சங்குத்தவம்

கார்த்திக் புகழேந்தி

1

டற்கரையூரில் ஆச்சி ஒருத்தி இருந்தாள். ‘அயந்தவனுக்கு அயிப்பைக் கண்டாலும் பேய்தான்’ என்றவொரு சொலவடையை அவள்தான் எனக்குச் சொன்னாள். ஆச்சி நல்ல கதைசொல்லியும் கூட.

மக்களை நோய்நொடிகளில் இருந்து தெளிய வைக்க மருந்துக் குளிகைகள்  மட்டும் போதாது, கூடவே சில மந்திர மாயங்களும் வேண்டும் என்பது அவளது நியமம். அதன்படி, நிறைமாத சூலிகளுக்கு நாடி பார்க்க, பச்சிளம் பிள்ளைக்கு பாதல் இறக்க, தொண்டைக்கட்டு, வாய்க்கட்டு, கொதி, சாக்காடுகளைக் கண்டு பயந்துபோன சிறுசுகளுக்கு நீர் தெளிக்க, வள்ளம், வலை, யாத்தீனங்கள் வாங்கினவர்கள் அதற்கு துஷ்டம் கழிக்க என்று சகல மருத்துவ மாந்திரீக மந்திர காரியங்களுக்கும் ஆச்சியைத் தேடி சனங்களும் வந்தபடியே இருப்பார்கள்.

ஆச்சியின் விவகாரங்களில் பலது இப்போது நியாபகத்தில் இல்லை என்றாலும், என் சின்ன வயதில் அவள் சொன்ன, வலம்புரி இடம்புரிச் சங்குகள் குறித்த கதை ஒன்று இன்னமும் என் நினைப்பில் அச்சுமாறாமல் இருக்கிறது.

கதைப்படி, ஆணும் பெண்ணுமான வலம்புரி-இடம்புரி சங்குகள் தங்கள் வாழிடத்திலிருந்து பரதவர்களின் கரையை நோக்கி, கூனி மாதத்தில் நகர்ந்து வருகின்றன. கடலின் பரிவார தேவதைகளென அறியப்படும் இந்தச் ‘சங்கிணைகள்’ விடிகாலை நேரத்தில் அலைபுரளும் மணற்கரையில் புறப் புணர்ச்சியில் ஈடுபட்டு, கொண்டாடிக் கழித்து, சூரிய உதயம் எழுகிற நேரத்தில் தாங்கள் யாரை ஆசீர்வதிக்க நினைக்கிறார்களோ அந்தப் பரதவனுக்குக் கடலின் செல்வம் கொழிக்கிற திசைமுகத்தை அடையாளம் காட்டிவிட்டு மறுபடியும் தண்ணீருக்குள் முங்கிவிடுவார்களாம்.

அப்படியொரு சமயத்தில் பிள்ளையில்லாத முக்காப் பரதவன் ஒருத்தன் காலைக் கருக்கலில் சொளவுத் தட்டைப் பிடித்துக் கொண்டு கடற்கரை வெளியில் கரை ஒதுங்க வருகிறான். அன்றைக்கு நல்ல அடைமழை வேறு. சொளவைத் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வெளிக்கு போய்க் கொண்டிருந்தவன் கண்ணில் கடலுக்குள் திரும்பாத வலம்புரி-இடம்புரி சங்குச் சோடிகள் தென்படுகிறது. பேராசை பிடித்த அவன் அழுங்காமல் தன்னுடைய முண்டாத் துணியில் அவைகளைப் புரட்டி எடுத்து தன் குடிசையில் ஒளித்து வைத்துக் கொண்டான்.

வலம்புரிச் சங்கிற்கு கடலின் ஆழங்களும், மர்மங்களும் தெரியும். இடம்புரிச் சங்கிற்கு மீன்வளம் தங்கிக் கிடக்கும் இடங்களும், காற்றின் திசையும் தெரியும். இந்த இரண்டின் அருளாசி கிடைக்கிற பரதவன், பாண்டியபதி அரண்மனை கிட்டங்கியில் குவிந்து கிடக்கும் முத்துப் பண்டாரத்தைக் காட்டிலும் அளப்பரிய செல்வத்தைக் கடலுக்குள் கண்டடைவான் என்பது கடற்கரை நம்பிக்கை. ஏக காலத்தில் இந்த இரண்டு சங்குகளும் சோடியாய்க் கிடைத்த முக்காப் பரதவனுக்கு அடித்தது யோகம். அதன்பிறகு அவன் வலையெல்லாம் மீன். மரமெல்லாம் சிப்பி ஒட்டு என்றாகிவிட்டது..

மற்றவர் ஒருதிசைக்கு ஓடினால், இவன் வேறு திசைக்கு ஓடி கடலையே அள்ளிக்கொண்டு வந்ததுபோல மீன்களோடு திரும்பியிருக்கிறான். மறுநாள் அதே திசைக்குத் தேடிப் போனவர்களுக்கு வெறுங்கைதான் மிச்சம். இவன் நம்மையெல்லாம் ஏமாற்றி என்னம்மோ மந்திரம் பண்ணுகிறான் என்று மீனவசாரிகளுக்குள் முனுமுனுப்பு ஆரம்பித்துவிட்டது. அப்படிச் சந்தேகம் பிடித்த வெத்தலைக் காம்பு பரதவன் ஒருத்தன், முக்காப் பரதவனின் குடிலைச் சுற்றிச்சுற்றி வந்தானாம்.

ஆளில்லாத நேரம் பார்த்து, முக்காப்பரதவனின் குடிசைக்குள் புகுந்து, அவன் மண்பானைக்குள் முடிந்து வைத்திருந்த சங்கிணைகளைக் களவெடுத்துச் சென்றுவிட்டானாம். இந்த விவகாரம் ஊராளியான கோமரத்தாடிக்குத் தெரிய வந்துவிட, அவர் வெத்தலைக் காம்புப் பரதவனை மிரட்டி, ’வலம்புரி உனக்கு இடம்புரி எனக்கு’ என்று ஆளுக்கு ஒன்றாகப் பங்கு கேட்டாராம். வெத்திலைக் காம்பு பரதவனும் வேறு வழியில்லாமல் இந்த இணக்கத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டான். சங்குச் சோடிகள் ஒன்றை ஒன்று பிரிந்து இருவேறு கைகளில் சிக்கிக் கொண்டன.

பிரிவின் சோகத்தால் பீடிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு, கண்ணீராய் வடித்தது. ஊர்கேட்க ஓலமிட்டது. சத்தம்கேட்ட பரதவர்கள் அது என்ன என்ன என்று அலைபாய்ந்தார்களே ஒழிய சத்தம் வந்த திக்கு புலப்படவில்லை. சங்குச் சோடிகளைத் திருட்டுக்கொடுத்த முக்காப் பரதவன் மட்டும் கரையெல்லாம் தேடிக் கொண்டே திரிந்தான். 

ஒருநாள் பகலில், கடலின் மர்மங்களைத் தன்னிடம் காதுகொடுத்துக் கேட்ட வெத்தலைக்காம்பு பரதவனிடம், ’கடலடி ஆழத்தில் யாருக்கும் தெரியாமல் யானை தண்டியிலான தங்கப் பாறை ஒன்று இருக்கு.. நீ மொத்தமா அத எடுக்க முடியாது. ஆனா உளி எடுத்துட்டுப் போனீன்னா கொஞ்சங் கொஞ்சமா வெட்டி எடுத்துட்டு வந்துடலாம்..” என்று சொன்னது.

தாங்க முடியாத பேராசை வந்துவிட்ட அவன் முன்பின் யோசிக்காமல், உடனே சங்கையும் உளியையும் கையில் எடுத்துக்கொண்டு, ‘எங்கே அந்த இடத்தை எனக்குக் காட்டு’ என்று கட்டுமரத்தோடு கடலுக்குள் கிளம்பிப் போனான். இங்கே அங்கே என்று கசம் வரைக்கும் இழுத்துச் சென்ற வலம்புரிச் சங்கு,  பெரிய சுழியாகப் பார்த்து அவன் கட்டுமரத்தைச் சிக்கவைத்து அத்தோடு அவனையும் மூழ்கடித்துவிட்டதாம்.

தனித்துத் தப்பித்துக்கொண்ட வலம்புரிச் சங்கு, அதுமுதல் யார்கண்ணிலும் சிக்காமல் நள்ளிரவில் தன் இணையைத் தேடிக் கரையோரம் ஒதுங்கி, கூவல் ஓசை எழுப்புமாம். நம்பி யாராவது தேடிப் போனால் அவர்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்று சுழியில் தள்ளிவிடுமாம். அதனால் தான் ‘ராத்திரி நேரம் அரசனே அக்கரைக்கு வான்னு கூப்பிட்டனுப்பினாலும் எந்திரிச்சிப் போயிடாதே’ என்று திரும்பவும் ஒருமுறை அழுந்தச் சொல்வாள் ஆச்சி.

கடல்சார்ந்து கேட்டறிந்த பல நாட்டாரியல் கதைகளுக்குள் களவெடுத்தல், பேராசை, கடலின் மர்மம், பேய் விளிக்கும் நம்பிக்கை, பாலியல் புணர்ச்சி, இழப்பு, பிரிவு, தேடல் என்று பல்வேறு விசயங்கள் மரபாகப் படிந்து கிடக்கின்றன. கடற்கரைக்காரனாக இல்லாமல் போனாலும், இந்தக் கதைகளை அள்ளித் தெளிக்கிற மனிதர்களோடு நெருக்கமாக இருந்த்துண்டு. அவர்களிடம் இருந்தே சங்குகள் குறித்த விதவிதமான அனுபவங்களும் தேடல்களும் எனக்கு வாய்த்தது.

திருச்செந்தூர் கோயில் வாசலில் ‘பண்ணாடி’ ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவருடைய முன்னவர்களைப் பாண்டிப் பண்ணாடிகள் என்று அவர் குறிப்பிட்டார். பாணர்போல ஊரூராகப் போய் சங்கநாதம் முழங்கிப் ’பண் பாடி இரக்கிற’ பிழைப்பைச் செய்து வந்தவர் அவர். இரு கைகள் கொண்டு ஏந்தும் அளவுக்குப் பெரிதான வலம்புரியும்-இடம்புரியுமாக இரட்டைப் பால் சங்குகளை அவரிடம் தான் முதன்முதலில் பார்த்தேன். மூக்குகள் அறுத்து, பித்தளை பூண் பொருத்தி, முனையில் நாகலிங்கம் வைத்த அச்சங்குகளை ஒருசேர இசைக்கத் தெரிந்த அவர் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆச்சி சொன்ன கதையை மனதில் வைத்துக்கொண்டு, அவரிடம் கேட்டேன்.  

“இது ரெண்டும் ஒருத்தர்கிட்டே இருந்தால் ராசாவாட்டம் வாழமுடியுமாமே?”

“எனக்கென்ன குறை, இப்பவும் நான் ராசாவாட்டம் தானே வாழுறேன்” என்று சிரித்தார்.

வாய்வலிக்கப் பலதடவை முயன்ற பிறகு அவர்தான் எனக்குச் சங்கை முழக்கக் கற்றுக் கொடுத்தார். பிறகு சங்கு குறித்தான என் நெடிய தேடல்களுக்கு அவரும் ஓர் முக்கிய காரண கர்த்தாவானார்.

2

சங்கும் பண்பாடும்

சங்கிற்கும் தமிழர் பண்பாட்டிற்கும் ஒரு நீண்ட பாரம்பரியத் தொடர்பு உண்டு. பழங்காலத் தமிழர் வாழ்வில் முச்சங்கு முழங்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. பிள்ளை பிறப்பின்போது, பாலூட்டுவதற்கு முதலாவதும், ஆணும் பெண்ணும் மணம் முடிக்கும்போது இரண்டாவதும், மரணத்தின்போது மூன்றாவதுமாகச் சங்கினை வாழ்வின் மும்முறை முழங்குவதை கடனாகக் கொண்டிருக்கிறார்கள். ‘முதற் சங்கு அமுதூட்டும், இரண்டாவது நல்வழி காட்டும், கடைச் சங்கம் காதவழிபோம்’ என்பது வழக்கு.

பேறுகாலம் முடிந்து, தாய் பிள்ளையைப் பெற்றெடுத்ததும், தாயும் மகவும் நலம் என்பதை அறிவிக்க, செவிலிப் பணி செய்யும் பெண் சங்கை முழங்கி, உற்றாருக்குக் குறிப்பால் உணர்த்துவார். இக்குறிப்பு ஒலியின் எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுத்தி அறியப்படும். பிள்ளையின் தாய்மாமன் சங்கிப் பாலாடையைத் தாய்க்கு அன்பளிப்பார். அதுவே, குழந்தைகளுக்குப் பாலூட்டவும், மருந்து புகட்டவும் பயன்படுத்தப்படும். சிந்துச் சமவெளி ஆய்வுகள் தொடங்கி, ஐம்பதாண்டுகள் முன்பு யாழ்ப்பாணப் பகுதிகளில் நடந்த ஆய்வுகள் வரை, தமிழ் மக்கள் பயன்படுத்திய இச்சிறிய பாலாடைச் சங்குகள் கணக்கற்று கிடைத்துள்ளன. உலோகப் பாலாடைகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், கிராமப்புறப் பகுதிகளில் இன்றும் சங்குப் பாலாடை பயன்பாட்டில் உள்ளது.

திருமணத்தில் சங்கு முழங்கும் பழக்கம்ம் நம்முடைய நீண்ட கால மரபு. இன்றளவில், நாவிதர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் குடும்பத்தவர்கள் தங்கள் திருமணங்களில் சங்கு ஊதும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். கள்ளர் இனத்தில், தங்கள் வீட்டுத் திருமண நிகழ்வில், மணமகன் வீட்டுக்கு, மஞ்சள், மாலை, தேங்காய், நெல், பால், நெய், வெற்றிலை, பாக்குடன் ஊர்வலமாகச் செல்லும் பெண்கள் சங்கு ஊதும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமணங்களில் குடிமகன், சங்கு ஊதப் பெண்கள் குலவை இட்டுத் தாலி கட்டு பழக்கம் 1980 வரை இருந்துவந்துள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த திருமுருகன் அவர்கள் தகவல் தெரிவித்தார். இரவு நேரங்களில் நடைபெறும் இத் திருமணத்தைத் திருப்பூட்டுதல் என்றே அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் தண்டாசி மற்றும் பௌரீஸ் ஆகிய இனக்குழு மக்கள் தங்களது திருமணங்களில் சடங்குகளில் சங்கின் உள்ளே மஞ்சள் கரைசலை ஊற்றி அதைக்கொண்டு மணமக்கள் கைகளில் நனைவிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். வங்காளம், ஒரிசா பகுதிகளில் பார்ப்பனர்கள் தங்கள் திருமணங்களில் சங்கொலி இசைக்கிறார்கள். ஆனால், தெலுங்கு மொழி பேசும் சில இனக்குழுவினரும், தமிழக பார்ப்பனர்களும் சங்கொலியினைத் தீய ஒலியாகக் கருதியதால் தங்கள் திருமண காரியங்களில் அவர்கள் சங்கினை இசைப்பதில்லை. நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் திருமணக் கனவிலும், நளவெண்பாவில் தமயந்தியின் சுயம்வரத்திலும் சங்கம் முழங்கும் பாடல்கள் இலக்கியச் சான்றாக உள்ளன..

மூன்றாம் சங்கநாதமான, இறப்புச் சடங்கில் சங்கொலி எழுப்புவது தமிழகத்தில் பார்ப்பனர், வைணவர் அல்லாத அனைத்து சதியினரிடமும் இன்றளவும் காணப்படுகிறது. நெல்லை, மதுரை உள்ளிட்ட தெற்கத்திப் பகுதிகளில் நாவிதர்களும், கோவை, திருச்சி பகுதிகளில் பறையர்களும், தஞ்சை, சேலம், உள்ளிட்ட வடமேற்குப் பகுதிகளில் பணிசவர் சாதியினரும் பிற சாதியரின் இறப்புச் சடங்குகளில் இத்தொழிலைப் புரிகிறார்கள். இவர்களே இறப்புச் செய்தியை ஊருக்கு அறிவிப்பவராகவும் செயல்படுகிறார்கள்.

திருவிதாங்கூர் பகுதிகளில் சங்கூதும் பறையர் இறந்தால் அவரது சங்கையும் அவரோடு சேர்த்துப் புதைக்கும் பழக்கம் இருந்துவருகிறது. இச்சடங்குகளில், திருமணமான ஆண் இறந்தால் அவரது மனைவியின் தாலி  கழற்றப்படும்போது, உறவினர்கள் கோடித்துணி வீசும்போது, வீடுதாண்டு சடலம் புறப்படும்போது என ஒவ்வொரு சடங்கின் முடிவிலும் சாவுச் சங்கொலி எழுப்புகிறார்கள்.

பிற நம்பிக்கைகளில்..

பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவை தவிர விழாக்களிலும், போர்களின் போதும், அறிவிப்பு செய்யவும், பிச்சை எடுக்கவும், பேயோட்டவும், அறுவடைக்கு முன்பும், பொங்கல் இடுகையிலும், பூப்புச் சடங்கிலும், வழிபாட்டிலும், விடியல் நிமித்தமும், நாட்டார் இசை, நடனங்களிலும், கோயில் வழிபாடுகளிலும் சங்கொலி முழங்குதல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

தேவக்கோட்டை கள்ளர்கள் ஆடிப்பட்டத்தில் அவரை விதை நட்டு, அது முதல் பூ பூத்ததும் சங்கு ஊதி சாமி கும்பிடுகிறார்கள். வீட்டில் வைக்கும் தென்னை முதல்  பாளை தள்ளினால் பொங்கல் வைத்துச் சங்கு ஊதுவது வழக்கம். கொச்சி மலபார் பகுதிகளில் வேளாண் தொழில்செய்யும் செருமான்கள் இறந்தால், எட்டுநாள் சடங்கு செய்து, சங்கினை முழங்கி அவரைப் பேய் நிலையில் இருந்து தெய்வமாக மாற்றும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். இடையர் சாதியினர், இறந்த சடலத்தை பிள்ளைகள் மும்முறை சுற்றி வரும்போதும், சுற்றுக்கு ஒருமுறையெனச் சங்கு முழங்கி, அதன் முனையைக் கொண்டே பானையில் துளையிடுகிறார்கள். இஸ்லாமியர்களின் ’சுன்னத்’ சடங்கின்போது பிறமலைக் கள்ளர்கள் அச்சடங்கில் கலந்துகொண்டு சங்கு ஊதிப் பணம் பெறுவார்கள்.

பல்லவ மன்னர்கள் போர் புரியும்போது அவர்கள் எழுப்பிய சங்கின் ஒலி கடுவாய் ஒலிபோல எழுந்ததாக நந்திக்கலம்பகம் குறிப்பிடுகிறது. போர் வெற்றியின்போது பதினெடு மேளதாளங்களோடு சங்கு முழங்குவதை இடங்கை வலங்கை வரலாறு குறிப்பிடுகிறது. காலை விடியலை சங்கொலி எழுப்பி அறிவித்ததை சிலப்பதிகாரம் ஊர்க்காண் காதையின் 13ம் வரியில் காணமுடிகிறது. நன்னிமித்தச் சங்கு முழங்குவது சீவக சிந்தாமணி மற்றும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல தீய நிமித்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் சங்கு முழங்கப்பெற்றது. வங்காளத்தில் சூரிய, சந்திர கிரகண நேரத்தில் தொடர்ந்து சங்கினை முழங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 

தொழிற்சமூகம் உருவான காலத்தில் ஆலை திறக்கும் நேரத்தை அறிவிக்க சங்கு முழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மீன்விற்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைச் சங்கொலியின் மூலம் ஈர்த்து வியாபாரம் பார்த்துள்ளனர். ஐரோப்பியர்கள் வானிலை மோசமடையும் பெருமழைக் காலத்தில் சங்கொலியினைக் கொண்டு மக்களை எச்சரித்துள்ளனர். கண்மண் தெரியாதப் பனிக்காலத்தில் ஆழ்கடல் பயணங்களில் சங்கு முழக்கும்போது, கடல்த் தெய்வம் தங்களைக் காக்கும் என ஐரோப்பியர்கள் நம்பினார்கள்.

ஆண்டிகள் சங்கூதிப் பிச்சை எடுப்பது இன்றும் கிராமப் புறங்களில் காணமுடியும் செயல். வட ஆர்காடு பகுதியில் வாழும் தாசரி வைணவர்கள் சங்கு முழங்கி தமது வருகையை அறிவித்தார்கள். சங்கு அவர்களது குலச்சின்னமாகவும் ஏற்கப்பட்டிருந்தது.

3

குலச்சின்னம்

பண்டைக் காலம் முதலே சங்கினைத் தங்கள் குலச்சின்னமாகக் கொண்ட இனக்குழுக்கள் இந்நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் குறவர்களும், கலிஞர்களும், குறும்பர்களும், பணிச்சவர்களும், ஆந்திர வேலமாக்களும், மேலைச் சாளுக்கியர்களும், வங்காள குருமிகளும், சந்தால்களும், ஓரான்களும் தங்கள் இனக்குழுவினருள் சங்கினைக் குலமரபுச் சின்னமாக ஏற்றவர்களைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, சங்கவார், சுமுத்ர தாலா, சங்க், சங்கு, சங்கோ போன்ற கிளைப் பெயர்கள் வழங்கப் படுகின்றன.

இவர்கள் சங்குகளை அணிந்தோ, ஆபரணமாகவோ பயன்படுத்துவதில்லை. மாறாக அதனைத் தங்கள் பண்பாட்டு அடையாளமாகப் பெற்றவர்கள். மறுபுறத்தில், சங்கினைக் குலச்சின்னமாகக் கொண்டிராதபோதும், அதனைப் பயன்படு பொருளாகக் கொண்ட காரணத்தால் ‘அடையாளப் பெயர்’ பெற்ற இனக்குழுவினரும் பரவலாகக் காணப்படுகிறார்கள். கோவை, திருச்சி பகுதிகளில் சங்கூதும் தொழில் புரியும் பறையர் இன மக்கள் சங்குப் பறையர் என அழைக்கப்பட்டனர். வலங்கைப் பிரிவினரில் சங்கறு கவறையாரும், இடங்கைப் பிரிவினரில் சங்கு கட்டும் மாறமங் கொல்லியரும், கறையாளரும் சுட்டப்பெறுகிறார்கள்.

நாணயம்

குலச்சின்னமாக மட்டுமல்லாமல் தங்களது அரசு, மதம் நிர்வாகம், நாணயம் ஆகியவற்றிலும் சங்கு முத்திரைகளைப் பயன்படுத்திய மன்னர்கள் வரலாறு முழுக்கத் தென்படுகிறார்கள். கிமு 3ம் நூற்றாண்டுக்கு அண்மைக் காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர் பெருவழுதியின் அரச நாணயங்களில் யானை, எருது, ஆமை, மலை முகடு ஆகியவற்றுடன் சங்குச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

சங்க காலச் சோழர் காசுகளிலும் சங்கு நாணயம் இடம்பெற்றுள்ளது. பல்லவர் நாணயங்களில் ஒருபுறம் சங்கும், மறுபுறம் காளை, பிறை, நாகம் ஆகிய உருவங்கள் காணப்படுகிறது. ’மாமல்ல’ எனப் பெயர் குறிப்பிடப்பட்ட பல்லவ காசுகளில் சங்கு பிரதானமான சின்னமாக இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘லங்கவீர’ என்ற பேர் பொறிக்கப்பட்ட சங்குமுத்திரைக் காசு பிற்காலச் சோழர்களின் வெளியீடாகவே கருதப் பெறுகிறது.

விஜயநகர ஆட்சிகாலத்தில் மதுரை, தஞ்சை, நாயக்கர் நாணயங்களில் சங்கும் சக்கரமும் பொறிக்கும் வழக்கமிருந்தது. கொங்கு, ராமநாதபுரப் பகுதிகளிலும் இவ்விதமான காசுகள் சிற்றரசர்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, வட இந்திய அரச முத்திரைகளிலும் சங்கு தனித்துவம் வாய்ந்த முத்திரையாகக் கொள்ளப்பெற்றுள்ளது. திருவிதாங்கூட் சமஸ்தானத்தின் அரச முத்திரையாகவே சங்கு இடம்பெற்றிருந்தது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலே நாணயங்களில் சங்கு பொறிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை திபெத் பழங்குடி மக்கள் சங்குத் துண்டுகளை காசுகளுக்குபதில் பயன்படுத்தியுள்ளார்கள். வடகிழக்கில் அஸ்ஸாம் நாகர் இன மக்களும் 1850 வரை சங்கு வட்டங்களை நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அடிமை வாணிகமும், கால்நடை விற்பனையும் சங்கினை பணமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு பசுவுக்கு பத்துச் சங்குகள்.  பன்றிக்கு இரண்டு சங்குகள். ஆடு காட்டுக்கோழிக்கு ஒரு பை உப்பு. வடகிழக்கினை ஆக்கிரமித்த காலத்தில் ஆங்கிலேயர் சங்குகளையே அங்குள்ள நாகரின மக்களிடம் வரியாகப் பெற்றனர்.

சங்கறுப்பதெங்கள் குலம்

இச்சங்குகளை வட்டமாக, நாணயங்களாக, மணிகளாக, முத்திரைகளாக, அணிகலன்களாக வடிவமைக்கும் தொழில்நுட்பம், தமிழகத்திலே மிகவும் சிறப்புற்று விளங்கியது. திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியிடம் கொடுத்தனுப்பிய பாட்டுக்காக  நக்கீரனும் சிவனும் சண்டையிடும்  காட்சியில் இடம்பெறும் தனிப்பாடல் திரட்டு வரிகள், நக்கீரன் சிவனைப் பார்த்து, “சங்கறுப்பது எங்கள் குலம்; சங்கரனார்க்கு ஏது குலம்” என்று கேட்பதாக இடம்பெறுகிறது. முன்னதாக, அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி… எனும்பாடலால், உடம்பெல்லாம் புழுதிபட, அரிவாளில் என்ணெய் தடவி, உடல் அதிரச் சங்கை அறுக்கும் நக்கீரனா என் பாட்டில் குற்றம் சொல்லத்தக்கவன் என்றே சிவன் நக்கீரனைச் சீண்டுவதாக எழுதப்பட்டுள்ளது. இத் தனிப்பாடல் திரட்டு 12ம் நூற்றாண்டுக்கு முன்புவரை எழுதப்பட்ட பலரது தொகுப்பு நூல்.

பண்டைய தமிழ்ப் பெண்கள் சங்கினை அறுத்து உண்டாக்கின வளையள்களை அணிந்ததும், சங்கு மணிகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டதும் சங்க கால இலக்கியங்களில் பரவலாகவே காணப்படுகிறது. ஐங்குறுநூறு, நளவெண்பா, சீவேந்திர்ர் சரிதம், செழிதரையன் பிரபந்தங்கள் ஆகிய இலக்க்கியங்களில் மக்கள் அணிந்த சங்கணிகள் ஒவ்வொன்றும் விரிவாக இடம்பெற்றுள்ளன. 

பிரபலமான குறுந்தொகைப்பாடல் ஒன்று, தலைவன் பிரிவால் அணிந்த அவள் வளையல் நெகிழ்வதையும், அவன் வருகையால் வளையல் கைகளை நெருக்கியதையும் குறிப்பிடுகிறது. அவ்வாறு மகளிர் அணிந்த வளைகளுக்கு எல்வளை, எரிவளை, இலங்குவளை, வரிவளை, செறிவளை, சில்வளை, ஆய்வளை, நிரைவளை என்று அதன் வடிவம், ஒளி, நிறம் ஆகியவற்றைக் கொண்டு பெயரிடப்பட்டிருந்தன. இவ்வலையல்கள் பெரும்பாலும் சங்குகளால் உருவாக்கப்பட்டவை. பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை; வலம்புரி வளையோடு கடிகைநூல் யாத்து, எனப் பாண்டியன் மனைவி வலம்புரிச் சங்காலான வளையல் அணிந்திருப்பதை நெடுநெல்வாடையில் நக்கீரர் எழுதுகிறார்.

பாண்டியன் மனைவி மட்டுமல்ல, ஆண் பெண் பாகுபாடில்லாது பாண்டியனும் சங்கினால் செய்த வளையினை அணிந்திருந்தான் என்பது முத்தொள்ளாயிரப் பாடலின் மூலம் அறியலாம். மேலும், சின்னமனூர் செப்பேட்டில் இடம்பெறும் வரிகளால், இரண்டாம் ராஜசிம்மன் தன் கைகளில் வெண்நிறச் சங்கினால் ஆன வளையலை அணிந்தோன் எனக் கண்டறிய முடிகிறது. வளையல்கள் போலச் சங்குத் துண்டங்களில் செய்யப்படும் மணி, அக்குமணி என்று அழைக்கப்பட்ட்து. சங்குமணியை அக்கு, மனவு என்று நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது. சங்கு மணியால் கோர்க்கப்பட்ட நல்ல நீண்ட கூந்தல் என்று அவ்வை குறுந்தொகையில் (23) எழுதியுள்ளார்.

அணிகலன்கள்

இடைக்காலத்தில் தமிழகப் பகுதிகளில் சங்கணிப் பயன்பாடுகள் மக்களிடையே மெல்லக் குறைந்தது. அதேநேரம் வங்காளத்தில் நாளுக்கு நாள் அதன் பெறுமதி அதிகரித்தது. அதன் தன்மை எப்படி என்றால், திருமண வரதட்சணையாக மணமகளின் தந்தை சங்கு அணிகளை மாப்பிள்ளைக்குக்  கொடுக்கும் அளவிற்கு. வங்காளம் மட்டுமல்லாமல், திபெத், பூட்டான், பர்மா, அஸ்ஸாம், ஒரிசா, பீகார் பகுதிகளிலும் சங்கணிகலன்களின் தேவை இருந்தது. சோட்டா நாக்பூரின் சந்தால் பெண்கள், சிட்டகாங்கின் மாக் பெண்கள், திபெத் பழங்குடிப் பெண்கள், அஸ்ஸாமின் கொன்யாக்(நாகர்) பெண்கள், சங்கு வளைகளைப் புனிதப் பொருளாகக் கருதினார்கள்.

இதன் காரணமாக, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சங்கு அறுத்துக் கலைப்பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் வங்காளத்தில் வெகு விரைவாகத் தொழில்மயப்பட்டது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் தமிழக்க் கடலடியில் விளைந்த பெருமளவு சங்குகள் மூலப் பொருட்களாகவே வங்காளத்திற்குப் ஏற்றுமதி செய்யப்பட்டன. தேவைக்கு அதிகமான கொள்முதல் காரணமாக இலங்கைக் கடலில் விளைந்த சங்குகளை வங்கத்துத் தேங்காய்களுக்குப் பண்டமாற்று செய்து இறக்குமதியாகின. இந்தச் சூழலில்தான் கடல்வழி வாணிகத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்களாலே சங்கு வாணிகமும், இடம்விட்டு இடம்பெயர்ந்தது.

4

சங்கும் மதங்களும்

நெல்லை மாவட்டம் நாட்டார் தெய்வங்கள் பலரின் பிறப்பிடம் என்றாலும் அது சைவம் தழைத்து பிரசித்தி பெற்ற ஊராகவே அறியப்படுகிறது. நெல்லையப்பர் சன்னிதியில், தைப்பூச தீர்த்தவாரி அன்று நூற்றுக் கணக்கில் சங்குகளை அடுக்கிவைத்து, அதில் தாமிரபரணியை நிரப்பி, கோயில் கொடிமரத்திற்கு  சங்காபிஷேகம் நடைபெறும். இதேபோல மாசியில் சாலைக்குமரனுக்கும் ஆயிரத்தி எட்டுச் சங்காபிசேகம் உண்டு. பொதுவாகச் சங்குத் திருமுழுக்காடு என்பது சைவத்தில் ஒருவரை ஆச்சாரியனாக்குவதற்கு கடவுள் முன்பாகச் செய்யப்படும் வழிபாடாகவே கடைபிடிக்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டின் சைவ சம்பந்த நாயனார், ‘விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும் அடவி காடு’ என்று ஊரையே பழிக்கிறார். தான்போகும் பாதையெங்கும் அவரே சங்கம் முழங்கிகொண்டு போனதாகவும் பாடல்கள் உண்டு. (சம்பந்த நாயனார் புராணம், 2099ம் பாடல்). வைணவத்தில் சங்கின் ஒலிக்குப் ‘பிரணவநாதம்’ என்று பெயர். வைணவத்தின் ‘வைகானஸ’ என்ற ஆகமம் தங்களின் ஒவ்வொரு கடவுளர் அவதாரம் ஒவ்வொன்றும் தனித்தனியே தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட வடிவலங்காரச் சங்குகளைப் பாவித்ததாகக் குறிப்பிடுகிறது.

அதில், மகாவிஷ்ணு கையில் பாஞ்சன்யமும், நாராயணனிடம் பூமாவும், ரங்கநாதன் கையில் துவரியும், அனந்த பத்மநாபன் கையில் பாருதமும், பார்த்தசாரதி கையில் வைபவமும், சவுரிராஜன் கையில் துயிலமும், திருமலை வேங்கடன் கையில் மணிச்சங்கும், சுதர்ஸன ஆழ்வார் கையில் பார் சங்கும், கலியபெருமாள் கையில் வெண் சங்கும் இருப்பதாக வரிசைபடுத்துகிறார்கள்.

‘வெள்ளிவிழிச் சங்கம் கேட்டிலையோ’ என்று பாடும் வைணவரைச் சீண்டும் தீவிர சைவர்கள், “சங்கை ஊதிக் கெடுத்தான்’ என்று குற்றப்படுத்துவதும் உண்டு. அதன் பிற்காரணம், பாரதப்போரில், அசுவத்தாமன் என்கிற யானை இறந்ததை செய்தியை, ‘அஸ்வத்தாமா அதஹ.. குஞ்சரஹ’’ என அறிவிக்கும் நேரத்தில் குறுக்கீடாகச் சங்கை முழங்கி, குஞ்சரஹ என்ற சொல்லை கண்ணன் அடக்கி விட்டார். விஷயம், போரில் அசுவத்தாமனே இறந்ததாக குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது என்பதுதான்.

மதம், வழிபாடு, பிறப்பும், இறப்பு, திருமணம் சண்டை ஆகிய சூழல்கள் எல்லாமும் சங்கின் நாதம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் மிக முக்கியத்துவமாக, தமிழகத்தில் எப்படி பெரும்பான்மையான இனக்குழுச் சமூகத்தின் திருமணச் சடங்கில் தாலி முக்கிய அடையாளமோ அப்படி வங்காளிகளுக்குச் சங்கில் அறுத்த வளையல்கள் மிக முக்கியமான மங்களப் பொருளாக இன்றும் இருக்கிறது.

தங்களது ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் அவர்கள் பழைய வளைகளைக் களைந்து, தாலிச்சரடு மாற்றுவதுபோல புதிய சங்கு வளையல்களை அணியும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். அதேபோல பெண்ணின் கணவன் இறந்துபட்டால் மரணச் சடங்குகளுக்குப் பிறகு சங்கு வளையல்களையும் சேர்த்தே எரியூட்டுகிறார்கள்.

திபெத்திய பௌத்த மதத்திலும் சங்கு அவர்களது அஷ்ட மங்களத்தின் முதல் அடையாளச் சின்னம். பௌத்தம் சங்கினைத் தங்கள் அறிவிப்பின் அடையாளமாகக் கருதியது. மகாவம்சம் எட்டுப் புனிதப் பொருட்களில் ஒன்றாக சங்கினைக் குறிப்பிடுகிறது. சமண தீர்த்தங்கரர்களான ஆதிநாதர், நேமிநாதர் இருவரின் உடமைகளாகத் தர்மச்சக்கரமும் சங்கும் கருதப்பட்டன. 9ம் நூற்றாண்டு சமணச் சிற்பங்களில் இவ்விருவரது பீடங்களிலும் சங்குச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தென் இலங்கையின் ‘மாத்தற’ மாவட்டத்தில் 1930ல் கண்டெடுக்கப்பட்ட சிறிய பலகை வடிவிலான பௌத்த கல்தூணில் தமிழ் கிரந்த எழுத்துகளோடு சங்கின் அடையாளமும் இடம்பெற்றிருந்தது.

சங்கு முத்திரை

தமிழகத்தில், வைணவர்கள் உபநயனம் செய்வித்து பூணூல் அணிக்கும்போது இடது வலது தோள்பட்டைகளில் முறையே சங்குச் சக்கர முத்திரைகளைச் செம்பு அச்சின் மூலம் சூடிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு சமாட்சரணம் என்று பேர். சைவர்கள் மற்றும் பிற சாதியினரில் இருந்து வைணவத்தை ஏற்பவர்கள் கட்டாயமாக இச்சடங்கைப் பின்பற்ற வேண்டியிருந்தது. சங்கு முத்திரை இடும் குருமார்கள் சமூகத்தில் மதிப்புள்ளவர்களாக இருந்தார்கள். எண்ணிக்கையில் குறைந்த இவர்கள் ஊர் ஊராகச் சுற்றியும், மடங்கள் அமைத்தும் இம்முத்திரையை இட்டு உபநயனம் செய்வித்தனர்.

ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொப்புள், தோள்பட்டை மற்றும் மார்பிலும், திருமணமான பெண்களுக்கு இடது முன் கையிலும், பெண் பிள்ளைகளுக்கு மேல் வயிற்றிலும் சங்கு முத்திரைகளை சூடிட்டிருக்கிறார்கள். வங்காள வைணவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், துத்தநாகம், ஈயம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய எட்டு தாதுக்களால் (அஷ்ட தாதுக்கள்) உருவாக்கிய அச்சில் இவ்வாறு சங்கு முத்திரைகளை இட்டுக் கொண்டனர்.  பறையர் சாதியினரில் இருந்து வைணவத்தை ஏற்பவர்களுக்கு பார்ப்பனர் அல்லாத தாசரிகள் இம்முத்திரையை இட்டனர்.

தமிழகக் கோயில்களில் பொட்டுக்கட்டிய தேவதாசிப் பெண்களுக்கு சங்கு முத்திரை இடப்பட்டுள்ளது. தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த போயர் இனப் பெண்களும் கோயில்களுக்குத் தங்களை அர்பணிப்பதை அறிவிக்கும் விதமாக சங்கு முத்திரை இட்டுக் கொண்டனர். கர்நூல் பகுதிகளில் பாசவி எனும் நாட்டியப் பெண்களுக்கு வலது கையில் அன்னப் பாத்திரமும், இடது கையில் கரும்பும் அளித்து அவர்களுக்கு சங்கு சக்கர முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. கேரளத்தைச் சார்ந்த தண்டன் சாதியினர் தங்களது கைகளில் சங்கு முத்திரை குத்திக் கொண்டனர். 

கண்ணேறு

அக்காலங்கலில் வீடுகள் கட்டும்போது அடிவாரக் குழிகளில் முதன்மையான பொருளாக சங்குகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு செய்யும்போது சங்குகள் வளைமையை ஏற்படுத்தி, தீமையில் இருந்து காக்கும் என்பது நாட்டார் நம்பிக்கையாக இருந்துவந்துள்ளது.  இப்பழக்கம் ரோமன் கத்தோலிக்கப் பரதவர்களிடம் இன்றும் காணப்படுகிறது. தூத்துக்குடியில் வாழும் பறையர் சாதியினர் இதுபோல, சங்குடன் பவளப்பாறை, சுண்ணாம்பு ஆகியவை சேர்த்து அடிவாரமிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். பிற சாதியரில் கட்டப்பட்ட வீடுகளில் அவர்களது வளமையை அதிகரிக்க 45 நாட்கள் நீர் நிரம்பிய சங்குகளை வீட்டில் வைத்து பூசை செய்து அதைத் தரையில் புதைக்கிறார்கள். ராமநாதபுரம் பரதவர் வீடுகளின் நுழைவாயில் படியில் மேடு தெரியும் அளவுக்கு இவ்வாறு சங்குகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.

சங்கு கண்ணேறு தீர்க்கும் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் நாட்டுப்புறத்தில் இடம்பெறுகிறது. வளரிளம் சிறார்களைக் கண்ணேறுகளில் இருந்து காக்க, சங்குத் துண்டுகளில் செய்த வட்ட வடிவிலான ஐம்படைத் தாலியை அணிவிக்கிறார்கள். அவர்கள் இளையவரானதும் இத்தாலி கழற்றப் படுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் ஐம்படைத் தாலியைக் கழற்றும் வயதுக்கு முன்பே தன் எதிரிகளை அழித்தான் என்கிறது புறநானூறு. சங்கின் முனைப் பகுதியை வட்டமாக அறுத்து மோதிரமாக அணியும் பழக்கம் இன்றும்கேரளப் பகுதிகளில் வாழும் முக்குவர்களிடமும், மொகயன், தியன் சாதியரிடம் காணப்படுகிறது. செருமார்களும், மலைவேடர்களும் சங்கினைத் தாயத்தாக அணிகிறார்கள்.   

பெண் பிள்ளைகளுக்கு முகப்பருக்கள் தென்பட்டதுமே, அவளுக்கு சங்குத் தாயத்து கட்டிவிடும் பழக்கம் பறையர், பள்ளர், வலையர், செட்டி, கொல்லர், ஆசாரி, தட்டார், நாயுடு, இடையர், சாளுவர் ஆகிய சாதியரிடம் இருந்துள்ளது. தூத்துக்குடி கத்தோலிகர்கள் சங்குப்பூவை குழந்தைகள் கையில் கட்டிவிட்டிருக்கிறார்கள். கால்நடைகளின் நெற்றி, கழுத்தில் சங்குகள் கட்டும்போது அவை கண்ணேறுகளில் இருந்து விடுபடும் என்பது நம்பிக்கையாக இன்றும் இருந்துவருகிறது. ஆந்திர மாநிலத்தில் சங்குகளை மாலையாக கால்நடைகளுக்கு அணியும் முறை உள்ளது. கேரளாவில் கொம்புகளில் சங்கு கட்டுகிறார்கள். இவ்வாறு சங்குமாலை, சங்குப்பாசி, ஐம்படைத்தாலி, சங்கு தாயத்து, மோதிரங்கள் அணிவிப்பது தீய சக்திகளிடம் இருந்து தங்கள் பிள்ளைகளைக், கால்நடைகளைக் காப்பாற்றும் என்பது பார்ப்பனரைத் தவிர்த்த அனைத்து தமிழ்ச் சாதியினரிடமும் வழக்கத்தில் இருந்துள்ளன.

5

கீழக்கரை பஜார்

சங்குகள் குறித்த என் தேடலைப் புரிந்துகொண்ட முக்குவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலமாக, கீழக்கரையின் பழைய குத்பா பள்ளி தெருவின் அஞ்சு வாசல் கிட்டங்கி, முஸ்லீம் பஜார், ஜமாலியா சங்கு கொள்முதல் மண்டி, புது கிழக்குத் தெரு எனச் சங்கு வணிகம் நடைபெறும் இடங்கள் அறிமுகமாகின.

நண்பர் என்னை அவரது கிட்டங்கிக்கு அழைத்துச் சென்றார். அந்த அகலம் குறைந்த நீண்ட பாதையின் இருபக்கமும் தேங்காய் பருமனுள்ள விதவிதமான சங்குகளை சுரண்டியும் தேய்த்தும், அமிலத்தில் கழுவியும் வளவளப்பாக்கிக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். இன்னொரு புறம் பெண்கள் சிலர் பட்டி, ஜாதி என இரண்டு வகையான சங்குகளையும் (இடம்புரி) பாலீஷரில் தேய்த்து வழவழப்பேற்ற அந்தச் சூழல் முழுக்க சுண்ணம் படிந்த வெள்ளைப் புழுதியெனக் காட்சியளித்தது.

புறப்படும்போது, கரீபியன் கடற்கரையில் நானூறு வருடங்கள் முன்பாகக் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த ராணிச்சங்கு (Queen Conch) ஒன்றை எடுத்து மேசையில் வைத்தார். இளஞ்சிவப்பும் மஞ்சளுமாக ஒரு சவளைக் குழந்தையின் தலை அளவுக்குப் பெரிதாக இருந்த அந்தச் சங்கினை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அன்றைய வணிக மதிப்பு சில லட்சங்களில் இருக்கலாம். பஹாமாஸ் போன்ற தீவு நாடுகளின் கடற்கரையில் ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான டன் எடையில் இந்த ராணிச் சங்குகளில் வியாபாரம் நடக்கிறது. பாரம்பரியமாக சங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் இதனைத் தங்கள் பெருமிதத்தின் அலகாகப் பராமரிக்கின்றனர் என்பதை அவர் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.

கி.பி80ம் ஆண்டுகள் முதலே பெரிப்ளூசும், தாலமியும், இனிகோ பிளஸ்டாஸ் இந்தியக் கடற்கரைகளின் பக்கம் வந்தபோது, கீழக்கரையில் நடைபெற்ற சங்கு முத்து வணிகங்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். கிபி.7ம் நூற்றாண்டளவில் மாலிக் இபுன் தீனார் குமரிக்கு வருகை புரிந்தபோது, அவரோடு வந்த அரபு வணிகர்கள் வழியாக மேலைக் கடலிலும் சங்கு வர்த்தகம் பெருகியது. குமரி, கோவளம், கீழக்கரை வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பிராந்தியங்களில் கொள்முதல் செய்ப்படும் சங்குகள், கொல்கத்தா, அகர்தலா (திரிபுரா), வங்காளம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கே இவை கைவினைப் பொருள்களாக மாற்றப்பட்டு உலகெங்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

2018ம் ஆண்டு அக்டோபரில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற, அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது, மேற்குவங்கத்தில் உள்ள சங்கு வணிக்க் கலைக்கூடங்களை நேரே சென்று அறிந்துகொள்ள, தோழரும் வங்காளக் கவிஞருமான கவுசிகி தாஸ் குப்தா உதவி செய்திருந்தார். பத்துக்குப் பத்து சதுர அடி கொண்ட தனித்தனிக் கூடங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இயந்திரங்கள் மூலம் சங்கு வளையல்கள் அறுத்துக் கொண்டிருந்தார்கள். அவை ஒவ்வொன்றின் பெயர்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டபோது, இச்சங்குகள் எந்தெந்த கடற்கரைப் பகுதியில் விளைகின்றனவோ அதைவைத்தே அவைகளுக்குப் பெயரிடப் படுகின்றன எனப்புரிந்து கொண்டேன்.

சங்கு வகைகள்

சங்குகள் பொதுவாகத் தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி என உண்பதில் தொடங்கிச் சங்குகளின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றை வைத்து, லாம்பிஸ், ஒலிமா, டர்புனில்லா, டிபியா குர்டா, சைபேர் டிக்ரிஸ், சைபேர் மாரிடியஸ், பாலியும், டோனா, கானூஸ், பிபிலெக்ஸ், புர்ஷா, புசிகான், ஃபாஸியோலாரியா, அக்கர் என்று இந்தியக் கடலோரங்களில் கிடைக்கும் சங்குகளுக்கு பதினைந்து விதமான பெயர்கள் உண்டு. ஆனால் மக்கள் மொழியில் அதன் உருவ அமைப்பு நிறங்கள், கடினத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு பலவகைப் பெயர்கள் வழங்கப்படுகிறது.

அவை, மணிச்சங்கு, துவரிச் சங்கு, பாருதச் சங்கு, வைபவச் சங்கு, பார் சங்கு, துயிலாச் சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகைகளும், கரைச் சங்கு, காரைச் சங்கு, கோழிச் சங்கு, புறாச்சங்கு, நத்தைச் சங்கு, தேள் சங்கு, ஊதிச் சங்கு, பஞ்சு சங்கு, தாழஞ்சங்கு, முள்ளஞ்சங்கு, கிளாச்சங்கு, குழாய் சங்கு, குருவிச் சங்கு, சொறிச் சங்கு, பலகறை, பால், முள்ளி, யானை முள்ளி, குதிரை முள்ளி, வேம்பூ, வாழைப்பூ, வெண்பூண்டு, முண்டஞ்சங்கு, ஈட்டிச் சங்கு, பேய்ச்சங்கு, பெருமாள் சங்கு, கோபுரச் சங்கு, கொட்டைக்காய் சங்கு, இராவணன் சங்கு, வெள்ளைவாயன், வெள்ளை விரிஞ்சான், செவ்வாயன், ஓலை வாயன், ஆறுவிரல், ஏழுவிரல், சிலந்தி, நரித்தலை, மாட்டுத்தலை என்று மனம்போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.

விடுதலைக்கு முன்பு வரை இச்சங்குகளை இலங்கைக் கடல்வரைக்கும் சென்று குளித்தெடுக்கும் தொழிலாளர்களாக இந்திய மீனவர்களே இருந்துவந்தார்கள். இலங்கை தனிநாடாக ஆனபிறகு அப்பகுதியில் சங்குக் குளிப்பு நின்றுபோனது. தற்காலத்தில் தமிழகம், கேரளா, குஜராத் பகுதிகளிலே சங்கு குளிப்பு குறைந்த அளவில் நடைபெற்று வருகிறது. 

வலம்புரிக் கடத்தல்

பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பழமைவாய்ந்த கோவிலில் இருந்து, வலம்புரிச் சங்கு ஒன்றை தூத்துக்குடி வழியாகக் கடத்த முற்பட்ட இருவரைக் குறித்து பத்திரிகை நண்பர் ஒருவர் மூலம் தகவல் தெரிய வந்தது. கோயில் திருவிழாக்களில் பூசைகளுக்குப் பயன்படுத்தி வந்த 5.103கி.கி எடைகொண்ட அந்த வலம்புரிச் சங்கினை 50 ஆயிரத்துக்கு விற்றவர் அந்தக் கோயிலின் அர்ச்சகர். வாங்கியவர் திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமியர். கடத்தப்படவிருந்த இடம் தாய்லாந்து.

தகவல் அளித்த நண்பர் மூலம் இன்னும் சில விபரங்கள் சிக்கியது. அந்த விபரங்கள் ரகசியத் தன்மை காக்கப்படும் என்ற நம்பிக்கையின் பேரில் பகிரப் பட்டதால் அது இங்கு முக்கியமில்லை என்றாலும், இலங்கையில் போலியாகத் தயாராகும் வலம்புரிச் சங்குகள் போன்ற போலியான மெல்லுடலிகள் குறித்து நண்பர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது.

கிராமுக்கு 10ஆயிரத்திலிருந்து 15ஆயிரம் வரைக்கும் விலை நிர்ணயிக்கப்படும் அசல் இந்திய வலம்புரிகளைப் போலவே தோற்றத்தில் ஒத்திருக்கும் ஆப்ரிக்க எதிர்சுழற்சிச் சங்குகளையும், சுண்ணாம்பு உடலிகளையும் வலம்புரிச் சங்குகள் போலவே வடிவமைத்து, உண்மையான வலம்புரிச் சங்கின் வீடியோவைக் கண்ணில் காட்டிவிட்டு, காசு கைமாறியதும் போலியை வாங்கியவர் தலையில் போலியைத் தலையில் கட்டும் வேலைகள் இலங்கைத் தீவில் ஜரூராக நடந்துவருகிறது. தாங்கள் ஏமாந்தது தெரியாமல் கிழக்கிந்திய நாடுகளில் பலப்பேர் அதனைப் வீட்டில் வைத்து பூஜித்தும் வருகிறார்கள்.

சங்குக் குளித்துறை

 1960களுக்குப் பிறகு மன்னார் கடலில் முத்துக் குளித்தல் நின்று போனது. அதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் 30ஆயிரம் சங்கு குளிப்பவர்கள் இருந்தார்கள். வன உயிரின சட்டம் 1972ன் கீழ் 52 அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்களைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடையில் குறிப்பிட்ட சில சங்கு வகைகளும் அடங்கியபிறகு, சங்கு குளிப்பு குற்றத் தொழிலாக மாறியது. மேலும் ஆபத்தான உடலுழைப்பு, பாதுகாப்புக் கருவிகளின்மை, ஆழ்கடல் இறப்பு மற்றும் வலம்புரிச் சங்குகளுக்கான சட்டவிரோத கடத்தலும் சேர்ந்துகொள்ள சங்குக்குளிப்பு கைவிடப்படும் தொழிலாக மாறத் துவங்கியது.

உண்மையைச் சொன்னால், சங்குகள் பற்றி உலவும் நொடிக்கதைகள் பலவும் அறிவியல் ஏற்றுக்கொண்டதில்லை. கடவுள்போல வலம்புரிச் சங்குகளின் வாய்முழக்கமும் நிருபிக்கப்படாத ஒன்று. இருந்தும் அவைத் தமிழ் பண்பாட்டின் தொன்மத்தில் ஆழ வேரூன்றி இருந்த கடலுயிர். இருந்தும் அவை நம்முடைய கரைகளைத் தேடி வராமல் போனால், தங்கப் பாறை தேடி தண்ணீரில் குதிக்கும் மனிதர்களின் கதைகளை அவை அறிந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்! எந்தக் காலத்திலும் எந்தக் கடற்கரையூரின் திசை வாயில்களிலும் இச்சங்கிணைகள் கரையொதுங்கிக் காமம் புணராமலே போகட்டும். ஆனால் நம்முடைய கடலை, நமது கரையை, உயிர்ப்போடு வைத்திருக்க இத்தொன்மங்களும், தொழில்களும் எப்போதும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு [email protected]

4 COMMENTS

  1. ஒர் ஆய்வாளனுக்கு உரிய உழைப்பு, ஒரு செய்கலைஞனின் நேர்த்தி, நுண்தகவல்களை சுவைபடக் கோர்க்கும் நுட்பம், ஒரு எழுத்தாளனின் எழுத்து ஆளுமை – இவை அனைத்தையும் இந்தக் கட்டுரை உறுதி செய்கிறது.

    வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி!

    பயனும் சுவையும் நிறைந்த கட்டுரை.

  2. சாதாரணமாக கடக்கும் சங்கில் இத்தனை விபரங்களா? எங்கள் ஊரில் முற்காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் விளையாட பல்லாங்குழி தருவார்கள் அதில் சோவி எனப்படும் குட்டியான சங்குகளை உபயோகப்படுத்துவார்கள். தவிர மெரினாவில் காதலர்கள் பெயர் பொறித்து தரப்படும் சங்குகள், காதில் வைத்தால் கேட்கும் அலைச் சத்தம், சங்கில் செய்யப்படும் கீச்செய்ன்கள் இப்படித்தான் சங்கு என்னோடு பழக்கமாகி இருந்தது சங்குகளுக்குள் இத்தனை வகையறா இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாட்டி சொன்ன கதையில் வரும் ஜோடிச் சங்கை பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. கீழக்கரையையும் ஒரு தடவை இதற்காகவே சுற்றி பார்க்க வேண்டும். நன்றி கார்த்திக் நிறைய விபரங்கள் வழக்கமான சுவாரஸ்ய எழுத்து நடையுடன் தந்தமைக்கு

  3. ஒர் ஆய்வாளனுக்கு உரிய உழைப்பு, ஒரு செய்கலைஞனின் நேர்த்தி, நுண்தகவல்களை சுவைபடக் கோர்க்கும் நுட்பம், ஒரு எழுத்தாளனின் எழுத்து ஆளுமை – இவை அனைத்தையும் இந்தக் கட்டுரை உறுதி செய்கிறது.

    வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி!

    பயனும் சுவையும் நிறைந்த கட்டுரை.

  4. ஆச்சி சொன்ன கதையுடன் ஆரம்பித்து மிக விரிவான, அழகான, ஆழமான கட்டுரை…

    எனக்கெல்லாம் சங்கு ஊத வராது… காத்துத்தான் வரும்… என் மகன் மிக அருமையாக ஊதுவான்.

    தேவகோட்டைக் கள்ளர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள் அவர்கள் மட்டுமல்ல… செட்டிநாட்டுப் பகுதியில் பெரும்பாலான சாதிகளில் திருமணத்துக்கு மேளம் வைக்க முடியவில்லை என்றாலும் வைத்தாலும் எல்லாச் சடங்கிலும் சங்கு முக்கியத்துவம் பெறும்… தென்னை முதல் பாலை விட்டதும் பொங்கல் வைப்பது, தைப்பொங்கல், திருமணம், கோவில் நிகழ்வுகள், பெண் பிள்ளைகள் பூப்பெய்தல், சீர் கொண்டு போதல் என எல்லாவற்றிற்கும் சங்கு ஊதப்படும்.

    எல்லாருடைய வீட்டிலும் சங்கு இருக்கும்… இப்ப வெள்ளிப்புடியெல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள்…

    திருமணத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் சீர் வரிசையில் சங்கும் இருக்கும்…

    அருமை… வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here