குளிர்மலையை உடுத்தியவள்
மிளகுக்கொடி சரம்விடத் தொடங்கியது
முன்பருவமழைக் காலமது
பழுத்த மிளகின் வாசனை நிறம் நிறமாய்ப் பிரிய
ஊழிச்சித்திரங்கள் நிழல்களாய் மலையிலாடியது
ஆரெஸ்வதி தைலத்தை பூசச்சொன்னாள் பாட்டி
பனிநீர்உதிர நடுங்கும் தண்டங்கீரையாய் நொடிந்துகிடந்த உடல் முன்பு மலைக்குளிரை குடித்துக் கிடந்தது
அடங்காது கொட்டும் மழையை மந்திரித்து ஊதிவிடுவாள் கைக்கடங்காத அணங்கு
நேற்றிரவு கனவில் மறையும் விளக்குகளைக் கண்டவள் மரணத்தின் தனிப்பாடலை அடைக்கலாங்குருவி பாடுகிறது என்றாள்
காடெங்கும் துயரத்தின் பாவுகொடி
அயராத அவளது கைகளின் ரேகைகளை எனது கைகளுக்குள் அவசரமாய் பிரதியெடுத்தேன்
ஆயிரம் ரேகைகள் விரைந்தோடிய உடலை நிதானப்படுத்தினேன்
தைல வாசனையோடு விறகுக்கட்டையாக நிமிர்ந்து மினுங்கி என் கைகளில் மரித்தாள்
ஆரஞ்சுபழத் தோலாய் சுருங்கிய தேகம்
மாந்தீரிகத்தின் புதிரான குறிசொல்லாக உறைந்துபோனது.
பேரமைதியில் குளிர்ந்துபோயிருந்த
அதிராத அவளின் ஆன்மா
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உரித்தானது.
அவளுடலை காட்டோடையின் கரையில் புதைத்திருந்தோம்.
அந்நிலமெங்கும் ஆரெஸ்வதி தைலவாசனை வீசுவதாகவும்
மலைக்காற்று அவளுடலை உருட்டியபடியே இருப்பதாகவும் மூப்பன் ஒருவன் சொல்லிச் சென்றான்.
பழைய ஏற்பாடு
நீலவானத்திற்குக்கீழ் கடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது
கடலாழத்திலிருந்து முத்துக்களை எடுக்க முடியாதவன்
சாட்டையால் கடலை அடித்துக்கொண்டிருக்கிறான்
கடலின் முதுகில் வரிவரியான கோடுகள்
ஒப்பாரி வைக்கும் கடலுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தேடி
கிளிஞ்சல்களை பிளந்துகொண்டிருக்கின்றன ஆமைகள்
ஒன்றைக் காப்பாற்ற இன்னொன்றை துன்புறுத்தல் பழைய ஏற்பாடு
அவரவர் சந்தோசம் அவரவர் துயரத்தோடு அமைதியாக இருந்தால் என்ன
பாவமன்னிப்புக் கேட்டு அல்லாடுவதற்குப் பதில்
கல்லறைப் பெட்டியை முதுகில் வைத்துக்கொண்டு நடக்கலாம்
நமது சொந்த பாவங்களை ஒளித்து வைக்க அது நல்ல இடம்..
***
நன்னிலக் கடவுள்
என்தாய் கனவில் முண்டுச்சீலை புடிக்கமாட்டாமல் பருத்தி எடுத்தாள்
அது குருவி கொத்தி தின்னமுடியாத பாடும் வெள்ளைமலையாக இருந்தது
எவ்வளவு முறை சொல்வது
என்னுடைய இதயத்தை யாராவது உடைக்கும்போதோ அல்லது
நான் யாருடைய இதயத்தையோ உடைக்கும்போதோ சத்தமாக பாடாதே மலையே!
என் தந்தை உயிருடன் இல்லை
இப்போது நான் நிலமற்ற மகள்
ஈமச்சடங்கில் விளக்கேற்றி தந்தைக்கு வைத்தழும் செம்புநீரில் இருள் குடிபுகுந்தது
திரி தூண்டும் அம்மாவின் கைகளோ
தூக்கத்தில் வெறுங்கையை உண்ணும்போது
நகராமல் நிற்கவா முடியும்
எல்லாவற்றின்மீதும் தீராப்பசி
பிணிதீர ஓடவேண்டும்
திரும்பிப் பார்க்காத ஒரு ஓட்டம்
கொஞ்சம் உடையை தளர்த்தி
எடை குறைத்து ஓடினால்
அம்மாவின் இரைப்பபை சுருங்குவதற்குள் ஒரு துண்டு உப்புக்கருவாடாவது ருசிக்க கிடைக்கும்
எனக்கும் கூடுதலாக ஒரு பாட்டில் ரெட் வொய்ன் கிடைக்கும்
டார்கெட் முடிந்ததும் இருட்டில் அந்நியனோடு உயர்தர பப்பில் ஒரு ஆட்டம் கூட போடலாம்
ஏன்? எதற்காக இப்படியெல்லாம் என்று கேட்காதீர்கள்?
விசயங்கள் அப்படித்தான் வந்து முடிந்திருக்கின்றன.
இலையுதிர்தலுக்கும் புத்திலை துளிர்ப்பதற்குமான இடைப்பட்ட காலமே! வெறுமையே!
இடையில் வராதே கொஞ்சம் நகரு
துயரத்தைப்பாடு ஆனால் உடனே சிரித்துவிடு
இந்தப் பசி உதிர்ந்து விழும் தடிசம்பழத்திற்கானது அல்ல பெருந்தீனிக்காரர்களுக்கானது
இங்கு எதற்கும் நேரமில்லை எதற்கும் இடமில்லை
அங்கே என் தாய் வெளிர் மேகத்தைப் பார்த்து,
“கருணையற்ற கடவுளே நிலமே
ஒருமுறை செழித்து நிற்கமாட்டாயா
இரண்டு போகம் விளையமாட்டாயா நன்னிலமே” என்று மன்றாடிக்கொண்டிருப்பாள்
மலையே உன்னுடையவை உன்னுடனே இருக்கின்றன
அதனாலே நீ நகராமல் நிற்கிறாய்
மரங்கள் பூக்க
பழங்களைக் கொத்தி தின்கின்றன பறவைகள்
சமர் செய்து பசிதீர்த்து மரத்தினடியில் படுத்துத்துறங்குகின்றன விலங்குகள்
நீ சாவுகளை புன்னகையோடு கடக்கிறாய்
ஏனேனில் நீ பிறப்பை பார்க்கிறாய்.
ஆடுகளை கழுதைகளாக அல்லது கடவுளாக மாற்றுதல்
நான் மரத்தினடியில் அமர்ந்திருந்தபோது
வாழ்வு அத்தனை ஆச்சர்யமானதாக இல்லை
என்னை நோக்கி அவன் வந்தபோதுதான்
விநோதங்கள் தொடங்கின
‘நான் உன்னிடம் பார்த்துக்கொள்ளும்படி
விட்டுப்போன நட்சத்திரங்களைத் திருப்பித்தா’ என்றான்
எப்போதென்று விழித்தேன்
‘இருபது வருடங்களாககளுக்கு முன்
இந்தபூவரசம் மரத்தின் கீழ்தான்’ என்றான்
அப்போது நான் மரத்தைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்தேன்
அந்த பள்ளத்திற்குக் கீழே நீரோடை ஓடும்
இங்கே price அட்டைத் தொங்கும்
மஞ்சள்நிற பெட்டிக்கடையிருந்தது
பொறுக்க முடியாத கால்வலியோடு
கிழவியொருத்தி மக்காச்சோளம் விற்பாள்
ஆலமரக்கிளையில் ஊஞ்சலாடியபடி அதைக் கடித்துத் திண்போம்
எல்லாம் நினைவிருந்தது ஆனாலும்
ஏய் பைத்தியக்காரா இதையெல்லாம்
உன் கடவுளிடம் போய்க்கேளென்றேன்
அவன் சொன்னான், ‘கேட்காமலா?
கடவுள் ஒரு நினைவு மறந்த கழுதை
எதுவும் அதன் ஞாபகத்தில் இல்லை
தான் ஒரு கழுதையாக இருந்ததைக்கூட
மறந்துவிட்டது’
இப்பொழுதெல்லாம் யாரும் கழுதைகளை வளர்ப்பதில்லை மூடனே
பொதி சுமப்பதை அவை நிறுத்தியதும்
மனிதர்கள் அதை வளர்ப்பதை நிறுத்திவிட்டார்கள்
கடைசியாக சுற்றித் திரிந்த ஒரு கிழட்டுக் கழுதையும்
நீரில்லாக் கிணற்றில் விழுந்து செத்துப்போனது
தற்சமயம் பொதியேற்ற இங்கே போதியமனிதர்களும் இல்லை
ஆடுகளை வளர்த்துக் கொண்டிருக்கும்
அந்த வயதானவர்களைத் தவிர
‘அவர்கள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’
ஆடுகளை கழுதைகளாக மாற்றிவிடும் முயற்சியில் இருக்கிறார்கள்
‘நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்’
கழுதையாவதற்காக காத்திருக்கிறேன்
வா என்னருகில் வந்து உட்கார்
நாம் சேர்ந்து காத்திருப்போம்.
சந்திரா தங்கராஜ் –
பூனைகள் இல்லாத வீடு, அழகம்மா, காட்டின் பெருங்கனவு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், நீங்கிச்செல்லும் பேரன்பு, வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல – கடவுள் எனும் கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. தற்பொழுது திரைத்துறையில் இயக்குனராக வலம் வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – abhipowsh@gmail.com
Valthukkal