பாரதீ
கொரோனாவின் வருகை, தனிமனிதப் பழக்கவழக்கங்கள், குடும்பம், உறவுகள், பணியிடம், சமூகம், அரசியல் என்று நம் எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது. எல்லாப் பெரிய நாடுகளுமே நோயை விட்டு வெளியே வரவே இன்னும் முக்கிக் கொண்டிருப்பதால், அதற்குப் பின்பான மாற்றங்கள் பற்றி இன்னும் உரையாடத் தொடங்கவில்லை. நோய் கட்டுக்குள் வந்ததும் அந்த உரையாடல்கள் நிச்சயம் வேகமெடுக்கும். நம் அரசியல் அமைப்புகளில் இருந்த குறைபாடுகளைப் பற்றி உரையாடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக இருந்தோம். இப்போது அவை அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது இந்தக் கொள்ளை நோய். அது மட்டுமில்லை, அடுத்த பெரும் நெருக்கடி வருவதற்குள் இக்குறைகளை வேகவேகமாகக் களைய வேண்டும். அதை எந்த நாடு முன்னெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அது நடக்கும். அதைப் பார்த்து மற்ற நாடுகளும் அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.
இது விதிதானோ என்னும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நாடுகளிலுமே இது போன்ற ஒரு பெரும் நெருக்கடியைக் கையாளும் அளவுக்கு அறிவும் ஆற்றலும் அற்ற அரசுகளும் தலைவர்களுமே அதிகாரத்தில் இருக்கிறார்கள். போதாக்குறைக்குத் தம் போதாமைகளை மறைப்பதற்கு வெறுப்புப் பிரச்சாரங்களைக் கையில் எடுக்கும் கேடு கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள் சிலர். அவர்கள் பிழைப்புக்கு எது சரியான வியூகமோ அதை அவர்கள் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத்தான் தாம் பிழைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அறிவு இல்லாமல் போய்விட்டது போல இருக்கிறது.
இந்த அறிவு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் ஊடகங்களின் தோல்வி. அரசின் மிரட்டலுக்குப் பயந்தும் எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்பட்டும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஊடக உலகமும் சரண் அடைந்துவிட்டது போலவே படுகிறது. சமூக ஊடகங்கள் ஏற்கனவே அவர்களுக்கு ஏற்ற மாதிரியான பொய்களை மட்டும் பரப்பவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. மக்களின் அறிவின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வேண்டியதையெல்லாம் சாதித்துக்கொள்பவர்கள்தாம் அரசியல்வாதிகள். ஆனால், வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக படிக்காத பாமரர்களைவிடப் பெரும் அளவில் படித்த உயர் நடுத்தர வர்க்கம் கேள்வி கேட்காமல் பொய்களை நம்புகிறது, பரப்புகிறது, அல்லது பொய் என்றே தெரிந்தும் ஆதரிக்கிறது. இந்த நிமிடம் வரை இதிலிருந்து வெளியேறுவதற்கான வழி ஒன்று இருப்பது போல எந்த நம்பிக்கையும் இல்லை.
கையில் ஒன்றுமில்லாமல் பசி வாட்டும்போது ஏழை மக்கள் தெருவுக்கு வருவார்கள். அப்போதும் உன் பசிக்கும் உனக்கு நேர்ந்திருக்கும் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் இவன்தான் என்று யாரோ இன்னோர் எளிய மனிதனைக் காட்டித் தூண்டிவிட்டால் பசியோடு பசியாகப் போய் அவனைத் தாக்குவதில் பரபரப்பாகி விடுவார்கள். அது பசியிலிருந்தும் சிறிது கவனத்தைத் திருப்பும். இப்படியே இது தொடரும்போது எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.
ஒரேயொரு வாட்சாப் செய்தி மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதைத்தான் டெல்லி தப்லிகி ஜமாத் அனுபவம் நமக்குக் காட்டியது. அதே போல இன்னொரு கூட்டம் கூடியது. அது பற்றி ஒருவருமே பேசுவதில்லை. ஆயிரம் ஆயிரமாக வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்து இறங்கியவர்களைப் பற்றிக் கவலையே படவில்லை. ஆனால் அந்த மாநாடுதான் இந்தியா முழுமைக்கும் நோயைப் பரப்பியது என்று பரப்பினார்கள். அதுவும் பரவியது. அவர்கள் வேண்டுமென்றே அப்படிச் செய்தார்கள் என்றும் ஒரு முட்டாள் கூட்டம் பரப்பியது. அதுவும் பரவியது.
அடுத்ததாக இதேபோல இன்னொரு கதை மும்பையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. தாராவி போன்ற சேரிகளில் சமூக விலகலைக் கடைபிடிப்பது கடினம் என்பதால், அங்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு இருப்பதால், வசதி படைத்தவர்கள் ஏழை மக்களைக் கண்டு பயப்படுகிறார்கள், ஒதுங்கி நிற்கிறார்கள், தள்ளி நிற்கச்சொல்லிக் கத்துகிறார்கள். இது எதில் போய் முடியும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். “தீண்டாமை நல்லது” என்று பிரச்சாரம் செய்யும் அளவுக்குத்தான் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
சீனாவைவிட நாம் மக்கட்தொகையில் சிறிய நாடுதான் என்றாலும் பரப்பளவில் சீனா மிகப்பெரிய நாடு. அமெரிக்காவும் மிகப்பெரிய நாடு. இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகப் போவது நம் மக்கள் அடர்த்தி. உலகில் வேறெந்தப் பெரிய நாடும் நம்மைப் போன்ற நெருக்கத்தில் வாழும் நகரங்களைக் கொண்டவை அல்ல. நம் பொருளாதாரமும் முழுக்க முழுக்க நம் நகரங்களை நம்பியே இருப்பவை. நமக்குச் சாதகமாக இருப்பது நம் எதிர்ப்பு சக்தி. எல்லோருக்கும் தொற்றினாலும் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். அதனால் விரைவில் வெளியேறி விடலாம். ஆனால் அதற்குள் கிருமி ‘வகை மாற்றம்’ (mutation) அடைந்துவிடக் கூடாது. அதுவும் இந்தியாவில் நடந்துவிடக் கூடாது.
‘எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தைக் குறை சொல்லும் போக்கு கூடி வருகிறது’ என்றொரு பொதுவான விமர்சனம் ஆங்காங்கே காதில் படுகிறது. “எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது, தனி மனிதர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்” என்கிறார்கள். உண்மைதான். அதே வேளையில், ஓர் அரசாங்கம் என்ன செய்தாலும் அதைப் பற்றிய அடிப்படையான சிந்தனைகளைக் கூட எழும்ப விடாமல் தடுத்து ஆகா ஓகோவென்று புகழ்ந்து திரியும் கூட்டம், அதுவும் படித்த உயர் நடுத்தர வர்க்கக் கூட்டம், ஒரு மக்களாட்சிக்கு மிகப்பெரும் கேடாக முடியும். பொய்களை அவிழ்த்து விடும் போது மட்டும் தம் தலைவன் கடவுளை விடவும் வல்லமை படைத்தவர் போலப் பேசுவதும், தோல்விகளைப் பற்றிப் பேசும்போது படக்கென்று தரையிறங்கி வந்து, “அவரும் மனிதன்தானே! ஒரே ஆள் எவ்வளவுதான் பண்ண முடியும்!” என்பதும் துளியும் நேர்மையில்லாத வாதங்கள். 135 கோடிப் பேர் வாழும் நாட்டில் எல்லாவற்றையுமே ஒரேயொரு தனிமனிதனைச் சுற்றி அமைத்துக் கொள்வது பேரழிவுக்கான வேலை. அதுவும் சேர்ந்துதான் நம்மைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.
நீதி மன்றங்களையும், ஊடகங்களையும், தேர்தல் ஆணையத்தையும் பயம் கொள்ள வைக்க முடிகிறது, தோற்று மண்ணைக் கவ்விய மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடிகிறது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைக்கூட ஆட்ட முடிகிறது என்றால் உண்மையிலேயே அவர் அவ்வளவு வல்லமை படைத்தவராகத்தான் இருக்குமோ என்றும் நமக்குத் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அந்த வல்லமை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் மட்டும் ஆக்டிவேட் ஆக மறுப்பதுதான் நமக்குப் புரிய மறுக்கிறது. அவர், அவருடைய ஆளுமை பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொய்களில் கால்வாசி வல்லமை கொண்டவராக இருந்திருந்தால் கூட இந்த நெருக்கடியை இதைவிடப் பல மடங்கு சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும்.
விளக்கேற்றச் சொன்னால் ஏற்றுகிறார்கள், பாத்திரங்களைத் தட்டச் சொன்னால் தட்டுகிறார்கள், பொய்யாக எதையாவது கிளப்பிவிட்டுப் பரப்பச் சொன்னால் பரப்புகிறார்கள் என்பதற்காக, உருப்படியாக எதையாவது செய்யச் சொன்னால் செய்கிறார்களா என்று பார்த்தால் பக்த கோடிகள் அவர்களின் கடவுளைவிடப் பெரும் கேடிகளாக இருக்கிறார்கள். “உங்கள் ஊழியர்களுக்கு வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கொடுங்கள்” என்று சொன்னதை ஒரு பக்தன்கூட மதித்தானா என்று தெரியவில்லை. வங்கிகளை, “மூன்று மாதங்களுக்கு மாதாந்திரத் தவணைகளை வசூலிக்காதீர்கள்” என்று சொன்னதை அவர்கள் மதிக்கவில்லை. “ஒரு தலைவர் சொல்லத்தான் முடியும். ஒவ்வொருவரும் மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறார்களா என்று போய்க் கண்காணிக்கவா முடியும்?” என்று கேட்கிறீர்களா? சொல்வதற்கு மட்டும் இருப்பதல்ல அரசாங்கம். அரசாங்கம் என்பது நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைக்கு ஒத்து வராதது என்றால் அதைப்பற்றி ஏன் பேச வேண்டும்! மனிதர்களுக்கு வெற்றுச் சொற்களின் மீது இருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பூட்டுகிறது.
இந்தியா இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்றாக முன்னேறி இருக்கிறது. இது எது பற்றியும் கவலைப்படாமல், “உலகத் தலைமை கொண்டுவிட்டோம்”, “உலகமே நம்மைத் திரும்பிப் பார்த்து வியக்கிறது”, “நமக்கு இப்படியொரு தலைவனோ, அரசோ கிடைக்கவில்லையே என்று பொறாமைப்படுகிறது” என்றெல்லாம் அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இப்படி அடித்துவிடுபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அப்படி அவர்களுக்கே பிரச்சனைகள் வந்தாலும்கூட பல்லைக் கடித்துக்கொண்டு உண்மையை மறைக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஏதோ ஒரு கணக்கு இருக்கிறது.
மக்களாட்சி நடைபெறும் எல்லா நாடுகளிலுமே இப்போது பெருநிறுவனங்களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவனங்களின் நலனுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதையும் மீறி, “மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அதற்காக எவரையும் பகைத்துக்கொள்ளத் தயங்க மாட்டேன்” என்று பேசுகிறவர்களை அரசியலை விட்டே அப்புறப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாக அந்நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் அந்நிறுவனங்களைப் பகைத்துக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்யும் யோக்கியர்கள் வேண்டும் என்றெல்லாம் நாம் பேராசைப்பட முடியாது. ஆனால், மக்கள் நலனுக்கும், அவர்கள் நலனுக்கும் இடையில் ஒரு சமநிலை பேணும் அளவுக்காவது மனச்சாட்சி உள்ள தலைவர்கள் வேண்டும், மக்களாட்சி அமைப்புகள் மக்கள் விரோத அமைப்புகளாக மாறி வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்கான மாற்றங்களைச் செய்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு மக்களும் இந்தப் பின்னணி அரசியல் பற்றி விழிப்புணர்வு உடையவர்களாக மாறுவது அவசியம். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி அடி விழுந்தால்தான் அது மத்தளமாக இருக்கும். ஒரு பக்கம் மட்டும் விழுந்தால் அது மோசம் போன மத்தளமாகிவிடும், இல்லையா?
அரசுகள் தவறு செய்வது இயல்பானதே. அதுவும் படிப்பறிவற்ற மக்கள் நிறைந்திருக்கும் நாட்டில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், அவர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு வேண்டிய அளவுதான் அறிவாளிகளாக இருப்பார்கள். அவர்கள் நிறையவே தவறு செய்வார்கள். அப்படியான தவறுகளைக் குறைத்துக் கொள்வதற்கு ஒரேவழி தொடர்ந்த உரையாடல். யாரோடு? நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியே அந்தந்தத் துறையில் யார் விற்பன்னரோ அவர்களோடும். ‘தான்’ என்கிற எண்ணம் தலைக்கு ஏறும் அளவுக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுவிடுகிற தலைவர்களுக்கு தன்னைத்தவிர எவரையுமே மதிக்க முடியாது. நாடாளுமன்றம் என்பது தன் அதிகாரத்துக்கு அடங்கிப்போக வேண்டிய ஒரு கட்டடம் என்று தோன்றும். தானே எல்லாவற்றிலும் விற்பன்னன்தானே என்கிற மிதப்பு வந்துவிடும். அதனால் அவர்கள் ஆட்சியில் எந்தத் துறை விற்பன்னர்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும். இந்தக் கொள்ளை நோயைக் கையாளுவது பற்றி எத்தனை நாடாளுமன்ற விவாதங்கள் நடந்திருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? எந்தக் கொள்ளை நோய் விற்பன்னர் அல்லது மருத்துவர் குழு கலந்தாலோசிக்கப்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு?
“நெருக்கடி நேரத்தில் உட்கார்ந்து எல்லாவற்றையும் விலாவாரியாகப் பேசிக்கொண்டிருக்க முடியாது, அது செயல்பாட்டுக்கான நேரம்” என்பது சரிதான். அப்படி ஒன்றும் பேசுகிற நேரத்தைக்கூட மிச்சப்படுத்திச் செயல்பட்டுக் கொண்டிருப்பது போலவும் தெரியவில்லை. உரையாடலையே விரும்பாத அரசாகத்தான் மீண்டும் மீண்டும் தன்னைக் காட்டிக் கொள்கிறது இந்த அரசு. அதன் அடுத்த கட்டத்துக்குப் போய், இப்படியொரு நெருக்கடி வந்திருப்பதால் அடுத்து வரப்போகும் தேர்தலே வேண்டியதில்லை என்றொரு கூட்டம் தொடங்கி வைத்திருக்கிறது. அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தீர்கள் என்பது தெரியாததா? அதிகாரத்தைச் சுவைத்து விட்டால் அவ்வளவு எளிதாக அதை விட முடியாதுதான். அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்தான். அதற்காக இப்படியா?
எப்போதும் அரசின் நிலைப்பாடு அல்லது செயல்பாடு தவறென்று உணரும் நேரத்திலெல்லாம் மக்களும் மக்களை நேசிப்பவர்களும் நாடுவது நீதி மன்றங்களைத்தான். ஏனென்றால் அவர்கள்தாம் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்புக்கு உரியவர்கள். அந்தத் துறையின் வல்லுநர்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் படிப்பறிவற்ற முட்டாள்களாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கான கடிவாளம்தான் அரசியலமைப்புச் சட்டம். இன்றைய இந்தியாவில் நீதிமன்றங்கள் எவ்வளவு தற்சார்போடு செயல்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியும். ஓய்வுக்குப் பிறகு அளிக்கப்படும் பதவிகளும் ஓய்வுக்கு முன்பு அளிக்கப்படும் துன்புறுத்தல்களும் இந்திய நீதித்துறையை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. இந்த நெருக்கடி காலத்தில் நீதிமன்றம் எப்படியான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது என்று நீங்களே தேடிப்பாருங்கள். இதை எப்படிச் சரிசெய்வது என்பதையும் சேர்த்தே கொரோனாவுக்குப் பிந்தைய இந்தியா கவலைப்பட வேண்டும் என்பதை உணர்வீர்கள்.
ஒரு காலத்தில் எதெற்கெடுத்தாலும் “சோவியத் ரஷ்யாவைப் பார்”, “சீனாவைப் பார்” என்று பேசும் கம்யூனிஸ்டுகளைப் போல, இப்போது ஒரு கூட்டம், வளர்ந்த நாடுகளைக் காட்டி, “அவர்கள் அதைச் செய்கிறார்கள் பார்”, “இவர்கள் இதைச் செய்கிறார்கள் பார்” என்று ஒப்பிட்டுப் பேசுகிறது. அமெரிக்கா மாதத்துக்கு இவ்வளவு பணம் என்று வீட்டுக்குள் அடைந்து கிடைக்கும் தன் மக்களுக்குக் கொடுக்கிறது என்பதற்காக இந்தியாவும் அப்படிக் கொடுக்க முடியுமா? ஐரோப்பிய நாடுகள் பாய்ந்து பாய்ந்து தம் மக்களுக்கு உதவுகின்றன என்பதால் இந்தியாவும் அப்படி உதவ முடியுமா? முடியவே முடியாது. நாம் வளர்ந்த நாடில்லை. இன்னமும் நாம் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுதான். நம்மிடம் அந்த அளவுக்கெல்லாம் பொருளாதாரம் இல்லை. எதுவுமே இல்லா விட்டாலும் இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளவாவது இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வல்லரசுக் கதைகள் எல்லாம் பெரும் மோசடி. அதற்குப் பல பத்தாண்டுகள் பின்னால் இருக்கிறோம். இப்போது வேகவேகமாக இன்னும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒரு பகுதி – மொத்த நாடும் அல்ல – பாகிஸ்தானைவிட மோசமாகாமல் பார்த்துக் கொண்டாலே பெரும் சாதனையாக இருக்கும்.
கொரோனாவை வைத்துப் பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம் என்கிறார்கள். புரட்சி எப்போது வெடிக்கும்? குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, உணவுக்கு வழியில்லாமல் போகும்போது, பாதுகாப்புக்குப் பங்கம் வரும்போது, அவற்றிலிருந்து காக்கும் ஆற்றல் தம் அரசுக்கு இல்லை என்றோ இதற்கெல்லாம் காரணமே தம் அரசுதான் என்றோ மக்கள் உணரும்போது கிளர்ச்சி வெடிக்கும். அதிகாரத்தின் சுவையை அனுபவித்து விட்ட ஆட்சியாளர்கள் வெறி கொண்டு அதை அடக்க முயல்வார்கள். அது மேலும் உக்கிரமடையும். அதற்கான சூழல் இப்போது இந்தியாவில் உருவாகியிருக்கிறதா? நிச்சயம் இல்லை. ஆனால் அதற்கான திசையில்தான் சில ஆண்டுகளாவே பயணித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா அதனை வேகப்படுத்தலாம். வடமாநிலத் தொழிலாளர்களின் கொடும் பயணங்கள் அதற்கான சாட்சி. பிரிவினைக்குப் பிறகு இப்படியொரு பெருந்திரள் இடப்பெயர்வை இப்போதுதான் நாடு பார்க்கிறது.
ஆனால், இப்படியான அரசியல், சமூக, பொருளியல் அடக்குமுறைகள் மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. அதில் தம் அரசின் பங்கு என்ன என்பதை மக்கள் உணர வேண்டும். எல்லாம் பகவான் நமக்கு விதித்தது என்று நம்பிவிடும் அல்லது நம்ப வைக்கப்படும் மக்கள் எதைக் கிளறுவார்கள்? இப்போது பெரும் பொருளியல் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பது வட இந்தியத் தொழிலாளர்கள். அவர்கள் எவ்வளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை. தென்னிந்தியாவில் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும் பகுதிகள் இருக்கின்றன. ஆனால் அவர்களது உணவுக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் பங்கம் வரும் அளவுக்கு நிலைமை இன்னும் மோசமாகவில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் தென்னிந்தியா நிறையவே சொகுசு வாழ்க்கைக்குப் பழகிவிட்டது. அதனால் வீதிக்கு வந்து போராடும் வேலையெல்லாம் நடக்கவே போவதில்லை. அரசுக்கு எதிராகப் பேசுவோம். ஆனால் எளிதில் மோசம் போகவும் செய்துவிடுவோம். ஆனால் இப்படியே போனால் வட இந்தியா முழுமையான பாதிப்புக்குள்ளாக நேரம் அதிகம் ஆகாது. இப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கையில், கொரோனாவின் இரண்டாவது அலை இதைவிடப் பெரிதாக அடிக்கப் போவது போலத்தான் தெரிகிறது. அப்படி ஏதும் நிகழ்ந்தால் அது வட இந்தியாவில் எளிய மக்களின் வயிற்றில் கை வைக்கலாம். அதன் விளைவாக பெரும் அதிர்வலைகள் உருவாகலாம். அப்படியேதும் நிகழ்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் இராமபிரான்.
***
பாரதீ – இவர் ஒரு ஃபேக் ஐடி