இவான் கார்த்திக்
இயல்பாக, இறந்தவர்களை மறந்துவிடுதல் எளிது. ஆனால் அகால மரணங்களை நம் மனம் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவை நம்மேல் கடவுளின் சாபம் போல் வந்து விழுபவை. அப்படியொரு மரணம் என் சொந்த அனுபவத்திலும் நடந்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது போன்ற அனுபவங்கள் நம்மை விடாமல் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருப்பவை.
எழுத்து வடிவில் இந்த அனுபவங்கள் எழுதப்படுமானால், எப்படிப் பார்த்தாலும் நேரடியாகச் சாமானியர்களை பாதிப்பதில்லை (ஒரேயொரு விதிவிலக்கு இறந்தவர் உங்களுக்கு நெருக்கமானவர் எனில்) அதே வேளையில் அவை உண்டாக்கும் வீரியமும் இயல்பாகச் சொற்களை வாசித்துக் கற்பனையாக்கி பின் சிந்தித்து கருத்துக்களாகவோ உணர்வுகளாகவோ மாற்றி அதனுள் உழலும் மனம் மட்டுமே அடையக்கூடியது. காலனியாதிக்கத்தின் மோசமான விளைவுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நீடித்த நாடுகளில் மேற்சொன்ன எழுத்துவடிவம் மக்களிடம் நேரடியாகப் பேசவோ நீதியை உணர்த்தவோ எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம். காந்தி இன்னும் நம் நாட்டில் அதிகமானோரால் புரிந்துகொள்ளப்படாமல் இருபதற்கு காரணம் அவர் எழுத்தில் இயங்கியவர் என்பதே என் கருத்து.
ஓர் ஓவியன் தன் ஓவியங்களை நீதிக்கான ஆதாரமாக பயன்படுத்தி இனப்படுகொலையை, தன்னைச் சுற்றி காற்றில் கரைந்து தடயமற்றுப் போன, தன்னால் மட்டுமே அடையாளம் காணமுடிந்த அப்பாவி உயிர்களின் ஆத்மாக்களுக்காக அதன் உண்மைத்தன்மையை மக்களிடம், இளம் தலைமுறையிடம் நிரூபித்த கதையாக அமைகிறது இந்த Vann Nath – Painting the Khmer Rouge என்ற வரைகலை நாவல்.
வரைகலை நாவலின் சாதகமான அம்சம் அது ஒரு ஓவியத்தைச் சுட்டி நேடியாகக் கதையினுள் காட்சியாக நம் கற்பனைக்குள் அதனை நிகழ்த்திச் செல்கிறது. கூடவே கதாபத்திரங்களின் உரையாடலும் குறிப்புகளும் மேலதிகமான உணர்வுகளை உருவாக்கக் கூடியவை. எல்லாவற்றையும் மொழியாக்கும் மனம் ஓவியங்களை நேரடியாக மொழியற்ற நிலைக்கு சில கணங்கள் இட்டுச் செல்கின்றன. அதில் உணர்ச்சிகள் மட்டுமே நிரம்பியிருக்க அதன்வழி கதாபாத்திரங்களுடன் இணைந்துவிடுகிறோம். ஆசிரியர் மாத்யூவின் (Matteo Mastragostino) கதைக்கு அர்மாண்டோ (Armando Mìron Polacco) ஓவியங்களை வரைந்துள்ளார். மாத்யூ இதற்குமுன் ஒரு வரைகலை நாவல் எழுதியுள்ளார். பிரைமோ லெவி (Primo Levi) எனும் யூதர், அறிவியலாளர் போலந்து நாட்டில் இருக்கும் ஆஸ்ட்விச் வதைமுகாமிலிருந்து பிழைத்து வந்தவரின் கதையை அதன் வரலாற்று ஆவணங்களிலிருந்து பெற்று புனைவாக்கியிருக்கிறார். இந்த நாவலும் அதேபோன்று வரலாற்றின் மேல் எழுதப்பட்ட மற்றுமொரு புனைவு. வரலாறு ஆண்டுகளாகவும் பெயர்களாகவும் சிறு குறிப்புகளாக மட்டுமே நாவலில் வருகின்றன. மேலதிக வாசிப்பு நாவல் சம்பவங்களை மேலும் உணர்வுப்பூர்வமாக அணுக வாய்ப்பளிக்கும்.
பிரான்சு, சீனா, வியட்நாம், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் கம்போடியாவின் அரசியல் சமூகவியலில் முன்பிருந்தே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக அரச பரம்பரையிலிருந்து வந்த நார்டொம் நிஹ்னோக் (Norodom Sihanouk) 1955-ல் பிரான்சின் வெளியேற்றத்திற்கு பிறகு அதிபராகிறார். அவரை எதிர்த்து அமெரிக்காவின் ஆதரவுடன் லோன் நோல் (Lon Nol) வலதுசாரிக் கருத்துக்களுடைய அதிபராகிறார். இங்கே சீனா வியட்னாமின் ஆதரவுடன் அவரை எதிர்க்கத்தொடங்கும் ஒரு ஆயுதம் ஏந்திய கம்யூனிசக் குறுங்குழுவே “கமேர் ரூஜ்”அல்லது “ரெட் கமேர்”. தேசியவாதத்தை மையக்கொள்கைகளில் ஒன்றாகக் கொண்ட இந்தக் குழு மற்றெல்லாவற்றையும் அழிக்கும் பணியில் இறங்கி கிட்டத்தட்ட 2 மில்லியன் உயிர்களை அழித்திருக்கிறார்கள். அதில் இவர்களின் கைகளால் கொல்லப்பட்டவர்கள் 1.5 மில்லியன்.மற்றவர்கள் எளிதாக குணப்படுத்தக்கூடிய கொள்ளை நோய்களால் இறந்திருக்கிறார்கள்.
கமேர் ரூஜ்-ன் (Khmer Rouge) தலைவன் போல் பொட்-ன் (Pol Pot) ஓவியமொன்றை வரைவதற்காக வான் நாத் (Vann Nath) அவர்களது பல வதைமுகாம்களில் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவர் காணும் காட்சிகளை பின்னால் வரைந்து மக்களின் முன் நிறுத்தும் வான் நாத் அங்கு அனுபவித்திருக்கூடும் என நாம் கற்பனை செய்பவற்றை கதைக்களமாகக் கொண்டு நகர்கிறது இந்த நாவல்.
நாவலில் தொடக்கத்தில் சிவப்பு கமேர் கூட்டம் போரின் முடிவை அறிவிக்கிறது. மக்களும் நம்பிக்கையுடன் ஆர்ப்பரிக்கின்றனர். ஆயுதமேந்திய மக்கள் எல்லா இடங்களிலும் நிற்பது உறுத்தலாக இருக்கையில் ராணுவத்தால் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். கருமேகங்கள் சூழ்ந்த வானில் இருள் படிந்திருக்க, மக்கள் அதனுள் சோகம் கப்பிய கரிய உருவங்களாக நடக்கின்றனர். அதனூடே வீட்டில் தனியாக விடப்பட்ட, தன் குடும்பத்தை காப்பாற்றிவிடும் வேகத்தில் ஓடும் நாயகன் மழைச்சேற்றில் விழுந்து சிக்கியிருக்கும் போது அக்குழந்தை காப்பாற்றப்பட்டதை நினைத்து மகிழும் கணம் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறான். தன் குழந்தை அப்போது கொல்லப்பட்டிருப்பது தன்னால் என உணரும் விழிப்பில் குற்றவுணர்வு சூழ்ந்திருக்கிறது.
சிவப்பு கமேர் தோற்கடிக்கப்பட்ட பின் தன் குழந்தைக்காகவும் கூடவே இறந்துபோயிருந்த மற்றவர்களுக்காகவும் அவன் அடைக்கப்பட்டிருந்த வதைக்கூடத்திலேயே போய் அங்கு நடந்தவற்றை வரைகிறான். இறந்த ஆத்மாக்களின் மூச்சுக்காற்று நிறைந்த கூடத்தின் வராண்டாக்கள், முன் களம், அறைகள் என அனைத்தும் அமானுஷ்யத் தன்மை கொண்டிருக்கின்றன. முன்னும் பின்னும் நகரும் காலத்தில் அவன் வரைந்துகொண்டிருந்த ஓவியங்கள் சம்பவங்களாக நாவலில் நகர்கின்றன. எப்போதும் அவனுடைய வரவுக்காகக் காத்திருக்கும் மரணம் அவனுடன் நிற்கிறது. சில காட்சிகளில் ஒரு அடர்த்தியான கரும் நிழல் போலவே அவனைத் தொடர்கிறது. உயிருடன் வைத்திருப்பது அவன் ஓவியன் எனும் காரணத்தால் மட்டுமே, ஆனால் அவன் வரைவதோ கருணை ததும்பும் முகத்துடன் நிற்கும் போல்போட். மொத்த அழிவும் நடப்பதன் ஆதியூற்று.
அவன் வரைகிறான். அந்த ஓவியத்தை திருத்தமாக மேலும் மெருகேற்றி அதில் தெரியும் கருணையின் தளத்தை அதிகரித்தாலொழிய அவனால் உயிரோடிருக்க முடியாது. ஓர் ஓவியன் தன்கழுத்தில் முள்ளால் ஆன பாதத்துடன் அழுத்தும்போது அழுத்துபவனின் முகத்தை மேலும் மேலும் கருணையுடன் வரைவேண்டும் என்பது எப்படிப்பட்ட முரண்.
ஒல்லியான சோகைபிடித்த உடலுடன் வரும் அந்த வதைமுகாமின் தலைமை அதிகாரி டவுச் (Douche) கொடும் அரக்கனின் கூரிய பற்களுடன் சித்தரிக்கப்படுகிறான். அச்சமுட்டும் கண்களும் முக அமைப்பும் அதற்கு ஏற்றாற்போல இருக்கிறது. அவன் மூளையில் வளரும் வன்முறையின் கனம் அந்த சோகைபிடித்த உடலின் போதாமையால் விளைந்ததோ எனத் தோன்றவைக்கிறது.
ஓவியத்தைப் பற்றிய கேள்விகள் டவுச்-ஆல் கேட்கப்படும் போது நாயகனும் அவனும் தனித்துவிடப்பட்டது போல் காட்சி காட்டப்படுகிறது. அந்த தனிமை மரணத்தை, சித்ரவதையை கணத்தில் நம்முள் பற்றவைக்கிறது.
வதை முகாமின் பல்வேறு அறைக் கதவுகள் திறக்கப்படும் போது அதனுள் என்ன இருக்கப்போகிறதோ எனும் பதற்றம் கதவுகளும் அதை நோக்கி தொய்வாக நடக்கும் கதாபாத்திரங்களின் உருவமும் தனித்துவிடப் படுகையில் நம்மால் உணரமுடிகிறது.
இந்த நாவல் முழுக்க முழுக்க பழுப்பு நிறத்தை அடித்தளமாகக் கொண்டு அதன்மேல் கருப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட ஓவியங்களால் ஆனது. முழுமையுறாத தீற்றல்களாக மட்டுமே இருக்கும் உருவங்கள் இயக்கங்களை எளிதாக நமக்குக் கடத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் நாயகனின் உருவம் மகிழ்ச்சியின் சிறிய தடத்துடன் இருக்கிறது. அடுத்தடுத்த காட்களில் அவனது கண்கள் முழுக்க உள்ளொடுங்கிய சிறிய புள்ளியாக மண்டையோட்டுக்குள் இருக்கும் கண்களென மாறிவிடுகிறது. அச்சத்தில் உறைந்து வெறிக்கும் கணங்களில் அவன் கண்கள் நம்மை நேரடியாகப் பார்க்கையில் நாமும் பதற்றமுறுகிறோம். வதைமுகாமில் அலையும் சிவப்பு கமேர் கூட்டத்தினர் கழுத்தில் துணியொன்றை அடையாளமாகச் சுற்றியிருக்கிறார்கள். அதில் தெரியும் சிவப்புத் துளிகளும் சித்திரவதைக்கு பிறகான உடலின் தெரியும் குருதி படிந்த காயங்கள் மட்டுமே மொத்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம்.
டவுச்-ஆல் நாயகனை கண்காணிக்க நியமிக்கப்படும் அதிகாரியின் உருவம் ஜோசப் ஸ்டாலினைப்போல் இருப்பதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. அதே கட்டை மீசை, மேல் நோக்கி உயர்ந்த தாடை,சிறிய ஆனால் தீவிரமான கண்கள். அணுக்கமாகப் பார்க்கும்போது கழுத்திலிருக்கும் துணியில் துளித்துளியாகத் தெறித்திருக்கும் இரத்தத்துளிகள் வரலாற்றில் படியத் தொடங்கும் குருதியின் முதல் துளிகளோ என்றும் தோன்றுகிறது.
வதைமுகாமுக்கு அழைத்துச் சென்றபின் வரைய ஆரம்பிப்பதற்கு முன் மூன்று நாட்கள் நாயகன் ஒய்வில் இருக்கிறான். கம்போடியாவின் தேசிய வானொலி அப்பட்டமான பொய்களை அவனுக்கு வழங்கியபடி இருக்கிறது.
‘அமோகமான விளைச்சல்’
‘மக்கள் மகிழ்ச்சி’
‘90% புரட்சியாளர்களின் நாடு’
ஓவியம் வரைய ஆரம்பித்தபின் தூங்க முடியாமல் தவிக்கும் நாயகன் திரும்பத் திரும்பக் கேட்கிறான் ,
“மெர்சி…மெர்சி…”
யாருக்காக யாரை ஏமாற்ற இந்த வேஷம்?!
நாவலின் இறுதியில் வயதான நாயகன் இருவரை சந்திக்கிறார். இருவரும் அவரிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர். டவுச் கிறிஸ்துவத்தை தழுவி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்து தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். நீதிமன்றம் வான் நாத்திடம் விசாரிக்கும்.”ஏன் இவை சொல்லப்படவேண்டியவை”என்று கேட்கிறார்.
“இளம் தலைமுறையினர் இதைப் பார்த்து மாறவேண்டும்”என்கிறார். உண்மைச் சம்பவம் எனும் இடத்திலிருந்து மட்டுமே இந்தப் பகுதிகள் முக்கியமாகின்றன. படைப்பூக்கம் குறைவான பகுதிகள் இவை.
நீதி கிடைப்பதற்கு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த வதைமுகாம்கள், கொலைகள் நடப்பதற்கு காரணமான முக்கிய தலைவர்களின் இறப்பு வருடங்களை கவனித்தேன். அனைவரும் மூப்பெய்தி நோயில் இறந்திருக்கிறார்கள். சிலர் மீண்டும் கம்போடிய ஆட்சியமைப்பில் பங்கேற்றுள்ளனர். வரலாற்றை விசித்திரத் தன்மையை அயர்ச்சியுடன் நினைத்துக்கொண்டேன்.
தேசியவாத கொள்கைகள் கொண்ட சிவப்பு கமேர். மற்ற எல்லா இனங்களையும் எதிரிகளாகவே கண்டனர். உண்மையாகவே கம்யூனிச நாடுகள் இந்தப் பொன்னுலகத்தில் எதை சாதித்தார்கள். லெனினின் புரட்சி ஜார் ஆட்சியை குலைத்தது வன்முறையால். அதன் ஆரம்பம் அப்படி இருக்கையில் அதன் வழித்தோன்றல்களிடம் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில், கோட்பாட்டளவில் மட்டுமே சகோதரத்துவம் பேசும் கம்யூனிசம் சகமனிதனிடம் நம்பிக்கை என்பது அறவே அற்றது என்றே நினைக்கிறேன். தலைமை எப்போதும் எதையும் சந்தேகத்துடன் கணித்து அழித்து சமநிலையை உண்டுபண்ண முயன்றிருக்கிறது. அழிவை ஆக்கசக்தியாக அது ஆரம்பத்திலேயே கற்பனை செய்துவிட்டது.
கம்யூனிசம் தன் கோட்பாட்டளவில் மதத்தை, ஆன்மீகத்தை, நம்பிக்கையை, உணர்வுகளை மனிதனுக்கான ஒருகருவியாக மட்டுமே கண்டிருக்கிறது. சிவப்பு கமேர் கூட்டம் நாத்திகத்தை தன்னுடைய கொள்கைகளில் முக்கியமான ஒன்றாகக்கொண்டது நாம் கவனிக்க வேண்டியது.
தஸ்தாவெஸ்கியின் இடியட் நாவலின் தன்னுரையொன்றில், “ஒருவரையொருவர் சகோதரனாகப் பார்க்காமல் எந்தக் கோட்பாடும் கொள்கையும் எதையும் மாற்ற முடியாது”என்கிறான் அதில் வரும் மிஷ்கின். வான் நாத் வரைகலை நாவலில் நாயகனும் புரட்சியாளர்களும் ஒருவருக்கொருவர் ‘சகோதரா’ என்றே விளித்துக்கொள்கின்றனர். சகோதரர் எனும் சொல் தன்னுடையவன் அன்றி மற்றவனிடம் உண்மையாகச் செல்லுபடியாகாமல் போனதின் விளைவே கம்போடியாவின் கொலைகள். தஸ்தாவெஸ்கியின் ஏசுவை லெனின் கவனித்திருக்கவில்லை, ஒருவேளை அந்த ஒளி அவர்மேல் விழுந்திருந்தால் நாம் கற்பனையில் மட்டுமே காணும் கம்யூனிசப் பொன்னுலம் உருவாகியிருக்கலாம்.
***
இவான் கார்த்திக் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். தற்போது மதுரையில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். பதாகை, சொல்வனம், ஒலைச்சுவடி, வனம் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. ‘பவதுக்கம்’ இவரது முதல் நாவல். தொடர்புக்கு: Ivaankarthik@gmail.com 9003405948