Thursday, June 13, 2024
Homesliderகேள்விகளின் விரல்கள்

கேள்விகளின் விரல்கள்

தென்றல் சிவக்குமார்

விரல்கள் (சிறுகதைத் தொகுப்பு)
குட்டி ரேவதி
ஜீரோ டிகிரி பதிப்பக்கம்
விலை – ரூ.150/-

விரல்கள் நீளும் திசைதோறும் கால் தரையில் பாவாமல் ஏதோ ஒரு கதை மிதந்தெழுகிறது. விரல்களின் எதிர்ப்புறக் கதைகள் மட்டுமல்லாமல் அவற்றின் உட்புறக் கதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. எந்தவொரு கதையை வாசித்து முடிக்கையிலும் நம்மைச் சுற்றிலும் கேள்விகள் விசிறப்பட்டுக் கிடப்பதை உணரலாம். அவற்றுக்குப் பதில் தேடுவது ஒரு பக்கம். கேள்விகளை அங்கீகரிப்பதையே இந்தத் தொகுப்பின் வெற்றியாக முன்வைக்கலாம்.

‘ஒருபொழுதும் விழிப்பில் உடல் திறக்காமல் கனவுகளில் மட்டுமே உடல் திறக்கும் விரல்களைக் கடுமையாக’ வெறுப்பவள், கண்ணாடி பார்ப்பதைத் தவிர்ப்பவள், குழந்தைப் பருவத்தில் அம்மாவின் கன்னத்து மச்சத்தை விரல்களால் வருடியபடி உறங்குபவளாக இருந்திருக்கிறாள். தன் உடலை ஆடை அரண்களிட்டுப் பூட்டிக் கொண்டு சுவர்களும் கூரையுமாக உள்ளுறைபவளுக்கு ஏணி மேலேறி வண்ணம் தீட்டும் அந்தரத்தின் விரல்களைப் பற்றிக்கொள்ளப் பிடித்திருக்கிறது. பூத்துத் திறந்தது விழிப்பிலா கனவிலா? பெற்றதும் இழந்ததும் என்னென்ன?

பெண்களை விதவிதமான பறவைகளாகப் பார்ப்பது பிடித்திருக்கும் ஒருவனுக்கு மண்டைக்குள் ஆணிகள் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. அம்மாவின் கண்களுக்குள் மருளும் கோழியைக் காண்பவன், அவள் புறாவாக மாறும் நாளில் இதுகாறும் பருந்தாயிருந்தவனை ‘அரிசி நீங்கிய உமி’யாகக் காண்கிறான் எனில், யார் யாருடைய இரை? வாழ்க்கையின் இருளுக்கு இருக்கும் விரல்கள் எத்தனை? அவை ஆணிகளைத் திருகி அகற்றுகின்றனவா, அறைகின்றனவா? கோழியும், மயிலும், புறாவும் வெறும் பறவைகளா?

திடீரென விரல்கள் மீது அருவெறுப்புக் கொள்ளும் ஒருத்தி அதைக் குணப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறாள். ‘பெண்ணியக் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் மருத்துவர்! கணவனே கண்கண்ட என்று தொடங்கும் மிகப் புராதனமான சொற்களைக் கடும் ஆங்கிலத்தில் உச்சரிப்புப் பிறழாமல் மனநலம் மீள உதவி தேவைப்படும் மகளிடம் அனாயாசமாகச் சொல்கிறாள் ஓர் அம்மா. ஆங்கிலமும், அறிவும், கல்வியும், முன்னேற்றமும் எவற்றின் விரல்களாக இருக்கின்றன?

நல்ல தோழியின் எச்சரிக்கைச் சொற்களைச் சந்தேகத்தின் விரல்களால் புறக்கணித்த ஒருத்திக்கு துரோகத்தின், பொறாமையின் விரல்கள் பரிசாகக் கிடைக்கின்றன. கூந்தல் நீளம் மொத்தமும் நீவிப் புரண்ட விரல்கள் எல்லாமும் ஆதுரத்தின் பாற்பட்டவையல்ல என்றுணரும்போது காட்சிப்பொருளாகக் குவளைக்குள் செருகப்படுவது கூந்தல் இழைகள் மட்டும்தானா?

அறிவும் மனமும் நிரம்பி வாழும் ஒருத்தியைப் பச்சைக்கல் பதித்த சங்கிலியைக் கொடுத்து, தன் பக்கமாக நெம்பியெடுத்துப் பச்சை ஒளியை மூளைக்குள் வீசும் நச்சுத்துளிகளைக் காதுக்குள் விடுபவள் மனம் என்ன சொல்லும்? எந்த நிலம் திரிந்தாலும் பாலை என்கிறது தமிழ். வழிபாட்டுத்தலம் திரிந்த பாலையைத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்திக் காதலைக் கண்டெடுத்தவள் பனி மலையிலிருப்பவனை அழைத்துப் பேசும்போது தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுவது கேமரா மட்டும்தானா?

கனவெல்லாம் கைகூடுதல் நல்லூழ்தானா? கனவுகளைக் கட்டியிருந்தவற்றை இமைகள் என்பதா, அல்லது சந்திக்க வேண்டிய உயிர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு பனிமலைகளைப் பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் நின்றிருப்பவனை இமையென்பதா?

மொட்டை மாடியின் திறந்தவெளியும், இன்னும் பல அறைகளும் இருந்தாலும் சிறையாகவே இருக்கும் பெரிய வீட்டில் தனித்திருப்பவள், கண்ணாடி பார்க்க விரும்பாதவள், கவிதைகளை எழுதிக்கொண்டே இருப்பவள், வேட்டியின் குறுக்கப்பட்ட நடைவெளிக்குள் லாகவமாகத் தடுக்காமல் நடைபயிலும் ஒருவனை ரசிக்கிறாள். தன் இருளை மறைக்க அவள் மனநலத்தைக் கேள்விக்குட்படுத்தியவன் எளிதாகக் காணாமல் போகிறான். அவனைத் தொடர்ந்து எல்லாருக்குமே காணாமல் போவது எளிதாகவே இருக்கிறது. தன்னை நெருங்க யாரும் அஞ்சுவது வசதியாக இருப்பதாக நினைக்கிறாளே, அது உண்மையில் ஒரு வசதிதானா? வீட்டுக்குள் தனித்திருந்தபடி வெளியாட்களின் உதவியை நாடும் ஒருத்தியின் வாழ்க்கைக்கதை இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? பெரிய வீடு என்பது வீடுதானா, அதனினும் பெரிய உலகமா?

பத்து சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு நம்முன் விரிக்கும் உலகங்களுக்குப் பெரிய பூச்சுகள் இல்லை, ஆனால் நிரந்தரக் கொதிப்புகள் இருக்கின்றன.

“மஞ்சள் நிறப் புடவையில் வயலட் பூக்கள் எம்பிராய்டரியாய் ஆங்காங்கே பூத்திருக்கும். தனிமையும் ஏக்கமும் நிறைந்த புடவை அது”

“இடது கண்ணில் இருவிழி நீரும் சேர்ந்து தலையணையை ஈரமாக்கியது”
இப்படியான சொற்கட்டுகள் ஏற்படுத்தும் கனம் மிகப் பெரியதாக இருக்கிறது,

இந்தக் கதைகள் உடலுக்கும் மனத்துக்குமான தொடர்பை அழுத்திச் சொல்லுகின்றன. தீண்டலும் சீண்டலும் திறந்துதரும் பதட்டத்தையும், மூடித்தரும் மனங்களையும், ஒன்றைத்தொட்டு ஒன்றென வளரும் சிக்கல்களையும் நீண்ட சொற்றொடர்களோ, கனத்த சொல்லாடல்களோ இன்றி, ஆனால் தவிர்க்க முடியாத நிரடல்களாகப் படைக்கின்றார் குட்டி ரேவதி. அதனாலேயே இந்தக் கதைகள் தனித்துவம் பெறுகின்றன, தனிக்கவனமும் கோருகின்றன. பலமுறை கடந்து சென்றும் நம் கவனத்தைப் பெறாத, நம் வீட்டிலேயே இருக்கும் ஒரு மூலையை, அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களில் நாம் காணத் தவறும் கண்களில் ததும்பும் வெறுமையை, நமக்குள்ளேயும் எங்கோ எப்போதோ எதன் பொருட்டோ இட்டுவைத்து மறந்து விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நெருடலை, எழுத்தின் வெளிச்சத்துக்கு உட்படுத்தியிருக்கும் குட்டி ரேவதிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். வாழ்தல் இனிது.

***

தென்றல் சிவக்குமார் – “எனில்”கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். ஆசிரியர் தொடர்புக்கு – thendralsivakumar@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular