கூத்தன்

0

செந்தில்குமார் நடராஜன்

கரின் உடலைக் கிழித்து ஓடும் ஓர் ஆற்றங்கரையில், கிடாவை விழுங்கிய மலைப்பாம்பின் வயிறு போல புடைத்துக்கொண்டு கிடந்தது அந்த டார்மெட்ரி. அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சிறிய கிராமத்தையே அந்த டார்மெட்ரி விழுங்கியிருந்தது. வண்ணமயமான இரும்புப் பாளங்கள் மீது அடுக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் போன்ற அறைகள், வெளிச்சம்படும் அல்லது கைகளுக்கு எட்டும்  இடங்களில் எல்லாம் தொங்கும் உடலற்ற நீண்ட சேஃப்டி உடைகள், கைப்பிடிகளில் கைகளை ஊன்றியபடி நிற்கும் மனிதர்கள் எனச்சில பிரத்யேக அடையாளங்களால் டார்மெட்ரிகளைக் கண்டுபிடித்து விடலாம்.

டார்மெட்ரி பார்க்கிங்கில் லோரியை நிறுத்தியிருந்த சேகர் அண்ணன், தன் டிரைவிங் சீட்டில் பக்கவாட்டில் ஒருகாலை வெளியே நீட்டி உட்கார்ந்தபடிக்  காத்திருந்தார். ஒருபக்கக் காதில் நீலநிறப் புள்ளியாக ப்ளுடூத் ஹெட்செட் மின்னிக்கொண்டு இருந்தது. லேசாக திறந்து கிடக்கும் கதவின் வழியாக ஏசி காற்று உறுமிக்கொண்டு இருந்தது.  ஒலி எஃப்எம்மில் விமலா, ‘வணக்கம் சிங்கை’ அங்கத்தைத் தொடங்கியிருந்தார். அவசர அவசரமாக ஓடிவரும் கூத்தனைப் பார்த்ததும் சேகர் அண்ணனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மூர்த்தி “தோடா… கூத்தன் ஐயா வந்துட்டாக. இனிமே ஒரே கூத்தாத்தான் இருக்கும்”, என்று சத்தமாக அவனுக்கு கேட்கும்படிச் சொல்லிவிட்டு அவனைப் பார்க்காதது போல லோரியின் கதவில் தாளம்போடத் துவங்கினான். “சேகர் அண்ணே… இந்த மூர்த்திய பாருங்கண்ணே. எப்பப் பாத்தாலும் என்னய நக்கலடிச்சிக்கிட்டே இருக்கு”, கூத்தனின் குரலில் இருந்த வெகுளித்தனம் அவன் வளர்ந்த உருவத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருந்தது.  மூர்த்தி கூத்தனைச் சீண்டுவதும், கூத்தன் சேகர் அண்ணனிடம் முறையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். மனதை இலகுவாக்கும் கிண்டலையும், கேலியையும், சமாதானங்களையும் விட வேறெப்படி ஒருநாளை இனிதாகத் தொடங்கிவிட முடியும்? என்பதைப் போல சேகர் அண்ணன் அங்கு நடக்கும் நாடகத்தைக் கண்டுகொள்ளாமல் ஒரு சின்ன புன்னகையோடு ஒருகையை ஸ்டியரிங்கிலும் ஒருகையைக் கன்னத்திலும் வைத்த மாதிரி வேறெங்கோ பார்த்தபடி இருந்தார்.

அந்த டார்மெட்ரியில் இருந்த எல்லோருக்கும் அவர் ‘சேகர் அண்ணன்’ என்றாலும் கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கியவர், மன்னார்குடிக்காரர்.  புலம்பெயர்ந்து வந்து மூன்றில் ஒருபங்கு ஆயுளை இங்கேயே கழித்து விட்டார். இப்போதெல்லாம் ஊருக்கு போகும்போது யாராவது அவரை “சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கார்”, என்று அறிமுகப்படுத்தினால்  மெலிதாகச் சிரித்துக் கொள்வார்.  ஊரில் கொத்தனாராக வேலை பார்த்தபோது டைல்ஸ் ஒட்டக் கற்றுக்கொண்ட அனுபவம்தான் தொடக்கம். ஏஜண்டுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி  லோக்கல் ட்ராவல்ஸ் உதவியுடன் டெஸ்ட் அடித்துவிட்டு வொர்க் பர்மிட்டில் வந்தவர். இங்கு வந்து டைல்ஸ் கட்டிங் அலைன்மன்ட் என்று எதுவும் புரியாமல் சீனன் சொல்லும் வேலையெல்லாம் செய்து பழகிக்கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கான்க்ரீட் கலவை மாதிரி காலம் உருட்டிப் புரட்டிக்கொண்டே இருந்தது. ‘யீ கோங் கன்ஸ்ட்ரஷன்’ கம்பெனியில் சைட் சுப்ரவைசராகி, சொல்லிக் கொள்ளும்படியான பொறுப்புகளில் இருந்துவிட்டு பிறகு, தனியாக லோரி வாங்கி தொழில் தொடங்கி விட்டார். அப்போதெல்லாம் குடியுரிமை கிடைப்பது அவ்வளவு சிரமம் இல்லாது இருந்தது. இங்கேயே வீட்டுவேலைக்கு வந்திருந்த ஒரு பெண்ணுடன் திருமணம். குழந்தைகள் இல்லை.

நாள் முழுவதும் கன்ஸ்ட்ரஷன் கம்பெனிக்கும், காஸ் சிலிண்டர் கம்பெனிக்கும் லோரி ஓட்டுவார். இரவு எட்டு மணிக்கு ஊர்க்கார கூட்டாளிகளுடன் தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில் கூடிவிடுவார். ஒரு மனுசன் யாரிடமும் அதிகம் பேசாமல் இப்படி எப்படி இருக்கமுடியும் என்று நினைப்பவர்களுக்கு முற்றிலும் எதிரான  ஓர் அவதாரத்தை தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில்தான் எடுப்பார். கடை வாசலில் பூக்கடையில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் ஐஸ்பெட்டிகளை இழுத்துப்போட்டு அதைச் சுற்றிலும் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேர்கள் சகிதம் கச்சேரி தொடங்கிவிடும். கண்டெய்னர் மீது அடுக்கப்படும் பரோன்ஸ் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பியர்கள், வயோதிகம் விழுங்கிய காலத்தை அரட்டையாக வெளியே தள்ளும்.  மறுபடியும், அடுத்த நாள் காலை இவர் லோரி ஓட்டுவதற்காகவே விடிவது போல விடிந்துவிடும். சேகர் அண்ணன் தான் லோரியில் அழைத்துப் போகும் எல்லாருடைய வீட்டுச்சூழலையும் ஓரளவு தெரிந்து வைத்திருப்பார். திடீரென ஒருநாள் கோழி பிரியாணி, தண்ணி எனப் பெரிய பையுடன் சாப்பாட்டு நேரத்தில் ஏதாவது ஒரு சைட்டில் வந்து நிற்பார். பூக்கடையோடு மூன்றுக்கு இரண்டு அடியில் ஒட்டிக்கொண்டு நிற்கும் மொபைல் கடைக்கு போன் செய்து ஒவ்வொரு முறையும் வேறு வேறு எண்களுக்கு டாப்அப் செய்யச் சொல்வார். சேகர் அண்ணன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் தலையைச் சுற்றி சின்ன கொசுக்களைப் போல எண்கள் சுழன்று கொண்டே இருக்கும். ஒரு போன் நம்பரில் முதல் நான்கு எண்ணைச் சொல்லும்போதே சற்று நிறுத்தி “இது அந்த சுப்ரவைசர் சுரேஷ் பய லோரில்ல”, என்பார். சுரேஷ் லோரி நம்பர் 4D-க்கு மாறும். மறுநாள் மாறிப்போகும் ஓர் எண்ணால் “தேவடியாப்பய..”, என்று சுரேஷ் அம்மாவை ஒரு எத்தும், 4D-க்காரனை ஒரு எத்தும் எத்துவார். அடுத்து வேறு எண்ணுக்கு மாறுவார். அவர் உண்டியல் நடத்துவதாகவும், அவரிடம் நிறைய பேர் குருவிகளாக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் புதிது புதிதாகக் கேர்ள் பிரெண்ட்ஸ்களுடன் ஜோகூரில் சுத்துவதாகவும் கூட வதந்திகள் உண்டு.

கூத்தன் உட்பட அந்த டார்மெட்ரியில் இருக்கும் சிலரும் சேகர் அண்ணன் உதவியுடன் சிங்கப்பூர் வந்தவர்கள்தான். உள்ளூர் ஏஜண்டுகள், கன்ஸ்ட்ரஷன் சப்கான்கள் என நிறைய பழக்கவழக்கம் இருப்பதால் இதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் இதுவரை யாரிடமும் நேரடியாகக் காசு வாங்கியதில்லை. சேகர் அண்ணனுக்கு ஏஜெண்டுகள் தனியாக கமிசன் கொடுத்துவிடுவார்கள் என்றுகூடப் பேச்சுக்கள் உண்டு. “அண்ணன் சொல்ற மாதிரி கேளுடா. எங்க டெஸ்ட் அடிக்கணும், இங்க வந்ததுக்கு அப்புறம் என்ன கோர்ஸ் படிக்கணும், டிரைவிங் லைசன்ஸ் எப்படி எடுக்கணும்னு எல்லாத்தையும்  அண்ணனே சொல்லுவாரு”, என்பதாகக் கடல் கடக்கும் ஏதாவது ஓர் உரையாடலில் சேகர் அண்ணன் இருப்பார். இப்படியான ஓர் உரையாடலுக்குப் பிறகுதான் கூத்தன் ஒருநாள் காலரில் மஞ்சள் வைத்திருந்த ஒரு பச்சை நிறப் புதுச்சட்டையைக் கறுப்பு நிறப் பேண்டில் இன் பண்ணி போட்டுக்கொண்டு, காலில் பளபளப்பான தோல் செருப்பும், நெற்றியில் கரைந்து வழியும் குங்குமம் சகிதமுமாக ஏர்போர்டில் வந்து இறங்கியிருந்தான். கறுப்பான ஒல்லியான உருவம். திருத்தமில்லாத அரும்பு மீசை. ஒட்டிய கன்னங்கள். ‘கூத்தன் பழனிச்சாமி மன்னார்குடி டூ சிங்கப்பூர்’, என்று சிவப்பு நிற மார்க்கரால் எழுதப்பட்டு நைலான் கயிறு சுற்றப்பட்ட அட்டைப்பெட்டி. ஒரு கைப்பையில் முடிந்தவரை  திணித்து வைக்கப்பட்ட துணிமணிகள் என வந்து நின்றவனை மூர்த்திதான் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து வந்திருந்தான்.

கூத்தனைப் பற்றிச் சேகர் அண்ணனிடம் முதலில் சொன்னதும் மூர்த்திதான். “நம்ம பூந்தாலங்குடி கிராமம்தான்ணே. அப்பா கண்ணு தெரியாதவரு. ஊனமுற்றவங்க நடத்துற ஒரு ஆர்க்கஸ்டிராவுல இருக்காரு.  மூனு மாசத்துக்கு முன்னால அவனோட அம்மா ஒரு ஆக்சிடென்டுல செத்துப்போச்சி.  பய பெருசா ஏதும் படிக்கலைண்ணே. அந்த ஏரியா அப்துல் கலாம் ஐயா மன்றத்துப் பசங்கதான், இவனுக்கு ஏதாச்சும் செஞ்சு அங்க இழுத்துவுடுறான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க. ஏதாவது பாத்து செய்ங்கண்ணே”. இந்த மாதிரியான கோரிக்கைகள் வருவது அவருக்குப் பழகிப்போன ஒன்று என்பதாலோ என்னவோ சேகர் அண்ணன் எதுவும் கண்டுகொள்ளாதது போல இருந்து விட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவராகவே மூர்த்திக்கு ஃபோன் அடித்து “டேய் மூர்த்தி! அந்தப் பூந்தாலங்குடி பயல மன்னார்குடி பஸ்டாண்டுல இருக்க நம்ம மாதா டிராவல்ஸ் போயி டெஸ்ட் அடிக்க ஏற்பாடு பண்ணச் சொல்லு. நான் கம்பெனி கிட்டயும்,   டிராவல்ஸ்லேயும் ஏற்கனவே பேசிட்டேன்”, என்றார்.

அடுத்த சில மாதங்களில் கூத்தன் சிங்கப்பூர் வந்து சேர்ந்து விட்டான். ஆரம்ப நாட்களில் நகரின் வனப்பும், தூய்மையும் அவனை ஏகமாகப் பயமுறுத்தியிருந்தது. சுத்தமான எதையும் தயங்கித் தயங்கியே தொட்டான். பயன்படுத்தினான். யாரையும் தொடாமல் தள்ளியே நின்றான். ஏதேனும் மூடிய அறைகளுக்குள் நுழையும்போது வீசும் நறுமணம் கூட அவனைப் பயமுறுத்தியது. வேலை செய்யும் சைட், லோரி, டார்மெட்ரியைத் தவிர வேறெங்கும் போவதைத் தவிர்த்தே வந்தான். மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப் போகும்போதுகூட கோழிக்குஞ்சு மாதிரி சேகர் அண்ணன் பின்னாலேயே சென்றான். வெள்ளைத்தோல் நர்ஸ் தொட்டது பல நாட்களாக மனதுக்குள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

“ஏன்ணே! ஒன்னுக்குப் போற எடத்துலல்லாம் குளுகுளுன்னு இருக்கே. கரண்டு பில்லு எவ்ளோ ஆவும்?, “ஒரு வெள்ளி அம்பது காசுன்னா நம்மூர்க்கு 75 ரூவாயாண்ணே?”, எனக் கொஞ்சம் கொஞ்சமாக காதால் கேட்டுக்கேட்டு நகரத்துடன் பழகத் தொடங்கினான். பெரும்பாலான நேரங்களில் மூர்த்திதான் அவன் கூடவே இருந்தான். தினமும் டார்மெட்டரிக்கும், சைட்டுக்கும் இடையே லோரியில் போகும்போதும் வரும்போதும் சேகர் அண்ணனும் கூத்தனைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். வந்த புதிதில் சேகர் அண்ணனைப் பார்த்தால் கூத்தனுக்குச் சட்டென்று பதற்றம் தொற்றிக் கொள்ளும். அவரிடம் இருந்து ஃபோன் வந்தால்கூட எங்கிருந்தாலும் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து சட்டென்று எழுந்து நின்றுவிடுவான். மூர்த்தியும் அவனைச் சீண்டுவதற்காகவே அடிக்கடி பதற்றமான குரலில், “டேய் கூத்தா சேகரண்ணே வர்றாருடா”, என்று வம்புக்கு இழுப்பான். கூத்தனும் போட்டதைப் போட்டபடி பதற்றப்படுவதைப் பார்த்துச் சுற்றி இருப்பவர்கள் சிரிப்பார்கள்.

ஆரம்பத்தில் பயந்து பயந்து சுற்றிக்கொண்டிருந்த கூத்தன் இப்போது அப்படியில்லை. வளவளவென பேசத்தொடங்கி விட்டான். யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. நாலு பேர் சேர்ந்து நின்றால் அவர்களோடு போய் சேர்ந்து கொள்வான். சுற்றி இருப்பவர்களிடம் நிறைய தொடர்பற்ற கேள்விகள் கேட்பான். ஆனால் யாரிடமும் பதிலெல்லாம் எதிர்பார்க்க மாட்டான். முக்கியமாக அவன் பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது காதில் இயர்ஃபோன் மாட்டினால் அவனுக்கு அவ்வளவு கோபம் வரும். கூட்டத்தோடு கூட்டமாக இருப்பதும், பேசுவதும், சிரிப்பதுமே அவனுக்குத் தேவையாய் இருந்தது. அவன் சட்டென்று நெருங்காதது சேகர் அண்ணனிடம் மட்டும்தான். முதலில் லோரியில் ஏறும்போது தயங்கித் தயங்கி “சேகர் அண்ணே! லோரியில முன்னாடி சீட்டுல  உட்கார்ந்துக்கவா?”, என்று பரிதாமாகக் கேட்டபோது சேகர் அண்ணனுக்கு எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. இப்போது அந்த இடம் அவனுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடம். தினமும் லோரியில் ஏறி உட்கார்ந்ததும் எஃப்.எம் ரேடியோவைச் சத்தமாக வைத்துக் கொள்வான். விமலாவும், ரஃபியும் ரேடியோவில் நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்குத் தப்புத்தப்பாக லோரியில் இருப்பவர்களிடம் பதில் சொல்லுவான். லோரியில் உட்கார்ந்திருக்கும் எல்லோருக்கும் கேட்கும்படி சினிமா பாடல்களைக் கூடவே பாடுவான். தேவையில்லாமல் சிரிப்பான். அவனைக் கிண்டலும், கேலியும் செய்பவர்களை அவன் பொருட்படுத்தியதே இல்லை. கூத்தனின் இயல்பு நிலை என்பது மற்றவர்களுக்கு இயல்பாக இல்லை. பெரும்பாலான நேரங்களில் எரிச்சலாகவே இருந்தது.

அன்றும் வழக்கம்போல கூத்தனுக்கு இடம் கொடுக்காமல் மூர்த்தி சேகர் அண்ணனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவனைச் சீண்டிக் கொண்டிருந்தான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்துச்சீட்டு என்பது சாதாரணமாக ஒருவர் உட்காரும் சின்ன இருக்கை மட்டுமன்று. அது டிரைவருடனான நெருக்கத்தின் அடையாளம். பல நேரங்களில் உட்காருபவரின் சீனியாரிட்டிதான் அதைத் தீர்மானிக்கும். சேகர் அண்ணனுக்கு மூர்த்தி அங்கே உட்காருவதில்தான் வசதி. இருந்தாலும் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. எவ்வளவோ கெஞ்சியும் மூர்த்தி இடம் கொடுக்காதது கூத்தனுக்குக் கடும் கோபத்தைத் தந்தது. தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் வெளியே வராமல் விம்மத் தொடங்கினான். “மூர்த்தி அண்ணே… நீ என்ன பெரிய ஆளா? நான் ஒருநாள் லோரி வாங்குவேன். அப்ப நீ இந்த சீட்டுல உட்கார முடியாம சூத்துல கட்டி வந்து கெடப்ப பாரு…” நிஜமாகவே அவன் விம்மி விம்மிப் பேசுவதைப் பார்த்ததும் மூர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கூத்தன் சேகர் அண்ணனைப் பார்த்துக்கொண்டே லோரியில் ஏறாமல் நின்று கொண்டிருந்தான். “டேய் மூர்த்தி! நீதான் பின்னாடி போய்த்தொலையேன்டா. அவனோட ஏண்டா மல்லுக்கட்டுற”, என்று சேகர் அண்ணன் திட்டிய பிறகே மூர்த்தி சிரிப்பை அடக்கியபடி இறங்கி அவனுக்கு இடம் கொடுத்தான். கண்களைச் சின்னப்பையன் மாதிரி துடைத்துக்கொண்டு வந்து உட்காரும் கூத்தனைப் பார்த்ததும் சேகர் அண்ணனுக்கு என்னவோ போல இருந்தது. கீழே குனிந்தபடி வந்தவன் சிறிது நேரத்திற்கெல்லாம் எதுவுமே நடக்காதது போல எஃப்.எம்மில் ஐக்கியமாகி விட்டான். மூர்த்தியும் கேலியும் கிண்டலுமாகப் பின்னால் சிரித்துக்கொண்டு அரட்டைக்குத் தாவியிருந்தான். சேகர் அண்ணன் மட்டும் அடிக்கடி கூத்தனைப் பார்த்தபடி லோரியை ஓட்டிக்கொண்டிருந்தார்.

வழியில் வழக்கமாகக் கோப்பி குடிக்க நிறுத்தும் ஃபுட்கோர்ட் வந்ததும் பார்க்கிங்கில் திருப்பி லோரியை நிறுத்தினார். எல்லோரும் இறங்கியதும் நிதானமாகக் கீழே இறங்கி ஒரு சிகரெட்டோடு ஸ்மோக்கிங் கார்னருக்கு ஒதுங்கினார். கூத்தன் மற்றவர்களோடு சிரித்துப் பேசியபடி கோப்பிக்கடைக்குச் சென்றான். மூர்த்தி அவன் முதுகில் தட்டிவிட்டுத் தோளோடு அவனைக் கட்டிக்கொண்டு நடந்தான். வழக்கமாக மற்றவர்கள் எல்லோரும் கோப்பி குடித்துக்கொண்டு இருக்கும்போது கூத்தன்தான் பிளாஸ்டிக் பையில் ஸ்ட்ராவோடு சேகர் அண்ணனுக்கு வாங்கிக்கொண்டு வருவான். சேகர் அண்ணன் ஒரு கையில் சிகரெட்டும் ஒரு கையில் கோப்பி பையுடன் நிற்கும்போது கூத்தன் வழக்கம்போல் அவரிடம் ஏதாவது பேசத் தொடங்கிவிடுவான். அன்றும் ஒரு கையில் கோப்பியைத் தொங்கவிட்டபடி தன்னை நோக்கி வந்தவனிடம் “டேய் கூத்தா. உன்கிட்ட யாரோ ஃபோன்ல பேசணும்ன்னு சொல்றாங்கடா”, என்றபடி தன் செல்ஃபோனை நீட்டினார். “என்கிட்டயா?” என்றபடி குழப்பத்தோடு ஃபோனை வாங்கியவன், தயக்கத்துடன் “அலோ… யார் பேசுறீங்க…” என்றான். மறுமுனையில், “இது வணக்கம் சிங்கை. நான் உங்க விமலா. சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” என்றதும் அவன் கையிலிருந்த கோப்பி நழுவித் தளும்பத் தொடங்கியது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்களில் சற்று அதிர்ச்சியோடு அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சேகர் அண்ணன் அதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே உதட்டோரத்தில் வந்த சிரிப்பை அடக்கியபடி சிகரெட்டை ஊதிக்கொண்டு இருந்தார். “ஹலோ.. நான் பேசுறது கேட்குதா?”, என்று விமலா மறுபடியும் கேட்டதும் கூத்தன் தடுமாறியபடி, “அக்கா. இல்லக்கா. அண்ணன் திடீர்னு போன குடுத்துச்சு. அதான் கோப்பி கொட்டிடுச்சு. அதான்… நீ சாப்பிட்டியாக்கா?” என்றான். விமலா சிரித்துக்கொண்டே “நல்லா சாப்பிட்டேங்க. நீங்க பசியாறிட்டீங்களா? சொல்லுங்க என்ன பாட்டு வேணும்” என்றார். “பாட்டாக்கா… அது… ம்ம் சாப்பிட்டேன். நீங்க நல்லா பேசுறீங்கக்கா. பாட்டு… ம்ம்…” என்று சில வினாடிகள் யோசித்தவன், “அக்கா… நான் கடவுள் படத்துல வர்ற அம்மா உம் பிள்ளை பாட்டுப் போடுக்கா”, என்றான். விமலா மறுபடியும் சிரித்துக்கொண்டே “நீங்க கேட்ட பாட்டு வந்துகிட்டே இருக்கு. தொடர்ந்து நிகழ்ச்சியில் இணைந்திருங்க” என்றதும் இணைப்புத் துண்டிக்கப்பட்டுப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

கூத்தனுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. சேகர் அண்ணனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பாட்டைக் கேட்டுக்கொண்டு அப்படியே பார்க்கிங் ஓரத்தில் இருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து விட்டான். கண்களைத் திறந்து எதிரே எதையோ உற்றுப் பார்ப்பது போல இருந்தான். ஆனால் அவன் எதையும் கவனிக்கவில்லை. சேகர் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கூத்தனுக்கு எதைப்பற்றியும் பிரக்ஞையே இல்லை. ஊர் மரத்தடியில் இருக்கும் அய்யனார் சிலைபோல அப்படியே அசையாமல் இருந்தான். கூத்தனைச் சேகர் அண்ணன் இதுவரை அப்படிப் பார்த்ததே இல்லை. அவன் முகத்தில் படரும் உணர்வுகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கோப்பி குடித்து முடித்து திரும்ப வந்த மூர்த்தி, கூத்தன் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனை வித்தியாசமாக பார்த்தபடி நெருங்கினான். சேகர் அண்ணன் ஏதோ நினைத்தவராய் கைகளால் சைகை செய்து மூர்த்தியை நிறுத்தினார். பாட்டு முடிந்தும்கூட கூத்தன் அசைவதாய்த் தெரியவில்லை. சேகர் அண்ணன்தான் “கூத்தா.. கூத்தா டேய்…”, என்று மெதுவாகத் தோளைத்தொட்டு அவனை உலுக்கினார். நெடுந்தொலைவிலிருந்து ஓடிவந்த நாயைப்போல மூச்சு மட்டும் வேகவேகமாக அவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. பிரம்மை பிடித்தவன் போல அப்படியே உட்கார்ந்திருந்தான். பயந்துபோன சேகர் அண்ணன் லோரியில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவன் முகத்தில் ஒரு கை தண்ணீரை ஓங்கி அடித்தார். தடுமாறியபடி தலையை நிமிர்த்தி சேகர் அண்ணனைப் மலங்க மலங்கப் பார்த்தவன் திடீரென்று அவர் கால்களை வளைத்துப் பிடித்துக்கொண்டு அதில் முகத்தைச் சாய்த்தபடி “அண்ணே… அம்மா சாவுற அன்னிக்கு ராத்திரி இந்த பாட்டுதாண்ணே பாடுச்சு. சாப்பிட்டுகிட்டு இருந்த அப்பாவுக்கு திடீர்னு ஏதோ வலிப்பு மாதிரி வந்துச்சு. அம்மா பதறிப்போயி ஆளுங்கள கூட்டியாற ரோட்டு பக்கம் ஓடுனப்பா லாரி அடிச்சி….”, என்று கதறி அழத் தொடங்கினான்.

சேகர் அண்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டே இருந்தார். ஊரில் வயலுக்கு வச்சிருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டுச் செத்துப்போன தன் தம்பி அவருக்கு நியாபகத்துக்கு வந்தான். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்யும் பெண்ணிடம் காதலைச் சொல்லி அது நிறைவேறாமல் போகவும் அவசரப்பட்டு விட்டான்.  உடம்பெல்லாம் பட்டை பட்டையாகத் தோல் உரிந்து வயக்காட்டில் கிடந்தான். கூடப்படித்த நண்பர்கள் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டார்கள். காசு சேர்த்து மாலை வாங்கிப்போட்டுச் சுடுகாடு வரைக்கும் சுமந்து போனதும் அவர்கள்தான். சேகர் அண்ணன் ஊருக்கு வருவதற்குள் பிணத்தை நீண்ட நேரம் தாங்காது என்பதால் தகனம் செய்து விட்டார்கள். மிஞ்சியிருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப விருப்பம் இல்லாமல் தம்பி கிடந்த வயக்காட்டிலேயே உட்கார்ந்திருந்தார். பித்துப் பிடிச்சவனாட்டம் அசையாம உட்கார்ந்திருக்கான்னு ஊர் பேசியது. எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்து இருந்தார் என்று தெரியவில்லை. வானம் விடியும்போதே வீட்டுக்குத் திரும்பினார். லேசாக தூறல் போட்டுக்கொண்டு இருந்தது. மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. வீட்டிற்குத் திருப்பினால் அங்கிருப்பவர்களுடன் சேர்ந்து அழநேரிடும் என்பதை நினைத்தால் வெறுப்பாக இருந்தது. வழியில் புளியமரத்தடி ஸ்டாப்பில் உள்ள டீக்கடையில் கொஞ்ச நேரம் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தார். வாசலில் கிடந்த பெஞ்சிற்குப் பக்கத்தில் அழுக்குச் சட்டையுடன் உட்கார்ந்திருந்தவன் திடீரென்று கண்களை மூடிக்கொண்டு பாடத் தொடங்கினான். அந்தப் பெஞ்சில் உட்கார்ந்து சப்தமில்லாமல் அழுததும் நியாபகம் வந்தது. அந்தப் பாட்டைப் பாடியவனின் முகம் எப்படி இருந்தது என்ற யோசனை சேகர் அண்ணாவை அலைக்கழித்தது. திடீரென்று மனதில் நுழையும் ஒரு பாட்டுக்கு நேர்த்தியோ அலங்காரமோ தேவையில்லை. அதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்னவென்று தனக்குத்தான் புரியவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார். கொஞ்ச நேரம் கூத்தனையே பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தார்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கூத்தனுடன் இருப்பதைச் சேகர் அண்ணனால் தவிர்க்க முடிவதில்லை. அவன் விரும்பியபடி கூட்டமாக ஆட்கள் இருக்கும் இடங்களுக்கு அவனை அழைத்துப்போகத் தொடங்கினார். அப்படி அவனுடன் அடிக்கடி வரும் இடங்களில் தேக்காவும் ஒன்று. அன்று தைப்பூசத் திருவிழாவால் சிராங்கூன் வீதி கூடுதல் உற்சாகத்தோடு இருந்தது. ரேஸ் கோர்ஸ் ரோடு பக்கம் லோரியை நிறுத்திவிட்டு தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில் சேகர் அண்ணன் கையில் ஒரு பரோனஸ் பியரோடு உட்கார்ந்து விட்டார். பக்கத்தில் இன்னொரு பியர் திறக்கப்படாமல் இருந்தது. கடைக்குப் பக்கத்தில் காவடிச்சிந்து பாட அனுமதிக்கப்பட்டிருந்தது. பெருமாள் கோவிலிருந்து காவடி எடுப்பவர்களுடன் கூட்டம் கூட்டமாக வருபவர்களைப் பார்த்ததும் கூத்தனால் ஓர் இடத்தில் சும்மா நிற்க முடியவில்லை. பஜனை, ஜால்ரா, கஞ்சிரா என விதவிதமாக இசைக்கருவிகளுடன் காவடியும், பால்குடமும் சுமந்து ஆடியபடி வரும் ஒவ்வொரு குழுவோடும் கொஞ்சதூரம் போய் ஆடிவிட்டு வந்தான். பக்கத்தில் தண்ணீர் போத்தல்கள் வழங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சிறிதுநேரம் நின்று கொண்டு, “அண்ணே நான் எடுத்து குடுக்குறேன்ணே”, என்று சொல்லிவிட்டு தண்ணீர்ப் போத்தல்களை எடுத்துக் கொடுக்கத் தொடங்கினான். இடையிடையே, கடையில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், “அரோகரா! அரோகரா!” என்று கத்தினான். திடீர் திடீரென ஈரத்தோடு வரும் யார் யாருடைய கால்களை எல்லாமோ தொட்டுக் கும்பிட்டான். ஒரு குழந்தையுடன் வந்து கொண்டிருந்த பெரியவரிடம் சென்று “ஐயா நான் பாப்பாவைத் தூக்கிட்டு வர்றேன்”, என்று அவர் பின்னாலேயே ஓடினான்.  கொஞ்சம் நேரம் அப்படியே ரோட்டுக்குப் பக்கத்தில் இருந்த நடைமேடையில் வருபவர்கள் போகிறவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் “இந்தா வர்றேன்ணே”, என்று சொல்லிவிட்டுப் போனவன்  உறுமி மேளம் வாசிக்கும் இடம்வரை போய்விட்டு மூச்சு இரைக்க  இரைக்க  ஓடிவந்து, “அண்ணே. நான் சாமிண்ணே. நான் கூத்தண்ணே. அரோகரா! அரோகரா!”, என்றபடி நடராஜர் மாதிரி அந்தக் கடை வாசலிலேயே ஒரு காலைத் தூக்கி நின்றுகொண்டு சப்தம் போட்டுச் சிரித்தான். சேகர் அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தபடி பியரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் அவருடைய பாக்கேட்டிலிருந்து ஃபோனை எடுத்து எஃப்.எம்மைச் சத்தமாக வைத்துக்கொண்டு பாட்டுக் கேட்கத் தொடங்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் எதிரிலிருந்த மசூதியைக் காட்டி, “கூத்தா.. அங்க போயிருக்கியா?”, என்றார். அவ்வளவுதான் அவரிடம் பதில் கூட சொல்லாமல் எழுந்து மசூதியை நோக்கி ஓடத் தொடங்கினான்.

கூத்தனைப் புரிந்துகொள்வது சேகர் அண்ணனுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் அவன் இருப்பு அவருக்கு ஏதோ ஓர் ஆறுதலைக் கொடுத்தது. சில நேரங்களில் ஏன் இந்த கிறுக்குப்பயலோட சுத்துறோமோ என்று யோசிப்பார். அப்புறம் நாமதான் எப்ப எங்கன்னு நாகரீகம் பார்த்துச் சிரிப்பு அழுகையெல்லாம் கூட அடக்கி வைக்கிறோம். ஆனா கூத்தன் அப்படி இல்லையே? காவடியைச் சுமந்துகிட்டு வர்ற இந்தப் பையன், தன்னோட பேத்தியைச் சுமந்துகிட்டு வர்ற பெரியவர், தக்காளி பெட்டிய கடைக்குள்ள சுமந்துகிட்டு போறவன் இப்படி எல்லாரும் வழியில்லாமலோ அல்லது விருப்பப்பட்டோ மனசுக்குள்ளயும் எதையாவது சுமக்கிறோம்.  கூத்தன் எதையும் சுமக்கிறதா நினைக்கிறது இல்ல. அவ்வளவுதானே? அவன்கூட ஏன் சுத்தக்கூடாது என்று அவரே சமாதானம் ஆகிவிடுவார். இப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் கூத்தனோடு தேக்காவுக்குப் போய்விடுவது வழக்கமாகிவிட்டது. ரேஸ் கோர்ஸ் ரோட்டில் லோரியை நிறுத்திவிட்டு தேக்காவில் கூட்டமாக இருக்கும் இடங்களில் அவனோடு சுற்றுவார். சகுந்தலாவில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ரெக்ஸில் படம் பார்ப்பதும் கூத்தனுக்காக மட்டும்தான். அன்றும் அப்படித்தான் கூத்தனோடு மாரியம்மன் கோவிலிக்குச் சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது  அவர் காதுக்குப் பக்கத்தில் வந்து சத்தமாக, “அண்ணே பிரியாணி வாங்கித்தாண்ணே”, என்றான். எல்லோரும் அவனையே திரும்பிப் பார்த்தார்கள். சேகர் அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சகுந்தலாவிற்கு அழைத்துப்போய் கோழி பிரியாணி வாங்கித் தந்தார்.

சாப்பிட்டுவிட்டு கடையிலிருந்து வெளியேறும்போதுதான் அந்த இடத்தில் எப்போதும் இல்லாத பரப்பரப்பு இருந்ததை சேகர் அண்ணன் கவனித்தார். என்னவென்று புரியாமல் கூத்தனை அழைத்துக்கொண்டு கூட்டத்தைப் பார்த்தபடியே பஃப்பல்லோ ரோடு பக்கம் நடக்கத் துவங்கினார். ரோட்டோரத்தில் காய்கறி வாங்க நிற்கும் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டு தேக்கா பஸ்டாப்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சேகர் அண்ணன் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவராய் எதிரில் வந்த ஒருவரிடம் “ஏங்க என்னாச்சு. ஏன் ஒரே பதட்டமா இருக்கு?”, என்றார். “ஊர் ஆள் ஒருத்தன் மேல வண்டி ஏத்திட்டாங்களாம். ஆள் காலி. ரேஸ் கோர்ஸ் ரோடு பக்கம் ஒரே கலவரமா இருக்கு. போலீஸ் வண்டியல்லாம் கொளுத்திட்டாங்களாம்”, என்று பதில் சொல்லியபடி அவர் வேகவேகமாக நடக்கத் தொடங்கினார். சேகர் அண்ணாவுக்குச் சட்டென்று எதுவும் புரியவில்லை. கலவரமா? இங்கேயா? வண்டிய கொளுத்திட்டாங்களா? எதுவுமே பிடிபடவில்லை. பக்கத்தில் இருந்த கூத்தன்தான் முதலில் எதையோ யோசித்தவனாக “அண்ணே லோரிண்ணே”, என்று கத்திவிட்டுக் கூட்டம் வந்துகொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் ஆட்களை விலக்கிக்கொண்டு ஓடத்தொடங்கினான். சட்டென்று நிலைமை புரியத்தொடங்க “கூத்தா நில்லுடா. நான் போறேன்” என்று கத்தினார். அதற்குள் கூத்தன் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தான்.

சேகர் அண்ணன் இப்படி ஒரு காட்சியை அவர் அனுபவத்தில் தேக்காவில் பார்த்ததில்லை. ஆங்காங்கே பொருட்கள் சிதறிக்கிடந்தன. அவசர அவசரமாகச் சிலர் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். லிட்டில் இண்டியா எம்ஆர்டிக்குப் பக்கத்தில் நிறைய பாட்டில்கள் உடைந்து கிடந்தன. நடைபாதையில் இருந்த கற்கள் பெயர்த்து எடுத்து வீசப்பட்டிருந்தன. ஒரு போலீஸ் வாகனம் எரிந்து கொண்டு இருந்தது. கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கூத்தனைக் காணவில்லை. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. “கூத்தா… கூத்தா…”, என்று கத்தியவாறு லோரி நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினார். ரேஸ் கோர்ஸ் ரோட்டை அடைந்தவுடன் சாலையோர பார்க்கிங்கில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அந்தப்பக்கம் லோரி கண்ணுக்குத் தெரிந்தது. இரண்டு பேர் லோரியை பிடித்து குலுக்கிக்கொண்டு இருந்தனர். கூத்தன் அவர்களின் இருவரின் சட்டைகளையும் பிடித்து முதுகிற்குப் பின்னால் தொங்கியபடி ஆவேசமாக “அண்ணே லோரிய விடுண்ணே. லோரிய விடுண்ணே”, என்று கத்திக் கொண்டிருந்தான். சேகர் அண்ணன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “டேய்… டேய்… விடுங்கடா…”, என்றபடி லோரியை நெருங்கவும், எங்கிருந்தோ வந்த காலி பீர் போத்தல் ஒன்று சரியாகக் கூத்தனின் தலையில் மோதி உடைந்து சிதறவும் சரியாக இருந்தது. “அம்மா…”, என்று கத்தியபடி அவர்களின் சட்டைகளிலிருந்து பிடி நழுவிக் கூத்தன் தரையில் சரிந்தான். பளிச்சென்று முகமெங்கும் பரவிய இரத்தத்தைப் பார்த்ததும் லோரியை குலுக்கிக் கொண்டிருந்த இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினர். சேகர் அண்ணனுக்குச் சட்டென்று அந்த இடம் மயானம் ஆனது போல இருந்தது. தரையில் குனிந்து கூத்தனைத் தூக்கியவர் கைகளில் இளஞ்சூடாக ரத்தம் பரவியதும், சட்டென பதறிப்போய் அவனைத் தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்துவிட்டார்.  லோரிக்குப் பக்கத்தில் இங்கேயும் அங்கேயுமாய் என்ன செய்வதென்று புரியாமல் அலைந்தவருக்கு உடலெங்கும் நடுக்கம் பரவியிருந்தது. முட்டிக்கொண்டு வந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்க முயன்றார். எதையும் யோசிக்க முடியவில்லை. கூத்தனிடமிருந்து “அண்ணே..அண்ணே..”, என்று முனகல் கேட்டுக்கொண்டே இருந்தது. சட்டென்று ஏதோ நினைத்தவராய்த் தன் சட்டையைக் கழட்டிக் கூத்தன் தலையில் கட்டினார். அவனை அப்படியே தூக்கி லோரியில் போட்டுக்கொண்டு அந்த இடத்திலிருந்து லோரியைத் திருப்பினார். கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் அவர் கால்கள் முன்னைவிட அதிகமாக நடுங்கத் தொடங்கின. ஸ்டியரிங்கிலிருந்து பிடி நழுவியது. சேகர் அண்ணன் அவ்வளவு பலவீனமானவர் இல்லை. எத்தனையோ பேரைத் தனியாக எதிர்த்து நிற்கும் பலம் உள்ளவர்தான். ஆனாலும் அவர் பக்கத்தில் கிடந்த கூத்தன் அவருக்குள் இருந்த எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருந்தான். இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில் லோரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். மூர்த்திக்கு ஃபோன் போட்டவர், “டேய் மூர்த்தி…” எனத் தொடங்கி உடைந்து குழந்தை போல அழத் தொடங்கினார்.

ஒரு மாதத்தில் எல்லாம் மாறியிருந்தது. தலையில் பலமாக அடிபட்டதில் கூத்தன் மயக்கநிலைக்குப் போனவன் 10 நாட்கள் கழித்துத்தான் நினைவு திரும்பினான். காதுக்குப் பின்னால் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் காது கேட்கும் திறனை இழந்திருந்தான். சேகர் அண்ணனும், மூர்த்தியும்தான் மாறி மாறி அவனைப் பார்த்துக் கொண்டார்கள். கலவரத்தில் அடிபட்டிருந்ததால் போலீஸ் விசாரணையும் நடந்திருந்தது. ஹாஸ்பிடலுக்கு இரண்டு முறை வந்த கம்பெனி முதலாளி செலவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார். சேகர் அண்ணாவுடன் பேசியவர் தொடந்து சிகிச்சைகளைச் செய்ய உதவுவதாகவும் இப்போதைக்கு அவன் உடல் தேறியதும் அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடலாம் என்றும் சொல்லியிருந்தார். சேகர் அண்ணாவுக்குச் சூழல் புரிந்தது. அவரே கூத்தன் ஊருக்குப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். முஸ்தபாவில் பெரிய ஸ்பீக்கருடன் ஒரு மியூசிக் சிஸ்டமும், இன்னும் கொஞ்சம் பொருட்களும் வாங்கியிருந்தார். கம்பெனியிடம் பேசிவிட்டுக் கடைசி சில நாட்கள் அவர் கூத்தனைத் தன் வீட்டில்தான் தங்க வைத்திருந்தார். கூத்தன் காதுகளைச் சுற்றி பெரிய கட்டுப் போட்டிருந்தான். சேகர் அண்ணன் காது கேட்காமல் கூத்தன் நொடித்துப் போய்விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல கூத்தன் தனக்குக் காது கேட்காமல் போனது பற்றி எந்தக் கவலையும்  கொள்ளவில்லை. அவர் வாங்கி வந்திருந்த மியூசிக் சிஸ்டம் இருந்த பெட்டியை அடிக்கடி தடவிப் பார்த்துக்கொண்டான். பேச முடிந்தாலும் காது கேட்காத குறை என்பது கூத்தனைக் கொஞ்சம் சைகை மொழிக்குப் பழக்கியிருந்தது. அவன் சைகையால் பேசுவதை ரசிக்கும் மனநிலைக்குச் சேகர் அண்ணாவும் வந்திருந்தார். கூத்தனை அவர் லோரியில்தான் ஏர்ப்போட்டுக்கு அழைத்துப் போனார். மூர்த்தியும் கூட வந்திருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவசர அவசரமாக ஓடிவந்து தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.  எஃப்.எம் ரேடியோவைச் சத்தமாக வைத்துவிட்டு பின்னால் இருக்கும் மூர்த்தியைப் பார்த்துச் சிரித்தான். சேகர் அண்ணனும் வழக்கம் போல அதைக் கவனிக்காது  லோரியை ஓட்டிக்கொண்டிருந்தார்.

கூத்தன் செக்கிங் முடித்துப் போகும்வரை சிரித்தபடியே இருந்தான். அவன் நமக்காக நடிக்கிறானோ என்று கூட சேகர் அண்ணனுக்குச் சந்தேகம் வந்தது. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. மூர்த்தி மட்டுமே அவன் போகும்போது இமிகிரேஷனக்கு அந்தப்பக்கம் போய் குதித்துக் குதித்து கையை ஆட்டியபோது கண்கலங்கினான். கூத்தனை அனுப்பிவிட்டு திரும்பும் வழியில் சேகர் அண்ணன் எதுவும் பேசவே இல்லை. மூர்த்திக்குதான் அவருடைய அமைதி என்னவோ செய்தது. தானாக மெதுவாகச் சேகர் அண்ணனின் தோளைத்தொட்டு, “சேகர் அண்ணே! கூத்தன் குணமாகி வருவான்னே”, என்றான். சேகர் அண்ணன் கண்களில் லேசாகக் கண்ணீர் திரண்டது. வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அவர் மொபைல் அதிரத்தொடங்கியது. ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டவர் “சொல்லும்மா..”, என்று தொடங்கி சன்னமான குரலில் “ஆமாம்..” போடத்துவங்கினார். “சரிம்மா… சரிம்மா… அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன் மடியில தங்காதது அந்த முருகன் புண்ணியத்துல யார் வயித்துலயாவது போயி தங்கும்மா…”, என்று சொல்லிவிட்டுத் துண்டித்தவர் மீண்டும் மௌனமானார்.

லோரி வழவழப்பான சாலையில் காற்றில் மிதப்பதுபோல சென்று கொண்டிருந்தது. லோரி உள்ளே எதுவுமே நிகழாமல் சூன்யமாக இருப்பது போல இருந்தது. மூர்த்தி லேசாகக் கண்ணாடியை இறக்கினான். சட்டென்று காற்று ஆவேசமாய் உள்ளே நுழைந்தது. மூர்த்தியை கவனிக்காதது போல லோரியை ஓட்டிக்கொண்டிருந்த சேகர் அண்ணன் சிறிதுநேரம் கழித்து தானாகவே பேசத் தொடங்கினார். “அதில்லடா மூர்த்தி. தம்பி செத்துப்போயி வருஷங்கள் ஓடிடிச்சு. அவனுக்கு அப்புறம் எனக்கு இருந்த ஒரே பிடிப்பு ரேயாதான். எனக்கும் அவளுக்கும் பதினஞ்சு வயசு வித்தியாசம். அவ வேலை செஞ்ச வீட்டுலேர்ந்து அவளை மீட்டுத்தான் கல்யாணம் பண்ணேன். அப்பவே உடம்பெல்லாம் செதஞ்சுதான்டா வந்தா. அடிக்கடில்லாம் அவளோட ஒன்னால்லாம் இருக்கமுடியாது. அவளுக்கு உடம்புல இருக்கிற பிரச்சனைக்கு இனி புள்ளையெல்லாம் பொறக்காதுன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்குள்ள இருக்க வாழ்க்கை போதும்னு இருந்துட்டோம். கூத்தன் வீட்டுல இருந்த கொஞ்ச நாளா நான் வீட்டுல அளவுக்கு அதிகமா குடிச்சிகிட்டு இருந்தேன். நேத்துக்கூட ராத்திரி நான் ரேயாவோட சேர்ந்து நிறைய குடிச்சிட்டேன் போல. எவ்ளோ குடிச்சேன்னு தெரியல. ராத்திரியெல்லாம் நான் போதையில கூத்தனைப் பத்தி அவகிட்ட பொலம்பியிருப்பேன் போல. பத்துமலை போகணும்னு சொன்னேனாம்.”

இதெல்லாம் ஏன் சேகர் அண்ணன் தன்னிடம் சொல்கிறார் என்று மூர்த்திக்கு ஓரளவுக்கே புரிந்தது. இருந்தாலும் கரிசனத்தோடு கேட்பவன் போல கேட்டுக்கொண்டே வந்தான்.

அவனை ஒரு வினாடி பார்த்துவிட்டு திரும்பியவர், “இன்னும் வேணும்னா கண்ணாடியா இறக்கி விட்டுக்கோடா. சில நேரம் நாம லோரிய ஓட்டுறோமா? இல்ல அதுவா நம்மள இழுத்துட்டுப் போவுதான்னு தெரியல”, என்று சொல்லிவிட்டு முனகுவது போலச் சிரித்தார். அப்போது அவர் முகத்தில் அவருடைய மொத்த வாழ்க்கையையும் வழித்து வீசுவது போல ஒரு வறட்டுப் புன்னகை தோன்றி மறைந்தது.

மீண்டும் மூர்த்தியை பார்த்தவர் “ஏன்டா உனக்கும் கூத்தன் வயசு இருக்கும்”, என்றார்.

லோரி சாலையில் நழுவிக்கொண்டிருந்தது. ஒலி எஃப்எம்மில் விமலா ‘வணக்கம் சிங்கை’, நிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் ஊரில் இருக்கும் தன் உறவினரின் குழந்தைகள் பெயர்களை வரிசையாகச் சொல்லித் தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார்.

***

செந்தில்குமார் நடராஜன் – சிங்கப்பூரில் வசிக்கும் இவர். தற்பொழுது சிறுகதைகள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியத் திருவிழாவில் இவர் எழுதிய கதை முதல் பரிசு வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here