Tuesday, July 16, 2024

குளிர்ச்சி

ஐ.கிருத்திகா

கொல்லைப் படிக்கட்டு குளிர்ந்திருந்தது. மார்கழிப்பனி விளிம்பு ஓட்டு மடக்கிலிருந்து விடுபட்டுச் சொட்டியது. கொல்லைச்செடிகள் கண்ணுக்குத் தெரியாது அடர்த்தியான பனிப்பரவல். அம்மா செங்கல்லை அடுக்கித் தயாரித்திருந்த அடுப்பில் வெந்நீர் பானையை ஏற்றியிருந்தாள். இடுப்பு மட்டும் கரி ஏறி கழுத்தில் வெள்ளி மினுமினுப்போடு பானை பாந்தமாய் அடுப்பில் குந்தியிருந்தது.

“ரெண்டு பேருக்கு கேஸ் அடுப்புல போட வேண்டியதுதான… ப்சொன்னா ஒங்கம்மா கேக்கமாட்டா… பெருசா மிச்சம் பண்றதா நெனப்பு…”

அப்பாவின் பொருமல் அம்மாவின் புகைசூழ் இருமலில் காணாமல் போனது. ராதாவின் கையிலிருந்த செல்போன் திரையில் ஆறு ஐம்பது காட்டியது. இந்நேரத்துக்கு அவள் பிரணாயாமம் செய்து அரைமணி நேர உடற்பயிற்சியும், முக்கால்வாசி சமையலும் முடித்திருப்பாள். ஊருக்கு வந்ததிலிருந்து அதெல்லாம் விடைபெற்றுக் கொண்டன.

இருள் முற்றிலும் விலகி வெளிச்சம் பளிச்சிட்டது. அடுப்புத்தீ மேலெழுந்து தங்க நிறத்தில் திகுதிகுத்தது. தென்னையோலைகள் சடசடவென பற்றியெரிந்தன. அம்மா கண்களில் தளும்பிய நீரை உள்பாவாடையை இழுத்து துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

“டிகாஷன் எறங்கியிருக்கும். காபி போடுறேன்.”

ஒரு உரிக்காமட்டையை அடுப்பில் திணித்துவிட்டு உள்ளேப் போனாள். சிறு சிறு ஒளி வட்டங்கள் போல் நெருப்புத் துணுக்குகள் காற்றில் மிதந்தன. தீக்கொழுந்துக்கு மேல் வளிப்பிரதேசம் தளதளத்ததை ராதா ரசித்தாள். அடுப்பின் சூடு பக்கவாட்டில் வெதுவெதுப்பைப் பரப்பியது. ஊசி குத்தும் குளிருக்கு இதமான சூடு.

ராதா உடல் தளர்த்தி நெட்டி முறித்தாள். நைட்டியின் அடித்தட்டு அடிப்புறம் சிலீரென்று ஈரத்தை உள்பாவாடைக்கு கடத்தியது. ஏனோ எழுந்துகொள்ளத் தோனவில்லை. எங்கும் நிதானம். பூக்களின் உதிர்தலில், பறவைகளின் சிறகசைக்காத மென் பறத்தலில், மரக்கிளைகளின் ஸ்லோமோஷன் அசைவில் எதிலும் அது தொற்றிக் கொள்ளவில்லை. அது அங்கு இல்லவேயில்லை. ராதா பிறந்து வளர்ந்த ஊரில் இல்லாத அதை நகரத்தில் கண்டுகொண்டு பதட்டமடைந்தாள். இப்போதுகூட அது எங்காவது தென்படுகிறதா என்று பார்த்து ஏமாந்தாள்.

வேலியை ஒட்டிய தார்ச்சாலையில் எருமையொன்று அங்குல தூரத்தை அசைந்து, அசைந்து கடந்து கொண்டிருந்தது. வாயின் ஓரம்எச்சிலின் நுரையொழுகல். அது விடுபட்டு வெகுநேரமாயிருக்கும், தரையில் விழ இன்னும் வெகுநேரமாகும் என்றெண்ணி ராதா சிரித்தாள். காபியோடு வந்த அம்மா எழுந்து நின்ற ராதாவின் பின்புறம் ஒட்டிக்கொண்டிருந்த நைட்டியை சரிசெய்து விட்டாள்.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் எட்டுநாட்கள் மிச்சமுள்ளன. என்னவோ வரவேணும் போல தோனியதில் சட்டென கிளம்பிவிட்டாள். சேகர் எதுவும் சொல்லவில்லை. தருண்தான் முகம் சுருக்கினான்.

“எப்பவும் லீவுலதான போவோம். இப்ப என்ன புதுசா….அதுவும் தனியா….”

அவன் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒரு ஆயாசம். அழுத்தி வைத்தது போன்ற உணர்வில் மூச்சு முட்டியது. விடுபட்டால் தேவலாமென்றிருந்தது.

இரவில் கும்மிருட்டில் நெருங்கித் துழாவும் சேகரைப் பிடித்து தள்ளிவிட வேண்டும் போல ஒரு வெறி எழும்.

“வயசாவுதுல்ல… இன்னும் என்ன…”

“நாப்பத்தஞ்சு வயசு ஒரு வயசா… போடி இவளே…” என்று அவன் செய்வதை செய்து கொண்டேயிருப்பான்.

அவன் தன்னுடைய வியர்வை நெடிக்குக் கிறங்கிப்போய் நெருங்குவதை உணர்ந்து அவள் இரவு பாண்ட்ஸ் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டாள். வாரத்தில் நான்கைந்து நாட்கள் வேண்டாம் என்று அவளுக்குத் தோன்றியது. மாதத்தில் ஒருநாள் போதும் என்ற நிலையில் அவளிருந்தாள்.

ஐந்து மணிக்கு எழுந்து உடம்பைக் குறைக்க உடற்பயிற்சி செய்து, குளித்து டிபன், சமையல் முடித்து தருணைப் பள்ளிக்கும், சேகரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வாள். அந்நேரம் செல்போன் கையிலிருக்கும். குட்மார்னிங், லைக் இத்யாதிகளை அனுப்புவாள்.

“உனக்கு இப்பதான் விடிஞ்சிதா…, ராத்திரி ஓவர்டைம் பாத்தியா…..?” என்றெல்லாம் குறுஞ்செய்திகள் வந்து விழும். அதற்கு தகுந்தாற்போல் ஒரு ஸ்மைலியை தட்டிவிட்டு சமையல்கட்டு ஒழிக்க எழுந்து கொள்வாள். மீண்டும் பதினோரு மணிவரை வேலை இடுப்பொடியும்.

பாத்திரம் கழுவி, துணி அலசி, வீடு பெருக்கி, துடைத்து நடுவில் காபி, டிபனை முடித்துக் கொள்பவள் பதினோரு மணிக்கு மேல் அக்கடாவென்று அமருவாள். அதிலிருந்து மூன்று வரை ஓய்வுதான். இருந்தும் அந்த ஓய்வு சமீபகாலமாக அவளுக்குப் புத்துணர்ச்சியைத் தரவில்லை. அரவமற்ற அமைதி வெறுமையைக் கூட்டி மனதை பரபரப்படையச் செய்து கொண்டேயிருந்தது.

ஓரிடத்தில் தரிக்க இயலாத பரபரப்பு. நகரத்தின் பரபரப்புக்குச் சற்றும் குறைவானதாயில்லை அது. சிலசமயம் இழந்தவைகளை எண்ணி கண்ணீர் வந்தது. கணிதம் எடுக்க ஆசைப்பட்டு கிடைக்காமல் பாட்டனியைக் கட்டிக்கொண்டு அழுதாள். சுடிதார் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டவளை அப்பா அனுமதிக்கவில்லை.

“பாவாட, தாவணி போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் போனவளுக்கு சுடிதாரு மேல ஆச எப்புடி வந்துச்சு…?” என்ற பாட்டியின் கேள்வியிலேயே பதிலிருந்ததைப் பாட்டி உணரவில்லை.

டவுனிலிருந்து பாம்பே டையிங், சைனா சில்க் பாவாடைகள் ஆறு செட் எடுத்து வந்து அப்பா காட்டியபோது மனம் சமாதானமடையவில்லை. எல்லாம் பிடித்த நிறங்கள்தான். அப்பா தெரிந்துதான் எடுத்து வந்திருந்தார். இருந்தும் மனம் சுணங்கிப் போயிற்று.

கல்லூரியில் ராதாவையும் சேர்த்து ஏழெட்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் சுடிதாரில் வலம் வந்தனர். ஏனோ சாதாரணப்பார்வை கூட கேலிப்பார்வையாகத் தெரிந்து உடம்பைக் குறுக்க வைத்தது. திருமணத்துக்குப் பிறகு கொஞ்ச நாட்கள் சுடிதாரை இஷ்டம் போல் போட்டுக் கொண்டாள். சேகருக்கும் பிடித்திருந்தது.

“வீட்ல இருக்கும்போது எதுக்கு துப்பட்டா…” என்று பிடித்திழுத்து வம்பு செய்வான்.

“துப்பட்டா போடலைன்னா அசிங்கமாயிருக்குங்க…”

ராதா துப்பட்டாவை முன்னுக்கு நன்றாக இழுத்துவிட்டு பின்புறம் இரண்டு நுனிகளையும் முடிச்சிட்டுக் கொள்வாள். எண்ணி ஆறே மாதத்தில் குழந்தை உண்டாக சுடிதார் விடைபெற்றுக் கொண்டது. குழந்தை பிறந்த பிறகு உடம்பு ஊதிப்போனதில் ராதாவுக்கு சுடிதார் அலர்ஜியாகிப் போனது.

“வர, வர ஒடம்பு பெருத்துக்கிட்டே போவுது. அதை மொதல்ல கண்ட்ரோல் பண்ணு…..”

சேகருக்குப் பகலில்தான் கோபமெல்லாம். இரவில் பற்றியெரியும் காமத்தீயில் எண்ணெய் ஊற்றும் கைகள் ராதாவினுடையவை. சேகருடைய படுத்தலில் விடியக்காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தாள். ஆறுமாதத்தில் ஒரு சுற்று கூட இளைக்கவில்லை.

“மணி வீட்டு வேலியில மொடக்கத்தான் கொடி ஓடியிருக்கு. பறிச்சிட்டு வர்றேன்.”

அப்பா பையோடு கிளம்பிப்போனார். இளவெயில் முகத்தில் படர்ந்து முதுகில் ஊர்ந்தது. கைக்கு வந்த காபி டம்ளரை காலி செய்து வெகுநேரமாகியும் இருந்த இடத்தை விட்டு எழ ராதாவுக்கு மனசில்லை.

“குளிக்கிறியா….வெந்நீர் ஊத்துறேன்.”

அம்மா கையில் கரித்துணியோடு நின்றிருந்தாள். உள்முற்றத்தின் கடைசியில் சுவர் எழுப்பி கதவு போட்டு பாத்ரூம் உண்டாக்கியது ராதா கல்யாணத்தின் போது. கம்பி மேல் ஆஸ்பெடாஸ் சீட் போட்டதும் பாத்ரூம் முழுமையடைந்து விட்டது. அதற்குமுன்பு முற்றத்திலும், கிணற்றடியிலும் குளிப்பது வழக்கம்.

அம்மா பதமாக வெந்நீர் கலந்து வைத்திருந்தாள். பஞ்சாயத்து போர்டு நீர் கொட்டிக் கொண்டேயிருந்ததில் ராதா மொண்டு, மொண்டு குளித்தாள். குளியலின் நிமிடங்கள் நீண்டு கொண்டேயிருந்தன. அடுத்து கதவைத் தட்ட ஆளில்லாதது நிகழுலகு சஞ்சாரத்தை மறக்கடித்திருந்தது. தினந்தினம் பாடல்கள் பிறந்தன.

“மனசு தடுமாறும், நெனச்சா நெறம் மாறும்…”

இடுக்கின் வழியாக வழிந்த சூரிய வெளிச்சம் ஒரு தங்கநிறப் பூரான் போல தண்ணீரில் நெளிந்தது.

“தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ….”

ராதாவுக்குப் பார்க்கும் இடத்திலெல்லாம் பாடல்கள் இறைந்து கிடப்பது போல தோன்றிற்று. பாத்ரூம் முழுக்க பாடல்கள். பாத்ரூமுக்கு அப்பா குண்டு பல்பைப் பொருத்தியிருந்தார்.

“லைட்ட போட்டுக்கிட்டு குளி… உள்ள ஒரே இருட்டா இருக்கும். “

அம்மா தினமும் சொல்வாள். குண்டு பல்பின் டங்ஸ்டன் இழைகூட ஒரு பாட்டு கொடுத்து உதவியது.

“ஒளியிலே தெரிவது தேவதையா…”

தானே ஒரு தேவதையாகிவிட்டது போன்ற உணர்வு. உடம்பு பார்த்துக் குளித்து வெகுநாட்களாகிவிட்டன. அரக்கப்பரக்க சோப்பு தேய்த்து, தண்ணீரை வாரியள்ளி வீசிவிட்டு அவசரமாய் துடைத்துக் கொள்ளத்தான் நேரமிருக்கும். மஞ்சள் விளக்கொளியில் உடலை நிதானமாகப் பார்க்க அவ்வளவு ஆசையாயிருந்தது. ராதா மார்பில் கிடந்த தாலிக்கொடியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டாள்.

பொன்நிற முலைகள் சரிந்து தொங்கவில்லை. இறுக்கி வைத்தது போலில்லாமல் லேசாய் தளர்ந்திருந்தன. சோப்பு தேய்க்கும்போது பூரித்திருக்கும் முலைகளை ஒரு பொருட்டாக எண்ணியதேயில்லை. அதை நினைத்து தன்மேல் எரிச்சலாக இருந்தது. பெண்மையின் ரகசியம் போல பொங்கித் ததும்பி நிற்கும் அழகுகளைக் ராதா சுவரில் சாய்ந்து ரசித்தாள். நீர்பட்டு மினுங்கியவை இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தன.

“ராதா குளிக்கிறா… ஒக்காரு பாத்துட்டுப் போவலாம்.”

அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதன்பிறகு என்னென்னமோ பேச்சுக்கள் காதில் விழுந்தன. பொருளற்ற சொற்கள் போல அவை மனவெளியில் பதியாமலே விலகிப்போயின. அங்கு இருந்த பத்து நாட்களும் நின்று நிதானித்து குளித்தாள். சொரசொரத்த சிமிண்ட் தரையில் குதிகால்களை அழுந்த தேய்த்தாள்.

லேசாக உப்பியிருந்த வயிற்றில் ஓடிய பிரசவ ரேகைக்கோடுகள் கூட கண்ணுக்கு அழகாகத் தெரிந்தன. மார்பு பிளவிலிருந்த கடுகளவு மச்சம் சேகரை ஞாபகமூட்டியது.

“இந்த மச்சத்துக்கு இருக்க அதிர்ஷ்டம் எனக்கில்லையே…” என்று அடிக்கடி அவன் அலுத்துக் கொள்வான்.

அவன் நினைவு அடிவயிற்றில் சிலீரென்று படர்ந்து கிளை, கிளையாய் விரிந்து அப்படியே கீழிறங்கிற்று. முடக்கத்தான் கீரையின் காற்றடைத்த காயை உள்ளங்கையில் ஓங்கி அடித்தால் உண்டாகும் வெடிப்பு போல உள்ளே ஒரு திறப்பு. நாட்களாகிவிட்டதான உணர்வில் உண்டான திறப்பு அது. அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியில் அதை நிகழ்த்திக்கொள்ள மனசு பரபரத்து, சட்டென அது நிகழ்ந்தும் முடிந்துவிட்டது.

உடல் தளர்ந்து போனது. படபடப்பு அடங்க சில நிமிடங்களாயின. அதன்பிறகு அப்படியொன்று நடக்கவேயில்லை. ராதா இயல்பானவளாகிப் போனாள். போனில் பிள்ளையும், கணவனும் பேசியபோது சம்பிரதாயமாகப் பேசினாள். அரைத்து வைத்துவிட்டு வந்த தோசைமாவு தீர்ந்துவிட்டதாகச் சொல்லி சேகர் அலுத்துக்கொண்ட போது உம் கொட்டினாள்.

கூடத்து முற்றம் அதிக ஆழமில்லாது மேலோட்டமாக இருந்ததில் கால் நீட்டி குறட்டிலமர்ந்து கொள்ள வசதியாயிருந்தது. வாட்சப் பார்க்க, எதிர்வீட்டு, பக்கத்துவீட்டு அக்காக்களுடன் கதை பேச நல்ல தோது. முற்றத்தில் கட்டம் போட்டு சுற்றி அமர்ந்து பெண்கள் தாயம் விளையாண்டார்கள். ராதா நிதானமாக உள்ளங்கைகளில் வெண்கல கட்டைகளை ஆறேழுமுறை உருட்டி பின் கீழேபோட்டாள்.

பதினோரு மணிவாக்கில் அம்மா டீ தந்தாள். ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்ட டீ. பரீட்சை சமயத்தில் கண் விழித்துப் படிப்பவளுக்கு அம்மா பார்த்து, பார்த்து செய்வாள். இரவு சாப்பாடு முடித்து சமையலறை ஒழித்து கழுவிவிட்டு அந்த ஈரத்தில் நின்று கொண்டு ஏலக்காய், இஞ்சியை சேர்த்து அம்மியில் வைத்து நசுக்குவாள். அந்தச் சத்தம் கேட்டதுமே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். .

“ரொம்ப நேரம் கண்ணு முழிச்சிப் படிச்சா உஷ்ணம் அதிகமாயிடும்.
குளிக்கறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி தொப்புள்ல எண்ணெய் வச்சிக்க.”

அம்மா வைக்கும் வரை விடமாட்டாள். இப்போதும்கூட போனில் வாரம் ஒருமுறையாவது சொல்லிவிடவேண்டும் அவளுக்கு. ராதா இடது கையைக் குழித்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதை வயிற்றில் தேய்த்துக் கொண்டாள். வெண்பட்டில் பதிக் டிசைன் போட்டதுபோல வயிறு பளபளத்தது. கோடுகள் சில இடங்களில் அகன்று அப்படியே சில இடங்களில் கீறல் போல நீண்டிருந்தன. எண்ணெய் குளிர்ச்சி உள்ளிறங்கி அடிவயிற்றை மலர்த்திச் சில்லிட்டது.

“ரெண்டு மாரும் கல்லாட்டம் கனக்குது. வலி வேற… தாங்க முடியாம டாக்டர்ட்ட ஓடுனேன். டாக்டரம்மா எதையாவது சொல்லி தொலைச்சிடுமோன்னு பயம். அந்தம்மா நல்லா கைய வச்சி தடவிப்பாத்துட்டு ஒரு கேள்வி கேட்டுச்சி….”

எதிர் வீட்டு விமலாக்கா சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“என்னாக்கா சொன்னாங்க….?”

ராதா ஆர்வமாய் கேட்டாள்.

“புருசன் ஒங்ககூட இல்லியான்னு கேட்டுச்சிப் பாரு. ஒரே அவமானமாப் போச்சி ராதா. “

விமலாக்கா தலையில் கைவைத்துக் கொண்டாள். விமலா புருஷனுக்குத் திருப்பூரில் வேலை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்து போவான். அதுவும் சிலநேரம் முடிவதில்லை. அவன் வரும் நேரத்தில் சமய சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் உண்டு.

“எங்க ராதா, பத்து நாளைக்கி முன்னாடி வந்தாரு. நான் வீட்டு விலக்காயி இருந்தேன். வாழ்க்கை எப்படியோ ஓடுது போ…”

அவள் சலித்துக் கொண்டாள். திண்ணையில் அமர்ந்து பேசும் கதைகள் அந்தரங்கமானவை. தெருப்பெண்கள் போகும் போதும், வரும்போதும் ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். இரவின் சுவாரசியங்கள் திண்ணை வெளியெங்கும் மலர்ந்து கிடக்கும். பூசி மெழுகிய கதைகளைவிட போட்டுடைத்த கதைகளே அதிகம். அப்போது அம்மா வெளியே வரமாட்டாள். முன்பெல்லாம் ராதாவுக்கு மறுக்கப்பட்ட கதைகள் இப்போது தாராளமாகக் கொட்டி வழிந்தன.

“வரவர எனக்கு அதுல நாட்டமேயில்லடி. ராத்திரிய நெனச்சாலே வெறுப்பா இருக்கு. அவருக்கு கோவம் வருது. ஏன்டி இப்புடி… நாப்பது வயசானாலே இப்புடியாவுமா… ஒனக்கு எப்புடி….?”

உடன் படித்த காவேரி கேட்டபோது ராதா மழுப்பி விட்டாள். இரவில் அதைப் பற்றி யோசித்தபோது சிரிப்பு வந்தது. விஸ்தாரமான கூடத்தில் சுவரோரம் அப்பா படுத்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார். நடுவில் அம்மா முந்தானையை மேலே விசிறி விரித்து விட்டபடி வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அதற்கடுத்து ராதா படுத்திருந்தாள். இரவு விளக்கின் மெலிதான வெளிச்சத்தில் வௌவால்கள் ஒன்றிரண்டு அவ்வப்போது பறப்பது கண்ணுக்குப் புலப்பட்டது.

பாட்டி இருந்தவரை அறைக்குள் படுத்துக் கொள்வாள். ஒரு சாமியறையும் உண்டு. நினைவு தெரிந்த நாளிலிருந்தே கூடத்தில்தான் படுக்கை. பாதி இரவில் கண் விழித்துப் பார்த்தால் அம்மாவும்,அப்பாவும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பார்கள். அம்மாவுக்குப் பத்தொன்பதில் திருமணம். அப்பாவுக்கு அப்போது இருபத்தைந்து. திருமணமான மறுவருடமே ராதா பிறந்துவிட்டாள்.

பிறந்ததிலிருந்து இருபத்தியிரண்டு வயதுவரை அவர்களுடனே படுத்திருந்ததை எண்ணி சுருக்கென்றிருந்தது. தருண் பத்து வயதிலிருந்து தனியே படுக்கப் பழகிவிட்டான். அறைச் சுவர்களில் அவனுக்குப் பிடித்த கார்ட்டூன் படங்களை ஒட்டியதும் அவனது உற்சாகம் கரைகாணாது போயிற்று. மெத்தை விரிப்பும் கூட அழுத்தமான நீலத்தில் ஸ்பைடர்மேன் வரைந்தது. மேற்கூரையில் நட்சத்திரங்களும், நிலவும் ஒளிர்ந்தன. இருட்டில் ஒளிரும் ஸ்டிக்கர்களை சேகர் ஏகத்துக்கு வாங்கி வந்து ஒட்டியதும் தருண் பிடிவாதமாக தனியே படுத்துக் கொண்டான். சேகருக்கு வேலை சுலபமாகிப் போனது.

ராதா புரண்டு படுத்தாள். அரவங்களடங்கிய இரவின் மடியில் குழந்தைகளாகி விளையாட அம்மா, அப்பாவுக்கு சந்தர்ப்பம் வாய்க்காது போனதில் தன் பங்கு இருந்ததாக எண்ணியவளுக்குத் தூக்கம் தொலைந்து போனது.

‘பாட்டியாவது என்னைத் தன்னுடன் அழைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது அம்மா, அப்பாவை அறைக்கு மாற்றி என்னுடன் கூடத்தில் படுத்துக் கொண்டிருந்திருக்கலாம்.’
நினைத்துக் கொண்டாள்.

சந்தர்ப்பம் வாய்க்காது போனதாக எண்ணி குமைவது தவறென்று திடீரென அவளுக்குப் பட்டது. தாழ்வாரம் கூட களமாக அமைந்திருக்கலாம் என்றெண்ணி அவள் சுய சமாதானம் செய்து கொண்டாள். அதன்பிறகே மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

தருண் ராதாவை வரச்சொல்லி வற்புறுத்தினான்.

“இன்னியோட ஆறு நாளாச்சும்மா நீ போயி…”

அலைபேசியில் வேகமாகச் சொன்னான். பாக்கெட் மாவு தோசை சப்பென்று இருப்பதாக சொல்லி சலித்துக் கொண்டான். சேகர் ராட்டி தட்டுவது போல கனமாக ஊற்றித் தருவதாக புகார் கூறினான். அம்மா கவலைப்பட்டாள். இங்கு வந்தால் அவனுக்கு ராஜ உபசாரம் நடக்கும். அம்மாவுக்கு நீர் உருண்டை, புளிக்கூழ், மோதகம், சுருள் போளி, மோர்க்களி செய்யவே நேரம் சரியாக இருக்கும்.

வெயில் தாழும் நேரங்களில் அம்மா சமையற்கட்டில் கிடந்து உழலுவாள். கோடை விடுமுறைக்கு வரும் தருண் கூடத்திலமர்ந்து தாத்தா, கையில் கொண்டுவந்து தரும் தின்பண்டங்களைக் கொறித்தபடி டிவி பார்ப்பான்.

“பாவம் ராதா, புள்ள இளைச்சு போயிருப்பான்.”

அம்மா, ராதாவுக்குப் பூரான் சடை பின்னி விட்டாள். வரிவரியாய் இழையோடிய பூரானில் எண்ணெய் மினுமினுப்பு ஏறியிருந்தது. வந்ததிலிருந்து அம்மாதான் தலைக்கு எண்ணெய் வைத்து விடுகிறாள்.

“ஓடு காய்ஞ்சிடும். மயிர்க்கால்ல படற மாதிரி தடவணும். “

சிறுவயதில் விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டுப் பகுதி, பகுதியாகப் பிரித்து தேய்த்து விடுவாள். இப்போதும் அப்படித் தேய்த்து இறுகப் பின்னிவிட்டாள். பூரானில் ஒரேயொரு வெள்ளிமுடி கடைசிவரை நீண்டிருந்தது.

“நாப்பதுதான் ஆவுது. அதுக்குள்ள நரை முடி வந்துடுச்சு. எனக்கெல்லாம் அம்பதுலதான் நரைக்கவே ஆரம்பிச்சுது.”

அம்மாவுக்கு சொல்லி மாளவில்லை. கூடம் குளிர்ந்தது. அப்பா முற்றத்தை மறைத்து சாக்கு படுதா கட்டியிருந்தார். அது சிறிதளவு குளிரை மட்டுப்படுத்தியிருந்தாலும் ராதாவுக்கு வெடவெடத்தது.

“டவுன்ல இவ்ளோ குளிரு கெடையாது. வீடு பொட்டி மாதிரி இருக்கும். இங்கதான் நடுவுல தொறந்து கெடக்கே…”

அம்மா, அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். இரவு நீண்டுகொண்டேப் போவதாக ராதா நினைத்துக்கொண்டாள்.

“மார்கழியில பகல் கம்மி, ராப்பொழுது அதிகம்.”

அம்மா சொன்னாள். நீண்ட நேரத்தூக்கம் இரவை நீட்டிப்பதாக ராதா சொல்லவில்லை. அம்மா ஐந்து மணிக்கு எழுந்து கொண்டாலும் பூனை போல நடமாடினாள். அப்பாவையும் கடிந்து கொண்டாள்.

“கால தேய்ச்சு, தேய்ச்சு நடக்காதீங்க. ராதா முழிச்சிக்குவா.”

கனத்த போர்வைக்குள் சுருண்டு உறங்கும் ராதாவின் காது மடல்கள் சதா சில்லிட்டிருந்தன.

சேகர் வந்திருந்தான். பத்துநாள் கணக்கு முடிந்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தான். தருண் டிவி முன் அமர்ந்துவிட்டான். அம்மா தடபுடல் பண்ணிக் கொண்டிருந்தாள்.

“நாளாச்சுல்ல. நீ போய் பேசிக்கிட்டிரு. நான் பாத்துக்கறேன்”

ராதாவை அனுப்பி வைத்தாள். சேகர் கிரே நிற சட்டை அணிந்திருந்தான். கருப்பு பேண்ட் அதற்குப் பொருத்தமாயிருந்தது. ரோமங்களற்ற தாடை பளிச்சிட்டது. முடிக்கு ஷாம்ப்பூ போட்டு அலசியிருந்தான். அது காற்றில் அலைந்து பளபளத்தது. சேரில் சாய்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு கால் முட்டியில் வைத்திருந்தான். ராதாவுக்குப் புதிதாய் பார்ப்பது போல கொஞ்சம் வெட்கமாயிருந்தது.

“அம்மாவோட கவனிப்பு ஒடம்புல தெரியுது.”

அவன் கண்ணடித்தான். ராதா சிரிப்பை மறைத்துக்கொண்டு,

“என்ன தெரியுது…?” என்றாள்.

“வீட்டுக்கு வா சொல்றேன்.”

அவன் அம்மா தந்த காபியை வாங்கிக்கொண்டான்.

“சனி, ஞாயிறு லீவுதான… இருந்துட்டுப் போவலாமே…”

அம்மா சம்பிரதாயமாகச் சொன்னாள். அவன் இருக்க மாட்டானென்று தெரியும்.

“இல்ல, போகணும். வேலை இருக்கு…”

அம்மா இதை எதிர்பார்த்தவள் போல நகர்ந்து போனாள்.

“நெறைய வேலை இருக்கு.”

சேகரின் பார்வை தன்மேல் நிலைத்ததில் ராதாவுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டுக்கொண்டன. உடல் முழுவதும் குளிர்ந்தது. அடிவயிற்றில் சிலீரென்று ஏதோ பாய்ந்து கிளை, கிளையாய் விரிந்து அப்படியே கீழிறங்கியது. ராதா தலைகுனிந்து கொண்டாள்.


ஐ.கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிவரும் இவரது கதைகள் பல்வேறு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘உப்புச்சுமை’ மற்றும் ‘நாய்சார்’ ஆகியன வெளியாகியுள்ளன.
kiruthigaiyyappan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular