கு.கு.விக்டர் பிரின்ஸ்
இரண்டாயிரம் பாஸ்டர்களுக்குச் சற்றே குறைவான எண்ணிக்கையில் அகில இந்திய கோல்கோதா பெந்தேகோஸ்தே சபைகளின் தலைவருக்கான தேர்தல் சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து ஆயத்த நிலையுடன் தயாராக இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மகாநாடு என்பதால் ஏழு நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று தேர்தலுக்கு நாள் குறித்திருந்தனர். ஜெபங்களும் பாடல்களும் சிறந்த அசைவம் முதல் இனிப்பு வகையென களை கட்டியிருந்தது. மூன்று நாட்களாக கேகே நகர் வெள்ளை பேண்ட் சட்டைகளுடுத்திய மீசை மழித்த நபர்களால் வேயப்பட்டிருந்தது. இருபது பாஸ்டர்களால் முன்மொழிபவரே தலைவர் தேர்வுக்குப் போட்டிபோட முடியும். இருமுறை போட்டியின்றியும் கடந்த தடவை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ரெவரெண்ட் டேனியேல் புஷ்ப ராஜனுக்கான சிம்மாசன தயாரெடுப்போடு தேர்தல் துவங்கியது. எதிர்முனையில் கேரளாவின் கோட்டயம் பகுதி கோல்கோதா பெந்தேகோஸ்தே சபையின் போதகர் தங்கச்சன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சபைகளைக் கொண்ட அந்த பெந்தேகோஸ்தே பிரிவின் ஏகபோக சக்கரவர்த்தியாயிருந்த புஷ்பராஜன் ஆயிரத்தி ஐநூறு வாக்குகள் பெற்று இருக்கைகள் தெறிக்குமளவுக்கான ஜெபங்களோடு கிரீடமும் செங்கோலும் ஏந்தத் தயாரானர். கரவொலிகளோடு தேவனின் தேர்வாக அமைந்த அதனைப் போற்றும் வகையில் பாடல்கள் பாடுகையில் மார்தாண்டத்தைச் சார்ந்த ஒரு பாஸ்டர் ஒரு வெள்ளைத்தாளுடன் பீடத்தில் ஏறி மைக்கைப் பிடித்தார்.
“தேவனுடைய பிரகாரத்தில் பயபக்தியுடன் ஏறவேண்டும்…. நான் ஆத்ம சுத்தியுடனும் ஆத்ம உந்துதலோடு இங்கு வந்திருக்கிறேன். அண்ட சராசரத்தைப் படைத்த தேவனின் நாமம் மகிமைப்படுவதாக… சங்கீதம் ஒன்று… துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளின் வழியில் நில்லாமலும் பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமலும்…” அவரைத் தொடர விடாமல் ஒருசாரர் இருக்கையில் எழுந்து நின்று கத்தினர்.
“லெகியோனே கர்த்தருடைய பீடத்திலிருந்து கீழிறிங்கு…”
“ஏன் இறங்கவேண்டும்..!! பேசட்டும்…” என இரண்டாக உடைந்து தொங்கியது அந்த மாநாடு. எண்பது வயதைக் கடந்த மூத்தப் போதகர் அனைவரையும் அமைதிப்படுத்தி அவரைப் பேச வைத்தார்.
“எனது பத்து தீர்மானங்களில் ஒன்றை மட்டும் வாசிக்கிறேன், அதனை உங்கள் முன்னால் வைக்கிறேன்…” என்றவருக்கு ஆதரவாக தங்கச்சன் அணியினர் குரலெழுப்பினர். அவர் ஒரு நாளிதழைத் தூக்கிக் காட்டினார். கட்டுக்கட்டாக வைத்திருந்த நாளிதழ்களைத் தங்கச்சன் ஆதரவு பாஸ்டர்கள் கூட்டத்தில் விளம்பினர். பிறமொழியினர் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கில மொழியாக்கக் கைப்பிரதியும் இணைக்கப்பட்டிருந்தது.
‘கார் திருட்டில் பாஸ்டர் மகன் கைது..’ என்ற தலைப்பில் ‘நாகர்கோவில் கோல்கோதா சபையின் பாஸ்டரின் ஏழாவது மகன் இருபத்தி ஏழு வயதுடைய ஜோயலைப் போலிஸார் கைது செய்திருக்கின்றனர். இவர் மேல் ஐந்துக்கும் மேலான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைப்பு’ செய்தி விரிந்திருந்தது. புஷ்பராஜன் பாஸ்டரின் கடைசி மகன் தேவனுடைய வழியிலிருந்து விலகித் துன்மார்க்கனாகத் திரிகிறான் என்ற தகவல் பரவலாகப் பாஸ்டர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், குமரி மாவட்ட பாஸ்டர்கள் ஜோயல் குறித்து அனைத்தும் தெரிந்து வைத்திருந்தனர். ஞாயிறு ஆராதனை நடக்கையிலே போலீஸ் சபையினுள் நுழைந்து மகனைக் கைது செய்ததை அனைவருக்குமான புதுத் தகவலாக அவரைப் பிடிக்காத குமரி போதகர்கள் சுடசுடத் தகவலாக கூட்டத்தில் பரிமாறினர்.
விபச்சாரம் செய்த ஸ்திரியை பெருங்கூட்டம் கல்லெறிய நிற்க்கையில் உங்களில் பாவம் செய்தவர்கள் கல்லெறியக் கடவன் என்ற இயேசுவின் நன்னெறி வார்த்தைகளைச் சுமந்து புஷ்பராஜனைக் காப்பாற்ற எவருமில்லை. ஜோயல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த போதகர் வாசிக்கத் துவங்கினார். எதிர்ப்புக் குரலுயர்த்தியவர்கள் சிறுபான்மையாயினர்.
“சதா நேரம் மதுபோதையில் கிடந்து பர ஸ்திரிகளின் மடிகளை மெத்தையாக்கி வீடு வரும் மகனின் திருட்டுப் பணத்தில் ரெவரெண்ட் டேனியேல் புஷ்பராஜனுக்கும் பங்கு கிடைக்கிறது… ஆகவே இந்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்…” அந்த பாஸ்டர் படித்து முடிக்கையில் மொத்த அரங்கமும் உறைந்து போயிற்று. முன்வரிசையில் அமர்ந்திருந்த புஷ்பராஜனின் இரு பாஸ்டர் மகன்கள் போடியம் ஏறி அந்தப் பாஸ்டரைத் தாக்கினர்.
ஆறு பிள்ளைகளோடு போதும் என்று வயிறைப் பிடித்த கெசியாளுக்கு பைபிளின் பழைய ஏற்பாடு பாடம் நடத்தி துயருற்றிருந்த அந்த கர்ப்பப் பையில் தாங்கா பாரம் சுமக்க வைத்தார் புஷ்பராஜன். கருத்தடைக்கு எதிரான கடுமையான தத்துவ நிலைப்பாடு கொண்டிருந்த பெந்தேகோஸ்தே சமூகமே சமீபகாலமாக மூன்று குழந்தைகளோடு நின்று விடுகிறதே என்ற அவளின் கெஞ்சல்களுக்கு ‘கர்த்தர் தாரத வேண்டாம்னு சொல்லாத’ என்றாயிருந்தது அவரது பதில். எப்போதும் இல்லாத ரத்தப்போக்கு, தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து நேராய் கல்லறைக்கு என்ற ஊரார் பேச்சைப் பொய்பித்து காலை முதலில் காட்டி கர்ப்பத்திலும் மரண சாகசம் காட்டிப் பிறந்தவன் ஜோயல். எப்படியாவது ஒரு முண்டம் வெளியே வந்து மனைவி பிழைத்தால் போதும் என்றிருந்தவருக்கு அவனின் பிறப்பிலிருந்தே கசப்பான பானம் நிரந்தரமானது. பைபிளைத் தூக்கியெறிந்தான் என மூன்று வயதில் பிரம்பால் அடி வாங்கியதிலிருந்து பதினேழு வயது வரைக்கும் தினம் அடி வாங்காத நாளில்லை. இரவு குடும்ப ஜெபத்தில் இரண்டு அக்காள்கள் நான்கு அண்ணன்களும் பெற்றோருடன் ஆர்ப்பரித்திருக்கையில் இவன் உறங்கி விழுவான். தங்கம் பூசிய பன்றியாக அந்த சர்ச்சில் உலா வந்தான்.
“பாஸ்டருக்க கடைசி பையன் அவருக்க பேர கெடுப்பான்…”
சபையிலும் சுற்று வட்டாரத்திலும் பேச்சானது. தந்தை சகோதரர்களின் கண்ணயரும் நேரத்தில் சர்ச்சுக்கு விடை கொடுத்து நண்பர்களுடன் ஐக்கியமாவான். நீண்ட நேர ஜெபங்களும் பள்ளி விடுமுறையில் நடக்கும் சிறப்புக் கூட்டங்களும் அவனுக்கான வதை முகாமாகக் கருதினான். நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறான், தியேட்டர் செல்கிறான் என்ற புகார்களோடு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை அடிக்க முடியாமல் கண்ணீரோடு நின்றார் புஷ்பராஜன்.
“மோனே நான் ஒரு பாஸ்டர்.. அதுவும் பெந்தேகோஸ்… சுற்றி இருக்கவங்க என்னையும் எனக்க குடும்பத்தையும் பைனாகுலர் வைச்சு பாப்பினும், ஒரு சின்ன கொறன்னாலும் அத பெருசா சொல்வாங்க… உன் நிமித்தம் ஒருத்தருகிட்ட எனக்கு சுவிசேசம் சொல்லமுடியல…’ மவன திருத்த முடியல.. வந்துட்டான்’ ன்னு எனக்க காதுகேக்க சொல்லினும்…” பதினான்கு வயதில் மூழ்கி ஞான ஸ்தானம் பெற்று பதினேழு வயதிற்குள் பைபிளை இரண்டு முறை முழுமையாகப் படித்த அவனுள் எந்த உபதேசமும் ஏறவில்லை. பல போதகர்களை வரவழைத்து அவனுக்காக சிறப்பு ஆராதனைகள் நடத்தியும், தீர்க்கதரிசிகளைக் கொண்டு ‘நீ திருந்தி கர்த்தருக்குள் வரவில்லை என்றால், வெகுவிரைவில் அகால மரணமடைவாய்…’ அச்சுறுத்தும் ஏற்பாட்டு வசனங்களைத் திவ்ய தரிசனமாய் சொல்ல வைத்தும் தங்க உடையைத் துறந்து ஓடவே அவன் யாசித்தான்.
அம்மாவும் இரு அக்காக்களில் ஒருத்தியான பிரீடாவும் அவனிடம் சிலவேளைகளில் அன்பொழிய காரியம் சாதிக்க முடிந்தது. அதை கெட்டியாகப் பிடித்து தனது மூத்த மகன்கள் பாதையில் அவனை பைபிள் காலேஜ் படிக்க சம்மதிக்க வைத்தார் புஷ்பராஜன். நண்பர்கள் வாசனையும் அவன் லயித்த லௌகீகத் தனங்களும் அந்த கல்லூரியைச் சுற்றிவந்து மாயக்கோலாக அவனை வெளியே இழுக்க வரிந்து கட்டியது. ராணுவக் கட்டுப்பாடுடன் அந்த மதில்களுக்குள் மந்திரித்து விட்டவனைப் போலக் கிடந்தான். மற்ற பிள்ளைகள் பைபிள் கல்லூரியில் படிக்கையில் வருடத்திற்கு ஒருமுறை சென்று பார்த்திருந்த பெற்றோர் இவனுக்காக வாரம் ஒருமுறை மதுரைக்கு காரில் பண்டம், பலகாரங்களுடன் சென்று வந்தனர். முத்தங்களினால் அவனது தலைமயிரைத்தான் கட்டிப்போட முடிந்தது. வால் போன்ற பின்னந்தலையின் கொத்து முடியில் வந்த மாற்றம் அவன் கால்களுக்கு வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் திருவனந்தபுரத்தில் திருடிய பைக்கின் துப்புத் துலங்கியிருந்தது. பாஸ்டரின் மகன் திருட்டு வழக்கில் பைபிள் கல்லூரியிலிருந்து கைது என்பதைப் புஷ்பராஜனால் ‘பொய்வழக்கு’ என சக போதகர்களுடன் வாதிட முடிந்தது. ஆனால் சிறைக்குச் சென்று வீட்டுக்கு வந்தவனை மறுபடியும் கல்லூரிக்கு அனுப்ப அவரால் முடியவில்லை. சபையையும் அது சார்ந்த அனைத்தையும் புறக்கணித்தவன் ஜன்னல் வழியாக புதுப்பாதையை உருவாக்கி சபைக் காம்பவுண்ட்டை தனக்கு அன்னியமாக்கினான்.
அருகாமை சபைகளும் பிற மதத்தவர்களும் ‘கள்ளனின் தந்தை பாஸ்டர்..’ எள்ளி நகையாடுகையில் தாயின் ஒற்றைப்பிடியில் அவன் அங்கு தங்கி வந்தான். ‘சாத்தானைத் துரத்திடுவோம்’ என புஷ்பராஜன் மைக்கில் போதனையிலும் மன்றாட்டு ஜெபத்திலும் வேண்டுகையில், மொத்த விசுவாசிகளும் மேல் அறையைப் பார்த்து நகைப்பார்கள். அவரும் சபை விசுவாசிகளின் அபிலாஷைக்காக ‘சபையில் ஆணியடித்து அமர்ந்திருக்கும் பிசாசைத் துரத்த ஜெபம் செய்வோம்’ எனச் சொல்லி வீட்டிற்கு வரும்போது மனைவியின் முனகல் சாதம் விளம்பலைச் சகிக்க வேண்டியிருந்தது. வட இந்தியாவில் மிஷினரியாக இருக்கும் அவனது இரு அண்ணன்கள் உட்பட மொத்த குடும்பமே அவனைத் துரத்தி சாத்தான் பிண்டம் வைக்கக் கொக்கரித்து நிற்கையில் பிரீடா மற்றும் கெசியாளின் அழுகையே அவனைக் காப்பாற்றியது. தாயின் பரிவும் சுவையும் நிறைந்த உணவு ஒன்றே அவனையும் கட்டிப் போட்டிருந்தது, பலமுறை வனவாசம் சென்றிருந்தும் அந்த அறையையும் அம்மாவையும் பலநாள் அவனால் பிரிந்திருக்க இயலவில்லை.
இன்னோவா காரின் முன்னிருக்கையில் பதவி இழந்த புஷ்பராஜன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இரு மகன்கள் வெள்ளைச் சட்டைகள் கசங்கிக் கிழிந்து அவமானமுடுத்தி காரின் பின் இருக்கையில் தாய்க்கும் சகோதரிகளுக்கும் போன் செய்து கோபத்தைச் சற்றேனும் இறக்கிவைக்கும் முயற்சியிலிருந்தனர். எழுபத்தியிரண்டு வயதான அவர் பதவியிலிருந்தே மரிக்க வேண்டும் என்பதே குடும்பத்தாரின் ஆவலாயிருந்தது. கார் சர்ச்சை வந்தடைவதற்கு முன்பாகவே ஜோயலின் அறைச் சுத்தமாக துடைத்தெடுத்து ஒரு திறந்த டிம்போ வாகனத்தில் வைக்கப்பட்டது. அவனது மூத்த சகோதரியும் அவளது பாஸ்டர் கணவரும் பணியாட்களை வைத்து பொருட்களை ஏற்றிக் காத்திருந்தனர். கெசியாளும் பிரீடாவும் அனைத்தும் கைவிட்ட கையறு நிலையில் அவனைக் கைவிட இயலாமல் தவித்தனர்.
“இனி இந்த வீட்ல அவன் இருந்தா என்ன கொலகாரனா ஜெயில்ல பாப்பீங்க…” காரிலிருந்து புஷ்பராஜன் இறங்க மறுக்க, தாயை நோக்கி ஆவேசமாக வந்தான் மூத்த மகன். இரண்டாவது மகனின் வார்த்தைகள் அந்த சர்ச் காம்பவுண்டில் அச்சிலேற்ற இயலாத வகையிலிருந்தது. சபை விசுவாசியான டிரைவர் கெஞ்சிக் கேட்டும் புஷ்பராஜன் இறங்கவில்லை.
“பதவி எனக்கு முக்கியமில்ல.. தேவனுடைய ராஜ்யத்தில பங்கு கெடைச்சா போதும்… ஆனா திருட்டில நான் பங்கு வாங்குறேன்னு நான் பாத்து வளத்தின ஒருத்தனே மொத்த கூட்டத்தில நின்னு சொல்லுறான்….” உடைந்த அவர் மனைவியைக் காட்டி, “இவ ஒருத்திக்காக நான் பொறுத்தேன் எல்லாத்தையும்… இனி அவன் இல்லன்னா நான் இந்த வீட்ல இருந்தா போதும்…” சொல்லி முடிக்கையில் அழுதார். அங்கு கூடியிருந்த சிறு எண்ணிக்கையிலான விசுவாசிகளும் அவரது குடும்பமும் அவரது அழுகையை முதல் முறையாகக் கண்டு சேர்ந்து அழுதது. நண்பனின் பைக்கில் வந்த ஜோயலுக்கு அந்த இரவின் காட்சிகள் புதுமையாயிருந்தது. டிம்போவின் மேல் எட்டிப்பார்த்து நின்ற அவனது பீரோ அவனுக்கு உணர்த்தியது.
“நான் பேசினா கொல தான் விழும்…” என்ற மூத்த மகனிடம் கெசியாள் குரலுயர்த்திப் சொன்னாள்.
“யாரும் பேசவேண்டாம்… நானே பேசுதேன்…. எனக்கு ஒரு சகாயம் பண்ண முடிஞ்சா, நீங்க எல்லாம் மாறி நிக்க முடியுமா?”
அந்தக் குரலும் புதுமையாயிருந்தது மக்களுக்கு. அனைவரும் சர்ச்சினுள் சென்றனர். அருகில் கதவு திறந்த நிலையில் நின்றிருந்த இனோவா காரில் அதே சிலை போல புஷ்பராஜன் அமர்ந்திருந்தார். “என்ன அம்மா?” என்ற ஜோயலிடம், “மக்ளே.. ஒரு நிமிசம் இங்கயே இரு.. நான் இப்பம் வாரேன்…” என்ற கெசியாள் அவளின் வயோதிகத்தால் பருத்த உடல் உருகித் தரையில் ஒட்டும் வல்லமையோடு வீட்டினுள் ஓடினாள். அவனது நண்பனும் நிறுத்திய அதே தொலைவில் பைக்கில் நின்றிருந்தான். திரும்பி வந்தவள் கையில் சிறு பொதியும் சில பணக்கட்டுகளும் இருந்தது.
“இனி நீ இங்க வரருது மக்ளே… உன்னால எனக்க செரசுக்க மேல பாரம்.. நீ வாங்கின பேர விட எனக்க மக்க கொலகாரன் பேர வாங்கினுவினுமோன்னு பேடியா இருக்கு… நான் கேக்காத கெட்ட வார்த்தய எனக்க பாஸ்டர் மோனுக்க வாயில கேட்டன் இன்னைக்கு…. ஒனக்கு வேண்டி நான் பிடிச்சு வைச்ச கதவெல்லாம் அடபட்டாச்சு, ஒனக்கு பிரிச்சு தர நமக்கு சொத்து ஒன்னும் இல்ல.. இதுல இருக்க ஒரு லட்சம் எனக்க சேமிப்பு…. போ எங்கேங்கிலும் போய் ஜீவி… ஒன்னு மட்டும் மறக்காத, நல்ல பிள்ளையா இரு.. தெய்வத்த இறுக பிடிச்சுக்கோ…” கண்ணீரோடு தொப்புள் கொடியை அறுத்துவிட்டுத் திரும்பியவள் அவன் மரத்து நிற்பதறியாமல் அவனைக் கட்டிப் பிடித்தாள்.
“மக்ளே, எனக்க நம்பருக்கு விளிக்காத, ஒனக்க கொரல் கேட்ட தொங்கியோண்டு நிக்க இந்த சீவன் அத்து விழும்… ஒனக்கு முடிஞ்சா ‘அம்மா’ன்னு எழுதி ஒரு மொட்ட லெட்டர் எழுது… நிக்காம போ மக்ளே, எனக்க கிறுதயம் பெடைக்குது…” அவள் வீட்டைப் பார்த்து ஓடினாள். அறுந்து ஓடும் தொப்புள் கொடி வலி இருதரப்புக்குமாக அவனது கையிலிருந்த பணக்கட்டுகள் சரிந்து கீழே விழ, பெரிய பொதி அவனுடன் கெட்டியாக ஒட்டியிருந்தது. இனோவா குலுங்க அவர் இறங்கினார்.
“இனி நீ கெட்டகுமாரனாவும் வரவேண்டாம்…” அழுத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
பைபிளில் இயேசு சொன்ன உவமைக் கதைகளில் முக்கியமான ‘கெட்டகுமாரன்’ கதையைப் பலமுறை தனது மகனுக்குச் சொல்லியிருந்தார் புஷ்பராஜன். அவன் புடமிடப்பட்டு திருந்தி வருவான் என்ற அவரது அங்கலாய்ப்புகளை அவன் பொருட்படுத்தவில்லை. அந்த உவமைக் கதையில் சொத்தில் தனக்கான பங்கைத் தகப்பனுடன் சண்டையிட்டுப் பெற்றுச் சென்ற செல்ல மகன் பணத்தையனைத்தையும் ஊதாரித்தனமாக இழந்து நண்பர்களால் புறக்கணிக்கப்படுவான். இறுதியில் வறுமையைத் தவிர்க்க பன்றிகளை மேய்க்கச் செல்லும் அவன் பன்றிகளுக்கான உணவுகளை உண்ணுகையில் தனது தந்தை அவரது வேலையாட்களுக்குக் கொடுக்கும் பிரமாதமான உணவுகளைச் சிந்தித்துப் பார்த்து, தந்தையிடம் ஓடிவருகிறான். கந்தலாடையில் வயிறு ஒட்டி திருந்திவரும் தனது மகனை ஆரத்தழுவி, அவனை மன்னித்து கொழுத்த ஆடுகளை அடித்து அவனது வருகையைக் கொண்டாடுகிறார்.
கெட்டகுமாரனாக அவன் திருந்தி வருவதையே புஷ்பராஜன் வெறுத்திருந்தார். பதவி இழப்பும் சாட்டையடியான குற்றச்சாட்டுகளும் அந்த இரவில் அவனது சிலுவையேற்றத்தில் அவரை எரோது மன்னர் போலாக்கி தீர்ப்பு எழுத வைத்தது. சாத்தானை விரட்டியடித்த மகிழ்வில் கேட்டைப் பூட்டி மகிழ்வின் ஆராதனையை நடு இரவிலே மேற்கொண்டனர். அம்மா அவசரத்தில் கட்டிவைத்த பொதியில் இருந்த சோற்றுப் பருக்கைகளும் பொரித்த இருமீன் துண்டுகளும் சிலுவையில் தொங்கிய இயேசு தாகத்தில் அலறியபோது ராணுவ வீரர்கள் ஈட்டியில் வைத்து நீட்டிய காடி நீராக கசக்கவில்லை. அவனின் வாழ்வின் மிச்ச நாளுக்கான ஞாபகார்த்த பண்டமாக கொறித்துக் கொறித்து விடியும் வரை உண்டான். கோல்கோதா பெந்தேகோஸ்தே ஆலயத்தில் விடியும் வரை விடுதலையின் பெருவிழாவைக் கொண்டாடினர்.
கேரளாவின் நெடுமங்காடில் நண்பனின் அறையில் தஞ்சம் புகுந்த அவனுக்கு அம்மாவுக்கு மொட்டைக் கடிதம் எழுதி விசனப்படுத்தும் எண்ணம் இல்லை. வீட்டிலிருத்து அவனைத் துரத்த வீட்டு கமிட்டி கூடும்போதெல்லாம் அவள் போராடியதை அவனது மேல் அறை பெரும் காதாக்கி அவனைக் கேட்க வைத்திருக்கிறது. ஒரு டீ கொண்டு வந்து, “எல்லாருக்கும் ஒனக்கமேல பாசம் தான், கேசு கீசு இல்லாம இரு.. அது மட்டும் மதி..” செல்லமாகப் பேசிச்செல்லும் அவள் மறந்தும் வீட்டாரின் வெறுப்பை அவனுக்குக் கடத்த மாட்டாள். இரண்டு நாள் வீட்டிற்கு வரவில்லையென்றால் பிரீடாவிடமிருந்து அழைப்பு வரும், வீட்டிற்கு திரும்பி வருகையில் இரண்டு நாள் உடல் வாட்டம் அவளது உடலில் தெரியும். கடிதம் அனுப்பிச் சிறுகக் கொல்லாமல் ஒரேயடியாக மறந்து விடட்டும் என அவன் நினைத்தது பொய்யானது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்காவது கொரானா பலி கெசியாள் வயது 70. அனைவரையும் அதிரவைத்தது. உடலருகில் உறவினர்களைச் செல்ல அனுமதி மறுத்த சுகாதாரத்துறையும் காவல்துறையும் மற்ற மூன்று கொரானா மரணங்களுக்கு காட்டிய கெடுபிடியை விட அதிகமான சட்டங்களை விதித்தனர். கொரானா பரவல் தொற்று பாதித்து இறந்தவர்கள் வாயிலாக எளிதாக பரவக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடமும் அதிகம் இருந்தது. போலீஸ் உதவியுடன் சுகாதாரத் துறையே உடலடக்கங்களை மேற்கொண்டது.
கல்லறைத் தோட்டத்தில் ஒருவருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்தது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. சர்ச்சிலிருந்து ஐம்பது மீட்டரில் அதே வளாகத்தின் பின் எல்லையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் குழியைத் தோண்டுவதற்கு மட்டும் புஷ்பராஜன் குடும்பத்திற்கு அனுமதி கொடுத்தனர், மண்ணை நிரப்புவதற்கு ஜேசிபி இயந்திரத்தை சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்தது. கெசியாளின் உடலை மருத்துவமனையின் பிணவறையில் பல அடுக்கு பிளாஸ்டிக் பைகளால் சுற்றி வைத்திருந்தனர். சபையின் உறுப்பினர்களில் சிலரும் புஷ்பராஜனின் நெருங்கிய உறவினர்களும் சர்ச்சுக்குள்ளிருந்தனர். மூன்று நான்கு முகக்கவசங்களைப் பயத்திற்கேற்ப அணிந்திருந்தார்கள். சர்ச்சிலிருந்து கல்லறைத் தோட்டத்தை நோக்கிய கிழக்கு பகுதியின் மூன்று ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
சர்ச்சுக்குள்ளிருந்தவர்கள் அந்த ஜன்னல்களூடாக தோண்டி வைக்கப்பட்டிருக்கும் குழியின் அகமண் குவியலைப் பார்த்திருந்தார்கள். பிணத்தை நடுவில் வைத்து வெகுநேரம் பாடலும் பிரசங்கமும் ஜெபமும் செய்பவர்கள் பெந்தேகோஸ்தேகாரர்கள். பல ஆயிரம் அடக்க ஆராதனைகளை நடத்திய புஷ்பராஜனுக்கு தனது மனைவியின் அடக்க நிகழ்வைச் சர்ச்சில் வைத்து நடத்த இயலாத கொடுந்துயரில் அவர் அறையிலே இருக்க, அவரது உதவி போதகர்கள் கெசியாளின் உடல் இல்லாமலே சர்ச்சில் உடலடக்க ஆராதனைக்கான பாடல்களை வந்திருந்தவர்களுடன் சேர்ந்து நடத்தினர். அழுகையும் மரணப் பாடலுமாகச் சேர்ந்து ஒப்பாரி ராகத்தில் அந்த சபை இறுகிக் கிடந்தது.
மரணப்பெட்டி வாங்க கையில் கிட்டிய இருபதாயிரத்துடன் சென்ற இரு சபை நிர்வாகிகளுக்கு பிணவறை ஊழியர்களின் ஆகாத நட்பு கிட்டியது. தங்களது பொறுப்பிலே பெட்டிகள் வாங்கப்படும், பணத்தைத் தந்துவிட்டுப் போங்கள், “உலக்கை மூட்டில் சென்ற புளியங்கொட்டைகளை எண்ணவா முடியும்?” என்ற பிணவறை பொறுப்பாளரின் பழமொழி சபை நிர்வாகிகளுக்கு யூதாஸின் ரூபம் கொடுத்தது. பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட அவர்கள் ஏற்கனவே அங்கிருந்த ஒரு பழுதடைந்த பெட்டியில் கெசியாளைக் கிடத்தி, பெட்டியை பல அடுக்கு கனமான பிளாஸ்டிக் பைகளால் மூடினர். புதைக்கும் இடத்திற்கே ஒருவரும் வரப்போவதில்லை!! சில நிமிட ஆராதனை நடத்த கல்லறை அருகில் யாராவது வந்தாலும் பெட்டியின் தன்மையை ஆராயப் போவதில்லை என்பதை அவர்கள் பரிட்சயித்து பார்த்த விடயமாயிருந்தது.
கோல்கொதா சபை வளாகம் ஆம்புலன்ஸ் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தது. உடலை மூடிய பிளாஸ்டிக் ஆடை அணிந்த போலீஸார் சிலர் புதைக்கும் இடத்திற்கும் சர்ச் நுழைவாயிலுக்குமாக லாந்தியபடி நின்றனர். ஆம்புலன்ஸ் வரும் பாதையில் ஒருவரும் நிற்காதபடி அனைவரையும் சர்ச்சுக்குள் விரட்டியடித்தனர். இன்ஸ்பெக்டர் புஷ்பராஜனின் மகன்களை அழைத்து பரபரத்தபடி பேசி நின்றார்.
“பாடி வந்த உடனே நேரா குழி உள்ள வச்சுடுவோம்.. ஜேசிபி ரெடியா இருக்கு… குழிக்கரைல ரெண்டு நிமிசம் பிரேயர் பண்ண மட்டும் பெர்மிசன் உண்டு, அதுவும் மூனு பேருக்கு மேல கூடாது… எந்த பாஸ்டர் பிரேயர் பண்றார் யாரு கூட போறாங்கன்னு லிஸ்ட் வேணும். அவங்களுக்கு ஹெல்த் டிப்பார்ட்மெண்ட் புல் செக்கியூர்ட் டிரஸ் தருவாங்க…”
கொரானா மரணங்களையும் அதன் புதைக்குழியோர அவலங்களையும் செய்தி தொலைக்காட்சி சானல்களும் பேஸ்புக்கும் வாட்ஸ்ஆப்பும் இன்னபிற சோஷியல் மீடியாக்களும் குறில் நெடிலில் இரட்டைக்கிளவி என தமிழின் அனைத்து சொற்களையும் வளைத்து வளைத்து தலைப்பிட்டு கொரானா பார்வையாளர்களாக மக்களை மாற்றியிருந்தது சர்ச்சிலும் ஒலித்தது. முப்பதுக்கும் அதிகமான பாஸ்டர்கள் அந்த சர்ச்சினுள் இருந்தனர், அதில் கெசியாளின் இரண்டு மருமகன்கள், நான்கு மகன்கள், போதகர்கள். குழிக்கரையில் நடைபெறும் இறுதி ஆராதனை பெந்தேகோஸ்தே சமூகத்துக்கு மிகவும் நெகழ்வானதும் இன்றியமையானதுமாகும். ஒருவரை அடக்கிய பிறகு அந்த கல்லறையில் சென்று வழிபடுவதோ அங்கு சென்று முறையிடுவதோ அவர்கள் நினைவாக இறந்த அல்லது பிறந்த தினத்தில் அங்கு செல்வதோ அவர்களுக்கு ஒப்புரவானதில்லை. மண்ணுக்கு மண்ணாக்கிவிட்டு வீடு வருவதோடு சரி, என்றைக்காவது சென்று புதர்களை அகற்றி கூட்டிப் பெருக்குவது, வீட்டில் திருமணமோ அல்லது வேறு நல்ல நிகழ்வுக்கு பெயிண்ட் அடிக்கையில் அதற்கும் சேர்த்து பெயிண்ட் அடித்துவிடுவார்கள். குழிக்கரையில் இறந்தவர்களை வழியனுப்பும் பெந்தேகோஸ்காரர்களின் இறுதி ஜெபத்தின் நீளமானது பலநேரங்களில் கிறிஸ்தவர்களின் ஏனைய பிரிவினரையே முகம் சுளிக்கவைக்கும்.
எந்த பாஸ்டரும் குழிக்கரையில் செல்லத் தயாராக இல்லை. கெசியாளின் மகன்களின் மனைவிகளே கணவன்மார்களை அழைத்து, “வீட்ல சின்ன பிள்ளைகள் இருக்கு… ஞாபகம் வைச்சுக்கோங்க..” என அச்சுறுத்தினர். நாற்ப்பத்தியெட்டு மணிநேரமாக சபையில் அடக்க ஆராதனை நடந்தாயிற்றே என்ற சலிப்புச் சாக்குப்போக்குடன் ஒவ்வொரு போதகரும் முகம் திருப்பி நின்றனர். கெசியாளின் வீட்டிலுள்ள ஆறு பாஸ்டர்களில் ஒருவர் கூட துணியாததைச் செய்ய அங்கிருந்த ஏனைய பாஸ்டர்கள் மத்தியில் நிசப்தமே நிலவியது. இறுதியாக, பிணத்தைக் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்கையில் சர்ச்சுக்குள்ளிருந்து சத்தமாக அடக்க ஆராதனைச் செய்வதாக அங்கு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
“சார், மூனு பேருன்னு சொன்னா நெறய பேரு நான் நீன்னு வாராங்க… அரசாங்கத்தோட சட்டங்கள நாங்க மதிக்கிறோம், குழிக்கரைல ஜெபம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்… சர்ச்லே நாங்க பிரேயர் பண்ணிக்கிறோம்…” மூத்த மகன் இன்ஸ்பெக்டரிடம் நெளிந்தபடி சொன்னான்.
ஆம்புலன்ஸ் வரும் நேரமறிந்து பூட்டிய வீடுகளுக்குள் மாஸ்க் அணிந்திருந்து தவளை போல் முகம் குப்புறப் படுத்தவர்களும், பிணம் வரும் சாலையோர வீடுகளில் வேப்பிலை அரைத்தும் மாட்டுச்சாணம் கரைத்தும் வீட்டைச் சுற்றி ஊற்றியவர்களும் உடலை பூமியில் இறக்கி மூடியாயிற்று என்ற ஒரு சொல்லிற்கே காத்திருந்தனர். விண்வெளி வீரர்கள் உடையணிந்த ஆறு சுகாதார ஊழியர்களுடன் வாகனம் சர்ச் வளாகத்தில் வந்தடைகையில் சர்ச்சுக்குள்ளிருக்கும் பெண்கள் முகக்கவசத்துக்கு மேலே சேலை நுனியால் கவ்விப்பிடித்தும், ஆண்கள் முகத்தை மறைத்த மாஸ்க்குகளின் மேல் கைகளை வைத்தும் ஹிட்லரின் கேஸ் சேம்பரில் நின்றவர்கள் போல் நின்றனர். பாடல்களை நிறுத்தியவர்களில் சிலர் கிழக்கு பகுதியில் பெவிலியனாக திறந்து வைக்கப்பட்டிருந்த மூன்று ஜன்னல்களில் தைரியத்தை வரவழைத்துச் சென்றனர். தயாராக நின்ற ஜேசிபியின் தும்பிக்கையில் பெட்டியைக் கவச உடையணிந்தவர்கள் வைத்துவிட்டு அருகில் நின்ற சுகாதாரத்துறைக்கான மற்றொரு வாகனத்தில் ஏறிப் பதுங்கினர். எந்த எதிர்ப்புக் குரலும் அங்கு எழவில்லை. பிணங்களைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றதும், நியூயார்க் நகர வீதிகளில் அனாதையாக கொரானா பிணங்கள் கிடந்த காட்சிகளைக் கண்டு கிடந்தவர்களுக்கு ஜேசிபி தேவதூதனாகத் தெரிந்தது.
ஜேசிபி வாகனத்தைக் குழியை நோக்கி இயக்குகையில், கல்லறைத் தோட்டத்தின் தென்முனையின் புதர் மண்டிய மதில் சுவரில் ஏறி ஐந்து இளைஞர்கள் உள்ளே குதித்தனர். தேக்கு மரத்திலான அழகிய மரணப்பெட்டி இரு கையுயர்த்தி ஜேசிபியைப் பார்த்து ‘நிறுத்துங்கள்’ என்பது போல் மதில்களுக்கு மறுபுறத்திலிருந்து உயர்ந்து வந்தது. பெட்டியின் கனமான கீழ்பகுதியை ஜோயல் பிடித்திருந்தான். போலீஸாரும் சுகாதார துறை ஊழியர்களும் தூரத்தில் நின்றபடி கத்தினர்.
“லே… போங்கல…” என்ற கவச உடையிலிருந்த ஜேசிபி டிரைவர் சடுதியில் காரியத்தை முடித்து கிளம்பும் துரிதத்தில் வெடவெடத்தபடி இருந்தான். ஜோயலின் நண்பன் வீசிய கல் அவனது வண்டியில் படவே, கிடைத்தது காரணம் என வண்டியிலிருந்து குதித்து ஓடினான். ஆராதனை நிறுத்தப்பட்டு அனைவரும் கிழக்கு நோக்கிய ஜன்னல்களில் இடம்பிடிக்க முண்டியடித்தனர்.
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆறுமாத காலத்தில் பிரீடாவின் வாயிலாக தாயின் நலமறிந்த அவனுக்கு அன்றிரவு உறக்கம் வராமல் பித்துபிடித்து அந்த வீட்டின் மேல்மாடியில் அமர்ந்திருந்தான். நகரும் நட்சத்திரங்களின் கணக்கு அவனுக்கு அத்துப்படியாயிருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையை முட்டியது போல் ஒரு புது நட்சத்திரம் அவனை வருடும் நோக்கில் மலையிறங்கத் துடிப்பது போல் கண்டான். இரண்டு குவாட்டர் குடித்தால் பாய் எது தலையணை எது என படுத்துறங்கும் அவனுக்கு அன்றைக்கு அதற்கு மேலாகியும் நிலவு காவுகொள்ளவே முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் தவிப்பைப் பார்த்திருக்கையில் பிரீடாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“அம்மா எறந்தாச்சு…”
கேட்டதும் அந்த நட்சத்திரம் சிறு புள்ளியாகி பின்னர் மயமானது. கொரானா பாதிக்கப்பட்டு இருநாட்களே மருத்துவமனையிலிருந்த கெசியாள் இறந்துவிடுவாள் என ஒருவரும் நினைத்திருக்கவில்லை. “தம்பி… நீ கண்டிப்பா வரணும்… யாரு என்ன சொன்னாலும் பொட்டன போல நின்னுட்டாவது போ…” அவள் சொல்லுகையில் அதிகாலைக்கு ஒரு மணிநேரமிருந்தது. நண்பர்களை அழைத்துக்கொண்டு தனது டிரக் வாகனத்தில் கிளம்பினான். சாலைகளில் தடுப்பு அமைத்து அதனருகில் போலீஸார் உறங்கிக்கொண்டிருந்த உச்சகட்ட லாக்டவுண் நேரமது. சைக்கிள்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டை விட கேரள போலீஸார் சட்ட விதிகளில் கடுமை காட்டினர்.
“அம்மா மரிச்சு சாரே… பியுனரலினு போணு…..”
“கலெட்டர்டடுத்து மேடிச்ச பெர்மிசன் காப்பி காணிச்சிட்டு பெய்க்கோ…”
“அதினொந்நும் சமயமில்ல… உச்சக்கு அடக்கம்…” என்ற ஜோயலை வண்டியிலிருந்து இறங்க போலீஸார் கேட்டனர். உறுமியபடி சாலையில் டயரின் மேல்பகுதியை வெற்றிலையில் சுண்ணாம்பு ஆக்கியபடி, குறுக்காக கட்டியிருந்த இரும்புக் குழாயைக் காற்றில் பறக்கவிட்டு வண்டியைக் கிளப்பினான். தமிழ்நாடு கேரளா எல்லையில் வண்டியை நிறுத்திப் பேசுவதற்கு நிற்கவில்லை. இரண்டாவது எப்ஐஆரின் நிறத்தைக் கண்ணாடியில் பார்த்தபடி தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்தது. ஒயர்லெஸ்களில் தகவல் பரிமாறப்படுவதற்குள் தமிழ்நாடு எல்லைப் போலிஸாருக்கு இரண்டாயிரம் லஞ்சம் கொடுத்து மார்த்தாண்டம் வந்தனர். பெட்டிகளில் வைத்து அடக்காமல் பெரும்பாலான உடல்களைப் பிளாஸ்டிக் பைகளில் கட்டிப்புதைக்கும் காணொளிகள் கைபேசிகளில் கொட்டிக் கிடந்த காலமது. டிரக் வண்டியிலும் அந்த பேச்சு வந்தது.
“ஜோயலளியா, எனிக்கறியாம்.. ஹெல்த் காரம்மாரானு எல்லாம் செய்ணது, அவம்மாரு பெட்டிலு வைக்காறில்ல…” என்ற நண்பனின் பேச்சு ஜோயலை உசுப்பியது. மதுவின் உச்சமும் துரத்திவரும் வழக்குகளின் எண்ணிக்கையும் அவனை நீண்ட யுத்தத்தின் முன்நிலை வீரனாக்கத் தயாராக்கியது. பள்ளியாடியிலிருந்து பெட்டி வாங்கி வண்டியில் வைத்ததும் நாகர்கோவிலுக்கான நெடுஞ்சாலைப் பாதை இலகுவானது.
“எங்க இருக்க? வந்தியா?…” பிரீடாவின் குறுஞ்செய்திகளுக்கு அவனுக்கு பதிலளிக்க நேரமில்லை. சர்ச்சுக்குள் முடங்கிய அவள், சிறையுடைத்து கழிவறை வந்து கைபேசியில் பேசினாள்.
“ஏழு பாஸ்டர்க உள்ள வீட்ல உள்ள அம்மாக்கு, குழிக்கரைல பிரேயர் பண்ண ஒருத்தரும் தயாரில்ல எனக்க ஹஸ்பண்ட் உட்பட… புல் கவர்ட் டிரஸ் கொடுக்கிலாம்னு சொன்ன பெறவும்… நான் ஜெபம் பண்ணுறேன்னு சொன்னப்ப ‘பெட்டச்சி தன்நில தெரிஞ்சு இருக்கணும்’ன்னு டயலாக்… கடவுளுக்கு மேல பயம் இல்ல இவியளுக்கு, கண்ணுக்கு காணாத கிருமி மேல பயம்… தம்பி சீக்கிரம் வால, அம்மய அடக்கும்போ நீயாவது கிட்ட நில்லு… அது மதி அம்மாக்கு, இவங்களுக்க ஜெபத்த அம்மா நெறய கண்டாச்சு…” அழுகையும் தேம்பலுமாக அவளின் குரலில் அவன் பெரிதாக உடைவதற்கு மிச்சமாக அவனிடம் எதுவுமில்லாதிருந்தது.
இன்ஸ்பெக்டர் லத்தியைத் தூக்கிவீசியபடி துப்பாக்கியை எடுத்தார். சற்று முன்னால் நகரத் துவங்கிய அவருக்கு பின்னால் போலீஸாரும் முன்னேறத் துவங்கினர். புஷ்பராஜன் பார்ப்பதற்கு ஒரு ஜன்னலுக்கு பாதை வகுத்தனர். அவரது தலையோடு மகன்களும் மருமகன்களுமாக அந்த ஜன்னல் அவர்களுக்கான உயர்தர சிறப்புக்காட்சி பகுதியானது.
“டேய் பாடிய டிஸ்டெர்ப் பண்ணாம பொய்டுங்க…”
“இது என் அம்மா… நல்ல பெட்டில வைச்சு மொறைய அடக்கீட்டு தான் போவேன்…”
“சூட் பண்ணீருவேன்… நீ வாழ்க்கைல பாக்காத செக்சன்ல ஜெயில்ல போவ போற…” என்றபடி இன்ஸ்பெக்டர் கவனமாக கவச உடையைச் சரிசெய்தபடி முன்னேறினார்.
“பதினஞ்சு வயசிலேந்து கேசு பாக்கிறேன்… என்ன வேணும்ணாலும் பண்ணிக்கோங்க…” பதிலளித்தபடி அவர்களைப் பொருட்படுத்தாமல் நண்பர்களிடம், “அளியா, பெட்டிய எடுக்காம்…” என்றான்.
ஜேசிபி துதிக்கையில் இருந்த பெட்டியை எடுத்து கீழே வைத்தார்கள். ஜோயல் தனது முகத்திலிருந்த மாஸ்க்கைக் கழற்றி வீசினான். பெட்டியைச் சுற்றியிருந்த பாலீத்தீன்களை அவர்கள் அகற்றத் துவங்கினர்
.
“டேய்… என்ன பண்றீங்க? கொரானா பரவ போவுது…” நகர்வதை நிறுத்திவிட்டு நின்ற இன்ஸ்பெக்டரும் போலீஸாரும் அவர்களைப் பார்த்து கத்தினர். எதையும் காதில் வாங்காமல் பெட்டியைத் தனியாக்கித் திறந்தனர். உளுத்துப் போயிருந்த அந்தப் பெட்டியை, அனாதைப் பிணத்தை அடக்க அரசு சார்பாக வாங்கிவந்த அதிகாரிகள், அளவு சரியில்லை என விட்டுச்சென்றிருந்தனர்.
“கிளம்புவோம்….” பெட்டியைத் திறக்க கொளுத்துக்களைத் தொட்டதும் ஹெல்த் டிப்பார்ட்மெண்டின் வண்டி கிளம்பியது.
“போலாம் சார்…” என போலீஸார் பின்வாங்க, இன்ஸ்பெக்டரும் துப்பாக்கியைத் தொங்கவிட்டு வியர்வை நிரம்பிய காக்கிக்குள் அந்த கவச உடையில் செய்வதறியாது நின்றார்.
“சார்… என் வீட்ல வயசான பெரியவங்க முதல் சின்ன குழந்த வரைக்கும் இருக்கு… நான் பொய்டுறேன்…” என்ற ஒரு ஏட்டு திரும்பி ஓடினார். சர்ச்சின் இரு ஜன்னல்களில் கூடியிருந்த பாஸ்டர்களும் சபை விசுவாசிகளும் சர்ச் கதவுகளைத் திறந்து எதிர்திசை சாலையில் ஓடினர். இறுதியாகத் தனித்து நின்றார் இன்ஸ்பெக்டர்.
“அளிய கரையாத… லோகத்திலு ஒரு அம்மக்கும் கிட்டாத ஒந்நு… ஏது மகனும் செய்யாத்த ஒந்ந செய்யான் தெய்வம் நமக்கு யோகம் தந்நு…”
“கள்ளிப்பெட்டி போல…”
“கண்டா, தெய்வமாயிட்டு நம்மள பெட்டி வாணிக்கான் நியமிச்சு… ஈ பெட்டி கண்டா!!..” நிலை மறந்து அழும் ஜோயலை ஆறுதல்படுத்த அவனது நண்பர்கள் தோன்றியவைகளைச் சொன்னனர். பெட்டியின் மூடி உடைந்தே திறந்தது. கவச உடையைத் தூக்கி முழங்காலுக்கு மேல் கொண்டு வந்த இன்ஸ்பெக்டரும் தனது ஜீப்பைக் கடந்து ஓடினார். கெசியாளைத் தூக்கி பெட்டியில் கிடத்தினர்.
“சமயமாம் ரதத்தில் ஞான் சொற்க யாத்ற செல்லுந்நு… என் சோதேசம் கண்பதீனாய்…” பெந்தேகோஸ்தே அடக்க ஆராதனையின் பாடல்களில் தவிர்க்க இயலாத மலையாளப் பாடலைச் சத்தமாக பாடத் துவங்கினான். பீரீடா உட்பட வீட்டுப்பெண்களின் கண்கள் நிறைந்து வழிந்தது. புஷ்பராஜனின் கைகள் ஜன்னலிருந்து தளர்ந்து கீழிறங்கியது. அவனுக்கு தெரிந்த பைபிள் வசனங்களைச் சொல்லி சிறுவயதிலிருந்து தந்தை நடத்திய அடக்க ஆராதனைகளை நினைவில் கொண்டுவந்து திறந்திருந்த பெட்டியினருகில் நின்று உடைந்த குரலில் சொல்லி பெட்டியை மூடினான். நண்பர்களுடன் சேர்ந்து குழிக்குள் இறக்கினான்.
“எனது அம்மாவ மண்ணுக்கு மண்ணாகவும் புழுதிக்கு புழுதியாவும் ஒப்படைக்கிறேன்…” என்ற இறுதி வேண்டுதல் ஜெபத்தோடு, குழிக்குள் மூன்று முறை மண்ணைக் கையிலெடுத்துப் போட்டான். அருகிலிருந்த மண்வெட்டிகளால் மண்ணை வழித்திறக்கி குழியை நிரப்பினர்.
***
கு.கு.விக்டர் பிரின்ஸ் – கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக செயல்பட்டவர். சிறாருக்கான சில புத்தகங்களையும் ‘செற்றை’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
victorprince1978@gmail.com