Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்சர்வதேச அரசியலால் சீரழியும் பவளத்திட்டு

சர்வதேச அரசியலால் சீரழியும் பவளத்திட்டு

நாராயணி சுப்ரமணியன்

பெருந்தடுப்பு பவளத்திட்டு (Great Barrier Reef) என்கிற கடல்சார் வாழிடம், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய உயிர்க்கட்டுமானம் (Largest living structure on earth). விண்வெளியிலிருந்து பார்த்தால்கூட இது தெரியும் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 2300 கிலோமீட்டர் தூரம் நீளக்கூடிய இந்த வாழிடம், 2900 சிறு பவளத்திட்டுக்களின் தொகுப்பு. மனித இனத்தின் பொதுச்சொத்து என்றுகூட இதைச் சொல்லலாம். இதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து 1981-ல் யுனெஸ்கோ நிறுவனம் இதை உலக புராதன சின்னமாக அறிவித்தது (World Heritage Site).

ஜூன் மாதத்தில் இதே யுனெஸ்கோ அங்கீகாரம் தொடர்பான ஒரு சர்ச்சையில் இந்த பவளத்திட்டு வைரலாகியிருக்கிறது. விஷயம் இதுதான் – “காலநிலை மாற்றம், கடல்நீர் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் பெருந்தடுப்பு பவளத்திட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆகவே இந்த புராதன சின்னம் ஆபத்துப் பட்டியலில் விரைவில் சேர்க்கப்படும்” என்று யுனெஸ்கோ அறிவித்தது. ஜூலை 16-ம் தேதி நடக்கப்போகிற கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரபூர்வமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இது பெரிய அவமானமாகிவிட்டது. “இந்த முடிவுக்கு எதிராக நாங்கள் களம் இறங்குவோம், இந்த முடிவை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் சூஸன் லெவி.

“இந்த அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது” என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸன். யுனெஸ்கோவின் முடிவுக்கு எதிராக நட்பு நாடுகளின் ஆதரவைத் தேடி ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

கடல்சார் சூழலியலாளர்களோ, நடப்பதைக் கவலையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த செய்தியைப் படித்தவுடன் “இன்னும் ஆபத்துப் பட்டியலில் இதை சேர்க்கலையா, முன்பே சேர்த்திருக்கணுமே” என்றுதான் எனக்குத் தோன்றியது. கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்குமே பெருந்தடுப்புப் பவளத்திட்டை நேரில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அது ஒரு வாழ்நாள் கனவு. முதுகலை படிக்கும்போது “நாம காசு சேர்த்து ஆஸ்திரேலியா போறதுக்குள்ள பவளத்திட்டு அழிஞ்சு போயிடும்” என்று நாங்கள் ஏக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

சூழலியலும் அரசியலும் இணையும் இந்தப் விவகாரத்தின் அடுக்குகள் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன.

காலநிலை மாற்றம்

யுனெஸ்கோ தரப்பு, “காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக இந்தப் பவளத்திட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் புராதன பவளத்திட்டிலும் ஐந்து ஆண்டுகளில் மூன்று நிறமிழப்பு நிகழ்வுகள் (Bleaching events) நடக்கவில்லை. 2016, 2017, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இந்தப் பெருந்தடுப்பு பவளத்திட்டில் உள்ள பல பவள உயிரிகள் நிறமிழந்துள்ளன. அதிலும் 2020 நிகழ்வுக்கு முன்னதாக கடல்மட்ட வெப்பநிலை நூற்றாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக உயர்ந்திருந்தது. அதாவது, கிட்டத்தட்ட கொதிக்கும் கடல். ஆகவே காலநிலை பாதிப்பை கண்டிப்பாகப் பேசவேண்டும்” என்கிறது.

“காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை, ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட சறுக்கல் அல்ல. உலகின் மொத்த உமிழ்வைக் குறைக்கும் பொறுப்பை ஆஸ்திரேலியா தனிப்பட்டு சுமக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் சூஸன் லெவி.

காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர் குழுக்களிடம் இருந்து இதற்கான பதில் வந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தைத் தனியாக ஆஸ்திரேலியா கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை என்றும், அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கான பொறுப்பையும் அது சரியாக செய்யவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் கரிம உமிழ்வுகள் தொடர்பான ஒரு இலக்கு உண்டு. அதன்படி பார்த்தால் ஆஸ்திரேலியா ஃபெயில்தான். உலக அளவில் மிக அதிகமான தனிநபர் உமிழ்வுகள் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆகவே தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆஸ்திரேலியா செயல்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

காலநிலை மாற்றம் என்பது உலகின் எல்லா வாழிடங்களுக்குமே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. யுனெஸ்கோவின் புராதன சின்னங்கள் பட்டியலிலேயே மொத்தம் 29 பவளத்திட்டுக்கள் உண்டு. காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 29 பவளத்திட்டுக்களுமே அழிந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

“எல்லா பவளத்திட்டுக்களுமே பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்றால், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பவளத்திட்டுக்களின் அடையாளச் சின்னமாக எங்கள் நாட்டு பவளத்திட்டுதான் கிடைத்ததா” என்று ஆஸ்திரேலியா காட்டமாகக் கேள்வி எழுப்புகிறது.

“ஏன், அப்படி இருந்தால்தான் என்ன தவறு?” என்பது சூழலியலாளர்களின் வாதம். ஒரு நாட்டில் உள்ள இயற்கை வாழிடம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும்போது, அதில் ஒரு பொறுப்பும் கூடவே வருகிறது. அந்த வாழிடம் மனித இனத்துக்கான பொது சொத்து என்பதாகவும், அதைக் காப்பது அந்த நாட்டு அரசின் கடமை என்பதும் எழுதப்படாத ஒரு அறம்.

அங்கீகாரத்துக்குப் பெருமை கொள்ளும் அரசுகள், பொறுப்பையும் கவனமாக செயல்படுத்தவேண்டும். காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக இந்த பவளத்திட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால், பவளத்திட்டுக்களின் அழிவுக்கான அடையாளச்சின்னமாகவும் அதை முன்னிறுத்துவதில் தவறு இல்லை.

அழிந்துவரும் பவளத்திட்டு

“காலநிலை மட்டுமே காரணமில்லை. கடல்நீரின் சில கூறுகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதுவும் பின்பற்றப்படவில்லை” என்பது யுனெஸ்கோவின் குற்றச்சாட்டு. மோசமாக நிலப்பரப்பை மேலாண்மை செய்ததால், அதிலிருக்கிற வண்டல் மண்ணும் வேதிப்பொருட்களும் அடித்து செல்லப்பட்டு பவளத்திட்டு இருக்கும் கடற்பகுதி வரை வந்துவிட்டதாகவும், அதனால் பவளத்திட்டுக்கள் பாதிக்கப்படுவதாகவும் யுனெஸ்கோ கூறியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல சூழலியலாளர்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த பவளத்திட்டைப் பாதுகாப்பதற்காக இதுவரை 3 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஆனால் பொதுவான நில மேலாண்மையில் அரசு தவறிவிட்டதை அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச அரசியலில் தன் பெயர் களங்கப்படாமல் இருக்க ஆஸ்திரேலியா செய்யும் முயற்சியில் ஒரு சிறு அளவாவது நிஜமாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பில் செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த பவளத்திட்டு ஒரு மனிதனாக இருந்தால், இந்நேரம் ஆக்ஸிஜன் வைத்துதான் அவன் உயிரைப் பராமரிக்கவேண்டியிருக்கும். இந்த பவளத்திட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருக்கிறது” என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டனர். இந்த இடத்தின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று 2019-ம் ஆண்டின் ஆஸ்திரேலிய அரசு அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை வெளியில் உள்ள சர்வதேசக் குழுக்கள் சொல்லக்கூடாது என்று ஆஸ்திரேலியா குரல் எழுப்புகிறது.

சுற்றுலாக்களின் அரசியல்

சர்வதேச தலைகுனிவைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த பவளத்திட்டைக் காண்பதற்காக உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து வந்து குவியும் பயணிகளிடமிருந்து கிடைக்கும் சுற்றுலா வருவாய் குறையும் என்று ஆஸ்திரேலிய அரசு அஞ்சுகிறது.

இந்த அச்சம் சூழலியல்சார் அரசியலின் முக்கியப் புள்ளி. அரசுகளுக்கு சூழல்சார் வளங்களிலிருந்து வரும் வருமானமும் பெருமையும் வேண்டும், ஆனால் அதன் பொறுப்பு தேவையில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் புலி, சிங்கம், சிவிங்கிப் புலி போன்ற பெரும்பூனைகள் குறித்து வடமாநிலங்களில் உள்ள அரசுகளுக்குப் பெரிய அளவில் ஒரு பெருமிதம் உண்டு. “இரண்டு பெரும்பூனைகள் உள்ள ஒரே மாநிலம்” என்றெல்லாம் அறிவியல் கருத்துரைகளிலும் சூழல் விவாதங்களிலும் அவர்கள் பெருமையோடு குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வரும் சுற்றுலா வருவாயும் அவர்களை மிகவும் ஈர்க்கிறது. சுற்றுச்சூழல் வளங்களைப் பெருமையோடும் வருமானத்தோடும் மட்டுமே தொடர்புபடுத்தும்போது அங்கு ஒரு தேவையற்ற அரசியல் வந்துவிடுகிறது. அந்தச் சூழலில், அந்த விலங்கின் எண்ணிக்கை, பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய எந்தத் தரவுகளுமே வெளிப்படையானவையாக இருப்பதில்லை. இதிலிருந்து ஒரு நேர்க்கோட்டை இழுத்து பெருந்தடுப்புப் பவளத்திட்டின் சூழலை அணுகினால் ஆஸ்திரேலியாவின் அச்சம் புரியும்.

உண்மையில் ஆஸ்திரேலியாவின் அச்சம் அடிப்படையற்றது. “ஆபத்தில் இருக்கிற சின்னங்கள்” பட்டியலில் ஏற்கனவே பல வாழிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எந்த வாழிடத்திலும் இந்தப் பட்டியல் மாற்றத்தால் சுற்றுலா பெரிதாக பாதிக்கப்படவில்லை. தவிர, பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ, இந்த பவளத்திட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். ஆகவே பட்டியலில் சேர்க்கப்படுகிற ஒற்றை நிகழ்வு எதையும் மாற்றிவிடாது.

“என்னமோ இதை ஒரு சிவப்புப் பட்டியல் போல பாவிக்கிறீர்கள். ஆபத்தில் இருக்கிற வாழிடம் என்றால், அந்த இடத்தைக் காப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பொருள். அந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படி இது. சுற்றுலாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்” என்று எதிர்வினை விடுத்திருக்கிறார் யுனெஸ்கோவின் மெச்டில்ட் பாஸ்லர். அதை ஆஸ்திரேலிய அரசு எப்படி உள்வாங்கப் போகிறது என்பது தெரியவில்லை.

பொது குற்றச்சாட்டுகள்

புராதன சின்னங்களை அங்கீகரிக்கும் குழுவின் தலைவராக இப்போது சீனா இருக்கிறது. இந்த முடிவில் சீனாவின் ஆதிக்கம் இருக்கலாம் என்பதை ஆஸ்திரேலியா சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.

யுனெஸ்கோவின் தலைமையகம் அப்பழுக்கற்ற முடிவுகளை மட்டுமே எடுக்கிறது என்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் இந்த விவகாரத்தில் அவர்களின் முடிவு சரியானதுதான்.

இதில் பெரிய அவலம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தப் பட்டியலில் சேராமல் இருப்பதற்காக ஆஸ்திரேலியா எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. “ப்ளீஸ் ப்ளீஸ் ரெட் மார்க் போட்டுடாதீங்க, நாங்க சரி பண்ணிடுறோம்” என்பது போன்ற சத்தியங்களுடன் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இது ஆபத்தான போக்கு. அந்த வாழிடத்தைப் பாதுகாக்கும் எந்த முயற்சியையும் எடுக்காமல் சர்வதேச அரங்கில் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் ஆஸ்திரேலியா கவனமாக இருக்கிறது.

உலகின் பல முக்கிய கடல்சார் விஞ்ஞானிகள் இந்த முடிவு சரிதான் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற அரசியல் இழுபறிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நசுங்கிவிடுகிறது. தேசிய அவமானம் என்றெல்லாம் யோசிக்காமல், இந்தப் பவளத்திட்டைப் பாதுகாப்பதற்கான முதல் படியை வெளிப்படைத்தன்மையுடன் ஆஸ்திரேலியா எடுத்துவைக்க வேண்டும். யுனெஸ்கோவும் தன் முடிவிலிருந்து பின்வாங்காமல் ஜூலை 16-ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். “மனித இனத்தின் பொது மரபு” என்று குறிப்பிடப்படும் ஒரு இடம், வெற்று அரசியல் காரணங்களால் சீரழிந்தது என்று வரலாறு சொல்லிவிடக்கூடாது.

*

தரவுகள்

UNESCO World Heritage Committee, 44th Session Online meeting, June 21, 2021.
Report from ARC Center of Excellence for Coral Reef Studies, Australia, April 2020.
Great Barrier Reef Outlook Report 2019.

***


நாராயணி சுப்ரமணியன். கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular