1.
பகலில் உறங்கி
இரவில் விழித்திருப்பவனைக் கண்டு குழம்பி நிற்கிறது
அவனது காலடியில்
நாயெனக் காலம்.
கிழமைகள் மறந்து போன
காலமொன்றில்
உறங்கி விழிக்கிறான்
வாரத்தின் எட்டாவது நாளில்.
குலைந்த ஒழுங்குகளுக்கிடையே
சரியாக பதினைந்தாவது நாளில்
தேய்ந்து வளரும் நிலவைக்
காண இயலாமல்
தவித்து நிற்கிறார்
மூடிய கதவுகளுக்குப் பின்
கடவுள்.
கடைகளை அடைக்கச்சொல்லி
விரைந்து வருகிறார்
தூரத்தில் காவலர்.
வாடாத பூக்களை யாரேனும்
வாங்கிவிட மாட்டார்களாவென
வாடிய முகத்துடன் மூதாட்டி.
ஒரே காட்டின் மூங்கில்கள்தான்
அன்று வெள்ளத்தில் படகென
நம்மைச் சுமந்ததும்
இன்று அதிகாரத்தின் கைகளால்
ஆசனவாய்களை சுவைத்ததும்.
***
2. விடுமுறையின் போது இறந்து போனவள்…..
காலியாக உள்ளது
விடுமுறையின்போது
இறந்து போனவளின்
தேர்வறை இருக்கை.
அவளது பெயருக்கும்
அவளுக்கென பிரத்யேகமாக
அளிக்கப்பட்டுள்ள
தேர்வெண்ணிற்கும்
இடையேயான
மாத்திரை அளவின்
வித்தியாசமே
நிகழ்காலத்திற்கும்
இறந்தகாலத்திற்குமான
வித்தியாசமென்பது.
காற்றில்
படபடத்துக் கொண்டிருக்கும்
நுழைவுச் சீட்டில்
புன்னகைத்தபடியிருக்கும்
அதே முகம்தான்
அவளது இறுதியஞ்சலி
பதாகையை அலங்கரித்ததும்.
பின்னிருக்கை தோழி
பதற்றத்துடன்
நிமிர்ந்து நோக்கும்
கணந்தோறும்
தோன்றி மறைகிறது
இல்லாதவளின்
இரட்டைப் பின்னல்.
நெற்றியைத்தொட்டால்
விடை அ
மூக்கைத் தொட்டால்
விடை ஆ
உதட்டிற்கு விடை இ
முகவாய்க்கு ஈ
என ஆண்டு முழுக்க
தேர்வறையில் ஜாடையில்
பேசிக்கொண்ட
முன்னிருக்கைத் தோழிக்கு
ஒரு மதிப்பெண் வினா முழுக்க
வியாபித்திருப்பது அவள் முகமே.
கால்கடுக்க நின்று கொண்டிருக்கும்
கண்காணிப்பாளருக்கு
தனது காலியிடத்தை
அமரத் தந்து
ஆசுவாசப்படுத்துவதும் அவளே.
இறுதியாக
தேர்வு முடிந்து வெளியேறும்
தோழிகளின் வியர்வை கசிந்த
முகங்களை
சில்லென அரவணைக்கும்
காற்றிற்கு என்ன
பெயரென்று நினைக்கிறீர்கள்
விடுமுறையின்போது
இறந்துபோனவளின்
அதே பெயர்தான்.
(கொளுத்தப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ க்கு)
***
கே.ஸ்டாலின்