ஆ. ஹரிகிருஷ்ணன்
பெண் அடிமை, பெண்கள் முன்னேற்றம் என்று பெண்கள் வளர்ச்சி சார்ந்து இதுவரை நிறைய நாவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சில நாவல்கள் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பில் சீர் செய்ய வேண்டிய விஷயங்களைப் பல அடுக்குகளோடு பேசும். அப்படி ஒரு நாவல் தான் செல்வகுமார் பேச்சிமுத்து எழுதிய கெளிமதம்.
ஊர் பண்ணையார் வயலில் விவசாயக் கூலியாக இருக்கும் ராக்கம்மா கோவில் திருவிழாவில் வைக்கும் பொங்கல், ஊரில் அந்தஸ்தில் பெரிய ஆளாக இருக்கும் முத்துப்பாண்டி மனைவி வைக்கும் பொங்கலுக்கு முன்பே பொங்கி விடுவதால் அவளுக்கு முதல் மரியாதை கிடைக்காமல் போகிறது. இதனால் முத்துப்பாண்டிக்கும் ராக்கம்மாவின் குடும்பத்துக்கும் தகராறு நடக்கிறது. பஞ்சாயத்தில் ராக்கம்மா தரப்பில் நியாயம் இருந்தாலும் முத்துப்பாண்டி செல்வாக்கு நிறைந்த ஆள் என்பதை மட்டுமே காரணமாக வைத்துக்கொண்டு ராக்கம்மாவை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் காதல் கைகூடாமல் போக விரக்தியில் அவள் வாழ்க்கை தடம்புரண்டு திசைமாறி செல்லகிறது. அதற்கு பின் ராக்கம்மா அவள் வாழ்க்கையை தன் விருப்பம் போல் வாழ நினைக்கிறாள். இதற்கு தடையாக வரும் அனைத்தையும் தன் சாமர்த்தியத்தால் எப்படி உடைக்கிறாள், இதனால் அவள் சந்திக்கும் இன்னல்கள் என்ன என்பது தான் இந்த நாவல்.
ஒரு பெண்ணாக இழக்கக் கூடாத அனைத்தையும் இழக்கும் ராக்கம்மா ஊர் மக்கள் முன் தானும் ஒரு ஆளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்கு அவள் தேர்ந்து எடுக்கும் குறுக்குவழி அவள் உடல். பாலியல் தொழிலில் ஈடுபடும் ராக்கம்மா தன்னுடைய அழகால் உயர்மட்ட அளவில் இருக்கும் பல ஆட்களை அவளுக்கு நெருக்கமாக்கிக் கொண்டு அவள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறாள். அவள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் ஊரின் பெரியாட்கள் அவளுடைய தொழிலை நிறுத்தச்சொல்லி கண்டிக்கிறார்கள். அவர்களையும் எதிர்த்து அவள் நினைத்தபடி இருக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் ராக்கம்மாவை எதிர்க்க ஊரே அஞ்சுகிறது.
ஊர் ராக்கம்மவை ஒதுக்கி வைத்தாலும் ராக்கம்மா ஊருக்கு எந்த தீங்கும் நினைக்கவில்லை. தன் ஊர் பெண்களின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஊரில் உள்ள ஒரு ஆணையும் தன்னிடம் நெருங்க விடுவதில்லை. இதுவே அவளுக்கு பாதகமாக அமைகிறது. ஊர் ஆண்கள் அவளைத் தொழில் செய்யக்கூடாது என்று கூறுவதன் உள்நோக்கம் எப்படியாவது ராக்கம்மாவை அடைந்துவிட வேண்டும் என்பதே. அது நடக்காத போது வன்மம் கொள்ளும் மனசுகள் இறுதி அத்தியாயங்களில் மிருகமும் செய்ய நினைக்காத சில விஷயங்களை செய்கிறது. கடைசி இரண்டு இரண்டு அத்தியாயங்கள் எழுதும் பொழுது எழுத்தாளர் உள்ளாக்கும் மனநிலை சற்று பதற்றத்துக்குரியதே.
ராக்கம்மா என்ற தனி மனிதியைப் பற்றிய கதையாக இருந்தாலும் பணம், அதிகாரம், ஆள்பலம் இவை எல்லாம் உள்ளவர்கள் இவை எதுவும் இல்லாதவர்கள் மேல் எப்படி தனது அதிகாரத்தை செலுத்துகிறார்கள் என்பதை எழுத்தாளர் வாசகனுக்கு கூறுகிறார். அதே பெண் என வரும் போது மேல் கூறியவற்றில் எதும் இல்லாதவர்களும் பெண்ணை ஆள நினைக்கிறார்கள். இம்மூன்றும் ஒரு பெண் கையில் இருந்தால் அவளை அழிக்க எந்த எல்லைக்கும் செல்ல இந்த சமூகம் தயங்குவதில்லை.
கதையில் வரும் முக்கால்வாசி கதாபாத்திரங்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளே ஒரு படிநிலை இருக்கிறது. கோவில் தேர் ஊருக்குள் வருவதற்கு முன் பண்ணையார் வீட்டிற்கு தான் முதலில் செல்ல வேண்டும் என்கிற வழக்கம் முத்துபாண்டி தலையெடுத்தப்பின் மாறுகிறது. இதைக் காரணம் காட்டி முத்துப்பாண்டி ஊர் மக்களை தன் வசப்படுத்துகிறான். இதற்கு முன் பண்ணையார் இந்த ஊருக்கு செய்யாததற்கும் இப்போது அவன் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அதிகார போதை அவனை யோசிக்க விடவில்லை. நமக்கு நடந்தது ராக்கம்மா குடும்பத்திற்கு நடக்க வேண்டாம் என்று ஊர்மக்களும் யோசிக்கவில்லை.
ராக்கம்மா தலை நிமிர்ந்து நடப்பவள், எதிர்த்து கேள்வி கேட்பவள் எனும் காரணங்களாலே அவளுடைய காதலன் முருகனின் அம்மா அவளை வெறுக்கிறாள். இதே காரணங்களுக்காக பஞ்சாயத்தில் அவளை ஊரை விட்டு ஒதுக்கவும் சுலபமாக தன் மகன் முருகனுக்கு வேறு பெண்ணொடு திருமணம் செய்து முடிக்கிறாள். ராக்கம்மவின் அப்பா தன் மகளை வாழ்கையில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் தன் வயது உள்ள வேலுவை ராக்கம்மாவுக்கு திருமணம் செய்து வைக்கிறான். இவர்களில் யாராவது ஒருவராவது ஒருதலை பட்சமாக இல்லாமல் நடுநிலையில் நின்று இருந்தால் அல்லது ராக்கமாவின் மனதை புரிந்து முடிவெடுத்து இருந்தால் அவளின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்.
தலைப்பிற்கு ஏற்ப இந்த கதையின் முக்கிய பாத்திரம் திமிர். ராக்கம்மா ஊர் கட்டுப்பாட்டை மீறி அவள் விருப்பம் போல் வாழ்வதால் ஊர் மக்கள் அவளுக்கு அகங்காரம் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறார்கள். அவளை எப்படி வீழ்த்தி நசுக்கலாம் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு நடுவில் அவளுக்கு கை பிடித்து ஆறுதல் கூறும் ஒருவனே இந்த திமிர். ராக்கம்மாவிற்கு கையில் காசு சேர்ந்ததும், ஊரில் இருக்கும் காவல்துறை அதிகாரி, வக்கீல், எம்.எல்.எ என்று பெரிய ஆட்கள் எல்லோரும் கூட இருக்கவும் அவளுக்கு திமிர் வரவில்லை. இவை எதுமே இல்லாத போதும் அவள் முத்துப்பாண்டியை கொள்ளிக்கட்டையை எடுத்து நெஞ்சில் அடித்தது திமிர் அவளுடைய உயிர்வாயு என்பதை நமக்கு காட்டுகிறது.
இந்தக் கதை முழுவதும் ராக்கம்மாவின் வாழ்க்கையை சித்தரிப்பதால் அவளின் கதாபாத்திர வடிவமைப்பு மிக முக்கியமானது. இங்கே ராக்கம்மாவின் கதாபாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக உள்ளது. அவை அனைத்துமே இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு தான். அடுத்தடுத்து நடக்கும் துயர சம்பவங்களால் வாழ்க்கையை வெறுத்து விடாமல் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருக்கும் ராக்கமாவின் மனது மேலும் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் எங்குமே அவளின் அடிப்படை குணம் மாறவில்லை. ராக்கம்மாவுக்கும் நீலி கிழவிக்கும் இருக்கும் உறவில் நாம் இதைக் காணலாம். கிழவி தன்னை முறைதவறி பேசிவிட்டாள் என்பதற்காக பல மாதங்கள் அவளுடன் பேசாமல் இருந்துவிட்டு நீலி கிழவி இறந்தபின் அடுத்து 16 நாட்களுக்கு ராக்கம்மா எனும் ஒற்றை ஆளின் பங்களிப்பை பார்த்து ஊர் மக்கள் போல் நாமும் அசந்து நிற்கிறோம். நாவல் முழுக்க வரும் கதாபாத்திரங்களுக்கு ஈடாக ஆங்காங்கே வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கின்றது.
இந்தக் கதையில் ராக்கம்மாவிற்கு இவன் தான் அல்லது இவர்கள் தான் வில்லன்கள் என்று யாரையும் குறிப்பிட்டு ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர முடியாது. இங்கே பெண் என்பவள் எதற்கும் உடைமை இல்லாதவளாக கடைசிவரை ஒரு ஆணை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒரு வில்லன். இன்னொரு பக்கம் அனைத்தும் இருக்கும் ஒருவனுக்கு எதுவும் இல்லாதவன் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற மற்றொரு விதி (வில்லன்). இவை இரண்டுக்கும் தனக்கு எதிர் தரப்பில் இருப்பவன் ஒரே மதமாக இருந்தாலும் சரி, ஒரே சாதியாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் ஒரே சட்டம். இந்த வில்லன்களையும் தாண்டி கதையில் நம்மை நடுங்க வைப்பவன் வயிறுவூதிக் கிழவன்.
கதையில் ராக்கம்மாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரகுராம். ராக்கம்மாவுக்கும் ரகுராமுக்கும் நடுவில் இருக்கும் உறவை எழுதி இருக்கும் விதம் வாசிக்க இதமாக இருந்தது. குறிப்பாக இருவரும் சிறு வயதில் ஒருவர் மற்றவரை எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்று பேசிக் கொள்ளும் இடம் மீண்டும் ஒருமுறை அந்த பக்கத்தை வாசிக்க தூண்டுகிறது. இவர்கள் இருவருக்குள் இருப்பது நட்பா காதலா என்பது அவரவர் பார்வைக்கே. அவள் கூடவே இருக்கும் ரகுராம் ராக்கம்மாவிற்காக துடிப்பதை விட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பள்ளியனூர் எஸ்ஐ அவளுக்காக பரிந்து பேசும் இடம் இன்னும் மனிதம் இருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது.
இந்த புத்தகத்தின் மிகப்பெரிய பலம் மனிதர்களின் கொடூரத்தை எந்தவித பூசல்களும் இல்லாமல் உள்ளதை உள்ளது போல் ஆழமாகவும் வெளிப்படையாகவும் எழுதி இருப்பதுதான். அதுவே இந்தக் கதையின் உண்மைத் தன்மையை மேலும் அதிகரிக்கிறது. ஊரில் பெரியவர்களாக மதிக்கப்படுபவர்கள் ராக்கமாவை அடைய வேண்டுமென்று அவர்கள் அனைவரும் கூடிப் பேசும் பகுதி மனிதனை முழுவதுமாக சித்தரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.
வட்டார வழக்கில் எழுதும் நாவல்கள் என்றைக்கும் வாசிப்பதில் வாசகனுக்கு ஒரு சவால் உண்டு. ஆனால் இந்த புத்தகம் வாசிக்க சுலபமாகவே இருக்கிறது. எழுத்தாளர் செல்வகுமார் பேச்சிமுத்து தன் மொழி நடையால் வாசகனை மாடனூருக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். மாடனூர் மக்களின் பேச்சு, செய்யும் தொழில், குலதெய்வம், அவர்களின் வழிபாடு, அவர்கள் உண்ணும் உணவு என்று அனைத்தும் நம் கண் முன்னே விரிகிறது. இந்த புத்தகம் படிக்கும் எல்லோருக்கும் பலாக்காய் தொவரம் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக மனதில் தோன்றும். கீ.ரா., தோப்பில் முகமது மீரான் போன்ற முன்னோடிகள் ஏற்கனவே வட்டார வழக்கில் எழுதி வாசிப்பவர்களை லயிக்க செய்திருக்கிறனர். அந்த வரிசையில் கெளிமதமும் சேரும்.
ஒரு பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்கள் நிறைந்தவளாக இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதைப் போலவே இப்போதும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆண்களோடு பெண்களும் நினைக்கிறார்கள். இது காலங்காலமாக இருக்கும் அடிமை மனநிலையா அல்லது அவர்களால் முன்னேற முடியவில்லை என்ற இயலாமையின் வெளிப்பாடா என்று தெரியவில்லை. பெண்களுக்கான மீட்சி என்பது வெறும் விடுதலை உணர்வாக பார்க்கப்படுவதில்லை. கற்பு, கலாச்சாரம் போன்ற கருப்பு துணி நம் கண்ணை மறைக்கிறது. இந்தக் கதையின் காலகட்டம் 1970ல், 80ல் போன்று இருந்தாலும் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துகிறது என்பது கசப்பான உண்மை. பின்வரும் நாட்களில் இந்த புத்தகம் வாசகர் கையில் பரவப் பரவ பல கலந்துரையாடல்களுக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
***
ஆ.ஹரிகிருஷ்ணன் – கோவையில் தொழில் நடத்திவருகிறார். சமூக வலைதளங்கள் தன் வாசிப்பனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி : harikrish556@gmail.com


