Sunday, July 21, 2024

கோல்ட்

ராஜேஷ் வைரபாண்டியன்

1

ங்கதுரையின் வாழ்வில் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது. அவனது அண்ணன் பைக் விபத்தில் இறந்துபோனான். சிறு வயதிலேயே தகப்பனை இழந்த தங்கதுரைக்கு எல்லாமுமாக இருந்த அண்ணனின் மறைவு அவனை சிதைத்துப் போட்டது. இளஞ்சாவு தருகின்ற வலிகள் தன் வானில் சுதந்திரமாக பறந்து திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளை வெட்டி புழுதியில் தள்ளுவதற்கு ஒப்பானவை. விளையாட்டுத்தனமாய் திரிந்த தங்கதுரைக்கு குடும்பத்தின் சுமைகள் பெரும் பாரமாய் அவனது தோள்களில் ஏறிக்கொண்டன. பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டவன் பலசரக்கு கடையில் கடைப்பையனாக வேலைக்கு சேர்ந்தான்.

வருடங்கள் ஓடியதில் தங்கதுரை சென்னையில் பலசரக்கு கடைக்கு முதலாளியாகியிருந்தான். தன் கடும் உழைப்பால் முன்னேறியவனுக்கு பணவரவு அதிகமாக இருந்தது. மேடவாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூர் செல்லும் வழியில் மனை வாங்கியவன் தனிவீடு கட்டி குடியேறினான். அவனது சொந்தத்திலேயே பெண் பார்த்து கட்டி வைத்தனர். வீடும் கடையுமே அவனது வாழ்வாகிப்போனது. ஊரிலிருக்கும் வீட்டிலேயே இருந்து கொண்டாள் அம்மா. அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு சென்னைக்கு வருவதற்கு அவள் பிரியப்படவில்லை. பலமுறை கூப்பிட்டுப்பார்த்த தங்கதுரை ஒரு கட்டத்தில் கூப்பிடுவதை நிறுத்திவிட்டு மாதமிருமுறை ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்து வருவான். கல்லாவிலேயே அதிக நேரம் உட்கார்ந்து இருந்ததன் காரணமாக இளவயதிலேயே தொப்பையும் வந்து சேர்ந்தது. தன் பருத்த உடலுடன் அந்தக் கல்லாவிலேயே அவனது காலம் நகர்ந்து கொண்டிருந்தது.

அவனது வீட்டின் அருகேயிருந்த இடத்தில் முட்புதர்கள் மண்டிக்கிடந்தன. யாரோ ஒரு என் ஆர் ஐயின் இடம் எனப் பேசிக்கொண்டார்கள். தெருவில் சுற்றும் நாய்களுக்கான இடமாகவும், பின்னிரவில் குடித்துவிட்டு பாட்டில்களை விட்டுச்செல்லும் குடிமகன்களுக்குமான இடமாகவும் அது இருந்தது. கவனிப்பாரற்று கிடந்த அந்த இடத்திற்கு முன் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய முன்வழுக்கைக்காரர் இடத்திற்கு முன் நின்று பார்த்துவிட்டு முகத்தை சுழித்துவிட்டு கிளம்பிச்சென்ற மறுநாளில் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேலையாட்கள் வந்து இறங்கினர். இரண்டே நாட்களில் இடம் சுத்தமானது. ஒரு லாரியில் ஜல்லியும் மணலையும் கொண்டு வந்து ஒரு ஓரத்தில் கொட்டிச் சென்றனர். தன் வீட்டு மொட்டைமாடியிலிருந்து இடத்தைப் பார்த்த தங்கதுரை “அடேயப்பா இவ்வளவு பெரிய இடமா இருக்கே கவனிக்காம கெடந்தப்ப இடம் சிறுசா இருந்தமாதிரில்லா இருந்துச்சு” என்று நினைத்துக்கொண்டான்.

விரைவில் அந்த இடத்தில் ஏதோ கட்டிடம் வரப்போகிறது என்றே அக்கம்பக்கத்தினர் நினைத்திருந்தனர். இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் எவ்வித கட்டிட வேலையும் அங்கே ஆரம்பிக்கப்படவில்லை. அப்போதுதான் அந்த இடத்திற்கு நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் பேட்டும் பந்துடனும் களம் இறங்கினர். அவர்கள் விளையாட ஆரம்பித்த ஒரே வாரத்தில் சிறு சிறு அணிகளாக நிறைய சிறுவர்கள் விளையாட ஆரம்பித்தனர். வார இறுதி நாட்களில் துவங்கிய கிரிக்கெட் போட்டிகள், வார நாட்களின் மாலைவேளையையும் ஆக்கிரமித்தன.

முதலில் அவர்கள் விளையாடுவதை ரசித்தபோதும் நாளடைவில் ஒரு நாளில் இரண்டு முறையாவது தன் வீட்டிற்குள் வந்துவிழும் பந்துகளால் எரிச்சலடைய ஆரம்பித்திருந்தான் தங்கதுரை . அவனை விடவும் அவனது மனைவிக்கு கோபம் உச்சத்தில் ஏறியது.

“நெதமும் பந்து உழுந்துருச்சுக்கா எடுத்துக்கிடுதம்னுட்டு வாரானுவ, போவும் போதும் சும்மா போறானுவளா, நேத்து இரண்டு பட்டர்ரோஸை காங்கல எவன் பறிச்சுட்டுப்போனான்னுட்டு தெரியல. இன்னிக்கி குரோட்டன்ஸ் செடி வச்சிருக்கற தொட்டி ஒடஞ்சு கெடக்கு. பொடிசுகளா இல்ல வானரக்கூட்டமான்னு தெரியமாட்டிக்கி…வூட்டுல ஆம்பளயாளு இருந்து என்ன புண்ணியம்” என்று அடிக்கடி புலம்ப ஆரம்பித்ததும் தங்கதுரைக்கு தலைவலியாகிப் போனது.

அந்த இடத்தின் ஓனர் நம்பரை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு கேட்டபோது முதலில் வீடு கட்டப்போவதாக நினைத்திருந்ததாகவும் பின் வேறு சில காரணங்களால் கட்ட முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். விரைவில் காம்பவுண்ட் சுவரைக் கட்டி ஒரு கேட்டைப் போட்டு பூட்டிவிடுவதாகவும் சொன்னார். அவரிடம் பேசி நான்கு வாரங்கள் ஆகியும் காம்பவுண்ட் சுவர் எழுவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.

தங்கதுரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இனி ஓனரை நம்பி புண்ணியமில்லை என்று நினைத்தவன் தன் கடையில் வேலை செய்யும் இளவட்டங்கள் நால்வரை அழைத்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமை காலையில் அந்த இடத்திற்கு வந்தான். அவனது மனைவி துணி காயப்போடுவதற்காக மொட்டைமாடிக்குச் சென்றவள் தங்கதுரையின் கார் பக்கத்து இடத்தில் நுழைவதைப் பார்த்ததும் துணிகளை வைத்துவிட்டு மொட்டைமாடிச் சுவர் அருகே நின்று பக்கத்து நிலத்தைப் பார்த்தாள். வழக்கம் போலவே சிறு அணிகளாக பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தங்கதுரை கண்ணைக் காண்பித்ததும் அவனுடன் வந்திருந்தவர்கள் ஓடிச்சென்று கிரிக்கெட் ஸ்ட்ம்புகளை பிடுங்கி எறிந்தனர். சிறுவர்கள் எவ்வளவு மன்றாடியும் கேளாதவர்கள் போல அனைத்து ஸ்டெம்ப்புகளையும் அகற்றிவிட்டதுடன் இரண்டு சிறுவர்களிடமிருந்து பேட்டையும் பந்தையும் எடுத்துக்கொண்டு தங்கதுரை அருகே வந்து நின்றனர்.

தங்கதுரை தன் மீசையை முறுக்கிக் கொண்டு விடைப்பாக நின்று கொண்டிருந்தான். அவனது உருவமும் வேஷ்டியும் வலது கையிலிருக்கும் கனத்த தங்க ப்ரேஸ்லட்டையும் கண்ட சிறுவர்களுக்கு பயத்தில் வார்த்தை எழவில்லை. ஒன்றிரண்டு சிறுவர்கள் “அண்ணே பேட்டை மட்டுமாவது குடுத்துருண்ணே” என்று அழுதபடி நின்றிருந்தனர்.

“இனி ஒரு பயலும் இங்க வெளயாட வரக்கூடாது, வந்தியன்னா பொறவு எல்லா பேட்டையும் புடுங்கிட்டு ஓடுங்கலேன்னு வெரட்டிப்புடுவேன், புரியுதால?” கர்ஜித்த தங்கதுரையின் முன் சரியென்று தலையசைத்து மெளனித்து நின்றனர் சிறுவர்கள்.

பேட்டையும் பந்தையும் திருப்பிக்கொடுத்துவிட்டு அனைவரையும் அந்த இடத்திலிருந்து கிளம்பச் சொன்னான் தங்கதுரை. ஒவ்வொருவராக வெளியேறும் போது அந்தக் கூட்டத்திலிருந்து ஓர் குரல் சற்று உயர்ந்து வந்து விழுந்தது.

“கிரிக்கெட்னா என்னன்னு தெரியாத மடக்கூ… எல்லாம் வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்துடறானுங்க”

தங்கதுரைக்கு சுருக்கென்றது.

2

இரண்டு தவளைகள் எதிரெதிரே குதிக்கின்றன. குதிக்கும் போது எழுகின்ற ஒலிகள் ஒரே மாதிரி இல்லை. இரண்டும் குதித்த குட்டை ஒன்றுதான் ஆனால் இடம் வேறு. முதலாவது தவளை குதித்தவுடன் எழுபத்தி ஆறு துளிகள் தெறித்தன. இரண்டாவது தவளையால் ஐம்பத்தி ஏழு துளிகளை மட்டுமே சிதறடிக்கத் தெரிந்திருக்கிறது. தவளைகள் மீண்டும் குதிக்கின்றன. மீண்டும் தெறிக்கின்றன எண்ணிலடங்கா துளிகள். குட்டைக்குள் தான் எறிந்த தவளைக்கல்லொன்று தாவித் தாவிச் செல்வதை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் தங்கதுரை. குட்டைக்குள் அந்தக் கல் மூழ்கியதும் மீண்டும் குதிக்கின்றன தவளைகள். அப்போது அவனது மனதெங்கும் படர்ந்திருந்த தன் பால்யத்தின் நினைவுகள் ஒவ்வொன்றும் தவளையின் உருவம் பெற்று அந்தக் குட்டைக்குள் குதித்து அதை நிரப்புகின்றன. சிறிதும் பெரிதுமாய் ஆயிரமாயிரம் தவளைகளை தன்னில் பெற்ற குட்டை ஒரே கணத்தில் வறண்டு மடிவது போலிருந்தது.

தன் பத்தாவது வயதில்தான் முதல் முதலாக அந்த விளையாட்டைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டான் தங்கதுரை. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்த ஊரில் அவன் கண்டிருந்தது சில்லாங்குச்சியும், பம்பரமும் மட்டும்தான். ஆறாம் வகுப்புக்கு அருகிலிருக்கும் டவுன் பள்ளியில் சேர்ந்தபோதுதான் கிரிக்கெட்டின் மீது அவனுக்கு கவனம் அதிகமாகியது. அவனது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி முடிந்தபின் குவிந்துவிடும் மாணவர்கள் சிறு சிறு அணிகளாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவனுக்கும் விளையாடும் ஆசை தோன்ற, ஏதாவது ஓர் அணியில் தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் மைதானத்திற்குள் வெளியே இருக்கும் புங்கை மரத்தடியில் காத்திருப்பான். அந்த மரத்தடியில்தான் அடுத்து களமிறங்கும் மாணவர்கள் காத்திருப்பார்கள். பிட்ச்சிலிருந்து அவுட் ஆனவுடன் புங்கை மரத்தடிக்கு வரும் மாணவர்களிடமிருக்கும் பேட்டை வாங்கிக்கொண்டு பிட்ச் நோக்கி ஓடுவார்கள் காத்திருந்தவர்கள். எப்படியாவது அந்த பேட்டை வாங்கிக்கொண்டு தானும் களமிறங்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தன் உடல் பருமனால் தன்னை ஒதுக்கும் அணியினரின் கிண்டல் முள்ளாய் அவனுக்குள் இறங்கி உயிர் கிழிக்கும்.

“யோல ஒன்னால ஒரு ரன்னு ஓடி எடுக்க முடியுமால…போயி கோலிக்காய் வெளயாடுல” எனக் கிண்டலடித்து ஒன்றுகூடி சிரிப்பார்கள். அது அவனுக்குள் ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மையால் மைதானத்திற்கு போவதை நிறுத்திவிட்டு பள்ளி முடிந்ததும் தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் தேரிக்காட்டிற்குள் போய்விடுவான். தேரி செம்மண் பூமி. அங்கே மணல் குவியல் அதிகம் என்றாலும் சிறியதொரு மைதானமும் இருந்தது. அதில் ரவுண்ட் ரேஸ் விளையாடுவார்கள் சிறுவர்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பிவிடுவான். அப்போது தூர்தர்ஷனில் இந்திய அணி ஆடும் போட்டிகளை ஒளிபரப்புவார்கள். முதல் ஆளாய் அந்தப் போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்க்க ஆரம்பித்தான். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவனது அண்ணனுக்கே வியப்பாக இருக்கும். இந்த வயதிலேயே கிரிக்கெட் பார்க்கிறானே என்று. கிரிக்கெட்டின் புள்ளிவிவரங்களை அவன் பேச ஆரம்பித்தபோதுதான் கிரிக்கெட் மீதான அவனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அண்ணன் உள்ளூர் தச்சு ஆசாரியிடம் சொல்லி ஒரு கிரிக்கெட் பேட்டை செய்து தன் தம்பிக்கு பரிசளித்தான்.

அன்று தங்கதுரை அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நேராக தேரிக்காட்டிற்கு ஓடியவன் அங்கிருந்த சிறுவர்களுடன் தன் புதிய மட்டையால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். தினமும் தவறாமல் பள்ளி முடிந்தவுடன் கிரிக்கெட் விளையாட போய்விடுவான். மற்றவர்களைப் போல பந்தைத் தட்டிவிட்டு ஒரு ரன் எடுப்பது அவனுக்கு மனத்தடையாக இருந்தது. ஒரு ரன்னுக்காக ஓடும் போது தன் பருத்த உடலைக் கண்டு ஏளனம் செய்வார்களே என்கிற எண்ணம் அவனுக்குள் எப்போதும் இருந்தது. அதன் காரணமாக எதிர்கொள்ளும் பந்தை எல்லாம் பவுண்டரியாக மாற்றிவிடும் நுணுக்கங்களை விரைவாக கற்றுக்கொண்டான். அவனது தேரிக்காட்டு ஆட்டம் பற்றி பள்ளிக்கூடத்தில் பேச ஆரம்பித்தார்கள். ஆறாம் வகுப்பு சி பிரிவு அணியில் உடனே இடம் கிடைத்தது. அன்றைய முதல் போட்டியில் அந்த மைதானத்தின் அனைத்து திசைகளிலும் தங்கதுரை அடித்த சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை பரவி அவனது ஆட்டத்திற்கென தனியொரு ரசிகர் கூட்டமே உருவாகியது.

அதற்கடுத்த நான்கு ஆண்டுகள் அந்த டவுனில் தங்கதுரை விளையாடாத மைதானமே இல்லை என்றானது. எதிர் அணியினர் தங்கதுரையை அவுட் ஆக்கிவிட்டால் கோல்டு அவுட் இனி வென்று விடலாம் என நினைக்கும் அளவிற்கு எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகிப்போனான் கோல்ட். பள்ளிகளில் விளையாடுவதோடு நின்றுவிடாமல் பக்கத்து ஊர்களில் நடக்கும் போட்டிகள் எல்லாம் கெஸ்ட் ப்ளேயராக களம் இறங்கி சூறாவளி ஆட்டம் ஆடினான். அந்த மாவட்டம் முழுவதுமே அவனது பெயரை விட கோல்ட் எனும் பெயரே எல்லோர் மனதிலும் நிலைத்து நின்றது. கோல்ட் ஆட்டத்தைக் காண வெளியூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.

பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த முதல் நாளில் தங்கதுரையின் அண்ணன் சென்னையிலிருந்து எஸ்.எஸ் பேட் ஒன்றை வாங்கி வந்திருந்தான். எஸ்.எஸ் பேட்டைக் கண்டதும் தங்கதுரையை கையில் பிடிக்க முடியவில்லை. சைக்கிள் கேரியரில் பேட்டைச் சொருகிக் கொண்டு ஊர் முழுவதும் திரிந்தான். எதிர்படும் நண்பர்களிடமெல்லாம் பேட்டைக் காண்பித்து சந்தோசப்பட்டான்.

3

தொடர் மழையால் தங்கதுரையின் வீட்டின் அருகேயிருந்த இடத்தில் குட்டை போல தேங்கி நின்றது மழைத்தண்ணீர். குட்டையில் கிடந்த தவளைகள் போடும் சப்தம் இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தினம் தினம் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுமிடமாக இருந்த இடம் இப்போது எவ்வளவு மாறிவிட்டது என்று நினைத்தபடியே கல்லொன்றை குட்டைக்குள் எறிந்தான் தங்கதுரை. அது ஏற்படுத்திய சிற்றலையை பார்த்துக்கொண்டே கடைசியாக அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடப்பட்ட நாளை நினைத்துப் பார்த்தான்.

“ஏ எவம்ல கூட்டத்துல இருந்து குரலு கொடுக்குறது, வக்காலி ஆறு பந்துல ஆறு சிக்ஸர் அடிக்கேன், தைரியம் இருந்தா பவுலிங் போடுல…இந்த கோல்டு யாருன்னு காட்டுதேன்” என்று குரலை உயர்த்தி சத்தமிட்டான் தங்கதுரை.

அவனது குரல் கேட்டதைவிடவும் அவன் சிக்ஸர்கள் பற்றி சொன்னதை கேட்டவுடன் வெளியேறிக்கொண்டிருந்த சிறுவர் கூட்டம் திரும்பி வந்தது. “அண்ணே அவந்தான் சொன்னான்ணே” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சுட்டிக்கொண்டிருந்தனர்.

“சொன்னவன் எவனாவும் இருக்கட்டும்ல, எவன் எனக்கு பவுலிங் போடப்போறான்னுட்டு முடிவு செஞ்சுட்டு உள்ள இறங்கு. ஒரு சிக்ஸர் கொறஞ்சாலும் வந்த வழில நா போயிடுதேன். ஆறு சிக்ஸர் அடிச்சேன்னு வெய்யி ஒரு பய இந்தப் பக்கம் தல வச்சிப் படுக்கக்கூடாது சொல்லிப்புட்டன்” என்றவாறு வேகமாக தன் வீட்டிற்குள் நுழைந்தவன் டிசர்ட்டும், ட்ராக் பேண்டும், ஷூவுமாய் திரும்பி வந்தான். அவன் கையிலிருந்த எஸ்.எஸ் பேட்டைப் பார்த்ததும் சிறுவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

மீசை முளைக்கத் துவங்கியிருந்த பதின்ம வயது சிறுவனொருவன் பவுலிங் போடுவதற்கென முன் வந்தான்.

ஆட்டம் ஆரம்பமானது. தங்கதுரையின் மனைவி ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஓடிவந்து முதல் பந்தை அந்தச் சிறுவன் வீசியதும் தங்கதுரை வேகமாக பேட்டை சுழற்றியதும் கண நேரத்தில் நிகழ்ந்தன.

4

மறுநாள் பத்திரிக்கை செய்தியானது அன்று சிறுவர்களுக்கும் தங்கதுரைக்கும் இடையேயான போட்டி.

“கிரிக்கெட் போட்டியின் போது ஹாண்டிலை விட்டு உருவிய பேட் பறந்து சென்று விழுந்ததில் மண்டை உடைந்த சிறுவன் உயிருக்குப் போராட்டம்”

தவளைகள் குட்டையிலிருந்து வெளிக்குதித்து தன்னை நோக்கி வருவது போலிருந்தது தங்கதுரைக்கு. “வரட்டும் வரட்டும் வீட்டு வாசலுக்குள்ள நுழைஞ்சு பாக்கட்டும்… இந்த கோல்டு யாருன்னு காட்டுதேன்” என்றபடி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றான் தங்கதுரை.

“எது ஆறு பந்துல ஆறு சிக்ஸரு அடிக்கிற கோல்டா” என்றவாறு வீட்டின் கேட்டை இறுக மூடிவிட்டு வீட்டிற்குள் போனாள் தங்கதுரையின் மனைவி.

***
ராஜேஷ் வைரபாண்டியன் – தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் வைரபாண்டியன். நிலாரசிகன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பணி நிமித்தம் இருந்த இடைவெளிக்குப் பின்னர், அண்மையில் இவரது முதல் நாவல் “தேறி” வெளியாகி இருக்கிறது. இவரது முயற்சியில் “உதிரிகள்” எனும் சிற்றிதழும் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular