Monday, September 9, 2024
Homesliderசாபம் பற்றி ஆராய்ந்தவனின் குறிப்புகள்

சாபம் பற்றி ஆராய்ந்தவனின் குறிப்புகள்

மதியழகன்

சாபம் என்பது வாழ்வின் தொடக்கம்

சாபம் என்ற சொல் தன்னைப் பலநாட்களாகத் தொந்தரவு செய்வதை அவர் மனது உணர்ந்தே இருந்தது. ஆனால் சாபம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் அந்த நொடியில் தனக்குள் ஏற்படும் இருளுக்கு நீண்ட தொடர்பு இருக்க வேண்டும் என்று நம்ப ஆரம்பித்தார். தன்னுடைய ஆராய்ச்சிக்கான தலைப்பாக சாபத்தை எடுத்துக் கொண்டவர், இதற்காக தன்னுடன் பணி செய்பவர்களிடம் பலவித பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்கள் எல்லோரும் இவருக்கு எதோ பித்துப் பிடித்துவிட்டது என்று நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் தன்னுடைய தலைப்பில் எந்தவிதப் பிரச்சனை இல்லை எனவும், தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்று உறுதியாகச் சொன்னார். தான் அடுத்த மூன்றுமாத காலம் தூங்கச் செல்வதாகவும், விழித்தவுடன் அதற்கான சிறிய விடை கிடைக்குமென்று உறுதியாகச் சொன்னவர், தூங்குவதற்காகத் தன் அறையை ஒளியின் சிறுகீற்று கூட நுழைந்துவிடாத அளவுக்கு முழுவதும் கருப்பு நிற வண்ணத்தால் அலங்கரித்தார். தலையணை போர்வை என ஒவ்வொன்றையும் கருப்பு வண்ணத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன்னுடைய அருகில் நாட்குறிப்பேடு, பேனா போன்றவற்றையும் வைத்துக் கொண்டார். தூங்கத் தொடங்கிய முதல் இரண்டு நாள்கள் மிகவும் கடினமானதாகவும், குழப்பமானதாகவும் இருந்தது. தூங்குவது என்பது அவ்வளவு கடினமானதா? எவ்வளவு நாட்கள் எந்தவித வேலையும் செய்யாமல் இருந்திருக்கிறோம் ஆனால் தற்போது தூங்குவது என்பது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. ஆராய்ச்சியினால் ஏற்பட்ட குழப்பமா? அல்லதுதான் தொடக்கூடாத ஏதேனும் விஷயத்தை மூளைக்குள் ஏற்றிக் கொண்டோமா?. என்ன நிகழ்ந்தாலும் தன்னுடைய ஆராய்ச்சியின் விதையை எந்த நொடியிலும் நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எல்லா நிகழ்வுகளுக்கும் நிச்சயம் ஒரு தொடக்கம் இருந்தாக வேண்டும். எனவே தன்னுடைய முதல் கேள்வியாக சாபத்தின் தொடக்கம் எங்கு நிகழ்கிறது என தன்னுடயை நாட்குறிப்பில் குறித்துக் கொண்டார். அதற்கான விடைகளை எவ்வளவு வழிகளில் யோசித்துப் பார்த்தாலும் அது தன்னைவிட்டு விலக்கிக் கொண்டே சென்றது. ஆனால் இந்த சாபம் என்கிற வார்த்தை தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை வகித்திருக்கிறது என்பதில் மட்டும் அவருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வளவு குழப்பங்களும் வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டவரின் கண்களுக்குள் சிவப்புநிறம் அலைந்து கொண்டிருந்தது. எப்படியாவது அதைக் கருப்பு நிறமாக மாற்றிவிட வேண்டும் என்று அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போக கண்ணை திறந்து பார்க்க, தூரத்தில் எங்கோ கடல் அலையடிக்கும் சத்தம் கேட்டது. அவருக்குள் எதோ உணர்வு ஏற்பட, சிறுவயதில் தன்னுடைய அப்பா கூறிய அந்தக் கதை அவர் நினைவுகளிலிருந்து வெளியே கசிய ஆரம்பித்தது.

*

மேலுலகத்தில் ஒருநாள் சாபத்தின் தலைவனுக்கும், வரத்தின் தலைவனுக்கும் சாபத்தையும், வரத்தையும் வழங்குவது யார்? அதை ஏற்றுக்கொள்வது யார்? என்பது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. வானத்திலிருந்த அத்தனை தேவாதி தேவர்களும், அரக்கர்களும் அவர்களிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வை எட்டமுடியவில்லை. இவ்வளவு குழப்பத்திற்கும் இடையில் அந்தக் கூட்டத்தின் நடுவே மெல்லிய உருவம் கொண்ட ஒருவன் உள்ளே நுழைந்தான். முதலில் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று யோசித்தவனாக சாபத்தின் தலைவன் அருகில் சென்று,

“சாபத்தின் தலைவனே ஏன் உங்களுக்குஇவ்வளவு பெரிய குழப்பங்கள், சாபம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைக்கிறேன்.”

“சாபம்வாழ்வின் ஒரு பகுதி என்பதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை மானிடனே. ஆனால் அதனளவு எவ்வளவு என்பதில்தான் இவ்வளவு குழப்பமும்.”

“நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் வரத்தின் தலைவனுக்கு எங்கே அளவுக்கு அதிகமாக சாபத்தினை வழங்கியும், ஏற்றும் நான் அவரின் நிலையை விட உயர்ந்துவிடுவேனோ என்று ஒரு குழப்பம். அதனால் இங்கு அவன் ஒரு கலகத்தினை உருவாக்கிவிட்டு நகர்ந்துவிட்டான். இவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தீர்ப்பது என்பது மிகப்பெரிய வேலையாக எனக்கு இருக்கிறது. நான் சாபத்தின் விதைகளை சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு நொடியாக வளர்த்து வந்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியிலும் நான் அடைந்த அதிர்வுகளை உனக்கு விளக்குவது என்பது என்னால் முடியாத காரியம். ஆனால் அதன் வேர்களின் பாய்ச்சலை விரும்பாத வரத்தின் தலைவன் அதனை வெட்டிவிடத் துடிக்கிறான். எங்கு சாபத்தின் வேர்கள் அதிகமாகி தன்னை மக்கள் மறந்துவிடுவார்களோ என்று நினைக்கிறான். அதனால்தான் இவ்வளவு குழப்பம்.”

”சரி,ஒரு நிமிடம் பொறுங்கள் நான் அவரிடம் சென்று பேசி வருகிறேன்”, என்று சொல்லி அருகிலிருந்த வரத்தின் தலைவனருகே சென்று, “வரத்தின் தலைவனே ஏன் உங்களுக்கு இவ்வளவு பதட்டம். சற்று பொறுமையாக இந்த விஷயங்களை நாம் ஏன் பேசி தீர்க்கக்கூடாது.”

“பேசி தீர்ப்பதற்கு இன்று நேற்று பிரச்சனை இல்லை மானிடனே. இது காலம் தோறும் எங்களுக்குள் இருந்து வரும் மிகப்பெரிய போர். பாரதத்தின் மகாபாரதப்போரை விட மிகவும் பழமையானது, இதற்கான தீர்வு என்பது எங்களில் ஒருவர் இறப்பில் மட்டுமே சாத்தியமாகும். சாத்தியத்தின் எல்லா பக்கங்களிலும் அது மட்டும்தான் தீர்வாக இருக்கிறது. நான் வேறேதும் விடைகள் இருக்கிறதா என்று இந்த உலகத்தின் அறிஞர்களிடமும், முதியோர்களிடம் கலந்துரையாடி விட்டேன், அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான், நான் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரே வழி சாபத்தின் தலைவனைக் கொல்வது என்பதுதான். ஆனால் எனக்கு இருக்கும் குழப்பம் என்பது வரத்தின் தலைவனான நான் ஒருவனை கொலை செய்யும்பட்சத்தில், சாபத்தின் பக்கத்தில் சென்று விடுவேன் என்பதுதான்., அதனை தவிர்ப்பது என்பதுதான் இன்று என் முன்னால் மிகப்பெரிய சவால். அப்பொழுதுதான் எனக்கு ஒன்று தோன்றியது இந்த உலகில் சாபத்தின் தலைவனாவதற்கு அனைவருக்கும் அடியாழத்தில் ஒரு ஆசை இருக்கிறது. ”

“இவ்வளவு புரிந்த நீங்கள் ஏன் இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ளக் கூடாது.
தீர்வுகள் எல்லாமே எப்போதும் மீண்டும் வேறோரு துவக்கத்தை ஆரம்பித்துவிடும் என்பது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.”

“நீங்கள் சொல்ல வருவது?”

“ஆம். நான் அவனைக் கொன்றால் நிச்சயம் நானும் சாபத்தின் தலைவனாக முடிசூடிக் கொள்வேன். அந்த உலகம் சாபம் கொடுப்பவர்களால் சூழப்படும். ஏன் என்றால் வரத்தைத் தருவதை விட சாபத்தினைக் கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதும் எளிதான விஷயம். சாபத்தினை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அடுத்தவர்கள் பற்றி நாம் எந்தக் கவலைகளும் கொள்ள வேண்டியதில்லை. தங்களின் சாபக்கணக்கை அதிகரிப்பது மட்டும் அவர்கள் முன்னால் உள்ள சவால். வரத்தினை கொடுப்பது என்பது ஒவ்வொரு மனிதனையும் மிகவும் பராமரிப்புது ஆகும். அந்த பராமரிப்பது மிகவும் பாரமானதும் கூட. அதனால் நான் ஒரு முடிவு செய்துவிட்டேன்.”

“என்ன முடிவு?”

“என்னை நானே கொலை செய்துகொள்ளப்போகிறேன்..”

“ஏன்?”

“சாபத்தின் தலைவனாக வாழ்வதென்பது எவ்வளவு கஷ்டம் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய தலையில் ஓடும் எண்ணங்கள் கல்லில் இருந்து மாபெரும் மலையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் பாரங்களை தாங்க என்னால் முடியவில்லை.”

“தயவுசெய்து அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். நான் அவரிடம் பேசிவருகிறேன்” என்று அவன் சாபத்தின் தலைவனை நோக்கி ஓடினான்.

வரத்தின் தலைவன் சொன்னவற்றையெல்லாம் விவரித்துச் சொல்ல சாபத்தின் தலைவன் கடகடவென சிரிக்க ஆரம்பித்தார். அவன் மிகவும் குழம்பிப்போய்,

“ஏன் நீங்கள் இப்போது சிரிக்கிறீர்கள்?”

“வரத்தின் தலைவனுக்கே இவ்வளவு குழப்பமென்றால் அவர் வரம் கொடுத்த மனிதர்களை நினைத்தேன். அவனை விட நான் குழம்பிப்போய்கிடக்கிறேன். வரத்தை கொடுப்பது அவ்வளவு எளிதுதான். ஆனால் சாபத்தை ஏற்றுக்கொள்வது என்பது குத்திய முள் காலிலிருந்து வெளிவராமல் நடக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னுடைய இருப்பை உறுத்திக்கொண்டிருப்பதைப் போன்றது. பனையோலையின் குருத்துகள் கீறியது போன்று அதன் எரிச்சல் விடுவதில்லை. சாபத்தினை கொடுப்பது என்பது ஒருவழியில் நிம்மதிதான் என்றாலும் அதனால் மனிதன் அடையும் துன்பங்களையும், கொடூரங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரின் சாபத்திலிருந்தும் ஒரு நுண்ணிய கிருமி என்மேல் ஒட்டிக்கொண்டு என் உடலை ரணப்படுத்துகிறது. நீ அதை கொஞ்சம் பாரேன் ”என்று தன் அங்கவஸ்திரங்களை எல்லாம் திறந்து காண்பிக்க அவர் உடலெல்லாம் செதில்செதிலாக பாம்புச்சட்டையின் மேல்புறத்தோல் போல் இருந்தது. அதனைப் பார்த்தவன் சற்று அதிர்ச்சியடைந்து கீழே விழப்போக, சாபத்தின் தலைவன் அவனைக் கைத்தாங்கலாக பிடித்து நிறுத்தினார். ஏறக்குறைய மயங்கிய நிலையில் இருந்தவனை தன்னுடைய ஆசனத்தின் அருகில் உட்காரவைத்து, அவன் முகத்தில் தண்ணீரை தெளித்தார். சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தவன் எதிரே சாபத்தின் தலைவன் முழு ஆடையுடுத்தி, சந்தன மணம் கமழ நின்று கொண்டிருந்தார். அவனைப் பார்த்து,

“அதன் புண்களைப் பார்த்த உனக்கே இப்படியென்றால், அதனை சுமந்து திரியும் என்நிலையை சற்றேனும் யோசித்துப்பார். ”

“இப்பொழுது புரிகிறது தங்களின் வேதனை. நீங்கள் இப்போது என்ன முடிவெடுத்துள்ளீர்கள்?”

“என்னை நானே கொலை செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்.”

“நீங்களுமா?”

“ஆமாம் அது மட்டும்தான் இந்த துன்பத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கான ஒரே வழி.
தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்ளாமல் இந்த உலகத்தின் துன்பங்களில் இருந்து நாம் வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லையா?”

“இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்காக ஒரு நிமிடம் வரத்தின் தலைவனை இங்கு அழைத்து வருகிறாயா?”

ஆச்சரியம் அடைந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பி ஓட்டமும் நடையுமாக வரத்தின் தலைவனிடம் சென்று, சாபத்தின் தலைவன் சொன்னவற்றை எல்லாம் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு வந்தான். வரத்தின் தலைவனுக்கு சாபத்தின் தலைவனைப் பார்த்ததும் அவரறியாமல் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. சாபத்தின் தலைவனுக்கும் தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தோட இருவரும் அருகருகே நின்று ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக் கொண்டே நின்றனர்.

இருவரின் தூதுவனுக்கோ எதுவுமே புரியாமல் மாறி மாறி இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் கரைந்தோடியது. மூவரும் முக்கோணத்தில் மூன்று பாகங்களாய் நின்று ஒரு வார்த்தையும் பேசாமல் அழுதுகொண்டே இருக்க, அவர்களைச் சுற்றி மெல்ல ஒரு குளம் உருவாக ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் என அந்த அழுகை கூடிக்கொண்டே சென்று முடிவிலா பல யுகங்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. தேவாதி தேவர்களும், அரக்கர்களும் அதன் கண்ணீரை அடக்கமுடியாமல் தாங்களும் கண்ணீர் விட அங்கு மாபெரும் கடல் ஒன்று உருவாக ஆரம்பித்தது. அதனால்தால் கடற்கரைகள் எல்லாம் பாவத்தைப் போக்கும் இடமாகவும், வரத்தை அளிக்கும் இடமாகவும் இருக்கின்றது என்று சொல்லி அப்பா அந்த கதையை முடித்தார்.

*

உணர்ச்சிப் பெருக்கெடுத்தவராக தன்னுடய அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் ஏற்றியவர், அந்த கதையை ஒருவரி கூட சிதறாமல் தன்னுடைய நோட்டில் எழுதிக்கொண்டார். இந்த கதைக்குள்தான் தன்னுடைய ஆராய்ச்சிக்கான விடை இருக்கிறது என்று அவருக்கு தோன்றியது. தன் ஆராய்ச்சிக்கான முதல் விதை மிகவும் நன்றாகவே விழுந்திருப்பதாக தோன்ற கண்ணை மூடித்தூங்க ஆரம்பித்தார். மீண்டும் அவர் விழிப்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு நாட்களுக்கு இடையிலும் ஒரு கவிதை அவர் கனவில் வந்துகொண்டே இருந்தது. அந்த கவிதையை தன்னுடைய முகப்புத்தகப் பதிவுகளில் என்றோ பார்த்த ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த கவிதையை கண்டுபிடிக்கும் பட்சத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக அது இருக்கும் என்று நினைத்தார். உடனே தன்னுடைய கணினியை இயக்கி முகப்புத்தகத்தில் இதுவரை வந்த எல்லா பதிவுகளையும் தேடி த் துழாவினார். ஒரு மணிநேரத் தேடலுக்குப் பிறகு அந்த கவிதை அவர் கண்ணில் பட்டது.

சாபத்தைத் தழுவிக்கொண்டவனின்
பாதங்கள்
நிலத்தை ஒவ்வொரு சுவடு வைக்கையிலும்
எரியச்செய்கின்றன.

            -பாலைநிலவன்

இதுதான்.. இதுவேதான் தான் தேடிக்கொண்டிருந்த அந்த நான்கு வரிகள். அவற்றினை தன்னுடைய நோட்டில் எழுதிக்கொண்டவர் ஒவ்வொரு வரிக்கும் எதேனும் மறைபொருள் இருக்கிறதா என யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி ஏதேனும் தட்டுப்படவில்லை ஆனால் அந்த ஒற்றை வரி அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. “சாபத்தை தழுவிக்கொண்டவன்”. உண்மையில் இந்த நூற்றாண்டில் சாபத்தை ஏந்திக்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி இருக்க எதேனும் வாய்ப்பிருக்குமா? என்று யோசித்தவர் உடனே தன்னுடைய முகப்புத்தகத்தில் “சாபத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த மின்னஞ்சலுக்கு உங்களின் சாபத்தினை பற்றிய விபரத்தினை விலாவரியாக எழுதி அனுப்பவும்” என்று இதற்காக உருவாக்கிய மின்னஞ்சலை சேர்த்து அனுப்பினார். அவர் அனுப்பிய அந்த தகவலுக்கு முகப்புத்தகத்தில் எழுந்த கிண்டல்களும் கேலிகளும் அவருடைய தூக்கத்தை மீண்டும் பறித்துக்கொண்டது. தன்னுடன் பணிபுரிவர்களின் கேலிக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் இப்போது தான் இந்நகரத்தின் கேலிக்கும் ஆளானதை நினைத்து அவருக்கு சங்கடமாக இருந்தது. சோர்வின் உச்சத்தில் இருந்தவர்க்கு ஆச்சரியமாக மின்னஞ்சலில் சாபம் பெற்றவர்கள் அனுப்பிய குறிப்பு வந்துகொண்டே இருந்தது. அவர் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பதில்வினை இருக்க, தன்னுடைய கவலைகளை எல்லாம் மறந்து அவற்றை வாசிக்க ஆரம்பித்தார். அவைகள் பெரும்பாலும் கல்யாணம் ஆகாதவர்களின் புலம்பல்களும், ஜோசியர்களின் ஏமாற்றுத்தனத்தினைப் பற்றிய கதைகளாகவும் நகர்ந்துகொண்டே சென்றது. ஏன்தான் இப்படி ஒரு அஞ்சலை கொடுத்தோம் என நினைத்துக் கொள்ளுமளவுக்கு மொத்தக் கதைகளாகவும் அவை மட்டுமே இருந்தது. மொத்தவற்றையும் தேர்வு செய்தவர் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டார். பின் தன் அனுபவத்திலிருந்தும், கேட்ட கதைகளிலிருந்தும் அவற்றை எடுத்து ஒரு தொகுப்பாக தன் நாட்குறிப்பில் எழுதிக்கொண்டார்.

*

நான் கேட்ட புராணங்கள் முழுக்க சாபம் ஏறியவர்கள் பாறைகளாகவோ, மரமாகவோ அல்லது வேறு உருவிலோ அலைகின்றனர், அதற்கான ஆதிக்காரணம் என எவ்வளவோ நான் யோசித்துப்பார்த்தும் அதற்கான காரணமாக நான் கண்டடைந்தவைகள் சாபம் பெற்றவர்கள் அனைவரும் மீண்டும் தன் இயற்கை மனித நிலைக்கு (குகை மனிதன்) சென்றடைய விரும்புகின்றார்கள். அந்த நிலை என்பது உண்மையில் நன்மையா? தீமையா? அல்லது நம்மை நாம் சமாதானபடுத்திக்கொள்ளும் உணர்வு நிலையா?
சாபத்தின் முதற்புள்ளி எங்கு துவங்குகிறது? அது நம்முடைய குழந்தைப்பருவமாகத்தான் இருக்க வேண்டும். உடலின் மச்சங்கள் ஏன் சாபம் ஏறியதற்கான விளக்கமாக இருக்கக்கூடாது? மச்சங்களின் வடிவங்கள் நம் சாபத்தின் அளவுகோலா? ஏன் மச்சங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை? மச்சங்கள்தான் உண்மையில் சாபத்தின் விளக்கம் எனில் அதன் தொடக்கம் இரவு உடலை சேரும் இரு உயிர்களில் ஒரு உயிர் ஏற்கனவே சாபத்தின் சுவடுகளை தன்னுள் உள்ளே ஏற்றிக்கொண்டவர்களா? ஒவ்வொரு குழந்தையின் முதல் இதயத்துடிப்பிற்கு முன்னால் சாபம்தான் துடிக்க ஆரம்பிக்கிறதா? ஒவ்வொரு விந்தின் தொடக்கமும் அறிவியலின் குரோமசோம்களை தாண்டி கண்ணுக்குத் தெரியாத சாபங்களை சுமந்து செல்கிறதா? எல்லா குழந்தைகளும் சாபத்துடன்தான் பிறக்கிறதா?

*

அறிவியல் உலகில் நிருபணவாதம் மட்டுமே வெற்றியாக ஏற்றுக்கொள்ளப்படும். சாபத்தினைப் பற்றிய தன் ஆராய்ச்சிகள் எல்லாம் வெறும் குறிப்புகளாக குவிவதை கண்டவர்க்கு தான் அடுத்த செய்யவேண்டிய வேலை என்ன என குழம்பிக் கொண்டிருக்கையில் அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த சிறுகுறிப்பு “நானும் தங்களைப்போல் ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகிறேன் ஆனால் குறிப்புகளால் அல்ல ஒரு மனித உடலுடன்” என்று இருக்க, தன்பெயர் தர்மன் என்றும் அதற்கு கீழே அவருடைய அலைபேசி எண்ணும் இருந்தது. உடனே தன்னுடைய போனிலிருந்து அவருக்கு அழைக்க,

“வணக்கம் வசுமித்… உங்கள் அழைப்பிற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.”

“வணக்கம் தர்மன், உங்கள் கடிதம் போன்ற ஒன்றிற்காகத்தான் நானும் காத்திருந்தேன். எப்பொழுது இந்த ஆராய்ச்சியை நீங்கள் துவக்கினீர்கள்? எந்த அறிவியல் கோட்பாட்டில் உங்கள் ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.”

“வசுமித். நான் செய்வது எந்த அறிவியல் ஆராய்ச்சிக்குள்ளும் வராது. நான் செய்வது என் உள்ளுணர்வில் மேல் நின்று. அதை நிரூபிக்க அறிவியலும் தேவையில்லை. என்னுடைய உணர்வே போதுமானது. நான் இந்த ஆராய்ச்சியை தொடங்கிய கதை உங்களுக்கு தேவைப்படுகிறதா?”

“ஆம்”.

எல்லா மனிதர்களின் நாட்களினைப் போலவே என்னுடைய நாட்களும் ஒவ்வொன்றாக கழிந்து கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் மாலை நான் வேலை முடித்துக்கொண்டு வரும்போது ரோட்டில் ஒருவன் நின்று, “அய்யா நான் சாபம் பெற்றவன். என்னை எப்படியாவது அந்த சாபத்திலிருந்து விடுவியுங்கள்”, என்று தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டிருந்தான். மக்களுக்கெல்லாம் அவன் வேடிக்கையான பொருளாக நின்று கொண்டிருக்க., நானும் அவனை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

ஆனால் அன்று இரவு முழுவதும் என்னால் துளி அளவுகூட உறங்க முடியவில்லை. அவனின் அலறலும், சாபம் என்கிற வார்த்தையும் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நான் எந்த பக்கமும் திரும்பினாலும் அவன் வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மறுநாள் காலை விடிந்ததுமாக அவன் நின்ற இடத்திற்கு சென்றேன். அவன் அதே இடத்தில் நின்று அதே வார்த்தைகளை திரும்பத்திரும்ப உச்சரித்துக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் சென்று உன்னுடைய சாபங்களை நான் விடுவிக்கிறேன் என்னுடன் வருகிறாயா? என்று கேட்டேன். அவன் பதிலேதும் சொல்லாமல் என் பின்னால் நடக்க ஆரம்பித்தான். என்னுடைய அறைக்கு அழைத்து வந்து அவனுக்கு உணவளித்துவிட்டு இன்று ஓருநாள் நன்றாக ஓய்வெடுத்துக்கொள் நாளை காலை முதல் நாம் தொடங்கிவிடலாம்” என்று சொல்லிவிட்டுப் பணிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் அலுவலகத்தில் ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியவில்லை. உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அவன் வீட்டின் ஒரு மூலையில் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் என்னால் ஒரு அழுத்தத்தை உணர முடிந்தது. அது நிச்சயம் சாபத்தினை வாங்கியவனின் அழுத்தம் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனே என்னுடைய அலுவலகத்திற்கு போன்செய்து மூன்றுமாத கால ஓய்வு வேண்டும் என்று சொல்லிவிட்டு, ஆராய்ச்சியைச் தொடங்கினேன். ஆராய்ச்சி என்றால் அவன் உடலைப் பரிசோதிப்பதோ, இல்லை அவனிடம் கேள்விகளைக் கேட்பதோ அல்லாமல் அவன் அருகே நான் உட்கார்ந்து கொண்டேன். ஒருவாரம் அவன் எந்த வார்த்தையும் பேசவில்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டான், நன்றாக தூங்கினான். ஒரு வாரம் கழித்து தன்னுடைய உடலுக்குள் இருந்து வேர் ஒன்றினை எடுத்து என் கையில் வைத்தான். பார்ப்பதற்கு விரல் அளவுகூட இல்லாத அந்த வேரை நான் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல அது என்னை அதனுள் இழுத்துக்கொண்டு விட்டது. உள்ளே செல்லச்செல்ல பல சாத்தியப்பாடுகளும், பலவித வழிகளும் திறந்து கொண்டே இருக்க, என்னுடைய ஆராய்ச்சிக்கான அடிப்படையை நான் புரிந்து கொண்டேன். அப்போதுதான் அவனது கண் இமைகள் மூடவே இல்லை என்பதும், அவன் தூங்கும்போது கூட இமைகள் திறந்தேதான் இருந்தது என்பதையும் கவனித்தேன். அவன் கண்ணை மூடும் பட்சத்தில் நம் இருவரின் ஆராய்ச்சிக்குமான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். அவனிடம் இருந்து நான் எடுத்த வேர்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் வசுமித். அந்த வேரில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்து பார்க்க வேண்டும்.

“நாளை காலை உங்கள் இடத்திற்கு வருகிறேன் தர்மன். உங்கள் அட்ரஸ்ஸை ஒரு எஸ்.எம்.எஸ் செய்துவிடுங்கள்.”

“இப்பொழுதே அனுப்பிவிடுகிறேன். நன்றி வசுமித். நாளை சந்திப்போம்.”

மறுநாள் தர்மன் அனுப்பிய முகவரிக்குச் சென்று சேர்ந்தார் வசுமித். அவர் கற்பனையிலிருந்த எந்த வடிவத்திற்குள்ளும் அந்த வீடு இடம்பெறவில்லை. மிகவும் பிரமாண்டமான மாளிகையும், வாசற்கதவுகள் எல்லாம் தானியங்கி பொருத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் கடந்து வீட்டின் உள்ளே செல்ல, தர்மன் எதிரே நின்றுக்கொண்டிருந்தார். இருவரும் கைகுலுக்கிக் கொள்ள மாடிப்படியேறி அவனைப் பார்த்தனர். அவன் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாதவனாக, கண் இமைகளை மூடாதவனாக உட்கார்ந்து கொண்டிருந்தான். வசுமித் அவன் அருகே சென்று அவன் கையைப் பிடித்துப் பார்க்க அது லேசாக துடித்துக் கொண்டிருந்தது. பின் தர்மனைப் பார்த்து, “நான் இவரை என்னுடைய ஆராய்ச்சிக்கு அழைத்துக் கொண்டு செல்லட்டுமா?”, என்று கேட்க, தனக்கு அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், விடைதான் நமக்கு முக்கியம் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

தன்னுடைய வீட்டின் ஒரு அறையை சகல வசதிகளுடன் அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அவனை காலையிலிருந்து மாலை வரை பார்த்துக்கொண்டே இருப்பது மட்டுமே அவருக்கு வேலையாய் இருந்தது. அவ்வப்போது தர்மனும் வந்து பார்த்து செல்வார். சில வாரங்கள் கழித்தபின் அவருக்கு தருமன் கூறிய வேரின் ஞாபகம் வர, அவனை நெருங்கி வேர் இருக்கிறதா எனக் கேட்டார். தன் வயிற்றுக்கு அடியிலிருந்து மற்றொரு வேரை அவருக்கு எடுத்துக் கொடுத்தான். இது மட்டும் அவனுக்கு எப்படி புரிகிறது என குழப்பமடைந்தவராக தர்மனுக்கு போன் செய்து நடந்தவற்றைச் சொல்ல, “அது மட்டும் அவனுக்கு புரிகிறது. அந்த வேர்தான் அவனின் அடித்தளம். அந்த வேரை நாம் ஆராயும் பட்சத்தில் நிச்சயம் அவன் யார் என்று கண்டுபிடித்து விடலாம்”, என்று தர்மன் சொல்ல, நம்பிக்கை அடைந்தவராக தன்னுடைய அறைக்கு அந்த வேரை எடுத்து வந்தார். உடனே தன்னுடன் பணிபுரியும் நண்பரிடமிருந்து நுண்ணோக்கி கருவியை வாங்கி வந்து வேரை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.

*
சாபத்தின் வேர்களை கண்டுபிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை துவக்கினார்.
வேரிலிருந்து கம்பளம் ஒன்று உருவாகி அதன் நூல்கள் ஒவ்வொன்றாக பிரிந்து மற்றொரு கம்பளமாக விரிந்து பறந்து செல்ல, அதில் தானும் ஒரு கம்பளத்தில் ஏறிக்கொண்டு பறந்து சென்றார். வேரின் நுனிகள் தெரிந்ததும் அவரை அறியாமல் மனம் சந்தோசம் அடைய, அதன் அருகில் சென்றார். அருகில் சென்று பார்த்ததும் தான் தெரிந்தது பல ஆயிரம் வேர்களின் சற்று பெரிய வேர் அது என்று. வேர்கள் கணக்கிடமுடியாத அளவிலானவையா? நிச்சயம் கணக்கிடமுடியும் என்று நினைத்தவறாக அந்த பெரிய வேரினை நோக்கி தன் பயணத்தை துவக்கினார். பயணத்தின் வேர்கள் உள்ளே செல்லச்செல்ல அதன் முடிச்சுகள் ஒவ்வொன்றாக இறுகிக்கொண்டு வருவதையும், இறுகிய முடிச்சுகள் வெடித்துச் சிதற அதிலிருந்து மேலும் பல வேர்கள் கிளம்புவதையும் அறிந்தார். இதற்கு மேல் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்தவராக அங்கிருந்து கிளம்பினார்.

ஆனால் அவர் அங்கிருந்து கிளம்பிய நேரமும் அவர் கம்பளத்தின் நூல் ஒன்று வேரொன்றில் சிக்கிக் கொண்டதும் நடந்தது. அதன் வேர்கள் அந்தக் கம்பளத்தை இழுத்துக்கொண்டு செல்ல அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் மேலும் அதன் பாதையை பின்தொடர ஆரம்பித்தார். உள்ளே செல்லச் செல்ல காற்றில் ஆடிக்கொண்டிருந்த வேர்களை பார்க்க ஆரம்பித்தார். பாலே நடனத்தின் அசைவுகளை ஒத்த அதன் நடனம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அதன் அசைவுகளில் மர்மம் ஒன்றிருப்பதை உணர்ந்தார். கீழே செல்ல அதன் வேர்களின் நடனம் முற்றிலும் குறைந்திருப்பதும். வேர்கள் இறுகிக்கொண்டு வருவதும் அவருக்கு புரிய ஆரம்பித்தது. உள்ளே செல்லச்செல்ல இறுகிய அதன் தடிமன் சுருங்கிக்கொண்டு வருவது அவர் நினைத்ததை விடவும் மிக மெல்லியதாக இருந்தது. அவர் ஏறக்குறைய அந்த வேரின் தொடக்கத்தை நெருங்கிவிட்டார் என்பதை உள்மனம் அறிவித்தது. வேர்கள் ஒரு நூல் அளவுக்கு மட்டுமே இருக்க, அவர் கம்பளம் வேர்களின் பிடியிலிருந்து நீங்கி அதனைச் சுற்றி பறக்க ஆரம்பித்தது. தான் மனிதர்களின் சாபத்திற்கான வேர்களை கண்டுபிடித்துவிட்டதான சந்தோசத்தில் அவர் மிதந்துகொண்டிருந்த நேரத்தில்
“வாருங்கள் வசுமித்” என்று குரல் கேட்க, அதிர்ச்சியடைந்தவராக சுற்றும் முற்றும் பார்த்தார். மீண்டும் அதே குரல் கேட்க, புரிந்து கொண்டவராக அந்த வேர்களைப் பார்த்து “சொல்லுங்கள் ரூட்ஸ்?” என்றார் நக்கலாக,

“வேர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை என்பது தங்களுக்கு புரியும்தானே?”

“நிச்சயமாக தெரியும் ரூட்ஸ் ? ஆனால் நான் அதை கண்டுபிடித்துவிட்டேனே?
கண்டுபிடித்துவிட்டிர்களா?” என்று அந்த வேர் சிரிக்க, எதுவும் புரியாதவராக
“இப்போது ஏன் சிரிக்கிறாய். நான் தான் உன்னுடைய அடிவேரைப் பார்த்துவிட்டேனே. சாபத்தின் வேர்கள் மிக மெல்லியவை அல்லவா?”

சாபத்தின் வேர்கள் மெல்லியவைதான் ஆனால் அந்த மெல்லியவைகளுக்குப் பின்னால் இருக்கும் விரிவை நீங்கள் பார்க்கவில்லை வசுமித்? என்ற ரூட்ஸ் தன் வேரை மெல்ல அசைக்க, அதன் கீழே ஒரு வெளிச்சம் போல் ஒளிவர அதனை பார்த்தவர்க்கு அதன் கீழும் வேர்கள் பரவிச் சென்று கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்தவராக,

“நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்! நிச்சயம் அது நான் மேலிருந்து பார்த்த வேர்களின் கண்ணாடி பிம்பத்தின் எதிரொளிப்புகள் ” என்றார்.

“நிச்சயம் இல்லை வசுமித், உலக முழுக்க சாபம் ஏன் கொட்டிக்கிடக்கிறது என்று என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா வசுமித்.”

“நானும் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கான காரணம்தான் என்னுடைய ஆராய்ச்சிக்கு தூண்டுதலும் கூட.”

“நீங்கள் எவ்வளவு யோசித்தாலும் உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாது வசுமித். நீங்கள் இவ்வளவு நேரம் பயணம் செய்தது. என்னவென்று நினைக்கிறீர்கள்.
வேர்கள்தானே?”

“நன்றாக கொஞ்சம் உற்றுப்பாருங்கள்.”

வேர்கள் எல்லாம் கொஞ்சம் நெகிழ்ந்துகொடுக்கு ஆரம்பிக்க, பயந்தவராக தன் கைகளை நழுவ விட்டார். இப்போது வேர்களுக்கான எந்த உருவமும் இல்லாமல் எல்லாம் வழுவழுவென்றும் மினுங்க ஆரம்பிக்க, அவைகள் எல்லாம் அசைய ஆரம்பித்தது. அப்போதுதான் அவருக்கு புரிந்தது அவைகள் பாம்புகள் என்று. இந்த உலகில் உள்ள பாம்புகளின் மொத்த கூடாரமாய் அவை ஒன்றையொன்று தழுவி, புரண்டுகொண்டிருக்க, புரியாதவராக அலறி வெளியேறினார் வசுமித்.

“என்ன வசுமித் இப்போது புரிந்ததா என்னவென்று?”

“போதும் உன்னுடைய மாயவிளையாட்டை நிறுத்துங்கள் ரூட்ஸ்? இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது?”

“இவைகளைத்தான் நீங்கள் அழைத்துவந்த மனிதன் சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசவேண்டிய வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்துகளையும் இவைகள் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அவன் இவற்றை எலலாம் என்று வெற்றி கொள்கிறானோ அன்றுதான் அவனால் உங்களுடன் சகஜமாக உரையாட முடியும்.”

“இவ்வளவையும் அவனால் எப்படி வெற்றிகொள்ள முடியும்?”

“நிச்சயம் முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். அந்த பாம்பின் பாதையை பின் தொடர்ந்து செல்வது மட்டுமே? அவை உங்களை அவனுடைய அடிவேருக்கு அழைத்துச் செல்லும். அப்போது தெரியும் அவன் யாரென்று.”

*

அதிர்ச்சியடைந்தவராக நுண்ணோக்கியிலிருந்து தன் முகத்தை வெளியில் எடுத்தவர் அவனை திரும்பிப் பார்த்தார். அப்போது தான் கவனித்தார் அவனது நாக்குகள் வெளியே நீட்டிநீட்டி வந்துகொண்டே இருந்தது. இப்போது அவருக்கு ஒரளவுக்கு புரிந்தது போல இருந்தாலும், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் என்னவென்று அவர் குழம்பிக் கொண்டிருக்க, அவன் அருகே வந்து,

“எனக்கு ஆப்பிள் ஒன்று வேண்டும்” என்று கேட்டான்.

அதிர்ச்சியடைந்தவராக, “என்ன வேண்டும்?” என்று கேட்க,

“ஆப்பிள், ஆப்பிள், ஆப்பிள்” என்று மூன்று முறை கூறினான்.

உடனே அவர் தன் வீட்டருகே இருந்த பழக்கடைக்குச் சென்று 2 கிலோ ஆப்பிள்களை வாங்கிவந்து கொடுத்தார். அவன் அவற்றை சாப்பிடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான். மிகவும் குழம்பியவராக, “சாப்பிடுங்கள்” என்று சொல்ல,

“எதை சாப்பிட சொல்கிறீர்கள் வசுமித்?”

“ஆப்பிளைத்தான்”.

ஹா..ஹா… என்று கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். வசுமித் அவன் முகத்தில் தோன்றிய விகாரத்தைக் கண்டவராக இரண்டடி பின்னால் சென்று நின்றார்.

“பயப்படாதீர்கள் வசுமித்”

அப்போதுதான் தெரிந்தது அவன் பெயரைச் சொல்லிப் பேசுகிறான் என்று. “என் பெயர் உனக்கு எப்படி தெரியும்?”

“காது உள்ளவன் கேட்கக்கடவான் வசுமித். உங்கள் வீட்டின் வாசலில் கால் வைத்த அன்றே உங்களின் ஆராய்ச்சி, அதற்கான உங்களின் தேடல் என எல்லாவற்றையும் நான் புரிந்து கொண்டேன்”.

“ஏன் அப்போதிருந்தே இதைப் பற்றி பேசவில்லை?”

“என்னை அழைத்துச் சென்று சோதனை செய்த யாருமே, நான் கொடுத்த வேரிலிருந்து வேருக்குள் மட்டுமே பயணம் செய்தார்கள். ஆனால் நீங்கள் மட்டுமே அதனைத் தாண்டி என்னுடைய ஆதியைக் கண்டுபிடித்தவர்”

“அப்போது நீங்கள் யார்?”

“ஆப்பிள் , பாம்பு என்ற இருகுறியீடுக்களுக்கிடையிலேயே நான் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் வசுமித். நிர்வாணத்தினை முதன்முறையாக வெட்கம் கொள்ளச் செய்தவன். ஆண் பால், பெண்பால் விதிகளை வகுத்தவன். நன்மை தீமையின் பிறப்பிடம். இருள்-வெளிச்சம், உண்மை-பொய், அழகு-அசிங்கம் என ஒவ்வொன்றிற்கும் எதிர்நிலைகளை உருவாக்கிய பேரரசன். உலகில் சாபம் என்ற வார்த்தையை முதன்முதலில் உருவாக்கியவன். உலகைப் படைத்தவனின் நெருங்கிய தோழன். அவன் அவர்களை சாப்பிடவேண்டாம் என்று சொன்னது பழத்தை அல்ல, அந்தப் பழம் என்னுடைய தோட்டத்தில் விளைந்தது என்பதனால்தான். என் தோட்டத்தில் அவர்கள் சாப்பிட்டது கடவுளின் சொல்லை மீறுவதற்காக அல்ல, என் தோட்டத்தின் பழருசி அந்தப் பிரதேசத்தில் எவர் தோட்டத்திலும் கிடைக்காதது. அவனது சொல்லில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும் சாப வார்த்தைகள் அல்ல, அவனின் இருண்ட மனதின் இன்னொரு பரிமாணம். அவன் நீங்கள் நினைப்பது போல் புனிதன் அல்ல. இந்த உலகில் மிகவும் கீழானவன் ஒருவன் இருப்பானென்றால் அது அவனாகத்தான் இருப்பான். பழத்தினை தின்றதால் அவர்கள் பால்வேறுபாட்டை அறியவில்லை. அவர்கள் ஏற்கனவே அறிந்துதான் இருந்தார்கள். அதை சொல்லிக் கொடுத்தவன் நான்தான். ஆனால் அவன் அவர்கள் பழத்தை சாப்பிட்ட விவகாரத்தை ஏதோ பாவத்திற்கு ஒப்பான ஒன்றாக ஒவ்வொருவரிடம் சொல்லி, எங்கு சென்றாலும் அவர்களை கேலிப்பொருளாக்கி விட்டான். அந்த உணர்வை தாங்க முடியாமல் யாரிடமும் அவர்கள் பேசவில்லை. தங்களைத் தாமே அழித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். அவர்களின் கடைசி நேரத்தில் என்ன தோன்றியதோ என்னிடம் வந்து நின்றார்கள். நான் கூறியவற்றை கேட்டபிறகு அவர்கள் தெளிவடைந்தவர்களாக சென்றார்கள். அதன் பிறகு இந்த உலகம் மனித வாழ்க்கைக்கான சொர்க்கமாக மாறியது”.

“நீங்கள் அப்படி அவர்களிடம் என்ன சொன்னீர்கள்?”

“மரணம் எப்போதும் நம் அருகில் இருக்கும் ஒரு உடல் உயிரி. அவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் ஏன் அழைக்கின்றோம். அழைப்பதற்கான காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? நாம் அவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட விஷயம் என்ன? என ஒவ்வொன்றாக அவர்களை விசாரணை செய்துகொள்ளச் சொன்னேன். இந்த உலகில் பிறக்கப்போகும் ஒவ்வொருவரும் அஞ்சும் ஒன்றாக இருக்கப்போவது மரணம். மரணத்தின் வாசல் மிகவும் அழகானது. அழகானவற்றின் உள்ளே எல்லாம் எப்போதும் ஒரு அசிங்கம் மறைந்து கொண்டே இருக்கும். அந்த அசிங்கமானவற்றை கண்டுபிடியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு அழகானவற்றினைப் பற்றி புரியும். மரணத்தை தினமும் எதிர்கொண்டுதான் வருகிறேன். போகிற பாதையில், நீந்துகின்ற நீரில், பதுங்கிக் கொள்கிற மரத்தில் எல்லாம் நான் மரணத்தை அருகிலேதான் அழைத்துச் செல்கிறேன். ஆனால் நான் மரணத்தை பற்றி கவலைப்படவில்லை. மரணத்தை எதிர்கொள்வதற்கொள்வதற்கு முன்னால் இந்த உலகம் எவ்வளவு வியப்பானது. அழகானது, இதனை அனுபவிக்காமல் செல்வது என்பது உண்மையில் துரதிர்ஷ்வசமானது. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். உங்கள் முன்னால் இருப்பது கருப்பு அல்ல, வெள்ளையும் கூடவே இருக்கிறது. இரண்டையும் சமப்படுத்துங்கள். முடியவில்லை என்றால் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். அவற்றின் நிறம் அவரவரிடமே இருக்கட்டும். நிறங்கள் இல்லா உலகு எந்த காலத்திலும் அமையப் போவதில்லை. சென்று வாருங்கள்”.

“அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் ஏன் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?”

“உண்மையில் என்னை உங்களிடம் அழைத்துவந்தது யாரென்று நினைக்கிறீர்கள்?”

“தர்மன்”.

‘அவன் பெயர் காலன்’ என்று சொல்லி சிரித்தான். வசுமித்-க்கு சற்றுப் புரிந்தது போல் இருந்தது. இப்போது அவருடைய எண்ணிற்கு போன் செய்யுங்கள் என்று சொல்ல, வசுமித் போனை செய்ய, எதிர்முனையில் எந்தவித தகவலும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

“ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் நீங்கள் இருவரும்?”

“சாபத்தினை ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். அதான் உங்களை சற்று பார்த்துவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. இந்த உலகில் சாபத்தினை பற்றி ஆராயும் ஒவ்வொருவருக்கும் அந்த தோட்டமும், கனியும், நிர்வாண மனிதர்களும் தான் தோன்றுகிறார்கள். அதனை அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு இதுவரை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அதான் தங்களை சந்தித்து விளக்கத்தை அளிக்கலாம் என்று தோன்றியது. என்னுடய வேலை முடிந்தது. சென்று வருகிறேன் வசுமித். உங்களுடைய ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்” என்று சொல்லியவனாக ஆப்பிளை கடித்துக்கொண்டே அவரின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். பலவித யோசனைகளுடன் அங்கே நின்று கொண்டிருந்தவர் தன்னுடைய நோட்டில் இவற்றை எல்லாம் எழுதி முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று அமைதியாக அமர்ந்து விட்டார்.

உடனே தன்னுடைய கனிணியை இயக்கி தன்னுடைய துறை நண்பர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.

*

“அன்புள்ள நண்பர்களே, சாபத்தின் தொடக்கத்தைப் பார்த்து விட்டேன். அவை உண்மையில் சாபம் அல்ல, இந்த உலகம் இயங்குவதற்கான உந்துசக்தி, இந்த உலகை இயக்குவதற்கான எந்திரம். அவை இல்லையென்றால் இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை. சாபத்தின் கதைகள் எல்லாம் நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கருப்பு விழிகளின் பார்வை. நம்மில் பெரும்பாலும் அவற்றின் பார்வைக்குள் உள்ளே விழுந்து மேலேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றின் மறுபக்கத்தை பார்ப்பதென்பது அவ்வளவு கடினமில்லை என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு. ஆராய்ச்சிகள் எல்லாவற்றிற்கும் நிரூபணவாதம் தேவை. நிரூபணத்தைத் தாண்டிய பல ஆராய்ச்சிகளுக்கு இன்றுவரை விடை இல்லை. விடையை இதுவரை யாரும் அளிக்கவில்லை என்பதற்காக அது பொய் என்று அர்த்தமில்லை. அவற்றின் தொடர்ச்சிதான் நம் சமநிலையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த தொடர்ச்சியினை கண்டவனாக உங்களுக்கு கூறுகிறேன். சாபத்தினை நான் ஆராய்ந்து விட்டேன். உங்களுக்கு என்னை நினைத்து சிரிப்பு கூட வரலாம். மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கூட நினைக்கலாம். உங்கள் சிரிப்பின் பின்னால் இருக்கும் நிறத்தை கவனியுங்கள். அவை கருப்பா? வெள்ளையா என்று. என்ன நிறம் என்றாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு எதிர்நிறம் ஒன்றிருப்பதை மறந்து விடாதீர்கள். என் வாழ்வில் சாபம் என்ற ஒன்றே இல்லை என்று உறுதியளிக்கிறேன். சாபத்தின் வேரினை கடந்த நிலையில் சொல்கிறேன், வாழ்க்கை வாழ்வதற்கானது. வாழுங்கள். உங்கள் அறிவியலின் எதிர்கோணத்தை கண்டடையுங்கள். நீந்துங்கள். இந்த உலகை கண்கொண்டு பாருங்கள். விடியட்டும் உங்களுக்கும் எனக்குமான இந்த இரவு. வெளிச்சம் வரட்டும். அதைக் கைகளில் ஏந்தி இந்த உலகத்தை குதுகலமாக்குவோம். நன்றி நண்பர்களே. விடைபெற்று கொள்கிறேன்.”

***

மதியழகன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular