Sunday, September 24, 2023
Homesliderகேசினோ

கேசினோ

சுஷில் குமார்           

ருநாளும் இல்லாமல் அன்றைக்குதான் என் அலுவலகக் காரை முதன்முதலாக எடுத்தேன். ஒருநொடி வேண்டாமெனத் தோன்றினாலும் அதற்கெதிராகத்தான் மனம் எப்போதும் முடிவெடுக்கிறது. வண்டியை எடுத்த கணத்திலிருந்தே ஏதோ நடந்துவிடப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. உடன் வந்த அலுவலக நண்பனும் ஏறிய அடுத்த நொடியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். இரண்டு பகல் இரவுகளாகத் தொடர்ந்து வேலையில் இருக்கிறோம். இந்தக் கடைசி விநியோகத்தை முடித்து விட்டால் ஒரு இருபத்திநான்கு மணிநேர ஓய்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடல் கடந்து வந்து நாயாக அலையும்போதுதான் சொந்த நாட்டின் சுகங்களெல்லாம் கண்முன் வந்து நிற்கின்றன. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடியிருக்கிறோம்?

ஒரு பத்து நிமிடம் பொறுமையாக ஓட்டியிருந்தால் எல்லாமே வேறுமாதிரியாக ஆகியிருக்கும். ஆனால், எல்லாம் இப்படி நடந்ததும் கூட ஒருவகையில் நல்லதுதான். ஒரு கதவு மூடினால் ஒரு கதவு திறக்கத்தான் செய்கிறது. நமக்கான உதயத்தை இறைவன் எந்த மேகத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளும் திறமை வேண்டும். இல்லையென்றால் அலையோடு அலையாக தத்தளித்துக் கரை சேரவோ, ஒதுங்கவோ வேண்டியதுதான்.

*

தலைமை நிர்வாக அதிகாரியுடனான முந்தைய வார சந்திப்பில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் நீங்கியபாடில்லை. இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டிய திருமணச் சான்றிதழ் இந்த பாழாய்ப்போன கொரோனா ஊரடங்கால் வந்து சேராமல் போக, இந்தத் தீவில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் என் நிறுவனம் எனக்காக அபராதம் செலுத்த வேண்டுமாம். மாதத்திற்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள். இங்கே விசித்திரம் என்னவென்றால் நம் திருமணச் சான்றிதழ் ஆறு வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். பின், இன்னும் அதே பெண்ணுடன்தான் திருமண பந்தத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிசெய்யும் விதமாக திருமணச் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும். அதை விண்ணப்பிப்பதற்காக ஒரு மூவாயிரம் டாலர் கடன் வாங்கி இந்தியாவிற்குச் சென்று வந்திருந்தேன்.

சந்திப்பின் முடிவில் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார்கள், அடுத்த மூன்று மாதங்கள் நான் சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய வேண்டும், இல்லையென்றால் உடனடியாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு என் சொந்தச் செலவில் இந்தியாவிற்குத் திரும்பிவிட வேண்டும். இந்த வாரத்திற்குள் என் முடிவை நான் சொல்லியாக வேண்டும். இந்த நொடி என் கையிருப்பு பூஜ்யம். இந்த வாடிக்கையாளர் ஐந்தோ பத்தோ அன்பளிப்பாகக் கொடுத்தால் ஒரு பியர் குடிக்கலாம். இன்று நான் குடித்தே ஆக வேண்டும்.

*

அட..என்ன இப்படி முட்டாள்தனமாக வருகிறான்.. ஏய்… பார்த்து.. பார்த்து…. அடப்பாவி…. என்னால் முடிந்த அளவு இடப்புறமாக வளைத்து ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினேன். க்ரீச் என்று ஒரு சத்தம். படபடத்துப் போய் சீட் பெல்ட்டைக் கழற்றாமல் இறங்க முயற்சித்து தலையில் இடித்துக் கொண்டேன். இறங்கிப் போய் பார்ப்பதற்குள் இடித்தவன் நிற்காமல் பறந்துவிட்டான். வண்டியின் பின்புற பம்பரும் பின்புற விளக்கில் ஒன்றும் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தன. எரிச்சலில் கார் டயரில் ஓங்கி மிதித்து என் தலையெழுத்தை நொந்துகொண்டேன். அலுவலக நண்பன் ஒன்றும் நடக்காதது போல இறங்கி வந்து பம்பரைப் பார்த்ததும் எனைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“டேய்..என்ன இது, பிளந்து வைத்திருக்கிறாய்? ஏற்கெனவே உன்மேல் கடுப்பில் இருக்கிறார்கள்… இந்த நிலைமையில் இது வேறா? நீ தொட்ட எல்லாமே பொன்னாகிவிடும் போலிருக்கிறதே?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். முகத்தை திருப்பிக் கொண்டு சட்டைப்பையிலிருந்த சிகரெட் பெட்டியினை எடுத்துத் திறந்தேன். என்ன ஞாபகத்தில் காலிப்பெட்டியினை வைத்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேனோ! எரிச்சலில் அவனை முறைத்துப் பார்த்து, “சிகரெட் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அவன் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டினான். அதை வாங்கிப் பற்ற வைத்தபோது ஒரு கை நீண்டு வந்து அதைப் பிடுங்கியது.

“எவன்டா அவன்…” என்று கோவத்தில் நிமிர்ந்து பார்க்க, என் ஜமைக்கா நண்பன் தன் கௌபாய் தொப்பியைத் தூக்கி சிரித்துக்கொண்டே வணக்கம் சொன்னான்.

“ஹேய் மை ப்ரோ…. நீ என்ன அந்த மாதிரி சிகரெட்டெல்லாம் புகைக்கிறாய்? இதோ, இதை புகைத்துப் பார்…” என்று ஒரு கருப்பு நிற சிகரெட்டை நீட்டினான். நல்ல புதினா மணம்.

அதை வாங்கிப் பற்ற வைத்து, “பார்த்தாயா பாபா, நமக்கென்று வந்து இப்பிடி நடக்கிறது…” என்று சலித்துக்கொண்டேன்.

“அட.. என்ன ப்ரோ, இதுவெல்லாம் ஒரு விசயமா? இதற்கே அசந்துவிட்டால் எப்பிடி? ஒரே நிமிடம்…” என்று சொல்லித் தன் காரை நோக்கிச் சென்றான்.

தன் காரிலிருந்து ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்தான். ஒரு சிறிய பட்டறையே வைத்திருப்பான் போல. அடுத்த அரைமணி நேரத்தில் வண்டி இடித்த தடமே தெரியாமல் எல்லாவற்றையும் பொருத்தி விட்டான்.

“சரி, சரி… பில்லை யார் பெயரில் போட வேண்டும்? உன் பெயரிலா, இல்லை உன் முதலாளி அந்த ஆஸ்ஹோல் பெயரிலா?”

“யார் மேல் போட்டாலும் நான்தான் செலுத்த வேண்டும்..”

“ரிலாக்ஸ் மை ப்ரோ… இரண்டு ட்ராகன் ஸ்டவுட் போட்டால் சரி ஆகிவிடும் ப்ரோ.. எப்படி?”

“மிக்க நன்றி பாபா.. யு மேட் மை டே… ஏற்கெனவே பயங்கர உளைச்சலோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன்… Good fren betta dan packet money.”

“ஊஹூ.. அருமை ப்ரோ… பாட்வா மொழியெல்லாம் படித்து விட்டாயா? அப்படியென்றால் இனி ஜமைக்கன் பெண்களெல்லாம் உன் மடியில் தான், போ!”

அலுவலக நண்பனிடம் காரைக் கொடுத்து அந்த வாடிக்கையாளர் இடத்திற்கு அனுப்பிவிட்டு பக்கத்திலிருந்த கடற்கரைச் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.

“ஆமாம், மேரேஜ் சர்டிஃபிகேட் விசயம் என்னவாயிற்று? சிக்கலென்று சொன்னாயே?”

“ஒன்றும் புரியவில்லை பாபா… சட்டென்று ஒரு முடிவு எடுக்க முடியவில்லை… இந்தியாவிற்குப் போனால் எல்லாவற்றையும் மறுபடியும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… அம்மாவிற்கு ட்ரீட்மென்ட்டிற்கே ஒரு தொகை ஆகிறது… வேறு யாரையும் நம்பி எதுவும் செய்ய முடியாது… இங்கேயே இருக்கலாமென்றால் மூன்று மாதங்கள் ஓசியில் வேலை செய்ய வேண்டும்… மண்டை காய்கிறது..”

“ம்ம்… நன்றாக யோசித்து முடிவு செய்… இப்போதைக்கு கொஞ்சம் பொறுத்துக்கொண்டு வேலையைப் பார்த்தால், ஒன்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்து விட்டால் சம்பளம் பிரச்சினையில்லை… கொஞ்சம் ஹைக் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.”

“ம்ம்.. பார்ப்போம்… விதி விட்ட வழி.. சரி.. நீ என்ன இந்தப் பக்கம்?”

“நமக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான் ப்ரோ… இன்று இரவிற்குள் ஆயிரம் டாலர் ரெடி பண்ண வேண்டும்… மனைவிக்கு பெயின் வந்து கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்… முதலில் சிசேரியன் செய்ததால் மோஸ்ட்லி இந்த முறையும் ஆப்பரேட்தான் செய்வார்கள்… அவளும் அவளுடைய அம்மாவும் அங்கே தனியாக என்னதான் செய்வார்கள்? நாம் ஏதோ பெரிய இடத்தில் வேலை பார்க்கிறோமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்…”

“ஓ… டெர்ரிபிள் மேன்… ஆமாம், பணத்திற்கு என்ன செய்வாய்?”

“அதுதான் ஒரு ஐடியாவோடு வந்துகொண்டிருந்தேன்… ரிஸ்க் தான்.. பட், வேறு வழியில்லை… இங்கே ஒரு கேசினோ க்ளப் இருக்கிறது.. ஒன்றிரண்டு முறை போயிருக்கிறேன்.. ஒரு முன்னூறு டாலர் வரை வென்றிருக்கிறேன்… இன்றைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏதாவது தேறும்… பார்க்கலாம்…”

“என்ன பாபா இப்படிச் சொல்கிறாய்? கேசினோவெல்லாம் மிகுந்த ரிஸ்க், இல்லையா?”

“ம்ம்… யெஸ்.. பட், நோ அதர் கோ…”

அதற்குள் ஆளுக்கு இரண்டு சிகரெட்டுகள் முடிந்து விட்டிருந்தன. சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். சின்ட் மார்ட்டின் தீவின் மாலைநேரக் கடற்கரை மிக அழகானது. கலகலவெனக் குடும்பங்கள் விளையாடி மகிழ்வதைப் பார்த்திருந்தாலே மனது இலகுவாகி விடும். எல்லாம் சரியாக அமைந்தால் இன்னும் ஒரு வருடத்தில் என் குடும்பமும் இதே கடற்கரையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும்.

“சரி.. நீயும் வா.. கேசினோ எப்படி இருக்கிறதென்று வந்து பார்..”

“பாபா.. சொன்னால் நம்ப மாட்டாய்.. என் கையில் மொத்தமே பத்து டாலர் தான் இருக்கிறது…”

“மை ப்ரோ.. பத்து டாலர் எவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மென்ட் தெரியுமா? நீ வா, நான் சொல்கிறேன் என்ன செய்யலாமென்று…”

*

கடற்கரைச் சாலையிலிருந்து விலகிச்செல்லும் சாலையில் பத்து நிமிட நடைக்குப் பிறகு ஒரு திருவிழா போலக் காட்சியளித்த அந்த பிரம்மாண்ட மைதானத்திற்குள் நுழைந்தோம். ஜோடி ஜோடியாக கையில் பியர் டின், கஞ்சா சகிதமாக ஏராளமான இளசுகள். சிலர் கிடைத்த இடத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சில பதின்பருவ இளைஞர்கள் தங்களது சூப்பர் பைக்குகளில் சாகசங்கள் செய்து கொண்டிருக்க, அவர்களது தோழிகள் தங்கள் அலைபேசிகளில் படம்பிடித்தனர். இடதுபுறம் மிக உயரமான ஒரு ராட்டினம் அலறல்களுக்கிடையே வேகம் கூட்டிக் கொண்டிருந்தது. நம் ஊர்த் திருவிழா நாட்கள் எப்படியிருக்கும்? அந்த மைனர்த்தனமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?

கேசினோ வாசலில் ஒரு மிகப்பெரிய ‘ரௌலட்’ விளையாட்டுச் சக்கரம் வண்ண விளக்குகளுடன் சுற்றிக் கொண்டிருந்தது. வாசலின் இருபுறங்களிலும் பலவிதமான போதைப்பொருட்களுக்கான சிறிய கடைகள், துரித உணவுக்கடைகள், உட்கார்ந்து அரட்டையடிக்க ஏதுவாக மேசைகள், நாற்காலிகள்… கூடவே ஆடலும் பாடலும்.. கேசினோவிற்கு உள்ளே செல்ல முடியாதவர்களும் சென்று முடித்து வெறுத்தோ மகிழ்ந்தோ வந்தவர்களும் என ஒரு கலவையான கூட்டம்.
நுழைவுக்கட்டணம் செலுத்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றான். வாசலில் எங்கள் உடல் முழுதும் தடவிப் பார்த்து சோதித்தபின், எங்கள் மணிக்கட்டுகளில் ஒரு காகிதப் பட்டையைக் கட்டி அனுப்பினார்கள்.

ஓரமாக இருந்த ஒரு மேசையில் உட்கார்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்தேன். பணியாள் ஒருவன் வந்து எங்கள் மேசையில் இரண்டு கோப்பை பியர் வைத்துவிட்டு, சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்டான். கேசினோவில் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாகக் குடிக்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது, இல்லையா?

முதல் சுற்று குடித்து முடித்தவுடன், பக்கத்திலிருந்த ‘சிஸ்ஸிலிங்’ என்ற விளையாட்டிற்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனே பத்து டாலர்கள் பந்தயம் வைத்து விளையாடினான். திரையில் ஐந்து கட்டங்களிலாக பல்வேறு பழங்களின் படங்களும் நட்சத்திரங்களும் எண்களும் ஓடிக்கொண்டிருந்தன. சற்று ஓடி நிற்கும் கட்டங்களில் ஒரே மாதிரியாகப் பொருந்தி வரும் படங்களைப் பொருத்து நமக்கு வெற்றி கிடைக்கும். முதல் ஆட்டத்திலேயே நூறு டாலர்கள் வென்று விட்டான் நண்பன். அடுத்து என்னை விளையாடச் சொன்னான். நான் வேண்டாமென மறுத்தும் எனை வலியுறுத்தி விளையாட வைத்தான். கையிலிருந்த பத்து டாலரை வைத்து ஆரம்பித்தேன். ஊரில் ஒடங்காட்டில் விளையாடிய ஆடுபுலி ஆட்டமும், ரம்மியும் கழுதையும், அடிதடிகளும் கண்முன் வந்து சென்றன. திரையில் படங்கள் சுற்றிச்செல்ல என் இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. வென்று விடுவேன் என ஒரு குரல் உள்ளிருந்து உறுதியாகச் சொல்லியது. திரையில் வந்த முடிவைப் பார்த்து சத்தமாகக் கத்தி நண்பனைக் கட்டிப் பிடித்துவிட்டேன். முதல் ஆட்டத்திலேயே நூறு டாலர்கள்.

அடுத்த கோப்பை பியர் மனதைக் கொஞ்சம் இலகுவாக்கியது. ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்து மேசையில் ஒரு ரௌலட் விளையாட்டு வெகு மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. சற்றும் யோசனையின்றி ஆயிரம் யூரோக்களை எடுத்து ஒரே சுற்றில் பந்தயம் கட்டின ஒருவனைப் பார்த்து எல்லோரும் மலைத்து நிற்க அவன் சிரித்தவாறு தன் காதலியின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அவள் அவனது தோளில் கைவைத்து தட்டிக்கொடுத்தாள். நான் என் சட்டைப் பையிலிருந்த நூறு டாலருக்கான கேசினோ நாணயங்களை ஒருமுறை தொட்டுப் பார்த்தேன்.

நண்பன் மறுபடியும் ‘சிஸ்ஸிலிங்’ விளையாடினான். முடிவைப் பார்த்ததும் பெருமையாக என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். வெறும் பத்து டாலர் வைத்து முன்னூறு டாலர் சம்பாதித்து விட்டான். எனக்குள்ளும் ஒரு மெல்லிய ஆசை வந்து தொற்றிக்கொண்டது. இருந்தாலும், கிடைத்த நூறு டாலர்களை இழக்கவும் மனதில்லை. ஆனால், முடிவெடுப்பதற்கு நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. முடிவெடுப்பதில் தானே முதல் பெரும் சூது ஆரம்பிக்கிறது? அடுத்த இருபது நிமிடங்களில் பத்து பத்து டாலர்களாக வைத்து இருநூறு டாலர்கள் சம்பாதித்தேன். ஏதோ சாதித்து விட்ட மாதிரி ஒரு கர்வம் வந்து ஒட்டிக்கொள்ள, மூன்றாவது கோப்பை பியர் கொண்டு வந்த பையனுக்கு ஒரு பத்து டாலரைக் கொடுத்துச் சிரித்தேன்.

அடுத்திருந்த ‘ப்ளாக் ஜேக்’ என்கிற விளையாட்டு மேசைக்கு அழைத்துச் சென்றான் நண்பன். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருகின்ற சீட்டு விளையாட்டு தான். ஐந்து டாலர்களில் ஆரம்பிக்கும் விளையாட்டு. இரண்டு சீட்டுகளின் கூட்டுத் தொகை உங்களை எதிர்த்து விளையாடுபவரை விட அதிகமா குறைவா என்பதைப் பொருத்த அதிர்ஷ்ட விளையாட்டு. விளையாட்டை நடத்தியவன் அடிக்கடி பதினேழு என்றும் இருபத்தி ஒன்று என்றும் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. நண்பன் பெரிய விற்பன்னன் போல விளையாடிக் கொண்டிருந்தான். முதலில் அவன் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசினாலும் தொடர்ந்து விளையாடிய சுற்றுகளில் தோல்வியடைய ஆரம்பித்தான். இடையிடையே சிகரெட்டுகளாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தான். சுற்றி இருந்த நண்பர்கள் இருபுறமும் நின்று உற்சாகப்படுத்த, விளையாட்டு தீவிரமானது. எனக்குச் சோர்வாகத் தோன்ற மெல்ல அடுத்தடுத்த மேசைகளுக்குச் சென்று வேடிக்கை பார்த்தேன். பல மேசைகளில் பெண்கள் ஆண்களை அசாத்தியமாகத் தோற்கடித்தனர். சில பெண்கள் தலையில் கைவைத்து சோர்ந்து உட்கார்ந்திருந்தனர். ஒரு மேசையில் திடீரென ஏதோ அடிதடி ஆகிவிட கனத்த உடலுடையை கருப்புச் சீருடையணிந்த பாதுகாவலர்கள் வந்து சச்சரவிட்டவர்களை இழுத்துச் சென்று வெளியேற்றினர்.

நான் விளையாடிய ‘சிஸ்ஸிலிங்’ மேசையில் இப்போது ஓர் இளம்பெண் விளையாடிக் கொண்டிருந்தாள். அருகே சென்று அவளுக்குத் தெரியாமல் உற்றுப் பார்த்தேன். மூன்றே சுற்றுகளில் ஐநூறு டாலர்கள் வென்று முகம் முழுவதும் புன்னகையோடு அடுத்த மேசைக்குச் சென்றாள். ஒருநொடி தோன்றிய வீறாப்பில் நான் உட்கார்ந்து மறுபடியும் விளையாட ஆரம்பித்தேன். அம்மாவின் முகமும், மனைவியின் காத்திருப்பும் வேறு மனதில் வந்துபோக இன்னும் தீவிரமாக விளையாடினேன். எத்தனைச் சுற்றுகள் விளையாடினேன், எத்தனை கோப்பை பியர் குடித்தேன் என்று தெரியவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் என் கையில் பத்து டாலருக்கான ஓர் ஒற்றை நாணயம் மட்டுமே இருந்தது. அந்த விளையாட்டுத் திரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளுக்குள் இருந்து ‘அந்தக் கடைசிப் பத்து டாலரையும் வைத்துவிடு, இந்தச் சுற்றில் நூறு டாலர் அடித்து விடுவாய் பார்’ என்று ஒரு குரல்.

அப்போது ஒரு மெல்லிய வெண்மையான கை என் தோளின் மீது படர்ந்து, “உங்கள் தனிமையைப் போக்க நான் உதவலாமா?” என்று ஸ்பேனிஷ் மொழியில் கேட்டது. அவள் ஓர் அப்சரஸ். தங்கநிறச் சுருள் முடியும், மெல்லிய சிவப்பு உதட்டுச் சாயமும், பாதி திறந்த திரண்ட மார்பும் ஒரு நொடி என்னை உலுக்கி விட்டன. அருகே வந்து உட்கார்ந்து கையை நீட்டித் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

“ஒருவேளை இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையோ? வருத்தத்தில் இருக்கிறீர்கள் போல?”

நான் ஆமெனத் தலையாட்டினேன்.

என் கையைத் தூக்கி மெதுவாக முத்தமிட்டவாறு, “அதனாலென்ன, இன்று உங்களுக்கு வேறு ஒரு ஜாக்பாட் கிடைக்கப் போகிறதே!” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

இந்தத் தீவில் வந்து இறங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூட எந்தவொரு பெண்ணும் என்னை முத்தமிட நான் அனுமதித்ததில்லை, நானும் எந்தவொரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. நண்பன் கூட அடிக்கடி ‘வோர் ஹவுஸிற்கு’ அழைப்பான். அவனுடன் சென்று வேடிக்கை பார்ப்பதுடன் சரி. ஸ்பேனிஷ் பெண்கள் என்றால் ஒரு மணிநேரத்திற்கு நாற்பது டாலர், அதுபோக ஒரு டக்கீலா வாங்கிக் கொடுக்க ஒரு ஏழு டாலர், உணவிற்கும் அறைக்குமாக ஒரு இருபது டாலர், மேலும் கூடுதல் அன்பளிப்பாக ஒரு மூன்று டாலர் என மொத்தம் எழுபது டாலர் இருந்தால் ஒரு மணிநேர உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விடலாம்.

“தவறாக எடுத்துக் கொள்ளாதே.. எனக்கு விருப்பமில்லை.. அது போக, என்னிடம் வெறும் பத்து டாலர் மட்டுமே உள்ளது..” என்றேன்.
சற்று யோசித்தவள் அவளது முகத்தில் முன் விழுந்த முடியைத் தன் விரலில் சுற்றியவாறே, “நோ ப்ராப்ளம்… யு நோ வாட், என்னுடன் வாருங்கள்.. நான் உங்களுடன் இந்த இரவைக் கழிக்க விரும்புகிறேன்.. பணம் எனக்கு முக்கியமில்லை..” என்றாள்.

என்னதான் நான் வேறு எந்தப் பெண்ணையும் முத்தமிடவில்லை என்றாலும், நான் ஒன்றும் யோக்கியனில்லை. என் அலுவலகத்தில் சேவைப் பிரிவில் இருக்கும் ஒரு பெண்ணிடம் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு தான். காதல், காமப்பேச்சுகள் எல்லாமும் உண்டுதான். ஆனால், அதுவும் பேச்சோடு சரி.

இந்த தேவதையின் அழைப்பை மறுக்க உள்மனம் ஒத்துக் கொள்ளவில்லை. நான் எழுந்திருக்க எத்தனித்த கணம் என் அருமை ஜமைக்க நண்பன் பின்னிருந்து எங்கள் இருவரையும் சேர்த்து அணைத்து, “சியர்ஸ் நண்பர்களே.. வாருங்கள்.. நம் தோல்வியைக் கொண்டாடுவோம்..” என்று கனைத்தான்.

அந்தப் பெண் திடுக்கிட்டு அவனது கையைத் தட்டிவிட்டு எங்களிடமிருந்து விலகிச்சென்றாள். போகும்போது என்னைத் திரும்பித் திரும்பி பார்த்தாள். அவளது முகம் சோர்ந்து கவலையுற்றிருந்தது.

“சாரி ப்ரோ.. நான் வந்து கெடுத்துவிட்டேனோ?”
நான் இல்லையெனத் தலையாட்ட, “போயிற்று.. இருந்த கொஞ்சமும் போயிற்று.. சரி உன்னிடம் எவ்வளவு மிஞ்சியது?” என்று கேட்டான். அவனது முகத்தில் தோல்வி குறித்த வருத்தம் துளியும் இல்லை.

நான் என் கையிலிருந்த ஒற்றை நாணயத்தைக் காட்டினேன். என் தோளில் தட்டிக்கொடுத்து, “சரி விடு.. இன்று நம் காட்டில் மழை இல்லை போலும்.. வா, கிளம்பலாம்.. .ஏதாவது சாப்பிடலாம்..” என்றான். அந்த ஆயிரம் யூரோ நபர் இன்னும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நான்கு பெண்களும் சில ஆண்களும் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.

கேசினோவின் வெளியேயிருந்த நடைபாதையின் ஓரத்தில் ஒரு கல்மேசையின் மீது உட்கார்ந்தேன். போதையின் உச்சத்தில் ஒரு வெறுமையுணர்வு. கிடைத்த தோல்வியும் கையிலிருந்த பத்து டாலரும், நாளைய என் வாழ்க்கையும் என மாறி மாறி எண்ணங்கள். நண்பன் ஏதாவது சாப்பிட வாங்கிவரச் சென்றிருந்தான். பக்கத்து மேசையில் தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்த ஒரு பெண் உருவம் என்னை ஏதோ செய்தது. அவள் விரக்தியில் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள். இடையிடையே சத்தமாக அழுதாள். கையிலிருந்த ஒரு கோப்பை பியரை ஒரே மூச்சில் குடித்துத் தூக்கி எறிந்தாள். மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு புலம்ப ஆரம்பித்தாள்.

அப்போது என்னருகே வந்து உட்கார்ந்தது இன்னொரு பெண் உருவம். லாரா! என் பாட்டு தேவதை. என்னருமைத் தோழி. இங்கே இன்னொரு இரவு விடுதியில் பாடகி. அவளைப் பார்த்ததும் சட்டென எழுந்து அவளைக் கட்டிக் கொண்டேன்.

“கேசினோவில் உனக்கென்ன டா வேலை, என்னருமைத் தம்பி?” என்று என் தலையில் அடித்தாள்.

“அது..லாரா… சும்மா ஒரு ஃபிரெண்டுடன் வந்தேன்… நீயும் இங்கே ஆடுவதுண்டா?”

“ஒரு காலத்தில்… என் அளவிற்கு இங்கே வென்றவனும் கிடையாது, தோற்றவனும் கிடையாது…”

“ஓ… நானும் இன்று முயற்சி செய்தேன்.. ஜீரோ லாஸ்.. ஜீரோ கெயின்… உனக்குத்தான் என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றித் தெரியுமே!”

“அடப் பாவி… ஒழுங்காக உன் வேலையைப் பார்ப்பாயா? கேசினோவிற்கல்லவா வந்திருக்கிறார் முதலாளி!”

நண்பன் வந்து இரண்டு பெரிய பர்கர்களை மேசையில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன். மூவரும் பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். திடீரென, பக்கத்து மேசைப்பெண் கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள். அப்படியே சாய்ந்து தரையில் சுருண்டு படுத்தாள்.

“அது சரி… நீ ஏன் இங்கே விளையாடுவதை நிறுத்திவிட்டாய் லாரா?”

“ஓ… நல்ல கேள்வி… ஏனென்றால், நான் புத்திசாலி ஆகிவிட்டேன்… புத்தியுள்ளவன் சூதாட மாட்டான்…” என்று சொல்லி கேசினோவின் இரகசியங்களை எங்களுக்கு எடுத்துச் சொன்னாள். கேசினோக்களின் இரகசியமே ‘Bet more, gain more’ என்கிற மனநிலைக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தான். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரிலிருந்து இந்த இயந்திரங்களைக் கொண்டு வந்து பொருத்துகிறார்கள். மிகத்தந்திரமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள். வெற்றியின் சுவையைக் காட்டி உள்ளிழுத்து பன்மடங்கு வியாபாரம் செய்யும் புத்திசாலிக் கருவிகள். இவற்றின் செயல் அடிப்படை கேயாஸ் தியரி போன்ற சில தியரிகள் தானாம்.

“ஒருமுறை, அப்படி லாஸ் ஏஞ்ஜெல்ஸிலிருந்து வந்திருந்த ஒரு நிபுணனிடம் கேசினோவில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டேன்.. அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

நானும் நண்பனும் ஆர்வமாக அவளை உற்றுப் பார்த்தோம்.
புன்னகையோடு, “விளையாடாமல் இரு என்றான்” என்றாள்.

*

கைகளை தலைக்கு அடைகொடுத்து அந்தப் புல்வெளியில் நான் படுத்துக் கிடந்தேன். நண்பன் தலையைக் கவிழ்த்து மெளனமாக உட்கார்ந்திருந்தான். கண்களில் கருவானின் மின்னும் வெள்ளிகள் நிறைய, ஓயாத கடலலைகளின் இரைச்சல் எனக்கு மிக அருகெனக் கேட்க, எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வெற்று நிலத்தில் அசைவின்றி நின்று கொண்டிருந்தேன் நான். அந்த மௌனத்திலிருந்து பிரவாகம் எடுத்தது போல ஓர் இசை ஊற்றாகக் கிளம்பியது. நான் இன்னும் அசைவின்றியே நின்று கொண்டிருந்தேன். தொலைதூரத்தில் லாராவின் குரலில் ‘besame besame mucho’ என்கிற ஸ்பேனிஷ் பாடல்.. அவளது குரலில் தோய்ந்திருக்கும் ஒரு சோகம் கலந்த இனிமை… என் நினைவுகள் எல்லாம் அழிந்து மறதியின் ஆழடுக்குகளில் மூழ்கிச் செல்லச்செல்ல அவளோடு சேர்ந்து நானும் அந்தப் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது லாரா என் மார்பில் தலை சாய்த்து உறங்கிக் கிடந்தாள். நண்பன் அப்படியே சிலையாக உட்கார்ந்திருந்தான். இன்று கடந்து போன கணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக மனதில் வந்துபோயின.

நள்ளிரவில் லாரா கட்டியணைத்து விடைபெற்றாள். நானும் நண்பனும் கிளம்புவதற்காக எழுந்தோம்.

“ஒரு நிமிடம்…” என்று சொல்லிவிட்டுப் பக்கத்து மேசையின் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே குனிந்து தன் சட்டைப்பையிலிருந்த கடைசிப் பத்து டாலரை அவளது கைகளில் சொருகிவிட்டு வந்தான் என்னருமை ஜமைக்க நண்பன்.

***

சுஷில் குமார்
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular