Wednesday, October 9, 2024
Homesliderகார்குழலி கவிதைகள் (கவிதை)

கார்குழலி கவிதைகள் (கவிதை)

எழுத்துக்களை மேய்ப்பவள்

நாளெல்லாம் ஆட்டு மந்தையாய்
சிதறித் திரியும் எழுத்துக்களை
கட்டி மேய்த்து
சில நேரம் கவிதை
சில நேரம் கதை, கட்டுரை என
நீலவானம் கவிந்த
புல்வெளிகளில் உலவ விடுவேன்.

இருள் சூழ்கையில்
பட்டியில் அடைத்த பின் எழும்
சந்தடியையும் கனைப்புகளையும்
விடிந்ததும் கிறுக்கல்களாக
கனிணியில் பதிந்துகொள்வேன்.

சில நேரம்
புற்குன்றின் மேல் ஏறி
இறங்கத் தெரியாமல் தவிக்கும்
துறுதுறுத்த குட்டியாகும்
சிந்தனைக்குச் சிக்காத
அந்த ஒற்றைச் சொல்.

ஆட்டின் அடர்ந்த தும்மலாக
அவ்வப்போது
மண்டைக்குள் கலகமூட்டும்
புதிதாக உதித்த
அந்த ஒற்றைக் கருத்து

சில நாள்
ஓடும் நீரைக் கண்டு
தயங்கிப் பின்,
மேய்ப்பவளின் குரலுக்குச் செவிசாய்த்து
கால் நனைப்பது போல
மனதின் ஆணைக்குக் கட்டுப்பட்டு
தட்டச்சும் விரல் நுனிகள்.

ஒன்றையொன்று முட்டித் தள்ளி
சொற்களின் மந்தைக் கூட்டத்தில்
தன் இடத்தை நிலைநாட்டும்
வலிமையான பொருத்தமான
சொல் ஒன்று.

சில நாள்
மந்தையிலிருந்து விலகிய
ஒற்றை ஆடாக
குறுகுறுத்த பார்வை வீசி
புது விஷயங்களை
தேடிக் கோர்ப்பேன்.

பின்னர் வயிறு நிறைய
மேய்ந்த நாளொன்றில்
நிலத்தில் கால்பரத்தி அமர்ந்து
பழைய புனைவுகளின்
பசும்புல்லை அசைபோட்டபடி
நிறைவோடு கண் அயர்வேன்.

***

இடமாறும் திசைகள்

சூரியனின் ஒளிவீசாத நாளொன்று
சாளரத்தின் வழியே
நுழையப் பார்க்கிறது.
பனியின் குளிர்ச்சியைப் பூசிய
கதகதப்பற்ற இரவோ
ஆழ்கடலின் திமிங்கலமாகி
விழுங்கத் துவங்குகிறது.
துடுப்பிலாத படகில் ஏறி
சலனமற்ற அலைகளின் வழியே
பயணம் செய்கிறேன்.
தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்
கீழ்வானின் மஞ்சள் கீற்றை
எட்டிப் பிடிக்கையில்
புரண்டு படுக்கிறது பூமிப்பந்து.
குலுக்கலில் இடமாறிய திசைகள்
மீண்டும் என்னை
விடியலற்ற வெறுமையின் கைகளில்
தவிக்கவிட்டுச் செல்கிறது.

புயலாடிய மனம்

சோவென்று மழை பெய்த
அந்தப் பின்மதிய நேரத்தில்
சுட்டெரிக்கும் சொற்களை
அவள்மீது வீசிவிட்டு
வெகுவேகமாக வெளியேறினான்.

முறுக்கிப் பிழிந்த துணியாக
மனம் துவண்டதும்
வலுத்த காற்றின் சீற்றத்தில்
பின்முற்றத்து முருங்கை
அலைபாய்ந்து ஆடித் தீர்த்ததும்
அதே நாளில்தான்.

மணமுடித்து புதிய வாழ்க்கையில்
காலூன்றிய சமயத்தில் நடப்பட்ட
முருங்கைப் பதியனும்
சோகையான அவள் மணவாழ்க்கையின்
சாயலை ஒத்தே வளர்ந்தது.

மூன்றாம் வருட துவக்கத்தில்
மலடியென்ற பட்டம் சூட்டிச்சாடி
அவளைவிட்டு பிரியும் எண்ணத்தை
வெறுப்புமிழும் சொல்லும்
மிரட்டலான தொனியும் கலந்து
அவன் சொன்ன பொழுதில்
அவள் உகுத்த கண்ணீர்
முருங்கையின் வேரை நனைத்ததை
அவள் அறியவில்லை.

அவளின் சக உதிரத் துணையாகி
தானும் மொட்டுவிடாமல் காய்க்காமல்
முருங்கை நின்றதை
சோகத்தில் உழன்றவள்
அப்போது கவனிக்கவில்லை.
பழுத்த இலைகளை
தங்க நாணயங்களாக
அவள்மீது சொரிந்து
ஆறுதல்படுத்தியதும்
ஏனோ அவளுக்குப் புரியவில்லை.

விருட்டென அவன்
வெளியேறிய மழைநாளில்
ஏற்கனவே பலமுறை
சொல்லி இருந்ததை நிறைவேற்ற
விட்டுப்போயே விட்டான் என
பிளவுபட்ட இதயத்தின் பாளம்
வறண்ட தொண்டைக்குழியில் பிதுங்க
அந்த இரவையும் தொடர்ந்த பகலையும்
அழுதும் புரண்டும் கடத்தினாள்.

வெளியே புயல் ஓயவில்லை;
கருமேகம் சூழ்ந்த அவள் மனமும்
பேய்க்காற்றில் அலைகழிந்தது.
மறுநாள் இரவு தாழ்ந்த பின்
பால் பானையை உருட்டும்
கள்ளப்பூனையாக
உள்ளே நுழைந்தவன்
படுக்கையின் ஓரத்தில்
துவண்டு கிடந்த மேனியில்
உணர்வுகளைக் கிளர்த்த முயன்றான்.

சடசடவென்ற ஒலிகேட்டு
பின்வாசல் முருங்கையைப் பார்க்க
பதைபதைத்தபடி ஓடினாள்.
ஊசலாடி களைத்து
சட்டென முறிந்து போனது
அவள் மனமும் தான்

***

கார்குழலி

RELATED ARTICLES

3 COMMENTS

  1. சடசடவென்ற ஒலிகேட்டு
    பின்வாசல் முருங்கையைப் பார்க்க
    பதைபதைத்தபடி ஓடினாள்.
    ஊசலாடி களைத்து
    சட்டென முறிந்து போனது
    அவள் மனமும் தான்

    அருமை👌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular