Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்குணங்கெட்ட வியாதி

குணங்கெட்ட வியாதி

அகராதி

ங்கரி கடைவீதியின் சந்துபொந்துகளில் நடந்துகொண்டிருந்தாள். நடையில் அவசரத்தன்மை அதீதமாகத் தெரிந்தது. இதன் விளைவாக பாத்திரக்கடைச் சந்தில் இரண்டாவது முறையும் நடந்தாள். வியர்த்த முகமும் கடல் போன்று விரிந்த விழிகளின் நிதானமின்மையும் பாத்திரக்கடைக்காரர் தசரதன் கவனத்தில் விழுந்துவிட, தினேஷின் நண்பர் என்னும் உரிமையும் இணைந்து கொண்டது.

‘’மேடம் ஏதும் தொலைச்சுட்டிங்களா?’’

மறுப்பின் மொழியாக இடமும் வலமும் வேகவேகமாகத் தலையை அசைத்தவாறு நடந்து கடந்தாள். பெரிய கண்கள் கடலின் அலைகள் இப்படியும் அப்படியும் நகர்ந்து உள்வாங்குவதைப்போல அலைந்து உள்வாங்கின. வியர்வையில் அக்குள் மற்றும் முதுகுப்பக்கம் ஈரமாகிவிட்டிருந்த ஜாக்கெட்டைப் பார்த்து, பாத்திரக்கடையில் விலை பேசிக்கொண்டிருந்த அம்மா ஒருவர் ‘’சில்லுனு ஊதக்காத்து வீசுது இப்படி வேர்த்துருக்கு இவங்களுக்கு!!’ என பக்கத்தில் இருந்த பூ போட்ட சுடிதாரிடம் சொன்னார். சுடிதார் பெண் கழுத்தை வளைத்துத் திரும்பி தலையைச் சாய்த்து சங்கரியின் நனைந்த ஜாக்கெட்டைப் பார்த்து ‘ஏன்னு தெரியலையே’ என்பதாகக் கீழ் உதட்டை வெளித்தள்ளியது.

சங்கரி எதுவும் கவனிக்காமல் கடைவீதியை விட்டு வெளியேவந்து சிவன் கோவிலின் திட்டில் உட்கார்ந்த கொண்டாள். சற்றுத்தள்ளி தெப்பக்குளம் பார்வையில் தெரிந்தது. கல்லூரி மாணவிகள் இருவர் மீன்களுக்கு இரையை கைகள் தூக்கி அரைவட்டமாகத் தண்ணீருக்குள் இறைத்துக்கொண்டிருந்தனர். தண்ணீரைப் பிளந்துகொண்டு தலை தூக்குவதும் உணவை உண்டபின் உடலை ஆட்டி விசுக்கென்று உள்ளே நுழைந்து காணாமல் போவதுமாய் இருந்த மீன்கள் சங்கரியின் பதற்றத்தைச் சற்றுக் கலைத்தன. அரைவட்டம் தோன்றித்தோன்றி மறைந்துகொண்டிருந்தது.

மீன்களுக்கு இப்படிப் பிரச்சினைகள் இருக்காதுதானே? அப்படியே இருந்தாலும்தான் என்ன யார் என்ன சொல்வார்களோ என்று பயந்து சாக வேண்டியிருக்காதில்லையா? அதனதன் போக்கில் வாழ்ந்து, கழித்து, செத்துப்போகும் பாக்கியம் பெற்றவைகள்! மனிதர்களுக்கு மட்டும் அப்படி எந்த வாய்ப்பும் இருக்காது. அப்படி வாய்ப்புகள் இருந்தாலும்கூட பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் விடப்போவதில்லை. வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளுவதும் கடினம். மீன்களைப் பார்த்துக்கொண்டே சிந்தனைவயப்பட்டவளுக்குச் சட்டெனச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. சத்தம் கேட்டு தாத்தாவின் கைப்பிடித்துச் சென்றுகொண்டிருந்த எட்டு வயது மதிக்கத்தக்க குட்டிப் பாப்பா திரும்பிப் பார்த்துச் சிரித்தது. இனி அறிமுகம் இல்வாதவர்களைப் பார்த்து முகம் மலரும் குழந்தைத்தனம் மெல்லமெல்லத் தொலையும். பக்கத்தில் இருக்கும் மனிதர்கள்தானே நம் நாட்களை ஆட்டுவிப்பது, நமக்குள் அஸ்திவாரமிட்டுக் குடியிருப்பது. அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்து, நினைத்துச் செயல்பட வைப்பது அப்போ நாம் நாமே இல்லையா?

நான் என்பது யார் யாரோ!! யார் யாரோ நான்!

சிரிப்பை மறைத்துக்கொண்டு எழுந்து கோவில் உள்ளேபோய் கருவறையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினாள். புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருந்த உருவங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். எத்தனை உழைப்பு, நுணுக்கம், கவனக்குவிப்பு, ஈடுபாடு, ரசனை, அர்ப்பணிப்பு!! வடிவமாகச் செதுக்கும்போது சிற்பி வியர்த்திருப்பானா, தடுமாறியிருப்பானா அல்லது தடுமாறியதால்தான் நுணுக்கங்களை வடித்தெடுக்க முடிந்ததா?? எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பான். சங்கரியின் பிரச்சினை பார்க்கும் எல்லோரையும் எல்லாவற்றையும் பிரச்சினை கண்கொண்டு பார்க்க வைத்தது. மீன்கள் நினைவிற்கு வந்தன. யார் யாரோ நான், மீண்டும் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

கோபுரத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். எதிர்வீட்டில் இருக்கும் அம்ரிதா பைக்கில் கோவிலைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தவள் இவளைப் பார்த்து வண்டியைத் திருப்பிவந்து கால்களை ஊன்றி நின்றாள். கண்களின் சிரிப்பு குளிர் கண்ணாடியைத் தாண்டியது.

“மார்க்கெட் சுத்தி முடிச்சுட்டு சிவா தரிசனமா, என்ன சிரிப்புக் கொஞ்சுது கண்ணகி முகத்துல! வீட்டுக்குத்தானே?’’

‘’ஆமா அம்ரி’ என்றவாறு பில்லியனில் அமர்ந்துகொண்டாள். அம்ரிதாவின் சில கேள்விகளுக்கு பதில் கூறினாள். தொடர்ந்து வந்துகொண்டிருந்த காற்றின் வேகத்தில் கேட்கவில்லையென தவிர்த்து மறுபடியும் சிந்தனைவயப்பட்டாள். ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் அமர்ந்திருப்பவரின் எண்ணங்களை மேலெழும்பச் செய்துவிடுகிறது.

அவளுக்கு அப்படி ஒரு நோய் இருப்பதையே தாமதமாகத்தான் உணர்ந்திருந்தாள். வெளியில் சொல்லவும் முடியாத சிகிச்சையும் சட்டென எடுக்க முடியாத குணங்கெட்ட வியாதி!

உள்ளூர் டாக்டர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்ததில் இப்படி தனி குண வியாதிகள் பல உண்டு. உள்மனம் சார்ந்த பிரச்சினை. சைகலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும் என்றார். பெண்ணாக இருந்துகொண்டு இப்படியெல்லாமா என வாய்ப்பிளந்தாள் தோழி ஒருத்தி. அதிலிருந்து யாரிடமும் சொல்லக்கூடாதென நினைத்தாள். அவளுக்கும் இது நினைக்கும்போது ஒவ்வாமையாகத்தான் இருந்தது. எந்த வகையில் என்றால் வெளியில் முந்திரிக்கொட்டைத்தனமாகச் செயல்பாடு ஏதும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பய நடுக்கம்தான் முதலில் தோன்றியது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடந்துவிடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என ஒரு குரல் உள்ளே ஒலித்தபடி இருந்தது.

இன்று காலையில் நிகழ்ந்த தர்மசங்கடம் சங்கரியின் நினைவிற்கு வந்தது. தினேஷின் நண்பர் வந்திருந்தார். இவளை அழைத்து தினேஷ் அவரை அறிமுகம் செய்துவைத்தார். அந்த மனிதர் சிரித்தபடி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கையில், அவ்வளவுதான்.. பத்து விரல்களையும் அதனதன் கைக்குள் உள் இழுத்துக்கொள்ளும் பகீரத முயற்சி போல் மடக்கி இறுக்கிக்கொண்டாள். பிறகு இனி இங்கு நிற்கவே கூடாது என முடிவெடுத்து சங்கரி உள்ளே ஓடிப்போய்விட்டாள். தினேஷ் இதைச் சிறிதும் விரும்பவில்லை. வந்திருந்தவரும் அதிர்ந்து முகம் மாறியவராய் எதுவோ காரணம் உருவாக்கி உடனடியாகச் சென்றுவிட்டார். தினேஷை சமாதானப்படுத்துவது எப்படி என்று சங்கரி திணறினாள். அவளால் உண்மையைக் கூறவே முடியாது. அதுவும் தினேஷின் குணாதிசயங்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னால் அவர் பைத்தியமாகவே மாறி விடுவார். எப்படியேனும் தானேதான் சரிபண்ண வேண்டும், வேறு வழியில்லை என்று நினைத்தாள்.
நேற்று சாப்பிட்ட பர்கர் ஒத்துக்கொள்ளவில்லை. இரவிலிருந்தே உடம்பு சரியில்லை. வாமிட் இரண்டுமுறை எடுத்துவிட்டேன், மேலும் இப்போது வாமிட்டிங் சென்ஸினால்தான் ஓடிவிட்டேனென்று தினேஷை சமாதானப்படுத்தினாள். உர்ரென்று ஆஃபிஸ் கிளம்பினார்.

முதன்முதலில் எப்போது ஆரம்பித்தது என்பதே தெரியவில்லை. ஆனால் அவள் அதனை நன்றாக உணர்ந்தது ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேருந்தில் வருகையில்தான். வலதுபுற பெண்கள் இருக்கையில் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள். ஒருமணிநேரப் பயணம். நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் பயணிகள் பேருந்தை நிரப்பியிருந்தனர். அவள் அருகில் லைட் கிரே கலர் பேண்ட், பிளாக் செக்டு கலர் ஷர்ட் காம்பினேஷனில் பியூர் கோல்ட் மணக்க ஒருவன் நின்றிருந்தான். ஏறி வரும்போதே பார்த்திருந்தாள். அருகில் வந்துநின்றான். அருகில் என்றால், அவள் முதுகு அருகில் இருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டான். அவள் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கும் முந்தைய நிறுத்தத்தில் அவன் இறங்குவதற்காகப் மணிக்கட்டை நோக்கி நடக்கையில்தான் தெரிந்தது. அவ்வளவு நேரமும் அவனது காலில் அவள் சாய்ந்து உட்கார்ந்து இருந்திருக்கிறாள். இரண்டாம் படியருகில் நின்று திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு இறங்கினான். கண்களில் மீனொன்று சர்ரென மேலெழுந்தது பயந்தா வியந்தா என்று தெரியவில்லை. சரி ஏதோ பயண மனநிலையில் கூட்டத்தில் கவனிக்கவில்லை என்று அவளே சுய சமாதானம் செய்துகொண்டாள்

சித்தி வீட்டு கிரகப்பிரவேசத்திற்குச் சென்றபோது நன்றாகவே தெரிந்தது. சித்தப்பாவின் நண்பர்கள் குழுவில் ஒருவன் சங்கரிக்கு மிக அருகில் நின்று பேசுகையில் சமாளிக்க முடியாத அளவிற்கு உடல் செயல்பாடு ஆரம்பித்தது. விளைவுகளை இன்று யோசித்தாலும் ‘திக் ‘ என்று இருந்தது. அவசரமாக பாத்ரூம் செல்வதுபோல அந்த இடம்விட்டு விலகி வந்துவிட்டாள் .

