நீலத்திமிங்கலமாய் மாறி
கடலளக்க விரும்பிய
ஒருத்தியை அறிவேன்
அவள் பேச்சில்
உப்பும் மீனும் கலந்த
மென் வாசமிருக்கும்
அவளைப் பறத்தலுக்காய்
பணித்திருந்தபோதும்
நீந்தவே பிரியப்பட்டாள்
ஈரச்சிறகுகளுடன்
நெடுந்தூரம் செல்வதையும்
எப்படியோ சாத்தியமாக்கினாள்
கடல் கடல் கடல்
என முனகியவள்
சுவாசங்களிலும்
குமிழிகள் சிதறியபடி இருந்தன
விழிகளுக்கு இமை பாரமென்றாள்
செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள்
எனக்குத் தெரிந்ததெல்லாம்
அவளின் பலவண்ணச் சிறகுகள்
மட்டுமே
முழு பவுர்ணமி நாளொன்றில்
கடற்கரையில் அவளைக்
கண்டெடுத்தபோதும்
நீலச் சேலை அணிந்திருந்தாள்
அன்று கடல் நீலமாயிருக்கவில்லை
பெரிய அலையொன்று புரட்டியதும்
அவள் உடலெங்கும்
மெல்லியதாய் முளைத்திருந்த
செவுள்களைக் கண்டேன்
உதிர்ந்துகிடந்த இறகுகளை
பொறுக்கிக் கொள்ள
கடல் மெல்ல
மேலேறி
வந்து கொண்டிருந்தது
அவளை நோக்கி
**************************
நீரைக்கிழித்துப் பயணிக்கும்
ஒற்றைப் படகில்
புதுமஞ்சள் தாலியுடன்
இருந்தவளிடம்
அருவிக்கரைச் சுழல்களில்
சிக்கி உயிரழந்தோரின்
கதைகள் சொல்லி
முத்தாய்ப்பாய்
உச்சியில் உள்ளங்கைப் பதித்து
ஆசீர்வதித்த
சாராய நெடியுடனான
அந்த பாணதீர்த்தப்
படகோட்டிப் பெரியவரையும்
வயிற்றில் கருவின்
இருப்பறியாது
ஓடித் திரிகையில்
பாதம் குத்தி உட்புகுந்த
ஏற்காடு மலை முள்ளும்
மற்றோர் முறை
காணவேனும்
நீண்ட பயணமொன்று
மிக அவசரமாய்
தேவைப்படும் பொழுதுகளிலும்
பயண சுவாரசியமாய்
கண்டடைந்து விடுகிறேன்
வனம் துறந்து
வான் கடக்கும்
அந்தச் சிறிய
நீலப் பறவையை
**************************
கோப்பைவிளிம்புகளில்
வழிகிறது கருணை
தீநா தீண்டத் தீண்ட
நவத்துவாரங்களிலும்
முளைக்கின்றன்
மேலும் நாக்குகள்
சிவப்பேறிய விழிகளில்
மட்டும் ஒளிரும் நா
இறுதித் துளி பருக
உடன் ஒரு தேவன் தேவை
இதழோரம் பிசுபிசுப்பதை
அவனிதழ் ஒற்றி எடுப்பதையே
ஆகமங்கள்
அனுமதிப்பதாய்
அவனே சொல்லியிருந்தான்
மிகு அயர்வுடன்
அவன் விலகியதும்
எஞ்சிய காலத்தில்
புதிதாய் கிளைத்தெழுகிறது
மற்றுமொரு பால் பல்
கோப்பை உடைந்து
நிலமெங்கும்
உதிர வீச்சம் பரவுங்காலை
வாயிலில் காலடியோசை
அதோ
மற்றோர் தேவன்
காத்திருப்பு
வழியும் விளிம்புகளுடன்
**************************
குறு அரம் கொண்டு
கிழித்தவள் அப்போதே
சென்று விட்டாள்
சரேலென நஞ்சுக்கொடிபற்றி
இழுத்ததும் வேலை
முடிந்திருந்தது அவளுக்கு
மிக லேசாய்
தலை திருப்பிப்
பார்த்தபோது
குழந்தை மேஜைமேல்
புரண்டு விழுந்திடுமோவென
அஞ்சியவளைப் பார்த்து
சன்னமாய் புன்னகைத்தத் தாதி
துளி நீர் பருகத் தந்து
எவருக்கோ காத்திருந்தாள்
நுழைந்தவன்
ஒரு கணம் திகைத்தான்
இயந்திரமாய் செயல்பட்டான்
கோல்களில் உயர்த்திக் கட்டிய
கால்கள்
என்ன மாதிரியான சலனம்
உண்டாக்கியிருக்கும்
மிக இளம் வயதினன்
துரித கதியாய் தையலிட்டவனுக்கு
இது எத்தனையாவது காட்சி
கசடுகள் நீங்க
அடிவயிற்றில் அழுத்தியவேளை
பீறிட்ட வலியால் தன்னிச்சையாய்
அவன் சட்டைநுனி பற்றிய
விரல்கள்
என்னவெல்லாம் சொல்லியிருக்கும்
ஒற்றைப் புன்னகையுடன்
சென்றவன் மட்டுமே
அறிந்திருந்தான்
பெண் என்பவள்
பெண் மட்டுமே அல்ல
**************************
வேர்களைச் சுமந்து
அலைவதென்பது
பாரமாய் இருந்ததேயில்லை
நான் கொட்டும் மலர்கள்
வேர்களின் வாசத்திற்காகவே
நான் உதிர்க்கும் இலைகள்
வேர்களின் நீட்சிக்காகவே
நான் பொழியும் மழை
வேர்களின் வேர்களுக்காகவே
காலத்தைச் செரித்து
காற்றை உமிழும் என்னை
பச்சையமாய்
நிலைக்க வைக்க என்
வேர்களோடே பயணிக்கிறேன்
எதனுள்ளோ தன்னை
மறைத்திருக்கும் வேர்களை
வெளியின் வெளியெங்கும்
பரவ விடுகிறேன்
பெயர்தல் என்பதும்
மற்றுமொரு சடங்காகும்
நிச்சலனப் பொழுதினிலே
என் வேர்கள்
எனக்குள் கிளைபரப்பி
எங்கும் மலர்ந்திருக்கும்!
– சசிகலா பாபு