சாத்தான் குலமா நம்முடையது?

0

பாரதீ

சாத்தான்குளத்தில் நடந்திருப்பது சாதாரணக் காவல் நிலையக் கொலைகளல்ல. இது ஒரு புதிய தமிழகம் பிறந்திருப்பதற்கான அறிவிப்பு. தமிழகம் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், புதிய இந்தியாவின் குணாதிசயங்கள் தன்னைப் பெரிதும் பாதித்துவிடாதபடிப் பார்த்துக்கொள்ளும் மாநிலமாக இருந்தாலும், மத்திய அரசின் ஆசைகளை அவர்களின் மாநில அரசுகளை விடவும் பொறுப்புணர்வோடும் பணிவோடும் நடைமுறைப்படுத்தும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தகுதியற்ற எவருக்குமே தன் தகுதிக்கு மீறிய வசதிகளும் அதிகாரங்களும் கிடைக்கப்பெறும் போது அதற்கு யார் காரணமோ அவர்களுக்குத் தேவையிருக்கும் வரை நன்றியுணர்வோடு வாலாட்டுவதும் பின்னர் நேரம் வரும்போது தன் நிறத்தைக் காட்டுவதும் எல்லாக் காலத்திலும் நாம் பார்ப்பதுதானே!

புதிய தமிழகம் என்று எதைச் சொல்கிறோம்? ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் (ஆட்சியாளர்கள் என்று சொல்லக்கூடக் கூச்சமாகத்தான் இருக்கிறது), மக்களை மக்களாகப் பார்க்காமல் அவர்களை அடிமைகள் போலவும், மூடர்கள் போலவும் நடத்தும் போக்கு வெகுவேகமாகக் கூடிவருகிறது. அடிமையாகவும் மூடர்களாகவும் இருந்துகொண்டே காரியம் சாதிப்பவர்களுக்கு தமக்குப் படியளப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் அப்படியே இருந்தால்தான் பிடிக்கும். மக்களின் மனதை வென்று ஆட்சியைப் பிடிப்பவர்கள் அதைத் தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். மக்களின் மீதும் மக்களாட்சியின் மீதும் அடிப்படை அரசியல் அறத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதற்காக மிரட்டி அமர்த்தப் பட்டிருப்பவர்கள் எதற்கு மக்களைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்கள்! தம்மைக் கேள்வி கேட்பவர்கள், எதிர்ப்பவர்கள், தம் முதலாளிகளின் திட்டங்களுக்குச் சிறிதளவிலேனும் இடையூறாக இருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களைத் தம்மிடம் இருக்கும் தகுதிக்கு மீறிய அதிகாரத்தை வைத்து அடித்து நொறுக்கும் இந்தப் போக்கு மிகவிரைவில் சட்டம் ஒழுங்குக்குப் பேர் போன தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றிவிடும். இப்படியே தொடர்ந்தால், இதுவரை குடிமக்களை அடிக்கும் தகுதியைப் பெற்றிருந்த காவல்துறை இப்போது கொல்லும் தகுதியையும் பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டு, பொழுதுபோக்குக்குத் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கொல்லத் தொடங்கிவிடும்.

அடுத்து ஆளுங்கட்சிக்காரர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் கொல்லச் சொல்லிக் காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் புதிய போக்கு உருவாகும். போராட்டம் செய்பவர்களைத் தடியடி நடத்திக் கலைத்த காலம் போய், கொன்று போட்டுவிடும் காலம் வரும். அடுத்து, அரசாங்கத்தைக் கேள்வி கேட்போரையே கொன்று போடும் காலமும் வெகுவிரைவில் வந்துவிடும். அது ஒன்றும் இந்த நாட்டில் ஏற்கனவே நடக்காததில்லை. மாநில அரசுகளை விமர்சிப்பவர்கள், அதுவும் தமிழ்நாட்டில் மாநில அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படும் காலம் இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். இருப்பினும் அதற்கான அறிகுறி தென்படத் தொடங்கிவிட்டது. அதுவும் ரவுடிகளை வைத்து வேட்டையாடி அதைக் காவல் துறையைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்வதையே அதற்குத் துணையாக இருக்கச் சொல்வதையோ விட, காவல் துறையை வைத்தே மொத்த வேலையையும் முடித்துவிடுவது பல வகைகளிலும் வசதியானதாக இருக்குமே! பின்னர் தமக்கு வாக்களிக்காத ஊர்க்காரர்களையும் தெருக்காரர்களையும் சமூகங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தே கொல்லும் காலம் ஒன்றும் வரும். அதுவும் புதிய இந்தியாவுக்குப் புதிதில்லை. புதிய தமிழகத்துக்குத்தான் புதிது. புதிய இந்தியாவிலும் சரி, புதிய தமிழகத்திலும் சரி, அதை நியாயப்படுத்திப் பேசும் கூட்டத்தின் குரலுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட தளங்கள் கிடைத்துள்ளன. “எங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மாநிலங்களுக்கு நாங்கள் ஏன் எதுவும் செய்ய வேண்டும்?” என்று அந்த மாநிலத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டு – அரசியல் பிழைப்பை ஓட்டிக்கொண்டு பேசும் மனிதர்களுக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. அப்புறம் மேலே சொன்னதெல்லாம் நடக்காது என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும்?

ஒருபக்கம் வல்லரசாகி விட்டோம் என்றும் உலகத் தலைமை கொள்ள வருமாறு எல்லோரும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கதை விட்டுக்கொண்டு, இன்னொருபுறம் விடுதலைக்குப் பிந்தைய எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குக் குடிமக்களை அடிமைகளாகவும் விலங்குகளைப் போலவும் நடத்தும் பழைய காலனியாதிக்கப் பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தும் இந்த இடத்துக்கு எப்படி வந்தோம்? விலங்குகளைக்கூட முறையாக நடத்தும் நாகரிகம் அடைந்துவிட்டோம். இந்தக் கேட்டிலும் கேடுகெட்ட இழிநிலைக்கு நம்மை இட்டு வந்தது எது? இயல்பாகவே இந்த இழிவாழ்வுக்குத் தகுதிப்பட்டவர்கள்தாமா நாம்?

மக்களாட்சியில், ஆட்சி செய்பவர்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற பயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படித்தான் பெரும்பாலான நாடுகளில் இருக்கவும் செய்கிறார்கள். மக்களே மனச்சாட்சியற்றவர்களாக இருக்கும் போது அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பவர்களாக ஆட்சி செய்பவர்கள் இருப்பது வேறுவிதமான பிரச்சனை. இனவெறி பிடித்த மக்களின் அரசுகள் இனவெறி பிடித்தவையாகவே இருப்பதும் மதவெறி பிடித்த மக்களின் அரசுகள் மதவெறி பிடித்தவையாகவே இருப்பதும் நமக்குப் புதிதில்லை. மாறாக, மக்கள் அறிவற்றவர்களாகவோ தன்மானம் அற்றவர்களாகவோ தன்னலம் தவிர வேறு எது பற்றியும் கவலைப் படாதவர்களாகவோ இருக்கும்போது, ஆட்சி செய்பவர்கள் தமக்கு வேண்டியதையெல்லாம் சாதித்துக் கொள்பவர்களாகவும் மோசடிக்காரர்களாகவும் கொள்ளைக் கூட்டமாகவும் மாறுவது இயல்பாகவே நடக்கத்தான் செய்யும். அதுதான் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்துகொண்டிருக்கிறதா?

மக்களைக் காப்பதற்குத்தான் காவல்துறை. அதைச் சரியாகக் கட்டிப்போட்டு வைத்துக்கொள்ளா விட்டால் வெறிநாயாகவோ கடிநாயாகவோ மாறிவிடும் என்று பயந்துதான் முதலமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கீழேயே வைத்துக்கொள்வார்கள் என்றொரு கதை உண்டு. ஏனென்றால் அந்தத் துறைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அப்படி. அப்படிக் காவல்துறையைத் தன் அதிகாரத்தின் கீழேயே முதலமைச்சர்கள் வைத்துக் கொள்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. காவல்துறை, உளவுத்துறை போன்றவற்றைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொண்டால்தான் தமக்கு எதிராக இருப்பவர்களை வேவு பார்க்க வசதியாக இருக்கும். கட்சிக்குள்ளேயும் தமக்கு எதிராக உருவெடுப்பவர்களை முன்கூட்டியே அறிந்து அழிப்பதற்கு வசதியாக இருக்கும். தனக்குக் கீழே இருக்கும் வேறோர் அமைச்சரிடம் அந்த அதிகாரம் போய்விட்டால் அதுவே அவர் தன்னைக் கவிழ்ப்பதற்குப் பயன்படுத்தும் ஆயுதமாகிவிடக் கூடும் என்பதால் கிட்டத்தட்ட எல்லா முதலமைச்சர்களுமே காவல்துறையைத் தம் காலுக்குக் கீழேதான் வைத்துக்கொண்டார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக, அரசுத் துறையில் இருப்பவர்களை நன்றாக வைத்துக்கொண்டால் தனக்கும் தன் ஆட்சிக்கும் நன்மை பயக்கும் விதத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொடுப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று நம்பி அவர்களுக்கு வேண்டிய ஊதிய உயர்வுகளை அள்ளி அள்ளிக் கொடுத்து விசுவாசிகளை உருவாக்கிய ஒருகாலம் வந்தது. அதன் மூலம் வெளியில் காலமெல்லாம் தன்னைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஒருசில சமூகப் பிரிவுகளை வைத்திருந்தது போலவே உள்ளேயும் ஓர் அரசு ஊழியர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். அடுத்து வந்தவர், அதே பாணியில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்ததிலும் கலந்தாலோசித்தத்திலும் அவருக்குக் கிட்டிய யோசனைகளின் வெளிப்பாடுதான் காவல்துறைக்கு அளவிலாத அதிகாரத்தைக் கொடுத்ததும் தானும் தனக்கென்று சில ஆதரவுச் சமூகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று செய்த வேலைகளும். அப்படிக் காவல் துறையைத் தன் செல்லப்பிள்ளை போல வைத்துக்கொண்டு, தனக்கு எதிரானவர்களை எல்லாம் அழிப்பதற்கு அவர்களைத் தன் ஏவல் நாயைப் போலப் பயன்படுத்தினார். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குக் காவல்துறைக்கு நிறைய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பது ஓரளவுதான் உண்மை. “பசங்க உங்க மேல ரெம்பப் பாசமா இருக்காங்க. அவங்களுக்கு இதெல்லாம் செஞ்சு குடுத்தா – இதிலெல்லாம் கண்டுக்கிடாம விட்டா, உங்களுக்காக என்ன வேணாலும் செய்வாங்க” என்று பணிவோடு பேசப்பட்ட பேரத்தின் தொடர்ச்சிதான் நம்மை இங்கு கொண்டுவந்து விட்டிருப்பது.

“சென்ற ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்க் கிடந்ததால் நூறு கொலைகள் விழுந்தன. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி அதைப் பத்துக் கொலைகள் ஆக்கிவிட்டோம்” என்கிற கதைக்குப் பின்னால் சட்டம் ஒழுங்கைக் காப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு காவல் துறையே நூறு பேரைக் கொன்றிருந்தால் அது உண்மையான சட்டம் ஒழுங்காகிவிடுமா? அதிலும் அந்த நூறு பேரில் ஐம்பது பேர் அப்பாவிகளாக இருந்தால்? காவல்துறை ஒவ்வொரு முறையும் நீதித்துறையின் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துச் செயல்பட்ட போதெல்லாம் அதை விசிலடித்துக் கொண்டாடினோம். அப்போதெல்லாம் இதுபற்றியெல்லாம் கவலைப்படாததால்தான் இந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

அடுத்ததாகக் காவல்துறையில் நடந்த மாபெரும் முறைகேடு, காவல்துறை முழுக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரைப் புகுத்தியது. ஒவ்வோர் ஆண்டும், “இந்த வருசம் பத்துக்கு எட்டுப் பேர் நம்மாளுகதான்”, “ஒன்பது பேர் நம்மாளுகதான்” என்று ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பெருமை பேசிக்கொண்டு திரியும் அளவுக்கு ஓர் அரசுத்துறை இருந்தது எவ்வளவு பெரிய முறைகேடு! “எந்தத் தகுதியும் இல்லாமல் வந்த எனக்கு இவ்வளவு ஆதரவையும் பலத்தையும் கொடுத்த உங்களிடம் தகுதி பாராமல் நன்றிக்கடன் செலுத்துவேன்” என்கிற ஏற்பாடுதான் அது. இதுவும்தான் தகுதியே இல்லாத பலர் அந்தத் துறைக்குள் வர வழிவகை செய்தது. இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களின் வாய்ப்பைப் பறிக்கிறது என்று கவலைப்பட்டவர்கள், இந்த முறைகேட்டைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இட ஒதுக்கீட்டில் கூட ஒரு குழுவுக்குள் உள்ள முன்னணித் திறமைசாலிகளே வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இந்த முறைகேட்டில் தகுதியுடைய பல சாதி இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் வழங்கப்பட்டன. அதனால் இன்று அத்துறையே தம்முடையது போல நினைத்துக்கொண்டு அது செய்யும் அத்தனை மிருகத்தனங்களையும் ஆதரித்துப் பேசுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வந்திருக்கிறது? எந்தக் காவல் நிலையம் சென்றாலும் உதவுவதற்குத் தம் உறவினர் ஒருவர் இருப்பார். சாதியைக் கேட்டுவிட்டு வேலையை எளிதாக்கிக் கொடுப்பார் அல்லது வேறொரு சாதியைச் சொல்லியிருந்தால் எலும்பை உடைக்கிற இடத்தில் டீ வாங்கிக்கொடுத்து உபசரித்து அனுப்புவார். அதனால் எந்த மனச்சாட்சியும் இல்லாமல் இப்படிப் பேச முடிகிறது. ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்கள் யார்? மிச்சமிருக்கும் 80 விழுக்காட்டு மக்களுக்கு இது எவ்வளவு பெரிய அநீதி!

அரசியல் என்பது பண பலமும் ஆள் பலமும் சேர்ந்து செயல்படும் களமாக மாறிவிட்ட பின்பு, பணம் குவிக்க வாய்ப்பிருக்கும் துறைகளைப் போலவே ஆள் பலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருக்கும் துறையான காவல் துறையும் முக்கியமானதாகிவிட்டது. தனக்குப் பலமாக இருப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் புரிபவர்களாக இருந்தால் என்ன செய்வது? அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட வேண்டும். அதற்குக் காவல்துறையின் துணை தேவைப்படுகிறது. அங்குதான் ஊழல் தொடங்குகிறது. ‘அதிகாரம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள முடிகிறது. எனவே நமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி அப்பாவிகளைச் சித்தரவதை செய்து மகிழ்ந்துகொள்வோம்’ என்கிற குரூர கீழ்ப்புத்தி வெளிப்படுகிறது. தம்முடைய அதிகாரத்தை வேறொருவரிடம் இழந்து நிற்கும்போது, தான் எப்படிப் பிறருடைய அதிகாரத்தைப் பறிக்கலாம் என்கிற புத்தியும் வேலை செய்யத்தானே செய்யும்! காவல் துறையின் அதிகாரத்தை உள்ளூர் அரசியல் தலைகள் பறிக்கிற விதத்தில் நடந்துகொள்ளும் போது, அதிகாரமற்ற எளிய மனிதர்களிடம் கூடுதல் அதிகாரத்தைச் செலுத்தும் கொடிய மிருகமாக அது மாறிவிடுகிறது. ஆக, அவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கு மீறிய அதிகாரத்தைக் கொடுக்கிற அரசாங்கமும் கேடுதான், அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கமும் கேடுதான். இரண்டுமே மக்கள் நலத்துக்காகச் செய்யப்பட்டவை அல்ல. சட்டம்-ஒழுங்கைக் காக்கவும் செய்யப்படவில்லை, அவர்களின் அதிகார மீறல்களுக்குக் கடிவாளம் போடவும் செய்யப்படவில்லை. தத்தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளவே செய்யப்பட்ட பித்தலாட்டங்கள் அவை. இவ்விரண்டும் மாறி மாறி நடந்துதான் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது.

மற்ற துறைகளைப் போலன்றி, காவல்துறையில் உடல் பலமும் உள பலமும் இரண்டிலுமே முரட்டுத்தனமும் தேவைப்படுகிறது. சல்லிப் பயல்களைக் கையாள்வதிலேயே அவர்கள் காலமெல்லாம் கழியும் என்பதால் அவர்களும் சல்லித்தனத்துக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்தான். ஆனால் அவர்களும் சல்லிப்பயல்களாகவே இருந்துவிடக் கூடாதே. சாத்தான்குளத்தில் நடந்திருக்கும் கொலைகள் குற்றவாளிகளை விடவும் கொடுமையான மனநிலை கொண்டவர்கள் காவல் நிலையங்களுக்குள் நிறைந்திருப்பதைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

‘சைக்கோக் கொலைகாரன்’ என்று செய்தி போடுவது போல, ‘சைக்கோக் காவலர்’ என்று செய்தி போட வேண்டிய காலம் வந்துவிட்டது. இது சட்டத்தை நிலைநாட்டச் செய்த கொலைகூட இல்லை. இவர்கள் பொள்ளாச்சியில் எப்படிச் சட்டத்தை நிலைநாட்டினார்கள் என்பதைப் பார்த்தோமே! முழுக்க முழுக்கத் தம் மனதுக்குள் கிடக்கும் மிருகத்தனத்துக்குத் தீனி போடச் செய்துகொண்ட கொலைகள். மீண்டும் மீண்டும் மிருகங்கள் என்று கூறக் கூடத் தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த மிருகம் இப்படி இன்னொரு தன் இனத்து மிருகத்தையே அடித்துக் கொல்லும் அளவுக்கு கீழான உணர்ச்சிகள் கொண்டதாக இருக்கிறது! இவர்கள் சட்டப்படி கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல. சராசரி மனிதர்கள் நடமாடும் வெளியுலகில் வாழத் தகுதியற்றவர்கள். தீவிர மனநோய் மருத்துவத்துக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டியவர்கள்.

இப்படியொரு கொலையைச் செய்தால் மேலிடத்துக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயமில்லாமல் போயிருக்கிறது என்றால் அதையும் நாம் பேச வேண்டியிருக்கிறது. அடிமைகளின் அரசு, “யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்கிற அதிகாரத்தைக் காவல் துறைக்கு வழங்கியிருக்கிறதா? அல்லது, “அவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நீ மூடிக்கொண்டு இருக்க வேண்டும்” என்று ஆட்சியில் இருப்பவர்கள் அடித்து மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது, ‘இவர்களே அடிமைகள், இவர்களுக்கு ஏன் நாம் பயப்பட வேண்டும்’ என்று காவல் துறை எண்ணுகிறதா? ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையின் மீது தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்ட அடிமைகளாக இருக்கிறார்களா? அந்தக் கட்டுப்பாடு வேறோர் இடத்தில் இருக்கிறதா? அல்லது, எல்லாமே முறையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது, குற்றத்தை ஒப்புக்கொள்வது ஆட்சிக்குக் கெட்ட பெயரைக் கொடுக்கும் என்ற அரசியல் ஞானத்தின் வெளிப்பாடா? இதில் எதுவாக இருந்தாலும் அது நல்லதில்லை.

காவல் துறைக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லை. ஆனால் காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு அந்தக் கடமை இருக்கிறது. அந்த பயம் இருந்தால் காவல் துறையை இவ்வளவு கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்ள விடமாட்டார். முறையாக மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வருகிற ஒரு தலைவனுக்கு அந்த பயம் இருக்கும். நாளை இதே ஊரில்தானே தான் வாழ வேண்டும் – அரசியல் பிழைக்க வேண்டும் என்கிற ஓரளவேனும் அடிப்படை அரசியல் அறிவு இருக்கும் தலைவனுக்கு அந்த பயம் கண்டிப்பாக இருக்கும். இது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்குப் புரியவே புரியாது. தன் காலடியில் அரசியல் அறிவே இல்லாத முட்டாள்களை வைத்துக்கொண்டால்தான் தனக்கு நல்லது என்று அரசியல் செய்த தலைவியின் கீழ் வளர்ந்த மூடர்களுக்கு எப்படி இது புரியும்?

இவ்வளவும் நடந்த பின்பு, ஒரு முதலமைச்சர், எந்த மனச்சாட்சியும் இல்லாமல், “தந்தை நெஞ்சுவலியால் இறந்தார்” என்றும் “மகன் மூச்சுத்திணறலால் இறந்தார்” என்றும் வாய் கூசாமல் பேச முடிகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? பொதுவாழ்வில் எவ்வளவு தரம் தாழ்ந்த மனிதர்கள் நமக்குத் தலைவர் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நின்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இதைக் காமராஜர் செய்வாரா? கருணாநிதி செய்திருப்பாரா? ஜெயலலிதா செய்திருப்பாரா? காமராஜர் கண்டிப்பாகச் செய்திருக்க மாட்டார். கருணாநிதியோ ஜெயலலிதாவோ செய்திருக்கக்கூடும் என்று உங்களில் சிலர் சொல்லக்கூடும். நான் அப்படி நினைக்கவில்லை. திரும்பவும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற பயத்திலாவது இப்படியான வேலைகளைச் செய்யும் முன் யோசிப்பார்கள். அப்படியே ஒருவேளை அவர்களை மீறி இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கையையாவது எடுத்திருப்பார்கள். கண்துடைப்பாகவாவது ஏதேனும் செய்திருப்பார்கள். அதுகூடச் செய்யத் தேவையில்லை என்கிற அளவுக்கு கிறுக்கு முற்றிப் போயிருக்கிறது.

உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்துச் சிறந்தது தமிழகக் காவல்துறைதான் என்றும் இந்தியாவிலேயே சிறந்தது தமிழகக் காவல்துறைதான் என்றும் சொல்வதில் ஒழிந்திருக்கும் இன்னோர் உண்மை இருக்கிறது. இந்தியாவிலேயே கொடூரமான முறைகளில் காவல் நிலையக் கொலைகள் செய்யப்படும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்துத் தமிழகம் இருக்கிறது. நாட்காட்டியைத் தலைகீழாகத் திருப்பிக் கொண்டிருக்கும் உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்துக்கு இது பிரச்சனையில்லை. எல்லாத்திலும் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்று சொல்கிற நமக்கு இது பெரும் அவமானம். உத்திரப்பிரதேசத்தோடு எதில் போட்டி போட்டாலும் அது நமக்கு அவமானமே.

வெள்ளைக்காரனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இங்குதான் நிறைய இருந்தார்கள், அதனால்தான் நிறையப் பேர் வெள்ளைக்காரனைப் போல ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. வெள்ளைக்காரனே எவ்வளவோ மாறிவிட்ட பின்பும், வெள்ளைக்காரன் காலத்துக் கொடூரங்கள் அப்படியே தொடரும் முன்னணி மாநிலமாக இருக்கிறது தமிழகம். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறைக்கு இவ்வளவு அதிகாரம் கொடுக்கும் இந்த இழிபண்பு கூட வெள்ளைக்காரன் காலத்துப் பழக்கத்தின் நீட்சியே. வெள்ளைக்காரன் தன்னைப் பண்பட்ட மனிதனாகவும் நம்மை இன்னும் முழுமையாக மனிதகுலத்தில் சேர தகுதிபெறாத கற்கால விலங்குகளாகவும் கருதினான். அதனால் நம் முன்னோர்கள் மீது இப்படியொரு மனிதத்தன்மையற்ற அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டான். இன்று இங்கிலாந்தில் போய் நாம் என்ன குற்றம் செய்தாலும் அப்படியொரு தண்டனையை நமக்குக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவோ பண்பட்டுவிட்டார்கள். நாமும் பண்பட்ட மனிதர்கள் ஆகிவிட்டோம் என்று எண்ணத்தொடங்கி விட்டார்கள். இப்படியெல்லாம் நடப்பதைக் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்!

எல்லாக் குற்றங்களுக்கும் குற்றவாளி வைத்திருக்கும் நியாயம் என்று ஒன்று இருக்குமல்லவா? இந்தக் குற்றத்தில் அப்படி என்ன நியாயம் இருக்க முடியும்? “காவல் துறை என்றால் பயம் இருக்க வேண்டும். காவல்துறையையே எதிர்த்துப் பேசினால் – தாக்கினால் சும்மா விட முடியாது” என்று ஏதேனும் கூறுவார்கள். இவை அனைத்துமே முற்றும் நிராகரிக்கப்பட வேண்டியவை. காவல்துறைக்கு எவரும் பயப்பட வேண்டியதில்லை. குற்றம் செய்யத்தான் குடிமக்கள் பயப்பட வேண்டும். “நம்மைவிடக் குற்றம் செய்பவர்களைப் பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றோ “ஒரு துண்டைத் தூக்கிப் போட்டால் நாம் செய்யும் குற்றங்களுக்கும் காவலுக்கு வந்து நிற்பவர்களுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றோ மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டால் அப்புறம் எப்படிப் பயப்படுவார்கள்! எதிர்த்துப் பேசுவதற்குத் தண்டனை அடித்துத் துன்புறுத்துவதும் தாக்குவதற்குத் தண்டனை சித்திரவதை செய்து கொல்வதும் என்று ஆகிவிட்டால் அது காவல்துறையாக இருக்க முடியாது. அதை ஆதரித்துப் பேசுபவர்கள் நாகரீகமடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. கூலிக்குக் கொலை செய்பவர்கள் கூட இவ்வளவு கொடுமையான வாதங்கள் செய்வார்களா என்று தெரியவில்லை.

எதையுமே சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நோய் தென் தமிழகத்துக்குப் புதிதில்லை. ‘சாதி வெறி’ என்ற சொல்லாடலே அது இழிவானதாகப் படவேண்டும் என்று உருவாக்கப்பட்டது. வெறி என்பது நாய்க்கு இருக்க வேண்டியது என்பதால் மனிதர்கள் அதை இழிவாகக் கருதுவார்கள் என்று இடப்பட்டது. நாய்கள் மனிதர்களைவிட இழிவானவை அல்ல எனினும், அப்படி எண்ணுபவர்களாவது ஓரளவு திருந்தியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அதையும் பெருமையாகப் பேசுகிற கூட்டம்தான் கூடிக்கொண்டிருக்கிறது. இனி அதைச் ‘சாதி மனநோய்’ என்று அழைத்தால் சரியாக இருக்கும் என்றுபடுகிறது. மனநோய் ஒன்றும் இழிவானதில்லை. ஆனால் அது சரி செய்யப்பட வேண்டியது. “எனக்குக் கொஞ்சம் சாதி மனநோய் உண்டு!” என்று பெருமையாகச் சொல்ல மாட்டார்களே!

தமிழத்தில் குறிப்பிட்ட சில சாதியினருக்கு இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கிறது. அவர்களைப் பார்த்து ஒழுங்காக இருந்தவர்களும் நிறையக் கெட்டுப் போயிருக்கிறார்கள். ‘அவர்கள் அப்படியிருக்கிறார்கள். அதனால் நாமும் அப்படி இருக்க வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் காரணமாக எல்லோரும் அப்படி ஆகியிருக்கிறார்கள். “கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்”, “நாம் வடநாட்டுக் கூமுட்டைகள் போல முட்டாள்கள் இல்லை” என்ற வளர்ச்சிப் பெருமைகளையும் பேசிக்கொண்டே இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட சாதியினர் மட்டுமில்லாமல், தன் சாதி மனநோயை மதத்தின் பெயருக்குள் மறைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு கூட்டமும் இதில் புகுந்து மீன் பிடிக்க முயல்கிறது. வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்றால் ஓர் அப்பாவி கொல்லப்படுவதைக்கூடக் கொண்டாடும் அளவுக்கு – தன் மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் சிறுமியைக் கற்பழித்துக் கொல்பவனைக் கூட ஆதரித்துப் பேசும் அளவுக்குக் கேடுகெட்ட சிந்தனைச் சாக்கடை கொண்டதுகள் இவ்வளவு காலமாக நாம் வாழும் இதே மண்ணில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. நாமும் அதுகளை நம்மைப் போன்ற மனிதர்களாக மதித்திருக்கிறோம். காலம் இப்படியே ஓடும் என்ற நம்பிக்கையில் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது நமக்கு. பின்னர் நேரம் வரும்போது இதற்கான சரியான பாடத்தைக் கற்றுக்கொடுக்கத் தவறினால் மீண்டும் மீண்டும் இப்படியான இருண்ட காலத்துக்குள் சென்று நாம் நாயாய் பேயாய் உழைத்துக் கண்ட வளர்ச்சியையெல்லாம் வீணடித்துத் திரும்ப வேண்டிய நிலைக்குத்தான் உள்ளாவோம்.

அடுத்த ஓராண்டில் தேர்தல் வருவதால் இதுபோன்ற நிறைய வேலைகள் நடக்கும். அவற்றுள் பல திட்டமிட்டே நடத்தவும் படும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் அடிப்படை அறிவுகூட இல்லாத இனமில்லை நாம். இதையெல்லாம் புரிந்து நடந்து கொண்டால் நம்மிடம் பாதுகாப்பானதாகக் கொடுக்கப்பட்ட நம் நிலம் நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பாதுகாப்பானதாகக் கைமாற்றப்படும். இல்லாவிட்டால், சில பிழைப்புவாதிகளின் மனிதத்தன்மையில்லாத உயிர் விளையாட்டில் நாமும் பலியாகி நம் சந்ததிகளும் பலியாகும் பாவத்துக்குத் துணை போனவர்களாவோம்.

சாத்தான்குளத்தில் கொலையுண்டிருப்பவர்கள் இருவரும் தந்தை – மகன் என்பதால், இரட்டைக்கொலைகள் என்பதால், அதுவும் வியாபாரிகள் என்பதால், அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வளவும் வெளியில் வந்திருக்கிறது. இந்த அளவுக்குக்கூட ஆதரவுக்கு ஆட்கள் இல்லாத எத்தனை எளிய மனிதர்கள் இதற்கு முன்பு இது போலக் கொல்லப்பட்டிருக்கிறார்களோ! வெளியில் சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்று மிரட்டினால் அதை மீறிப் போராடும் திராணி இருக்கிற தமிழ்த் தாய்மார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எனவே, இதுபற்றி ஒரு விரிவான மாநிலம் தழுவிய விசாரணை வேண்டும்.

இன்று வியாபாரிகளுக்கு நடப்பது நாளை விவசாயிகளுக்கு நடக்கலாம், தனியார் துறை ஊழியர்களுக்கு நடக்கலாம், எவருக்கும் நடக்கலாம். தன் சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக பக்கத்துத் தெருக்காரரையோ எதிர் வீட்டுக்காரரையோ சித்தப்பன்-பெரியப்பனையோகூட கொன்றுபோடத் தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இன்று கொலை செய்பவர்கள் அடுத்து எவர் வீட்டுக்குள்ளும் புகுந்து கற்பழிப்பு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஒரு தந்தையையும் மகனையும் இழந்திருக்கும் தாயும் மனைவிகளும் பிள்ளைகளும் போலவே அந்தக் கொலைகாரர்களை மனமாரச் சபிப்பதைத் தவிர எளியவர் நாம் என்ன செய்துவிட முடியும்? அவர்கள் நம் சாபங்களுக்கெல்லாம் பயந்தவர்களா என்ன?

ஒவ்வொரு சாவுக்கும், அடிக்கும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நிறுத்தும் அளவுக்குக் காவல்துறையைச் சீர்திருத்தம் செய்வதை அடுத்த தேர்தல் அறிக்கையில் முக்கியமான வாக்குறுதியாக வைக்கும் கட்சிகளையே நாம் ஆதரிக்கப் போகிறோம் என்கிற அழுத்தத்தை இப்போதிருந்தே எல்லாக்கட்சிகளுக்கும் புரிய வைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். “தேர்தல் அறிக்கையில் எதை வேண்டுமானாலும் போடலாம். போடுவதையெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?” என்று எளிதில் தப்பிவிட முடிகிற மாநிலமல்ல தமிழகம் என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த இரட்டைக் கொலைகள் மட்டுமல்ல. கடந்த பல ஆண்டுகளில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடூரர்களின் வழக்கை நேர்மையாக நடத்தாமல் துணை போனது உட்படப் பல மன்னிக்கவே முடியாத குற்றங்களை இந்த அரசு செய்திருக்கிறது. அவற்றையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றவாளிகள் எல்லோரையும் தண்டிப்பதாக உறுதியளிக்கும் கட்சியையே இனி நாம் நம்ப வேண்டும். அரசியலில் கூட்டுக் களவாணித்தனத்துக்கு இடமே இல்லாமல் செய்யும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்க வேண்டும்.

இதெல்லாம் ஆகுற வேலையா? அப்படியே ஆகும் என்றாலும் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

சமூக ஊடகங்களில் குரல் எழுப்புவது ஒன்றும் முற்றிலும் பொருளற்ற வேலையில்லை. தெருவில் இறங்கிப் போராடுபவர்களையும் ஒரு காலத்தில் அப்படித்தான் கேலி செய்தார்கள். இந்தக் கேலிகள் அனைத்துமே எதற்கும் வக்கில்லாதவர்கள் செய்பவை. அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. சமூக ஊடங்கங்களில் நன்றாகப் பொய் பரப்பத் தெரிந்தால் போதும், ஆட்சியையே எளிதாகப் பிடிக்கலாம் என்கிற அளவுக்கு உலகம் மாறிவிட்டது. அது அவர்களுக்கும் தெரியும். எனவே, இதுபற்றி இடை விடாமல் பேச வேண்டும். பரப்ப வேண்டும். நாளையும் நாளை மறுநாளும் திட்டமிட்டே நம் கவனத்தைத் திருப்பப் பல கிளர்ச்சிக் கதைகள் வெளியிடப்படும். அதில் கிறங்கிவிடாமல் இதில் கவனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கும் வேளையில் இதையும் தூத்துக்குடி கொலைகளையும் பொள்ளாச்சிக் கொடுமைகளையும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். எனவே, சமூக ஊடகப் போராளிகளின் தோளில் மிகப்பெரிய சுமை இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் கொல்லப்பட்டதற்காக மொத்த நாடே கொதித்தெழுந்தது. அதில் வெள்ளையர்களும் கலந்து கொண்டார்கள். அதனால்தான் உலகமெங்கும் இருந்து அறிவாளிகளும் திறமைசாலிகளும் அங்கு வந்து குவிகிறார்கள். அதில் பிழைக்க வந்த இந்தியர்களும் கலந்து கொண்டார்கள். இப்போது அதுபோன்ற, இன்னும் சொல்லப்போனால் அதைவிடப் பலமடங்கு கொடிய சம்பவம் ஒன்று தம் சொந்த மண்ணிலேயே நடந்திருக்கிறது. ஆனால் இதற்கு மட்டும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். நயமாகப் பேச்சுக் கொடுத்தால் சிலர் இதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். அதற்குள் இருப்பது அவர்களின் சாதி – மத – அரசியல் அழுக்குக் கணக்குகள். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை அடையாளம் மட்டும் கண்டுகொண்டு நமக்கான வேலையைப் பார்க்க வேண்டும். அதில் முக்கியமானது, இங்கே நடந்திருக்கும் இந்தக் கொடுமையை உலகறியச் செய்வது. அதற்கு உள்ளூரில் உள்ள பெரிய மனிதர்கள் மற்றும் பெரிய மனித வேடம் போடும் சில்லறைகள் எல்லோரையும் குரல் கொடுக்க வைக்க வேண்டியது மிக முக்கியம். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களைப் பற்றிப் பிரச்சனையில்லை. இந்த மண்ணையும் மக்களையும் ஆளத் தகுதியுடையவராகத் தன்னைக் கருதும் – காட்டிக்கொள்ளும் ஒவ்வொரு பேராசைப் பேர்வழியையும் பேரழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும். இழிவான தனிமனித ஆதாயங்களுக்காக அரசியல் நிலைப்பாடு எடுக்கும் – தன்னிடம் மக்களுக்கு வழிகாட்டும் தகுதி இருப்பதாக எண்ணிக்கொண்டு கருத்துகள் உதிர்க்கும் அரைவேக்காடுகளையும் களத்துக்குள் இழுக்க வேண்டும். வர மறுத்தால் அவர்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

கடைசியாக, காவல்துறை அரசியல் தலையீடில்லாமல் செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி நீண்ட காலமாகவே நிறைய பேர் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல்வது, ஆளுங்கட்சியின் தலையீடு பற்றி. அதைவிடக் கொடுமையாக இப்போது இந்தியா முழுக்கவுமே காவல்துறையோடு சேர்ந்துகொண்டும் அவர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யவும் ஓர் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த சல்லிப் பயல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை மற்ற கட்சிகள் எப்பாடு பட்டேனும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுபற்றி சில முக்கிய எதிர் கட்சிகளே மூச்சுவிடாமல் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் ஏற்பாடுகள் பற்றி ஏற்கனவே ஒரு சாரார் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்து, நம் நண்பன் யார் – எதிரி யார் – நண்பன் வேடத்தில் இருக்கும் பிழைப்புவாதி யார் என்பதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டிய காலம் இது. காவல்துறையை மட்டுமல்ல, நம் அரசியலையும் துப்புரவு செய்ய அருமையானதொரு வாய்ப்பு இது. ஏற்கனவே நிறைய உயிர்கள் கொடுக்கப்பட்டு உருவாகியிருக்கும் வாய்ப்பு இது. பெற்ற தகப்பன் கண் முன்னேயே மகனையும் மகன் கண் முன்னேயே தந்தையையும் அடித்துக் கொல்லும் அளவுக்கு, அதையும் ஆதரித்துப் பேசும் அளவுக்கு, அப்படியானவர்களின் கையில் நம் அதிகாரத்தைக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் அளவுக்குக் கீழான சமூகமில்லை நம்முடையது. நாமும் நம் பிள்ளைகளும் இவ்வளவு குரூரமான சமூகத்திலா வாழப் போகிறோம்? வேண்டாம்! இதற்கொரு முடிவு கட்டிவிடுவோம்.

***

பாரதீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here