நிலைமை இதுதான், உயரமான ஆண்கள் யாரைப் பார்த்தாலும் ஆங்காங்கே வியர்க்க ஆரம்பிக்கிறது. கட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் மேலும் என்னென்னவோ தோன்றுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியான செயல்புரிய எண்ணம் தலைத்தூக்கும். இதை எப்படி வெளியில் சொல்ல முடியும்!?? இத்தனைக்கும் ஆண்களுடன் அவ்வளவாக நட்போ பழக்கமோ சிறு வயதிலிருந்தே இருந்ததில்லை. இன்று மார்க்கெட்டில் இவள் காய்கறி வாங்கிக்கொண்டிருக்கும் போது அதே கடைக்கு வந்த புளு டீஷர்ட் போட்ட இளைஞன் மிக யதார்த்தமாக காய்கறிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு அருகில் நின்றுகொண்டான். பக்கத்தில் குரல் கேட்டுத்தான் திரும்பிப் பார்த்தாள் அந்த உயரம். .. இவ்வளவு அருகில் வேறு நிற்கிறானே! எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறத் தொடங்கினாள். பார்க்காமல் கீழே குனிய அருகில் வெண்டைக்காய் நோக்கி நீண்ட அவனது முடிகள் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு தலையைத் தூக்கிக் கண்களால் அழைப்பவனைப் போல் சாய்ந்து படிந்த இடது கை.. ஓ காட்! பரபரவென்று மயிர்க்கால்கள் சிலிர்க்கத் தொடங்கின. தவிப்பு கூடிக்கொண்டே இருந்தது. அந்தக் கையை எடுத்துத் தன் தோள்மேல் இட்டு அணைக்கச் செய்யவேண்டும். கையைப் பார்த்தவாறு நிமிர்ந்து திரும்பினால் மாஸ்க் அணிந்திருந்த அவன் முகத்தில் தெரிந்த ஆழமான கண்கள் நினைத்ததைத் தொடரு எனக்கேட்டன. கைவிரல்கள் காய்கறிகளைப் பொறுக்கிய பிளாஸ்டிக் கூடையைப் பற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறியது. அப்படியே போட்டுவிட்டுக் கையில் இருந்த அவளது பையை இறுகப் பிடித்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். அவன் திரும்பிப் பார்க்க, கடைக்காரர் முழித்துக்கொண்டிருந்தார். அந்தப் பதட்டத்தில்தான் பாத்திரக்கடைச் சந்தில் இரண்டாவது முறையும் நடந்தாள்.

கூடவே இருக்கும் தாத்தா, மாமா, மச்சினன் உறவுகளில் இருப்பவரிடம் எந்த எண்ணமும் தோன்றுவதில்லை. அன்று பக்கத்து வீட்டுத் திருமணத்தில் நிலைமை மிக உச்சம். மாப்பிள்ளையின் நண்பன் சங்கரிக்குப் பக்கத்தில் எதிராக நின்று பேசப்பேச அவனது நெஞ்சமும் கைவிரல்களும் மட்டுமே அவள் கண்ணிற்கு பூதாகரமாய்த் தெரிந்தது. சாய்ந்து கட்டிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியதைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் அந்த இடம்விட்டு நகர்ந்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்று யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டாள். பின்பு வருத்தம்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மென்சஸ் தலைவலி அதுதான் விழாவிலிருந்து பாதியில் வந்துவிட்டதாகச் சொல்லிச் சமாளித்திருந்தாள்.

போதாக்குறைக்கு பாத்திரக்கடைக்காரர் தசரதன் வழியில் தினேஷைப் பார்த்து, “மேடமுக்கு உடம்பு சரியில்லையா” எனக் கேட்டு வைத்திருந்தார். தினேஷ் வந்து விசாரித்தார். சமாளித்து ஏதோ பதில் சொல்லிவிட்டாள். ஒருமுறை பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் போய்விட்டு வரும்போது இதுபற்றி யோசித்துக்கொண்டே ஊருக்கு வடக்கே இருக்கும் கல்குவாரி வரைக்கும் ஸ்கூட்டியில் சென்றுவிட்டாள். இதுபற்றிய சிந்தனையில் படுக்கையில் தலைகூட சீவாமல் கலைந்து அப்படியே கிடப்பாள், வழக்கமான வேலைகள் நின்றுபோகும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று யூடியூப் வீடியோக்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கையில்தான் க்ளிக் ஆனது. எஸ் இதுதான் சரி. அகண்ட கண்கள் வழி கிடைத்ததாய் ஒருமுறை மூடித் திறந்தன.

உடனடியாக அம்ரிதாவை அழைத்து எண்ணியிருந்ததைக் கூறினாள். காரணம் இதுதான் எனக் கூறாமல் கண்ட நினைவுகள் வருவதாக, சரியானத் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகக் கூறி அமிர்தாவுடன் அந்த ஊரிலேயே உள்ள யோகா மையத்திற்குச் சென்றாள். மாலை வேளையில் போய் வருவதாக ஏற்பாடாயிற்று. கூடவே இருவேளை லலிதா சகஸ்ர நாமம் சிரத்தையுடன் சொல்லிக்கொள்ள முடிவுசெய்தாள். இந்தச் சங்கடத்தை அம்ரிதாவிடம் சொல்லவில்லை. எப்படி எடுத்துக் கொள்வாளோ, அவளுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் எல்லோரிடமும் சேதி பரவினால் தனது நிலை என்னவாகும் என யோசித்து மனது சரியில்லை. பதட்டமாக இருக்கிறது என்னக் காரணம் என்றே தெரியவில்லையென்று கூறிதான் யோகா மையத்திற்கு வந்திருந்தாள்.

எப்படியும் யோகா கிளாஸ் மாற்றி விடுமென நம்பினாள். அங்குதான் சென்னையிலிருந்து சிறப்பு வகுப்பிற்காக வந்திருந்த யோகா ஆசிரியர் கோபால் அறிமுகமானார். கோபால் அறிமுகமானதிலோ, யோகா ஆசிரியராக இருப்பதிலோ ஒன்றும் பிரச்சினையில்லை.. அமைதியானக் குரலில் நிதானமாகப் பேசி குறிப்புகள் கொடுக்கும் கோபால் ஒரு உயரமான ஆண்!!

யோகா மையத்தை விட்டு நின்றால் அம்ரிதா ஏன் என்னவென்று துளைத்தெடுப்பாள். தினேஷ் சேரும்போதே தொடர்ந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும். அரைகுறையாகப் பாதியில் விட்டு வரக்கூடாது, யோகா ஒரு வரம், அற்புதமானக் கலை என்றெல்லாம் வகுப்பு எடுத்திருந்தான். அவ்வப்போது சரியாகப் பயிற்சிகளைத் தொடர்கிறாளா என்ற கேள்வியும் உண்டு. குறைந்தது ஆறுமாதமாவது தொடர்ந்து போகவேண்டும் என்று அம்ரிதா, தினேஷ் இருவரும் சொல்லியிருந்தனர். விதியோ கோபால் ரூபத்தில் வந்து நின்றது.

யோகா கிளாஸில் சங்கரியின் பக்கத்தில் இருந்த அம்ரிதாவிற்கு கழுத்து, கைகள் என அடிக்கடி வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் சங்கரியைப் பார்த்துக் குழப்பம். ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும் பெண் சிலநேரம் மட்டும் இப்படித் திருதிருவென முழித்துக்கொண்டு, எச்சில் முழுங்கிக்கொண்டு, வியர்த்துப் போவதேன்! பயிற்சி சொல்லிக் கொடுப்பவரைப் பார்க்காமல் தலையைத் திருப்பி பராக்கு பாத்துக்கொண்டிருக்கிறாளே. ஏதாவது பிரச்சினை என்றால் நம்மிடம் சொல்லலாமே எப்படிக் கேட்பது?? யோசிக்க யோசிக்க அம்ரிதாவின் குழப்பம் கூடியது. இந்த நிலையே தொடர்ந்துகொண்டிருக்கவும்,
இன்று பேசிவிடுவதென அவளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றாள்.

சங்கரி அவ்வளவு எளிதில் வாய் திறக்கவில்லை. அவள் மறைக்க மறைக்க அம்ரிதாவின் பிடிவாதம் ஆர்வத்துடன் அதிகரித்தது. சுத்தமாக இருபது நிமிடங்கள் பேசிய பிறகுதான் பேச்சை வாங்க முடிந்தது. ஒருமாறியாயிருந்தது அம்ரிதாவிற்கு,, சிறிது நேரம் அதுபற்றியே மனதிற்குள் ஓட, தனக்கு. அசூயைக்குப் பதில் ஏன் இத்தனை ஆர்வம் வருகிறது என்று தனக்குத்தானே வியந்துகொண்டாள்!!?!

என்னென்ன தோன்றும் என்று தோண்டித் துருவிக் கேட்டாள். சங்கரிக்கும் உள்ளுக்குள்ளேயே மருண்டு மருண்டு மனது வெளிறிக் கிடந்தது. பேசினால் தேவலாம் என்ற நிலை வந்திருந்தது. பேருந்து பயணத்திலிருந்து கோபால்வரை ஒன்று விடாமல் சொன்னாள். அவள் சொல்லும் ஓட்டம் தடைபடாமல் இடையிடையே அம்ரிதா கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள். இறுதியாகவும் ஒரு கேள்வியிருந்தது அம்ரிதாவிடம் …

‘’நீ ஏன் சைக்ரியாடிஸ்ட் கிட்ட போகல?’’

‘’அதுலாம் வேணாம்’’ என்னும் சங்கரியின் கடல் போன்ற கண்களில் பதட்டமான சோகத்தினூடாக ரகசியமாய் வண்ண மீனொன்று பளீரென்று துள்ளிக் குதித்து மறைந்துகொண்டது.

*
அகராதி – aharathi26@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular