Monday, December 9, 2024
Homesliderகுரலற்றவர்கள்

குரலற்றவர்கள்

ஹரிஷ் குணசேகரன்

ரோனா ஊரடங்கு அறிவிக்கப் படுவதற்கு முன்பே அவனுடைய வேலை தள்ளாடி ஊசலாடிக் கொண்டு தானிருந்தது. இரண்டரை வருடங்களாக யாருமே குறை சொல்ல முடியாதபடி அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவன் என்பதால் சின்னதாக நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த மின்னஞ்சல் இருந்தது. முடிந்த மட்டும் சக்கையாகப் பிழியப்பட்டு தூக்கியெறியப் படுவதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.‌ சோதனையான கரோனா சூழலில் வேலை பறிக்கப்படுமென கனவிலும் அவன் நினைத்ததில்லை.

“எல்லாம் பழைய பிராஜெக்ட் மேனேஜர், ராகவன் கடங்காரனால தான். ரெண்டு வருஷமா அவருக்கு கீழ ஒழைச்சிக் கொட்டுனனே.‌ இந்த வருஷம் ரேட்டிங் போடுற சமயத்துல வேற டீமுக்கு மாத்தி விட்டுட்டாரு. அங்க போனா, அந்தப் புது மேனேஜர் ராஹுல் நம்பியார் அஞ்சுக்கு மூணு ஸ்டார் தான் கொடுத்தார். அடப்பாவிங்களா, மனசாட்சியே இல்லாம நடந்துக்றீங்களே. நானும் வேலை செஞ்சதெல்லாம் வெவரமா எடுத்து போட்டு மீதி ஸ்டார் எங்கய்யான்னு கேக்றேன். தோ பாருப்பா, நீ எப்படி வேலை செஞ்சேன்னு எனக்குத் தெரியாது. நீ என் டீமுக்கு புதுசு, நல்லா வேலை செய்யு.. அடுத்த ரேட்டிங்குக்கு நான் பொறுப்புன்னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்க போயிட்டாரு. அங்க ஆரம்பிச்ச சனியன் தான், விடவே இல்லை”, டீக்கடை முன்பு நின்றபடி அவன் கைபேசியில் உடன் பணிபுரிந்த நண்பனிடம் புலம்பினான். அக்கடைக்கு முன்பாக இருந்த அலுவலக கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு கிளம்ப எத்தனித்தபோது, அவன் கால்கள் நகரவில்லை. “நான் வீட்டுக்குப் போயிட்டு கூப்டுறேன்.” மேலும் பேச முடியாமல் அவன் குரல் கம்மியது.

கிளைண்ட் போதிய பணம் ஒதுக்கவில்லை, அதனால் ஆட்குறைப்பு செய்ய வேண்டி இருப்பதாகவும் இரண்டு மாதத்தில் கூப்பிட்டுக் கொள்வதாகவும் சொல்லி அவனை ராகவன் கழற்றி விட்டார். நான்கு நாட்கள் கூட பெஞ்சில் இருக்க விடாமல், பிராஜெக்ட் மேனேஜர் ராஹுல் அழைத்து தேனொழுகப் பேசி சேர்த்துக் கொண்டார். சென்னையிலேயே வேலை செய்வதைத் தவிர அவனுக்கு வேறு எதிர்பார்ப்புகள் இல்லை. புது ப்ராஜெக்டில் வேலையும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. கிளைண்ட் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி பெங்களூர் பயணிக்க வேண்டி இருந்தது. அந்த நகரத்திற்கே உரித்தான வாகன நெரிசலும் மூட்டைப் பூச்சி தொல்லையும் அதற்கு மேல் வீட்டு சூழலும் மனதை இறுக்க ராஹுலை அழைத்து பிராஜெக்டில் இருந்து விடுபட ரிலீஸ் கேட்டான்.

“என்ன விக்ரம், திடீர்னு கேக்றீங்க.. நான் கிளைண்ட் கிட்ட இண்ட்ரோ கூட தந்துட்டேன். நீங்க அங்க இல்லைன்னா அவர் டெலிவரி மேனேஜர் கிட்ட எஸ்கலேட் பண்ணிடுவாரே. நீங்க ஃபுட் அலவன்ஸ், ட்ராவல் அலவன்ஸ் கூட எடுத்துக்கோங்க. இன்னும் கொஞ்ச நாள் அங்க இருங்க ப்ளீஸ். அதுவும் இல்லாம…”, அவர் விடாமல் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே போனார்.

“புரியுது, ராஹுல்.. ஆனா என் வொய்ஃப் பிரக்னென்டா இருக்காங்க சென்னைல. பாத்துக்க யாரும் பக்கத்துல இல்லை. நான் கிளைண்ட் எடத்துல, அதுவும் பெங்களூர்ல தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா..”

“சரி.. அப்ப உங்களுக்குப் பதிலா அனில் ஷர்மாவை அட்ஜஸ்ட் பண்ண சொல்றீங்களா. ரெண்டு பேர்ல ஒருத்தர் பெங்களூர்ல இருந்தே ஆகணும்”

‘அது முடியாத காரியம் ஆச்சே. நான் தான் பெரிய இதுன்னு நெனச்சிட்டு ஈகோவோட சுத்திட்டு இருக்றவன். நாம ஒண்ணு சொன்னா வேணும்னே அதுக்கு எதிரா தான் செயல்படுவான். சுத்தம்.. போச்சு போ. ஏன் இந்தாளு தான மேனேஜரு. இவரு எடுத்து சொல்லலாம்ல அனில்கிட்ட. ஏன்டா படுத்தி எடுக்றீங்க.. முடியலை என்னால’ – உள்ளுக்குள் குமைந்தான்.

அனிலை டீம்ஸ் மெசெஞ்சரில் அழைத்து தன்னுடைய நிலையை விளக்கி பெங்களூர் வந்து தன்னை விடுவிக்க முடியுமாவென கேட்டான்.

“அச்சா, தட்ஸ் ரியலி டஃப் டூட்.. ஐ ஆம் சாரி. நானும் கேர்ள் ஃப்ரெண்டும் புது ஃப்ளாட்டுக்கு அட்வான்ஸ் பண்ணிட்டு இப்ப தான் மூவ் ஆனோம்”

அவன் மீண்டும் மெல்லிய குரலில் கெஞ்ச, சத்தியம் பண்ணாத குறையாக அதையே மீண்டும் சொன்னான் அனில்.

பெங்களூர் அலுவலகத்திற்கு வருவதும், வேலை செய்வதும், நேரத்தே அறைக்கு கிளம்புவதுமாக இருந்தான். எப்போதும் முகம் சோர்ந்து சோபை இழந்து காணப்பட்டான்.

‘உங்களுக்கு எக்ஸ்ட்ரா டைம் எடுத்து என்ன மைத்துக்கு ஒழைச்சிக் கொட்டணும். போட்ற ரேட்டிங் தான் போடுவீங்க, குடும்பத்தை விட்டு பிரிச்சு எங்கயாச்சும் போடுவீங்க. அதுக்கு நான் மத்தவங்க மாதிரி இப்படியே பட்டும் படாம இருந்துக்றேன்.’ அவன் மனநிலை இப்படி தானிருந்தது.

அப்போதே அவனை குறி வைத்து கட்டம் கட்டத் தொடங்கினார்கள். கட்டணம் செலுத்தி தங்கும் விருந்தினர் அறையின் மெத்தையில் படுத்திருந்தவன், மூட்டைப் பூச்சி ஊரும் உணர்வு திடுமென்று தோன்றியதால் பதறியெழுந்து உதறிக் கொண்டான். இரண்டு மூன்று முறை அவன் முறையிட்டு மண்ணெண்ணெய் கலந்த மருந்து அடித்தும் மூட்டைப் பூச்சி ஒழிந்த பாடில்லை.

“என்னடா ஒருத்தன் சென்னைலருந்து வந்து வேலை செய்றானே.. அவனுக்கு நல்ல ஹோட்டல் புக் பண்ணித் தருவோம். இல்லை கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லயாச்சும் எடம் தருவோம். ஒரு எழவையும் காணோம். டாஸ்க்ல மட்டும் இம்மி பெசகிட்டா ஒடனே எஸ்கலேட் பண்ணிடுவானுங்க. கிறுக்கனுங்க..” தனியாக புலம்பி பெருமூச்சு விட்டான்.

கவிந்த நிசப்தத்தையும் மனதின் சலனத்தையும் அறுத்து, காலையிலிருந்து ஐந்தாவது முறையாக அழைத்து அப்போதும், “எப்பங்க வருவீங்க..” என்று கேட்ட மனைவியிடம் “நாளைக்கு அங்க இருப்பேன்மா.. நீ தூங்கு. பத்ரமா பூட்டிட்டு படு.” என்றான்.

“சே.. இந்த மூட்டைப் பூச்சி சனியனுங்க வேற. இருக்க கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் உறிஞ்சி குடிச்சிடும் போல. இந்தக் கருமத்துக்கு மாச வாடகை ஆறாயிரம் ரூபா”, கண்டு கண்டாக தடித்த இடங்களை தேய்த்தான். இரவெல்லாம் தூங்காமல் கை கால்கள் குளிரில் நடுநடுங்க இழுத்துப் போர்த்தி வெற்றுடம்புடன் படுத்திருந்தான்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு கிளம்பி வந்ததால் ஹெச்.ஆர் அழைத்து பேசி கண்டித்தார்.‌ அவரிடம் நடந்த அனைத்தையும் விவரித்து, சென்னை அலுவலகத்தில் எவ்வளவு கடினமான வேலை கொடுத்தாலும் செய்வதாக சொன்னான். ராஹுல் முகம் கொடுத்து பேசாமல் உடனே பிராஜெக்டிலிருந்து நீக்கினார். தற்போது அனில் பெங்களூருக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பியாக வேண்டுமே! பாவம் என்ன செய்வான்.. ஹி.. ஹி.. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தொடர்ந்து பழக்கப்பட்ட மேனேஜர்களை சந்தித்து தனது நிலையை எடுத்துக் கூறி பிராஜெக்டில் சேர்த்துக் கொள்ள சொல்லி வலியுறுத்தினான். தெரியாத மேனேஜர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் கிணற்றில் போட்ட கல்லாய் மாறின.

ஒரு மாதம் பிராஜெக்டில் இல்லாமல் பெஞ்சில் இருந்ததால் கம்பெனி தான் அவனுடைய முழு சம்பளத்தையும் தந்தது. சேர்ந்த இத்தனை வருடங்களில் கிளைண்டுகளிடம் மிக நல்ல பேர் வாங்கியதை நினைத்துப் பார்த்தான். ராகவனுக்கு தெரியாமல் ஒரு கிளைண்ட், “ஏன்பா.. நான் உனக்கு சம்பளமா ஒன்றரை லட்சம் தந்துட்டு இருக்கேன்.” என்று போட்டு உடைத்தார்.‌ அன்றிரவு அவனுக்குத் தூக்கம் கொஞ்சம் கூட வரவில்லை.

“அடப்பாவிங்களா.. என் மாச சம்பளம் ஐம்பதாயிரத்தை கூடத் தொடலை. ஆனா என்னை கணக்கு காட்டி ஒன்றரை லட்சம் வாங்குறீங்களா”, மனதுக்குள் புழுங்கினான்.

அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு எலக்ட்ரானிக் வர்த்தகம் சார்ந்து பிராடக்ட் டிஸைன் செய்யும் வாய்ப்பு இவனுக்கு கிடைப்பது போல இருந்தது. அதனைத் தடுத்து தானே அதையும் கூடுதலாக செய்வதாக சொல்லி வாய்ப்பை தட்டிப் பறித்தான் கிருபா ஷங்கர். இத்தனைக்கும் கிருபாவும் இவனும் ஒன்றாக ட்ரெய்னிங் முடித்து ஒன்றாக பணியில் சேர்ந்தவர்கள். அவனை சந்தித்து கெஞ்ச இவன் மனம் ஒப்பவில்லை. பரமபத விளையாட்டில் தொடர்ச்சியாக பாம்பு தீண்டி முன்பு இருந்ததை விட மோசமாக கீழிறங்கி வீழ்வதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தும் சாதகமாக தாயக்கட்டை சுழன்று, திரும்பி, அதிர்ஷ்டத்தில் ஏணி வாய்க்காதா வென்று ஏங்கினான். மீண்டும் மீண்டும் மின்னஞ்சல் கணக்கை பார்த்தபடி இருந்தான். ஆனால் திரும்ப திரும்ப கிடைத்தது என்னவோ, “உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஜங்லி ரம்மியில் ரம்மி விளையாடி ரூபாய் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் வெல்லுங்கள்” என்கிற சனியன் பிடித்த குறுஞ்செய்தி தான்.

தொடக்க காலத்தில் கேம்பஸ் பிளேஸ்மெண்டில் தேறி, ஒன்றாக கார்ப்பரேட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நண்பர்களில் தான் மட்டுமே பின் தங்கியதாக அவனுக்கு நினைப்பு இருந்தது. சேர்ந்த புதிதில் எல்லோருடைய சம்பளமும் வருடத்திற்கு தலா மூன்று லட்சத்தி இருபதாயிரம் ரூபாய். அதில் பெருந்தொகையை இன்ஜினியரிங் படித்தபோது உண்டான கடன் விழுங்கிக் கொண்டது. ஒன்றாக அறையெடுத்து நண்பர்களோடு தங்கியிருந்ததால் வீட்டு வாடகை கையைக் கடிக்கவில்லை. கால சக்கரம் வேகமாக சுழன்று இரண்டு வருடங்கள் ஓடியதும் ஒவ்வொருவராக வேறுவேறு நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். இவன் சேர்ந்த புதிய கம்பெனியில் தரப்பட்ட வருட சம்பளமான நான்கு லட்சத்தி ஐம்பதாயிரத்தை தன்னுடைய நண்பர்களின் ஐந்து லட்சத்தி நாற்பதாயிரத்தோடு ஒப்பிட்டு வருந்தினான். தான் தவறான தொழில்நுட்பத்தை தேர்வு செய்து நிபுணத்துவம் பெற முயல்வதாகக் கூட கருதினான். நாட்கள் செல்ல செல்ல, சம்பளத்தைவிட செய்யும் வேலையில் விளையும் திருப்தி தான் முக்கியம் என்கிற மனப் பக்குவத்தை அடைந்தான்.

திருமணமான போது அவனுடைய மாத சம்பளம் நாற்பத்தி ஐந்தாயிரத்தை எட்டியிருந்தது. இருந்தும் தன்னைவிட தன் மனைவி அதிக சம்பளம் வாங்குவது அவனுக்கு நெருக்கடியாக இருந்தது. நன்றாக வேலை செய்து கொண்டிருந்தவள் வேலைப் பளு காரணமாக சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பொறுப்பை துறந்த போது, இவனுள் சத்தமின்றி நிம்மதி சுரந்தது.

சற்றுமுன் அவனுக்கு வந்த மின்னஞ்சல் இது தான்:

ஹாய் விக்ரம்,

தொடர்ந்து பிராஜெக்ட் இல்லாம பெஞ்ச்ல இருக்கீங்க. நாங்க தர்ற பிராஜெக்டையும் நிராகரிக்றீங்க எதுவும் சென்னைல இல்லைன்னு.‌ நீங்க இனிமே தொடர முடியாது. உடனே ஆஃபிஸுக்கு வந்தீங்கன்னா ரிலீவிங் ஃபார்மேலிட்டீஸை ஆரம்பிச்சிடலாம்.

நன்றி,

கிரிஷ் குமார், ஹெச்.ஆர் மேனேஜர்.

வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழலை உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு உருவாக்கித் தரும்போது, பழைய சம்பவத்தை நினைவில் கொண்டு தன் வேலையைப் பறித்த நிறுவனத்தை நினைத்து நொந்தான். கட்டளைக்கு கீழ்ப் படிந்திருந்தால் இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்பதை அவன் அறிவான்.

அவன் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்க கிரிஷ்ஷை அழைத்து, “கிரிஷ்.. இன்னைக்கு என்னால வர முடியாது. நாளைக்கு காலைல ஆஃபிஸ் வந்துட்றேன். அது போதுமா?” என்றான். அவன் குரல் உடைந்தது கண்டு தன்னையே நொந்து கொண்டான்.

ராகவனிடமோ ராஹுலிடமோ பேசினால் ஏதாவது செய்ய முடியுமா? யாரிடம் நியாயம் கேட்டு என்ன ஆகப் போகிறது? ஊரடங்கு காலத்தில் இரக்கமற்று துரத்தும் குயுக்தி தெரிந்தவர்களை எப்படி தடுக்க முடியும்? நமக்கு குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அவன் மிகக் களைப்பாக உணர்ந்ததால் சாய்வு நாற்காலியில் விழுந்து கண் மூடினான்.

அவனை உலுக்கி எழுப்பி, “விக்ரம்..‌ சாப்டுட்டு தூங்குங்களேன்” என்றாள் அம்மு.

அடுத்த தினம் சீக்கிரமாக எழுந்து காலை உணவு தயாரித்து மனைவியை எழுப்பி பால் தம்ளரை நீட்டினான்.

“ஹே, அம்மு.. நான் ஒண்ணு சொல்லுவேன், பொறுமையா கேக்கணும்”

“என்ன‌ விக்ரம்.. என்னாச்சு?”

“என் அக்கவுண்ட்ல துளி கூடப் பணம் இல்லை. லாக் டவுன் பீரியட் எக்ஸ்டெண்ட் ஆகிருக்கேன்னு ஹவுஸ் ஓனர் கட்டாயம் பாக்க மாட்டான். இத்தனை வருஷம் வேலை செஞ்ச கம்பெனியே பாக்கலை.”

“டோண்ட் வொர்ரி. என் அக்கவுண்ட்ல நான் ரிலீவ் ஆனப்ப போட்ட சம்பளத்தை இன்னும் எடுக்கலை. அதுபோக ஃபிக்ஸட் டெப்பாஸிட் என் பேர்ல போட்டது இருக்கு. ரெண்டு, மூணு மாசம் ஈஸியா தாக்குப் பிடிக்கலாம்.” என்று கரம் பற்றினாள்.

“இது போதும்மா எனக்கு..” அவளை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினான். அவள் வேலையை விட்டு நின்றபோது லேசாக மகிழ்ந்த குரூர புத்தியை நினைத்து தலைகுனிந்தான். உப்பிய வயிற்றை, சிசுவை முத்தமிட்டவனிடம், “வேற ஜாப் அப்ளை பண்ணுங்க.. கெடைக்றப்ப கெடைக்கட்டும். லிங்க்ட்-இன்ல ஏகப்பட்ட பிரொஃபஷ்ஷனல்ஸ் வேலை போய்டுச்சி ரெஃபர் பண்ணுங்கன்னு போஸ்ட் போட்ருக்காங்க” என்றாள்.

ஆஃபிஸ் கிளம்பி ‘கோமதி மளிகைக் கடை’ வழியாக சென்றபோது கையேந்தி முக்காடிட்டு நின்ற நடுத்தர வயது பெண்ணிடம் இருபது ரூபாயை நீட்டினான். மொத்த குடும்பமும் பட்டினி கிடப்பதாக சொல்லி அரிசி வாங்கித் தரும்படி கெஞ்சினாள். ஐம்பது ரூபாயை தந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி விரைவாக நடந்தான்.

பரங்கிமலை மெட்ரோவில் இறங்கி பேரம் பேசியும் இருநூற்றி ஐம்பது ரூபாயில் நின்ற தானி ஓட்டுநரிடம் முகம் சுழித்தபடி பணத்தை நீட்டினான். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிலவினாலும் கரோனா அச்சத்தால், பெரும்பான்மை ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதால் கூட்டமில்லை. முகக்கவசம் அணிந்து இடைவெளி விட்டு அமர்ந்த பயணிகள் மத்தியில் கத்தலும் அலறலும் கேட்டு திடுக்கிட்டான். புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல் தெரிந்த வாலிபர் மெட்ரோ சீட்டில் அமராமல் முரண்டு பிடித்து அர்த்தமில்லா குரலில் கத்தினார். அவரை அழைத்து வந்திருந்த பெரியவர் சமாதானப் படுத்தியும் கேட்காததால் விரக்தியடைந்து அறைந்தார். அந்த வாலிபரின் அலறல் இவனை என்னவோ செய்ய, எழுந்து அந்தப் பெரியவரை நெருங்கினான். அதற்குள் கீழ்த்தளத்தில் இருந்து செக்யூரிட்டி வந்துவிட “சாரி சார்.. சாரி சார்.. இவனை எங்கயும் என்னால கூட்டிட்டு போக முடியலை.” என்று கைகூப்பி பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார் பெரியவர்.

“இப்ப நான் என்ன பண்ணனும்..”, பெரியவர் அந்த செக்யூரிட்டியிடம் உறுதியாகக் கேட்டார்.

“மத்த பேசெஞ்சர்ஸுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு..” என்று அவர் இழுக்க, பெரியவர் தன் மகனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

மெட்ரோ ரயில் கதவு மூடிக் கொள்ள, “சே.. அவங்களுக்காகப் பேசி இருக்கணும். நாம குரல் கொடுத்து இருக்கணும். தப்பு பண்ணிட்டோமே!” என்று உறைத்தது. ஒருவித குற்றவுணர்ச்சியால் தலை குனிந்தபடி ஆலந்தூர் வரை பயணித்தான்.

***

ஹரிஷ் குணசேகரன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular