Tuesday, July 16, 2024
Homesliderகொரோனா நெருக்கடி:

கொரோனா நெருக்கடி:

அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டியும் புதிய உலக ஒழுங்கு பற்றிய விவாதங்களும்

ரூபன் சிவராஜா

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியின் விளைவுகள் மிகப் பாரியவை. அவற்றை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வைத்துப் பேசிவிட முடியாது. தனிமனிதனில் தொடங்கி குடும்பம், சமூகம், தேசம், தேசங்கள் கடந்த உலகம் என அனைத்து மட்டங்களிலும் பெருவாரியான மாற்றங்களைச் சடுதியாக ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் உலகம் முன்பு போன்று இருக்கப் போவதில்லை என்பது ஆய்வாளர்களின் கணிப்பு மட்டுமல்ல. சாதாரண மக்களும் அதனை உணர்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்நெருக்கடி தேசங்களின் சமூக ஊடாட்டம், பொருளாதாரம் என விரிந்து சர்வதேச உறவுகள் வரை பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி, மாற்றங்களை நிர்ப்பந்தித்து நிற்கின்றது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் பரப்பல் ஏற்படுத்தியுள்ள உளவியல் அச்சம், சமூக இடைவெளி, உள்ளிருப்பு, வைத்தியசாலைகளின் தாங்குவலுப் பற்றாக்குறைகள் ஒருபுறமும் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, நிச்சயமற்ற எதிர்காலம் என பல முனைகளிலும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

முன்னனுபவமற்ற புதிய முகம்கொடுப்பு

இது மேற்குலகிற்கு முற்றிலும் புதியதொரு சூழல். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவைத் தவிர்ந்த ஐரோப்பாவின் பெரும்பான்மை நாடுகள் போர்களைச் சந்திக்கவில்லை. இன்று வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் 1945-க்கு பின் (2ம் உலகப்போருக்குப் பின்) பிறந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் இன்றைய அவசரகாலச்சட்டம், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை என்பன முற்றிலும் முன்னனுபவம் இல்லாத முகம்கொடுப்பு.

போர் நடைபெற்ற நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களுக்கு இவற்றையொத்த நேரடி அனுபவங்கள் உள்ளன. புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு அந்த அனுபவம் இல்லை. போர்க்காலச் சூழலுக்கும் இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கும்கூட பாரிய வித்தியாசம் உண்டு. போர்ச்சூழலில் எங்கு என்ன நடக்கின்றது என்பதை ஓரளவுக்கு அறிய அல்லது உணரவேனும் முடியும். இந்த வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரி. கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு மல்லுக்கட்டுவது மிகப்பெரிய உளவியல் அவஸ்தையும்கூட.

தொற்றுத்தடுப்பிற்கான முன்தயாரிப்பின்மை

இத்தகு பரந்துபட்ட பல்முனைப் பாதிப்புகளை முழு உலகமும் எதிர்கொண்டுள்ள சூழல்களுக்கு மத்தியிலும் அமெரிக்க – சீன வல்லரசுப் போட்டி சர்வதேச அரசியலின் பேசுபொருளாக இருக்கின்றது. புதிய உலக ஒழுங்கு பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. உலக ஒழுங்கினைத் தீர்மானிக்கும் முதன்மை இடத்தினை அமெரிக்கா தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொள்ளுமா, அல்லது சீனா அதனைத் தன்வசப்படுத்துவதற்கான புறநிலையைக் கொரோனா நெருக்கடி ஏற்படுத்தித் கொடுத்திருக்கின்றதா என்றவாறான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சீனா உட்பட உலகின் எந்த நாடுமே தொடக்கத்தில் இந்த நெருக்கடியை அதீத சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. முனனேற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. தொற்றுக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், மருந்துகள், மருத்துவமனையின் தாங்குசக்தி விஸ்தரிப்புச் சார்ந்த முன்தயாரிப்புக்களைப் போதியளவு கொண்டிருக்கவில்லை. சீனா தொடக்கத்தில் இல்லாவிட்டாலும் குறுகிய காலத்திற்குள் சுதாகரித்துக்கொண்டு துரித நடவடிக்கைகளின் ஊடாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அமெரிக்கா மற்றும் இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான மரணங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சிறந்த மருத்துவத்துறையைக் கொண்டுள்ள ஜேர்மன் மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகள், சுவிஸ் ஆகியன கட்டங்கட்டமாக சாத்தியமான திட்டங்களை அமுல்படுத்தி தொற்றுப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. சமூக முடக்கம் ஓரளவு தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்புக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

பலவீனமான சர்வதேச ஒருங்கிணைப்பு

உலகளாவிய நெருக்கடியாக கொரோனா ஆகிவிட்ட புறநிலையில், சர்வதேச நிறுவனங்களின் கூட்டுச்செயற்பாடு அல்லது ஒருங்கிணைப்பு என்பது இன்றியமையாதது. ஆனாலும் இந்த நெருக்கடியில் சர்வதேச ஒருங்கிணைப்பில் மிகப் பலவீனமான நிலையே வெளிப்பட்டிருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation, WHO) ஒப்பீட்டளவில் உரிய மருத்துவத் தகவல்களைப் பாரபட்சமின்றி வழங்கி வருகின்றது. அதன் செயற்பாடுகளுக்குமே ‘டிரம்ப் நிர்வாகம்’ பெருத்த முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகின்றது.

உலக சுகாதார மையத்திற்கு அதிகளவு நிதி வழங்கும் நாடு அமெரிக்கா. சுகாதார மையத்தின் மொத்த நிதிப்பாவனையின் 15 வீதம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நிதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தும்போது அது உலக சுகாதார மையத்தின் செயற்பாடுகளை வெகுவாகப் பாதிக்கும். அந்த இழப்பினை இட்டுக்கட்டுவதற்கு சீனா போன்ற பெரிய நாடுகளிடமிருந்து  மேலதிக நிதியுதவியைப் பெறவேண்டிய தேவை WHO-க்கு உள்ளது.  

‘டிரம்ப் நிர்வாகம்’- பொறுப்பற்ற கையாள்கை

டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா நெருக்கடிக் கையாள்கை, அமெரிக்க மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும்; அதிருப்திகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனைத் திசைதிருப்பும் பொருட்டு உலக பொருளாதார மையம், சீன எதிர்ப்பு, கியூப எதிர்ப்பு அரசியலை டிரம்ப் கையிலெடுத்துள்ளார் என்ற விமர்சனங்களும் புறக்கணிக்க முடியாதவை.

மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்படாத மருந்து முறைமைகளை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது தொடர்பாகப் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை டிரம்ப் வெளியிட்டமையும் உலகளாவிய விசனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஒளிக்கதிர் மற்றும் கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி – உடலைக் கழுவுவதன் மூலம் வைரசை நீக்கிவிடலாம் எனத் தான் நம்புவதான தொனியில் ஒரு பொறுப்பற்ற கருத்தினைச் சொல்லியிருந்தார்.

மேற்கண்ட ஆலோசனையைச் சொல்வதற்கு முன் வெவ்வேறு தட்பவெட்ப காலநிலைகளில், மேற்பரப்புகளில் வைரஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் குறிப்பிட்டார். புறஊதாக் கதிர் (ultra violet rays) அல்லது கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்துவதென்பது உயிராபத்து மிகுந்தது என்பது மருத்துவ விஞ்ஞானத் தகவல்.

ஐரோப்பிய ஒன்றியம் கைவிரிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கே உதவ முடியாத கையறு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இடர்கால உதவி ஒருங்கிணைப்பிற்குரிய வளங்களையும் பொறிமுறைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கவில்லை. வணிக-பொருளாதார நலன்களை முன்னிறுத்திய கூட்டமைப்பு என்பதற்கு அப்பால் அதன் வகிபாகப்பரப்பு விரிந்த ஒன்றல்ல என்பதை இது நிரூபித்துள்ளது. நாடுகளின் பெரும் கூட்டமைப்பாக அதன் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.

வருமுன் காப்பதற்குரிய பொறிமுறைகள் இருக்கவில்லை என்பதற்கு அப்பால் வந்த பின்னேனும் கூட்டுணர்வுடன் செயற்படும் விருப்பினையும் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தவில்லை. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் சேர்பியா போன்ற உறுப்பு நாடுகளின் உதவிக் கோரல்களைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் செவிமடுக்கவில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளினால் தனிமைப்படுத்தப்பட்ட கியூபா, தன் மருத்துவர்களை இத்தாலிக்கு அனுப்பியது. சீனா மருத்துவ ஆளணிகள் மற்றும் உபகரணங்களை ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு அனுப்பியது.

ஐரோப்பாவிற்கு சீன உதவிகள்

சேர்பியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளுக்கும் சீனா தொற்றுத்தடுப்பு மருத்துவ அங்கிகளை அனுப்பி வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஒன்றியத்திற்குள் இணைத்துக் கொள்வதில் பாரபட்சங்களையும் இறுக்கமான நிபந்தனைகளையும் விதித்து வந்திருக்கிறது. இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவது, அந்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு கால்கோலியுள்ளதெனக் கருத இடமுண்டு.

பனிப்போர் முடிவிலிருந்து இற்றைவரை உலக மேலாதிக்க சக்தி அமெரிக்கா. அந்த இடத்தைப் பிடிப்பதற்கான பிரயத்தனத்துடன் இரண்டாவது மேலாதிக்க சக்தியாக சீனா இருந்து வருகிறது. தற்போதுள்ள கேள்வி அல்லது விவாதிக்கப்படுகின்ற விடயம் என்னவெனில், கொரோனா நெருக்கடியின் சமகாலமும் அது ஏற்படுத்தவுள்ள எதிர்கால மாற்றங்களும் உலக மேலாதிக்க சக்தியாகச் சீனாவை சர்வதேச அரங்கில் இருத்தப் போகின்றதா என்பதாகும். சீனாவுடனான வல்லரசுப் போட்டிக்கு அமெரிக்கா அதீத முக்கியத்துவம் கொடுக்கும் புறநிலையில் ஐரோப்பிய நாடுகள் மட்டத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு நலிவடைந்து வருகின்றது என்ற பார்வையும் உள்ளது.

தலைமைத்துவக் குறைபாடு

டொனால்ட் டிரம்ப் இன் நடவடிக்கைகளும் சொல்லாடல்களும் உலகளாவிய கூட்டுச்செயற்பாடுகளுக்கு எதிரானதாகவும் தலைமைத்துவ ஆளுமைக் குறைபாடு உடையவராகவுமே அவரை வெளிப்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பிற்கு எதிரான நடவடிக்கை (நிதியுதவியை நிறுத்தப்போவதான அச்சுறுத்தல்), சீனாவினால் பரப்பப்பட்ட வைரஸ் எனும் கருத்துருவாக்க முனைப்பு (சீன வைரஸ்), கியூபாவிடமிருந்து மருத்துவ உதவிகளைப்பெற வேண்டாமென உலகநாடுகளுக்கு வற்புறுத்தல், கியூபாவிற்கு மருந்துப் பொருட்கள் சென்றடைவதைத் தடுத்தல் என்பன சில உதாரணங்கள்.

அண்மையில் மின்னாபோலிஸ் மாநிலத்தில் கறுப்பினத்தவரான George Floyd மீதான காவல்துறையின் ஈவிரக்கமற்ற படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்க நகரங்களில் எழுந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை டிரம்ப் கையாளும் விதம் அவரின் தலைமைத்துவத் தகமைகள் மீது மேலும் பாரதூரமான கேள்விகளை எழுப்புகின்றது. கொரோனா நெருக்கடி தொடர்பாக அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி வழங்கிய அண்மைய நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபரை சமூகவிரோத பஃப்பூன் (sociopathic buffoon) எனச் சுட்டியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத் தக்கது. Democracy in Europe Movement 2025 (DiEM25)  எனும் அமைப்பின் இணை நிறுவனர் Srecko Horvat மார்ச் 30ஆம் திகதி அவருடன் மேற்கொண்ட உரையாடலில் சோம்ஸ்கி அவ்வாறு சுட்டியிருந்தார். இந்த முக்கியமான காலகட்டத்தில் டிரம்ப் தலைமையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியிருந்தார்.

அமெரிக்க வகிபாகம்

இரண்டாம் உலகப்போரின் பின்னரான 75 ஆண்டுகளில் சர்வதேச ஒருங்கிணைப்புகளுக்கான நிறுவனங்களை உருவாக்குவது, நிதிவழங்குவது, பராமரிப்பது என அமெரிக்காவின் வகிபாகம் முதன்மையானதாக இருந்து வந்திருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறைகள் அவற்றைச் வலுவழக்கச் செய்வதாக அமைந்து வருகின்றன. இத்தகைய நெருக்கடிகளைக் கையாள்வதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்குரிய கூட்டுச்செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உலக நிறுவனங்களை நலிவுறச் செய்யும் வகையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் உள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு அடிப்படையில் சீனாவின் உலகளாவிய மேலாதிக்கத்தை விரைவுபடுத்தும் என்பது ஏற்கனவே எதிர் கூறப்பட்ட ஒன்று. கொரோனா நெருக்கடி அதனை மேலும் விரைவுபடுத்துவதற்கு வழிகோலியுள்ளதாகக் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினைச் சீனா கட்டுக்குள் கொண்டுவந்த செயற்திறன் தொடர்பாக உலக சுகாதார மையம் சீனாவை வெகுவாகப் பாராட்டியிருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் உலக சுகாதார மையம் மீதான கடும்தொனிக்கு இதுவும் ஒரு காரணம். சீனாவின் நிதியுதவியைப் பெறும் நோக்கில்தான் உலக சுகாதார மையம் சீனாவிற்குப் புகழாராம் சூட்டியுள்ளது என்ற கருத்தும் அமெரிக்க ஆதரவு, சீன எதிர்ப்பு கருத்தாளர்களிடம் உண்டு.

துரிதமாகக் கட்டுப்படுத்திய சீனா

வைரஸ் பரவலின் தொடக்கம் சீனா என்பதும் ஆரம்பத்தில் சீனா அதனை மறைத்தது என்பதும் நிரூபணமான ஒன்று. வைரஸ் பற்றி அறிவித்த சீன வைத்தியர் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டமை, பின்னர் அம்மருத்துவர் கொரோனா தொற்றினால் மரணித்தமை மற்றும் உரிய நேரத்தில் பெருந்தொற்றுத் தொடர்பாக வெளியுலகிற்கு அறிவிக்காமை, சீனப்பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டமை என்பன பெருந்தொற்றின் பரவல் வேகத்திற்கும் சாவுகளுக்குமான காரணிகளில் ஒன்றென்பதும் மறுக்க முடியாதது.

இருப்பினும் சீனா அந்த அடிப்படைத் தவறுகளுக்கு அப்பால் துரிதமாகச் செயற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இன்னபிற சர்வதேச நிறுவனங்கள் கைகளை விரித்த போதும், பாரியளவில் பாதிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சீனா உதவியுள்ளது.

கொரோனா பரவலைச் சீனா கட்டுக்குள் கொண்டுவரும் திட்டங்களை ஆரம்பித்த பின்னர், செயற்திறன் மிக்கதாகவும் அதேவேளை மிகக் கடுமையான முறையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. முழுமையான முடக்கம், தனிமைப்படுத்தல், மிகத் துல்லியமான கண்காணிப்பு, பரிசோதனைகள் என்பன மிகக்கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. சீனாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமென்ற குரல்கள் ஐரோப்பிய மட்டங்களில் எழும் வகையில் சீனாவின் செயற்திறன் மெச்சுதலுக்கு உள்ளானது.  அதேவேளை தனிமனித உரிமை சார்ந்த ஐரோப்பிய தரத்திற்கு முரணான கடுமையான நடவடிக்கைகள் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

பெரும் ஏற்றுமதிச் சக்தி

இறுதிக் காலங்களில் சீனா உலகின் மிகப்பெரிய நுகர்வுப்பொருள் ஏற்றுமதி சக்தியாக வளர்ந்துள்ளது. பெருமளவிலான மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், தொற்றுத் தடுப்பு உபகரணங்கள் சீனாவினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா நெருக்கடியில் முகக்கவசங்கள், கைகளைக் கழுவுவதற்கான கிருமிநாசினிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. பல நாடுகள் இவற்றைப் பெறுவதற்குச் சீனாவில் தங்கியிருந்தன. பல்வேறு நாடுகளுக்கு சீனா இலவசமாக மில்லியன் கணக்கான முகக்கவசங்களை வழங்கியும் இருந்தது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் கொரோனாவிற்கு முன்னரே குறைவடையத் தொடங்கியிருந்தது. கொரேனா அதில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவினால் உலகளவில் ஏற்பட்ட முடக்கம் சீன ஏற்றுமதியில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. எனினும் ஐரோப்பிய சூழல் இயல்புக்குத் திரும்புகின்றமையும் அமெரிக்க உள்நாட்டு நிலைமைகள் மோசமடைவதும் சீனாவிற்கு இலாபகரமானது. நுகர்வுப் பொருட்கள், உற்பத்திச் சந்தை சார்ந்து சீனாவில் தங்கியிருக்கும் நிலையைப் பலநாடுகள் கொண்டுள்ளன. மறுவளத்தில் அந்நாடுகள் மீதான சீனாவின் செல்வாக்கினை இந்தத் தங்கியிருத்தல் உறுதிப்படுத்துகின்றது. சீனா மீது ஒற்றைக்கட்சி கொம்யூனிச ஆட்சி, மனித உரிமை மீறல்கள் சார்ந்த குற்றச்சாட்டுகளை மேற்குலகம் முன்வைத்து வருகின்ற அதேவேளை வணிக உறவுகளையும் கொண்டிருக்கின்றன.

அதிகார அரசிலும் பொருளாதார நலன்களும்

கொரோனா ஏற்படுத்தியுள்ள சர்வதேச நெருக்கடியை உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் கையாள்வதற்குரிய பலம் மிக்க சர்வதேச நிறுவனங்கள் இல்லை என்பதே தற்போதைய நிலை. இல்லை என்பதன் பொருள் இருக்கின்ற நிறுவனங்கள் செயல் வலுவும் திராணியுமற்ற நிலையிலுள்ளன என்பதே.

உலக வரலாற்றில் இடம்பெற்ற பெரும்போர்கள் கூட்டுணர்வுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் வழி சமைப்பனவாக இருந்திருக்கின்றன. அவற்றின் சர்வதேச ரீதியில் அரசியல், பொருளாதாரப் பாதுகாப்பிற்கான நிறுவனங்கள் விளைவாக உருவாகியிருக்கின்றன. ஆனாலும் அவை முற்றுமுழுதான நீதி சார் விழுமியங்களோடு இயங்கி வருகின்றன என்று கருத முடியாது. சக்திவாய்ந்த நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டு, அவற்றின் கூட்டு அதிகார, அரசியல், பொருளாதார நலன்கள் சார்ந்தே அவை இயங்கி வருகின்றன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

தற்போதைய நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த அந்தந்த நாடுகளின் எல்லைகளை மூடுமாறு அறிவுறுத்தியதைத் தவிர மேலதிகமாக எந்த உதவியையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கவில்லை.

தேசியவாதமா? சர்வதேசியவாதமா?

ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் எல்லைகளை மூடி, தேசிய நெருக்கடியைப் பிரகடனப்படுத்தி பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அறிவித்தன. தேசிய வளங்கள், வருமானங்கள், பொருளாதார மூலங்களிலிருந்தே முடக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்குரிய நெருக்கடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கின. இந்த நெருக்கடி சார்ந்து ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை அல்லது சர்வதேச நிறுவனங்கள் ஒருங்கிணைப்பிற்குரிய பொறிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது நிதர்சனமாகியிருக்கின்றது. அதன் விளைவு தேசிய நலனுக்கு முன்னுரிமை என்ற நிலையை இந்தப் பெருந்தொற்றுத் தோற்றுவித்துள்ளது.

இரண்டு அனுபவங்களைக் கொடுத்துள்ளது. ஒன்று இத்தகையை நெருக்கடிகளின் போது சர்வதேச கூட்டுச் செயற்பாடுகளுக்குரிய பொறிமுறைகளையும் செயல்வலுவினையும் கொண்ட முறையில் சர்வதேச நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்.

மற்றையது சர்வதேச ஒருங்கிணைப்பிற்கான நிறுவனங்கள் மீதிருந்த அதீத நம்பிக்கையை இந்நெருக்கடி தகர்த்துள்ளது. அதுவொரு மாயை என்று எண்ணுமளவிற்கும், அவை சார்ந்த ஒரு யதார்த்தப் புரிதல் அவசியம் என்பதையும் உணர்த்தியுள்ளது. இரண்டாவது அனுபவம் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் எதிர்காலத்தில் கூர்மைப்படுத்தக் கூடியது. அதனூடாக சர்வ தேசியம் என்ற கருத்தியல் பலவீனமடைந்து தேசியவாதச் சிந்தனை கூர்மைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகள் ஏனைய நாடுகளிலும் சர்வதேசக் கட்டமைப்புகளிலும் சார்புநிலையக் கொண்டிருப்பதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் குறைக்க விரும்புகின்றன.

நவதாரளவாதத்தின் விளைவு

நவதாராளவாத உற்பத்திப் பொருளாதாரம், உலக மயமாதல் எதிர்மறையானதும் பேராபத்துகள் நிறைந்த விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. போர்கள், பெருந்தொற்றுகள், இயற்கை அழிப்புகள், புவி வெப்பமயமாதல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ள பேராபத்துகள்.

உற்பத்தி, வணிகம், நிதிமூலதனச் சங்கிலி போன்ற பொருளாதார ஆதாரங்களைக் கைவசம் வைத்திருக்கும் நாடுகளே சர்வதேச அரங்கில் மேலாதிக்கத்தையும் செல்வாக்கினையும் கொண்டிருக்கின்றன. நிரந்தர பொருளாதார வளர்ச்சி, திறந்த சந்தைப் பொருளாதாரம், இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மீதான குவிமையப்பட்ட நம்பிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய உலக ஒழுங்கில் கொரோனா எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணப் போகின்றது என்பது எதிர்பார்ப்பிற்குரியது.

உலகமயமாக்கலின் பலவீனங்கள்

இயற்கைக்கும் சூழலியலுக்கும் எதிரான நவதாராளவாத உலக ஒழுங்கின் விளைவு இன்றைய நெருக்கடிக்கான மூலம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. இது தற்போது நிலவுகின்ற உலக ஒழுங்கினை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதான பார்வைகளும் பரவலாக உள்ளன. சீனா, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான ஆட்சி பீடங்கள் மேற்கின் தாராளவாத ஜனநாயக நாடுகளைவிட சிறந்த முறையிலும் துரித கதியிலும் வைரஸ் தொற்றினைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. கொரோனா நெருக்கடியின் அரசியல், பொருளாதார விளைவுகள் அமெரிக்க மேலாதிக்க முடிவின் தொடக்கமாகவும், அதேவேளை உலகமயமாக்கலின் பலவீனங்கள் மீது எச்சரிக்கை மணியாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular