சக கவிஞர் – கேள்வி பதில் தொடர்: ஒரு சுய நேர்காணல்

2

மௌனன் யாத்ரிகா

 1. சக கவிஞர்- எப்படி இது தோன்றியது?

பதில்: இயல்பில் நானொரு இலக்கியப் பித்துள்ளவன். புத்தகங்கள் மீது காதல் அதிகம். என் வாசிப்பின் வழியே எழுத்தாளர்களை நேசிக்கத் தொடங்கி விடுவேன். வாசிப்பை கவிதையிலிருந்தே தொடங்கினேன் என்பதால் நான் அதிகம் கவிஞர்களையே நேசித்தேன். பள்ளிக்காலத்தில் அறிமுகமான அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி, மீரா, வைரமுத்து முதலானவர்களை அந்த வயதிலேயே தேடிப்போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அவர்களை பார்க்கவும், பேசவும் விரும்பினேன். ஆசிரியர்களுக்கு பதிலாகக் கவிஞர்களைப் பாடம் நடத்தவிட்டால் மாணவர்கள் மேலும் நன்றாகப் படிப்பார்கள் என்று நம்பினேன்.
அப்போது அது சாத்தியமாகவில்லை. பின்னாளில் படிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது எனக்கு அந்த “பேறு” கிடைத்தது. அதாங்க, அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

என் வகுப்புக்கு வந்த பேராசிரியர்களில் இரண்டு கவிஞர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர்… ‘கண்ணீர் பூக்கள்’  கொடுத்த கவிஞர் மு.மேத்தா. அவர் பாடமே நடத்த வேண்டாம், கல்லூரிக்கு வந்தால் போதும் என்றெல்லாம் கூட அப்போது தோன்றியது. அவரைப் பார்த்தால் போதும் என்று அப்படியொரு மோகம். இன்னொருவர் பொன் செல்வகணபதி. இந்த இரண்டு பேரும் இருப்பதால்தான் தமிழ்த்துறை சிறப்பாக இருக்கிறது என்று கர்வம் கொண்டேன். இவர்களோடு பேசியபோது தான் ஏற்கனவே என் மீது ஏவி விடப்பட்டிருந்த கவிதை உக்கிரம் கொண்டு எழுந்து ஆடத் தொடங்கியது. கடற்கரைக் காற்றில், கல்லூரியின் புல்வெளியில், நெய்தல் குழுவில் அமர்ந்து அந்தப்பேய் தன் ஆட்டத்தை நடத்தியது. எங்கள் பேராசிரியர் சுதந்திரமுத்து ஆற்றுப்படுத்தும் மந்திரவாதியாக இருந்தார்.

அங்கிருந்துதான் உரையாடல் மீது ஆர்வம் வந்தது. கவிஞர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் தேடிப்போய் பார்ப்பேன். இப்போதும் கூட அந்தப் பித்து என்னை விடவில்லை என்பதற்கு சான்றுதான் இந்த “சக கவிஞர்”. கவிஞர்களோடு  உரையாடுவதற்கு வேறொன்றும் நோக்கமில்லை… கவிதையைத் தவிர. இப்போதும் கூட… நானும் ஒரு நாடறிந்த! கவிஞனாக அறியப்பட்ட போதும் கூட இந்திரனைப் பார்க்க வேண்டும், வெய்யிலைப் பார்க்க வேண்டும், யவனிகா ஸ்ரீராமைப் பார்க்க வேண்டும், தேன்மொழிதாஸைப் பார்க்க வேண்டும், இளங்கோ கிருஷ்ணனைப் பார்க்க வேண்டும், இசையைப் பார்க்க வேண்டும், இன்னும் இன்னும் இருக்கும் ஆயிரக்கணக்கான கவிஞர்களையும் மனம் தேடிச்செல்லவும் உரையாடவும் விரும்புகிறது. ஏன் இப்படியெல்லாம் மனம் விரும்புகிறது? கவிஞர்கள் மீது ஏன் இப்படி ஈர்ப்பு? ஒரே பதில்தான். கவிதை.
கவிதையால்தான் இத்தனையும்…

 1. உரையாடுவதன் மூலம் கவிதையியலைக் கற்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக முடியும். கவிதை குறித்த தொடர்ச்சியான உரையாடல்கள்தான் கவிதைப் போக்கைப் பெருமளவில் மாற்றியமைத்தன. உலகம் முழுக்க கவிதையின் புதிய புதிய போக்குகள் உரையாடலின் வழியேதான் உருவாக்கப்பட்டன. தமிழ் கவிதைச்சூழலும் அப்படித்தான் ஒழுங்குபட்டிருந்தது. சிற்றிதழ்களும் அது சார்ந்து இயங்கியவர்களும் இந்தத் தகவலுக்கு மேலதிக சாட்சியங்களாக இருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

கவிதையியல் குறித்த நூலாக்கம் பெருமளவில் இல்லை என்றாலும் தொடர்ச்சியான உரையாடல் சாத்தியமானதாகத்தான் இருந்தது. கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்களும், சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கிய கவிஞர்களும் கவிதையை ஆரோக்கியமான விவாதக்களங்களில் கொண்டு சேர்த்தார்கள். கவிதையின் பொருண்மை, வடிவம், பாடுபொருள், குறியீடு, படிமம், நவீனம், மொழிவளம், எளிமை, இருண்மை என எல்லாவற்றையும் உரையாடல் வழி பேசிப்பேசி ஒழுங்குபடுத்தினார்கள், உருவாக்கினார்கள், கவனத்துக்குட்படுத்தினார்கள். என்னவொன்று… இத்தனை உரையாடல்களும் அவ்வப்போதே பிரதிகளாக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஒழுங்காக நடக்கவில்லை என்பதே வருத்தம். சமகாலத்தில் மொத்தத் தொகுதிகளாக சில சிற்றிதழ்கள் வந்திருக்கின்றன. அதேபோன்று மற்ற சிற்றிதழ் தொகுப்புகளும் வர வேண்டும்.  வந்திருக்கக்கூடிய சிற்றிதழ் தொகுப்புகளில் இலக்கிய உரையாடல்களின் கனத்தை, அதன் செறிவை, அதன் ஆழத்தை  நம்மால் உணர முடியும் என்று நினைக்கிறேன்.

இன்றும் அந்தத் தீவிர மனம் கொண்டவர்கள் நம்மோடு இருக்க்கிறார்கள். ஒரு சிலராக மட்டுமே இருந்தாலும் கவிதையியல் குறித்த ஆழமான சிந்தனையும் புரிதலும் கொண்டவர்களாக இருக்கும் அவர்களைப் பின்பற்றி கவிஞர்களும், வாசகர்களும் உரையாடலை நகர்த்தினால் தமிழ்ச்சூழலில் ரொம்ப தெளிவான கவிதையியல் போக்கை உருவாக்கலாம். அதற்கான உரையாடல் தேவையாக இருக்கிறது.

 1. சக கவிஞர்களோடு உரையாடுவது எப்படியுள்ளது?

பதில்: முன்பே சொன்னதுபோல் கவிதை குறித்த நிகழ்வும் சரி, உரையாடலும் சரி எனக்கு மிகுந்த நெருக்கமானதாக இருக்கிறது. சக கவிஞர்களோடு கவிதை பற்றி பேச அமைந்த இந்த வாய்ப்பை பெரிதும் விரும்புகிறேன். கற்றுக்கொள்ள இதுபோல் இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு கவிஞரும் தன் கவிதைகள் மூலம் ஒரு மன உலகைப் படைக்கிறார்கள். வாழ்வின் சில புதிரான பக்கங்களைத் திறந்து விடுகிறார்கள். இயற்கையின் அதி உன்னதங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். கண்டடையாத நிலக்காட்சிகளை வெப்பமும் புழுதியுமாக கண்முன் நிறுத்துகிறார்கள். அன்பின் மேன்மைகளையும் தேவைகளையும் புரிய வைக்கிறார்கள். சமூகப் பண்பாட்டு அரசியல் களங்களில் களமாட ஆற்றுப்படுத்துகிறார்கள். சக கவிஞர்களை தீர்க்கதரிசிகளாகவே பாவிக்கிறேன். இந்த உரையாடலின் மூலம் அவர்களின் கவிதாத்மா என்மேல் இறங்குவதாக நினைக்கிறேன்.

 1. “சக கவிஞர்” தொடரைப் பொருட்படுத்துகிறார்களா?

பதில்: எல்லோரும் பொருட்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தொடரை ஆரம்பிக்கவில்லை. தமிழ் கவிதைச் சூழலில் நானும் இருக்கிறேன் என்ற வகையில் சக கவிஞர்களோடு உரையாட விரும்பினேன். அந்த உரையாடல் மூலம் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்தியதைப்போல் நான் கவிதையிடம் கவிஞர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அல்லது அவர்களை என்னை ஆற்றுப்படுத்தி விடுமாறு கேட்கிறேன். அது நன்றாகவே நடக்கிறது.

பொருட்படுத்துதல் என்பதை கவனிப்பது, மதிப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இத்தொடர் நிறையவே கவனிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சக கவிஞர் தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அமைந்த பதில்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருபவர்கள், இதுவொரு கவிதைக்கான சிலபஸ் தயாரிப்பு மாதிரியான ஒன்று என்று பகிர்ந்து கொள்கிறார்கள். கவிதை சார்ந்த உரையாடல் சாத்தியமற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இதுவொரு நன்மை தரும் முன்னெடுப்பு என்கிறார்கள். கவிதை குறித்த ஆய்வுக்கு இந்தத் தொடர் ஒரு சான்றாதார பனுவலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். கவிஞர்களைப் பொதுவெளியில் ஒன்றிணைக்கும் மிக முக்கியமான நிகழ்வு என்கிறார்கள். மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மெசஞ்சரிலும் இது குறித்து என்னோடு தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. சிங்கப்பூர் நண்பர்கள் யாழிசை மணிவண்ணன், மதிக்குமார், தாயுமானவர் போன்றோர் இத்தொடரின் வரவேற்பு அங்கு மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பகிர்ந்து கொண்டனர். இத்தொடர் மூலம் அங்கிருக்கும் கவிதைச்சூழல் புதிய நகர்வை உருவாக்குவதாகச் சொன்னபோது நாம் ஒரு உலகளாவிய வேலையை முடுக்கி விட்டிருக்கிறோம் என்று தோன்றியது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாடகக் கலைஞரும், “உயிர்ப்பூ” மின்னிதழின் ஆசிரியருமான நிக்‌ஷன் சர்மா சக கவிஞர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒவ்வொரு கேள்வி பதிலையும் அவருடைய மின்னிதழில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தொடர் குறித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நாம் எடுத்திருக்கும் இச்சிறிய முயற்சிக்கு பெரிய அளவில் அதிர்வை உண்டாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் “சக கவிஞர்” தொடர்ந்து இயங்குவதற்கான நம்பிக்கையையும் ஆதரவையும் தம் உரையாடல்கள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும், நான் எதிர்பார்த்திராத  மிகுந்த கவனத்தை “சக கவிஞர்” தொடர் பெற்றிருக்கிறது என்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி கூறுவேன்.

5. “சக கவிஞர்” தொடர் இதுவரை என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது?

பதில்: பரவலாக இதுகுறித்து பேசுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதுவே மிக முக்கியமான விளைவுதான் என்று நினைக்கிறேன். இலக்கியம் குறித்த ஆரோக்கியமான நிகழ்வுகள், உரையாடல்கள், கருத்துரைப்புகள் தமிழ்ச்சூழலில் குறைந்து கொண்டிருக்கும்போது இப்படியொரு விளைவு அதை மாற்றும் உதாரணமாக இருப்பது நன்றே. இதுவொரு கூட்டுச் செயல்பாட்டால் நேர்ந்த விளைவுதான். கேள்வி என்பதற்குப் பின் நானொரு கருவியாக இருக்கிறேன். ஆனால், பதில்கள் ஆளுமைத் திறன்களால் நிரம்புகின்றன. ஒவ்வொரு ஆளுமையும் ஒவ்வொரு விதமான பதில்களால் கவிதை குறித்த புதிய திறப்புகளை உருவாக்குகிறார்கள். இதுவரை கேள்விகள் குறித்தோ அதற்குக் கிடைத்த பதில்கள் குறித்தோ எதிர்மறையான கருத்துக்கள் எழவில்லை. சக கவிஞர் தொடரை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஏற்படவில்லை. எல்லா வகையிலும் உற்சாகப்படுத்தும் குரல்களும், தொடர்ந்து செயல்படத் தூண்டும் கருத்துக்களும், நம்பிக்கையளிக்கும் விமர்சனங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. இது அறிவார்ந்த விளைவு. தமிழின் கவிதையியல் சிந்தனை புத்துயிர்ப்புப் பெறுவதற்கு ஏற்ற காலமாக தற்காலம் இருக்கிறது.

 1. கேள்விகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?

பதில்: 1.கவிதையியல் சார்ந்து எனக்குண்டாகும் கேள்விகள் மற்றும் கவிதையியல் குறித்து என்ன மாதிரியெல்லாம் கேள்வி எழுப்பலாம் என்ற என் யோசனைகள் வழி கேள்விகளைத் தயார் செய்ய முயல்வேன். சில கேள்விகள் கவிஞரை தேர்வு செய்யப் பணிக்கும். பிறகு அந்தக் கேள்விக்கு சரியான பதிலை யாரால் சொல்ல முடியும் என்று தேடுவேன். ஒரு கவிஞரின் நினைவு வரும். பிறகு அவருடைய கவிதைகள், அவர் கவிதைகளைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளை, அவர் கொடுத்த நேர்காணல்கள் மற்றும் அவரது ப்ளாக் முதலானவற்றை தேடி வாசிப்பேன். எனக்கொரு புரிதல் வரும். அவருக்கான கேள்வியை அவருக்கு வைப்பேன்.

 1. கவிஞர்கள் அளிக்கும் பதில்களால் உங்கள் கேள்விகள் நிறைவடைகின்றனவா?

பதில்: பல்வேறு ஆளுமைகள், தனித்தனி சிந்தனைகள், வித்தியாசமான படைப்பு மனநிலைகள், படைப்புகள்- இவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கும்போது என் கேள்விகள் அதன் பலனை எட்டியுள்ளன என்றே தோன்றுகிறது. இதுவரைஅறுபதுக்கும் மேற்பட்ட கவிஞர்களிடம் நூற்றுக்கும் மேலான கேள்விகளை வைத்துள்ளேன். பாதிக்கும் மேற்பட்டோர் பதில் அளித்துள்ளனர். ஒவ்வொரு பதிலும் ஒரு புரிதலைக் கொடுக்கிறது. கேள்வியின் சாரம்சம் மற்றும் அதன் வலு புரிந்து அதேயளவுக்கு வலுவான பதில்களைக் கொடுப்பதற்காக கவிஞர்கள் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டுள்ளார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. என்னுடைய சில கேள்விகள் வலு குறைந்தவையாக இருக்கும்போது தன் பதில்களால் அதன் வலுவைக் கூட்டியுள்ள பதில்களையும் என்னால் உணர முடிகிறது. சில பதில்கள் சாந்தமானவையே தவிர மற்றவை நல்ல உக்கிரமானவை.

இந்திரன், பெருமாள் முருகன், கலாப்ரியா, யவனிகா ஸ்ரீராம், க.மோகனரங்கன், ரவிசுப்பிரமணியன், அய்யப்ப மாதவன், யாழன் ஆதி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், ரமேஷ் பிரேதன், ஆத்மார்த்தி, ஜெயதேவன், இளம்பிறை, குட்டி ரேவதி, சக்திஜோதி, நாச்சியாள் சுகந்தி, தி.பரமேசுவரி, பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், லிபி ஆரண்யா, கணேச குமாரன், ஸ்டாலின் சரவணன், வேல்கண்ணன், எஸ்.ஜெ.சிவசங்கர், கடங்கநேரியன், இயற்கை, ஷக்தி, இரா.பூபாலன்,  பூவிதழ் உமேஷ், முத்துராசா குமார்,  தீர்க்கதரிசினன் போன்றோர் இதுவரை பதில் அளித்துள்ளனர்.

தமிழ் கவிதைச் சூழலில் ஆழக்கால் பதித்தவர் முதல் இப்போதுதான் முதல் அடியை அதன் நீரோட்டத்தில் நனைய விடுபவர் வரை இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். எல்லோருடைய பதில்களிலும் என் கேள்விகள் தன் உரையாடலை சாத்தியப்படுத்தியுள்ளன என்றே நம்புகிறேன்.

 1. சமகாலக் கவிதைப் போக்கை இத்தொடர் கேள்வி பதில் மூலம் புரிந்துகொள்ள முடியுமா?

பதில்: அதற்கான முகாந்திரங்கள் நிச்சயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கவிதையின் பல்வேறுபட்ட கூறுகள் கணிசமாக அலசப் பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. இன்னும் மீதமிருக்கும் கேள்விகளுக்கு பதில்கள் வரும்போது அதன் கனம் கூடும். கவிதை பற்றிய மதிப்பீடுகள், அதன் வடிவங்கள், மொழிதல்கள், பாடுபொருள்கள், நுட்பங்கள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள போதுமான வாய்ப்புகள் இருக்கின்றன. இது போதாது என்றாலும் கிடைத்துள்ள பதில்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விடுபட்டுள்ள கேள்விகளும், கேட்கப்படாத கேள்விகளும் இன்னும் இருக்கின்றன. அவையும் களம் நிரம்பும்போது சமகாலத்தின் கவிதைப் போக்கை அறிந்துகொள்ள நல் வாய்ப்புகள் நிச்சயம் அமையும்.

 1. கவிதை குறித்த உங்களது தனிப்பட்ட புரிதல் என்ன?

பதில்: மனிதன் கண்டறிந்த அலாதியான கலை. மொழியின் ருசியை அறிந்த பழங்குடி மனிதர்கள் தன் குரலாலும், உடல் மொழியாலும் கலந்து உருவாக்கிய பாடல் மரபின் நாடோடி வடிவம். நிலமெங்கும் நடந்து நடந்து மனிதர்கள் உருவாக்கிய நெடும்பாதைகளைப் போல் கவிதை தொன்மையானது. நம் இலக்கிய மரபு கவிதையிலிருந்தே தொடங்குகிறது. யானையின் கால் தடத்தில் பறவையின் கால் தடம் பதிந்ததைப்போல் மொழிக்குள் கவிதையின் இருப்புள்ளது.

மக்கள் வாழ்வை, அவர்தம் நிலத்தை, அவர்தம் மனப்போக்கை, பண்பாட்டை, சமூக அமைப்பை, அரசியலை, உள்ளக் கிடக்கையை, உறுதி பொருள்களை எல்லாம் கவிதையில் பேசிப் பகிர்ந்து கொண்ட மொழி தமிழ். கவிதையில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லுக்கும் நுட்பமான ஒளி இருப்பதை அறிந்தே தொல்காப்பியர் ‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று உறுதியாய் இலக்கணம் வகுத்தார்.

கவிதை ஓர் ஆதிக்கூத்து. அந்தக் கூத்தில் நானும் அடவு தரித்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் புளகாங்கிதமும் உண்டு.

 1. கவிதையியல் குறித்து ஏன் பேச வேண்டும்?

பதில்: பேசித்தான் ஆகவேண்டும். ஏனெனில், நம் மொழி கவிதையியல் மொழி. செவ்வியல் குணம் கொண்ட மொழி. உலகின் எந்த மொழியின் வேரும் தமிழ் மொழியில் தன்னை நனைத்துக்கொண்டு வளர முடியும். தமிழ் நீர்மைக் குணம் கொண்டது. அதுவும் ஆழ அமிழும். அதனுள்ளும் ஆழ அமிழ்ந்து போக முடியும். அந்தக் குணங்களின் தொகுப்புதான் கவிதை. அதைப் புரிந்து கொள்ளவே கவிதையியல் குறித்து பேசுகிறோம். பேச வேண்டுகிறோம்.

 1. வாசகர்களுக்கு கவிதையியல் பற்றிய புரிதல் இருக்க வேண்டுமா?

பதில்: கட்டாயம் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கவிஞருக்கு இருப்பதை விட கூடுதல் கவிதையியல் அறிவு வாசகருக்கு இருக்க வேண்டும் என்றே சொல்வேன். ஏனெனில், எழுதுபவரின் படைப்பு மனநிலையைக் காட்டிலும் வாசகரின் வாசிப்பு மனநிலைதான் கவிதையின் பரிமாணங்களை; உள்ளடுக்குகளை; அது கொடுக்கும் அனுபவங்களை; அதன் அசாத்தியமான பாடுபொருள்களை, மொழிதல்களை; கவிதை தொட்டுக் காட்டும் உலகங்களை; அது பேசும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை; சொல்லின் தேர்வுகளை; பொருளின் ஆழங்களை; அது காட்டும் நிலக்காட்சிகளை கண்டறிந்து உலகின் முன் வைப்பதாகச் சொல்வேன்.

வாசிப்பின் வழியேதான் ஒரு பிரதி அதன் ஆற்றலைத் திறந்து காட்டுகிறது. ஒரேயொரு படைப்பு மனம்; அதை ஆயிரக்கணக்கான வாசிப்பு மனம் தொடும்போது கவிதையின் ஆற்றல் பெருகுகிறது. ரசிக மனதின் போதாமை இருக்கும் படைப்புக்கு அடையாளச் சிக்கல் உண்டாகிவிடும். அதன் நிலைப்பாடு கேள்விக்குறியாகி விடும்.

எனவே கவிதையியல் குறித்த அறிவும் புரிதலும் கண்டிப்பாக வாசகருக்கு இருக்க வேண்டும்.

 1. சக கவிஞர் தொடருக்கு கவிஞர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பதில்:  தமிழ் இலக்கியச் செழிப்புடைய மொழி. குறிப்பாகக் கவிதைச் செழிப்பு அதிகம். அதன் விளைச்சலும் அதிகம். அந்த விளைச்சலில் இருந்தே கவிஞர்களை தேர்வு செய்கிறேன்.

 1. இதுவரை கிடைத்தவற்றுள் யாருடைய பதில்கள் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளன?

பதில்: எல்லா பதில்களுமே கூர்ந்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவே நினைக்கிறேன். ஆனால், கருத்துரைப்பதில் அச்சமும் தயக்கமும் இருக்கும் சூழலை உணர முடிகிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் தான் கண்டறிய வேண்டும்.

இந்தத் தொடர் மூலம் கவிதையியல் குறித்து உரையாட வேண்டும் என்று விரும்பியதைப்போல் வாசிக்கும் பிரதி குறித்த வெளிப்படையான கருத்துரைப்பையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். சில மாற்றங்கள் உருவாகியுள்ளதாக நினைக்கிறேன். களம் முகநூலாக இருப்பதால் இந்தத் தொடரைக் கடந்து செல்பவர்கள் – விரும்புதல், ரசனையின் குறியீட்டுப் படங்களைப் பகிர்தல்,  கருத்தைப் பதிதல் போன்றவை மூலம் தன் கவனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவற்றுள், கருத்துப் பதிவே முக்கியமானது. அதுதான் இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை கூர்மைபடுத்தும். அந்த வகையில், ஒவ்வொரு கவிஞரும் தன் பக்கத்தில் பதில்களை வெளியிடும்போது கணிசமான கருத்துப் பதிவுகளை பார்க்க முடிந்தது. ரொம்ப ஆரோக்கியமான கருத்துக்கள் இடப்பட்டிருந்தன. வெறுமனே மகிழ்ச்சி, சிறப்பு, வாழ்த்துகள் என்பதைத் தாண்டி கேள்வி பதில் குறித்து அறிவார்ந்த கருத்துக்களை வாசகர்களும் சக கவிஞர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.

சில பதில்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதோடு அல்லாமல் பயங்கர அலைகளையும் கவிதைச் சூழலில் உருவாக்கியிருப்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அப்படியான சில பதில்களின் சில பகுதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

‘‘கவிஞனின் ஒற்றைப் பரிமாணம் மறுதலிக்கப்பட்டு, அவனது பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட இக்கால கட்டத்தில், அவனது கவிதையினுள் இருக்கும் உண்மையும் பன்முகத்தன்மை கொண்டதாகிறது.” – இந்திரன்.

‘‘ஒவ்வொரு கவிதையிலும் கவிச்சொல் என்று ஒன்றோ சிலவோ அமைந்திருக்கும். கவிதை என்னும் ஒட்டுமொத்தச் சொற்கூட்டத்திற்கும் கவிப்பொருளைத் தருவது அத்தகைய கவிச்சொல்தான். கவிச்சொல் பரந்த வெளியை அவாவி நிற்கும் பண்புடையது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர முடியும்; விளக்க முடியாது.” – பெருமாள் முருகன்.

‘‘இந்தியாவில் செவ்வியல் என்பது சாதி, சமய, பக்தி, ஒழுக்கவாத நீதியியல் அழகியலாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்த அழகியல் என்பது அருவருப்பின் அழகியல், அராஜகவாத பகடி அழகியல், வன்முறை அழகியல், மத்தியதர அழகியல், இடதுசாரி அழகியல், நவீனத்துவ மற்றும் பின் நவீனத்துவ அழகியல் எனப் பன்மை கொண்டுள்ளது.”- யவனிகா ஸ்ரீராம்.

‘‘ஒவ்வொரு நல்ல கவிதையும் அதனதன் அளவில் ஒரு மொழியை, மொழிக்குள் ஒரு மொழியைக் கொண்டிருக்கும். அதுதான் அதன் அழகியல் என்று நினைக்கிறேன்.” – கலாப்ரியா.

‘‘கற்பனாவாதப் பண்புடன் எழுதப்படும் கவிதைகளாகவே இருப்பினும், அவற்றின் ஒரு வரி தன் வீச்சால் மொழியின் நினைவிலி ஆழத்திற்கு நழுவுமானால், அக்கவிதை செவ்வியல் தன்மை கொண்டுவிடும்.” – க.மோகனரங்கன்.

‘‘கவிதையால் மொழி வளர்வதில்லை; மொழியால்தான் கவிதை வளர்கிறது. மொழியின் ஒரு கூறு இலக்கியம், அவ்வளவே. மொழி என்பது பரந்துபட்ட அறிவுத்தொகைமைகளின் இயங்குத்தளம். மொழி அனைவருக்குமானது; கவிதை உட்பட்ட கலை இலக்கியம் என்பவை பொதுவில் இருந்தாலும் அவற்றை அனைவரும் அறிவதில்லை.” – ரமேஷ் பிரேதன்.

‘‘பொதுவாகவே நல்ல கவிஞர்களை இங்கு அடையாளப்படுத்துவது நடப்பதே இல்லை. நிறைய இருட்டடிப்பு வேலை செய்கிறார்கள். மூத்த கவிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மூத்த எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஒரு நல்ல கவிதையை ஒரு சிறந்த கவிஞனைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதுமில்லை. பேசுவதுமில்லை.” – அய்யப்ப மாதவன்.

‘‘கவிதை பொதுமொழியில் மட்டும் இயங்குகிறது என்பது ஒரு சாகச உணர்வைத் தரலாம். அது உண்மையல்ல. கவிதையின் மொழியை ஒருவன் கண்டடைய மேற்கொள்கிற பயணம் மிக முக்கியமானது. கவிதைக்கு உண்டான மொழியைக் கண்டடைகிற பயணம் மட்டுமல்ல அது.” -ஆத்மார்த்தி.

‘‘மற்ற எல்லா வடிவங்களை விடவும் கவிதை சிமிழுக்குள் கடலையே கொண்டிருக்கும் வல்லமை கொண்டது.” – ரவிசுப்பிரமணியன்.

‘‘நாவல், சிறுகதைத் தளங்களில் நிகழாத, நிகழ்த்த முடியாத பெரிய எழுச்சிகளையும், புரட்சிகளையும், மறுமலர்ச்சிகளையும் நவீன தமிழ்க் கவிஞர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். கவிஞர் என்றால் பிழைக்கத் தெரியாத அசடு என்பதன்று அர்த்தம். கவிஞர் என்றால் ஆகச்சிறந்த அறிவுஜீவி; அவர்தான் அச்சமூகத்தின் அறிவு மரபின் நீட்சியும் அடையாளமும்.” – குட்டி ரேவதி.

‘‘உண்மைகள், நிகழ்வுகள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை எழுத்தில் அப்படியே விட்டுவிடுங்கள். எழுத்தில் உண்மைகள் என்பதுதான் எழுத்தாளர் மீது தனித்த மரியாதையை ஏற்படுத்தும். எல்லாப் பாசாங்குகளுடனும் விதிக்கப்பட்ட வாழ்வில் எழுத்திலும் பாசாங்கு எனில் பாலில் விஷம் கலப்பது போலாகிவிடும்.”- இளம்பிறை.

‘‘சமகாலக் கவிதை மாத்திரமல்ல, இங்கே வரக்கூடிய எந்தச் செறிவான இலக்கிய ஆக்கமும் தமிழ் மரபின் சாயலன்றி இருக்க முடியாது. நிலமும் வீடும் உடலும் உயிரும் அவ்வவற்றின் சாரத்தோடு சாரமாகப் பின்னிக் கலந்திருக்கின்றன.” – பெருந்தேவி.

‘‘படைப்பாளர் எவருமே முன்னோடிகளை வாசித்து வளம் பெறாமல் தனித்துத் தானாக உருவாகிவிட முடியாது, அதேசமயம் முன்னோடியாக ஒரே ஒருவரை மட்டும் சுட்டவும் முடியாது. ரசனை, அனுபவம் ஆகியன காரணமாக வாசிப்பு முறை மாறுவதால் காலத்தை ஒட்டி படைப்பும் தன்னளவில் மாற்றம் கொள்ளத்தொடங்கும்.” – சக்திஜோதி.

எலோருடைய பார்வையிலிருந்தும் விலகி புதிய பார்வையை / தலைகீழாக்கத்தை / கலைப்பதை செய்வதுதான் கவிதையின் முதல் வேலை (கவிதைகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை). ஒவ்வொருவருக்கும் வேறுபடும் இந்த வரையறையே ஒரு கவிஞரை தனித்துவமானவராக மாற்றுகிறது.” – எஸ்.ஜெ.சிவசங்கர்.

‘‘கவிதை வேறு கவிதையியல் வேறு. முன்னது கலைச் செயல்பாடு, பின்னது தத்துவச் செயல்பாடு. கலைஞன் உணர்வுப்பூர்வமானவன், கணங்களில் வாழ்பவன். ஒவ்வொரு விஷயத்திலும் அவனின் அப்போதைய மனநிலையே அவனின் எதிர்வினைகளில் தொழிற்படும்.” – இளங்கோ கிருஷ்ணன்.

‘‘மனித அகத்தை வேறு எதைக்காட்டிலும் கூர்மையாக, ஆழமாக பாதிக்கக்கூடியது கலை இலக்கியம். அது ஏற்படுத்தும் நினைவுகள் நீதியாக, அறமாக, தெய்வமாக மாற சாத்திமுள்ளவை. எனவே, அதன்மீது எப்போதும் நிகழ்கால அதிகாரம் கூடுதல் தணிக்கையை, ஒடுக்குதலைச் செய்கிறது. மீறினால் தண்டிக்கிறது.” – வெய்யில்.

 1. இந்தத் தொடரை நூலாக்கம் செய்வீர்களா? அதற்குரிய தகுதிகள் இருக்கின்றதா?

பதில்: தகுதி இருக்கிறதென்று நான் நம்புகிறேன். தகுதி இருப்பதால்தான் பலரும் இதை நூலாக்கம் செய்ய வேண்டி பரிந்துரைக்கிறார்கள். பொதுவெளியில் இத்தொடர் குறித்து நல்ல எதிர்வினையே இருக்கிறது. போதுமான கேள்விகளும் பதில்களும் தயாரானவுடன் நிச்சயம் நூலாக்கம் செய்யப்படும்.

 1. உரையாடல் தொடருமா?
  பதில்: தொடரும்…

***

மௌனன் யாத்ரிகா

2 COMMENTS

 1. இன்றைய இலக்கிய உலகில் தமிழ் கவிஞர்களின் கவிதை குறித்தும் அவர்களின் கவிதையியல் தெளிவு குறித்தும் மிக நேர்த்தியாக பதிவு செய்யப்படும் முகநூல் கருத்துபதிவுதான் இந்த சக கவிஞன் தொடர் என நான் நம்புகிறேன்.

  அதற்கு அடித்தளமிட்டு கட்டியெழுப்பும் அரிய பணியை மேற்கொண்டுள்ள கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் இந்த நேர்காணல் மிகச்சிறப்பாக உள்ளது.

  கவிதை ஓர் ஆதிக்கூத்து. அந்தக் கூத்தில் கவிஞர் மௌனன் யாத்ரிகாவும் அடவு தரித்தது அரங்கேற்றம் செய்து வெற்றி காண்பார். நன்றி யாவரும் பதிப்பகத்திற்கு.

 2. கவிதைகளைப் பற்றிய பலதரப்பட்ட புரிதல்களை ஆய்வாளர்களைக் கொண்டல்லாமல் படைப்பாளிகளைக் கொண்டே வெளிக்கொணர்ந்திருக்கும் மெளனன் யாத்ரீகாவின் இந்த முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. தொகுக்கப்பட்ட நூலுக்காக காத்திருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here