Thursday, December 5, 2024
Homeபுனைவுகவிதைசரம வேண்டல்

சரம வேண்டல்

 .

இப்பிறவியின்
எம்இறுதிக்கவிதை இது

பிணத்தின் வாடையை
நுகர்ந்திருக்கிறீர்களா?
மனம் செத்து
உடலை மட்டும் தூக்கிக்கொண்டு திரிவது
பிணத்தின் வாடையை மடியில் கட்டிக்கொண்டு
திரிவது போல
என் தலைக்குள்ளே
கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்
இலட்சோப இலட்சம் குரல்களில்
மரண ஓலம் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது…

கடல் நடுவே இருக்கிற
த்வஜஸ்தம்பப் பாறையின் மீது
உலவிக்கொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாய்
தவறவிட்ட உன்னதங்களை
ஒரு உடைந்த குழலைக் கொண்டு
வாசித்துக் கொண்டிருக்கிறேன்…

நீங்கள் மனிதர்கள்!

அதைக் களியாட்டத்திற்கு ஒப்பிட்டு
பொருந்தாமலேயே ஆடுகிறீர்கள்
வளைகிறேன்
நெளிகிறேன்
சோகத்தின் விளிம்வில் நின்று
என்னை நானே கொன்றுவிடத் துணிகிறேன்
நானும் நடமாடுவதாய்
நீங்கள் நினைக்கிறீர்கள்.

நிகழ்வுகளின் மாயத்தீயில்
பொசுங்கிப் போன யாழ் மட்டுமே
மீதம் இருக்கிறது
இந்த தேவதச்சனிடம்..

குழலை வீசிவிட்டு யாழை எடுக்கிறேன்
நொறுங்கி விடுகிற யாழைக் கொண்டு
என் துயரம் சொல்கிற எச்சக்கவிகளை
ககனவெளியில் உலவ விடுகிறேன்..

இன்றோ நாளையோ
நான் மரித்துப் போகலாம்
ஆற்றாமையில்
என் மனமும் என் கூடவே
மரிப்பதாயும் ஆகலாம்
என் உயிர்ச்சூட்டை உணர மறுக்கும்
என் ஆப்த மித்திரர்களே!
என் எழுத்துக்களை மட்டும் எரித்து விடாதேயும்
நான் இருந்ததிற்கும்
முன்னர் இறந்துபட்டதிற்கும்
இன்று
மற்றுமொருமுறை
மரித்துப் போனதிற்கும்
அவை மட்டுமே சாட்சிக்கூறுகள்.

– மணிவண்ணன் வெங்கடசுப்பு

 

mexican_free_tailed_bats-flying

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular