Saturday, February 24, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்காந்தியை அறிதல்

காந்தியை அறிதல்

ப.சுடலைமணி

1

ராஜாமணி ராஜவல்லிபுரத்திலிருந்து ஜங்சன் செல்லும் கிருஷ்ணவேணி பஸ்ஸை எதிர்பார்த்து தாராபுரம் பஸ் ஸ்டாப்பில் காத்துநின்றான். பஸ் சரியான நேரத்திற்கு வந்துவிடும். ஆனால் இன்று நேரம் கடந்துகொண்டே இருந்தது. ராஜாமணியின் கண்களில் பஸ் தென்படவில்லை. அவனது கண்கள் வடக்கு நோக்கி அலைந்து கொண்டிருந்தன. ஊருக்கு வடக்கே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வாய்க்கால் பாலம். அதனை ஒட்டி நின்ற பனவடலிகள், மருதமரங்கள் அனைத்தும் பார்வையில் மாறிமாறி தென்பட்டன.

பஸ் வராததால் எரிச்சல் அடைந்த ராஜாமணி பார்வையை மேலப்பத்தை நோக்கி நகர்த்தினான். சீதாரு அலுமினியச் சட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு உசிலமர ஏற்றத்தில் கவனமாக ஏறிக்கொண்டிருந்தாள். வலது கையில் சிறிய மண்வெட்டி ஒன்றைத் தூக்கியபடி சென்றாள். பிறகு மந்திரமூர்த்தி கோயில் ஆலமரத்தைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அன்னிச்சை செயலாகப் பார்வை வடக்குப் பக்கமாகத் திரும்பியது. கிருஷ்ணவேணி பஸ் கண்களில் பட்டது. கரையிருப்பு தாண்டி விக்ரம் டயர் விளம்பர போர்டு பக்கமாக பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்ஸை நுட்பமாகப் பார்க்கத் தொடங்கினான். கொடிக்கம்பத் திண்டில் வைத்திருந்த புத்தகப்பையை வேகமாக எடுத்து முதுகில் மாட்டினான். பையை வேகமாக மாட்டும்போது சற்று மேல் ஏறிய சட்டையை வலது கையால் கீழே இழுத்துவிட்டான். மூக்குக் கண்ணாடியை ஆள் காட்டி விரலால் மேலே தூக்கிவிட்டான். பஸ் பாலத்தில் வரும்போது யாரோ ஒருவன் பைக்கில் வேகமாக முந்திக்கொண்டு முக்கரைச்சியின் தோட்டத்தைக் கடந்து வந்தான். ராஜாமணியின் கவனம் முழுவதும் பஸ்ஸின் மீது இருந்தது.

பைக்கில் வந்தவன் வேகமாக ராஜாமணியின் அருகில் நிறுத்தினான், ஏலேய்… கண்ணாடி… பைக்ல ஏறுல… டைம் ஆயிட்டு… முதல் பீரியடு கரீம் சார் கிளாஸ்… லேட்டா போனா ஏசுவாரு… ஏறு… ஏறு… என்று அவசரப்படுத்தினான். அவன் ஒன்றுமே பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்தான். யமஹா ஆர்எக்ஸ் 100 ஓர் உறுமு உறுமிக்கொண்டு வேகம் எடுத்தது.

பைக்கை தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் திருப்பாமல் நேராக ஓட்டிச்சென்றான். ஏலேய்… சம்முவம்… பைபாஸ்ல போடே… இங்க எங்கடே போற… அவரு எளவுல நிக்க முடியாதுடே… இப்படி போனா தச்சநல்லூர் ரயில்வே கேட்ல மாட்டிக்கிடுவோம்… என்றான் ராஜாமணி. சண்முகநாதன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பைக் சந்திமறிச்சம்மன் கோயில் வளைவில் திரும்பியது. பைக்கின் வேகத்தை திடீரென்று குறைத்தான். அன்னபாக்கியம் பழக்கடையின் முன்பாகப் பைக்கை நிறுத்தினான். ராஜாமணியைப் பைக்கிலிருந்து இறங்கச் செய்தான். பைக்கின் சைடு ஸ்டாண்டை போட்டுவிட்டு ஸ்டைலாக சண்முகநாதன் இறங்கினான். வலது கையை லேசாக ஆட்டி தங்க ப்ரேஸ்லெட்டைச் சரிபடுத்தினான். அவனது செயல் ராஜாமணியைக் கூடுதலாக எரிச்சல் அடைய செய்தது.

இதுனாலதாம்ல ஒங்கூட பைக்கில வரமாட்டேன்… இன்னைக்கு என்ன ஏமாத்தி பைக்குல கூட்டிட்டு வந்துட்ட… போலாம் கௌம்புடே… எங்கையா இப்ப புலவர் மளிகைக்கடைக்கு வருத நேரம்டே… கோழிங்களுக்கு கோதும தவுடு வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தாரு… என்ன இங்கனக்குள்ள பாத்தார்னா சங்க அறுத்து போடுவாரு… என்று ராஜாமணி புலம்பத் தொடங்கினான்.

ஏம்ல சலம்பிக்கிட்டு கெடக்க… வா… ஒரு பழ ஜூஸ் குடிக்கலாம்… நல்லா ஜில்லுன்னு இருக்கும்… இந்தக்கட யார் கடன்னு தெரியுமா? நம்மகூடு படிச்சாள்ள… அல்லோலியா லதாமேரி… அவா கடதான்… என்று சொல்லிக்கொண்டே இரண்டு பழ ஜூஸ்க்கு ஆர்டர் கொடுத்தான்.

சம்முவம் சொன்னா கேளுடே… எனக்கு ஜூஸ் எல்லாம் வேண்டாம்… இங்க இருந்து கௌம்பலாம்… நேரம் ஆகுத என்று பதற்றத்துடன் பரிதாபமாகப் பேசினான் ராஜாமணி.

எதையும் காதில் வாங்காமல் சண்முகநாதன் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் ஜில்லென்ற சிகப்புநிற பழ ஜூஸை வாங்கி வந்தான். வலது கையிலிருந்த கிளாஸை ராஜாமணியிடம் நீட்டினான். ராஜாமணி கிளாஸை வாங்க சற்று யோசித்தான். வேணும்னா குடி… பன ஏறுதவன் குண்டிய எட்டும் மட்டும்தான் தாங்க முடியும்… வேணுமா? வேண்டாமா? ரெண்டையும் நானே குடிச்சிடுதேன் என்றான் சண்முகநாதன். ராஜாமணி வெடுக்கென கிளாஸைப் பிடுங்கிக்கொண்டான். கிளாஸை உடனே வாயில் வைத்து உறிஞ்சினான். வாயில் அகப்பட்ட முழு கருப்புத் திராட்சையைக் கடித்து ருசித்தான். பாதி கிளாஸைக் காலி செய்திருந்தான். சண்முகநாதன் பைக்கில் ஏறி அமர்ந்து அவசரமாக ஸ்டார்ட் செய்தான். ஆக்ஸிலேட்டரை முறுக்கி அவசரப்படுத்தினான். அவனது முகம் மிகவும் பிரகாசமடைந்தது. யாரையோ பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் “சீக்கிரமா வண்டியில ஏறுல… போகலாம்” என்றான். வண்டி ஜங்சனை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.

2

சண்முகநாதனும் ராஜாமணியும் தாழையூத்து சங்கர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளிக்கூடத்தில் படியும் சிமெண்ட் புழுதிகளின் பெரும்பகுதியை இவர்கள் தங்கள்மீது ஒட்டவைத்துக் கொண்டவர்கள். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் சில்லறைச் சேட்டைகளின் பின்னால் கண்டிப்பாக இருவரும் இருப்பார்கள். பிளஸ் டூவில் சுமாரான மார்க் வாங்கி பாஸானார்கள். இருவரது வீட்டிலும் பாளயங்கோட்டை சேவியர் காலேஜ்க்கு அப்ளிகேஷன் போடச்சொல்லி நச்சரித்தார்கள். ஆனால் இருவரும் சேவியர் கல்லூரியில் சேரக்கூடாது என்பதிலும் ஃபாதர்கள் கையில் சிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தனர். வீட்டில் அழுது அடம்பிடித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சேர்ந்தார்கள்.

சண்முகநாதன் பெரும்பாலும் ராஜவல்லிபுரத்திலிருந்து கிருஷ்ணவேணி பஸ்ஸில்தான் ஜங்சன் பஸ் ஸ்டாண்டு வரை வருவான். அதே பஸ்ஸில் ராஜாமணியும் தாராபுரத்தில் ஏறிக்கொள்வான். கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்தில் சண்முகநாதனுக்குப் புதிய யமஹா பைக்கும் வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் தினமும் பைக்கில் காலேஜ் செல்வதற்கு அனுமதி கிடையாது. வாரத்திற்கு இரண்டு நாள் பைக்கில் வருவான். மற்ற நாட்களில் பஸ் பயணம்தான். சண்முகநாதன் பைக்கில் வரும் நாள்களில் ராஜாமணிக்குக் கொண்டாட்டம்தான். இருவரும் காலேஜுக்குப் போகாமல் ஊர் சுற்றுவார்கள். பெரும்பாலும் சினிமா பார்க்கச் செல்வார்கள். ஒருசில நாள்கள் தைரியமாகப் பைக்கில் கன்னியாகுமரி, குற்றாலம், பாபநாசம் வரையும்கூட சென்று வந்தனர். ராஜாமணியும் கஷ்டப்பட்டு யமஹா பைக் ஓட்டக் கற்றுக்கொண்டான். ஒருநாள் பைக்கில் கன்னியாகுமரிக்குச் சென்று திரும்பும்போது பொன்னாக்குடி அருகில் திருவள்ளுவர் பஸ்ஸை பைக்கில் முந்தினான் ராஜாமணி. அன்று இரவு முழுவதும் தன்னுடைய சாதனையை நினைத்து தூங்காமல் கிடந்தான்.

3

படிப்பில் இருவரும் மோசம் என்று கூறிவிட முடியாது. எப்படியோ அனைத்துப் பாடங்களிலும் பாஸ் ஆனார்கள். ஈகிள் புக் சென்டரில் கிடைக்கும் ஐம்பது ரூபாய் கைடுகள் இவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடும். கல்லூரியிலும் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. சில செமஸ்டர்களில் வருகைப் பதிவு குறையும்போது பேராசிரியர் ராமையா காப்பாற்றி விடுவார். அடிதடி, வம்பு, வழக்கு எதிலும் இருவரும் ஈடுபடுவதில்லை. பைக் கையில் கிடைத்துவிட்டால் இருவரும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

மாலை நேரம் திருநெல்வேலி ஜங்சன் பஸ் ஸ்டாண்ட் களைகட்டி இருக்கும். குறிப்பாக தச்சநல்லூர், தாழையூத்து வழியாகச் செல்லும் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் கேட்கவே வேண்டாம். கல்லூரி, பள்ளிக்கூட மாணவர்களால் நிரம்பி வழியும். பஸ்ஸில் அமர்ந்து செல்ல இடம் பிடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ராஜா பில்டிங் அருகில் வலதுபுறம் பஸ் திரும்பியதுமே கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடிவரத் தொடங்கும். பஸ்ஸை நிறுத்துவதற்கு டிரைவர்கள் தங்களுக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.

சண்முகநாதனும் ராஜாமணியும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸை எதிர்பார்த்து இசக்கி கடை போட்டிருக்கும் தூணின் அருகில் நின்றனர். சண்முகநாதனின் கண்களில் சிறிய பதற்றமும் மிரட்சியும் தெரிந்தது. ராஜாமணிக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கும் திறமை வாய்க்கவில்லை என்றே கூறலாம். அவன் சற்று வெகுளியான பையன். சலசலவென்று பேசிக்கொண்டிருப்பானே தவிர வேறு எதையும் நுட்பமாக அவதானிக்கும் ஆற்றல் இல்லாதவன்.

ஏலேய்… சம்முவம்… ஒனக்காக எங்கெல்லாம் அலையுதேன்… நீ கூப்பிட்ட ஒடனே ஒம் பின்னாடியே வந்துடுதேன்… ஆனா நான் கூப்பிட்டா நீ வரமாட்டேங்குற… வாடே… பஸ்சு நேத்து மாதிரி லேட்டாதான் வரும்… ரோடு முழுக்க அறுப்புக்களம் போட்டுருக்கானுவ… பஸ்ஸ வேகமா ஓட்ட முடியாது… மேம்பாலத்து அடி வரைக்கும் போயிட்டு வரலாம்… என் கேம்லின் பேனால நிப்பு கீறி போச்சி… பென் சென்டர் போன ஒடனே மாத்தி வாங்கிறலாம்… வாடே ஒடனே வந்திடலாம் என்றான் ராஜாமணி. சும்மா இருல… நாளைக்குப் பைக்க கொண்டாறேன்… போகலாம்… இன்னைக்கு எனக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு… கொஞ்ச நேரம் எங்கூட நில்லு… இல்லனா வா… ஆவின் கடையில சூடா ஒரு பால் குடிச்சிட்டு வரலாம் என்றான் சண்முகநாதன். பஸ் ஸ்டாண்டின் முதல் கடையாக இருந்த ஆவின் பாலகத்தை நோக்கி நடந்தான்.

ராஜாமணிக்கு வேறு வழியில்லை. அவனும் பால் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கடையைச் சுற்றி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு ரூபாய்க்குச் சூடான சுவையான ஆவின் பால் என்றால் சும்மா விடுவார்களா என்ன? கண்ணாடி கிளாஸ்களில் பாலை வாங்கியவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து நின்றுகொண்டனர். சண்முகநாதன் கூட்டத்தை விலக்கிவிட்டு இரண்டு கிளாஸ்களில் பாலுடன் வந்தான். ராஜாமணி ஒரு கிளாஸை வாங்கிக்கொண்டான். சூடா இருக்கு மாப்ள… பாலை லேசாக உறிஞ்சி சுவைத்துவிட்டு சீனியை நெறைய போட்டுருக்கானுவ… கூப்பயினி மாதிரி நல்லா இனிப்பா இருக்குடே என்றான் ராஜாமணி.

