சம்பு கவிதைகள்

0

உபரிகளை ஒழிக்கும் துப்பாக்கி குண்டு…

அந்த சோற்றுக் கவளத்தை
விழுங்குகையில்
கண்கள் இருட்டிக்கொண்டு
நெஞ்சுக்குழாய் அடைக்குமுன்
பொங்கிய உப்புநீர்
அவர்களின் வாய் வடிந்து கரிக்கிறது

ஏதிலிகளின் வாழ்வு
இத் தேசத்துக்கே பெருஞ்சுமையாய்
கனத்து கிடக்குமிந்த
துர்வேளையில்
(அரசின் நெஞ்சிலடிக்கப்பட்ட
கையாலாகாத்தனத்தின்
கூர் ஆணிகள்)
எறும்பு கூட்டங்களைப்போல்
இந்த ஆற்றுப்பாலத்தினடியில்
அவர்கள் போக்கிடமற்றுக்
குழுமிக் கிடக்கின்றனர்

அடுத்த விநாடி நழுவப்போகும்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
அலையும் வாழ்வுக்குச் சபிக்கப்பட்ட
அவர்களின் முன்பாக
எப்போதும்
பொன்னொளி வீசி மினுங்குவதெல்லாம்
ஒரு கவளச் சோறுதானேயன்றி
வேறு
பெரும் இலக்குகளேதுமில்லை

இந்த அகண்ட தேசத்தின்
ராணுவ வல்லமைகள்
ராச தந்திரங்கள்
போர்த் தளவாடங்களின்
மகிமை குறித்து
பெருமிதத்தில் குடிகளின் நெஞ்சு தானே
புடைக்கவில்லையெனில் அது
கழுவிலேற்றப்பட வேண்டிய
குற்றமெனக் கருதும்
ஓர் ராஜாங்கத்தின் முன்புதான்
வற்றிக்கிடக்கும்
அந்த நதிப்படுகையோரத்தில்
பழந்துணிகளைப்போல் அவர்கள்
சுருண்டு படுத்திருக்கின்றனர்

அவர்களின் கடவுள்
அந்த நதியின் தீரத்திலே புனலாடி
மகிழ்ந்ததையெல்லாம்
துகில் களவாடி சிறுபிள்ளையென
ஓடித் திரிந்ததையெல்லாம்
இப்போது
பொருமியபடி உறுமும்
கும்பியைத் தாண்டியும் நினைந்து
நமஸ்கரித்தலே
இந்த தேசப்பிரஜைகள் உய்வதற்கு
ஒரே வழியென்கிறார்கள்
ராஜ்ய பரிபாலன கர்த்தாக்கள்

எனினும்
நிர்க்கதியற்ற துயரங்களை
சதா சுமந்தலையும்
உபரிகளும் சேர்ந்தேதான்
இந்த வெளி
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது

கொடுங்காலத்தின் முன்பாக
வரிசையாகப் படுத்துக்கிடப்பவர்களுக்கு
காதுகள்
பஞ்சடைந்துபோனால்கூட
விதிமீறலாய் கருதும் தேசமிது

ஜனநாயகம் வாழையிலைமீது
வைத்து நீட்டப்படும்
எல்லோருக்குமான பதார்த்தமெனில்
அதனடியில்
குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியையும்
மறைத்தபடியேதானிருக்கின்றன
கொடூரக்கரங்கள்
ஆயினும்
அறுதியிடப்பட்ட மீப்பெரு உண்மை
தேச வரலாற்றின் பக்கங்களிருந்து
ஒருபோதும்
பிரித்தெடுக்கவே முடியாத உபரிகளின்
இருப்பை
துப்புரவாக இல்லாதொழிக்கும்
துப்பாக்கிக் குண்டுகளை
இனிவரும்
எந் நூற்றாண்டிலுமே
எவராலும்
கண்டுபிடித்துவிட முடியாது…

***

2.கடவுளின் ரயில் வண்டி…

கோழிக் கழிவுகளின் துர்வாசனை சூழ்ந்து கிடந்த
அவர்களின் கூடாரங்களில்
விளக்குகள் ஒருபோதும் எரிந்ததில்லை

இரும்புகளை வார்த்தெடுக்கும்
கொடூர வெப்பத்தில்
கனன்று கனன்று
துருவேறிக்கிடந்தன் அவர்களின்
முகங்கள்

நெசவுக்கூடங்களின் பஞ்சுப்பொதிகள்
அவர்களின் நுரையீரலுக்குள்
அப்பிக்கிடப்பதை எவருமறிந்திலர்

இருபத்துநான்கு மணி நேரமும்
சக்கையெனப் பிழியும்
ஏற்றுமதியாலைகளின் கொடுங்கரங்களுக்குச்
சவால்விட்டு நின்றன
அவர்களின்
தசை நார்கள்

ஒருநாளின் பொழுதை
வெறும் பதினைந்து ரூபாயில் வாழ்ந்துவிடும்
அருந்திறனுக்கு முன்பாக
இதுவரையிலும்
பெருந்திறனுடன் விண்ணேகிய
ராக்கெட்டுகளும் விண்கலங்களும்
கதறியபடி
தலைகுப்புற வீழ்கின்றன

எனினும்
புலம்பெயர்ந்து நடமாடும்
இந்த மண்ணில்
அவர்களுக்கு
இனி ஜீவிதமில்லை
ஓர் தீநுண்மியின் கரங்கள்
தம் பிஞ்சுகளின் குரல்வளையை
இறுக்கிவிடுமென்ற பதட்டமும்
இதற்குமேல்
அச்சிறுகுடலைக் கருகவிட்டால்
சுருண்டுவிழுந்து மடிந்துபோகுமென்ற
அச்சமும்தான்
பூர்வீகம் நோக்கி
கூவிக்கொண்டு நிற்கும்
அந்த
ரயிலில் அவர்களை ஏறவைத்தது

இரு கால்தட அளவுகொண்ட இடத்திலேயே
குறுக்கியமர்ந்தபடி
இரண்டாயிரம் கிலோமீட்டர்கள்
அணுவளவும் அசையாத
அவர்களின் பயண சாகசத்தை
பன்னூறு தடவைகள்
பார்த்திருந்தன அந்த ரயில்கள்

தவிர
இம்முறை
அவர்களின் கடவுளே
சிரித்தமேனிக்கு
அந்த எஞ்சினை இயக்குகிறார்
கடவுளின் ரயில்களுக்கு
நிலையங்களுமில்லை
நிறுத்தங்களில்லை

சகலத்தாலும்
நிர்கதியாக்கப்பட்ட
அவர்களைச் சுமந்துகொண்டு
நகரும்போது
கடவுளின் கடைவாயில் மினுங்குகிறது சிறு குருதித்துளி

பிறகு
எந்த யோசனையும் துளியுமின்றி
நரகத்திலிருந்து
இன்னொரு நரகத்தை
நோக்கிப் பாய்கிறது
அந்த
அதிவிரைவு வண்டி…

***

3.காற்றில் கரைந்த சாபம்…

செருப்புகளற்ற பாதங்களுடன்
அந்த நீள்பயணம் துவங்கியபோதே
அதன் பிறகான வாழ்வு
அவர்களின்
கைவிட்டு ஓடியொளிந்து கொண்டது
இத்தேசத்தின் தலையின்மீது
விரிந்து கிடக்குமந்த மலைச்சிகரத்தை
கண்ணை மூடிக்கொண்டு
ஏழுமுறை ஏறியிறங்கும் நெஞ்சுரம் அது

தோளிலும் இடுப்பிலும்
தம் மக்களைச் சுமந்த
அவர்கள்
எத்தனை காத தூரத்தினை
கடந்திருக்கமுடியும்
தொள்ளாயிரம் கிலோமீட்டரை
தாண்டத் துணிந்த
கால்களுக்குத் தெரியவில்லை
இப்பயணம்
தன் பூர்வீகத்தின் எல்லைக்கோடு தொடுகையில்
இவ்வுடல்
ரத்தவாந்தியெடுத்தபடி
இப்பூமியில் சரிந்து விழுமென்று

தொண்டை வறண்டுபோன
அநாதிக்காட்டில்
பச்சைமரத்தின் பட்டைகளை
கடித்துத் துப்பியதெல்லாம்
ஒரு துளி திரவமிந்த
உள்நாக்கை நனைத்துவிடாதா
என்ற பதைபதைப்பில்தானே

இவ்வளவு
குரூரமான நிராதரவினை
இந்த நூற்றாண்டு
தொடங்கி வைக்குமென்று
அப்படியப்படியே
தூக்கியெறியப்பட்ட
அல்லது
அரையுங்குறையுமாய்
புதைக்கப்பட்ட
குழந்தைகளின் உடலங்கள்
அழுகி நாறி மக்கிய பின்னர்
ஒருபோதுமே
உணரப்போவதில்லைதானே

தமது கடவுள்கள் கைவிட்டதாய்
சாலையின் குறுக்கு மறுக்கில்
ஓயாது அக்கால்கள்
நடந்தரற்றியபோது
அந்த இதயம் மட்டுமென்ன
லயத்திலா துடித்துக் கொண்டிருந்தது
சகலத்தையும் எரித்தடங்கும்
வெப்பத்தின் அனல்
அதில் அலையாடி தகித்ததுதானே

ஒரு சாபத்தில் இந்நிலம்
சாம்பலாகும் எனுஞ்சொல்
மட்டும்
அணுகுண்டிற்கிணையான வல்லமை
கொண்டதெனின்

எத்தனை இலட்சம் முறைகள்
அவர்களின் கடவுளர்களே
இத்தேசத்தை
வெடி வெடித்துத் தகர்த்து
ஓய்ந்து போயிருக்க வேண்டும்.

***

4.கோவணத்துண்டின் கிழிசல்…

கடவுளின் பெயரால் உருளும்
இந்த சக்கரத்தை
பரிபூரண நீதியின் கரங்களால்
ஒருகணமும் நிறுத்த முடியவில்லை

இந்தக் குடையின் கீழ்
நடமாடும்
சகலமானவருக்கும் ஏற்கெனவே
திட்டமிடப்பட்ட நீதியினை
அவர்கள் கடவுளின் பெயரால் எழுதிவிட முனைகையில்
திசைகளெங்கும்
சிதறியோடும் குடிகளுக்கு
மேல்மூச்சு வாங்கி நாக்குத் தள்ளுகிறது

குடிகளின் துயர்காலத்தில்
மாட்சிமை கொண்ட ராஜ்யாதிபதி
தன்
ஹம்ஸதூளிகா மஞ்சத்தில்
தூக்கச் சடவுடன்
புரண்டு புரண்டு படுக்கிறார்
ஓயாமல் சுற்றித்திரிந்த
புஷ்பக விமானம் நிறுத்தப்பட்ட இடத்தில்
புற்கள் முளைத்துக் கிடக்கிறது
திக்கெட்டும்
பறந்த அதன் ஞாபகங்களில்
வெறும் ஏக்கம் மட்டுமே
படிந்திருக்கிறது

பன்னூற்றாயிரம் தலைகள் சூழ்
வெட்டவெளியில்
நெஞ்சுவிரிய
தொண்டை புடைத்துக் கூவியே
அதுவோர்
லஜ்ஜையற்ற விளம்பரப் படத்திற்கான
தீராத ஒத்திகையாய் மாறிப்போனது
கல்யாணம் இழவு கருமாதியென
பாரபட்சமின்றி
இதுவரை
முஸ்தீபு காட்டியே பிழைப்பும் ஓடியது

ராஜ்ஜியமே அரண்டுபோகும்
மாயப்பிசாசு
வலுவந்தமாய் சிலிர்த்துக்கொண்டு
பட்டாசாலில் வந்து
இப்போது அமர்ந்திருக்கிறது
பாணங்கள் தீர்ந்த அம்பறாத் துணியை
சும்மாடுகூட்டி தலைக்கு வைத்து
தூங்குவது
எவருக்குத் தெரியப் போகிறதென்ற கித்தாப்பில்
புஜங்கள் தட்டியபடி
கோதாவில் இறங்கியாயிற்று
தார்ப்பாய்ச்சி மேலேற்றிக் கட்டி இறுக்கும்போதுதான்
அந்தக் கோவணத் துண்டின்
கிழிசலை
உலகம் பார்த்தது

கின்னர கிம்புருடர்கள்
மலர்மாரி தூவி வாழ்த்தியருளும்
கண்கொள்ளாக் காட்சி
பிறகு
இருபத்து நான்கு மணித்தியாலங்களும்
நேரலை ஒளிபரப்புதான்
கடைவாய் பற்கள்
புறத்துக்கு நான்கு
கழன்று விழுந்தாலும்
சோடிப்புக்கு ஒன்றும் குறையேயில்லை

ஹர ஹர ஹர மஹாதேவ்…

***

சம்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here