ஸ்ரீராம் கலியப்பெருமாள்
ஏய்ய்ய்ய்… லெட்சு நில்ரா டே….
எதிர்பார்த்த சாவித்திரி அத்தையின் குரலது. இட்லி கடையில் போட்டது போட்டபடி இருக்க கொண்டையை முடிந்தவாறு செருப்பணியாத காலோடு வேகமாய் வந்த சாவித்திரி அத்தையின் குரலைக் கேட்டதும் வண்டியை நிறுத்தினான் லட்சுமணன். “அத்த ஏறுங்க” என சொன்னான். பெரிதளவு பதற்றமின்றி ‘அன்பரசன்ட்ட போடா‘ எனச் சொன்னாள்.
அன்பரசன் ஆஸ்பத்திரியை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். பட்டுக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான கோட்டைகுளம், பாளையம், ஆனைவிழந்தான் குளம், வெட்டிக்காடு, சாந்தாகாடு பகுதிகளில் நிகழும் சண்டை சச்சரவுகளில் காயப்பட்டவர்களை உடனடியாக உள்வாங்கிக்கொள்ளும் ஒரேயொரு ஆஸ்பத்திரி. பழனி மாமாவை அங்குதான் கொண்டு போயிருப்பார்களென சாவித்திரி அத்தை நம்பினாள். லட்சுமணன் வண்டியை வேகப்படுத்தினான்.
செட்டிதெரு வேகத்தடையை தாண்டியதும் “இந்த குச்சிக்காரி பயல்ட்ட சொன்னனே, அவன் கேக்கலயே. என்ன பண்ணி வச்சிருக்காங்களோ” என அத்தை அரற்றத் தொடங்கினாள். அவளுக்குள் எழுந்த குருதியலைச் சித்திரம் லெட்சுமணனின் வண்டியை அங்குமிங்கும் அசைத்தது. அத்தை திடமான நிலைக்கு வர நொடிகள் ஆனது.
பழனி மாமாவுடனான முப்பதாண்டு கால திருமண வாழ்க்கையில் இந்த குளத்துக்கரையில் அத்தை பார்க்காத ரத்தமில்லை. திருமணம் நடந்த ஆறு மாதத்திலேயே சாராய வியாபாரத்தில் ஏற்ப்பட்ட தகராறில் கொழுந்தனாரை பெரியாஸ்பத்திரி பிணக்கொட்டாயில் பார்த்த கோலம் இன்றும் மறவாது. பிணத்தை வீட்டிற்கே கொண்டு வராமல் எரித்து முடித்தனர்.
கொந்தளிப்பான நினைவுகளுக்குள் இருந்த அத்தையை லெட்சுமணன் பேச்சு கொடுத்து திசை திருப்பினான். “இந்த மணி பய இப்டி செய்வான்னு நெனக்கல” என்றான்.
பெரியாஸ்பத்திரி வாசலில் வண்டியை நிறுத்தியதும் அத்தை உள்ளே இறங்கி ஓடினாள். அவளின் கதறல் ஆஸ்பத்திரியில் இருந்த புறாக்களையே எழுந்து பறக்கச் செய்தது. லட்சுமணன் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான்.
ஆஸ்பத்திரி வாசலில் நின்றுகொண்டிருந்த பழனியின் பங்காளிகள் கோபமுற்று நின்றுகொண்டிருந்தனர். “எப்புட்ற்றா போனாங்கெ அந்த குச்சிக்காரி பயல என்ன பண்றேன்னு பாரு ஆய் அப்பன் ஒரு கண்டரோலி பயலகூட விடக்கூடாது’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். ஆனால் பதிலுக்கு சம்பவம் செய்யும் தாட்டியக்காரர்களாய் அவர்களில் ஒருவனுமில்லை.
“பட்டுக்கோட்ட ஆளுவலாம் வெட்டி புட்டாங்களாம். காது சல்லட தெரியிற மாதிரி பண்டாங்களாம்” ஆஸ்பத்திரியிலிருந்த மூதாட்டிகள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். லெட்சுமணனுக்கு பயம் தொற்றியது.
01
கொளத்துக்ரையில பக்கத்து அக்கத்து வீட்ல உள்ள எல்லாரையும் அத்த, மாமான்னு தான் கூப்டுவோம். இந்த வழக்கத்திற்கு சாதி வேற்றுமையில்லை. ஊர்ல குடியேற நெனக்கிற ஒருத்தேன் சாதியை விட்டா நல்லது. இல்லன்னா விட்ட மாதிரி காட்டிக்கிறது நல்லது. பாவம் பழனி மாமாவால ரெண்டுல ஒன்னாக்கூட இருக்க முடியல.
தெக்க இருந்து வந்து மூனு தலமொற ஆயுமே, அந்த பெரும அவருக்கு தேவப்பட்ட ஒண்ணாதான் இருந்துச்சு. பட்டுக்கோட்டைய பொறுத்த வரைக்கும் வன்முறைங்கிறது நிலத்தின் உறுதிமொழி. இவன் கையில்தான் சூலம் ஏறும்னு தீர்மானிக்க முடியாது. அன்னக்கி நடந்தது மணி கையில ஏறின சூலத்தால. எங்க மண்ண பொருத்தவரைக்கும் சில எடத்துல பணமாயும் சில எடத்துல ஆயுதமாயும் சூலம் உருவங்கொள்ளும்.
எப்போதும் போல நாடார் கடை வாசல்ல பீடி அடிச்சிட்டு இருந்த மணி சபரிமலைக்கு மால போட்டு இருந்தான். பழனி மாமாவுக்கு மணியைப் பிடிக்காது. “பண்டார பய நம்ம முன்னாடி பீடி குடிக்கிறதான்னு கடுப்பு” அவருக்கு இருந்தது.
முன்னொரு காலத்தில் பழனி மாமா ரவுடியாக இருந்தாராம். சிவகங்கையில யாரையோ கொன்னுட்டு ஜெயிலுக்கு போனதா சொல்வாங்க. ஊருல குடிச்சுப்போட்டு சச்சரவுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவரு மயேன் பொன்னாண்டி எங்களுக்கு சிநேகிதென். பிஞ்சிலேந்து எங்ககூட பழுத்தவன். “அப்பன் இப்படி பண்றான் கண்டிச்சுடு மாப்ளன்னு” பசங்க சொல்லியும் கேக்கல.
வண்டிபேட்ட சந்துல வந்து நாடார் கட முக்கத்த தாண்டிய பழனி மாமா வழக்கம் போல போதையிலிருந்தார். பீடி அடிச்சிட்டு இருந்த மணி பழனி மாமாவைப் பார்த்தான். பீடியை அணைச்சு குண்டிக்கு பின்னாடி மறைச்சு வைச்சான். மாமா போனதும் அடிக்கலாமென்று அப்படியே அமர்ந்திருந்தான்.
‘ஏ மணி இங்க வா. அவ்வளோ ஆடம்பரப் புண்ட ஆயி போச்சா’
என்று கன்னத்தில் விழுந்த அறை மணியைக் கோபப்படுத்தியது.
“மாமா நாதான் உங்கள பாத்து பின்னாடி மரச்சன்ன அப்பறம் ஏன் மாமா கை வக்கிறிங்க” என்று குரல் தழுதழுக்கக் கேட்டான். மணி கண்களைக் கசக்கிக்கொண்டு அங்கிருந்து விலகி நடந்தான். மணியை பழனி மாமா அடித்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திருப்பி அடித்துவிடவேண்டுமென வெறி கொண்டிருந்தோம். மணி தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் நின்றுகொண்டு அழுதான். மணியின் அப்பா அவனை அழைத்துக்கொண்டு நேராக பழனி மாமா இருந்த இடத்திற்குச் சென்றார். நிறை போதையிலிருந்த பழனியைப் பார்த்து மணியின் அப்பா ‘என்னத்துக்குயா என் புள்ளைய கை வச்ச. அவன் பீடி குடிக்கிறான். கஞ்சா குடிக்குறான். அத நாம் பாத்துக்குறேன், உன் சண்டியர் தனத்த என் பிள்ளைட்ட காட்டாத” என்று பயம் மிரட்டச் சொல்லி முடித்தார். மது அருந்தியபடியிருந்த பழனி மாமா மணியின் அப்பாவை கன்னத்தில் அறைந்தார். மணி கண்ணீர் வழியும் கண்களோடு தனது தந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். மழை பொழியத் தொடங்கியது. மண் மணம் எழுந்தது. மணி தனது கண்களை மூடிக்கொண்டு நாசிவரை இழுத்தான். மழை முழுதும் பழனியின் ரத்த வாடை பெருகும் நினைப்பு அவனை கிளர்ந்தெழச் செய்தது.
02
“ஏய் லெட்சு ஒரு நிம்சோம் வாயேன். வந்து வண்டிய எடேன்”. இருவரும் பேசிக்கொண்டே பயணப்பட்டனர். மணி பீடியை அடித்துக்கொண்டே பேச்சினைத் தொடர்ந்தான்.
“மச்சான் அவன அடிச்சுற்றுவோம் டா”
“வேணா மச்சான் அடிச்சுடாத. சும்மா ரெண்டு ஓட்டுடோட்டி விடு. இல்லனா ஒரு வெட்டு வெட்டி விடு” என்றான் லெட்சு.
‘ஏண்டா டே எழவு புண்ட ஒரே திரியா முடிச்சுட்டா போதும். இல்லான்னா தேவ இல்லாம நோண்டிட்டே இருப்பான் டா” என்று பதில் சொன்ன மணிக்கு ஆறுதல் சொல்ல எதுவுமில்லை. நாங்கள் இருவரும் சரத் அண்ணாவின் இடத்திற்கு சென்றோம்.
‘வா லெட்சு.. என்ன ஆளே இந்த பக்கம் காணோம்”
“அப்பாவோட தங்களுக்கு போயிறேன் அதான்”
மணி சரத் அண்ணாவின் கைகளைப் பற்றி “எனக்காக பண்ணி குடுங்க எங்க அப்பன கை வச்சிட்டான் பழனி புண்டா மயேன்”
சரத் எதுவும் பேசமால் இருந்தார். இதைச் செய்யத்தான் வேண்டுமாவென யோசித்தார். ஆனால் மணி கொஞ்சம் சத்தமாக குரல் எழுப்பி சிங்காரண்ணே நீ மட்டும் வா என்றான்.
கோபம் கொண்ட சிங்காரம் “இருடா சுன்னி எல்லாத்தையும் யோசிக்கணும்ல” என்றார். அன்றைக்கு மணியும் தந்தையும் பழனியின் இடத்திலிருந்து வெளியேறிய போது பெய்த மழையின் தொடர்ச்சி பொழியத் தொடங்கியது. மண் மணத்தது. தனது கண்களை மூடிக்கொண்டு நாசிவரை உள்ளிழுத்து உள்ளே பெருகும் காட்சியை நினைத்து மிக ரகசியமாய் சிரித்துக் கொண்டான்.
03
“அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து, காத்து மன்னிக்க வேண்டும். சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் . காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!”
இதை கவனித்த சிங்காரம் கஞ்சாவின் இறுதி இழுவையைச் சுவைத்தபடி “மன்னிப்பு குடுத்தா தாண்டா கடவுளு” என்றார். கல்லுப்பட்டற வழியில பின்னால போய் அடிச்சிரலாம்னு பிளானு. லைன் பாத்து எல்லாரும் ஸ்பாட் அட்டென் பண்டங்கே. சிங்காரன்னே சின்ன கை சாமானோட கிளம்பினாரு. ‘நாடார் கட கிட்ட நிக்கிராப்ள மேப்படியான் கார்த்தி பாத்துட்டானாம். எறங்கி அடிச்சுடாலாம்” என்றார்.
பழனிமாமா சுகமா பீடி குடிச்சிட்டு இருந்தாப்ள.
சரத் அண்ணே சிங்காரண்ணே ரெண்டு பேரும் மாமாவைக் கையோட மடக்கி பிடிக்க மணி ஸ்குவாடோட தோன்றினான். அட்ரா மணின்னு சொல்லி முடிப்பதற்குள் சரத் அண்ணே மாமாவின் காதுமடலைக் கொத்தினார். மணி பழனி மாமாவின் நெஞ்சில் ஏறி மிதித்தான். பழனி மாமா நிலத்தில் குருதியோடு விழுந்தார். அப்பொழுது எதுவும் அறியாத பச்சை பிள்ளை போல நாடார் கடையை தாண்ட முற்பட்டான் லெட்சு.
சிங்காரண்ணனும் சரத்தண்ணனும் வண்டிபேட்டை மறவாடி வழியால் ஓடி மறைந்தனர். சந்தில் இருந்து ஓடி மறைந்தான் மணி. லெட்சு வண்டியில் செல்வதைக் கண்ட சாவித்திரி அத்தை குரல் கொடுத்தாள்.
ஏய் லெட்சு……….
04
ஆஸ்பத்திரிக்கு முன்னால் நின்றுகொண்டு நடந்தவற்றை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் லெட்சு. எல்லாம் முடிந்து போயிருந்தது. மழை மெல்லிய தூறலாய் பெருகத் தொடங்கியிருந்தது. அவன் கண்களை மூடி கொஞ்சநேரம் மூச்சை உள்ளிழுத்தான். மண்ணின் மணம் வந்தது. சாவித்திரி அத்தையின் அழுகுரல் ஓலமாய் எழ மழையின் வீச்சு கூடி நின்றது.
***
ஸ்ரீராம் கலியப்பெருமாள் – பட்டுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட இவர் தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார். மின்னஞ்சல்:realelephant26@gmail.com