நீலநிற தாவணி அணிந்த மாணவிகளின் கூட்டம் வேகமாக ஆவின் பாலகத்தை நோக்கி வந்தது. சண்முகநாதன் ஊஷாரானான். அவனது முகத்தில் யாரும் கண்டறிய முடியாத மெல்லிய புன்னகை தவழ்ந்தது. மாப்ள… இந்தத் தாவணி எந்த ஸ்கூல்ல? தெரியாதது போல கேட்டான். ராஜாமணிக்கு இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவது மிகவும் பிடித்த காரியம். யோசிக்கவில்லை சட்டென்று கூறினான். டவுன் கல்லண ஸ்கூல் தாவணில… உனக்குத் தெரியாதாக்கும்?… இந்தப் பிள்ளைங்க எல்லாம் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் ஸ்டாப்புல காந்தி செல முன்னாடி எறங்குங்க… எறங்கி நைனார் கொளம் ரோட்டுல நடந்து போறத பாத்திருக்கேன்… அதுல புதுசா தாவணி போட்டுருக்கும் புள்ளைங்க எல்லாம் லெவன்த் படிக்குதுங்க… தாவணிய பாத்தாலே நான் கண்டுபிடிச்சுடுவேன் என்றான். அனைத்தையும் கேட்டவாறே சண்முகநாதன் பாலை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.

ராஜவல்லிபுரம் செல்லும் கிருஷ்ணவேணி பஸ் வேகமாக பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தது. பஸ்ஸில் “அழகிய லைலா… அவளது ஸ்டைலா…” பாடல் அதிர்வுடன் ஒலித்துக்கொண்டிருந்தது. டிரைவர் திடீரென பிரேக்கை மிதித்து பஸ்ஸை நிறுத்தினான். முன்னாடி செழியநல்லூர் பஸ் கூட்டத்தில் நிரம்பி வழிந்து மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கிருஷ்ணவேணி பஸ் டிரைவர் பஸ்ஸை வேறு வண்டிகள் முந்திச்செல்ல முடியாதபடி சற்றுக் கோணலாக நிறுத்தி வைத்தான். பஸ்ஸை நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக இறங்கினான். டிரைவரின் விரல், கழுத்தில் தென்பட்ட தங்கம் புதுமாப்பிள்ளையை நினைவுபடுத்தியது. சட்டையின் மேல் பட்டனை மாட்டாமல் விட்டிருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கிய வேகத்தில் பஸ் ஸ்டாண்டின் தூணைச் சுற்றிலும் கடை பரப்பியிருந்த இசக்கியிடம் ஏலேய்… மாப்ள… ஒரு சிகரெட்டு கொடுடே… என்றான். சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஆனந்தமாகப் புகையை உறிஞ்சி உள்ளிழுத்து ரசித்து வெளியேற்றினான்.

நண்பர்கள் இருவருக்கும் பஸ்ஸில் இடம் பிடிக்கும் வித்தை நன்றாகவே தெரியும். ராஜாமணி பஸ்ஸின் பின்வாசல் வழியாக ஏறி சற்று முன்னால் இருந்த சீட்டில் இடம் பிடித்தான். ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். இடது கையைப் பக்கத்து சீட்டில் வைத்துக்கொண்டு, ஏலேய்… சம்முவம் இங்க வாடே… முன்னால எடம் பிடிச்சிருக்கேன்… என்று கத்தினான். சண்முகநாதன் மாணவர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டான். ராஜாமணி இருக்கையைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தான். ராஜாமணியின் அருகில் வந்த மல்லிகா இவன் கையை எடுக்கச் சொன்னாள். ஏல… ராஜாமணி மைனிக்கு நிக்க முடியாதுடே… கொஞ்சம் எடம் கொடுப்பா… என்றாள். இங்கெல்லாம் எடம் இல்லை மைனி… என் பிரண்ட்டு சம்முவம்… வருவான்… அவனுக்குத்தான் எடம் போட்டு வச்சிருக்கேன்… என்றான். இதையும் மீறி மல்லிகா இருக்கையில் அமர வந்தாள். இங்க பாரு மைனி ஒன் வேலைய என்கிட்ட காட்டாத… ஒன் குண்டிய வேற சீட்டுல போயி வையி… என்று கூறிவிட்டு, இருக்கையின் இடதுபுறம் நகர்ந்து அமர்ந்துகொண்டான். கைகளை முன் இருக்கையின் கம்பியில் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். சண்முகநாதன் ஒருவழியாக இருக்கைக்கு அருகில் வந்தான். சற்று அயர்ச்சியுடன் சீட்டில் அமர்ந்தான். உடனே பேண்ட் பாக்கெட்டிலிருந்து அழகான கொம்பு சீப்பை உருவி எடுத்து கலைந்திருந்த தலைமுடியைச் சீவிவிட்டான். ராஜாமணி, என்னல சம்முவம்… பொண்ணால பாக்கபோற? தலைய இந்தச் சீவு சீவுத? என்று நக்கல் அடித்தான்.

பஸ்ஸில் வெக்கை அதிகமாக இருந்தது. டிரைவர் பஸ்ஸின் எஞ்சினை அனைத்து வைக்காமல் சென்றிருந்தான். பஸ்ஸில் ஒரு மென்மையான அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. பஸ்ஸில் மூச்சு விடமுடியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் அனைவரும் வியர்வையில் குளித்தவர்களாகக் காட்சியளித்தனர். பஸ் நகரும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ராஜாமணி ஜன்னல் ஓரமாகவும் சண்முகநாதன் உள் பக்கமாகவும் அமர்ந்து இருந்தனர். ராஜாமணி தன்னுடைய மூக்குக்கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான். கண்ணாடியை மாட்டிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான். மாப்ள… இவனுவ வண்டிய ஒடனே எடுக்க மாட்டானுவ… முன்ன பின்ன டர்ரு… டர்ருனு… இழுத்துக்கிட்டே நிப்பானுவ என்றான். இப்ப என்னல அவசரம்… வீட்டுக்குப் போயி என்ன செய்யப் போற?… அங்கன ஒனக்கு வெட்டி முறிக்கித வேலையா இருக்கு? என்று கேட்டான் சண்முகநாதன்.

கல்லணை ஸ்கூல் மாணவிகள் கூட்டம் பஸ்ஸில் நிரம்பியிருந்தது. தச்சநல்லூரில் இறங்கி விடுவதால் அவர்கள் இடம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று மாணவிகள் சண்முகநாதனின் அருகில் வந்து நின்றனர். சண்முகநாதனுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. முழுவதுமாகக் காற்று நிரப்பப்பட்ட பலூன் வானில் பறப்பது போன்று பறந்து கொண்டிருந்தான். ராஜாமணி பஸ்ஸின் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். தூங்குமூஞ்சி கண்டக்டர், இசக்கி கடையில் மாவா பாக்குத்தூள் வாங்கி வாயில் நிரப்பியதைப் பார்த்தான். கண்டக்டர் முதலில் ஊறிய எச்சிலைப் பஸ்ஸின் டயரை ஒட்டி துப்பினான். தோல் பைக்குள் கிடந்த விசிலைக் கையில் எடுத்தான்.

பஸ் மெதுவாகக் கிளம்பியது. இந்தியன் வங்கி வாசல் பக்கம் திரும்பும் இடத்தில் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும்போது கண்டக்டர் விசிலை அடித்து நிறுத்தினான். படியில் நின்றுகொண்டு உடையார்பட்டி, தச்சநல்லூர், தாராபுரம், கரையிருப்பு, கணபதி மில், தாழையூத்து… என்று கத்த ஆரம்பித்தான். பஸ்ஸில் இருந்தவர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். ராஜாமணிக்குப் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சோமுத்தேவர் போதையில் பேச ஆரம்பித்தார். நீங்க வெளங்க மாட்டேங்கடே… இவ்வளவு கூட்டம் ஒங்களுக்குப் போதாதா?… இன்னும் எவன ஏத்தப் போறீங்க… பஸ்ஸ எடுங்கடே என்றார்.

பயணிகளின் சத்தம் அதிகரிக்கவே பஸ் வேகமாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது. ஜானகிராம் ஹோட்டல் அருகே இரண்டு பெண்கள் கையை நீட்டி பஸ்ஸை மறித்தனர். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு பஸ் நகர்ந்தது. உடையார்பட்டி குளக்கரைக்கு வந்த போதுதான் பஸ்ஸிற்குள் ஓரளவு காற்று புகுந்தது. உடையார்பட்டி குளத்தில் மார்பளவு தண்ணீருக்குள் நின்றுகொண்டு மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கான வலைகளைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

உடையார்பட்டி ராமலெட்சுமி ஆஸ்பத்திரி கேட்டவங்க வாசல் பக்கம் வாங்க… ஒரு ரூபா சில்லறைய வச்சிக்கிட்டு வாசல் பக்கம் வாங்க… என்று கத்திக்கொண்டிருந்தான். உடையார்பட்டி முக்கில் பஸ் திரும்பி நின்றது. இனி எப்படியும் ஐந்து நிமிடங்கள் டிக்கெட் போடுவதற்காக நிறுத்தி வைத்துவிடுவார்கள். பயணிகளுக்குப் பழகிப்போன ஒன்றுதான். ராமலெட்சுமி ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருந்த வயல் காட்டை மண்ணைப் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வலதுபுறமாக அமர்ந்திருந்த ராஜாமணி பயணிகளுக்கு இடையே கிடைத்த இடைவெளி வழியாக அந்தப் பணிகளைக் கவனித்தான். சம்முவம் இந்த வயக்காட்ட ஏன்டே மண்ணப் போட்டு மேடாக்குதானுவோ… இங்கன நெல்லு வௌஞ்சிட்டுதானடே இருந்திச்சி… இதுல என்னதான் செய்யப் போறானுவ… கோட்டிக்காரப் பயலுவ என்று கேட்டான். சண்முகநாதனுக்குத் தெரியும் இங்க ஒரு சினிமா தியேட்டர் கட்டப்போகிறார்கள் என்பது, ஆனால் அவன் எதுவும் பேசவில்லை அவனது கவனம் முழுவதும் கல்லணை ஸ்கூல் மாணவிகளின் மேல் இருந்தது. குறிப்பாக அந்தச் சுருட்டை முடி கொண்ட கருத்த பெண்ணின் மேல் இருந்தது.

சுருட்டை முடிக்காரி ஓர் இருக்கைக்கு முன் நின்றாள். வரிசையாக அவளின் தோழிகள் நின்றனர். பள்ளிக்கூட கதைகளைப் பேசிக்கொண்டு நின்றனர். பள்ளிக்கூடத்தில் பேச முடியாததைப் பஸ்ஸில் பேசினார்கள். சண்முகநாதனுக்கு எப்படியோ தைரியம் வந்தது. அவனுக்கு மிகவும் அருகில் நின்ற முகப்பருக்களால் நிறைந்த முகம் கொண்ட மாணவியிடம், சுருட்டை முடிக்காரியைக் காட்டி அவபேரு என்ன?… சட்டென்று கேட்டான். முகப்பருக்காரி முகத்தில் தோன்றிய பயத்தை மறைத்துக்கொண்டு, அவ பேர என்ட கேட்டா எப்படித் தெரியும்… அவட்ட கேட்க வேண்டியதுதானே… என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ராஜாமணி சட்டென்று, அவா பேர அவாட்ட கேக்குறோம்… உம் பேரு என்னட்டி? என்றான். முகப்பருக்காரி கொஞ்சம் கூட யோசிக்காமல் திலகா என்று கூறிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்..

பஸ் கிளம்பியது. மிதமான வேகத்தில் சென்றது. வழக்கம் போலவே தச்சநல்லூர் ரயில்வே கேட் அடைத்திருந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் செல்லும் நேரம்… ராஜாமணி டென்சன் ஆனான். இன்னைக்கும் கெணத்துல குளிக்க முடியாது போல… சீக்கிரமா வீட்டுக்குப்போனா காக்காச்சிக் கெணத்துல குளிக்கப் போகலாம்னு இருந்தேன்… சோலிய முடிச்சிட்டானுவ… இனி போன மாதிரிதான்… பேசிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிவைத்துக் கொண்டான். சண்முகநாதன் சுருட்டை முடிக்காரியின் ஒவ்வொரு அசைவுகளையும், பேச்சுகளையும், சில்லறைச் சேட்டைகளையும் அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தான். அவளின் பெயரைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பெயரை அறிந்து கொள்ளும் வழிதான் தெரியவில்லை.

கேட் திறந்தவுடன் பஸ் வேகமெடுத்தது. பெருமாள் கோயில் ஸ்டாப்பில் ஓரிருவர் இறங்கினர். தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் ஸ்டாப்பில் பஸ்ஸில் நின்று கொண்டிருந்த கூட்டம் ஓரளவு இறங்கியது. சுருட்டை முடிக்காரியும் தன் தோழிகளுடன் இறங்கி தெற்கு நோக்கி நடந்தாள். கணேஷ் பீடிக்கம்பெனிக்குச் சென்று வந்த ஒரு சில பெண்கள் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் முழுவதும் பீடி இலை, பீடித்தூள் வாசனையால் நிரம்பியது. தாராபுரம் ஸ்டாப்பில் ராஜாமணி இறங்கிக் கொண்டான். சாலையைக் கடப்பதற்காக மேல வாய்க்கால் கரையில் நின்றான். கம்பதடியான் கோயிலின் மணியோசை கேட்டது. இருபுறமும் மாறிமாறி வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாமணியிடம், கொழுந்தப்பிள்ள… மைனிக்கு எடம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டயளே?… ஒங்க பக்கத்தில ஒக்காந்து வர எவ்வளவு ஆசபட்டேன்… இப்படி செஞ்சிட்டயளே?… என்றாள் மல்லிகா. அதனை ராஜாமணி பொருட்படுத்தவில்லை. வேகமாக ரோட்டைக் கடந்து உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் நுழைந்து நடந்தான்.

4

காலையில் கிருஷ்ணவேணி பஸ் சரியான நேரத்திற்குத் தாராபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றது. ராஜாமணி ஓடி போய் பஸ்ஸில் பின்வாசல் வழியாக ஏறினான். காட்டாம்புளி அம்பியிடம் விசாரித்து, சண்முகநாதன் பஸ்ஸில் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். சண்முகநாதன் ஜங்சன் பஸ் ஸ்டாண்டில் நிற்பான் என்று நினைத்துக்கொண்டான். பஸ் மெதுவாகச் சென்றது. கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த தாத்தா எழுந்தார். தன் காலுக்கடியில் வைத்திருந்த சிமெண்ட் சாக்கில் சுற்றிய கருவேப்பிலை கட்டை தூக்கிக்கொண்டு சந்திமறிச்சம்மன் ஸ்டாப்பில் இறங்கினார். ராஜாமணி அந்தச் சீட்டில் அமரச் சென்றான். சீட்டை அப்போதுதான் கவனித்தான். சற்று ஈரமாக இருந்தது. இருந்தாலும் சீட்டில் அமர்ந்து கொண்டான். பஸ் கிளம்பும் நேரத்தில் சண்முகநாதன் ஓடிவந்து ஏறினான். அவனது தலைமுடி லேசாக கலைந்திருந்தது… ராஜாமணி, “ஏலேய்… சம்முவம்… மாப்ள… இங்ஙன ஏம்ல பஸ்சுல ஏறுதா?… என்னாச்சி…” என்றான். சண்முகநாதன் சற்று சுதாரித்துக்கொண்டு சந்திமறிச்சம்மன் கோயிலுக்குப் போனேன்… என்றான். ராஜாமணியின் வெகுளித்தனம் இந்தப் பொய்யைக் கண்டுபிடிக்க முடியாமல் செய்தது. இங்க உக்காருதயா… என்றான். வேண்டாம்ல… நீயே இருந்துக்கோ… நான் கொஞ்சம் முன்னாடி போயி நின்னுக்குறேன்… என்று கூறிவிட்டு வேகமாக பஸ்ஸின் முன் பகுதியை நோக்கி நகர்ந்தான். பஸ்ஸில் காதலன் படத்தின் ”பேட்ட ராப்” பாடல் உச்ச ஸ்தாபியில் அலறிக்கொண்டிருந்தது.

ரயில்வே கேட்டில் மாட்டிக்கொள்ளாமல் பஸ் கடந்து சென்றது. பஸ்ஸை பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே ஓட்டிச்செல்லாமல், ராஜா பில்டிங் பாம்பே டையிங் ஜவுளிக்கடை ஓரமாக நிறுத்தி வைத்தனர். “ஜங்சன் போறவங்க எல்லாம் வேகமா எறங்குங்க… டவுனுக்குப் போறவங்க பஸ்சுலயே இருங்க… வண்டி டவுனுக்குப் போவுது” என்று கண்டக்டர் கத்தினான். பெரும்பாலும் அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர். கல்லணைப் பள்ளிக்கூட மாணவிகள் பஸ்ஸிலேயே இடம்பிடித்து அமர்ந்தனர்.

சண்முகநாதன் முன்வாசல் வழியாகச் சற்றுத் தாமதமாக இறங்கி ராஜாமணியை நோக்கி ஓடிவந்தான். மாப்ள… இன்னைக்கு நாம சினிமாவுக்குப் போகலாம்டே… இந்தப் பஸ்சுல ஏறி டவுன் போகலாம் என்றான். ஒனக்கு என்ன கோட்டி புடுச்சிருக்கால?… படம் 11.30-க்குதான் போடுவானுவ… இப்ப ஒன்பது மணிதான் ஆவுது… என்ன ஆச்சி ஒனக்கு… வா ஒழுங்கா காலேஜ் போகலாம்… கரீம் சார் நம்மல கொன்னு போடுவாரு… இன்னைக்குப் பிராக்டிக்கல் கிளாஸ் இருக்கு… லேப்ல முட்டை வைச்சிருக்கோம்… தெரியும்தான… இன்னைக்கு ‘சிக் எம்ரியோ‘ பிராக்டிக்கல் செய்யணும்… நான் வரல நீ வேணும்னா போடே… ரெண்டு மூணு வாரமா பிராக்டிக்கல் கிளாசுக்குப் போகல… போன தடவை நான் இன்குபேட்டர்ல வச்சிருந்த முட்ட குஞ்சு பொரிச்சிட்டுனு எல்லாவனும் சேந்து என்ன கிண்டல் பண்ணுதானுவ… நான் இன்னைக்குக் காலேஜ் போகணும் என்றான் ராஜாமணி. மாப்ள… இன்னக்கி ஒரு நாள்டே… ப்ளீஸ்… நாளைக்கு நான் பாலாமடையிலிருந்து ஒனக்கும் சேர்த்து நாட்டுக்கோழி முட்டய வாங்கியாறேன்… சம்சுதீன் அண்ணன்ட சொல்லி யாருக்கும் தெரியாம முட்டய இன்குபேட்டர்ல வைச்சிரலாம்… அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எப்படியோ ராஜாமணியை தாஜா செய்துவிட்டான். இருவரும் வந்த பஸ்ஸில் மீண்டும் ஏறினர்.

இருவரும் சுருட்டை முடிக்காரிக்குப் பின்சீட்டில் அமர்ந்துகொண்டனர். திலகா சுருட்டை முடிக்காரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ராஜாமணி மெதுவாக மாப்ள… ரெண்டு போ்ல எவளோ ஒருத்தி மைசூர் சேண்டல் சோப்பு போட்டு குளிச்சிட்டு வந்துருக்கா… வாசன தூக்குதுல… என்றான். மேலும் மெதுவாக, “ஏட்டி திலகா… கல்யாண வீட்டுக்காட்டி போற… மண்டைல இவ்வளவு பூவ வைச்சிருக்க” என்று கிண்டல் செய்தான். திலகா வெடுக்கென பின்னால் திரும்பி முறைத்தாள். “ஏட்டி… கன்னத்துல என்னட்டி இவ்வளவு பருவ வச்சிருக்க… டீவி வௌம்பரத்துல எத்தன களிம்ப காட்டுதானுவ… வாங்கி தடவ வேண்டியது தானே” என்றான். “திலகா, இங்கே பாரு ஓவரா போற… ஒன் சோலிய பாரு… எல்லாம் எனக்கு தெரியும்” என்றாள். சுருட்டை முடிக்காரி திரும்பி பார்க்கவே இல்லை. கையில் ஓர் உதிர்ந்த மல்லிகைப்பூவை எடுத்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். சண்முகநாதன் மெதுவாக அவளிடம், “ஒன் பேர தான கேட்டேன்… சொன்னா கொறஞ்சா போவ… ஒரே ஒருதடவ என்ட பேசு… பேர சொல்லனாலும் பரவாயில்ல… ஒரு வார்த்தையாவது என்ட பேசு… எத்தன நாள் உம் பின்னாடியே சுத்துதேன்… என்ன திரும்பியாவது பாரு… ஒருதடவ ஒன் மொகத்த காட்டு” என்று கெஞ்சினான். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவன் பேச்சைச் சட்டை செய்யவில்லை. கண்டக்டர் அருகில் வந்தான். சண்முகநாதன் அமைதியானான்.

பஸ் ஈரடுக்கு மேம்பாலத்தில் முக்கிமுனகி ஏறிக்கொண்டிருந்தது. ராஜாமணி சூழ்நிலையை மாற்ற முயற்சித்தான். சண்முகநாதனிடம் பாலஸ் டீ வேலஸ் தியேட்டரைக் காட்டி, “மாப்ள… இந்தத் தியேட்டர்ல படம் பாத்திருக்கியா?” என்றான். “பாக்கல… இது ரொம்ப நாளா மூடித்தான் கெடக்கு… முன்னாடி ஒருநாள் கையில அடி பட்டதுக்குப் பண்டாரவௌ நாடார்ட்ட கட்டுப்போட இங்க வந்துருக்கேன்… முட்ட பத்து போட்டு கட்டிவிட்டார்… ரெண்டு வாரத்தில் கை சரியாயிட்டு” என்றான். பண்டாரவௌ நாடாரு இங்கனதான் இருக்காரா என்றான் ராஜாமணி. தியேட்டர்லதான் கைகால் ஒடிஞ்சவங்களுக்கு அவரு ஆஸ்பத்திரி நடத்துராரு… எங்க ஐயா எம்-80 வண்டில கூட்டிட்டு வந்தாரு என்றான்.

கல்லணை ஸ்கூல் மாணவிகள் அனைவரும் வாகையடி முக்கு ஸ்டாப்பில் இறங்கி மேற்கு நோக்கி நடந்து சென்றனர். ராஜாமணியும் சண்முகநாதனும் இறங்கி கிழக்கு ரத வீதியில் ராயல் டாக்கீஸ் இருக்கும் வடக்கு திசையை நோக்கி நடந்தனர். மாப்ள… இன்னும் படம் போட நேரம் இருக்கு… என்ன பண்ணலாம் என்றான் ராஜாமணி. கொஞ்ச நேரம் நெல்லையப்பர் கோயிலுக்குள்ள போகலாம்… நல்லா குளுந்தாப்ல இருக்கும்… அப்படியே நெல்லையப்பரையும் காந்தமதியம்மனையும் பாத்துருவோம் என்றான் சண்முகநாதன். மாப்ள… ஆரெம்கேவி கடைக்கு எதுத்தாப்ல பழ ஜூஸ் கெடைக்கும் வாங்கித் தருவியா? என்றான் ராஜாமணி. போகலாம் வா… இந்த எச்சிகள புத்தி மட்டும் ஒன்னவிட்டுப் போகாது போல என்றான் சண்முகநாதன். எப்படில போகும்… பத்து வருஷமா நீ பழகி கொடுத்ததுதான்… இங்கையால ஆரம்பிச்சது… தாழையூத்து பஜார்ல டெய்லி நீ பழ ஜூஸ் வாங்கிக் கொடுத்துப் பழக்கிட்ட… பள்ளிகொடத்துல படிக்கிறப்ப பழகுனது…. தொட்டில் பழக்கம்… விட முடியுமா?… ஏலேய் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டேன்ல பேசாம வாடே என்றான் சண்முகநாதன். ஆண்டிநாடார் கடை முக்கில் திரும்பி வடக்கு ரத வீதியில் நடந்து சென்றனர்.

5

ராஜாமணி படிப்பில் சுமார்தான் என்றாலும் கல்லூரி செல்லும் நாள்களில் ஓரளவு பாடங்கள் குறித்து தெரிந்துகொள்வான். சண்முகநாதன் படிப்பில் இப்பொழுது அக்கறை காட்டுவதில்லை. சுருட்டை முடிக்காரியைப் பின்தொடரும் பயணத்தால் கொஞ்சநஞ்ச படிப்பும் கேள்விக்குறியானது. ராஜாமணிக்கு சண்முகநாதனின் விசயம் ஓரளவிற்கு அடைபட்டது. சண்முகநாதனை எச்சரித்தும் பார்த்தான். ஆனால் அவன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. வேறு வழியின்றி ராஜாமணியும் ஓரிரு நாள்கள் சண்முகநாதனுடன் சேர்ந்து ஊர் சுற்றினான்.

சுருட்டை முடிக்காரியின் நதிமூலம் ரிஷிமூலம் தேடியலைந்தனர். ஒருநாள் தைரியமாகச் சுருட்டை முடிக்காரியின் தெருவில் இறங்கி நடந்தனர். அவளைப் பின்தொடர்ந்து வீட்டையும் கண்டுபிடித்தனர். தச்சநல்லூரிலிருந்து டவுனுக்குச் செல்லும் வழியில் கணேஷ் பீடி கம்பெனிக்கு எதிர்த்த சந்து ஒன்றில் அவள் வீடு இருந்தது. ஓடு வேய்ந்த பழைய காலத்து வீடு, வீட்டின் சுவர்களில் சுண்ணாம்பு உதிர்ந்து எதையோ சொல்லாமல் அறிவித்தது. வீட்டின் முன்புறம் இரண்டு மெலிந்து போன பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் திண்ணையின் மூலையில் உடைந்த சட்டியொன்றில் கோழி ஒன்று அடை பம்மிக்கிடந்தது. பாரில் கறை படிந்த பழைய சைக்கிள் ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் சுவர் உயரம் குறைவாக இருந்தது. உடைந்த ஒருசில ஓடுகளை மாற்றியிருந்தனர். வீட்டின் முற்றத்தை அடைத்துக்கொண்டு பூவரச மரம் ஒன்று படர்ந்து கிடந்தது. வீட்டின் வலது புறத்தில் தென்னை ஓலைகளால் நிரசல் பிடித்திருந்தனர்.

ராஜாமணிக்கு உள்ளூர பயம் கொன்றுபோட்டது. இருந்தாலும் நடித்துக்கொண்டு சண்முகநாதனுடன் நடந்து சென்றான். அந்தத் தெருவிலிருந்து கிழக்கு நோக்கி நடந்து ஆறுமுகம் ரைஸ் மில்லைக் கடந்து, தேவி கல்யாண மண்டபத்தை ஒட்டிவந்து பஸ் ஸ்டாப்பை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிலநாள்கள் யமஹாவில் அந்தத் தெருவைச் சுற்றிவரத் தொடங்கினர். அவளிடம் பேசுவதற்கும் தயக்கம். பயம் வேறு… சண்முகநாதனுக்கு உலகமே சூன்யமாகத் தெரிந்தது.

ராஜாமணி இல்லாமல்கூட சண்முகநாதன் ஜங்சன். டவுன், தச்சநல்லுர் என்று சுற்ற ஆரம்பித்தான். அவனது மனம் நிலையற்றதாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. நண்பர்களிடம் பேசுவதற்குக்கூட தயங்கினான். நண்பர்களிடம் பேசுவதைத் தவிர்த்தான். ஒருசில நேரங்களில் அவனது யமஹா மேம்பாலத்திற்கு அடியிலிருக்கும் தளபதி ஒயின்ஸ்க்கும் சென்று வந்தது. கல்லூரிக்கு வருவது மிகவும் குறைந்தது. ராமையா சார் ஒருநாள் அவனைக் கல்லூரிக்கு அழைத்து தனியாகப் பேசிப்பார்த்தார். பயன் ஒன்றும் இல்லை. செமஸ்டர் தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் காலையில் சண்முகநாதன் ராஜாமணியைப் பஸ் ஸ்டாண்டில் சந்தித்துப் பேசினான். இருவரும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி விலக்கில் இருக்கும் டீ ஸ்டால் சந்தில் நின்று பேசினர். மாப்ள… அவ பேரக்கூட தெரிஞ்சிக்க முடியல… திலகாவும் பேச மாட்டேங்குறா… கிண்டல் பண்ணினாக்கூட கண்டுக்காம போயிடுதா… என்ன செய்யணு தெரியல… எங்கண்ணன்ட்ட வேற எவனோ இத பத்தவச்சிடானுவ… அவன் அடிக்கடி என்ன ஏசிக்கிட்டு இருக்கான். பைக்க எடுக்க விடமாட்டேங்குறான். போன வாரம் வண்ணாரப்பேட்டை சாலைத்தெருவுல இருக்க என் அக்கா வீட்டுக்குப் போனேன். அவளும் இதபேசி எச்சரிச்சி விட்டா… இப்ப அவ வீட்டுக்கும் போக முடியாம இருக்கேன்… எங்க ஐயாவுக்கு மட்டும் தெரிஞ்சுது நான் உயிரோடவே இருக்கமுடியாது… அவர பத்திதான் ஒனக்குத் தெரியுமே… பெல்ட்ட கழட்டி அடி பிச்சிடுவாரு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்.

மாப்ள… நீ காலேஜ் வந்துட்ட… அவ சின்ன பொண்ணுடே… இப்பதான் பிளஸ் ஒன் படிக்கிறா… கஷ்டப்பட்ட புள்ள… அவ அப்பா பால் விக்கிறார்… வீட்டுல பெருசா ஒன்னும் ஒர மோரு இல்ல… பயந்துட்டா… நீ வேற அடிக்கடி அவ வீடு வரைக்கும் போற வார… அவளாள என்ன செய்யமுடியும்… நீ கொஞ்சம் பொறுமையா இருல… இப்ப செமஸ்டர் எக்ஸாமுக்குப் படிக்கிற வேலயப் பாரு… இப்ப படிச்சாலும் பாஸ் பண்ணிடலாம்… கவலைப்படாதே நான் ஒனக்குச் சொல்லித் தாரேன்… என்றான் ராஜாமணி.

சண்முகநாதன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வேகமாக டீ ஸ்டால் கல்லாவிற்குச் சென்று, “யண்ணே… ஒரு பில்டர் கொடுங்க…” என்றான். வாங்கிய வேகத்தில் கயிற்றுக் கங்கில் பற்றவைத்து அவசரமாக இழுக்க ஆரம்பித்தான். சண்முகநாதனைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு 3-ஜி பஸ்ஸில் காலேஜுக்குச் சென்றான் ராஜாமணி. மூன்றாவது பாட வேளையில் பாலின் சுகந்தி மேடத்திடம் எதிர்த்துப் பேசிவிட்டு வகுப்பைவிட்டு வெளியேறிச் சென்றான் சண்முகநாதன். மதியம் சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியிலிருந்து மாயமாக மறைந்தும் போனான்.

6

ஒரு வாரம் கழித்து ஜங்சன் பஸ் ஸ்டாண்டுக்கு ராஜாமணியைத் தேடி வந்தான் சண்முகநாதன். மாப்ள… நான் எக்ஸாம் எழுதலாம்னு இருக்கேன்… தமிழ்க் கைடு வாங்கணும்… ஈகிள் புக் சென்டர் போகலாம் என்றான். ராஜாமணி, கைடு வேண்டாம்ல.. நான் ஒனக்குச் சொல்லித் தாரேன்… ஈஸியா தமிழ் பாஸ் பண்ணிடலாம் என்றான். இல்ல எனக்குக் கைடு மட்டும் வாங்கித்தா போதும்… மத்த புக்கு எல்லாம் வாங்கிட்டேன்… வா கடைக்குப் போகலாம் என்று ராஜா பில்டிங் வரிசையில் நடக்கத் தொடங்கினான். ராஜாமணியும் உடன் சென்றான். ஈகிள் புக் சென்டரில் தமிழ்க் கைடை வாங்கினான் சண்முகநாதன். கைடை வெளியே கொண்டுவந்து வரிசையில் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக்கின் சீட்டில் வைத்துப் பக்கத்தைத் திருப்பினான். முதல் பக்கத்தில் ஆர்.சண்முகநாதன் என்று அழகிய கையெழுத்தில் பெயரை எழுதினான். பெயரை எழுதிவிட்டு, ஏலேய்… கண்ணாடி… இந்தக் கைடை நீ வைச்சிரு… நான் நாளைக்கு ஒன் வீட்டுல வந்து வாங்கிக்கிறேன்… என்றான். இப்ப காலேஜ் வரலயா? என்றான் ராஜாமணி.

இல்ல மாப்ள… எனக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு… பைக்குலதான் வந்தேன்… பேட்ட எம்.டி.டி காலேஜ் வரைக்கும் போகணும் என்றான். எம்.டி.டி காலேஜுக்கு எதுக்குடே… அங்கன என்னல வேல இருக்கு என்றான் ராஜாமணி. காலேஜ் இல்ல… காலேஜ் பக்கம் போகணும்… சும்மா கேள்வி கேட்டு இம்ச பண்ணாத… நாளைக்கு உன்ன வந்து பாக்கேன் என்றான். தொடர்ந்து, “மாப்ள… பச்ச குத்துத கொரவனுவ பேட்டையிலதானல இருப்பானுவ?” என்று கேட்டான். பச்ச குத்துத எடத்துக்கு நீ ஏன்டே போற… கேட்டா சொல்லித் தொலைக்கவும் மாட்ட… என்னமும் பண்ணித் தொல… எனக்கென்ன… நான் காலேஜ் போறேன் என்றான். “மாப்ள… இன்னைக்கு ஒருநாள் காலேஜ் கட் அடிச்சிட்டு எங்கூட வாடே… இனி ஒன்ன எங்கயும் கூப்ட மாட்டேன்… பேட்டைக்குப் போயிட்டு ஒடனே வந்துரலாம்… பைக்கு இருக்குதுடே” என்றான். “இல்ல மாப்ள… நான் வரல… ஏற்கனவே லீவு அதிகமாயிட்டுது… ஒனக்கு என்டே… ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி… காண்டனேஷன் கட்டி பரிச்சய எழுதிடுவ… நான் காலேஜ் போறேன்” என்று ராஜாமணி கூறிக்கொண்டிருக்கும் போது 3-ஜி பஸ் ஈகிள் புக் சென்டர் வாசலுக்கு வந்தது. ராஜாமணி ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறிக்கொண்டான். கூட்டம் அதிகமாக இருந்தது. படியில் கஷ்டப்பட்டு தொங்கினான். ராஜாமணியின் இடுப்பில் கையைப் போட்டு கோட்டி ராஜா தாங்கிப் பிடித்து பஸ்ஸின் உள்ளே இழுத்துக்கொண்டான். பஸ் சற்று வேகம் பிடித்தது. சுலோச்சன முதலியார் பாலத்தில் சென்றது. ராஜாமணி தலையைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டு தாமிரபரணியைப் பார்த்தான்.

7

சனி, ஞாயிறு விடுமுறையில் சண்முகநாதன் ராஜாமணியின் வீட்டிற்கு வரவில்லை. ராஜாமணி சண்முகநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போல கிருஷ்ணவேணி பஸ்ஸில் ஏறியவுடன் சண்முகநாதன் குறித்து விசாரித்தான். சண்முகநாதனை ஊரில்கூட பார்க்கவில்லை என்ற பதில் நண்பர்களிடமிருந்து கிடைத்தது. பஸ் ஜங்சன் பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பஸ்ஸிலிருந்து ராஜாமணி வேகமாக இறங்கினான். 3-ஜி பஸ் வர குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். ராஜாமணி பிளாட்பாரத்தில் ஏறி விரைவாக இசக்கியின் கடைக்குச் சென்றான். இசக்கி பஸ் ஸ்டாண்டில் மாணவர்களுக்கு மிகச்சிறந்த தகவல் தொடர்பு பணியாளராகச் செயல்பட்டு வந்தான். எசக்கி… நம்ம சம்முவத்த பாத்தயாடே? என்றான். மணியண்ண… சம்முவம் அண்ணன நான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பாத்து ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது… போன வாரம் புது நூறு ரூபாய கொடுத்து ஒரு பில்டரு வாங்கிட்டு, பாக்கியகூட வாங்காம போனான்… எங்கப் போனான்… என்ன ஆனான்னு தெரியல என்றான் இசக்கி.

ராஜாமணி மெதுவாக நடந்து ஆவின் பாலகம் அருகே சென்றான். ஒரு கிளாஸ் பாலை வாங்கிக்கொண்டு ஒரு தூண் மறைவில் நின்றுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான். பால் அதிக சூடாக இருந்தது. மெதுவாக குடித்தான். அவனது பார்வை முழுவதும் பஸ் நிறுத்தி வைக்கும் பாந்தை நோக்கி இருந்தது. திடீரென ராசாமணி துணுக்குறும் விதமாக கல்லணை மாணவிகள் கும்பலாக வந்துகொண்டிருந்தனர். அந்தக் கும்பலின் தலைவி என்கிற தோரணையில் சுருட்டை முடிக்காரி நடந்து வந்தாள். ஒரு ஜடையைத் தூக்கி முன்பக்கமாகப் போட்டிருந்தாள். ஒரு கட்டிச் செம்பருத்திப் பூவை வலது புறமாகச் சூடியிருந்தாள். வேகமாக வந்த ஒரு ஆட்டோ அவளை இடிப்பதுபோல வந்தது. அவள் ஆட்டோவைக் கவனிக்கவில்லை. ஆட்டோவை திலகா கவனித்துவிட்டாள். ஏட்டி… காந்தி… பாத்து நடட்டீ… கண்ண பொடதியிலயா வைச்சிருக்க… ஓரமா போட்டீ… என்று கத்தினாள். ராஜாமணிக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. சுருட்டை முடிக்காரியின் பெயரைத் தெரிந்துகொண்டான். பஸ் ஸ்டாண்டில் குதியாட்டம் போடத்தோன்றியது. சண்முகநாதன் இந்த இடத்தில் இருந்திருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே உற்சாகமாக பஸ் ஸ்டாண்டு முழுவதும் ஒரு சுற்று சுற்றிவந்து சண்முகநாதனைத் தேடினான். அவனிடம் “காந்திமதி“ என்ற பெயரைக் கூறவேண்டும் என்று துடியாகத் துடித்தான். ஆனால் சண்முகநாதனைப் பார்க்க முடியவில்லை.

8

மறுநாள் காலை வழக்கம் போல ராஜாமணி கிருஷ்ணவேணி பஸ்ஸில் ஏறினான். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வருகைப்பதிவைப் போட்டான். நண்பர்களின் முகங்களில் ஓர் அமைதி காணப்பட்டது. யாரும் பேசவில்லை. என்னல… எல்லாரும் பனங்க மாதிரி முஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்கய…என்ன பிரச்சன என்று கேட்டான் ராஜாமணி.

ராஜேஷ் மெதுவாகப் பேசினான். ஏலேய்… ராஜாமணி… நம்ம சம்முவம் நேத்து நைட்டு குருண மருந்த தின்னுட்டான்டே… என்ன பிரச்சனன்னு தெரியல… நைட்டே ஜங்சன் கெட்வெல் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க… எங்களுக்கு விசயம் லேட்டாதான் தெரியும்… என்ன பண்ணனு தெரியல… ஆஸ்பத்திரி போனாதான் நெலம தெரியும்… நேத்து நம்ம செல்லதொர மட்டும் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். ஆனா சம்முவத்த பாக்கவிடலயாம் என்றான் உடனிருந்த அம்பி. ஜங்சன் வரை யாரும் யாருடனும் பேசவில்லை.

பஸ் ராஜா பில்டிங் முகப்பு அருகே வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து குதித்து கீழே இறங்கினான் ராஜாமணி. அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தனர். ராஜா பில்டிங் காம்பவுண்டு சுவர் ஓரத்தில் கரும்பு சக்கையை மெத்தையாக்கி படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட நிர்வாணப்பெண் இவர்களைப் பார்த்து மிரண்டு எழுந்து அமர்ந்தாள். குறுக்காக ஓடிவந்த மடியிறங்கிய செவலை நாய் ஒன்று வந்த வழியில் திரும்பி ஓடியது.

ராஜாமணி நேராக ஆஸ்பத்திரிக்குள் செல்லாமல், வாசலை ஒட்டியிருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குள் ஓடினான். அவசரமாக ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டான். சந்நியாசித்தெரு ஐயர் கொடுத்த செந்தூரத்தை அவசரமாக நெற்றியில் இட்டான். விரலில் ஒட்டியிருந்த செந்தூரத்தைப் பேண்ட் பாக்கெட்டின் உள் பக்கமாகத் துடைத்துக்கொண்டான்.

அனைவரும் சண்முகநாதனைப் பார்த்துவிடும் ஆவலில் முண்டியடித்தபடி அறையின் வாசலில் நின்றனர். சண்முகநாதனின் அண்ணன் அழுதபடியே அறையிலிருந்து வெளியேறினான். எதையும் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை. அவனது உடல்மொழி எதையோ உணர்த்தியது. அவனைத் தொடர்ந்து சண்முகநாதனின் அக்காவும் அழுதுக்கொண்டே வெளியேறினாள். கையில் ஒரு கசங்கிய தேங்காய்ப் பூத்துண்டை வைத்திருந்தாள். அவளது தலைமுடி முழுவதுமாகக் கலைந்திருந்தது. அவள் கண்கள் சிகப்பு ரேகையுடன் காட்சியளித்தன.

ராஜாமணிக்குப் பொறுமை இல்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது சண்முகநாதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், வெறி கொண்டவனைப்போல அறைக்குள் நுழைந்துவிட்டான். சண்முகநாதனின் கழுத்து வரையிலும் ஒரு வெள்ளை வேட்டியைக் கொண்டு மூடி இருந்தனர். சண்முகநாதனின் உடலை உன்னிப்பாகக் கவனித்தான். சண்முகநாதனின் உதடுகள் முழுமையாகக் கருத்திருந்தன. அவனது முகத்தில் மெல்லிய சோகம் இழையோடி இருந்ததுபோலத் தோன்றியது. ராஜாமணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. அப்படியே நின்றுவிட்டான். பயத்தால் கால்களில் மெல்லிய நடுக்கம் இருந்தது. அறை மின்சாரம் இன்றி சற்று இருட்டாக இருந்தது. அறையில் திடீரென்று கரெண்ட் வரவே மின்விசிறி சுழன்றது. ஒருகணத்தில் சண்முகநாதனை மூடி வைத்திருந்த வேட்டி பறந்து வயிற்றுப் பகுதிக்கு வந்தது. ராஜாமணியின் பார்வை மிகவும் கூர்மையடைந்தது. சண்முகநாதனின் உடலை உற்றுக் கவனித்தான். சண்முகநாதனின் இடது மார்பில் ரத்தக்கோரையாக “காந்திமதி“ என்று பச்சை குத்தியிருந்ததைக் கண்டு மிரண்டு போனான். ராஜாமணியின் உடல் புல்லரித்தது. அறையிலிருந்து வேகமாக வெளியேறியவன், நண்பர்களின் பேச்சைப் பொருட்படுத்தாமல் ஜங்சன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

***

ப.சுடலைமணி – இவர் கோவை மாவட்டத்தில் உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வெவ்வேறு இதழ்களில் இவரது கதைகள் அண்மையில் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. பனைமரத்துல ஏறுதவன் குண்டிய எட்டுமட்டும் தான் தூக்கி பிடிக்கமுடியும்…..ரசித்து சிரித்த வரிகள். அப்படியே வேகமாக 7 அத்தியாயம் …. 8 வது அத்தியாயம் எதிர்பாராத திருப்பம்…கரண்ட் வந்தது….பச்சை குத்தியிருந்தது…..அப்பாடா…..சூப்பர்…..சூப்பர் ….. விரு , விருனு படித்தேன் ….ரசித்தேன்….. வாழ்த்துக்கள் பேராசியரே வாழ்த்துக்கள்

  2. சிறப்பு. 90 காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி தோழர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular