நவீனா
Convictions are more dangerous enemies of truth than lies
– Friedrich Nietzsche
மொழி என்பது ஒரு அமைப்பு. எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்குள் செயல்பட்டு, மொழி உருவாக்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, அதன்வழி தோன்றும் வடிவங்களுக்கும் வகைமைகளுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய அமைப்பாக மொழி உருப்பெறுகிறது. வழக்காறு, மொழி என்னும் அமைப்பில் இருந்து உருவாக்கம் பெற்றாலும், அதன் மூலப்பண்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, உரையாடல்களில் செயல்படும் மொழியின் பொருள், நோக்கம், அந்த உரையாடல் எழும் சூழல் மற்றும் பின்னனி ஆகிய காரணிகளால் உந்தப்பட்டு மொழியை அதன் பயன்பாட்டை நோக்கி நகர்த்துகிறது. இவ்வாறு பயன்பாடு சார்ந்து இயங்கும் போது எந்தவொரு மொழியின் வழக்காறும் பண்பாடு, கலாச்சாரம், இனம், மதம், வாழிடம், பாலினம் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற சமூக அமைப்புகளுடன் ஒன்றரக் கலந்து பல புதிய வழக்காறுகளைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு இனக்குழுவும் சமூகத்துடன் உரையாட தனக்கென ஒரு வழக்காற்றை உருவாக்கிக் கொள்கின்றன. அதன் வழி நின்றுதான் தனது வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, தெரிவுகளை, நிகழ்வுகளை, எதார்த்தங்களை உலகிற்குக் கடத்துகின்றன. இத்தகைய வழக்காறுகள் தான் மனிதன் ஒற்றைத்தன்மையை (Singularity) நோக்கி நகர்வதைத் தடுத்து, பன்முகத்தன்மைக்கு (Multiplicity and Plurality) இடமளித்து, பல சிறு மற்றும் குறுங்கலாச்சாரங்கள் நலிவடைந்து, காலப்போக்கில் அடையாளமற்றுப் போகாமல் காவல் தெய்வங்களாய் அவற்றைக் காத்து நிற்கின்றன.
வழக்காறுகள் தனிப்பட்ட குழுக்களின் (அதை இங்கு Regional Discourses என கருத்தில் கொள்ளலாம்) குரலாக ஒலிக்கும் அதேவேளையில், மெட்டாநரேட்டிவ்ஸ் (Metanarratives) பல வழக்காறுகளின் ஒட்டுமொத்தக் கதையாடலாக, அத்தனை வழக்காறுகளும் உருவான கதையின் கதையாக, அவற்றின் தோற்றம், வளர்ச்சி போன்ற பரிணாமப் படிநிலைகளின் படிமங்களாக, அனைத்து வழக்காறுகளுக்கும் அடையாளத்தை உருவாக்கவும் அழிக்கவும் கூடிய மாபெரும் சக்தியாக தன்னை நிறுவி, பலதரப்பட்ட வழக்காறுகளும் தன்னுள் செயல்பட அனுமதிக்கும் தன்மை கொண்டதாகத் திகழ்கிறது (Grand Narratives, Major Narratives, Overarching Narratives மற்றும் Master Narratives ஆகியவையும் மெட்டாநரேட்டிவ்ஸ் என அறியப்படுவதால், அதனைப் பெருங்கதையாடல் என்ற ஒற்றைச் சொல்லாக மொழிபெயர்த்தல் முழுப்பொருள் தராது என்பதனால் அதனை இங்கு மெட்டாநரேட்டிவ்ஸ் என்றே கையாளுவது அந்தச் சொல்லாடலை முறையாக அர்த்தப்படுத்தும்).
ஜான் ஃபிரான்க்குவா லியோதா (Jean-Francois Lyotard) போன்ற பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் மெட்டாநரேட்டிவ்ஸை ஒரு சந்தேகக் கண்ணோடு அணுகுகின்றனர். பிரத்தியேகமான ஒற்றைக் கதை அதன்கீழ் கையாளப்படும் பலதரப்பட்ட கதைகளின் உண்மைத் தன்மையை விவரித்துச் சொல்வது கடினம். மெட்டாநரேட்டிவ்ஸில் எடுத்தாளப்படும் வழக்காறுகள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப தன்னை சுருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. மேலும் மெட்டாநரேட்டிவ்ஸ் பெரும்பாலும் மற்ற வழக்காறுகள் எடுத்துரைக்கும் மாறுபட்ட சிந்தனைகளுக்கும், மனவோட்டங்களுக்கும் இடமளிப்பதில்லை. மாறாக அவற்றைப் புறந்தள்ளுகின்றன அல்லது அவற்றை மெளனிக்கச் செய்து அதன் உரையாடல்களை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன. ஓரிரு வரிகளில் ஒரு இனக்குழுவின் வழக்காற்றைச் சொல்லி அதனைப் பற்றிய முழு அறிவையும் சமூகத்திற்குப் போதித்து விட்டதாய் ஒரு மாயயையும் ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான இனக்குழுக்களின் வழக்காறுகள் இத்தகைய மெட்டாநரேட்டிவ்ஸில் சிக்குண்டு கிடந்தாலும், அவற்றால் அதிகப்படியான சிதைவுகளை எதிர்கொண்ட வழக்காறுகளாக பழங்குடி வழக்காறுகளைக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கும் முற்றிலும் சிதைந்து, அழிவின் விளிம்பில் அவை இருப்பதாக உணரமுடிகிறது. மெட்டாநரேட்டிவ்ஸ் ஒரு வேட்டை விலங்கைப் போல் செயல்பட்டு பழங்குடி வழக்காறுகள் போல சிதைவுற்ற சிறு மற்றும் குறு வழக்காறுகளை விழுங்கி ஒரு பெருங்கதையாக, ஒற்றைத் தன்மை கொண்ட பெரும் வழக்காறாக மாறும் சூழல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக மாற்றங்களில் ஒன்றாகும்.
ஹெரடோட் (Herodote) என்னும் புவியியல் அறிவுசார் பத்திரிக்கை ஒன்றிற்காக பவுல் ரெயின்போ (Paul Rainbow) ஃபூக்கோவை (Foucault) நேர்காண்கிறார். முன்னர் ஒரு உரையில், பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடக்கலை மிகுந்த அரசியல் சார்பு கொண்டாதாக இருக்கிறது என்று ஃபூக்கோ கூறியதை சுட்டிக்காட்டி, மற்ற நூற்றாண்டுகளிலும் கட்டிடக்கலை அரசியல் பின்புலம் கொண்டதாக இருக்கிறது தானே? எடுத்துக்காட்டாக, ரோமானியப் பேரரசின் கட்டிடக்கலை, எகிப்திய கட்டிடக்கலை ஆகியவற்றைச் சொல்லாமே? என ரெயின்போ கேள்வி எழுப்பினார். பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடக்கலை மட்டுமல்லாமல் அதற்கு முற்பட்ட காலங்களிலும் கட்டிடக்கலை அரசியல் பின்புலம் கொண்டவையாக இருந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து அது முழுமுற்றாக அரசியல் சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு விட்டத்தாக ஃபூக்கோ குறிப்பிட்டார். ஏனெனில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நகரம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட வேண்டும், ஒரு வீடு எவ்வாறு கட்டப்பட வேண்டும், ஒரு தெரு எவ்வாறான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நகரங்களிலும் தெருக்களிலும் வீடுகளிலும் வாழத்துவங்கிய மக்களின் வாழ்க்கைமுறையையும் இத்தகைய ஒழுங்கமைப்பு வெகுவாக பாதித்தது. அவர்களின் போராட்ட குணம், சச்சரவுகளின் போது ஒன்றுகூடுதல் போன்ற சமூக பழக்கவழக்கங்களின் மீது அதீத தாக்கத்தை ஏற்படுத்தி, நாகரிகம் என்னும் பெயரில் அவர்களை இந்த நகரங்களையும் தெருக்களையும் போல அரசியல் சக்திகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க அமைதிப்படுத்தி விடுகிறது. இதனால் அவர்களின் போராட்ட குணம் மறக்கடிக்கப்படுகிறது என ஃபூக்கோ பதிலளித்தார். அவ்வாறானால், பதினட்டாம் நூற்றாண்டின் கட்டிடக்கலையில் வழக்காறு (Discourse) இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என ரெயின்போ கேட்டதற்கு, இல்லை வழக்காறு இருந்தது, ஆனால் அது அதிகார மையங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்று ஃபூக்கோ பதிலளித்தார்.
இன்றைய காலச்சூழலில் வழக்காறுகளை எடுத்தாளும் மெட்டாநரேட்டிவ்ஸ் முழுமுற்றாக அதிகார மையங்களின் ஆளுகையின் கீழ் இருப்பதால், அந்த வழக்காறுகள் சார்ந்த பின்னணியிலும், அதன் பாரம்பரிய கதைகளில் இருக்கும் உண்மைச் செய்திகளிலும் எவற்றைச் சொல்வது எவற்றை மறைப்பது என்பதை அதிகார மையங்களே தீர்மானிக்கின்றன. மேலும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் அவற்றின் விழுமியங்களையும் சுறுக்கி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, இங்கு பள்ளி பாடப்புத்தகங்களை அனைத்து வழக்காறுகளையும் உள்ளடக்கிய ஒரு மெட்டாநரேட்டிவ் என எடுத்துக் கொள்வோமேயானால், அதில் குறிஞ்சி நிலத்திற்கான தொழிலாக, ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ ஆகிய நான்கு வார்த்தைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உண்மையில் இந்த இரண்டு செயல்பாடுகள் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமா எனும் கேள்வியெழும் போது பழங்குடி வழக்காறுகள் தான் அந்தக் கேள்விக்கு விடையளிக்கின்றன. இவ்வாறான மெட்டாநரேட்டிவ்களுக்குள் சிக்குண்டு சிதைவுற்ற வழக்காறுகள் சொல்லும் பழங்குடியின கதைகளுக்கு மெட்டாநரேட்டிவ்கள் ஒதுக்கும் இடம் எப்போதும் ஒரு போதாமையையே ஏற்படுத்துகின்றன. மேலும் அவ்வாறு சிக்குண்டு சிதைவுற்ற வழக்காறுகளின் உண்மைக் கதைகளை இனம் கண்டு பிரித்தாட்கொள்வதும் மாபெரும் சவாலான செயலாக இருக்கிறது.
போலிஷ் எழுத்தாளரான ஜோசப் கான்ராட் (Joseph Conrad) எழுதி 1899 ல் வெளிவந்த Heart of Darkness நாவலை இத்தகைய இனம்காணுதலுக்கான சவாலுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நாவலில் ஆப்பிரிக்க கண்டத்தை, அது வேறொரு உலகம், அது ஐரோப்பாவிற்கும், மேற்கத்திய நாகரிகத்திற்கும் எதிர்மறையான வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்பதால் அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் என்று சித்தரித்துள்ளார். மேலும் ஆப்பிரிக்கப் பழங்குடியின மக்களை நரமாமிசம் உண்பவர்கள், அவர்கள் தீமையின் நிழல் போன்ற அவதூறான கருத்துகளையும் தனது நாவலில் பதிவுசெய்திருக்கிறார் கான்ராட். இது கான்ராடின் அனுமானம் மட்டுமல்ல. கான்ராட் போல பல மேற்கத்திய எழுத்தாளர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் அங்கு வாழ்ந்த பழங்குடிகளையும் பற்றி உருவாக்கி வைத்திருந்த மெட்டாநரேட்டிவ் கோட்பாடு. ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி சொன்னால் ஐரோப்பிய வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் மனதில் வேர் விட்டு கிளை பரப்பியிருந்தது இத்தகைய பொய்யான பரப்புரைகள். ஒரு பழங்குடியின சமூகத்தைப் பற்றி முற்றிலும் கட்டுக்கதைகள் சொல்லும் கான்ராடின் Heart of Darkness ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஐரோப்பிய வாசக சமூகத்தால் கொண்டாடப்பட்டுவந்தது. 1958ம் ஆண்டு சினுவா ஆச்சிபே (Chinua Achebe) என்னும் ஆப்பிரிக்க இபோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் கழித்து தனது Things Fall Apart (தமிழில் சிதைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்னும் நாவலின் வழி கான்ராடின் பொய்யுரைகளுக்கு எதிர்வினையாற்றுகிறார். ஆப்பிரிக்கர்களும் ஐரோப்பியர்களைப் போல மனிதர்கள் தான் என்றும் அவர்களுக்கும் தனிப்பட்ட பாரம்பரியமும் கலாச்சாரமும் பண்பாடும் நாகரிக வாழ்க்கைமுறையும் இருக்கிறது என்று அடையாளப்படுத்தும் போது உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது. மெட்டாநரேட்டிவ் கோட்பாடுகளால் சிதைவுற்ற ஒரு இனக்குழுவின் அடையாளத்தை மீட்டெடுக்க ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடி சமூகத்திற்கு அறுபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்றால் இன்னும் மெட்டாநரேட்டிவுக்குள் முடிச்சவிழ்க்கப்படாமல் சிக்குண்டு கிடக்கும் பல சிதைவுற்ற இனக்குழுக்களின் அடையாளங்களை இனம்காண, மீட்டெடுக்க, உண்மைநிலையைக் கண்டறிய எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை சிந்தித்துப் பார்ப்பதன் வழி இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணரலாம்.
ஒரு உதாரணத்திற்கு, தேனி மாவட்டத்தின் பளியர் பழங்குடிகள் குறிஞ்சி நிலம் என்று அறியப்படக்கூடிய மலை நிலத்தில் வாழ்பவர்கள். மெட்டாநரேட்டிவின் கூற்றுப்படி அவர்களின் தொழில், ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ என்பன மட்டுமே. ஆனால் உண்மையில் பளிச்சியம்மனை வணங்கி பால் கொடி ஏந்தி அவர்கள் தேன் அறுவடைக்குச் செல்லும் மாதங்கள் வைகாசி மற்றும் ஆடி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டும் தான். இன்னபிற மாதங்களில் அவர்கள் பயிர்த்தொழில் செய்து வந்தனர் (இப்போது காடுகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் வேளாண் தொழிலில் ஈடுபடும் சாத்தியம் அருகிப்போனது). மலை நிலங்களை அவர்கள் ஆறு வகையாகப் பிரித்து பண்படுத்தி வேளாண் தொழிலைச் செய்து வந்திருக்கின்றனர். எரிபொருட்கள் சேகரிக்க ஒரு பகுதி, மேய்ச்சல் நிலப்பகுதி, பயிர் செய்ய ஒரு பகுதி, பசுமை மாறாக் காடுகள், மரக்கட்டைகள் சேகரிக்கும் பகுதி மற்றும் உழுது பண்படுத்த ஏதுவாக இல்லாத நிலம் என பிரித்து, விலங்குகளுக்கான வாழிடங்களை குலைக்காமல் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். வேளாண் யுக்திகளையும், இயற்கை விவசாயத் திறன்களையும், வாழ்க்கைத் திறன்களையும் அதிகம் அவர்களின் வாழ்வியல் முறைகளில் காணமுடிகிறது. ஆனால் மெட்டாநரேட்டிவில் இதற்கான குறிப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் இடமில்லை. இந்தத் தரவுகளை தனிப்பட்ட பழங்குடி வழக்காறுகளில் இருந்து தான் பெறமுடிகிறது. மேலும், மெட்டாநரேட்டிவில் சொல்லப்படாமல் விடுபட்டுப்போன ஒரு இனக்குழுவின் கலாச்சாரம், நாளடைவில் மறைந்து அழிந்துபோகிறது. ஏனெனில் பெரும்வழக்காறுகள் நிறுவும் கருத்துக்களுக்கு மட்டுமே சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. குறிஞ்சி நில மக்களின் தொழில்கள், ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ என்பதும், ஆப்பிரிக்கக் கண்டம் ஒரு ‘இருண்ட கண்டம்’ என்பதும், ‘ஆரியர்கள் வருகை, மொகலாயப் படையெடுப்பு’ என்பதும், மெட்டாநரேட்டிவ்கள் கற்பித்த ஒற்றைக் கதைகள். அதன் பின்னனியில் இருக்கும் உண்மைக் கதைகளையும், அவர்களின் வழக்காறுகள் சமூகத்துடன் உரையாட எத்தனிக்கும் மனவோட்டங்களையும், கருத்துக்களையும் அவை ஒரு போதும் பொருட்படுத்துவது கிடையாது. அவற்றின் பன்முகத்தன்மை அதிகார மையங்களை அச்சுறுத்தக் கூடியவை என்பதால் வழக்காறுகளை மெட்டாநரேட்டிவ்கள் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன.
சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie), தனது Danger of a Single Story என தலைப்பிடப்பட்ட உரையில், இத்தகைய ஒற்றைக்கதைகளில் இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்குகிறார். அவர் குழந்தைப் பருவத்தில் அவரது வீட்டில் பணியாளாக இருந்த ஃபிடே என்னும் சிறுவனை அவர் நினைவுகூர்கிறார். ஃபிடேயைப் பற்றி அடிச்சியின் தாய் குறிப்பிடும் போதெல்லாம், அவனது ஏழ்மையைக் குறித்தே பேசுகிறார். அவர் உணவை உண்ணாமல் மீதி வைக்கும் போது, ஃபிடே போன்ற சிறுவனுக்கு உண்ணக்கூட உணவில்லை, ஆனால் அடிச்சி உணவை வீணாக்குகிறார் என்று அவரது தாய் வருத்தப்படுவார். திரும்பத் திரும்ப தனது தாய் வழியாக ஃபிடேயின் ஏழ்மை குறித்து மட்டுமே கேள்வியுற்ற அடிச்சிக்கு ஃபிடே ஒரு ஏழைச் சிறுவன் மட்டும் தான் என்ற எண்ணம் தவிர அவனது வாழ்க்கை முறை குறித்த வேறெந்த சிந்தனையும் அற்றவாராக அடிச்சி இருந்தார். ஒரு நன்றியறிதல் நாளில் ஃபிடேயின் வீட்டிற்கு சென்ற அடிச்சிக்கு ஒரு அழகான மூங்கில் கூடை ஒன்றினை ஃபிடே பரிசளிக்கிறான். அதை அவனது அண்ணன் முடைந்ததாகச் சொல்கிறான். அடிச்சிக்கு மிகுந்த ஆச்சரியம் உருவாகிறது. ஏழ்மை என்கிற ஒற்றைக் கதையைத் தாண்டி அவர்களின் வாழ்க்கையில் வேறு பல அத்தியாயங்களும் இருப்பதை அடிச்சி முதல் முறையாக உணர்கிறார். இதற்கு இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டையும் அவர் தனது உரையில் முன்வைக்கிறார். ஒருமுறை அடிச்சி ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, ஒரு மாணவி அவரிடம், அவரது Purple Hibiscus நாவலை வாசித்ததாகவும், அந்த நாவலில் வரும் யூஜீன் என்னும் தந்தை கதாப்பாத்திரம் தனது மனைவியையும் குழந்தைகளையும் அடித்துத் துன்புறுத்துவதைப் பார்க்கும் போது, நைஜீரியாவின் ஆண்கள் அனைவரும் மனைவி மக்களை அடித்து துன்புறுத்தக்கூடியவர்கள் என்பதை அறிந்து அவர்கள் மேல் பச்சாதாபம் கொள்வதாகக் கூறுகிறார் (அதற்கு அடிச்சி பதிலளிக்கும் வண்ணம் எள்ளலாக, தான் சமீபத்தில் American Psycho என்னும் நாவலை வாசித்ததாகவும், அதில் வரும் முதன்மைக் கதாப்பாத்திரம் போல அமெரிக்க இளைஞர்கள் அனைவரும் சைக்கோக்கள் என்பதை அறிந்து தானும் பச்சாதாபம் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்). ஒரு நாவலில் சித்தரிக்கப்படும் ஒரு தனிப்பட்ட கதாப்பாத்திரத்தின் குணாதிசியங்களை அது சார்ந்த நிலத்தில் வாழும் அனைவருக்குமான ஒற்றைக் கதையாக பார்க்கும் மனப்பாங்கை அடிச்சி சாடுகிறார். மேலும் அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறைகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கம், பண்பாடு பற்றியும் முழுமுற்றாக அறிந்துகொண்டதற்கான நிறைவை வாசகர்கள் ஒற்றைக் கதைகளில் இருந்து கண்டடைவது அபத்தம் என்கிறார்.
இத்தகைய மனப்பாங்கு மிகுந்த ஆபத்தானது. பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுக்களின் வரலாறுகளை, அவற்றின் பற்பல கதைகளை மெட்டாநரேட்டிவ்கள் ஒற்றைக்கதையாக மாற்றுகின்றன. ஒரு இனக்குழுவின் வழக்காற்றில் இருக்கும் நீண்ட நெடிய கதைகளை ஓரிரு வரிகளில் சொல்ல எத்தனிப்பதை எவ்வாறு நியாயமென நிறுவ முடியும் என்பது சிந்தனையைத் தூண்டும் கேள்வியாக இருக்கிறது. இதில் அதிகப்படியான சிதைவுகளைச் சந்திப்பது பழங்குடி வழக்காறுகள் தான். பல்வேறு பழங்குடிகளும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாகத் தனித் தனி வழக்காறுகள் வைத்திருப்பினும் அவை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவதே மெட்டாநரேட்டிவ்களின் பணியாக இருக்கிறது. இதனால் சிதைவுற்ற பழங்குடி வழக்காறுகள் பல இன்று அழிந்த நிலையிலும், அழிவின் விளிம்பிலும் இருக்கின்றன. அவற்றை மீட்டு புத்துருவாக்கம் செய்ய வேண்டியதும் இன்றைய சமூகத் தேவையாக இருக்கிறது. மேலும் மெட்டாநரேட்டிவ்கள் அவை எடுத்தாளும் மையக்கருவிற்கு வழக்காறுகளை உபகதைகளாக மாற்றிவிடுகின்றன. இதனால் வழக்காறுகள் ஒவ்வொன்றும் தனித்தனி மையக்கருக்கள் கொண்டு சமூகத்துடன் நிகழ்த்தக்கூடிய உரையாடல்கள் சிதைவுறுவதோடு, அவற்றின் உரையாடல் முனையும் மெட்டாநரேட்டிவின் மையக்கருவை நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் வழக்காறுகள் தனித்து செயல்படக்கூடிய நிலை மாறி அவை மெட்டாநரேட்டிவ்களின் ஒரு அங்கமாகச் செயல்படும்படி உருமாற்றப்படுகின்றன. காலப்போக்கில் அவை தனது தனித்தன்மையை முற்றிலுமாக இழந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறு மெட்டாநரேட்டிவ்களுக்குள் தொலைந்துவிட்ட வழக்காறுகளும் இனக்குழுக்களின் கலாச்சாரங்களும் பேரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலனியாதிக்க காலத்தில் கொண்டுவந்த ஆங்கிலக்கல்வி முறை என்னும் மெட்டாநரேட்டிவ் கோட்பாடும், உலகம் முழுவதையும் ஆங்கிலம் என்னும் ஒற்றை மொழியின் வழி இணைக்க எடுத்த முயற்சிகளும் எண்ணற்ற இனக்குழுக்களின் எழுத்துருக்களைச் சிதைத்துவிட்டதால், இன்று இபோ முதலான பழங்குடிகள் ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி தங்கள் மொழியை எழுதி வருகின்றனர். பல தென்னிந்தியப் பழங்குடி மொழிகள் இந்தி எழுத்துருக்களைப் பயன்படுத்துவதும், துளு மொழியின் திகலாரி (Tigalari) எழுத்துரு அழிந்து தற்போது அம்மொழி கன்னட எழுத்துருவைப் பயன்படுத்துவதும், ஆங்கிலம் மற்றும் பிராந்திய பெரு மொழிகளில் சிக்குண்டு சிற்றினக்குழுக்களின் மொழிகள் எதிர்கொண்ட சிதைவுகளின் விளைவுகள் தான். மெட்டாநரேட்டிவ்களால் ஏற்படக்கூடிய அழிவுக்கும் இவையே சான்று பகர்கின்றன.
மெட்டாநரேட்டிவ்கள் உருவாக்கும் மற்றொரு பெரிய சிக்கல் அவை அழகியலுக்குத் (Aestheticism) தரும் அதீத முக்கியத்துவமாகும். நீட்ஷேயின் கூற்று ஒன்று இந்த அழகியலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தினால் உருவாகும் அபத்தங்களை விளக்குகிறது. ஒரு பட்டாம்பூச்சியைக் கொல்லும் மனிதனை கெட்டவனாகப் பார்க்கும் உலகம், ஒரு கரப்பான்பூச்சியைக் கொல்பவனை வீரனாகப் பார்க்கிறது. உலகில் ஒழுக்கநெறிகள் கூட அழகியலைச் சார்ந்து தான் தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார் நீட்ஷே. வழக்காறுகளில் இருந்து எடுத்தாளப்படும் அழகியல் சார்ந்த கருத்துகளை மட்டுமே தன்னுள் இயங்க மெட்டாநரேட்டிவ்கள் அனுமதிக்கின்றன. வழக்காறுகளில் விளங்கும் அழகற்ற, ஒழுங்கற்ற, சீரற்ற உண்மைகளுக்கு அவை முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதிகார மையங்களை மகிழ்விக்கும் கருத்துகளை மட்டுமே வழக்காறுகளில் இருந்து அவை எடுத்துரைக்கின்றன. எவற்றை உலகிற்குச் சொல்ல வேண்டும், எவற்றை மறைக்க வேண்டும் என்பதும் அதன் தெரிவுகளின் அடிப்படையில் தான் நிகழ்கிறது. இன்னொருபுறம் மெட்டாநரேட்டிவ்கள் நிர்மாணிக்கும் கட்டமைப்புக்குள் வழக்காறுகள் அடங்கிப் போக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும், அவற்றின் மீது மெட்டாநரேட்டிவ்கள் செலுத்தும் அதிகாரமும் வெளிப்படையாகவே நிகழ்வதால் வழக்காறுகள் நசுக்கப்படுகின்றன. இவ்வகை அதிகார அத்துமீறல்களால் பழங்குடி வழக்காறுகள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.
ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அவற்றின் அடிப்படை பாரம்பரியத்தையும், வரலாற்றையும் சொல்லும் வழக்காறுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் மிகப்பழமையான வரலாற்றைச் சொல்லும் பழங்குடி வழக்காறுகள் அதீத சிறப்பும், அழுத்தமான தரவுகளையும் பதிவுகளையும் அவர்களின் வாழ்க்கைமுறை வழி உலகிற்கும் உணர்த்தும்படி எஞ்சியிருக்கககூடிய ஒரேயொரு ஆதாரமாகும். அவற்றில் பல இந்த மெட்டாநரேட்டிவ்களால் விழுங்கப்பட்டு அழிந்துவிட்டன. எஞ்சியவை சிதைவுற்ற நிலையில் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. வழக்காறுகளின் சிதைவுகள் கலாச்சார சிதைவுக்கு வித்திடுகின்றன. அது சமூகத்தை அதன் பன்மைத்தன்மையில் இருந்து மாற்றி ஒற்றைத்தன்மையை நோக்கி நகர்த்துகிறது. கலாச்சாரங்கள் அழியும் போது இனக்குழுக்கள் அதன் வேரைத் தேடி மீட்டெடுக்க போராடும் போது வழக்காறுகள் தான் அவற்றுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரேயொரு காரணி என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் சித்த மருத்துவக் குறிப்புகள், இயற்கை விவசாய யுக்திகள், இயற்கையை சிதைக்காமலும் அழிக்காமலும் வாழக் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைமுறைகள், மரமேறுதல், தேனெடுத்தல், விலங்குகளைப் பழக்குதல், தாவரங்களை இனங்காணுதல் போன்ற இன்றியமையாத வாழ்க்கைத் திறன்கள் என்று மனித வாழ்க்கையின் களஞ்சியமாகத் திகழும் பழங்குடி வழக்காறுகள் சிதைவை நோக்கி நகர்த்தப்படுவது மனிதகுலத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடு என்பதை உணர வேண்டும்.
அவ்வகையில் பழங்குடி வழக்காறுகளை மெட்டாநரேட்டிவ்களில் இருந்து விடுவிக்க வேண்டியது தற்காலச் சூழலில் மிகுந்த அவசியமாகிறது. மெட்டாநரேட்டிவ்கள் எழுத்துவடிவில் பதிவுசெய்யும் ஓரிரு வரிகளுக்குப் பின்னால் ஒரு பழங்குடி இனத்தின் வரலாறு புதைக்கப்பட்டிருப்பதை, சிதைவுற்று சிதலமடைந்திருப்பதை உற்றுநோக்கி மெட்டாநரேட்டிவ்கள் சொல்லும் ஒருவரி வரலாறுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். செயற்கையான வாழ்க்கைமுறையை நோக்கி மனிதகுலம் நகர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலச்சூழலில் ஆதிக்குடிகளின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களை, அவர்களின் நம்பிக்கைகளை இக்காலத் தலைமுறைக்குக் கடத்தும் பழங்குடி வழக்காறுகள் தொலைந்துபோகாமல் காப்பது மிகவும் முக்கியமாகும். மெட்டாநரேட்டிவ்களுக்குள் கரைந்துகொண்டிருக்கும் அவற்றை அடையாளம் கண்டு அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். பழங்குடி வழக்காறுகளுக்கு தகுந்த மதிப்பும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இக்கால தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் வாழ்க்கை குறித்து எழும், எழவிருக்கும் அத்துனை ஐயங்களுக்கும், வினாக்களுக்கும், குழப்பங்களுக்கும், அச்சங்களுக்கும் விடைகளை ஆதிக்குடிகளின் வழக்காறுகளில் கண்டடைய முடியும். அவை மனித வாழ்வை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவை. அதன் அர்த்தங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக்ககூடியவை. இன்னும் சொல்லப்போனால், வேர்களில் தொலைத்துவிட்டு கிளைகளில் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கும் சமானிய மனிதனுக்கு இந்த ஆதிக்குடி வழக்காறுகள் தான் மனிதனாக வாழ வழிகாட்டக்கூடியவை. அவற்றைச் சிதைவுகளில் இருந்து மீட்பதுதான் மனித வாழ்க்கைப் பாதையின் மையில்கல், மானுட அடையாளம்.
***
நவீனா – சொந்த ஊர் தேனி. ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தென்காசியில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பளியர் இனப் பழங்குடி மக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இலங்கையின் சிபிஎஸ் அமைப்பின் விருது பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: writernaveena@gmail.com


