சனிப்பொணமும், அம்மணியின் சல்லியங்களும்

0

பிரபு தர்மராஜ்

பூயானுக்கு வில்லுக்குறி பக்கம் அம்மணி என்று ஒரு நங்கையோடு சொல்லவொண்ணாக் காதல் இருந்தது. அதை மறைமுகக் காதல் அல்லது கபடக்காதல் என்று ஏனையோர் சொல்வதை விரும்பாமல் அவளை ஒரு தனி வீடு எடுத்தமர்த்தி காதல் செய்து வந்தான். ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இவனுக்கும், மூன்று பிள்ளைகள் அம்மணிக்கும் இருந்தார்கள். தன்னுடைய மனைவி தில்லையம்மாளையும், பிள்ளைகளையும் விரட்டி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கடுத்ததாக ஏழெட்டு கூம்புகளைக் கடந்து அம்மணியிடம் வந்து தஞ்சம் புகுந்திருந்தான்.

திடீரென்று ஒருநாள் நடுச்சாமத்து தீராக்காதலின் முடிவில் அவள் வாயிலிருந்து நுரை தள்ளியதைக் கண்ட பூயானுக்கு ஒரே வியப்பு.

‘செவத்துமுடிவா எதுக்கு இப்புடி கெடந்து துடிக்கா? வாயிலேர்ந்து என்னத்த வருகு?’ என்று எண்ணிக் கொண்டே,

“எட்டீ அம்முணி? எளா! என்னட்டீ கெடந்து துள்ளுக?’ என்று கேட்கும் போதே அம்மணியின் கண்கள் நிலைகுத்தின. ‘ஸ்கலிதம் கொடுத்த இன்பமாயிருக்கும்’ என்று எண்ணிக் கொண்ட பூயானுக்கு அவள் சன்னி கண்டு மரித்த காரியம் சற்று நேரங்கழித்து உறைத்தது. துடித்துப் போனான்.

ஐய்யோ! செத்துப் போயிட்டியா எங்கண்மணி! வெப்ராளம் தாங்காமல் அழுதான். இப்படியொரு சூழலை அவன் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லையாதலால் அவனுக்கு அந்த நிகழ்வு பேரதிர்ச்சியாய் அமைந்து போனது. அந்த சமயத்தில் அவள் அணிந்திராத அவளின் உள்ளுடைகள் மற்றும் இறுதியாய் அவள் அணிந்திருந்த கனகாம்பரப்பூ, அவளது முடிக்கற்றை மற்றும் அவளது இன்னபிற சாதனங்களை மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவி தில்லையம்மாளின் வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்து விட்டு மறுபடியும் அம்மணியின் உயிரற்ற உடல் இருந்த இடத்திற்கு வந்து கதறி அழுதான். அவளது உடலில் உடைகளை அணிவித்து விட்டு வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு மறுபடியும் வெளியே போய் விட்டான்.

பக்கத்து வீட்டாரின் உபயத்தால் அவளின் சாவு அறியப்பட்டு போலீஸ் வந்தது. விசாரித்தார்கள். அம்மணியை விசாரிக்க முடியாத காரணத்தால் அவளின் சட்டரீதியான கணவன் பாலையனை விசாரித்தார்கள். அவன் பூயான் குறித்து சொல்லவே பூயானைப் போலீஸ் தூக்கியது.

விசாரணையிலும், உடற்கூறு பரிசோதனையிலும் ‘அம்மணியின் மரணம் இயற்கையானது’ என்ற காரணத்தால் பூயான் விடுதலையானான். போலீஸ் அவனை விட்டுவிட்டாலும்கூட அம்மணி பூயானை விட்டுவிடவில்லை. தூக்கத்தில் வந்தாள், விழிப்பில் வந்தாள், கனவில் வந்தாள், கக்கூசிலும் வந்தாள். பூயான் மிரண்டு போனான்.

ஆனாலும் அம்மணி மீதிருந்த மையலும்,அம்மணி அளித்த அபாரமான காதலும் அவள் மீதான காதலை அதிகப்படுத்தி, அவளது பிரிவின் மீதான துயரத்தை அதிகப்படுத்தியவண்ணம் இருந்தன. ‘குடிகுடி’ என குடித்துத் தொலைத்தான்.

நள்ளிரவுகளில் அம்மணியின் வரவு ஆரம்பத்தில் பயமுறுத்தினாலும், அவள் மீதிருந்த எண்ணங்கள் அவளது வரவையே விரும்பியது. முதல்நாள் அம்மணி வந்து பூயானிடம் கேட்டாள்.

அன்னிக்கி ராத்திரி மட்டும் நீரு ஒரு கம்பிய எடுத்து எங்கையில குடுத்திருந்தீருனா நாஞ்செத்துருக்க மாட்டம்லா ஓய் ?

பூயான் சிரித்துக் கொண்டே, கம்பி ஓங்கையிலத் தானட்டீ இருந்து?

அம்மணிக்கு வெட்கம் தாங்காமல், அந்தக் கம்பி இல்ல மச்சாய்ன்! இரும்பிக் கம்பி!

பூயான் அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். கார்த்திகை மாசத்துக் குளிருக்கு அம்மணி ஒரு பெரும் கணப்பாக மூண்டு அவனைக் குளிர் காய வைத்து விட்டு விடியற்காலையில் விடைபெற்றாள். பூயானுக்கு ஒருவிதமான அச்சம்.

‘இவதான் செத்துப் போய்ட்டாளே? இவ எப்புடி இங்க வந்தா? நம்ம வூடுதான் இவளுக்குத் தெரியாதே? உயிரோட இருக்கும்போதே இவ்ளோ சொகமா இருந்ததில்லியே? எப்புடி இது ருசுப் பட்டிச்சி?’ என்றெல்லாம் கேள்விகள் மண்டையை குடைந்தது.

விடியற்காலை மூன்றரை மணிக்கு வயலுக்குப் போன செங்குட்டுவன், தனக்கு முன்பாக பெண்ணொருத்தி வயல்வரப்பில் நடந்து செல்வதை நிலா வெளிச்சத்தில் கண்டு திகைத்தான். தன் கையிலிருந்த லாந்தர் விளக்கை உயர்த்தியபடியே சத்தம் போட்டான்,

‘யம்மாளு யார்ம்மோ அது ?’

அந்தப் பெண் நிற்கவில்லை. செங்குட்டுவனுக்கு கோபம் வந்து விட்டது,

‘தள்…..ளே…..! யாருன்னு கேக்கியம்லா புள்ளே ! செவி கேக்காதோ? யாரது ?’

அவள் நடந்து போய்க் கொண்டேயிருந்தாள். செங்குவும் வேகமாக நடக்க ஆரம்பித்தான். இவனது வேகத்துக்கு இருமடங்கு வேகத்தைக் கூட்டி அவள் போய்க் கொண்டேயிருந்ததைக் கண்ட செங்கு அவளை துரத்த ஆரம்பித்தான். அவள் போன வேகம் செங்குவுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தாலும் அவனால் நம்ப முடியவில்லை. ‘ஒரு பெண்ணால் இந்த ஈர வரப்பில் இத்தனை வேகமாக ஓட எப்படி முடிகிறது?’

மறுபடியும் கத்தினான், எட்டீ ! கையில மாட்டுனேன்னு வச்சிக்கா வெளுத்துப்புடுவேன் ஆமா !

சடாரென அந்தப் பெண்ணைக் காணவில்லை. செங்கு நின்றுவிட்டான். எங்கே போனாள் ? என்று நினைத்துக் கொண்டவனின் முதுகில் எதுவோ தட்டுப்படவே திரும்பியவன் மிரண்டு போனான். அவனது மூக்கின் நுனியில் அவளது மூக்கு உரச அவள் கேட்ட கேள்வியில் அவனது மூச்சு நின்று போனது.

இந்தாத்தானே நிக்கேன்? எங்க வெளு பாப்போம் ?

செங்குட்டுவன் ஒரு குட்டுவத்தைப் போல வயலுக்குள் உருண்டு விழுந்தான். விடியற்காலையில் வயலுக்குப் போனவர்கள் தூக்கிக் கொண்டுபோய் புலிதடவி வைத்தியரிடம் கொண்டு போனார்கள். அவர் சொன்னார்,

“எவகிட்டயோ வம்பிழுத்துருக்கான்! சின்ன வயிசுக்காரி பாத்த பார்வ கொஞ்சம் அதிகப்படியாயிட்டு! நல்ல காலம் பொழச்சி வந்ததே பெரிய காரியோம்! இனிமேலால் கெழக்கு வெளுக்கதுக்கு முன்னால வீட்டுநடையத் தாண்டிராத! செத்த!”

செங்குட்டுவனின் மனைவி சூடாமணிக்குக் கடுங்கோபத்தில். “எவகிட்ட  வம்பிழுத்தாரு வைத்தியரய்யா? அதுவும் அந்த ஆவாத நேரத்துல?”

வைத்தியர் சிரித்தவாறே சொன்னார், “அது பிரேதம் மக்கா ! ஆளு இப்போ சீவனோட இல்ல ! ஒங்கூர்க்காரன் எவனோ கூட்டியாந்து கூட வச்சிருக்கான் ! அவனுக்க முச்சூட்டு ரெத்தத்தையும் குடிக்காம அவ போமாட்டா! இவன் வேற வலிஞ்சி போயி அவ காலுக்க வுழுந்துருக்காம் பாரேன்! என்று சொல்லிக் கொண்டே படுத்துக் கிடந்த செங்குவிடம் கேட்டார்,“எவ எங்க போனா ஒனக்கென்னடே? கழுதைக்கி சீலைய கெட்டி வுட்டாலும் ரெண்டு வட்டம் போட்டு ஒய்த்தி பாக்காம போவப்புடாது! அப்புடித்தானே?”

சூடாமணி சூடானாள், “இன்னிக்கி வீட்டுக்கு வாரும் ஒமக்கு! நல்ல கை வைத்தியம் பாத்தாத்தான் சோக்கேடு கொணமாவும்… நா ஒருத்தி பத்தாது இல்லியா ஒமக்கு? ஊருல போரவ, வாரவ பின்னால போய்கிட்டு, இங்க வந்து கவுட்டைக்கெடையில கையக் குடுத்துக்கிட்டு படுத்துக்கெடக்கியா மனுசா?”

வைத்தியர் சொன்னார்,“எம்மாளு கையக் கிய்ய நீட்டிப் புடாத ! மத்தவ உள்ளயாக்கும் இருக்கான்னு நெனைக்கேன்… ரெட்ட நாடி அடிக்கி !”

சூடாமணி பயந்து போனாள், “என்னய்யா சொல்லுரிய ? ரெட்ட நாடியா? கெர்ப்பமாவா இருக்காரு ?”

வைத்தியர், “பொம்பளக்கி ரெட்ட நாடி அடிச்சா கெப்பனக்காரி, ஆம்பளைக்கி ரெட்டநாடி அடிச்சா இன்னொரு ஆத்துமா அவனுக்க சரீரத்துக்குள்ளார இருக்குனு அர்த்தம் !”

செங்குவும், சூடாமணியும் பயந்து போனார்கள். “பயப்படத்தேவையில்லை!” எனச் சொல்லி தாயத்து ஒன்றைக் கட்டி இருவரையும் அனுப்பி வைத்தார் புலிதடவி வைத்தியர்.

செங்குவை மாதிரியே பலரும் அம்மணியால் மணி வீங்கித் திரிந்தார்கள். பலரும் அம்மணியின் அருவத்தைக் கண்டதாகச் சொன்ன சேதிகள் பூயானின் காதுகளை வந்தடைந்தது. இளைஞர்கள் பலருக்கும் சொப்பனஸ்கலிதம் ஏற்பட்டு துரும்பாய் இளைத்துப் போகவே ஊருக்குள் கொஞ்சம் சாமியார்களின் நடமாட்டம் உருவானது. விபூதியும் கையுமாக அலைந்தார்கள். பூயானும் எலும்பும் தோலுமாய் ஆகி நோயில் விழுந்தான். ஊரிலுள்ள ஆட்களும் மாலை ஆறுமணிக்கு மேல் தங்களுடைய நடமாட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

இரவு ஏழுமணி இருக்கும். நல்லமழை பெய்து கொண்டிருந்தது. வயலுக்குள் மேய்ந்த மாடுகளைப் பத்திக் கொண்டு, தலையில் கோணிச்சாக்கு ஒன்றைப் போர்த்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்‘அடாசு நடேசன்’. நாட்டு அடவுகளில் சிறந்து விளங்கியதால் ‘அடாசு’ என்ற புனைப்பெயர் ஒட்டிக் கொண்டது.

நடேசன் திடகாத்திரமான ஆள். ஒரே கையில் இரண்டு காளைகளை ஓட்டிக் கொண்டு வருவார். அன்றும் அப்படித்தான். ஊரே ஆழ்ந்த அமைதியில் இருக்க ஆட்கள் நடமாட்டமில்லாமல் இருந்த தெருவில் அரையிருட்டில் பயமில்லாமல் வந்து கொண்டிருந்தவர் தெருவின் முடிவில் இருந்த பெரிய படிக்கட்டுகளில் இறங்க எத்தனித்தபோது, மாடுகள் இரண்டும் எதையோ கண்டு மிரண்டு அசாத்திய பலங்கொண்டு இழுத்ததில் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்தார். காலிலும், தலையிலும் அடிபட்டு மயங்கிக் கிடந்தவரை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு போனபோதுதான் அது அம்மணியின் கைங்கர்யம் என்பது தெரிந்தது.

அன்றிரவு அம்மணி பூயானைப் பார்க்க வந்திருந்தாள். பூயான் அவளைப் பார்க்கவே பயந்தான். அவள் பக்கம் முகத்தைத் திருப்பாமலே சொன்னான்,

“இனிமேலும் நீ இங்க வராதட்டீ! செத்துப் போனதுக்கப்புறமும் நீ எதுக்கு வந்து எனக்க உயிர வாங்குக ? எல்லுந்தோலுந்தான் எனக்கிட்ட மிச்சமிருக்கு!

அம்மணி சத்தமாகச் சிரித்தாள், யாம்மச்சாய்ன் ! ஒன்னிய பாக்க வரப்புடாதுன்னி நீ யாஞ்சொல்லுக? ஒம்பொண்டாட்டி புள்ளையள ஒதுக்கி வச்சிக்கிட்டு, என்னைய தேடி வந்தவன் நீ! ஒன்னைய இங்கேர்ந்து கொண்டு போகாம நாம்போவ மாட்டேன்… நீ எனக்க உயிருல்லா ? நீ இல்லாம நா எப்புடி இருக்க? சொல்லு பாப்போம்!

பூயானுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. “அடிப்பாவி செறுக்கி ! இதுக்குப் பேருதாம் பேய்ப்பாசமா ? அடியே தில்லையம்மா ஒன்னிய தவிக்க வுட்டுட்டு இந்த சண்டாளி முண்டைக்க முந்தியில படுத்துக் கெடந்தனே ! எனக்கு இது தேவதாண்டியேய்… இவ என்னைய கொண்டு போவாம வுட மாட்டாளம்மா!” பூயான் மனதுக்குள் அழுதான்.

தில்லையம்மாள் ஒரு பாவம். புள்ளைப்பூச்சி. பூயானைக் கட்டிக் கொண்டதைத் தவிர்த்து அவள் வேறு எந்த பாவமும் செய்யவில்லை. வேண்டும் நேரமெல்லாம் மரம் போலக் கிடந்து நான்கு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, செலவுக்குக் காசு கேட்கும் நேரம் பூயான் மரம்போல இருப்பது கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கும் ஒரு மரப்பாச்சி அவள்.

பூயானின் கண்களில் நீர் வடிந்தது. அம்மணி எப்போது போனாளென்றே தெரியவில்லை. பூயானுக்கு அசூயையாகிப்போனது,

செவத்து செத்தமூதி! பக்கத்து வீட்டுக்காரி மாதிரி வந்துட்டு வந்துட்டு போறாளே கடவுளே? மனுசஞ் செத்தா சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போயிருவாம்னு சொல்லிட்டுத் திரியானுவளே இந்த வெங்கங் காவடிப் பயக்க ? இவ செத்தப்பொறமும் இங்கன கெடந்து லாத்திட்டு திரியா? எடுப்பு எடுத்துப் போயி தொடுப்பு வச்சா இப்புடித்தான் இடுப்பு செத்து அடுப்புக்க கெடக்கணும்! மனம் வெதும்பியது.

அடுத்தநாள் மாலையில் அடாசு நடேசனை வைத்தியசாலையில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தார்கள். வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டேயிருந்தார்.

அத்துட்டு ஓடுன மாடுவ எங்க போயி நிக்கோ ! இந்தப் பூயாம்பயலுக்க வூட்டுல போயி பாத்துக்கிட்டு வரணும்! என்ன எழவ இழுத்து வச்சிக்கிட்டு படுக்கையில கெடக்கானோ தெரியலையே ?

அவரது மனைவி செல்லம் நடேசனிடம் சொன்னாள்,“நேத்திக்கி வாங்குனது போறாதா ஓய் ஒமக்கு? இந்தக் கருக்கல் நேரத்துல அந்த இருளடஞ்சி கெடக்கிய வூட்டுக்குப் போவலைன்னா யாரடிச்சா ? பேசாம கெடையும்!”

நடேசன்,“இல்லட்டீ ! அந்தப் பெயலுக்கு என்னவோ பெருசா நடந்துருக்கு ! வெளிய சொல்ல மாட்டங்கான்! மூணே மாசத்துல நரி மாதிரி ஒணந்துட்டானே பாத்தியா? வுட்டா செத்துப் போயிருவாம் போலுக்கு! நாளைக்கி நாம்போயி கீரிப்பாறையில முள்ளங்காணி மந்திரவாதிய கூட்டிட்டு வந்து ஒண்ணு என்னன்னு பாக்கட்டு!”

வீட்டின் பின்னாலிருந்த சன்னலின் வழியாக நின்று கொண்டிருந்த ஒரு நிழல் இவர்கள் இருவரது சம்பாஷணைகளையும் கேட்டுக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த செல்லம் சன்னல் பக்கம் திரும்பவே அந்த உருவம் சட்டென விலகியது.

நடேசன் வேறு யாருமல்ல. பூயானின் ஒன்றுவிட்ட தாய்மாமாதான்.  எப்போதும் கிராளியாகவே நக்கல் பேச்சு பேசி எரிச்சலை மூட்டுவானாதலால் அவர் பூயானோடு பேசமாட்டார்.நடேசனின் வீட்டின் நேரே பின்பக்கம்தான் பூயானின் வீடு இருந்தது.

அன்று இரவு முழுவதும் மழை அடித்துப் பெய்தது. அது ஒரு சனிக்கிழமை.  வீட்டுக்குள் நீர் புகுந்து நடேசன் படுத்துக் கிடந்த பாயை நனைத்தது. தூக்கம் கலைந்து எழுந்த நடேசன் மணியைப் பார்த்தார். மணி அதிகாலை மூன்று. ஒரு முறத்தை எடுத்து தலைக்குமேல் பிடித்துக் கொண்டு வாசலில் இருந்து இறங்கி, வீட்டின் பின்பக்கம் நோக்கி நடந்தார்.

அங்கே பூயான் அம்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான், “பாவம்ட்டீ எங்க மாமன்! ஒனக்க நேருக்கு அவன் எதுக்கு வந்தாஞ் சொல்லு! அவன ஒண்ணுஞ்  செஞ்சிறாத! ஒன்னய கையெடுத்துக் கும்புடுகென்!”

அம்மணி அதிர அதிரச் சிரித்தாள், “ஒம்மாமன் என்னைய தொறத்துகதுக்கு யாரோ ஒரு மந்திரவாதியக் கூட்டியாரானாமே? நேத்து அவம்பொண்டாட்டிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தத நா கேட்டேன்!”

பூயானுக்குப் புரிந்து போனது,‘இந்த நடேசங் கோணையன் ஏதோ வாய உட்டுருக்கான்?’ தொட்டிப்பயல்கள் சாகுங்காலத்துலயும் வாயள வச்சிக்கிட்டு சும்மா கெடக்க மாட்டனுவோ! ஏற்கனவே நேத்துதான் படிக்கட்டுல உருண்டு வாங்குனான்! இன்னிக்கி இவகிட்ட வாங்கப் போறான்! பூயானின் மனம் துக்கமுற்றதில் மீண்டும் அம்மணியிடம் கெஞ்சத் தூங்கினான்,

“எட்டீ அம்முணி!நடேசம்மாமன் அப்புடித்தான்! ஏதாவது சொல்லுவாம்! ஒரு மயித்தாயுஞ் செய்யமாட்டான்! மந்திரவாதியக் கூப்புடப் போறேம்னு சொன்னாம்லா ! இப்போ போயிக் கேட்டா கீறிப்பாற வரைக்கும்போயி மந்திரவாதியக் கூப்டணும்னா வண்டிக்கூலி ஆரு தருவான்னு கேப்பான்! கஞ்சத் தாயோளி! அவென் ஒரு வெத்துப்பொட்டாசி! சளம்புவான் ஆனா வெடிக்க மாட்டான்”

அம்மணி அசையவேயில்லை, அவளது முகத்தில் அப்படியொரு இறுக்கம். அங்கே நடேசன் படிக்கட்டில் ஏறி தன்னுடைய வீட்டின் பின்பக்கத்தில் வந்து நீர்க்கசிவை அடைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். குனிந்து நின்று கொண்டே மண்ணை அள்ளி சுவற்றின் வெப்புகளில் வைத்து பூசிக் கொண்டிருந்தார். மழை வெளுத்துக் கொண்டிருந்தது. பூசப்பூச மண் நீரில் கரைந்து போனதால் நடேசனுக்குக் கோபம் வந்தது.

“இந்த மழ மயிருக்கு ஒரு நேரங்காலங் கெடையாது! ராத்திரி பூரா பெஞ்சில்லா! காலத்த நின்னு தொலைய வேண்டியதானே? சை!”

என்று சலித்துக் கொண்டே நிமிர்ந்தவரின் எதிரில் ஒரு ஜோடி அழகான கால்பாதங்கள் தென்பட்டது.

“இது யாருக்க காலும்மோ இது? அழவோல இருக்கே? கண்டிப்பா செல்லத்துக்க காலா இருக்காது! அவளுக்க காலு கரி புடிச்சி சூப்பாஞ்சிப் போயில்லா இருக்கும்!” என்று குழப்பத்தில் நிமிர்ந்தவர் அங்கே நின்று கொண்டிருந்த அம்மணியின் வனப்பைக் கண்டு மதிமயங்கிக் கேட்டார்,

“யாருடே இது? வசந்தாதானே! இந்த நேரத்துல இங்க வந்து நிக்க? மச்சான் நெனப்பு வந்துட்டோ? வாயாம் தோப்புப் பக்கத்துல மோட்ரூ ரூம்புக்குள்ளப் போயி பேசுவோம்! மழ வேற கொதுகொது’ன்னு அடிக்கி!” என்று வாயெல்லாம் பல்லான நடேசனைக் கண்ட அம்மணிக்கு ஆத்திரம் வந்தது,

“கொல்ல வந்தவளைக் கொஞ்சவா கூப்புடுக! இந்தா வாங்கிக்கா தாயளி! என்று ஒற்றை அரையில் நடேசனைத் தரையில் கிடத்தினாள். நீர்க் கசிவைத் தடுக்கப் போன நடேசனின் பின்மண்டையில் ரத்தம் கசிந்து மழைநீரோடு கலந்து வீட்டின் முன்பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

‘தன்னுடைய காதலி வசந்தாதான் தன்னைத் தேடி வந்திருக்கிறாள்! இன்று ஒரு பிடிபிடித்து விடவேண்டும்! என்று எண்ணி மனப்பால் அருந்திய நடேசன் பேச்சு மூச்சற்று மல்லார்ந்து கிடந்தார். இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பூயானின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனாலும் தன்னுடைய மாமன் நடேசன் இந்த வயதிலும் காமக் கண்ணனாய் இருந்ததைக் கண்ட பூயானுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

‘கெழவன் ஒண்ணும் லேசுப்பட்டவனில்லை! இந்த வயசுலயும் கொப்பனுக்க மொவனுக்கு தூக்குகே?’

அதிகாலையில் விடிந்து விட்டது. நடேசனின் மனைவி செல்லம் பாத்திரம் துலக்குவதற்காக உமிக்கரியை எடுத்துக் கொண்டே வாசலுக்கு வந்தவள், தெருவில் ஒருவிதமான நிறத்தில் மழைநீர் ஓடுவதைக்கண்டு குழம்பினாள். நடேசனின் ரத்தமும், புழக்கடையில் கிடந்த சாணியும் கலந்து தண்ணீர் கரும்பச்சை நிறத்தில் காட்சியளித்ததைக் கண்ட செல்லம் நடந்த அபாயத்தை உணர்ந்தாள்,

“எவனோ பூவரச பதம் பாத்துட்டான்!”

என்று தங்களது வீட்டின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்த பூவரச மரத்தை யாரோ வெட்டி விட்டதாக எண்ணினாள். பூவரச மரத்தின் தடியில் நீர் பட்டால் அந்த நீரானது ஒருவித எருமைச் சாணி நிறத்தில் மாறிவிடும். ஓடிப்போய் மரத்தைப் பார்த்தாள். பூவரசு குத்துக்கல் போல நின்றுகொண்டிருந்தது. அப்போதுதான் கவனித்தாள். வீட்டுப் பின்னாலிருந்து ரத்தம் வடிந்ததைக் கண்டு திகைத்து ஓடிச்சென்று பார்க்கவே அங்கே நடேசன் எவ்வளவு நேரம் கிடந்தார் என்பது தெரியவில்லை,நீருக்குள் ஊறிக் கிடந்தார். அவரது முகத்தில் ஒருவித காதல் மயக்கம் இருந்ததைக் கண்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

டாக்டர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னார், “ஹீ இஸ் நோ மோர்!”

இதைக்கேட்ட செல்லத்துக்குக் குழப்பம்,‘தண்ணீல கெடந்து சாவக் கெடக்கவனுக்கு மோரு எதுக்குக் குடுக்கச் சொல்லுதான் கோணப்பெய டாக்டரு?’ என்று எண்ணியவாறே டாக்டரிடம் சொன்னாள்,

“மோரா! இன்னிக்கிக் காலம்பறதானே ஒரைல ஊத்தி வச்சேன்! புளிச்சிருக்காதே வைத்தியரைய்யா!”

டாக்டர் சோர்வடைந்தார். பக்கத்திலிருந்த நர்சு சொன்னாள்,“பாட்டி! தாத்தா செத்துப் போயிட்டாரு! அதத்தான் டாட்டரு இங்கிலீசுல சொல்லுதாரு! தூக்கீட்டு போயி அடக்கத்துக்கு ஏற்பாடு பண்ணு!”

என்று சொன்னதுதான் தாமதம், செல்லம் ஒப்பாரி வைத்தாள். “ஏ அய்யா ! என்னய ஒத்தையில உட்டுட்டு போயிட்டியா?”

டெட்பாடி ஊருக்குள் கொண்டு வரப்பட்டு நடேசனின் வீட்டின் முன்பாகக் கிடத்தப் பட்டது. ஊர்த்தலைவர் கோவிந்தன் வந்தார். ஊர்மக்கள் கூட்டமாக நிறந்து நின்று கொண்டிருந்தார்கள். நடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தனது குடும்பத்தைக் கிறிஸ்தவ மதத்தோடு இணைத்துக் கொண்டிருந்த படியால் பாஸ்டரின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். பாஸ்டர் வந்து ஜெபித்து நடேசனின் பூத உடல் விண்ணை நோக்கிப் பயணிக்கவிருந்த நேரத்தில் ஒரு குரல் சத்தமாகக் கேட்டது,

“சனிப்பொணம் தனியாப்போவாதுடே!” இது கீழத்தெரு மரகதத்தின் குரல்,

“யாங்கொம்மய…ளி நீ கூடப் போவப் போறியா ? இது மேலத்தெரு குப்பானின் குரல்.

செத்த வீடோ, பெத்த வீடோ? கல்யாண வீடோ, சடங்கு வீடோ? சம்பந்தமே இல்லாமல் ஊர் அழைப்பை ஏற்று வருகை தந்து, சாராயத்தை குடித்துவிட்டு வாளேந்தி போர் புரியும் படைத்தளபதிகள் ஊர் ஊருக்கு உண்டல்லவா? அது போலவே தங்கள் பழைய சண்டையைக் காரணம் காட்டி மரகதமும், குப்பானும் அடிபிடிக்குத் தயாரானார்கள்.    

நீ போல தள்ளயக் கொல்லி! நா எதுக்குல சாவணும்? என்றான் மரகதம்.

நீதானே சனிப்பொணம் தனியாப் போப்புடாதுன்னு சொன்ன? தொணைக்கி வேணும்னா நீ போ’ன்னு சொன்னேன் என்று மறுமொழியளித்தான் குப்பான்.

ஊரான் வீட்டு ஒறவே! என் வீட்டு எழவே! என்பது போல நடேசன் வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஸ்டர் போய்த் தடுத்து,

“என்னடே இது? துட்டி வூட்டுல வந்து நின்னுக்கிட்டு பெகளம் வக்கீதீய? எடே மரகதம்! என்ன காரியம்? சனிப் பொணம் தனியாப் போவாதுன்னா என்னடே அர்த்தம்? என்று விசாரித்தார்.

அதற்கு மரகதம்,“சாமியாராய்யா! ஒங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல! சனிப் பெருக்கும்’னு சொல்லுவாவள்ளா? சனிக்கெழம யாராச்சி செத்தா அந்தப் பொணம் தனியாப் போவாது… கூட ரெண்டண்ணத்தக் கூட்டிக்கிட்டுத்தாம் போவும்!”

“என்னடே சொல்லுக வினோதமா இருக்கே?” பாஸ்டர் பதறினார்.

“நாஞ் சொல்லுகது நெசந்தாம் பாஸ்டர் சாமி!” மரகதத்தின் குரலில் ஒருவித பயம் இருந்ததைக் கண்ட பாஸ்டர் கேட்டார்,

“சரி செத்தது செத்தாச்சி! சாவு எதிர்பாராதது! சனிக்கெழம’ன்னு தெரிஞ்சா நடேசன் செத்தாரு? இப்ப ஆவ வேண்டிய காரியம் என்னானு சொல்லு?

மரகதம் பாஸ்டரிடம்,“பொட்டியில ஒரு நாட்டுக் கோழிய உயிரோட கெட்டி அனுப்புனா பிரச்சின வராது!” என்று சொல்லி முடிக்கவும்,

“பாத்தியா குள்ள தா…ளி! கோழி சூப்பு நக்குகதுக்கு திட்டம் போடுகான்!” என்று ஒரு குரல் கூட்டத்திலிருந்து கேட்டது. குப்பான்தான் என்று மரகதத்திற்குத் தெரியும். பாஸ்டர் கூட்டத்தினைக் கையமர்த்திவிட்டு,

“மரகதம் சொன்னது சரிதாம்’னா ஒடனடியா ஒரு நாட்டுக் கோழிய யார் வீட்டுலயாவது புடிச்சிட்டு வாங்க!” என்று சொல்ல, சபைத்தலைவர் அங்கமுத்து பாஸ்டரிடம் சொன்னார்.

“பாஸ்டர்! நாமல்லாம் கிறிஸ்துவின் பிள்ளைகள்! இந்த சடங்கெல்லாஞ் செய்யப்புடாது! தெய்வ குத்தமாயிரும்!”

பாஸ்டர் குழம்பிப் போய்,‘மரகதத்தின் எச்சரிக்கையா? மத நம்பிக்கையா? எதை நம்ப? சரி நடக்கது நடக்கட்டும்!’ என்று சொல்லி நாட்டுக்கோழியின் துணையில்லாமலேயே நடேசனின் சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் புதைத்தார்கள்.

பதினாறு நாட்கள் கழிந்தன. அன்று நடேசனின் அடியந்திரம். இலை போட்டு மூலைக்கு சோறு வைத்து, அதைத் தின்ன விடாமல் நடேசனை  சட்டத்துக்குள் புகைப்படமாக அடைத்து வைத்து மாலையைப் போட்டிருந்தார்கள். நடேசன் சிரித்த முகமாக இருந்தார்.

மறுநாள் பாஸ்டர் வீட்டிலிருந்து கூச்சல் கேட்டது, “அந்தா நிக்கான் நடேசன்! என்னையக் கூப்புடுகான்! அய்யோ நடேசனுக்க ஆத்துமா அந்தா நிக்கி ! என்னையக் கூப்புடுகு! யம்மோ! என்று கதறியவாறே தரையில் சாய்ந்தாள் பாஸ்டரின் தாய் பவுலி.

“வாராவினை வந்தாலும் சோராதே மனமே!” என்ற பாடலோடு, ஜெபிக்கப் பட்ட பவுலியின் வெற்று உடல் குழிக்குள் புதைக்கப்பட்டு பரமண்டலத்தை நோக்கி வீசப்பட்டது.

அன்று மாலையில் மரகதம் குடித்துவிட்டு கரகம் எடுத்து ஆடினான்,

“நாஞ் சொன்னம்லா தாயோளியளா? ஒரு நாட்டுக் கோழிய குடுக்கதுக்கு மாச்சப் பட்டு அநியாயமா ஒரு உயிரு நஷ்டமாப் போச்சே! இனி அடுத்தது யாரு தெரியுமா? நம்ம மேலத்தெரு குப்பான் கூயாந்தான்!”

இதை வீட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த பாஸ்டரின் மனைவி லதாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நல்ல வேளை அன்னிக்கி மாத்திரம் நாட்டுக்கோழிய நடேசனுக்க பாடி கூட அனுப்பியிருந்தா இந்த கெழவி இன்னும் இங்கன கெடந்து லாந்திக்கிட்டு நமக்க சீவன வாங்கீருப்பா!

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட குப்பானுக்கு குளிர் தூக்கித் தூக்கி அடித்தது,

‘இன்னும் பதினஞ்சி நாளைக்கிதான் நம்ம நடமாட்டம்! அதுக்குப் பொறவு நம்மளையும் குண்டு வெட்டி மூடிருவானுவோ!’

உயிர் பயம் வாட்டவே குப்பான் தளர்ந்து போனான். ஊருக்குள்ளும் துக்கம் குடி கொண்டது. தினமும் குப்பானின் வீட்டுக்குள் சென்று ஆட்கள் துஷ்டி விசாரித்தபடி இருந்தார்கள். உலகிலேயே ஒரு மனிதன் சாவதற்கு முன்பாக அவனைக் குறித்து துக்கம் அனுசரித்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. குப்பானுக்கு கோபம் தாங்கவில்லை. ஆனாலும் படுக்கையை விட்டு எழ முயற்சிக்கவில்லை.

“இன்னும் ரெண்டு நாளுதானே! படுத்தே கெடந்து செத்துருவோம்” என்று பிடிவாதமாகப் படுத்துக் கிடந்தான்.

ஊரே இவ்வாறு இருக்க பூயானின் வீட்டின் அன்றிரவு கடுமையான ரத்த வாடையும், மல்லிகைப் பூ வாடையும் சூழ்ந்து அந்த இரவையே கலங்க வைப்பதாக இருந்தது.பூயான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு மிகப்பெரிய புகைமூட்டத்தினுள் இருந்து பலத்த சத்தத்தோடு கோரமாகச் சிரித்த படியே தோன்றினாள் அம்மணி. மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தோடு அவள் நின்றதைக் கண்ட பூயான் களைப்படைந்தான்.

“மூத்திரம் அடிக்கக் கூட வக்கில்லாமக் கெடக்கேன்! இந்த லெச்சணத்துல சரோஜாதேவி மாதிரி சேலையக் கெட்டிட்டு வந்து நிக்காளே நாசமுத்துப் போனவ? போட்டீ அந்தால!” பூயானுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ஊருக்குள் மூன்றாவது சாவு யாருடையது?’ என்ற மிகப்பெரிய கேள்வி நடமாடும் சூழலில் பூயானுக்கும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. ‘பட்டியலில் நம் பெயர் இருந்து விடக்கூடாதே?’ என்ற அச்சத்தில் கிழவிகள் யாரும் வெளியே நடமாடவில்லை. கிழவர்களும் அப்படியே திரிந்தார்கள். மரண பயம் யாரை விட்டது?

பூயானுக்குத் தன் வாழ்வின் மீதான நிலைப்பாடு ஒன்றுமில்லாததாய் ஆகிப் போனது. மரணப் படுக்கையில் கூட எதிரில் மப்பும் மந்தாரமுமாய் நிற்கும் அம்மணியை எழுந்து போய் ஒரு முத்தமாவது கொடுத்து விடலாம் என்றால் அதற்கும் வழியில்லை.

எழவே வழியில்லை! எழவு முத்தம் ஒண்ணுதானா குறைச்சல்? என்று தோன்றியது. மனைவி, மக்களைத் தெருவில் விட்டேன்! வம்படியாய் மாமன் நடேசன் செத்தான்! அவனால் பாஸ்டரின் தாய் பவுலி செத்தாள்! அடுத்த மூன்றாவது பலி யார் என்பது தெரியாமல் ஊரே உருக்குலைந்து கிடக்கிறது! பூயான் சுற்றிமுற்றிப் பார்த்தான். அம்மணி ஒரு ஓரமாய் அமர்ந்து தலையைத் தன் மடிக்குள் புதைத்துக் கொண்டு உறுமிக் கொண்டிருந்தாள். அவளது அந்த உறுமல் சத்தம் கொடூரமாய் இருந்தது, பூயான் சன்னமின்றி அவளிடம் கேட்டான்,

எட்டீ அம்முணி! மூணாவதா யாருக்க ஈரக்கொலைய உருவப் போற ?

அம்மணியிடம் அரவமே இல்லை. அந்த அறை அத்தனை நிசப்தமாக இருந்தது. களபம் மணந்து கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் வினோதமான ஒலிகள் எழுந்த வண்ணமிருந்தது. அம்மணியின் மவுனமும், அந்த ஆழ்ந்த அமைதியான சூழலும் படுக்கையில் கிடந்த பூயானுக்குக் கலவரத்தை உருவாக்கியிருந்தது.

அம்மணியிடம் சத்தமாகக் கத்தினான்,“எதுக்கு என்னய இந்தப்பாடு படுத்துக! ஒங்கூட படுத்தது ஒரு குத்தமாட்டீ படுக்காளி முண்ட!”

இதைக்கேட்டு ரவுத்திரமானாள் அம்மணி. இருந்த இடத்திலிருந்து அப்படியே அந்தரத்தில் எழும்பி அந்த அறையின் மையத்தில் காற்றில் மிதந்து கொண்டிருந்தாள் அம்மணி. அவளது முகம் அத்தனை விகாரமாக இருந்தது. பூயானை உயரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே அகோரமாகச் சிரித்தவள் “நீதாம்லே மூணாவது சாவப்போறவன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே பறந்து வந்து பூயானின் சங்கைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சினாள். பூயான் பெருங்குரலெடுத்து அலறிக்கொண்டே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.

கீழே இருந்த ஒரு ஜோடிக் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான். “என்னய உட்டுரு தாயே!” என்று கதறி அழுதான். அந்தக் கால்கள் மிகவும் சிறியதாக இருந்தது கண்டு குழம்பி நிமிர்ந்து பார்த்தான். அது பூயானின் மூன்றாவது மகள் குட்டியம்மாள்.

பூயானுக்கு மீண்டும் துக்கம் பீறிட்டது,“நீயா மக்கா அப்பாக்க சங்கக் கடிச்சி ரெத்தங் குடிக்கப் போற?”

குட்டியம்மாள் சொன்னாள்,“எப்போய்! பள்ளியோடத்துக்குப் போறேன்! முட்டாயி வாங்கப் பைசா தா!”

மகளின் காலைப்பிடித்துக் கொண்டு கதறும் சத்தம் கேட்டு வந்த தில்லையம்மாள் பூயான் தரையில் கிடந்த கிடையைக் கண்டு சிரித்து உருண்டாள்.

“மான ரோசம் இருக்கா ஓய் ஒமக்கு? புள்ளைக்க கால்ல உழுந்து கும்புடுகீறே?ப்த்தூ! ஊர்ல உள்ள ஒருத்தியையும் உடுகது கெடையாது! தோவாள லெச்சிமி! தேரூரு பாமா! களக்காட்டு ருக்குமணி! அடையாமட ராதா! அறுக்கத் தெரியாதவங் கோமணத்துல அறுவத்தோறு அருவாங்குற மாதிரி! வூட்டுல அள்ளித் திங்காதவன் தெருவுல கிள்ளி நக்குனானாம்! கண்டவ வீட்டுல போய்ப் படுத்துக் கெடந்துகிட்டு, நடுச்சாமத்துல பூளலு முட்டக் குடிச்சிப்பூட்டு வந்து கெடக்கணும்! வாற வழியில கண்டதையுங் கூட்டியாந்துகிட்டு ராத்திரில கெடந்து பேயி! நாயின்னு ஊளையிடணும்! இதே பொழப்பாப் போச்சி அறுதக் கூயானுக்கு! போவும்… போயி பல்லத் தேச்சிக்கிட்டு வந்து கஞ்சியக் குடியும்! அப்பொத்தானே ஊரானுக்க தெங்குல தெம்பா ஏற முடியும்?” என்று மானங்கெட்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் பூயானின் மனைவி தில்லையம்மாள்.

பூயானுக்கு வியர்த்து விட்டிருந்தது. ஒரே ஒரு ஆசுவாசம்,தில்லையம்மாள் வாசித்த பெயர்ப் பட்டியலில் வில்லுக்குறி அம்மணியின் பெயர் இல்லாமலிருந்தது.

“இத்தன நேரமு நாங் கண்டது சொப்பனமா? இத்தாந்தண்டியா நீண்டுருக்கு கடவுளே?‘ஆயிரந்தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் கணக்கா எவ்ளோ பெருசு எம்மா?

பூயானுக்குத் தலைசுற்றியது. புழக்கடையில் நின்றிருந்த மரத்திலிருந்து வேப்பங்குச்சியை ஒடித்துப் பல்லைத் தேய்த்தபடியே பார்த்தால்,  தொழுவத்திலிருந்து மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்தார் அடாசு நடேசன். அவரைக்கண்டதுதான் தாமதம், பூயானுக்கு சிரிப்பு அள்ளிக் கொண்டு வந்தது,

“என்னடே இது! சனிப் பொணம் ரெண்டு மாடுவள பத்திக்கிட்டு போகு! நாட்டுக் கோழியாக் காணலியே?”

என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான். இதைக்கண்ட நடேசன் கேட்டார்,

“என்னலே பூயான்! விடியக்காலைல பல்லு மயித்தக் காட்டிட்டு நிக்க தொட்டிப்பெயல! ஒரண்டையும் கோழி புடிக்கப் போவல்லியா?”

பூயான் மீண்டும் சிரிப்பை அடக்க முடியாமல் அவரிடம் கேட்டான்,

“வேய் நடேசம்மாமோவ்! நீரு இன்னுஞ் சாவல்லியா வோய்?”

***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here