சாத்தானின் மடி

14

ஷான் கருப்பசாமி

***

திடீரென்று வெட்டிய மின்னலில் நனைந்த மரங்கள் மின்னி மறைந்தன. காரின் கூரையில் உரத்துப் பெய்து கொண்டிருந்தது பெருமழை. மற்றபடி முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த சாலையைத் தவிர அடர்ந்த இருள்தான். பொட்டு வெளிச்சமில்லை. கௌதமுக்கு இப்போது தாம் எங்கே இருக்கிறோமென்று தெரியவில்லை. குப்பனூர் தாண்டிவிட்டது நினைவிருந்தது. அதன் பிறகு மனித நடமாட்டமோ வாகனங்களோ இல்லை. சரியான வழியில்தான் போகிறோமா என்று அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மொபைல் போனை எடுத்து கூகுள் மேப்பைப் பார்த்தால் ஏதாவது புரியும். ஆனால் அது இருண்ட திரையுடன் பக்கத்து இருக்கையில் கடந்த எட்டு மணி நேரமாகக் கிடக்கிறது. கூட்டல் கழித்தல் திறனோடு மனிதனின் திசையறியும் திறனையும் இப்போது இயந்திரங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுக் கொள்ளும் மனிதர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். அவருக்கு பூமியில் மட்டுமல்ல, வாழ்க்கையில் எங்கே இருக்கிறோமென்றும் புரியவில்லை.காலையில் அவருடைய வழக்கறிஞர் ராமுடன் பேசியதுதான் கடைசி. அதன் பிறகு சற்று நேரம் அலையலையாக வந்த அழைப்புகளை எல்லாம் தொடர்ந்து துண்டித்துப் பார்த்தார். ஆனால் அவை நிற்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து போனை அணைத்து வைத்துவிட்டார். அவருடைய பென்ஸ் காரை சென்னையிலேயே விட்டுவிட்டு அலுவலக வேலைகளுக்காக இருக்கும் இன்னோவாவை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஏனென்றால் பென்ஸ் காரில் உள்ளே ஒரு ஜிபிஎஸ் பொதிந்திருக்கும். அவர் செல்லுமிடத்தை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

அவர் இனி யாரையும் பார்க்க விரும்பவில்லை. அவர் முடிவு செய்துவிட்டார். இது அவருடைய இறுதிப் பயணம்.

சாலையில் இடதுபுறம் ஒரு பிரிவு முகப்பு விளக்கில் தெரிந்தது. அது எங்கே செல்கிறதென்று எந்த வழிகாட்டிப் பலகையும் இல்லை. ஆனால் அந்தப் பிரிவை ஒட்டி உயர்ந்து நின்ற பெரிய மரம் பழகிய  சாயலைக் கொண்டிருந்தது. பார்க்கர் எஸ்டேட் செல்ல வேண்டிய வழி அதுவாக இருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

காரை ஓரங்கட்டி நிறுத்தினார். உள் விளக்கைப் போட்டார். பக்கத்து இருக்கையில் அன்றைய செய்தித்தாள்கள் கிடந்தன. விழுப்புரத்தில் ஒரு பெட்டிக்கடையில் முகத்தை மறைத்துக் கொண்டு தண்ணீர் வாங்க நிறுத்தியபோது வாங்கியிருந்தார். ஒன்று விடாமல் எல்லா செய்தித்தாள்களிலும் அவரைப் பற்றிய செய்தி வந்திருந்தது.

‘காஃபி பீன்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம் – நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி’

‘தொழிலதிபர் கௌதம் உடனடியாக வங்கிக் கடன்களை செலுத்த நீதிமன்றம் உத்தரவு’

‘Coffee Beanz share prices at all-time low’

கண்களை இறுக மூடி அமர்ந்தார். அந்த இருளும் மழை உரத்துப் பெய்யும் தனிமையும் ஒரு வகையில் நிம்மதியாகக் கூட இருந்தது. கடைசியாக இங்கு வந்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய அப்பா வேணுபிரசாத்துடன் வந்தது. அவர் தாத்தா கிருஷ்ணன் இங்கு பதினெட்டு வயதில் வேலை செய்ய ஆரம்பித்து பிறகு அந்த எஸ்டேட்டையே வாங்குமளவு உயர்ந்தார். பிறகு தேர்ந்தெடுத்த உயர் ரக காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார். பணம் கொட்டியது. தன்னுடைய மகனைத் தான் உயிருடன் இருந்தபோதே தொழிலில் நுழைத்தார். கௌதமின் அப்பா வேணுபிரசாத்தும் ஒரு கூர்மையான அறிவுள்ள வியாபாரி. அவர்தான் காஃபி பீன்ஸ் (கடைசியில் இசட்) நிறுவனத்தை உருவாக்கியவர். தொழிலை வளர்த்தெடுக்க சென்னையில் குடியேறினார். தன்னுடைய காலத்தில் ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரித்த அவர் தொடர்ந்து பல காபி எஸ்டேட்டுகளை வாங்கிப் போட்டார். தாத்தா உயிருடன் இருந்த வரை இங்கு குடும்பத்தோடு எப்போதாவது வருவார்கள். வழக்கமான சொகுசுகள் குறைவு என்பதால் கௌதமுக்கு இந்த இடம் அவ்வளவு பிடிக்காது. தாத்தா இறந்த பிறகு பார்க்கர் எஸ்டேட் அவர்களுடைய நினைவிலிருந்து மெல்ல மறைந்து விட்டிருந்தது. ஏனெனில் இந்தியா முழுவதும் அவருடைய காஃபி பீன்ஸ் நிறுவனம் இருநூறு எஸ்டேட்டுகளை வைத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாகப் பார்த்தாலே வருடங்கள் ஆகிவிடும். இந்த எஸ்டேட் அவற்றோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. ஒரு எக்செல் ஆவணத்தின் பட்டியலில் ஒரு வரியாக மட்டுமே அது இருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்று கூட கௌதம் கேட்டுக் கொண்டதில்லை.  

கௌதம் பிறந்தது முதலே எந்த சிரமமும் தெரியாமல் வளர்க்கப்பட்டார். வீட்டுக்கு வர நேரமில்லாமல் அவர் தந்தை உழைத்தார். உலகெங்கும் பறந்தார். பணம் கொட்டியது. கேட்டது எல்லாம் கிடைத்தது. மும்பையில் கல்லூரி, திருமணம் என்று எல்லாமே அவர் விருப்பப்படி. தான் பயணம் செய்த விமானத்தில் பணிப்பெண்ணாக வந்த சரிகாவை ஒரு வருடம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஒரே மகள் சாருமதி இப்போது எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அப்பா கொடுத்த முதலீட்டில் பங்குச்சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு பெரிய அழுத்தங்களுக்கு ஆளாகாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் அவர் தந்தை வேணுபிரசாத் இறந்து போன நொடியில் கௌதமின் உலகம் தலைகீழாக மாறியது. அப்பாவின் வலது கரமாக இருந்த ஜான் அதே விபத்தில் அவரோடு இறந்து போனதால் கௌதம் திண்டாடிப் போனார். அடுத்த இரண்டு வருடங்களின் நாட்கள் போர்டு மீட்டிங், இன்வெஸ்டர் மீட்டிங், ஆடிட்டர்களுடன் சந்திப்பு என்று ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலைப் போலக் கடந்து போயின. அடுத்து எப்போது சாப்பிடுவோம் எப்போது தூங்குவோம் என்றே தெரியாது. ஆனால் மெல்ல சுதாரித்துக் கொண்டார். அவர் அப்பா கட்டி வைத்திருந்த சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரம் வலுவாக இருந்தது.  நிறுவனம் மீண்டும் நிமிர்ந்தது.

ஒரு நாள் காலையில் திடீரென்று வளர்ந்து நிற்கும் மகளைப் பார்த்துக் கண் கலங்கிவிட்டார். அவளுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படியையும் நின்று ரசிக்க அவருக்கு நேரமில்லை. ஏனெனில் அவரை நம்பி பத்தாயிரம் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வீட்டிலும் இது போலப் பிள்ளைகள் இருப்பார்கள். அவர் ஓடிக் கொண்டே இருந்தார்.

தொழில் ஓரளவு பிடிபட்டதும் ஏற்றுமதித்தரம் வாய்ந்த உயர் ரக காபியை இந்தியர்களுக்கும் அறிமுகம் செய்ய முடிவு செய்தார் கௌதம். இந்தியாவெங்கும் காபி பார்களைத் திறந்தார். ஒரு காபியின் விலை முந்நூறு என்று வைத்தபோது பத்திரிகைகள் கிண்டல் செய்து எழுதின. ஆனந்த விகடனில் முழுப்பக்க ஜோக்குகள் வந்தன. ஆனால் விலை காபிக்கு அல்ல, அதைப் பருகும் அனுபவத்துக்கு என்றார் கௌதம்.

அவர் தந்தை அளவுக்கு அவருக்கு வியாபார நுணுக்கம் தெரியவில்லை என்றார்கள் பொருளாதார மேதைகள்.

ஆனால் பலருடைய கணிப்பையும் பொய்யாக்கி காஃபி பீன்ஸ் கடைகள் இளைஞர்களின் புதிய கலாச்சார அடையாளமாகிப் போயின. தொழில் முறை சந்திப்புகளுக்கும் புதிய தலைமுறையின் அவசரக் காதலர்களுக்கும் உகந்த இடமாக அது மாறியது. இந்தியாவின் மிகப்பெரிய காபி நிறுவனமாக அவருடைய நிறுவனம் வளர்ந்தது. கௌதம் விருதுகளை வாங்கிக் குவித்தார். கடந்த ஆண்டு வரை அவரது நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையை ஆட்சி செய்தன.

எல்லாம் ஏறுமுகமாகப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அவரை சந்திக்க மத்திய இணை அமைச்சர் புனீத் மிஸ்ராவின் உதவியாளர் வந்திருந்தார். அவரது நிறுவனத்தில் அமைச்சர் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவரிடமிருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை விற்கும்படியும் கேட்டார். அதுவும் சந்தை விலையில் பாதிக்கு. தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றார் கௌதம். அவராகவே விற்றுவிட்டால் அவருக்கு நல்லது என்று மிரட்டல் தொனியில் பேசினார் அந்த உதவியாளர். கௌதம் உதவியாளரை அழைத்து அவரை வெளியே கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டார். மறுநாள் அமைச்சரிடம் இருந்து நேரடியாக போன் வந்தது.

“என்ன மிஸ்டர் கௌதம், முரண்டு பிடிக்கறீங்க. வேணும்னா மார்க்கெட் ப்ரைஸ் வாங்கிக்கங்க.”

“இல்லை சார்.. எனக்கு என்னோட ஷேர்ஸ் விக்கணும்னு அவசியமே இல்லை. அப்படியே விக்கறதா இருந்தாலும் அதுக்குன்னு ப்ராசஸ் இருக்கு”

“எனக்கு எல்லாம் தெரியும் கௌதம். ப்ராசஸ் எல்லாம் விடுங்க. உங்களால விக்க முடியுமா முடியாதா?”

‘ஐ அம் சாரி சார்…“

“அச்சா… என்கிட்டே நோ சொல்றவங்களை எனக்குப் பிடிக்காது கௌதம். அப்புறம்..இது என்னோட பர்சனல் நம்பர். சேவ் பண்ணி வெச்சுக்கோங்க. தேவைப்படும்”

“எதுக்கு சார்?”

“நான்தான் சொல்றேன்ல மிஸ்டர் கௌதம். தேவைப்படும்”

சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் புனீத் மிஸ்ரா.

அலுவலகத்தின் ஆடிட்டர் குருவில்லா அவர் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவரை அழைத்தார் கௌதம்.

“அந்த ஆளு கொஞ்சம் மோசம்தான்.  நேராவே யோசிக்க மாட்டான். நாம எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கணும்”

“நாம எல்லாத்தையும் சட்டப்படி செஞ்சுட்டு இருக்கோம் அங்கிள். இவங்களுக்கு எதுக்கு பயப்படணும்?”

“அவனுங்க எதையும் சட்டப்படி செய்ய மாட்டானுங்க கௌதம். அதான்”

அவர் சொன்னது சரிதான். அடுத்த நான்காவது நாள் அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது. வீட்டைப் புரட்டிப் போட்டார்கள். நாடெங்கிலும் அவரது அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. ஃபேக்டரிகளில் வேலை முடக்கப்பட்டது. தேவையற்ற வதந்திகள் கிளம்பின. அவருடைய கடையில் கோல்ட் காஃபி பாட்டிலில்  பல்லி கிடந்ததாக வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அவருடைய காபித் தோட்டங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதாக திடீர் போராட்டங்கள் நடந்தன. தினமும் ஏதோ ஒன்று. தொடர்ந்து வந்த எதிர்மறையான செய்திகளால் பங்குகளின் விலை குறையத் தொடங்கியது.

குருவில்லா அவரை அழைத்தார்.

“அந்த நாய் கேட்டதை கொடுத்துத் தொலைச்சுருப்பா. ஹார்வர்டுல படிச்சுட்டு வந்திருக்கான். பெரிய பெரிய ஃப்ராடுங்க இவனுக்கு க்ளாஸ் எடுத்திருப்பாங்க. வேறு சில பெரிய மினிஸ்டர்ஸ் பணமும் அவன் மூலமாத்தான் வெளுப்பாகுது. சட்டத்தால தொட முடியாத மாதிரி சேஃப் பண்ணித் தரானாம். அதான் ஒருத்தனும் அவனுக்கு எதிரா மூச்சு விடறதில்லை.”

வேறு வழியே இல்லாத ஒரு நாளில் கௌதம் புனீத் மிஸ்ராவை அழைத்தார். இப்போதுதான் புதிதாகப் பேசுவது போல் ஆரம்பித்தார் அந்த மந்திரி.

“சொல்லுங்க மிஸ்டர் கௌதம். உங்க கூட பேசறதுல எனக்குப் பெருமையா இருக்கு. எப்பேர்ப்பட்ட ஆந்த்ரப்ரனர் நீங்க… ”

“சார்… அந்த டீலிங் நாம முடிச்சுக்கலாம்”

“புரியலை.. எந்த டீலிங் மிஸ்டர் கௌதம்?”

“சார்..என்னோட ஷேர்ஸ்ல பத்து பர்சண்ட் எடுத்துக்கங்க. எனக்கு இந்த ரெய்டு வரதெல்லாம் நின்னா போதும்”

“அதாவது எனக்கு உங்களோட பத்து பர்சன்ட் ஷேர்ஸ் கொடுத்து ப்ரைப் பண்றீங்க. இந்த ரெய்டுகளை நான் நிறுத்தணும். அப்படித்தானே?”

“ஆமாம்”

“சாரி மிஸ்டர் கௌதம். நீங்க நினைக்கற மாதிரி ஆள் நான் இல்லை. உங்களோட ரெக்கார்ட்ஸ் எல்லாம் சரியா இருந்தா இந்த ரெய்டுக்கெல்லாம் நீங்க பயப்படத் தேவையில்லை. இந்த மாதிரி லஞ்சம் கொடுக்கற வேலையெல்லாம் வேற யார் கிட்டேயாவது வெச்சுக்கங்க”

கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் புனீத். கௌதமுக்கு எதுவும் புரியவில்லை.

இரண்டு நாட்களில் புரிந்தது. அவருடைய வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ வந்து விழுந்தது. அவரும் அமைச்சரும் பேசிய ஆடியோ. குருவில்லா பதறிக்கொண்டு அழைத்திருந்தார்.

“கௌதம்… நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே. இது உன் குரல் இல்லைன்னு ஒரு அறிவிப்பு மட்டும் கொடுத்துடலாம். கொஞ்ச நாள் மீடியாகிட்ட சிக்காம இரு…  சமாளிச்சுடலாம்” ஆனால் அவர் குரலில் பெரிய நம்பிக்கை இல்லை.

அந்த ஆடியோ உலக அளவில் டிரெண்டிங் ஆனது. எல்லா செய்தி சேனல்களிலும் பேசப்பட்டது. அது எப்படி வெளியானதென்று தனக்குத் தெரியாது எனப் பேட்டி கொடுத்தார் புனீத் மிஸ்ரா. அது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் தராமல் புன்னகைத்து மழுப்பினார். பணத்துக்கு மயங்காத அமைச்சர் என்று அவருக்கு ஒரு பெயரும் வந்தது. இப்போது காஃபி பீன்ஸ் பங்குகள் தொண்ணூறு சதவீதம் விலை குறைந்து விட்டன. அதை வெளிச்சந்தையிலேயே வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே கல்லில் மாங்காய்த் தோப்பு.

அதனைத் தொடர்ந்த மாதங்களில் நீதிமன்ற வழக்குகளுக்கே கௌதமுக்கு நேரம் சரியாக இருந்தது. வங்கிகள் தங்கள் கடன்களைக் கேட்டு திடீரென்று நெருக்க ஆரம்பித்தன. புதிய கடன்களைத் தர மறுத்தன. நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சம்பளம் தருவதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஊழியர்கள் முடிந்த அளவு சமாளித்தார்கள். பிறகு அவர்களும் கொடி பிடித்தார்கள். ட்விட்டரில் திட்டி எழுதினார்கள். 

இறுதியில் அவருடைய நிறுவனத்தின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தையும் சீல் வைக்கும்படி நீதிமன்ற உத்தரவு வந்தது. குடியிருக்கும் வீடு மட்டும் கருணையின் பேரில் தப்பியது.

கௌதம் இடிந்து போனார். ஒரு தொழிலை நடத்துவதற்குத் தேவையான சிறிய தில்லுமுல்லுகளை அவரும் செய்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் சட்டத்துக்கு உட்பட்டே அனைத்தையும் செய்து வந்தார். இந்த மாதிரி அடாவடி எல்லாம் அவருக்குப் புதிது. அவர் பரம்பரையாக உழைத்துக் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம் அவர் கண் முன்பாக சரிந்து விழுந்ததை விடவும் ஒரு ஊழல்வாதியாக மக்கள் முன் நிறுத்தப்பட்டது அவரை உலுக்கி விட்டது.

தீர்ப்பு வந்ததும் குருவில்லா அவருடைய தோளில் ஆதரவாகத் தட்டினார்.

“பாத்துக்கலாம் கௌதம். ஒரு பத்து நாள் பொறுத்துக்கோ. இந்த ஆர்டருக்கு ஸ்டே வாங்கிடலாம்னு லாயர் சொல்லியிருக்கார். கோர்ட் ஆர்டர் மெயில்ல அனுப்பியிருக்கேன். ஒரு தடவை டீடெயிலா படிச்சிரு”

வீட்டுக்கு வந்து விஸ்கி பாட்டிலைத் திறந்து அமர்ந்துவிட்டார். சரிகா அவர் தலையைத் தடவி ஏதோ சொல்லிவிட்டுப் போனது அவர் காதில் விழவில்லை. தீர்ப்பு நகலை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தார். சீல் வைக்கப்பட்ட சொத்துகளின் விவரம் பட்டியலிடப்பட்டிருந்தது. இனி ஒன்றும் மிச்சமில்லை.

புரட்டிக் கொண்டே வந்தவரின் கண்கள் சுருங்கின. ஒரே ஒரு சொத்து மட்டும் நீதிமன்றத்தால் முடக்கப்படவில்லை. சீல் வைக்கப்படவில்லை. அது பார்க்கர் எஸ்டேட். வக்கீல் ராமுக்கு போன் அடித்தார்.

“ஓ.. அதுவா… அது இன்னும் உங்க தாத்தா பேர்லதான் இருக்கு கௌதம். அதனால கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. உங்க அப்பாகிட்டே கேட்டப்போ மாத்த மனசு வரலைன்னு சொன்னார். அது இப்போ யூஸ் ஆகுது. உங்க தாத்தா இன்னும் உங்க கூட இருக்கார். கவலைப் படாதீங்க.”

லேசான போதையோடு அமர்ந்திருந்த போது டென்னிஸ் வகுப்பிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தாள் சாருமதி.

“சாரு…” என்றபடி எழுந்தார் கௌதம்.

வழக்கமாக இவரை வீட்டில் பார்த்தால் டாடி என்று அழைத்தபடி ஓடி வருவாள். அவர் கேட்கிறாரோ இல்லையோ பள்ளியில் நடந்தது, வீட்டில் நடந்தது என்று அவளுக்குச் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். ஆனால் இன்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக மாடிக்குப் போனாள். கௌதம் அவளைத் தொடர்ந்து போனார். கதவை அறைந்து சாத்தினாள்.

“சாரு… ப்ளீஸ் ஓபன் தி டோர்… என்ன ஆச்சு உனக்கு? கம் ஆன்… நீயும் இப்படிப் பண்ணாதடா.. ப்ளீஸ்”

அவள் திறக்கவில்லை. எல்லாக் கதவுகளையும் போல இந்தக் கதவும் அடைத்துக் கொண்டது அவருக்கு. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு சரிகா ஓடி வந்தாள்.  அவரை சமாதானப்படுத்தினாள்.

“அவ க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசியிருக்காங்க. ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்க போல. கொஞ்சம் அப்செட்டா இருக்கா. கொஞ்சம் டைம் கொடுங்க கௌதம்.. சரியாகிடுவா… குழந்தைதானே..”

என்ன நடந்தாலும் விடாது போராடிக் கொண்டிருந்த கௌதமுக்கு அந்த நொடியில்தான் இழை அறுந்தது. இனி யாருக்காகப் போராட வேண்டும்?

தட்டுவதை நிறுத்திவிட்டுத் தளர்வாகத் திரும்பி வந்தார். முழு பாட்டிலையும் குடித்துக் கொண்டு இரவு முழுக்க விழித்திருந்தார். அதிகாலையில் இன்னோவாவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். யாரிடமும் சொல்லவில்லை. பென்ஸ் அதன் இடத்தில் இருந்ததால் நீண்ட நேரம் யாரும் தேடவில்லை. மதியத்துக்கு மேல்தான் சரமாரியாக அழைப்புகள் வர ஆரம்பித்தன. குறிப்பாக சரிகாவிடமிருந்து. யாரிடமாவது பேசினால் மனது மாறிவிடும் என்று தோன்றியது. போனை அணைத்து வைத்துவிட்டார்.

ஒரு பெருமூச்சுக்குப் பிறகு அந்தக் குறுகிய சாலையில் இன்னோவாவைத் திருப்பினார். அவர் கடைசியாக வந்த காலத்தில் அது மண் பாதையாக இருந்தது. இப்போது தார் போட்டிருந்தார்கள். கொஞ்ச தூரம்தான். பிறகு மொத்தமாக சாலையை மழை நீர் அரித்திருந்தது. தார் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு திட்டுகளாக மட்டுமே மீதமிருந்தது. ஒரு சிற்றோடை போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எது மேடு எது பள்ளம் என்று தெரியாமல் வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு வண்டி செல்லும் அளவுக்குத்தான் அந்தத் தடத்தின் அகலம் இருந்தது.

இரண்டு பக்கங்களிலும் காபி மரங்கள். ஆம் அவை மரங்கள்தான். செடிகள் அல்ல.

கால் மணி நேரம் அந்தச் சாலையில் தட்டுத் தடுமாறிச் சென்ற பிறகு அவருக்குக் கொஞ்சம் வழி பிடிபடத் தொடங்கிவிட்டது. பல பெரிய பழகிய மரங்கள் தட்டுப்படத் தொடங்கின. உரத்து ஓடிக் கொண்டிருந்த ஒரு காட்டாற்றைக் கடந்ததும் பார்க்கர் எஸ்டேட்டின் எல்லை தொடங்கியிருந்தது. இந்த இடம் மட்டும் காடு போல அடர்ந்திருந்தது.

முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் துருப்பிடித்த அந்தப் பலகை தென்பட்டது. பார்க்கர் எஸ்டேட்ஸ். அவர் தாத்தா காலத்தில் வேலைப்பாடுகளுடன் செய்து வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது பாதி சாய்ந்திருந்தது. சுற்றிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து பெருமளவு மறைத்திருந்தன. உயரமான கேட் சாத்தியிருந்தது. அதன் சட்டமும் கம்பிகளும் முழுமையாகத் துருப்பிடித்திருந்தன.

அவருக்கு இப்போது ஒரு பயம் வந்தது. இதை இப்போது யார் பராமரித்து வருகிறார்கள் என்று யாரிடமும் கேட்டுக் கொள்ள வாய்ப்பில்லை. யாராவது இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டார். இங்கே யாருமே இல்லையென்றால் என்ன செய்வது? பிறகு தலையில் அடித்துக் கொண்டார். அவர் வந்திருக்கும் வேலைக்கு இங்கு யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? உண்மையில் யாருமே இல்லாவிட்டால் கூட நிம்மதிதான்.

ஏனெனில் அவர் வந்திருப்பது சாத்தானின் மடியைத் தேடி.

பார்க்கர் எஸ்டேட்டின் பங்களாவிலிருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் அடர்ந்த புதர்களையும் உயர்ந்த மரங்களையும் கடந்து சென்றால் மலையின் விளிம்பில் ஒரு தட்டையான பாறை இருக்கும். அது சிறிதளவு மலைச் சரிவிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். இருபது பேர் வட்டமாக அமர்ந்து பேசலாம். அந்த இடம் பார்க்கர் எஸ்டேட்டுக்கு சொந்தமானது. அதற்கு டெவில்ஸ் லேப் என்று பெயர். தமிழில் அதை சாத்தானின் மடி என்று அவன் தாத்தா மொழிபெயர்த்து அதை ஒரு கல்வெட்டிலும் பொறித்து வைத்திருந்தார். உள்ளுர் மக்கள் சாத்தா மடி என்பார்கள். சிலர் சாஸ்தா மடி என்று அதன் பொருளையே மாற்றிவிடுவார்கள். சாத்தானின் மடியிலிருந்து வெளியே ஒரு அடி வைத்தால் கிடுகிடு பள்ளம். தரை தெரியாது. சாத்தானின் மடிக்கு ஒரு கதை இருந்தது. உள்ளத்தை உருக்கும் கதை. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்த எஸ்டேட்டில் மேனேஜராக இருந்தவரின் மனைவி லாரா. அயர்லாந்துக்காரி. அவள் கணவனைப் பாம்பு கடித்துவிட்டது. மருத்துவமனைக்குச் செல்ல மலையிறங்க வேண்டும். பேச்சு மூச்சில்லை. அவன் இறந்துவிட்டானென்று யாரோ சொல்ல அழுது அரற்றிக் கொண்டு ஓடிச்சென்று குதித்து விட்டாள். பிணம் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்கள் தேடிய பிறகு துணிகள் மட்டும் கிடைத்தன. சில எலும்புகளும். ஆனால் உள்ளூர் வைத்தியத்தில் கணவன் பிழைத்துவிட்டான். விஷயம் தெரிந்ததும் பித்துப் பிடித்தது போல் அலைந்து கொண்டிருந்த அவன் ஒரு இரவில் இதே இடத்தில் வந்து குதித்துவிட்டான். அதிலிருந்து இந்த இடத்துக்கு உள்ளூர் ஆட்கள் வர அஞ்சுவார்கள். அங்கே சென்றால் லாரா காதுக்குள் வந்து பேசுவாள் என்றும் குதிக்க வேண்டுமென்ற ஆசையைக் கிளப்புவாள் என்றும் கதைகள் உலவுகின்றன. அப்படி ஒரு இடம் இருப்பதே அந்த ஊரைத் தாண்டி யாருக்கும் தெரியாது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அதற்கு டெவில்ஸ் லேப் என்று பெயரிட்டவர் பார்க்கர்தான். இந்தக் கதை அந்தப் பகுதியில் பிரசித்தம் என்பதால் அந்த எஸ்டேட்டையும் யாரும் விலைக்குக் கேட்க அஞ்சுவார்கள்.

அவன் தாத்தாவுக்கு பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அந்த இடத்தை அவர் அத்தனை நேசித்தார். அங்கே ஒரு இரும்பு பெஞ்ச் செய்து பாறையில் பதித்து வைத்திருந்தார். மாலை நேரத்தில் அங்கே அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்ப்பது அவருக்குப் பிடிக்கும். கௌதம் அங்கே வரும்போதெல்லாம் அழைத்துச் சென்றுவிடுவார். இருட்டிய பிறகு திரும்புவார்கள். பங்களாவுக்குத் திரும்பும்வரை கௌதமுக்கு நடுக்கமாகத்தான் இருக்கும்.

சாத்தானின் மடிதான் கௌதமின் இறுதி இலக்கு. ஆனால் அதற்கு முன் அவருக்கு சில வேலைகள் மிச்சம் இருந்தன. அதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது.

மூடியிருந்த கேட்டின் முன்பாக காரிலிருந்து இறங்கினார். காவலர்கள் யாருமில்லை. வீர் வீரென்ற ராக்கோழிகளின் சத்தம் காதைக் கிழித்தது. சென்னையில் அவர் இந்த சத்தத்தைக் கேட்டதே இல்லை. கேட்டைத் தள்ளிப்பார்த்தார். திறந்து கொண்டது. முழுதாகத் திறந்து வைத்துவிட்டுத் திரும்பி வந்து  காரில் ஏறி அதை உள்ளே செலுத்தினார். இந்த எஸ்டேட்டை உருவாக்கிய காலத்தில் கட்டப்பட்ட பங்களா சற்றுத் தொலைவில் வந்தது. இரண்டு மாடிகள். கற்களாலான வளைவுகள். உயரமான மரச் சன்னல்கள் என்று மிக அழகான வீடு அது. விளக்குகள் எதுவும் எரியவில்லை. அவருக்கு சிறு வயது நினைவுகள் அலை போல் எழுந்து வந்தன. பங்களாவுக்கும் கேட்டுக்கும் இடையே சைக்கிள் ஓட்டி விளையாடியிருக்கிறார்.

காரை போர்ட்டிகோவில் கொண்டு சென்று நிறுத்தினார். கருங்கற்களால் ஆன படிகளில் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆனால் முதல் படியில் யாரோ தடியோடு நின்றார்கள். கையில் ஒரு டார்ச் லைட்.

“யாரு அது? யாரு வேணும்?”

பயமோ முதுமையோ குரலில் சிறிது நடுக்கம் தெரிந்தது.

“நீங்க யாருன்னு சொல்லுங்க?” என்றார் கௌதம் பதிலுக்கு.

அதிகாரம் மிக்க அந்தக் குரலைக் கேட்டதும் டார்ச் லைட் பளிச்சென்று அவர் முகத்தில் அடித்தது.

“சின்னவரே…” என்ற குரல் எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த முதிய உருவம் எங்கோ தேடி ஒரு விளக்கைப் போட்டது. சோகையாக எரிந்த ஒரு குண்டு பல்பு அந்த இருளில் அதீத வெளிச்சத்தைத் தந்தது.

“என்னைத் தெரியலையா சாமி.. உங்க மருதையன்”

மருதையனின் உருவம் விளக்கு வெளிச்சத்துக்குள் வந்தது. சில விநாடிகள் திகைப்புக்குப் பிறகு மெல்ல கௌதமுக்கு நினைவுகளில் அந்த உருவம் நிழலாடியது. நண்பன், வேலைக்காரன், அடியாள், காவலன் என்று எல்லாவிதத்திலும் மருதையன் இல்லாமல் அவன் தாத்தாவை சிந்திக்க முடியாது. பாட்டி இறந்த பிறகு சமைப்பது, துவைப்பது அவருக்கு சவரம் செய்து விடுவது என்று அவர் தாத்தாவுக்கு மருதையன்தான் எல்லாமே. தேர்ந்த வேட்டைக்காரர். காட்டுக்குள் போனால் ஏதாவது ஒரு பறவையோ மிருகமோ அடித்து எடுத்து வருவார். சிறுனாக இருந்தபோது தன்னைத் தோள்களில் தூக்கித் திரிந்த மெல்லிய உயர்ந்த ஆனால் இரும்பு போல் உறுதியான அந்த தேகம் உருவம் இப்போது தளர்ந்து சுருங்கியிருந்தது. பொருந்தாத சட்டை ஒன்றை தொளதொளவென்று அணிந்திருந்தார். கையிலிருந்த தடியை ஊன்றி நின்றிருந்தார். முகத்தில் ஏற்கனவே இருந்த சுருக்கங்கள் மூன்று மடங்காகியிருந்தன. இலவச கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தரப்படும் தடித்த கண்ணாடி அணிந்திருந்தார். அகலச் சிரித்த வாயில் சில பற்கள் தவறியிருந்தன. ஆனால் அதே புன்னகை. தொண்ணூறு வயதாவது இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். அவர் இன்னும் உயிரோடு இருப்பார் என்றெல்லாம் கௌதம் எதிர்பார்த்திருக்கவில்லை.

“மருதையனா…” ஆச்சரியத்தை மறைக்க முடியவில்லை.

“மண்டையப் போட்டிருப்பேன்னு நினைச்சீங்களா சாமீ” புன்னகை மாறாமல் கேட்டுவிட்டு இறங்கி காருக்கு அருகில் வந்தார். கௌதமை அவர் சாமி என்றுதான் அழைப்பார்.

“பாத்தவுடனே என்னைக் கண்டுபிடிச்சுட்டே”

“அய்யாவ நீங்க சின்னவயசுல பாத்ததில்லை. நான் பாத்திருக்கேன். அதான். இத்தன வருசமாச்சா சாமி உனக்கு இந்தக் கெழவனை வந்து பாக்க… பொட்டிய எடுத்துக்கவா?”

“பொட்டி எதுவும் இல்லை”

கௌதம் அவரது கண்களைத் தவிர்த்தார்.

“அப்புறம் நான் வந்தது இங்கே யாருக்கும் தெரியவேணாம். சரியா?”

அவரையே ஊடுருவுவதுபோல் உற்றுப் பார்த்தார் மருதையன்.

“சாப்பிட்டியா சாமீ… ”

“ம்ம்…” கௌதம் ப்ரீப்கேசை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். .

“இருபத்து நாலு வருசம் கழிச்சு எஞ்சாமி வந்திருக்கே. சொல்லிட்டு வந்திருந்தா விருந்தே ஏற்பாடு பண்ணியிருப்பேனே சாமி. சித்த இரு  நாம் போயி உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டாறேன். ”

அத்தனை வருடங்கள் ஓடிப் போனதை அவராலேயே நம்ப முடியவில்லை.

“நான் சாப்பிட்டாச்சு…”

“சாமீ… பசிக்குன்னு ஒரு குரல் இருக்கு. உன்னவிட எனக்கு அது நல்லாக் கேக்கும். நீ உள்ள வா மொதல்ல”

கௌதமை அழைத்துக்கொண்டு சென்று படுக்கை அறையைக் காட்டினார். அது அவர் தாத்தாவின் அறை. எப்படி இருந்ததோ அச்சுப் பிசகாமல் அப்படியே இருந்தது. எந்தப் பொருளும் இருந்த இடத்தை விட்டு அசைந்திருக்கவில்லை. காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் போனது போலிருந்தது. தாத்தாவின் சாய்வு நாற்காலியைத் தொட்டுப் பார்த்தார். அதில் அமர்ந்து சாய்ந்து கொண்டார். தாத்தாவின் மடியில் மீண்டும் அமர்வது போலிருந்தது. அந்த நாற்காலி இப்போது சிறுத்துப் போனதாகத் தோன்றியது. இல்லை அவர்தான் பெருத்துவிட்டார்.

ஒரு கூஜாவில் தண்ணீரும் கண்ணாடிக் குவளையும் கொண்டு வந்து வைத்தார் மருதையன். எங்கிருந்தோ தேடி அவசரமாகக் கழுவி எடுத்து வந்திருந்தார்.

“சாமி நீ துணி மாத்திட்டு சித்த உக்காரு… அந்தப் பொட்டில அப்பாவோடது துணி எதாவது இருக்கும். நான் போனதியும் வந்தர்றேன்.”

“எங்க போறீங்க மருதையன்? பேசாம உள்ளே வாங்க”

“இதோ.. வந்துடறேன்… உனக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” அவர் படபடத்தார். அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு ஒரு துப்பட்டியைச் சுற்றிக் கொண்டார். தலையைச்சுற்றி உருமாலை கட்டிக் கொண்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தார். எவ்வளவு தடுத்தும் அவர் கேட்கவில்லை. அவர் கௌதமை இன்னும் அடம் பிடிக்கும் சிறுவனாகத்தான் பார்த்தார். கௌதமுக்கு எரிச்சலாக வந்தது.

“மருதையன்…  இப்ப உள்ளே போறீங்களா இல்லையா? ஒரு தடவ சொன்னா புரியாது?”

திடீரென்று எழுந்த கோபமான குரலில் அவர் கொஞ்சம் மிரண்டு போனார். இது முதலாளியின் குரல். தலையசைத்தார்.

“ஆகட்டுஞ்சாமி.. உம்பட இஷ்டம்..”

குச்சியை ஓரமாக சாய்த்து வைத்தார். காயப்பட்டது போல் அவர் முகம் தொய்ந்து போயிருந்தது. படியிலேயே அமர்ந்து கொண்டு மிச்சமிருந்த பீடியை இழுக்கத் தொடங்கினார்.

கௌதம் தனது அறைக்கு வந்து சாத்திக் கொண்டார். வரும் வழியிலேயே விஸ்கி வாங்கி வந்திருந்தார். அதை எடுத்து வைத்தார். கடைசி பாட்டில். தண்ணீர் கலந்து வைத்துக் கொண்டு அமர்ந்தார்.

ப்ரீஃப் கேஸில் இருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தார். ஒரு கடிதம் எழுதவேண்டும். எல்லாப் பழிகளையும் கடன்களையும் ஏற்றுக் கொள்ளும் கடிதம். அவரிடம் வேலை செய்பவர்களுக்கு, அவர் மனைவிக்கு, மகளுக்கு, நண்பர்களுக்கு இந்த முடிவை விளக்கவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. முக்கியமாக இது பலவித சட்ட சிக்கல்களிலிருந்து அவர்களைக் காக்கும்.

எழுதும்போதே பலமுறை கண்களைக் கண்ணீர் மறைத்தது. சில சொட்டுகள் கடிதத்தின் மீதும் விழுந்தன. மனைவிக்கும் மகளுக்கும் தனியாக ஒரு கடிதம் எழுத எண்ணியிருந்தார். ஆனால் அதற்கான சக்தி அவரிடம் இல்லை.

பாதிக் கடித்த்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று திறந்தார்.

மருதையன்தான். கையில் ஒரு தட்டோடு நின்றார். வாசனை உயிரைத் துளைத்தது.

“ என்ன இது?”

ஏதும் பதில் சொல்லாமல் தட்டை அவரிடம் தந்துவிட்டுச் சென்றார் மருதையன். அவர் கோபமாக இருக்கிறார் என்று புரிந்தது. அது ஒரு பறவையின் மாமிசம். கோழி இல்லை. இந்த நேரத்தில் எங்கே எப்படிப் பிடித்து வந்து சமைத்தார் என்று கௌதமுக்குத் தெரியவில்லை. ஆனால் சுட்ட கறியின் வாசனையும் காலையிலிருந்து சாப்பிடாத வயிறும் ஏற்கனவே ஒன்றோடொன்று காதல் செய்யத் தொடங்கியிருந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு வந்து காகிதங்களை எடுத்து வைத்து விட்டு விஸ்கியோடு அமர்ந்தார்.

எப்போது தூங்கினார் என்று நினைவில்லை. எழுந்த போது வெளிச்சம் வந்திருந்தது. டீப்பாயின் மீதிருந்த புட்டியில் கால்பாகம் விஸ்கி மீதம் இருந்தது. தட்டில் பறவையின் எலும்புகள் மட்டும் கிடந்தன. தலையை லேசாக வலித்தது.

ஜன்னல் வழியே பார்த்தார். அடர்ந்த புதர்களும் மரங்களும் தாண்டி எதுவும் தெரியவில்லை. இடைவிடாத பூச்சிகளின் ரீங்காரம். சற்று நேரத்தில் அது பழகிவிட்டது. அவர் இதுவரை கேட்டறியாத பறவைகளின் ஓசை. கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தார். காலை பத்து மணி.

அறையின் கதவைத் திறந்தார். பங்களா அமைதியாக இருந்தது. பகல் நேரத்தில் அது இன்னும் பழமையாகத் தெரிந்தது. புராதன சுவர் கடிகாரம் ஓடுவதை நிறுத்திப் பல ஆண்டுகளாகியிருக்கும். டைனிங் டேபிள் மீது ஃபளாஸ்க்கும் அதன் அருகே கோப்பைகளும் இருந்தன. ஃப்ளாஸ்க்கைத் தூக்கிப் பார்த்தார். கனமாக இருந்தது. காபி தேவைப்படும் போலிருந்தது. ஊற்றிக் கொண்டு வெளியே வந்தார்.

மருதையன் எங்கே போனாரென்று தெரியவில்லை. பங்களாவை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த சிறு குடில் இருந்தது. சட்டையும் லுங்கியும்  வெளியே காய்ந்தது. கதவு பூட்டி இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தனிமை கௌதமுக்கு ஒருவித நிம்மதியை அளித்தது.

காபியை உறிஞ்சியபடி சுற்றிலும் பார்த்தார். பங்களாவின் போர்ட்டிகோவிலிருந்து ஓரளவு எஸ்டேட் முழுவதையும் பார்க்க முடியும். அப்படித்தான் அமைத்துக் கட்டியிருந்தார்கள். இந்த எஸ்டேட் பற்றி மொத்தமாக அவர் மறந்து போய் விட்டிருந்தது இப்போதுதான் உறைத்தது. காபிச் செடிகள் எல்லாம் அழிந்து வேறு காட்டு மரங்களும் கொடிகளும் வளர ஆரம்பித்திருந்தன. மனிதனிடம் தற்காலிகமாக இருந்த இடத்தை இயற்கை மீண்டும் திருப்பி எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆனால் பங்களா மட்டும் இன்னும் பராமரிப்பில் இருந்தது. சுத்தமாகவும் பயன்படுத்தும்படியாகவும் இருந்தது. சில பகுதிகளில் விரிசல்கள் விட்டிருந்தன. செடிகள் முளைக்கத் தொடங்கியிருந்தன.

போர்ட்டிகோ அருகே இருந்த ஒரு கொய்யா மரம் அவருக்கு நினைவிருந்தது. வெளியே வந்து பார்த்தார். இப்போதும் அது காய்த்துக் குலுங்கியது. ஒன்றைப் பறித்துக் கடித்தார். அதே ருசி. இன்னொன்று இன்னும் ஒன்று எனப் பறித்துக் கடித்தார். அப்போதுதான் அது பசி என்று புரிந்தது.

அவர் நினைத்தால் இப்போதே கூட டெவில்ஸ் லேப் சென்று குதித்துவிட முடியும். ஆனால் கடிதம் இன்னும் முடியவில்லை.  அது தவிர ஏனோ ஒரு நாளின் இறுதியில் இறந்து போவது அவருக்கு சரியான முடிவாகப்பட்டது. இறுதியாக ஒரு தினத்தை வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று நினைத்தபடியே அடுத்த கொய்யாவைக் கடித்தார்.

கீழே இருந்து புதர்களின் வழியாக மருதையன் பங்களாவை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவருடன் ஒரு இளம் பெண். திருத்தமான முகம். சுருள் சுருளான முடியை ஒரு ஜடைக்குள் கட்டுப்படுத்த முயன்று தோற்றிருந்தாள். சுடிதார் அணிந்து அதன் மீது ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். கௌதமின் முகம் மாறியது. அவர் இங்கிருப்பதை வேறு யாரும் அறிவதை அவர் விரும்பவில்லை. குறைந்தது அன்று இரவு வரையிலாவது.

மருதையன் ஒரு மூட்டையை சுமந்தபடி வந்தார். அந்தப் பெண்ணின் கையில் ஒரு ஒயர் கூடை. அதில் காய்கறிகள், கீரைக்கட்டு என்று நிரம்பியிருந்தது.

மருதையன் அவர் எதிரே வந்து நின்றார். அந்தப் பெண்ணும் வந்து நின்றாள்.

“என்ன மருதையன்.. உங்களுக்கு சொன்னா புரியாதா? நான் வந்திருக்கறதை இப்போ ஊர் முழுக்க டமாரம் அடிச்சாச்சா?”

அவர் குரலில் கோபம். மருதையன் அவரிடம் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தார். அந்தப் பெண்தான் பேசினாள்.

“நான் செல்வி.. அவரோட பேத்தி… என்னைத் தவிர தாத்தா யாருக்கும்  எதுவும் சொல்லல சார்”

மருதையன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு அவரைக் கடந்து போனார்.

“அவருக்குக் கண்ணு கொஞ்சம் மந்தமாயிடுச்சு. உங்களுக்குச் சமைச்சுப் போட முடியாது. அதான் ஊருக்கு வந்து என்னைக் கூப்பிட்டுச்சு. நான் ஒரு மருந்துக்கடைல வேல பாக்கறேன். கொஞ்சம் நல்லா சமைப்பேன். நீங்க எத்தனை நாள் இருப்பீங்கன்னு சொன்னீங்கன்னா அது வரைக்கும் லீவு சொல்லிடுவேன்..”

அந்தக் கேள்வி பகீரென்று இருந்தது அவருக்கு.

“நான் இன்னைக்கு ஒரு நாள்தான் இருப்பேன்” என்றார் கௌதம் இறுக்கமாக.

“இப்ப சாப்பிட ஏதாவது வேணுமா சார்?”

அவருக்கு இது எதுவும் பிடிக்கவில்லை. அவரைத் தனியாக விட்டால் போதும்.

“எதுவும் வேணாம்”

அவள் வற்புறுத்தவில்லை.

“அப்ப நான் நேரா லஞ்சுக்கே ரெடி பண்ணிடறேன். ராத்திரிக்கு தாத்தா முயல் அடிச்சுட்டு வரேன்னு சொல்லியிருக்கு. உங்களுக்குப் பிடிக்குமாமே?”

அவருக்கு நினைவில்லை. அவர் சொல்வதை யாரும் கேட்பதாகவும் இல்லை. கௌதம் மீண்டும் அறைக்குள் சென்று சாத்திக் கொண்டார். பல அடித்தல் திருத்தல் கிழித்தல்களுக்குப் பிறகு தன் இறுதிக் கடிதத்தை எழுதி முடித்தார். மறக்காமல் புனீத் மிஸ்ராவையும் அதில் குறிப்பிட்டார். கடிதத்தை எங்கே வைத்தால் எளிதில் கண்ணில் படுமென்று அறையைச் சுற்றி வந்து யோசித்தார். இறுதியில் ப்ரீஃப் கேஸில் வைத்து அதைப் படுக்கை மீது வைத்து விடுவதென்று முடிவு செய்தார்.

செல்வியின் சமையல் மிகவும் சுவையாக இருந்தது. கடைசியாக அவருக்கு உணவளித்த அன்னபூரணி அவள். சொல்லிப் பாராட்டினார்.

“தாத்தா இதைவிட அருமையா செய்யும் சார். நிறைய சமைக்க சொல்லிக் கொடுத்துச்சு சார். நான் இப்போ பாதி மறந்துட்டேன்.” செல்வி வெட்கப்பட்டாள்.

“மருதையன் எங்கே?”

“வேட்டைக்குப் போயிருக்கு”

“எஸ்டேட்டை இப்ப அவர்தான் பாத்துக்கறாரா?”

“ஆமா சார். அது  மட்டும்தான் இங்கே கெடக்குது”

“ஏன் வேற யாரும் இங்கே ஸ்டாஃப் இல்லையா?”

செல்வி ஏதோ சொல்ல முயன்று சற்றுத் தயங்கித் தயங்கி கால் மாற்றி நின்றாள்.  கௌதம் சாப்பிடுவதை நிறுத்தி அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் தன்னோடு போராடிக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவளாக சொன்னாள்.

“கம்பெனில இருந்து எஸ்டேட்டுக்கு பணம் எதுவும் வரதே இல்லை சார்”

கௌதம் முகத்தில் அதிர்ச்சி.

“வாட்?”

“ஆமா சார்.. கடைசியா பணம் வந்து இருவது வருசம் இருக்கும்.”

“மருதையன் எப்படி சமாளிக்கறார்?” இதைக் கேட்கவே அவருக்கு வெட்கமாக இருந்தது.

“தெம்பா இருந்த வரைக்கும் வெளி எஸ்டேட்டுக்கு கூலி வேலைக்குப் போவார். இப்ப அதுவும் முடியறதில்லை. இப்ப கூட என் அம்மாகிட்ட கடன் வாங்கித்தான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்துச்சு”

கௌதமுக்கு சாப்பாடு அப்படியே தொண்டையில் நின்றுவிட்டது. செல்விக்கு அவர் சங்கடம் புரிந்தது. ஆனால் இதை இன்று சொல்லியாக வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டிருந்தாள்.

“தாத்தாவுக்கு இது கோவில் மாதிரி சார். சம்பளம் எல்லாம் அவருக்கு தூசு. நீங்க என்னிக்காவது ஒரு நாள் வருவீங்கன்னு சொல்லிட்டே ஒவ்வொரு நாளும் இதையெல்லாம் சுத்தமா துடைச்சு வெச்சிருக்கார். நீங்க வர இருவது வருசமாயிருச்சு. ஆனா பூரிச்சுப் போயிட்டார். இத்தன சந்தோசமா அவரைப் பாத்ததே இல்லை நான்.”

“எனக்கு யாருமே சொல்லலை. மருதையன் எனக்கு போன் பண்ணியிருக்கலாம்” அவருக்கு நிஜமாகவே வருத்தமாக இருந்தது.

“நானே பல தடவை பண்ணித் தரேன்னு சொன்னேன் சார். எனக்கு ஒரு வேலை, அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும், ஒரு நாளு எஞ்சாமி வரும். அப்ப பேசிக்கலாம். அது வரைக்கும் எனக்குக் குடுத்த வேலைய நாம் பாக்கறேன்னு சொல்லிடுச்சு. இப்ப கூட நானாத்தான் பணத்தைப் பத்தியெல்லாம் உங்ககிட்டே பேசறேன். தாத்தாகிட்டே சொல்லிடாதீங்க. கெட்ட வார்த்தைல திட்டும்”

என்ன மாதிரியான பிறவி இவர். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? கௌதமுக்குக் கோபம் வந்தது. தன் மீதா அவர் மீதா என்று புரியவில்லை. ஆனால் இப்போது அவரால் எதுவும் செய்ய முடியாது. அவருக்கும் மருதையனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் மருதையனுக்குப் பணமில்லாமல் வாழும் கலை தெரிந்திருந்தது. இப்போது அவர்தான் செல்வந்தர்.

எழுந்து எஸ்டேட் உள்ளே நடக்கத் தொடங்கிவிட்டார். நேற்றுப் பெய்த மழையில் தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஆனால் நனைந்த மரங்கள் ஒருவிதத் துள்ளலுடன் இருந்தன. பாதைகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் புதர் மண்டியிருந்தன.  கையால் விலக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு அடியாக அவர் கால்கள் அவரை சாத்தானின் மடியை நோக்கி இழுத்துப் போயின. வழியை கவனமாகப் பார்த்துக் கொண்டார். இரவு மறுபடி வரவேண்டுமல்லவா?

அந்த இடம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தது. புதர்கள் மட்டும் கூடுதலாக மண்டியிருந்தன. அவர் தாத்தா கட்டி வைத்திருந்த பெஞ்ச் எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. அதனடியில் ஈரமான நத்தைகள் ஊறிக் கொண்டிருந்தன. மெல்ல அதில் அமர்ந்து எதிரே தெரிந்த சமவெளியையும் மலைகளையும் பார்த்தார். ஆனால் சிறுவயதில் ஏற்பட்ட அதே அச்சம் அந்த இடத்தைப் பார்க்கும்போது இப்போதும் எழுந்தது. மிகுந்த யோசனைக்குப் பின் விளிம்பில் சென்று எட்டிப் பார்த்தார். வயிற்றுக்குள் குய்யென்று ஏதோ சுருண்டது. அவசரமாகப் பின்வாங்கினார். ஆனால் இரவில் எதுவும் தெரியாது. கண்ணை மூடிக் கொண்டு குதிக்க வேண்டியதுதான் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

வந்ததி விட வேகமாகத் திரும்பி வந்து தனது அறைக்குச் சென்றார். தாத்தாவின் ஈசி சேரில் அமர்ந்தவர் அப்படியே உறங்கிப் போனார். திடீரென்று விழித்தபோது மாலை நேரம் ஆகியிருந்தது. ஒளி மங்கி மீண்டும் குளிர் அடிக்கத் தொடங்கியிருந்தது.

மீதமிருந்த விஸ்கியைக் குடித்து முடித்தார். செல்வி சமைத்திருந்த முயல் கறி அத்தனை சுவையாக இருந்தது. அரிசி அவர் வழக்கமாகச் சாப்பிடுவது போல் இல்லை. ஆனால் செல்வியுடன் நடந்த உரையாடலுக்குப் பின் அந்த உணவே தனக்கு அளிக்கப்பட்ட பிச்சை என்பதை அவர் புரிந்துகொண்டார். குற்ற உணர்வு தாளாமல் மருதையனிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார். ஆனால் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். கிழவர் ஏனோ இப்போது இன்னும் கோபமாக இருந்தார்.

அதற்குள் இரவு வந்துவிட்டது. ஒரு வகையில் அந்த நாள் அத்தனை வேகமாக ஓடிப் போனது அவருக்கு சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது. ஆனால் அவர் முடிவில் மாற்றமில்லை. மருதையனும் செல்வியும் உறங்கட்டுமென்று காத்திருந்தார். போனை ஆன் செய்து சரிகாவை அழைக்கலாமா என்று தோன்றியது. இறுதியாக சாருவுடன் பேசவேண்டுமென்று மனது அடித்துக் கொண்டது. ஆனால் அவர்களின் குரலைக் கேட்க அவருக்குத் துணிவில்லை.

அரவங்கள் அடங்கிய பிறகு மெல்ல எழுந்தார். கார் சாவி, மொபைல் போன், பர்ஸ் என்று பாக்கெட்டில் இருந்த அனைத்தையும் எடுத்துக் கட்டில் மீது வைத்தார். ப்ரீஃப் கேசை எடுத்து அவற்றின் அருகில் வைத்தார். முட்டிக் கொண்டு அழுகை வந்தது. சில நிமிடங்கள் வாய்விட்டு அழுதார்.

வெளியே பார்த்தார் கும்மிருட்டாக இருந்தது. திரும்பவும் அறைக்கு வந்து செல்போனை எடுத்துக் கொண்டார். அதை ஆன் செய்து சிம் கார்டை செயல்படாமல் அணைத்து வைத்தார். பிறகு சத்தமில்லாமல் படுக்கையறைக் கதவைப் பூட்டிவிட்டு வந்தார். வெளிக்கதவைத் திறந்து வெளியேறி ஓசையில்லாமல் சாத்தினார்.

செருப்பைத் தேடி அணிந்து கொண்டு செல்போன் வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினார். ஏற்கனவே பகலில் வந்த பாதைதான் என்றாலும் இப்போது முற்றிலும் வேறாக இருந்தது.

சாத்தானின் மடி தெரிந்தது. மரங்களுக்கிடையே இருந்து வெளியே வந்து அதன் பாறையில் ஏறினார். செல்போன் வெளிச்சத்தைப் பார்த்தபடியே நடந்து வந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

ஒரு வினாடி அவர் இதயம் வாய்க்கு வந்துவிட்டது.

அந்த பெஞ்சில் சமவெளியைப் பார்த்தபடி ஏற்கனவே யாரோ அசைவின்றி அமர்ந்திருந்தார்கள். அது அவர் தாத்தாவைப் போலிருந்தது. மரண பயத்தால் தனக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என்று கௌதம் சந்தேகப்பட்டார். ஆனால் அங்கே ஒரு உருவம் அமர்ந்திருப்பது உண்மை. இரண்டடி அருகே சென்றார். இப்போது அதன் கையிலிருந்த குச்சி தென்பட்டது. இன்னும் நெருங்கினார். அது மருதையன்.

“இங்க வந்து உக்காரு சாமி”  என்றார். அது நேற்றுப் பார்த்த ஒரு ஊழியனின் குரல் இல்லை. அது ஒரு கட்டளை. கௌதம் எதுவும் பேசாமல் கீழ்ப்படிந்தார்.

மெல்ல அவர் அருகே அமர்ந்தார் கௌதம்.

“நீ எதுக்காக இந்த நேரத்துல இங்கே வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும் சாமி”

சில்லென்று ஒரு அலை போல் குளிர்ந்த காற்று வந்து மோதியது. கௌதம் தனது இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்தார்.

“எம்பேத்திகிட்ட நீ வந்திருக்கறதா சொன்னப்பவே அவ பேப்பர்ல படிச்சது டிவில பாத்ததெல்லாம் சொன்னா. நீயும் மாத்துத் துணி கூட எடுத்துக்காம வந்துருக்கே. கூட்டிக் கழிச்சுப் பாத்தேன். நீ மத்தியானம் இங்கே வந்திருந்தப்போ செல்வி உன் லெட்டரப் படிச்சுட்டு நீ என்ன செய்யறதுக்கு இங்க வந்திருக்கேன்னு சொன்னா. எனக்கு உசுரே நடுங்கிப் போச்சு. அதுல இருந்து உன்ன நான் என் கண் பார்வைய விட்டு அக்கட்ட இக்கட்ட உடாம பாத்துக்கிட்டுதான் இருக்கேன்”

கௌதம் கண்களில் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வழிந்தது. வெடித்துப் பேசினார். 

“இனி எனக்கு எல்லாமே முடிஞ்சு போச்சு மருதையன்.. எம் பொண்ணு கூட என்னை வெறுக்கறா.. என்னை நம்பி என் கைல குடுத்த கம்பெனிய சரியா நடத்த முடியலை. பல பேர் குடும்பம் நடுத் தெருவுல நிக்குது. இனி நான் யாருக்காக இருக்கணும்?”

“யாரும் யாரையும் எதுக்காகவும் வாழவும் சொல்றதில்லை, சாகவும் சொல்றதில்லை. அது அவனவன் முடிவுதான்”

குச்சியை அருகில் சாய்த்து வைத்துவிட்டு மடியில் கை வைத்து அமர்ந்து கொண்டார் மருதையன்.

“நான் இந்த மலைலதான் பொறந்தேன், வளந்தேன். இங்கயேதான் சாவேன். தொண்ணூத்து அஞ்சு வயசுக்கு மேல ஆவுது. கணக்கு வெச்சுக்கலை. என்னால யாருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை. மூணு புள்ளைங்க. அதுல ரெண்டு உசுரோட இல்லை. நான் செத்துக் கெடந்தாக் கூட யாருக்கும் தெரியாது. நானா நாறிப் போனா எம் பேத்தி வந்து எடுத்துப் போடுவா. நான் யாருக்காக இருக்கணும் சாமி? எட்டிக் குதிக்க எனக்கு எத்தனை நேரமாவும்?”

கௌதம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“ஒரு கொல கேசுல ஆறு வருசம் ஜெயில்ல இருந்தேன். அதுக்கப்புறம் உள்ளூர் ஆளுங்க யாரும் வேலை குடுக்கலை. சோத்துக்கு வழியில்லாம அல்லாடிக்கிட்டு இருந்தேன். உன் தாத்தா அசலூர்க்காரர். இங்க மேனேஜரா இருந்தப்போ என்னை வேலைக்கு எடுத்துக்கிட்டாரு. பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெச்சாரு. அதுல இருந்து எனக்கு எல்லாமே அவர்தான். திடீர்னு ஒரு நாள் தொரை வேற யாருக்கோ எஸ்டேட்ட வெல பேசிட்டாரு. எங்க எல்லோருக்கும் வேலை போயிருச்சு. தொர கூப்பிட்டு சொல்லிட்டாரு. அவர் நல்லவருதான். ஆனா மொத்தமா இங்கிலாந்துக்கே போக முடிவு பண்ணிட்டாரு. பேய் எஸ்டேட்டுக்கு வெல வரதே அதிசயம். வாங்கப் போறவன் எங்களை வேணாம்னு சொல்லிட்டான். கொஞ்சம் எல்லாருக்கும் பணம் தரேன். நீங்க எல்லாம் வேற வேலை பாத்துக்கங்கன்னு சொல்லிட்டாரு. அந்த ராத்திரி உன் தாத்தாவும் வேலை போன எஸ்டேட் ஆளுங்களும் இதே மாதிரிதான் இங்க வந்து பாறைல உக்காந்திருந்தோம். அப்ப இந்த பெஞ்சு இல்லை. அவர் கையில பத்து காசு இல்லை. நீ இப்ப இருக்கியே அதே நெலமதான் அவருக்கும் எங்க எல்லாருக்கும்”

அடுத்த அலையாக அடித்த குளிர் காற்றில் மீண்டும் உடல் சிலிர்த்தது கௌதமுக்கு. கண்களில் இன்னும் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

“ஆனா உன்கிட்டே இல்லாத ஒண்ணு உன் தாத்தாகிட்ட இருந்துச்சு. நெஞ்சு நெறய நம்பிக்கை. வாங்கடா பாத்துக்கலாம்னு போனார். நேரா எஸ்டேட்ல வேலை செய்யற எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு அந்த தொரகிட்டப் போயி நானே இந்த எஸ்டேட்ட வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாரு. வாங்கப் போறவரை விட ரெண்டு மடங்கு வெல தரதா சொன்னாரு. நாங்க ஆடிப்போயிட்டோம். அந்த தொரையும்தான். எனக்குத் திறமை இருக்கு. எங்கூட உழைக்க இவங்க இருக்காங்க. அஞ்சு வருசம் இந்த எஸ்டேட்டைக் குடுங்க. அஞ்சு வருசத்துல கொஞ்சம் கொஞ்சமா சம்பாரிச்சு கெரயத் தொகைய கட்டிடறேன்னு சொன்னார். அந்த தொரை பெருசா சிரிச்சார். என்ன நெனைச்சாரோ ஒத்துக்கிட்டார். ஊருக்குப் போயி இருந்த நிலம் நீச்செல்லம் வித்துட்டு மொத தவணையக் குடுத்தார் உங்க தாத்தா. நாங்க எல்லாம் உசுரக் குடுத்து உழைச்சோம். நாலே வருசத்துல உங்க தாத்தா மொதப் பணத்தையும் கட்டினார். இந்த மலையே அசந்து போச்சு. இந்த மலையில மொத மொதலா  தொழிலாளியா இருந்து மொதலாளியா ஆனது உங்க அப்பாருதான். அவரைக் கேட்டா லாராதான் காரணம்னு சொல்லுவாரு”

“லாராவா?”

“இங்க இருந்து குதிச்சு செத்துப் போனவ… மத்தவங்களுக்கு அவ பேய். அவருக்கு அவ சாமின்னு சொல்லுவாரு.”

“பேய் எப்படி சாமியாக முடியும்? அதுவும் வெள்ளைக்காரி”

“அகாலமா செத்துப் போன பத்தினிகளை சாமியாக் கும்புடுறதுதான் இந்த மண்ணுல காலங்காலமா வழக்கம். அவ வெள்ளைக்காரின்னா சாமியா இல்லாம போயிடுவாளா. மனசு சங்கடமா இருந்தா உன் தாத்தா இங்க வந்து உக்காருவார். பொறுத்துக்கோ காலம் எல்லாத்தையும் மாத்தும்னு லாரா காதுல சொல்றதா சொல்லுவார். நீயே பாரேன். உன்னையும் ஏதோ ஒரு சக்தி ஒரு இக்கட்டுல இங்கதான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு”

கௌதம் சலித்துக் கொண்டார்.

“மருதையா… நீங்க வேற ஒரு காலம். வேற மனுஷங்க. உங்களுக்கு நான் இருக்கற கார்ப்பரேட் உலகத்தைப் பத்தி தெரியாது. நாங்க எல்லாம் குதிரைங்க. ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். ஒரு தடவை விழுந்து கால் உடைஞ்சா சுட்டுத் தள்ளிட்டு அடுத்த குதிரை மேல பணத்தைக் கட்டிட்டுப் போயிட்டே இருப்பாங்க. உங்களை மாதிரி சம்பளம் இல்லாமல் இருபது வருசமெல்லாம் வேலை பாக்கறவங்க எங்கிட்ட இல்லை. ஒரு மாசம் சம்பளம் வரலைன்னு என்னோட ப்ரஸ் மீட்ல செருப்ப வீசி எறிஞ்சுட்டாங்க. நான் போறதுன்னு முடிவு பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வந்திருக்கேன். இங்கே முடியலைன்னா இன்னொரு இடத்துல”

“போ சாமி..  நீ தாராளமாப் போ. உன் தாத்தாவும் அப்பாவும், ஏன் அந்த லாராவும் கூடத்தான் போயிட்டாங்க. சீக்கிரமே நானும் போயிருவேன். ஆனா போனதுக்கப்புறம் வாழறவங்களுக்கு என்ன உட்டுட்டுப் போகப் போறோம்?”

“எனக்குதான் இருந்ததெல்லாம் போயிருச்சே? விட்டுட்டுப் போக என்ன இருக்கு?”

“இப்பவும் நீ பணத்தைத்தான் புடிச்சுத் தொங்கற பாத்தியா… அதான்.. பணம் பறி போனதும் புத்தி பாதாளத்தைத் தேடுது”

ஏதோ ஒரு பறவை தலைக்கு மேல் பெருந்த ஓசையுடன் பறந்து போனது. மங்கிய நிலவொளியில் அந்த இடம் இன்னும் அமானுஷ்யமாகத் தெரிந்தது.

“இங்க செத்துப் போனாளே லாரா. அவ ஒரு கதைய உட்டுட்டுப் போயிருக்கா. இன்னும் நூறு வருசமானாலும் சொல்லி சொல்லி மாளாத காதல் கதை. அதுதான் அவளை உன் தாத்தாவுக்கு சாமியாக்குச்சு. உன் தாத்தா தனக்குன்னு ஒரு கதைய உட்டுட்டுப் போயிருக்காரு. அந்தக் கதைதான் என்னையும் மத்த வேலையாளுங்களையும் சாகற வரைக்கும் அவருக்கு விசுவாசமா இருக்கச் சொல்லுது. நீ சம்பளம் குடுத்தாலும் குடுக்காட்டியும் என்னை இந்த பங்களாவைத் தொடச்சுத் தொடச்சு வெக்கச் சொல்லுது. என் உசுரு போற வரைக்கும் நான் அந்த வேலையச் செய்வேன். ஏன்னா…  அதுதான் நான் உட்டுட்டுப் போற கதை.”

அவருக்கு மூச்சிறைத்தது. சில நொடிகளுக்குப் பிறகு கேட்டார்.

“இப்ப சொல்லு சாமி.. நீ என்ன கதைய உட்டுட்டுப் போவப் போறே? உம்மவ இருக்காளே… அவ உன்னப் பத்தி என்ன கதைய அவளோட புள்ளகிட்ட சொல்லுவா?”

இந்தக் கேள்வியோடு மருதையன் எழுந்து கொண்டார். இப்போது இன்னும் உயரமாகத் தெரிந்தார்.

பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. மருதையன் எதுவும் பேசாமல் சமவெளியைப் பார்த்தபடி நின்றார். ஏதோ ஒரு நகரத்தின் விளக்குகள் வைரங்களை இறைத்தது போல் கிடந்தன.

“நேரமாச்சு நான் தூங்கப் போறேன் சாமி.. நீ குதிக்கறதா இருந்தா அதா அந்த ஊரு மினுக்கிட்டுத் தெரியுதுல்ல, அந்தப் பக்கமாக் குதி. இந்தப் பக்கமெல்லாம் குதிச்சா நெறய மரம் நீட்டிட்டு இருக்குது. அரை உசுரா மாட்டிக்கிட்டுத் தொங்காதே”

மருதையன் குச்சியை எடுத்துக் கொண்டு நடந்து போனார். அந்தக் குச்சியை அவர் ஊன்றி நடக்கவில்லை. ஒரு துணையாகக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது. கௌதம் அவர் மரங்களுக்குள் மறைவதையே பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தார். எவ்வளவு நேரம் ஆனதென்று தெரியவில்லை. குளிர்ந்த காற்று முன்பு போல் அறையாமல் இப்போது மென்மையாக வீசியது.

பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி தன்னுடைய மொபைலை எடுத்தார். சிம்கார்டை ஆன் செய்தார். உள்ளே நுழைந்தார். நூற்றுக் கணக்கில் மிஸ்டு கால்கள். சரிகாவிடமிருந்தும் சாருவிடமிருந்தும் குரல் பதிவுகள் வந்திருந்தன.

“டாடி.. ப்ளீஸ் டாடி… கால் அஸ் பேக். இனிமேல் நான் உங்களோட கோபிச்சுக்கவே மாட்டேன். காட் ப்ராமிஸ். பயமா இருக்கு டாடி.. ப்ளீஸ்” சாருவின் அழுகைக் குரலைக் கேட்டதும் அடக்க மாட்டாமல் கண்ணீர் வந்தது அவருக்கு. அடுத்த நொடியே போன் அடித்தது. அது சரிகா. உடனே எடுத்தார்.

“ஹலோ..” அவள் குரலில் நடுக்கம்.

“சரிகா.. டியர்.. நான்தான்” மறுமுனையில் அப்படி ஒரு அழுகை. அவளை அழ விட்டார்.

“ஹேய்.. டோண்ட் வொர்ரி.. நான் ஏற்காட்டுல தாத்தாவோட பழைய எஸ்டேட்ல இருக்கேன். கொஞ்சம் நிம்மதி வேணும்னு வந்தேன். தொல்லை தாங்காம போனை ஆஃப் பண்ணி இருந்தேன். உன்கிட்டே சொல்லாததுக்கு சாரி… பைத்தியம்.. நான் திரும்பி வரேன்.. சீக்கிரமே.. சாருகிட்டே கொடு”

பிறகு சிறிது நேரம் சாருவிடம் பேசிவிட்டு குருவில்லாவை அழைத்தார். அவர் கூச்சலிட்டார்.

“தேங்க் காட்.. யூ இடியட்.. ப்ளடி கேவ் மீ எ ஹார்ட் அட்டாக்”

அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“காலையில் நம்ம லாயரைக் கூட்டிட்டு ஏற்காட்டுல பார்க்கர் எஸ்டேட் வந்துடுங்க. அப்பீல் பத்தி பேசலாம். அதோட இந்த எஸ்டேட்டை ஒரு புது ஓனருக்கு மாத்தணும். அதுக்கும் பேப்பர்ஸ் ரெடி பன்ணிட்டு வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கே இருந்துதான் வேலை செய்யப் போறேன். ஹெட் ஆஃபீஸ் அட்ரஸை உடனே இங்கே மாத்திடுங்க. நான் காலைல விவரமாப் பேசறேன்”

கௌதம் போனை வைத்தார். அதற்குள் சாருவிடமிருந்து “லவ் யூ டாடி” என்ற செய்தி வந்திருந்தது.

நிலவொளி பல மடங்கு அதிகரித்திருந்தது. சாத்தானின் மடி இப்போது அவருக்கு அச்சமூட்டுவதாக இல்லை.

                                                            ******

ஷான்– வெட்டாட்டம், பொன்னி நாவலாசிரியர், கவிஞர், திரைக்கதை எழுத்தாளர். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

14 COMMENTS

 1. அருமையான கதை…
  அருமையான எழுத்து..
  வாழ்த்துக்கள்

 2. மிகவும் தன்னம்பிக்கை

  அளிக்கும் கதை. சிறந்த

  நடை.

  வாழ்த்துகள் ஷான்சார்..

 3. மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் கதை, ஈர்க்கும் எழுத்து நடை ,
  வாழ்த்துக்கள் ஷான் ..

 4. மிக அருமையான கதை . அந்த ஒரு நொடி போதும் ஒரு மனிதன் தன் வாழ்வின் வீழ்ச்சியை மீட்டெடுக்க .

 5. என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கும் கதை, தலைப்பிற்கேற்றவாறு திகில் கதையாகுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, யதார்த்தமாக முடிகிறது. மகளின் குரல் பதிவுக்கு, மனைவியுடனான உரையாடலுக்கு கண்கலங்காமல் இருக்க முடியவில்லை.

 6. When ever I feel disappointed , I used to read this story and feel charged. Good narration. Kudos to the writer.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here