ராகேஷ் தாரா
முதல் கதை
அந்தப் பெட்டியைத் திறக்கும் தலைவிதி ஏற்பட்டது. இல்லையென்றால் காரணங்களுக்கு அப்பால் தன்னிலையற்ற சுவாதீனத்தில் திளைக்கும் கண்ணியமான ஆன்மா என்னுடையதில்லை. காலத்திரியில் நடந்தேறிடக் நடந்தேறிவிடக் கூடிய பல்வேறு சாத்தியங்களை தேவைக்கதிகமாக பொருட்படுத்தக் கூடிய மனிதர்கள் காலத்தில் ஸ்தம்பித்து நின்றுவிடக் கூடியவர்கள். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் எவ்வளவு சிரமம் என்பதை நான் அறிவேன். எத்தனை திசைகளில் பிரிந்து சென்றாலும் சிந்தனைகளை இருமைக்குள் அடக்கினால் ஒழிய அவை செயலில் பொருந்த முடியாது.
நானும் என் காதலியும் வாரத்திற்கு ஒருமுறை கடற்கரைக்குச் செல்வோம். அப்போதெல்லாம் அவள் கண் கலங்குகிறாள். எதை நினைத்து என்று அவளுக்கே தெரியவில்லையாம். நான் கொஞ்சம் ஊகித்து வைத்திருக்கிறேன். இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஒரு விளக்கத்தைக்கூட என்னால் சொல்ல முடியுமென்று நினைக்கிறேன். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். ஆனால் நான் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பதில்லை. அதன் ஒளிக்குவியல் நம்மை பிரித்தறிய முடியாத உணர்வுநிலைக்கு ஆட்படுத்துகிறது. உணர்வுகள் பொதுவாக ஒன்றன்மீது ஒன்று படிந்து கலவையான சுவைகளை தரக்கூடியவை. ஆனால் இத்தகைய புதிய சுவைகளை நாம் ஏற்கனவே அறிந்து பகுத்து வைத்திருக்கும் உணர்வுநிலைகளுடன் ஒப்பிட்டு அவற்றிற்கு அர்த்தம் கொடுக்கவே விரும்புகிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் வயலின் இசை சோகத்திற்கான குறியீடாகவே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் எனக்கு வயலின் இசையை போட்டுவிட்டு குத்துப்பாடல்களைக் கேட்பது பிடிக்கும்.
சென்ற வாரம் இரவு கடற்கரைக்குச் சென்றிருந்தபோது அவள் சூரிய உதயத்தை நினைத்து கண் கலங்க.. நான் அலைகளின் போக்கை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய அலை எங்கள் காலணிகளை அடித்துச் சென்றுவிட்டது. தனது எஞ்சிய ஒற்றை செருப்பை கையில் வைத்துக்கொண்டு நிற்க வைத்துவிட்டு எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அரை கிலோமீட்டர் தொலைவில் அவற்றை நான் கண்டுபிடித்ததை அவள் இன்னும் ஒரு அற்புதம் என்றே நம்புகிறாள். அவளுக்கு எதையோ பரிசளிக்க நினைத்துதான்..
எத்தனை வீடுகள் மாறினாலும் தனக்கென ஒரு மூலையைப் பிடித்துவிடுகிற இந்தப் பெட்டியைத் திறந்திருக்கிறேன்.
அப்பா ராணுவத்தில் இருந்த காலம் முழுவதும் அந்த சின்ன தகரப்பெட்டி எங்களுடன் இருந்து வருகிறது. வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போகும்போதெல்லாம் அதற்கு அப்பா புது பெயிண்ட் அடித்து வைப்பார். அவர் இறப்புக்குப் பின் அதை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை.
வழக்கமாக நான் இவ்வளவு சுதாரிப்பில்லாமல் நடந்து கொள்பவன் இல்லை. பிடிக்காது என்று தெரிந்தும் ஒருவன் முன் நான் சென்று நிற்பது அவன் முகத்தில் நான் உமிழத் தகுதியானவன் என்பதை எனக்கு நானே நிரூபித்துக் கொள்ளத்தான்.
ஆனால் பரிசைக் கொடுத்தவுடன் லீனாவுடன் திட்டமிட்டிருந்த மாச்சோசிஸ்டிக் கற்பனைகள் கொடுத்த கிளர்ச்சியின் திளைப்பில் என்னையும் அறியாமல் இதைத் திறந்துவிட்டிருந்தேன். உள்ளே கிடந்தவற்றில் குறிப்பிட்ட ஒரு பொருளின் மேல் என் பார்வை நிலைகொள்வதற்கு முன் பெட்டியினுள் அடைபட்டுக் கிடந்த வாசனை குப்பென்று என் முகத்தில் மோதியது.
“நினைவுகளின் வழித்தடத்தில் நாம் பயணிக்காத மற்றொரு திசை’ என்கிற, எப்போதும் புரியாமல் எரிச்சலூட்டிய டி.எஸ் எலியட்டின் வரி புலப்பட்டு அடுத்த கணம் மறைந்தும் போனது.
காலத்தில் மிதக்கும் சுதந்திரத்தை நினைவுகள் நமக்கு அளிக்கின்றன. ஆனால் அது எனக்கு தேவையில்லாத சுதந்திரம். நினைவுகளின் மேல் பூசப்படும் அர்த்தங்களின் வண்ணங்களைத் தேர்வு செய்ய நான் அதிக சிரத்தை எடுத்து கொள்வதில்லை. இருந்தும் சில நேரங்களில் நம்மையும் மீறி இறகை போல் எங்கோ ஒரு குறிப்பிட்ட தினத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம் தான். அவற்றிலிருந்து அவரவருக்கான செளகரியமான அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு தான் வெளிவர முடிகிறது. இல்லையேல் ஸ்தம்பித்து நிற்க வேண்டும்.
இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருந்த ஏதோ ஒரு வீட்டின் சமயலறை. அம்மாவிற்கு பின் அவள் சேலை முந்தானையைப் பிடித்து நின்று கொண்டிருக்கிறேன். அம்மா சப்பாத்தி செய்து கொண்டிருந்தார்.
நன்றாக நினைவிருக்கிறது அன்றைய பசி.
“கொஞ்சம் நேரம் அமைதியா இருப்பா” என்று அம்மா சொல்கிறார். குழந்தைமை பொங்க நான் அவளைப் பார்ப்பது ஓர் அழகான காட்சியாயிருக்கிறது. அவளும் என்னைப் பார்த்து சிரிக்கிறாள். இப்போது நான் எனது பின்னங் கழுத்தை இறுக்கிக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஒரு பலமான தும்பிக்கை போன்ற கை வந்து விழப்போகிறது. அம்மா சொன்னது உள்ளறையில் இருந்த அப்பாவிற்கு கேட்டிருக்க வேண்டும்.
இப்போது யோசித்துப் பார்த்தால் அடி பலமானதாக விழவில்லை என்பது எனக்கு அப்போதே தெரிந்தது. ஆனால் அடித்த அப்பாவின் ஆத்திரத்தை திருப்திப்படுத்தவும் அம்மாவிடமிருந்து சற்று கருணையைப் பெறவும் உந்திச்சென்று நான் அம்மாவின் காலடியில் போய் விழுந்தேன். நினைவை அசை போடும் மனது எதிர்வரவிருக்கும் நிகழ்வுகளை அறிந்த போதிலும் முதல் முறையைப்போல் உணர சில நுட்பங்களைக் கையாள்கிறது. அப்படி நான் விழுந்தபோது என்னையும் மீறி சற்று பலமாகவே தரையில் மோதிக்கொண்டேன். கீழுதடு தரையில் பட்டு ரத்தம் வெளிவரத் தொடங்கியது. தெரிந்தும் இப்போது நான் அதை மறந்தது போல் பாவனை செய்ததால் தான் இந்த நிகழ்வு திரும்பி பார்க்கும் ஏற்பை பெறுகிறது.
இதையெல்லாம் தெரிந்துகொண்டு என்ன செய்ய? பெட்டியைத் திறந்து தொலைத்தது தப்பென்பதை வாயைத் திறந்து சத்தமாக மூன்று முறை சொல்லிப் பார்த்தும் அது எவ்வளவு பெரிய தப்பென்பதை எனக்கு நானே உணர்த்த முடியவில்லை. அதிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வாசனை என் வீட்டின் அறைகள் ஒவ்வொன்றிலும் புகுந்துவிட்டிருந்தது. அப்பா உப்யோகித்த சார்லீன் செண்டின் மணம் என்னை எப்பொழுதுமே தொந்தரவு செய்து வந்திருக்கிறது.
அவர் இறந்தது எனக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்ததோ அதே அளவிற்கு அவரை மறப்பது என்பது பல மடங்கு கடினமானதாக இருந்தது. ஆரம்பத்தில் நான் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் என் வருகையை எதிர்பார்த்து அவர் தனது கட்டிலில் கையில் பிரம்புடன் காத்திருப்பார் என்கிற நினைவில் என் மனம் பதற்றம் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கிவிடும். பிறகு அலங்காரமற்று சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்த பிறகுதான் அவர் இறந்து விட்டார் என்கிற நினைப்பே வரும். அதைவிட பெரிய ஆசுவாசம் எனக்கு எப்போதும் கிடைத்ததில்லை. ஆனால் போகப்போக அப்பா இதய சிகிச்சைப் பெற்று வெற்றிகரமாக உயிரோடு திரும்பி வந்துவிட்டது போல் எனக்கு இரவுகளில் கனவுகள் வரத்தொடங்கின. பயந்தடித்துக் கொண்டு நடு ராத்திரியில் எழுந்து நான் அழத்தொடங்கி விடுவேன்.
என்னைச் சமாதானப்படுத்தும் அம்மாவின் மேல் நான் கோபம் கொள்வதற்கு காரணம் இருந்தது. கனவில் அவள் அப்பாவுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பாள். பிறகு வந்த நாட்களில் தூக்கமே இல்லாத இரவுகளாகக் கழியத் தொடங்கின.
என் மாமா என்னை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார்.
நாங்கள் இருந்த வீட்டை மாற்றினோம். அப்படியிருந்தும் எப்பொழுதும் என்னைச் சுற்றி யாரோ இருக்க வேண்டிய நிலைமை தான். என்மேல் இருந்த பாசத்தால் அம்மா, அப்பாவின் புகைப்படத்தை கூட வாரத்தில் ஒருநாள் மட்டும் வெளியே எடுத்து மாட்டி வைப்பார். அப்பாவின் துணிகளிலிருந்து வரும் சார்லீன் செண்டின் வாசனை என்னை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியது. அந்த வாசனை வீட்டின் எங்கோ ஒரு மூலையில் தேங்கியிருக்கும். அப்போதெல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் சாப்பிட்ட நாவற்பழங்களை அவ்வாசனையின் குமட்டலால் அம்மாவின் கையில் வாந்தி எடுத்து மாட்டிக்கொள்வேன்.
இது தொடர, மனதைக் கல்லாக்கிக்கொண்டு அம்மா, அப்பாவின் துணிகள் முதற்கொண்டு வெளியே வீசி எறிந்துவிட்டாள். வீட்டை மொத்தமாகக் கழுவி துடைத்தாள்.
நான் எப்போது முழுமையாக குணமடைந்தேன் என்று தெரியவில்லை ஆனால் அதற்கு பிறகு நன்றாக சாப்பிட்டேன். அந்த வாசனை உயிர்பெற்று இப்போது வரும்வரை எனக்கு அது மறந்தேவிட்டிருந்தது என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நல்லவேளையாக எனக்கு வாந்தி வரவில்லை. ஆனால் இந்த வாசனையை மறக்க நான் செயலிழக்கச் செய்த நரம்பு இப்போது மறுபடியும் ஆக்டிவேட் ஆகிவிட்டது. அதை செயலிழக்க செய்ய நான் ஏதாவது செய்தாக வேண்டும். எனக்காக எத்தனையோ விஷயங்களை தியாகம் செய்த அம்மா, அப்பாவின் இந்த செண்ட் பாட்டிலை மட்டும் மறைத்து வைத்து கொண்டிருக்கிறாள். அதற்காக நான் அவள் மேல் கோபப்பட முடியாது.
அதை எடுத்து சிவப்பு நிற அட்டைப்பெட்டியில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்த சார்லீன் என்ற பெயரை உச்சரித்தேன். இது பெண்கள் உபயோகிக்கும் பெர்ஃபியூம் என்று அப்பாவிற்கு தெரியாமல் இருந்ததா என்கிற குழப்பம் வந்தது. ஆனால் இதன் அட்டை வடிவமைப்பில் இருக்கும் பெண்ணைப் பார்க்கும் யாருக்கும் இது பெண்கள் உபயோகிக்கும் பொருள் என்பது தெரிந்துவிடும். அதில் தங்க நிற முடிகொண்ட ஒரு வெள்ளைக்காரப் பெண் கண்கள் சொருகிய நிலையில் தனது கழுத்தை தானே நெறித்துக்கொண்டு பரவசமடைகிற ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அவள் நகங்கள் அவள் கழுத்து சதையை அழுத்துவதை நான் சிறுவயதில் பலமணி நேரங்கள் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கழுத்திலிருந்து ரத்தம் வழிவது போல் தோன்றும். என் எல்லா கனவுகளிலும் சார்லீன் ஏதோ ஓர் உருவத்தில் வந்துகொண்டே தான் இருந்திருக்கிறாள்.
அப்பா என்னையும் அம்மாவையும் மாறி மாறி அடிக்க.. கட்டிலில் புகை பிடித்தவாறு சார்லீன் நாடகத்தனமாக சத்தம்போட்டுச் சிரித்துக் கொண்டிருப்பாள். விளையாடிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து என் அம்மாவை கொலை செய்யப் போவதாக என் காதுகளில் கிசுகிசுப்பாள். காலை எழுந்திருக்கும்போது வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பா தனது சட்டையிலும் கழுத்திலும் சார்லீனை பூசிக்கொள்ளும்போது அவள் கழுத்தில் இருந்து வழியும் இரத்தத்தின் மணமாகவே அது இருக்கும். இந்தக் கனவுகளை கட்டுப்படுத்த நான் சில உத்திகளைக் கண்டுபிடித்தேன்.
சார்லீன் என் அம்மாவை பின்னிருந்து கழுத்தை நெறித்துக் கொல்ல வரும்பொழுது என் அம்மா தோசைக்கல்லை எடுத்து அவள் மூக்கிலும் வாயிலுமாக மடார் மடார் என அடித்து விரட்டுவதாக என் கனவுகளை நான் கட்டமைத்து கொள்வேன். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவள் அடிவிழாமல் தப்பிப்பதற்கு சில வழிகளைக் கண்டுபிடித்து வந்தாள். ஒருநாள் அப்பாவின் ஹெல்மெட்டை கூட மாட்டிக்கொண்டாள்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு இதெல்லாம் எதற்கு நினைவிற்கு வரவேண்டும். இவற்றைக் கொண்டு என்ன முடிவுக்கு வருவது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று தெளிவாகிவிட வாய்ப்பிருக்கிறது. ஆக மொத்தத்தில் என் அப்பாவை மயக்கிய சார்லீன் என்னும் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற உண்மையை நான் இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன். இல்லையென்றால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதெல்லாம் எதற்காக என் நினைவிற்கு வரவேண்டும். அப்பா பல நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வந்ததற்கு காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அம்மாவிற்கு முன்பே அப்பா இறந்துவிட்டிருந்தார். இல்லையென்றால் அம்மாவின் இறப்பில் ஏதேனும் சந்தேகப்படும்படியான நிகழ்விருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கலாம்.
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பதில் கிடைக்காவிட்டால் என்னால் நாளை அலுவலகத்திற்கு சென்று நிம்மதியாக வேலை செய்ய முடியாது. லீனாவுடன் சகஜமாக பேச முடியாது. அதனால் இவற்றிற்கு எல்லாம் நான் நம்பும்படியான அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என் அப்பாவை மயக்கி என்னையும் என் அம்மாவையும் கொலை செய்ய வைத்து என் அப்பாவிடம் இருந்த சிறு பணத்தையும் கைப்பற்றி அவரை ஏமாற்றும் ஆசைக்கொண்ட சார்லீன் என்கிற பெண் இருந்திருக்கிறாள். தனது ஆசைகள் நிறைவேறாமலே அவள் இறந்தும் போயிருப்பாள். திருப்தியடையாத அவள் ஆன்மாதான் என்னை இந்தப் பெட்டியைத் திறக்க வைத்தது. நான் என் காதலிக்கு ஏதோ பரிசைத் தேடத்தான் இதைத் திறந்தேன் இல்லையா. அது என்னவென்றுகூட என்னால் இப்போது நினைவுப்படுத்த முடியவில்லை. அதை நினைவுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. திடீரென்று என்னை யாரோ பின்னிருந்து தொட்டதும் எனக்கு ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.
அது என் லீனா தான்.
முன் வாசல் கதவை எவ்வளவோ தட்டியும் நான் திறக்காததால் பின்கதவு வழியாக உள்ளே வந்திருந்தாள். என்னை தூங்கிவிட்டேன் என நினைத்தவள், நான் நடுவீட்டில் நின்றிருந்தும் கதவைத் திறக்காததால் என்மேல் கோபம் கொண்டு திட்டத் தொடங்கினாள். அவள் பேச்சை திசைமாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன்.
திட்டிக் கொண்டிருந்தவள், என் கையில் இருந்த செண்ட் பாட்டிலைப் பார்த்து என்னிடமிருந்து பிடுங்கி அதைத் திறந்து தனது கழுத்திலும் மணிக்கட்டிலும் தடவிக் கொண்டாள்.
என் அப்பாவை ஏமாற்றி எங்களைப் பழிவாங்க நினைத்து எமாற்றமடைந்த சார்லீன் இப்போது என் வாழ்க்கையில் நுழைந்து என் காதலியை என் கைகளால் கொலை செய்யத் தூண்டுவதற்காக மீண்டும் வந்திருக்கிறாள் என்பதாக இதையெல்லாம் நான் புரிந்து கொள்கிறேன். ஹ்ம்ம்ம்ம்ம்…
***
ராகேஷ் தாரா
போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திரைத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். சில முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மின்னஞ்சல்: [email protected]