டுக்கேட்டு அவர்களுக்கு புளித்துப் போய்விட்டது. நிலாவைப் பொறுத்தவரை, அவளிற்கு தனியாக இருப்பதற்கு சரியான பயம். யாராவது அவள் கூட இருக்க வேண்டும். அனேக நேரங்களில், சத்தம் அதிகமாகி, இலக்கு எங்கோ அவர்களிற்கு அருகில் தான் இருக்கிறது என்று உறுதியாகின்ற  தருணங்களைத் தவிர மற்றைய நேரங்களில் அவளது அண்ணாக்கள் பதுங்கு குழிக்குள் வருவதில்லை என்பதால் அம்மா தான் அவளோடு போய் இருப்பாள்.

இப்போதும் அவள் கூப்பிட கூப்பிட கேட்காது கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ‘சுப்பசொனிக்’ சத்தம் அதிகமாகி அதிகமாகி காதைக் கிழிக்கத் தொடங்கத்தான் ஓடிவந்து பதுங்கு குழிக்குள் தொப்பென விழுந்தார்கள். அடுத்த கணம் தர்சியையும் அந்த ‘பங்கருக்குள்’ காணக் கிடைத்தது.

தர்சி, நிலாவின் கூட்டு. பலவேளைகளில் எதிரியும் கூட. நிலாவின் வீடு இருந்த வளவிற்குள்ளே தான் தர்சியின் வீடும் இருந்தது. அந்த நாட்களில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் நிலை படு மோசமாக இருந்தது. சிறீலங்கா இராணுவப் படையெடுப்புகள் அடிக்கடி நடப்பதும் மக்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பாதுகாப்பான பிரதேசங்களை சென்றடைவதும் பெரும்பாலும் வழக்கமான விடயமாகி விட்டிருந்தது. அப்படித்தான், தர்சியின் குடும்பமும் யாழ்ப்பாண இடப்பெயர்வு காலத்தில் கையில் அம்பிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வன்னி பெருநிலப்பரப்புக்கு ஓடிவந்த பலநூறு குடும்பங்களில் ஒன்று. தர்சியின் அப்பா நீர்ப்பாசனத்துறை அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்ததால் ஒட்டுசுட்டான் எனும் ஊரிலுள்ள அலுவலகத்தில் தற்காலிக இணைப்பாக வேலைக்கு சேர்க்கப்பட்டார். அதனால் குறிப்பிட்ட அலவலகத்திற்கு அருகாக எங்காவது குடியிருக்க விரும்பியவர்கள் இறுதியில், கற்சிலைமடுவில் நிலாவின் குடும்பம் குடியிருந்த அதே காணிக்குள் தாமும் ஒரு சிறு மண்வீட்டைக் கட்டிக்கொண்டு குடியேறியிருந்தார்கள் (நிலா குடும்பமும் கூட இதற்கு முன் பல இடங்களில் குடியிருப்பதும் இடம்பெயர்வதுமாகத் தான் இருந்திருந்தது. நிலா பிறந்து இந்த ஏழு வருடங்களிற்குள் மட்டும் அவர்கள் ஐந்து முறை இடம்பெயர்ந்திருந்தார்கள். நிலா தனது முன் பள்ளிக்கல்வியை மட்டும் நான்கு வெவ்வேறு இடங்களில் படிக்க வேண்டியிருந்திருக்கிறது.

கற்சிலைமடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர். இலங்கையில் ஆங்கிலேயரை எதிர்த்து, இறுதிவரை மண்டியிடாது போராடி வீரகாவியமான, வன்னிமாட்சிமையின் இறுதித்தமிழ் மன்னன் குலசேகர வைரமுத்து பண்டாரவன்னியனின் வீரத்தின் சாட்சியாக, ஆங்கிலே படைத்தளபதி கப்டின் வொன் ட்றிபேக் ஆல் நிறுவப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள இடம். அந்த கல்வெட்டு அமைந்துள்ளதன் காரணமாகவே அந்த ஊரிற்கு கற்சிலைமடு என்பது ஒரு காரணப்பெயராக அமைந்தது என்பது வரலாறு. நிலாவும் அவளது அண்ணாக்களும் தர்சியும் கூட அவ்வப்போது சிலையடிக்கு சென்று வருவார்கள்.

தர்சியைப் பொறுத்தவரை வீட்டில் அவள் ஒரே பிள்ளை என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகமாகவிருந்தது. அதன் இலவச இணைப்பாக பிடிவாதம் அவளுடன் குடிவந்து கூடவே உட்கார்ந்துவிட்டது. அவள் எது கேட்டாலும் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் ஊரே இரண்டாகும் அளவிற்கு கச்சேரி வைத்து கெடுத்து விடுவாள். இன்றும் அவள் பாடசாலையால் வீட்டிற்கு வரும்போது,  ‘அன்ரி’ பின்வளவெல்லாம் தேடி நான்கு பனம்பழம் பொறுக்கியெடுத்து வைத்திருந்திருக்கிறார். வந்ததும் வராததுமாக பனம்பழ வாசம் அவள் மூக்கை துளைக்க, தான் கொண்டு வந்திருந்த புத்தகப்பையை வாசல் திண்ணையில் வீசி விட்டு நேரே ஒரு பனம்பழத்தை எடுக்கப் போனவளை ‘அன்ரி’ ஏசிவிட்டார்.

“வந்ததும் வராததுமா என்ன விளையாட்டு. புத்தகப்பையை தூக்கியெறிஞ்சிட்டு நேரே இதில வந்திருந்தா என்ன பிளான்.. எழும்பு, எழும்பி முதலில கை கால் அலம்பிட்டு வா வந்து சாப்பிடு. பிறகு என்னெண்டாலும் செய். “

அவ்வளவுதான். அவளின் உள்ளே எந்த அசுமாத்தமும் இல்லாமல் நல்லபிள்ளையாக அசையாதிருந்த அந்த பிடிவாத மரத்தை ‘அன்ரி’யின் குரல் ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது. கிளைகளின் இலைகளும் பூக்களும் காய்களுமாய் கனிகளுமாய் அந்த பிடிவாதம் சிதறி தெறிக்க ஆரம்பித்து விட்டது. இனி இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறினால் இப்போதைக்கு இறக்க முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும் ‘அன்ரி’ ஏதோ ஒரு நப்பாசையில் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தாள். தனியொருத்தியாக அவளால் தர்சியின் பேயாட்டத்தை சமாளிக்க முடியவில்லை. கடைசியாக வேறு வழியின்றி அவளைத் திட்டிக்கொண்டே ஒரு பனம்பழத்தை எடுத்து அடுப்பில் சுட்டு பிய்த்துக் கொடுத்தார்.

இன்னும் கழட்டிப் போடாத பள்ளிக்கூட வெள்ளைச் சட்டையோடேயே பனம்பழத்தையும் வாங்கிக்கொண்டு வெற்றிக் களிப்போடு வெளியே வந்தாள் அவள். நேற்றுத்தான் சாணமிட்டு மெழுகியிருந்த வாசல் திண்ணியில் ஏறி, கால்களை மடித்து வளமாய் உட்கார்ந்துபடி, கையிலிருந்த பனம்பழத்தை காந்த ஆரம்பித்தாள். பனம்பழத்திலிருந்து மஞ்சள் களி வாய்வழியாக வழிந்து கடைவாயை நனைத்து அவளது வெள்ளைச் சீருடையில் விழுந்து காய்ந்தது. ஆனாலும், அதெல்லாம் அவளுக்கொரு பொருட்டா என்ன..?

கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும். அவள் காதுகளில் அந்தச் சத்தம் விழுந்து விட்டது. அவள் கையிலிருந்த பனம்பழம் தானாகவே கீழிறிங்க அவள் கால்கள் ‘பங்கர்’ பக்கமாக விரைந்து பறந்தன. இப்போது, காதுகளின் வழி வந்த தகவலை அவளது மூளை உறுதி செய்துவிட்டது. சந்தேகமேயில்லை, அது ‘சுப்பசொனிக்’ சத்தம்தான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

தீர்த்தத்திருவிழா நாளொன்றில் மணல்திட்டில் தொலைந்து போன குழந்தை ஒன்று அங்குமிங்கும் அலைவது போல அவள் ‘பங்கர்’ பக்கம் வருவதும், பிறகு வீட்டுப்பக்கம் வருவதும், திரும்பி ‘பங்கர்’ பக்கம் ஓடுவதுமாக மாறி மாறி கிளித்தட்டு மறித்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரேயோட்டமாக கண்ணை இறுக்க மூடிக்கொண்டு வீட்டுப்பக்கமாக திரும்பியோடினாள். தான் பாதி சூப்பியபடி வைத்துவிட்டு வந்த பனம்பழத்தை திண்ணையிலிருந்து வெடுக்கென எடுத்தாள். அடுத்த நொடி அசுர வேகத்தில் ஒரு குருவியாய் பறந்து நிலாவிருந்த ‘பங்கரின்’ மேல் திட்டிலிருந்து பொத்தென உள்ளே குதித்தாள்.

இவ்விடத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தை பதிவு செய்தாக வேண்டும்.  இந்த உலகத்திலேயே நிலாவுக்கு தான் ‘சுப்பசொனிக்குக்கு’ அவ்வளவு பயம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. இப்போது அந்த கூற்றில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும். நிலாவுக்கு ‘சுப்பசொனிக்குக்கு’ எவ்வளவு பயமோ அதுக்கு ஒருதுளி கூட குறைவில்லாத அளவுக்கு தர்சிக்கும் அதே பயம். நிலாவுக்கும் தர்சிக்கும் அதிக வேறுபாடெல்லாம் ஒன்றும் கிடையாது. நிலாவுக்கு கொஞ்சம் கோபம் வரும். தர்சிக்கும்தான். நிலாவின் சாப்பாட்டில் தினமும் மீனிருக்க வேண்டும்: தர்சிக்கும் தான். நிலாவுக்கு ஏழு வயதென்றால், தர்சிக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் (ஆறு வயது).அந்த வேகத்தில் ஓடிவந்து ‘பங்கருக்குள்’ குதித்தாலும் அவள் தனது கையிலிருந்த பனங்கொட்டையை இன்னமும் இறுக்கியே பிடித்திருந்தாள். ‘சுப்பசொனிக்’ தலைக்கு மேல் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாலும், பயத்தில் அவள் பதைபதைத்திருந்தாலும், அந்த பனம்பழத்தை சூப்புவதையும் அவள் கைவிட்டு விடவில்லை. நடுங்கும் கைகளின் வழி அந்தப் பனம்பழமும், வெருளும் கண்களின் வழி அவளது மனமும் அசைவது கண்ணுக்கு தெளிவாக தெரிந்தது. தொடர்ந்து இருபது நிமிடங்களிற்கு மேலோக வட்டமிட்டுக் கொண்டேயிருந்த ‘சுப்பசொனிக்’ கும் போகிற பாடாய்க் காணோம். திடீரென அவள் பனம்பழம் சூப்புவதை நிறுத்திவிட்டு நிலாவின் பக்கமாய் திரும்பி பேச்சுக் கொடுத்தாள்.

“என்னக்கா, இந்த சுப்பசொனிக்காரன் போமாட்டானாம். இவ்வளவு நேரமா இதுக்கையே கிடந்து சுத்திக் கொண்டிருக்கிறான். இங்கதான் எங்கையோ அடிக்கப்போறான் போல..”

என்னவோ தெரியாது அந்த கலவரக்கணத்திலும் நிலாவுக்கு ஒரு குறும்புத்தனம் குடிகொண்டு விட்டது. இப்போது நினைத்தாலும் அதை எப்படி சொன்னாள், ஏன் சொன்னாள் என்பதற்கான காரணத்தை அவளால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

“அவன் நீ பனம்பழம் சூப்பிறதை கண்டுட்டான் போல. அதுதான் போறானில்லைப் போலை. திருப்பி திருப்பி இதுக்கையே சுத்திக் கொண்டிருக்கிறான்..”

பேயறைந்தது போல நிறம்மாறிய தர்சியின் முகத்தைப் பார்த்த போது தான் சொன்ன பதிலை அவள் ஓரளவு நம்பிவிட்டாள் போலிருந்தது நிலாவுக்கு. போதாக்குறைக்கு இப்போது அண்ணன்களும் அவளுடன் சேர்ந்துகொண்டு கதைவிடத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் மாறிமாறி எல்லோரும் அதையே சொன்னதால் அவள் வேறுவழியின்றி அதை ஏற்றுக்கொண்டு விட்டாள். ஆனாலும், அவர்கள் வீட்டு முற்றத்திலிருந்த மாமர நிழலிலே தான்‘பங்கர்’ வெட்டப்பட்டிருந்தது. நன்கு சடைத்து வளர்ந்திருந்த கறுத்தக்கொழும்பான் மாமரம். வெறும் முதலாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் தர்சியிடம் வயதுக்கு மீறிய கொஞ்ச புத்திசாலித்தனம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனால், அவள் அவர்களை நோக்கி ஒரு சந்தேகப்பார்வையை வீசிக்கொண்டே ஒரு கேள்வி கேட்டாள்.

“நாங்க மரத்துக்கு கீழ தான இருக்கிறம். இந்த மரக்கிளையள தாண்டி அவன் எப்பிடி எங்கள பாப்பான்..? மரம் எப்பிடியும் மறைக்கும் தான..” – தர்சி.

“அது, இந்த மரக்கிளையளின்ர இடைவெளிக்கிள்ளால வெளிச்சம் வருதெல்லோ. அதுமாதிரி அந்த இடைவெளியளுக்குளளால அவனும் மேல இருந்து பாக்கலாம். அவனுக்கு எல்லாம் வடிவாத் தெரியும்.” – இது அண்ணாக்கள்.

“அப்ப, இதை இப்ப எங்க ஒளிக்கிறது. இப்ப வெளிலயும் எழும்பிப் போகேலாதே. அவன் வேற சுத்திச்சுத்தி இதுக்குள்ள தான் எய்ம் பண்ணிக் கொண்டிருக்கிறான்” என்றபடி அவள் தனது வெள்ளைச் சட்டையால் பனம்பழத்தை சுருட்டி மூடினாள். ம்கூம், அப்போதும் ‘சுப்பசொனிக்காரன்’ போவதாகயில்லை. இதற்கு மேல் எப்படி அதை மறைப்பது என்கின்ற அச்சத்தில் அவள் குழம்பி வெருண்டு அலமலந்து போயிருந்தாள்.

“அவனுக்கு தெரியாத இடத்தில மறைக்க வேணும், மேலேயிருந்து பாத்தாக்கூட தெரியக்கூடா. என்ன செய்றது.. எங்க ஒளிக்கிறது.. என அவள் தீவிரமாக சிந்தித்து கடைசியில், ‘சுப்பசொனிக்’ கொஞ்சம் தள்ளிப்போனதும் மெல்ல எழும்பி தலையை வெளியே நீட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நிலாவின் பக்கமாக திரும்பி, அந்த வேலிக்கரையோர பற்றைக்குள் ஒளிப்பமா என்று ‘ஐடியா’ கேட்டாள். அவர்களுக்கும் அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்த நொடி அவளது கையிலிருந்த பனம்பழம் அடர்ந்து சடைத்து மூடியிருந்த அந்த பற்றைப்புதருக்குள் விழுந்துருண்டு தானாகவே எங்கோ ஓடி ஒளித்தது. அதன்பின், சிறிது நேரத்தில் ‘சுப்பசொனிக்’ போய்விட்டது. அவர்களும் வழமை போலவே எல்லாவற்றையும் மறந்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள்.

“ நிலா நிலா.. எல்லாரையும் கூட்டிக்கொண்டு இங்க வா. அன்ரி பினாட்டு வைச்சிருக்கிறா. ஆளாளுக்கொரு துண்டு எடுத்துட்டுப் போங்கோ, வாங்கோ..”

நிலா விளையாட்டில் அண்ணாவின் கண்ணில் படாமல் ஒளித்திருப்பது தெரியாமல், பனைமரக் கருக்குகளிற்கு பின்னால் ஒளித்திருந்த அவளைப் பார்த்து ‘அங்கிள்’ பகிரங்கமாகவே கூப்பிட்டதில் நிலாதான் முதல் ‘அவுட்டாக’ வேண்டியிருந்தது. அதன்பின் அவளே ஆட்டத்தையே மொத்தமாக கலைத்து விட்டு “எல்லாரையும் அங்கிள் வரட்டாம்” என்கின்ற ஒரு பொது அறிவிப்பைக் கொடுத்துவிட்டு வீட்டு வாசலில் போய் நின்றாள். ‘அங்கிள்’ வரிசையாக ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன பினாட்டுத்துண்டு கொடுத்தார். தர்சிக்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

“நீ தான ஒரு பனங்கொட்டை புல்லா சூப்பினனி. அதால உனக்கு பினாட்டு தேவையில்லை. அவங்கள் பாவம், அவங்களுக்கு மட்டும் தான்.. “ அங்கிள் கடுமையாகச் சொல்லிவிட்டார்

தர்சியின் பிடிவாத அலை கட்டுடைத்து கரைகடந்து ‘கோ’ என்ற சத்தத்துடன் ஊர் முழுதும் பாயத்தொடங்கியது. ‘அங்கிளும்’ விட்டுக் கொடுப்பதாயில்லை.

“நீ என்னதான் அழுது கூப்பாடு போட்டாலும், இண்டைக்கு உனக்கு பினாட்டு கிடையாது.” 

‘அங்கிள்’ முடிந்த முடிவாக சொல்லிவிட்டு தலையை குனிந்து வாசல்படியால் உள்ளே போகத்திரும்பினார்.

“நான் அந்த பனம்பழத்தை அப்பவே எறிஞ்சிட்டன், சூப்பயில்லை. எனக்கும் பனாட்டு வேணும்.”  தர்சி ‘அங்கிளை’ மறித்தபடி குறுக்காக நின்று பேரம் பேசினாள்.

“எறிஞ்சிட்டியா.. எங்களுட்டையும் தராம நீயும் சாப்பிடாம அந்தப் பனம்பழத்தை அப்பிடியே எறிஞ்சிட்டியா. உனக்கு வரவர சரியான பிடிவாதம் கூடிப்போச்சு. “

அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் ‘அங்கிளுக்கு’ பொல்லாத கோபம் வந்தது. அருகிலிருந்த கிளுவன்தடியில் எட்டி ஒரு பிரம்பை முறித்தவாறே அவளை கேள்விகளால் துளைக்கத் தொடங்கினார்.

“ஏன் அதை எறிஞ்சனி..? வேணாமெண்டால் அதைக் கொண்டு வந்து எங்களிட்டயாவது தந்திருக்கலாம் தானே. அவ்வளவு அடம் என. வேணும் வேணுமெண்டு அடிம்பிடிச்சு வாங்கிறது. வாங்கிப்போட்டு பிறகு அதை உடனேயே தூக்கிப் போட்டுடுறது. சொல்லு, ஏன் அதை எறிஞ்சனி..? “

வழமையாக ‘அங்கிளோ அன்ரியோ’ அவளுக்கு அடிப்பதில்லை என்றாலும் இன்று ‘அங்கிள்’ கோபத்தின் உச்சாணிக் கிளையிலேறி உட்கார்ந்து விட்டார். அவ்வளவுதான் . அவள் மொத்தமாய் எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டாள்.

“உங்களுக்கு தெரியாது. நான் பனம்பழம் சூப்பினதால தான் சுப்பசொனிக்காரன் வந்தவன் தெரியுமே. பிறகு நாங்கள் கஸ்ரப்பட்டு அதை பத்தேக்கை ஒளிச்ச பிறகுதான் அவன் போனவன்.”

“ என்ன, நீ பனம்பழம் சூப்பினதால தான் சுப்பசொனிக் வந்ததோ. ஆருனக்கு இந்த கதை சொன்னது..? “

அவள் கை மெதுவாக நிலாவை நோக்கி நீள, நிலா கையிலிருந்த பினாட்டை தூக்கி காற்றில்  வீசிவிட்டு எடுத்தேன் பாரு ஓட்டம் என பின்வளவை நோக்கி பறந்தாள். நிலா மட்டுமல்ல, அவளது அண்ணாக்களும் தங்கச்சியும் கூட அங்கிளால் விட்டுத் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின் திடீரென ஒருநாள் அதிகாலையில் அவர்கள் கையில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மறுபடி இடம்பெயர வேண்டியிருந்தது. ‘ஜெய சிக்குறு’ என்கின்ற பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட படையினரின் நகர்வின் ஒரு கட்டமாக, இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் ஆமிப்படைகள் ஒட்டுசுட்டான் வரையில் வந்து விட்டிருந்தன. அதிகாலை வேளையில் வயலிற்கு போகும்போது தூரத்தே பனிஇருட்டில் ஆமிப்படைகளை கண்டுவிட்டு, அப்படியே சைக்கிளை திருப்பிக்கொண்டு கற்சிலைமடு நோக்கி வந்த ஒருவரின் செய்தியோடு தான் எங்கள் காலை விடிந்தது. அதற்கிடையில் ஒட்டுசுட்டானில் இராணுவத்தினர் முன்னேறிவிட்டிருந்த பகுதியில் இருந்த மக்களின் வீடுகளை அந்த அதிகாலையில் தட்டிய இராணுவத்தினர் அவர்களை அப்படியே தம்மோடு அழைத்துச் சென்றனர். ஒரு இரவில் உலகமே மாறிச் சுற்றிவிட்டதோ என்கின்ற அளவிற்கு அந்த நாள் மாறிப் போயிருந்தது.

அது 1998 ஆம் ஆண்டின் மார்கழி மாதத்தின் இறுதி நாட்களில் ஒன்று. பனிக்குளிர் உடம்பில் ஊசியேற்ற, பயக்குளிர் மனதை உறைய வைக்க வெறும் இரண்டொரு மணித்தியாலயங்களிற்குள் நாம் வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டிய சூழல். ஏற்கனவே வீதிக்கு ஏறிவிட்ட மக்களில் ஒரு பகுதியினர் முள்ளியவளை நோக்கியும் இன்னொரு பகுதியினர் புதுக்குடியிருப்பு நோக்கியும் நடக்கத் தொடங்கியிருந்தனர். நிலாவின் குடும்பத்தினர்  எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியில் வரவும், ‘அங்கிள்’ தன்னுடைய ‘லுமாலா’ சைக்கிளில் நான்கைந்து உரப்பைகளை வைத்து தள்ளிக்கொண்டு படலையடிக்கு  வந்து சேரவும் நேரம் சரியாகவிருந்தது. ‘அங்கிளுக்கு’ பின்னால் ‘அன்ரியும்’ தர்சியும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு என்ன சொல்லிக் கொள்வது என்று தெரியாமல் சற்று கலங்கிய கண்களுடனேயே வீதிக்கு ஏறினார்கள். நிலாவின் அப்பாவும் ~அங்கிளும்~ முன்னே நடக்க மற்றவர்கள் அவர்கள் பின்னே ஊரத் தொடங்கினார்கள். இரண்டு நிமிட இடைவெளியில் நிலா மனதில் ஏதோ ஒரு உள்ளுணர்வு தெரிய திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தால் அவர்களோடு நின்றிருந்த தர்சியைக் காணோம். அவள் பயம் சுத்தியல் கொண்டு அவளது நெஞ்சிலே அறைவது அவளது காதுகளுக்கே தெளிவாய்க் கேட்டது.

“அப்பா அப்பா, தர்சியைக் காணேல்லை “  நிலா தன் சின்னிவிரலால் மெல்ல அப்பாவைச் சுரண்டினாள். அவர் சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். கூட்டத்தோடு கூட்டமாக எங்காவது மாறிப் போய்விட்டாளா என்று தேட ஆரம்பித்தார். தர்சியைக் காணவில்லை என்றதும்  ‘அன்ரி’ பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். இரண்டு நிமிட தேடுதலின் பின் திடீரென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்த தர்சி அவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள்.

“தர்சி வந்தாச்சு .. தர்சி வந்தாச்சு”  கூட்டத்தோடு கூட்டமாக அங்குமிங்கும் தேடிக்கொண்டிருந்த நிலாவின் அப்பாவை அவளது சின்னண்ணா போய்க் கூட்டி வந்தான். வந்ததும் வராததுமாக ‘அங்கிள்’ கோபத்தில் வெடித்து சிதறினார்.

“எங்க போன்னீ இப்ப..? அதுவும் இந்த நேரத்தில எங்க எண்டு போய் நாங்கள் உன்ன தேடிப்பிடிக்கிற..? அப்பிடி அவசரமா என்ன வேலை உனக்கு.. ஆ.. “

“எங்கட பனமரத்தில இருந்து பனம்பழம் விழுற சத்தம் கேட்ட.. அதுதான் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தனான்.”

“பனம்பழமோ.. உசிருக்கு பயத்தில மனிசர் விழுந்தடிச்சு போற இந்த நேரத்தில உனக்குப் பனம்பழம் கேட்குதோ..” அவர் குரலில் கோபத்தின் வெம்மை இன்னும் தணியாமலேயே இருந்தது. தர்சியின் கையிலிருந்த பனம்பழத்தை பிடுங்கி வீதியோர வேலிக்கரையோடு எறியப்போனார் ‘அங்கிள்’. அவ்வளவுதான். தர்சியின் ஒலிக்கிடங்கு மறுபடி கிண்டப்பட்டு பூகம்ப வெடிப்பில் நிலம் துப்பியெறியும் நெருப்புச் சிதறல்களாய் வெளியே வந்து விழத்தொடங்கியது.

வேறு வழியேயில்லை. ‘அங்கிளிற்கு’ சமாதானம் சொல்லிக்கொண்டே கையிலிருந்த பனம்பழத்தை வாங்கி தர்சியின் கையில் வைத்தார் நிலாவின் அப்பா. அவள் அதை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். பின்னர் அவர்கள் புதுக்குடியிருப்புப் பக்கமாகவும், நிலா குடும்பம் முள்ளியவளைப் பக்கமாகவும் போவதென்று முடிவெடுத்தார்கள். அவர்கள் சனத்தோடு சனமாக புதுக்குடியிருப்பை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

தர்சியின் கையிலிருந்த கற்சிலைமடுப்பனம்பழம் புதுக்குடியிருப்பு பக்கமாக பயணப்படத் தொடங்கியது. அவர்கள் தங்களோடு வராது புதுக்குடியிருப்புப் பக்கமாக போவது நிலாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. காரணம், இனி யாரோடு விளையாடுவது..? அப்படி விளையாட வேண்டுமானாலும் புதிதாக கூட்டம் சேர்க்க வேண்டும். போகிற இடத்தில் அவள் வயதையொத்த சின்ன பிள்ளைகள் இருப்பார்களோ என்னவோ..? கவலை தொண்டையை அடைக்க அவள் திரும்பித் திரும்பி தர்சியைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். தர்சி ஆலடி வளைவைத் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக்கொண்டிருக்க நிலாவின் கண்ணில் கடைசியாக பட்டு மறைந்தது தர்சியின் வலக்கையும் அதிலிருந்த பனம்பழமும்.

அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டிருந்தது.

வீட்டில் அம்மா மும்முரமாக பனங்காய்க்காய் சுட்டுக் கொண்டிருக்கிறார். இடைநடுவில் எண்ணெய் கொஞ்சம் தீர்ந்து போனதால் கோயில் வளைவில் இருக்கும் பலசரக்கு கடைக்கு போய் வாங்கி வரச்சொல்லி நிலாவை அனுப்பியிருந்தார். கடை வீதி முழுதும் அங்கங்கு நான்கைந்து பேராக கூடிக் கூடிநின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கடைக்குப்போய் எண்ணெய் வாங்கிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். ஆலடி ‘பேக்கறி’யைத்  தாண்டும் போது வழமைக்கு மாறாக அந்த நேரம் ‘தமிழீழ வானொலியில்’ விசேட செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நடையை கொஞ்சம் தளர்த்தி நின்று காதைக்கொடுத்து செய்தியில் அப்படி என்னதான் விசேடமாக சொல்கிறார்கள் என்று கவனமாகக் கேட்டாள். செய்தியில் சொன்ன விடயத்தை அவளால் நம்பவே முடியவில்லை. காலில் சக்கரம் பூட்டாத குறையாய் பறந்துபோய் வீட்டுப்படலையடியில் இருந்ததே கத்திக்கொண்டு போனாள்.

“அண்ணா.. அண்ணா.. உனக்கு விசயம் தெரியுமே.. ஒட்டுசுட்டான் அடிச்சிட்டாங்களாம். ஆமிக்கு சரியான சேதமாம். தமிழீழ வானொலில சொல்லிக்கொண்டிருக்கு..”

அவள் சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடித்தொலைக்க, கையில் கொண்டு வந்த எண்ணெய்ப்போத்தில் நிலத்தில் விழுந்துருள, அடுப்படியிலிருந்த அம்மா அகப்பைக்காம்போடு வெளியே வந்து அவளை விட்டுத் துரத்த என ஒரு பெரிய களேபரமே நடந்து முடிந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து ஏழாவது தடவையாக மறுபடி மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு திரும்பவும் கற்சிலைமடுவிற்கு மீளக்குடியேறினார்கள். நிலாவின் அம்மா கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலேயே தான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நிலமை சரியாகி பாடசாலை அங்கு திரும்பிப் போவதால் அவர்களும் கட்டாயமாக அங்கு திரும்பப்போக வேண்டியிருந்தது.

ஒன்றரை வருட இடைவெளியின் பின்னர் மீளவும் கற்சிலைமடு. திரும்பும் பக்கமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக விரிந்திருந்தது பச்சைத்துணி. பேச்சுத்துணைக்கு ஆட்கள் இல்லாதிருந்த கீச்சுக்குருவிகள் இப்போது சந்தோசத்தில் கிணுகிணுக்கத் தொடங்கியிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறுபடி கடைகள், வீடுகள், கோயில்கள், பாடசாலைகள் என ஒவ்வொன்றாய் இயங்கத் தொடங்கியிருந்தன. ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களமும் மறுபடி அதே இடத்தில் திரும்ப இயங்கத் தொடங்க ‘அங்கிள்’ குடும்பமும் மறுபடி முன்பிருந்த அதே காணியில் பழையபடி வந்து குடியேறியது. நிலாவின் கூட்டு சேர்ந்து விட்டது. திரும்ப விளையாட்டு, திரும்ப அடிதடி, திரும்ப கோள்மூட்டு, திரும்ப குழப்படி. முன்னிருந்ததைப் போலவே சூழ்நிலை இப்போதும் இருந்தது, இரண்டே இரண்டு விடயங்களை தவிர. ஒன்று, இப்போது அவளுக்கு ஒன்பது வயதாகியிருக்க தர்சிக்கு எட்டு வயதாகியிருந்தது. மற்றையது, முன்னைப்போல இப்போது காடு கரம்பையெல்லாம் கண்டபடி ஓடித்திரிய முடியாது. காரணம், “மிதிவெடி கவனம்” என்கின்ற அறிவித்தல் பலகைகள் அங்கங்கு நடப்பட்டிருந்தது.

மீளக்குடியேறிய புதிதில் அடிபாடு நடந்த இடங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை பொதுவாக எல்லோரிடத்திலும் இருப்பது தான். அதனால் நிலாவும் தர்சியும் ஒருமுறை அடம்பிடித்து ஒட்டுசுட்டான் போக ஆயத்தமானார்கள். ‘அங்கிள்’ பொதுவாகவே வேலைக்கு ‘சைக்கிளில்’ தான் போவார். அதனால் அவர் காலையில் வேலைக்கு போகும் போது அவருடனேயே அலுவலகம் வரை போய்விட்டு, மாலையில் அவர் திரும்பி வரும்போது அவருடனேயே வீடு வந்து சேர்வது என்று ஒப்புக்கொண்டு ஒரு சனிக்கிழமை காலையில் அவர்கள் இருவரும் புறப்படத் தயாரானார்கள். அண்ணாக்களும் தங்கச்சியும் முகத்தை உம்மெண்டு வைத்திருந்த அந்த இளங்காலைப் பொழுதில், ‘அங்கிளின் சைக்கிளின்’ முன் ‘கரியரில்’  தர்சியும் பின் ‘கரியரில்’ நிலாவுமாக அவர்களது வரலாற்றுப் பெருமை மிக்க ஒட்டுசுட்டான் பயணம் தொடங்கியது. வழி முழுதும், அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாதென ஆயிரமாயிரம் அறிவுறுத்தல்கள் ‘அங்கிளிடம்’ இருந்து வரிசைக்கு வந்து கொண்டேயிருந்தன. ஆனால் அவர்களுக்கோ, சுற்றும் முற்றும் விடுப்பு பார்ப்பதே குறிக்கோளாக இருந்ததால், அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எந்த பலனும் இல்லாமல் வலது காதால் உள்ளே புகுந்து வந்த வேகத்திலேயே இடது காதால் வெளியேறிச் சென்று கொண்டிருந்தன.

அலுவலகத்தை அடைந்து ‘அங்கிள்’ வேலையில் மூழ்கிவிட்டார். அவருக்கு செய்து முடிப்பதற்கு ஆயிரத்தெட்டு வேலைகள் பாக்கியிருந்தன. சிறுமிகள் இருவரும் அந்த அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு மேல் ஒருஅடி நகர்வதற்கு கூட இறுக்கமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சந்தோசம் பூசிய முகத்தோடு வெளியே வந்தார்கள். முன்னிருந்த மணல் முற்றத்தில் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். வேலிக்கரையோரமாக இருந்த விளாமரத்தில் நன்கு முற்றிக் காய்த்திருந்த விளாங்காய்களை கல்லால் எறிந்து விழுத்த முயற்சித்தார்கள். பல நேர தொடர் தோல்விக்கு பிறகு தர்சி எறிந்த கல்லிற்கு ஒரேயொரு பிஞ்சு விளாங்காய் மட்டும் தரையில் விழுந்தது. ஆளாளுக்கு பாதி பாதி எடுத்துக் கொண்டார்கள்.

“நான்தானே விளாங்காய விழுத்தினான். எனக்குத்தான் இந்த பாதி, உங்களுக்கு இது.”

அந்த விளாங்காயை அடித்து விழுத்தியது அவள் என்பதால், தான் பெரிய துண்டை எடுத்துக்கொண்டு  நிலாவிற்கு மற்றைய பாதியை நீட்டினாள் தர்சி. நிலாவுக்கு அதில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தான்தானே பெரியவள். பெரியாளுக்குத் தானே பெரிய துண்டு தரவேண்டும். அதுதானே நியாயம்.

“தர்சி, நீ சின்னபிள்ளை தானே. நான்தானே உன்ன விடப்பெரியாள். எனக்கு பெரிய துண்டை தா. நீ சின்னப்பிள்ளை. கனக்க சாப்பிட்டா பிறகுனக்கு தொண்டை சரியா காந்தும்..”

“இல்லை, இந்த துண்டு வேணுமெண்டால் எடுங்கோ. இல்லாட்டில் நான் ரெண்டையுமே சாப்பிட்டுடுவன். உங்களுக்கு தரமாட்டேன். “

நிலா வைத்த ‘ஐஸ்’ அவளிடம் வேலைக்காகவில்லை. ம்கூம் அவள் விட்டுக் கொடுப்பதாகவேயில்லை. இறுதியில் கனக்க மல்லுக்கட்டி அந்த மற்றப்பாதியும் கைவிட்டுப் போய்விடாமலிருக்க அரைமனத்தோடு அந்த சின்னப்பாதியை வாங்கி காந்த ஆரம்பித்தாள் நிலா. அங்கிருந்து மெல்ல நகர்ந்து அப்படியே சிறுமிகள் இருவரும் வேலிக்கரையோரமாக பூத்து சிலுப்பி விட்டிருந்த நித்திய கல்யாணி மரங்களை பார்த்து இரசித்துக்கொண்டு பின்பக்கமாக வந்து சேர்ந்தார்கள். அங்கே வாழைத்தோட்டம் இருந்தது. அப்போதெல்லாம் பாடசாலைகள், அலுவலகங்கள் எல்லாம் தமது காணிகளில் ஒருபகுதியில் வாழையோ தென்னையோ அல்லது மரக்கறித் தோட்டங்களோ பயிர் செய்வார்கள். இந்த அலுவலகத்தில் இவர்கள் வாழைத்தோட்டம் வைத்திருந்தார்கள். இடைநடுவில் பராமரிப்பற்றிருந்ததாலும் போர் நடந்ததாலும் அவற்றில் பலது முறிந்தும் அழிந்தும் போயிருந்தன.

எஞ்சியிருந்த ஒருசில குட்டிகளை வெட்டியெடுத்து இப்போது நட்டிருக்கிறார்கள். அதனால் அவ்விடம் நல்ல குளிர்ச்சியாவிருந்தது. சிறுமிகள் ஒவ்வொரு வாழைக்கன்றுகளுக்குள் புகுந்து அவற்றில் குருத்து வந்திருக்கிறதா அது எப்போது விரியும் போன்ற பல மிக முக்கியமான விடயங்களை ஆராய்ச்சிகளை செய்து கொண்டு மெல்ல கிணற்றடிப்பக்கமாக நகர்ந்தார்கள். அதுவரை அமைதியும் இரம்மியமுமாக இருந்த சூழலை குலைத்துக்கொண்டு, திடீரென்று சரசரவென்ற ஒரு சலசலப்பிற்கு பின் ஏதோவொன்று பெரிய சத்தத்துடன் பொத்தென்று நிலத்தில் விழும் ஓசை கேட்டது. பயத்தில் நிலா பின்னங்கால்  பிடரியில் அடிபடாத குறையாய் திரும்பி ஓட்டம் பிடித்தாள். தர்சியின் குரல் அவளைக் கலைத்தபடி பின்னால் வந்தது.

“நிலாக்கா ஓடாதேயுங்கோ நில்லுங்கோ.. நில்லுங்கோ. அது பனம்பழம் விழுந்த சத்தம்தான் நில்லுங்கோ. ஓடாதேங்கோ..” 

நிலாவிற்கு அவள் சொல்வதில் முழுதாக நம்பிக்கை இல்லையென்றாலும் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். தர்சியோ நிலாவிற்கு பதில் சொல்லிக்கொண்டே, கிணற்றடியைச் சுற்றிக்கட்டியிருந்த கம்பி வேலிக்குள்ளால் புகுந்து பக்கத்து காணியிலிருந்த பனைமரத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தாள்.

“தர்சி, நில்லு நில்லு..”  என்று சொல்லி அவள் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் நன்கு கொழுத்துப் பழுத்திருந்த ஒரு பனம்பழம் அவள் கையில் குடிவந்து விட்டிருந்தது.

“அக்கா ரெட்டைக் கொட்டை பனம்பழம். ஒண்டு உங்களுக்கு ஒண்டு எனக்கு“ என்று புளுகமாய் சொல்லிக்கொண்டே பாதைக்கு குறுக்காய் விழுந்திருந்த காவோலையை காலால் விலத்த முயற்சித்தாள். அடுத்த நொடி ‘படீர்’  என்ற சத்தத்தோடு பெரும்பூகம்பம் ஒன்று வெடித்துக்கிளம்ப தர்சியின் கையிலிருந்த பனம்பழம் காற்றில் பறந்து, பலநூறு துண்டாய் சின்னாபின்னமாகி சிதறி விழுந்தது. அங்கிருந்து தெறித்த ஒரு துளித்திரவம் பட்டு நிலாவின் உதட்டு ஓரத்தில் ஒரு சின்ன வெப்பம் ஏறியது. நடுங்கும் விரல்களால் மெல்ல அதைத் தொட்டு பார்த்தாள். சிவப்புப்பசையாய் பிசுபிசுத்தது. நிமிர்ந்து பனையடியைப் பார்த்தாள். தர்சியின் அசுமாத்தத்தை காணவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, அவளை உலுக்கிப்போடும் விதமாக, கிணற்றடி வேலிக்கு பின்புறமாக “மிதிவெடி அபாயம்” என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது. அவள் மொத்தமாய் இறுகி கல்லானாள். அதற்கிடையில் அந்த பெருஞ்சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பதறியடித்து ஓடிவந்தார்கள்.  யார்யாரோ என்னென்னவோ பேசினார்கள், ஏதேதோ செய்தார்கள். ஆனாலும் அதன் பின் தர்சியின் குரல் மட்டும் கேட்கவேயில்லை. நிலாவின் நினைவில் வெறுமை சூழ்ந்து கொண்டது. அவள் சந்தோசம் நாசமாக்கப்பட்டு விட்டது. காலம் ஒரு கருணையற்ற அரக்கன். அது யாருக்காகவும் பரிந்து நிற்பதில்லை, விட்டுக் கொடுப்பதில்லை. ஏதோ பெரிய அவசரத்தில் பறக்கும் ஒரு விரையுந்து வண்டிபோல எல்லோரையும் முந்திக்கொண்டு எப்போதும் போல தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கின்றது.

அதன்பின் அவள் நாட்கள் நரகங்களாகின. சுழற்றியடிக்கும் ஆடிக்காற்றிற்கு கூட முற்றத்து ஊஞ்சல் அசைய மறுத்தது. ‘சுப்பசொனிக்கோ’ ‘கிபிரோ’ ‘ஆட்லறி செல்லோ’, ‘பங்கரிற்கு’ நுழைவதற்கு கால்கள் பின்னடித்தன. வீட்டு பின்வளவிலிருந்த பனங்கூடல் முழுதும் பனம்பழங்கள் விழுந்து தேடுவாரற்று அழுகிக் கிடந்தன. இன்னும் சொல்லப் போனால் அவள் நாசித்துவாரம் மொத்தமாய் பனம்பழ வாசத்தை மறந்து விட்டிருந்தது.

“அக்கா அக்கா… என்ன நீ தேங்காய் திருவுற எண்டு தேங்காய் சிரட்டை வரை துருவித் தள்ளியிருக்கிறாய். நீ இஞ்சை தான் இருக்கிறியோ இல்லாட்டி வேறெங்கயும் போட்டியோ. சரி சரி, நீ சமைச்சுக் கொண்டிரு. நான் எங்கட வேலிக்கிள்ளால புகுந்து பின்வளவில இருக்கிற பனங்கூடலில பனம்பழம் பொறுக்கிக்கொண்டு வாறன். பின்னேரம் பனங்காய்க்காய் செய்யோணுமெல்லே..” என்றபடி தான் உரித்துக்கொண்டிருந்த வெங்காயத்தை கீழே போட்டுவிட்டு காற்றென எழும்பிப் பறந்தாள் தமிழினி.  

“ஏய் நில்லு.. நான் சொல்லுறத கேள். அது பிறகு ஆறுதலா செய்யலாம். இப்ப சமைக்கிறதுக்கு வந்து கெல்ப் பண்ணடி “ என்ற நிலாவின் குரலை அவள் மதிக்கவேயில்லை.

“எனக்குத்  தெரியும். நீ ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி அம்மாவ செய்தெராம விட்டுடுவாய் எண்டு எனக்கு தெரியும். உனக்குதான் பனம்பழம் எண்ட சொல்லே பிடிக்காதே..”

அவள் நிலாவுக்கு பதில் சொல்லிக்கொண்டே முள்ளுகம்பி வேலியைக்கடந்து பனங்கூடலை எட்டியிருந்தாள்.

காலம் மாறியிருந்தாலும், நாட்கள் பல கடந்து வாழ்க்கை வளர்ந்திருந்தாலும், நிலாவின் உள்மனதின் வடு இன்னும் காயவேயில்லை. இரட்டைக் குடும்பியோடு வாசலில் வந்து நின்று சண்டையிடும் தர்சி வாழ வேண்டிய நாட்களை அவள் இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவளைப் போல் ஒரு கலைஞராக, இல்லையில்லை அது அவளுக்கு பிடிக்காது. அப்படியென்றால் தமிழினியைப் போல ஒரு வக்கீலாக, சிலவேளை இருந்திருக்கக்கூடும், அவள்தான் நன்றாக வாதாடுவாளே.

கண்ணைக்கூசும் சூரிய வெளிச்சத்தை துளைத்து தன் தங்கை போன பக்கமாய் தூர நோக்கினாள் நிலா. மூன்று பெரிய பனம்பழங்களோடு திரும்பி வந்துகொண்டிருந்த தமிழினியோடு கூடவே ஒரு குறும்புக்கார குட்டித்தர்சி வக்கீல் உடையில் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

-வேல்விழி, ஈழத்தில் உள்ள மணலாறு ஊரைச் சேர்ந்த இவர், தற்பொழுது Sheffield Hallam பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ‘பட்டது’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது

தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular