Thursday, December 5, 2024
Homesliderகாகித மிருக சாலை

காகித மிருக சாலை

கென் லியூ தமிழில்: நரேன்

ன்னுடைய இளவயது நினைவுகளில் ஒன்று நான் தேம்பியழுவதிலிருந்து தொடங்கும். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ முயற்சி செய்தும் நான் ஆறுதலடைய மறுத்தேன்.

அப்பா தன் முயற்சியை கைவிட்டு படுக்கையறைக்குச் செல்ல, அம்மாவோ என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு மேசையின் மேல் அமரச் செய்தார்.

“கேன், கேன்” என்று சொல்லிக்கொண்டே அவர் ப்ரிட்ஜின் மேலிருந்த காகித உறை ஒன்றை இழுத்தார். பல வருடங்களாக, கிறிஸ்துமஸ் பரிசுகளின் காகித உறைகளை அம்மா கவனமாக பிரித்து எடுத்து அவற்றை தடித்த அடுக்குகளாக ப்ரிட்ஜின் மீது சேமித்து வைத்திருந்தார்.

அவர் காகிதத்தை கீழே விரித்து, வெற்றுப் பக்கம் மேலிருக்கும்படி வைத்து அதை மடிக்கத் தொடங்கினார். நான் அழுவதை நிறுத்தி அவரை ஆர்வத்துடன் பார்த்தேன்.

அவர் காகிதத்தை திருப்பி மீண்டும் மடித்தார். கிண்ணமென குவிந்த அவர் உள்ளங்கைகளுக்குள் அந்தக் காகிதம் மறைந்துபோவது வரை அதை அளவாய் சிறு சிறு மடிப்புகளாக்கினார், சுருட்டினார், உள்ளுக்குள் சொருகினார், உருட்டினார், திருகினார். பின்னர் மடிந்து போன காகித பொட்டலத்தை தன் வாயருகே எடுத்து பலூனைப் போல ஊதினார்.

“கேன்”, என்றார். “லாஓஹு”. மூடிக் குவிந்த தன் கைகளை மேசை மீது வைத்து அதை வெளியே விட்டார்.

ஒரு சிறிய காகித புலி மேசை மீது நின்றது, இரு உள்ளங்கை அளவிலானது. காகித உறையின் மீதிருந்த அலங்கார வண்ண கோலங்களே புலியின் மேல் தோல் என ஆனது, வெள்ளைப் பின்ணனியில் சிவப்பு குச்சி மிட்டாய்களும் பச்சை கிறிஸ்துமஸ் மரங்களும்.

அம்மாவின் சிருஷ்டியை நோக்கி கை நீட்டினேன். அது தன் வாலை சட்டென வெட்டியிழுத்தது, என் விரல்களின் மீது விளையாட்டாக பாய்ந்தது. “ர்ர்ர்ர்வ்வ்வ்வ்வ்வ்-சாவ்வ்வ்வ்” அது உறுமியது, அந்தச் சத்தம் பூனைக்கும் செய்தித்தாள்களின் சரசரப்புக்கும் இடைப்பட்ட ஏதோவொரு ஒலியில் இருந்தது.

நான் சிரித்தேன், வியப்புற்றேன், என் சுட்டு விரலால் அதன் பின்னால் தடவிப் பார்த்தேன். என் விரலடியில் அக் காகிதப் புலி சிலிர்த்து மென்மையாய் உறுமியது.

“ஸே…ஜியாஓ ஸேஹேஸி”, அம்மா சொன்னார். “இதுதான் ஓரிகாமி’.

அப்போது அது என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அம்மா செய்பனவோ தனித்துவமானது, அவர் தன் மூச்சைப் பகிர்ந்து அவற்றுக்குள் செலுத்துவாள், அவை அவரின் உயிர் கொண்டு நகரத் தொடங்கும். இதுதான் அவர் நிகழ்த்தும் மாயம்.

***

பட்டியல் புத்தகமொன்றிலிருந்துதான் அம்மாவை தேர்ந்தெடுத்தார் அப்பா. ஒருமுறை, நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது, அப்பாவிடம் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அப்போது என்னை மீண்டும் அம்மாவிடம் பேச வைக்கும் முயற்சிகளில் இருந்தார் அவர்.

1973ம் ஆண்டின் வசந்த காலமொன்றில், மணமகள் அறிமுகச் சேவை ஒன்றில் தன்னை இணைத்திருந்தார். சில நொடிகளுக்கு மேல் எதிலும் நிலைக்காமல் பக்கங்களை சீராய் திருப்பிக் கொண்டிருந்தார், அம்மாவின் புகைப்படத்தை அவர் பார்த்த அந்தப் பக்கம் வரை.
அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. அப்பா அதை விவரித்தார். அம்மா நாற்காலியில், தன் ஒரு பக்கம் காமிராவில் தெரியும்படி இறுக்கமாக பச்சைப் பட்டினால் ஆன சீன உடை அணிந்து அமர்ந்திருக்கிறார். அவரது நீண்ட கருங்கூந்தல் கலையெழிலுடன் தன் தோளிலும் மார்பு மீதிலும் படரும்படி தலையை காமிரா பக்கம் திருப்பியிருந்தார். அப்பாவை சாந்தமான குழந்தையின் கண்களைக் கொண்டு பார்த்திருந்தார்.

“அந்தப் பட்டியல் புத்தகத்தில் நான் புரட்டிய கடைசிப் பக்கம் அதுதான்” என்று சொன்னார்.

விவரங்களில் அவருக்கு பதினெட்டு என்றும், நடனமாட விரும்புபவர், ஹாங்காங்கிலிருந்து வருவதால் நல்ல ஆங்கிலம் பேசக் கூடியவர் என்றும் சொன்னது. இதில் எந்தத் தகவலும் உண்மையானதாக இருக்கவில்லை.

அவர் அம்மாவிற்கு எழுதினார், நிர்வாகமும் இருவரின் செய்திகளையும் முன்னும் பின்னும் அனுப்பி பரிமாறியது. இறுதியாக அம்மாவைப் பார்ப்பதற்கு அவர் ஹாங்காங் பறந்தார்.

“அந்த நிர்வாகத்தின் ஆட்களே அவளின் பதில்களை எழுதி அனுப்பியிருந்தார்கள். “ஹலோ”, “குட்பை” தவிர அவளுக்கு ஆங்கிலத்தில் வேறு எதுவும் தெரியாது.”

எந்த மாதிரியான பெண் தான் விலைபோக வேண்டி தன்னை பட்டியலில் இட்டுக் கொள்வாள்? உயர்பள்ளி மாணவனான எனக்கு அனைத்தும் தெரியுமென நினைத்திருந்தேன். ஒருவரை அவமதிப்பது மதுவைப் போல நல்லதொரு உணர்வைத் தந்தது.

அந்த அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன்னுடைய காசைத் திருப்பிக் கேட்பதற்கு பதிலாக அவர்கள் முதலில் சந்தித்த ஒரு உணவகத்தின் பனிப்பெண்ணுக்கு தங்களை மொழிபெயர்ப்பதற்காக காசு கொடுத்தார்.

“நான் பேசுகையில் அவள் என்னைப் பார்த்தாள், பாதி கண்ணில் பயத்துடனும் மீதியில் நம்பிக்கையுடனும். நான் பேசியதை அந்தப் பணிப்பெண் மொழிபெயர்க்கத் தொடங்குகையில் அவள் மெதுவாக சிரிக்கத் தொடங்குவாள்.”

அவர் கனெக்டிக்கட்டுக்கு திரும்ப பறந்து வந்து அம்மா தன்னிடம் வருவதற்கு வேண்டிய ஆவணங்களை விண்ணப்பிக்கத் தொடங்கினார். நான் ஒரு வருடம் கழித்து பிறந்தேன், புலி வருடத்தில்.

***

நான் கேட்டுக்கொண்டதன் பேரில் அம்மா ஒரு ஆடும் மானும் நீர் எருதும் கூட காகித உறைகளிலிருந்து செய்து கொடுத்தார். ‘லாஓஹு’ உறுமிக்கொண்டே துரத்தும்போது இவை ஓய்வறையை சுற்றிச் சுற்றி ஓடி வரும். அவன் இவற்றை துரத்திப் பிடித்து அதன் உள்ளிருந்த காற்று முழுதும் வெளியேறி, வெறும் தட்டையான, மடிந்த காகித துண்டுகளாக ஆகும் வரை அவற்றை கீழே அழுத்துவான். பிறகு, அவை இன்னும் கொஞ்சம் சுற்றி ஓடுவதற்கு ஏதுவாக நான் ஊதி மீண்டும் உப்பச் செய்வேன்.

சில சமயங்களில், இவ் விலங்குகள் வம்புகள் செய்து மாட்டிக் கொள்ளும். ஒருமுறை, இரவுணவின் போது மேசை மீதிருந்த ‘சோய் சாஸ்’ கிண்ணத்துக்குள் குதித்து விட்டது. நிஜ நீர் எருதைப் போல அவன் புரண்டெழ விரும்பினான். நான் அவனை வேகமாக வெளியில் எடுத்தேன், ஆனாலும் உடலின் நுண்துளைகள் அக்கருந்திரவத்தை ஈர்த்து அவன் மேல் கால்கள் வரை இழுத்துவிட்டது. சாஸில் தோய்ந்த கால்களால் அவனை நிலையாய் நிறுத்த இயலவில்லை, மேசையின் மீது தளர்ந்து விழுந்தான். அவனை சூரிய ஒளியில் உலர வைத்தேன், ஆனால் அவன் கால்கள் கோணிப் போனது, நொண்டியபடி சுற்றி ஓடி வந்தான். இறுதியில் அம்மா பாலிதீன் உறையைக் கொண்டு அவன் கால்களைச் சுற்றினாள். அதனால் அவன் மனம் விரும்பியபடி சாய் சாஸில் மட்டும் என்றில்லாமல் எதிலும் புரண்டு எழலாம்.

மேலும், நான் லாஓஹுவுடன் கொல்லைப்புறத்தில் விளையாடுகையில் அவன் குருவிகள் மீது பாய விரும்புவான். ஆனால் ஒருமுறை அவனால் சுற்றிவளைக்கப்பட்ட பறவை ஒன்று துணிந்து திருப்பித் தாக்கி அவன் காதை கிழித்தது. நான் அவனை தூக்கிக்கொண்ட போது, சிணுங்கி வேதனையில் உதைத்தான். அம்மா அவன் காதை சேர்த்து டேப் வைத்து ஒட்டினார். அதன் பிறகு அவன் பறவைகளை தவிர்க்கத் தொடங்கினான்.

பின்பொருநாள், நான் டிவியில் சுறாவைப் பற்றி ஆவணப் படமொன்றை பார்த்து எனக்கும் சொந்தமாக ஒன்று வேண்டுமெனக் கேட்டேன். அவர் சுறா ஒன்றை செய்து தந்தார். ஆனால் அவன் மேசையின் மீது மகிழ்ச்சியின்றி துடித்தான். நான் கழிநீர்த் தொட்டியில் நீர் நிரப்பி அவனை அதில் போட்டேன். அவன் வட்டமடித்து மகிழ்ச்சியாக நீந்தினான். எனினும், சிறிது நேரத்திற்கு பிறகு அவன் சொத சொதப்பாகவும் ஒளி ஊடுருவும் உடலென ஆகி மடிப்புகளெல்லாம் விலகி வர மெதுவாக அடியில் மூழ்கிப் போனான். அவனை மீட்கும் பொருட்டு நான் கையை நீட்டி தூக்கினேன், அதில் மிஞ்சி நின்றதெல்லாம் ஈரம் தோய்ந்த ஒரு காகித துண்டுதான்.

லாஓஹு அவன் முன்னங்கால்களை ஒன்றாக தொட்டியின் விளிம்பில் வைத்து அதன் மீது தன் தலையை சாய்த்தான். காதுகள் தொங்க, தன் தொண்டையிலிருந்து மந்தமான உறுமல் ஒலியொன்றை எழுப்பினான். அது என்னை குற்ற உணர்வு கொள்ளச் செய்தது.
அம்மா எனக்கு புதிய சுறா செய்து கொடுத்தார், இந்த முறை அலுமினிய தாள் கொண்டு. இந்த சுறா, தங்கமீன் தொட்டியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. லாஓஹுவும் நானும் தொட்டியின் அருகிலமர்ந்து அலுமினியத் தாள் சுறா தங்கமீன்களை துரத்துவதை வேடிக்கைப் பார்ப்பது பிடிக்கும். லாஓஹு அந்தப் பக்கமாக முகத்தைத் தூக்கி தொட்டியின் மீது அழுத்தியிருக்க நான் என்னை முறைத்துக் கொண்டிருக்கும், காஃபி கோப்பை அளவிற்கு பெரிதாகியிருக்கும், அவனின் கண்களைப் பார்ப்பேன்.

***

எனக்கு பத்து வயதாகியிருந்தபோது நாங்கள் ஊரின் மறுபக்கத்திலிருந்த ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். பக்கத்து வீட்டு பெண்கள் இருவர் எங்களை வரவேற்க வந்தனர். அவர்களுக்கு குடிப்பதற்கு பானங்களை வழங்கினார் அப்பா. பழைய வீட்டின் பாக்கி தொகைகளை பராமரிப்பு நிறுவனத்திடம் செலுத்துவதற்காக அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருப்பதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். “உங்கள் வீட்டைப்போல நினைத்துக் கொள்ளுங்கள். என் மனைவி அவ்வளவாக ஆங்கிலம் பேச மாட்டாள், அதனால் உங்களிடம் பேசாமல் இருப்பதை தயவுசெய்து அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்”

நான் உணவறையில் படித்துக் கொண்டிருந்தபோது அம்மா சமையலறையில் பொருட்களை பிரித்தடுக்கிக் கொண்டிருந்தார். வந்தவர்கள் வரவேற்பறையில் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லமாக பேச தனிச் சிரத்தை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

“அவர் பார்ப்பதற்கு இயல்பாகத்தான் இருக்கிறார், பின் ஏன் இப்படிச் செய்தார்?”

“இந்தக் கலப்பில் எதுவோவொன்று சரியாக இல்லை. குழந்தை முழுமையற்றதைப் போல தெரிகிறது. சரிந்த கண்கள், வெள்ளை முகம். ஒரு குட்டி பூதம்.”

“அவனுக்கு ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்கிறாயா?”

அப்பெண்கள் அமைதியானார்கள். சிறிது நேரம் கழித்து உணவறைக்கு வந்தார்கள்.

“ஹலோ தம்பி! உன் பெயர் என்ன?”

“ஜாக்”, நான் சொன்னேன்.

“அது அவ்வளவு சீனத்தனமாக இல்லையே.”

பிறகு அம்மாவும் உணவறைக்கு வந்தார். அப்பெண்களை நோக்கி புன்னகைத்தார். அம்மூவரும் என்னைச் சுற்றி முக்கோணமாய் நின்றுக்கொண்டு மேலும் பேசுவதற்கு ஏதுமன்றி, அப்பா வரும்வரை ஒருவரையொருவர் நோக்கி புன்னகைத்துக் கொண்டும் தலையசைத்துக் கொண்டும் இருந்தனர்.

***

மார்க், பக்கத்து வீட்டு பையன்களில் ஒருவன், தன்னுடைய சண்டையிடும் “ஸ்டார் வார்ஸ்” பொம்மைகளோடு வந்தான். ‘ஓபி-வான்’னின் கதிர்வாளுக்கு ஒளியூட்டினான். ஓபி-வான் கைகளை முன்னும் பின்னும் அசைத்தான். தகரக் குரலில், “ஆற்றலை வெளிப்படுத்து” என்று சொன்னான். அந்த உருவம் கொஞ்சங் கூட ‘ஓபி-வான்’னைப் போல் இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. நாங்களிருவரும், காஃபி மேசையின் மீது தொடர்ந்து அவன் இச்செய்கையை ஐந்து முறை நிகழ்த்தியதை கண்டோம். “இவனால் வேறு ஏதாவது செய்து காட்ட முடியுமா?”, நான் கேட்டேன்.

மார்க் என்னுடைய கேள்வியால் எரிச்சலடைந்தான். “எல்லா நுணுக்கங்களையும் பார்” என்றான் அவன்.

நான் அத்தனையையும் பார்த்தேன். என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
மார்க் நான் பதில் சொல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தான். “உன்னுடைய பொம்மைகளை எனக்குக் காட்டு”.

என்னுடைய காகித மிருகங்களைத் தவிர என்னிடம் வேறு பொம்மைகள் இல்லை. என் படுக்கையறையிலிருந்து “லாஓஹு” வை வெளியே கொண்டு வந்தேன். நானும் அம்மாவும் அவன் இத்தனை வருடங்களில் கிழிந்த போதெல்லாம் பழுது பார்த்ததற்கு சாட்சியாக டேப்பும் பசையும் கொண்ட ஒட்டுகள் சாட்சியாக இருந்தன. அவனால் முன்னைப் போல சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் அடியெடுத்து வைக்க முடியவில்லை. காஃபி மேசையின் மீது அவனை அமர வைத்தேன். பின்னால் மற்ற மிருகங்கள் தத்தித் தத்தி கூடத்தில் நடந்து வரும் ஓசை எனக்கு கேட்டது. அவை வழியில் நின்று தயக்கத்துடன் ஓய்வறைக்குள் எட்டிப் பார்த்தன.

“ஜியாஓ லாஓஹூ” என்று சொல்லியவுடன் நிறுத்தினேன். ஆங்கிலத்திற்கு மாறினேன். “இது புலி”. லாஓஹூ கவனமாக நீண்ட அடி வைத்து எழுந்து மார்க்கின் கைகளை முகர்ந்தபடி உறுமினான்.

மார்க், லாஓஹுவின் தோலிலிருக்கும் கிறிஸ்துமஸ் உறையின் வண்ணக் கோலங்களை ஆய்வு செய்தான். “இது புலியைப் போலவே இல்லை. உன் அம்மா உனக்கு குப்பையிலிருந்துதான் பொம்மைகள் செய்து தருவார்களா?”

நான் ஒருபோதும் லாஓஹூவை குப்பை என எண்ணியதில்லை. ஆனால் இப்போது பார்க்கையில், உண்மையிலேயே அவன் வெறும் காகித உறையின் ஒரு துண்டுதான். மார்க் மீண்டும் ஓபி-வானின் தலையை தள்ளினான். கதிர்வாள் பளிச்சிட்டது; கைகளை மேலும் கீழும் அசைத்தது.

“ஆற்றலை வெளிப்படுத்து.”

லாஓஹு திரும்பிப் பார்த்து அப்பிளாஸ்டிக் உருவத்தை மேசையிலிருந்து கீழே தட்டியது. அது தரையில் மோதி உடைந்து, ஓபி-வானின் தலை உருண்டு சாய்விருக்கைக்கு அடியில் போனது. “ர்ர்ர்ர்ராவ்வ்வ்”, லாஓஹு சிரித்தது. அதனுடன் நானும் சேர்ந்துக் கொண்டேன்.

மார்க் என்னை பலமாக குத்தினான். “இது மிக விலையுயர்ந்தது. இதை கடைகளில் கூட உன்னால் தேடிப் பிடிக்க முடியாது. அநேகமாக உன் அம்மாவை வாங்குவதற்கு உன் அப்பா கொடுத்த பணத்தை விட இதன் விலை அதிகமாக இருக்கும்!”
நான் தடுமாறி தரையில் விழுந்தேன். லாஓஹு உறுமியபடி மார்க்கின் முகத்தின் மீது பாய்ந்தான்.

மார்க் அலறினான், வலியை விடவும் பயத்தினாலும் ஆச்சரியத்தினாலும். லாஓஹு வெறும் காகிதத்தால் செய்யப்பட்டதுதானே.
மார்க் லாஓஹுவை பறித்து, கைகளால் கசக்கியதில் அவன் உறுமல் அடங்கிப்போனது. பாதியாக கிழித்தான் அவனை. இரண்டு காகித துண்டுகளையும் பந்தாக சுருட்டி என் மீது எறிந்தான். “இந்தா உன்னுடைய மலிவான மூட சீனக் குப்பை.”

மார்க் சென்ற பிறகு, காகிதத்தை சமமாக்கி, அதன் மடிப்புகளை பிந்தொடர்ந்து, லாஓஹுவை மீண்டும் மடித்து துண்டுகளை டேப்பை கொண்டு ஒட்டவைக்கை நீண்ட நேரம் முயற்சித்து தோல்வியுற்றேன். மெதுவாக, மற்ற மிருகங்களும் ஓய்வறைக்குள் நுழைந்து எங்களை, என்னையும் அதுவரை லாஓஹுவாக இருந்த காகித உறையையும், சுற்றி சூழ்ந்து நின்றனர்.

***

மார்க்குடனான சண்டை அத்தோடு முடியவில்லை. மார்க் பள்ளியில் பிரபலமானவன். பின்தொடர்ந்த இரண்டு வாரங்களை நான் எப்போதும் மீண்டும் நினைத்து பார்க்க விரும்பியதில்லை.

இரண்டாவது வாரத்தின் இறுதி வெள்ளிக்கிழமை நான் பள்ளி முடித்து வீடு வந்தபோது, ‘ஸூவேஸியோ ஹாஓ மா’ என்று அம்மா கேட்டார். நான் எதுவும் சொல்லாமல் குளிப்பறைக்குச் சென்றேன். நான் கொஞ்சம் கூட அவரைப் போல இல்லை. சுத்தமாக இல்லை.
இரவுணவின் போது நான் அப்பாவிடம் கேட்டேன், “நான் ‘சிங்க்கிகளின்’ முகம் கொண்டிருக்கிறேனா?”.

அப்பா உணவுன்னும் இணைகுச்சிகளை கீழே வைத்தார். நான் பள்ளியில் நடந்ததெதுவும் சொல்லவில்லையென்றாலும் அவர் புரிந்துக் கொண்டார் என்று தெரிந்தது. அப்பா கண்களை மூடி மூக்குத்தண்டை தேய்த்தார். “இல்லை”.

அம்மா ஒன்றும் புரியாமல் அப்பாவை பார்த்தார். திரும்பவும் என்னை பார்த்தார். “ஷா ஜியாஒ சிங்க்”?

“ஆங்கிலம்” என்றேன். “ஆங்கிலத்தில் பேசுங்கள்.”

அம்மா முயற்சித்தார் “வாட் ஹாப்பன்?”

நான் எனக்கு முன்னால் இருந்த இணைக்குச்சிகளையும் கிண்ணத்தையும் தூரத் தள்ளினேன்: வறுத்த குடை மிளகாயும் ஐந்து மசாலாவில் சமைத்த பீஃப்பும். “நாம் அமெரிக்க உணவைத்தான் உண்ண வேண்டும்.”

அப்பா நியாயப்படுத்த முயன்றார். “நிறைய குடும்பங்கள் சீன உணவுகளை அவ்வப்போது சமைப்பார்கள்.”

“நாம் மற்ற குடும்பங்கள் அல்ல.” மற்ற குடும்பங்களில் அவர்களுடன் தொடர்பற்ற அம்மாக்கள் இல்லை.
அவர் அப்பால் பார்த்தார். பிறகு அம்மாவின் தோள் மீது கை வைத்தார். “நான் உனக்கு சமையல் புத்தகம் வாங்கித் தருகிறேன்.”
அம்மா என் பக்கம் திரும்பினார். “ப்பு ஹாஒச்சி?”

“ஆங்கிலம்,” குரலை உயர்த்திச் சொன்னேன். “ஆங்கிலத்தில் பேசுங்கள்”.

அம்மா கைகளை நீட்டி என் உடற் சூட்டை உணர்வதற்காக என் நெற்றியை தொட்டார். “ஃபாஷாஒ ளா?”

நான் அவர் கைகளை தட்டி விட்டேன். “எனக்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் பேசுங்கள்”. நான் கத்திக் கொண்டிருந்தேன்.

“அவனுடன் ஆங்கிலத்தில் பேசு”, அம்மாவிடம் அப்பா சொன்னார். “இப்படி ஒரு நாள் நடக்குமென்று உனக்கு தெரியும். வேறு என்ன எதிர்பார்த்தாய்?”

அம்மா கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டார். அப்பாவிலிருந்து பார்வையை என் மீது திருப்பியபடியே அமர்ந்தார். பிறகு மீண்டும் அப்பாவின் பக்கம் திரும்பினார். அவர் பேச முயற்சித்தார், நிறுத்தினார், பிறகு மீண்டும் முயற்சித்தார், மீண்டும் நிறுத்தினார்.

“நீ முயற்சி செய்துதான் ஆக வேண்டும்,” அப்பா சொன்னார். “உன்னிடம் நான் இதுவரை கடினமாக நடந்துக் கொண்டதில்லை. ஜாக் உன்னுடன் பொருந்த வேண்டும்.”

அம்மா அவரைப் பார்த்தார். “நான் ‘love’ என்று சொன்னால் இங்கே உணர்கிறேன்.” தன் உதடுகளை சுட்டினார். “நான் ‘அய்’ என்று சொன்னால் அதை இங்கே உணர்கிறேன்.” அவர் தன் கையை இதயத்தின் மீது வைத்தார்.

அப்பா தலையை ஆட்டினார். “நீ அமெரிக்காவில் இருக்கிறாய்.”

அம்மா தன் இருக்கையில் வளைந்து அமர்ந்தார், பார்ப்பதற்கு நீர் எருதின் மீது லாஓஹு பாய்ந்து அவனில் இருந்தை காற்றை பிழிந்து வெளியேற்றிய போது அவன் எப்படி இருந்தானோ அப்படியிருந்தார்.

“அப்புறம், எனக்கு நிஜ பொம்மைகள் வேண்டும்.”

***

அப்பா எனக்கு ‘ஸ்டார் வார்ஸ்’ சண்டையிடும் பொம்மைகளின் முழுத் தொகுப்பையும் வாங்கி கொடுத்தார். ஓபி-வான் ஐ நான் மார்க்கிடம் கொடுத்துவிட்டேன்.

காகித மிருக சாலையை நான் ஒரு பெரிய காலணிப் பெட்டியில் நிரப்பி அதை கட்டிலுக்கு அடியில் போட்டேன்.
அடுத்த நாள் காலை, விலங்குகள் எனது அறையில் அவர்களுக்கு பிடித்தமான இடங்களை மீண்டும் எடுத்துக்கொண்டனர். அவர்களைப் பிடித்து காலணிப் பெட்டியில் மீண்டும் அடைத்து மூடியை டேப்பால் ஒட்டி அழுத்தி மூடினேன். ஆனால் அவ்விலங்குகள் பெட்டிக்குள் பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்ததால் அதை என் அறையிலிருந்து முடிந்த மட்டும் தூரத்தில் பரணின் ஒரு மூலையில் தள்ளி விட்டேன்.

அம்மா என்னுடன் சீனத்தில் பேசினால் அவருக்கு பதிலளிக்க மறுத்தேன். சிறிது காலத்திற்கு பிறகு அவர் அதிகமும் ஆங்கிலத்தை பயன்படுத்த முயற்சித்தார். ஆனால் அவரின் உச்சரிப்பும் உடைந்த வாக்கியங்களும் என்னை சங்கடப்படுத்தியது. அவரைத் திருத்த முயற்சித்தேன். முடிவில், நான் அருகிலிருக்கும்போது அவர் பேசுவதையே ஒட்டுமொத்தமாக நிறுத்திக் கொண்டார்.

அம்மா எனக்கு ஏதாவது தெரியப்படுத்த வேண்டியிருந்தால் அதை சைகையாலேயே செய்து காட்டத் தொடங்கினார். டிவி யில் அவர் பார்த்த அமெரிக்க அம்மாக்களை போல் என்னை கட்டியணைக்க முயற்சி செய்தார். அவர் செயல்களெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாகவும் நிச்சயமற்றும் கிண்டலுக்குரியதாகவும் நயமற்றிருப்பதாகவும் எனக்கு தோன்றியது. நான் எரிச்சலடைவதைப் பார்த்தார், பின்பு அதையும் நிறுத்திக் கொண்டார்.

“உன் அம்மாவை நீ இப்படி நடத்தக் கூடாது” என்று அப்பா சொன்னார். ஆனால் என் கண்களை நேரில் நோக்கி அவரால் இதைச் சொல்ல முடியவில்லை. தன் மனதின் ஆழத்தில், ஒரு சீன விவசாயப் பெண்ணை கொண்டு வந்து கனெக்டிகட்டின் புறநகர் ஒன்றில் பொருந்தச் செய்துவிட முயற்சித்தது தவறு என்று உணர்ந்திருப்பார்.

அம்மா அமெரிக்கப் பாணியில் உணவு சமைக்கக் கற்றுக்கொண்டார். நான் வீடியோ கேம்கள் விளையாடினேன். பிரெஞ்ச் படித்தேன்.
அவ்வப்போது சமையற்கட்டில் காகித உறையின் வெற்றுப்பக்கத்தை படிப்பதைப் போல அவர் உற்று நோக்குவதை பார்ப்பேன். பின்னர், படுக்கையருகில் ஒரு புதிய காகித மிருகம் தோன்றி என்னை அரவணைத்துக் கொள்ள முயலும். நான் அவற்றைப் பிடித்து அவற்றினுள்ளிருந்து காற்று முழுதும் வெளியேறும் வரை கசக்கி பரணிலிருந்த பெட்டியில் போட்டு அடைத்து விடுவேன்.
இறுதியில், நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது அவர் விலங்குகள் செய்வதை நிறுத்திக் கொண்டார். அப்போது அவரது ஆங்கிலம் நன்றாகவே தேர்ந்திருந்தது, ஆனால் அவர் சொல்வதை அது எந்த மொழியிலாக இருந்தாலும் அக்கறை கொள்ளாத வயதை ஏற்கனேவே நான் எட்டியிருந்தேன்.

சில நேரங்களில், நான் வீட்டிற்கு வரும்போது சமையலறைக்குள் சீனப் பாடல் ஒன்றை தனக்குத் தானே பாடியபடி அவரின் சிறிய உடல் அவசர அவசரமாக அங்கும் இங்கும் நகர்வதைப் பார்ப்பேன், இவர்தான் என்னைப் பெற்றெடுத்தார் என்று நம்புவதற்கே கடினமாக இருக்கும். எங்களிருவருக்குள் பொதுவானதென்று எதுவுமேயில்லை. அவர் நிலவிலிருந்து வந்தவராகக் கூட இருக்கலாம். நான் வேகமாக என் அறைக்குள் சென்றுவிடுவேன், அங்கேதான் என் அத்தனை அமெரிக்க இன்பங்களை நாடும் செயல்களைத் தொடர முடியும்.

***

நானும் அப்பாவும் மருத்துவமனை கட்டிலில் கிடந்த அம்மாவின் இரு பக்கத்திலும் நின்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை ஆனால் அவர் மிகுந்த வயதானவரைப் போல தோற்றமளித்தார்.

பல வருடங்களாக உள்ளுக்குள்ளேயே இருந்த வலிக்காக டாக்டரிடம் செல்ல மறுத்து வந்தார், அது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்றார். ஆம்புலன்ஸ் வந்து இறுதியாக அவரை தூக்கிச் சென்றபோது அறுவை செய்து எடுக்க முடியாத அளவு கேன்ஸர் பரவியிருந்தது.

என் மனம் அந்த அறையில் இல்லை. வளாக நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பருவம் அது. என் கவனமெல்லாம் தற்குறிப்புகளிலும் உரை தயாரிப்புகளிலும் திட்டமிட்டு அடுக்கப்பட்ட நேர்முகத் தேர்வு அட்டவணைகளிலுமே இருந்தது. பெருநிறுவன தேர்வாளர்களிடம் என்ன பொய் சொன்னால் என்னை அவர்கள் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வார்கள் என்பதிலேயே என் யோசனை இருந்தது. அம்மா படுக்கையில் மரணித்துக் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் யோசிப்பது எவ்வளவு கொடூரமானது என்ற அறிவார்ந்த புரிதல் எனக்கிருந்தது. ஆனால் என் அப்போதைய உணர்வை மாற்றக் கூடிய சக்தி அப்புரிதலுக்கு இல்லை.
அம்மா சுயநினைவுடன் இருந்தார். அப்பா தன் இருகைகளாலும் அம்மாவின் இடக்கையை ஏந்தியிருந்தார். அவர் அம்மாவின் நெற்றியில் முத்தமிட கீழே வளைந்தார். நான் திடுக்கிடும் வகையில் அப்பா வலுவற்றும் வயதாகியும் தோன்றினார். நான் அப்பாவையும் அம்மா அளவிற்கே குறைவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

அம்மா அவரைப் பார்த்து புன்னகைத்தார். “நான் நன்றாக இருக்கிறேன்.”

என்னிடம் திரும்பினார், இன்னமும் புன்னகைத்துக் கொண்டிருந்தார். “நீ கல்லூரிக்குத் திரும்பச் செல்ல வேண்டுமென எனக்கு தெரியும்.” அவரின் குரல் மிகவும் மெலிந்திருந்தது, அவர் மீது பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்களின் இரைச்சலொலியில் அவர் சொல்வதை கேட்பது கடினமாக இருந்தது. “போ. என்னைப் பற்றி கவலைப் படாதே. இது ஒரு பெரிய விஷயமில்லை. நீ கல்லூரியில் தேர்வுகளை நன்றாகச் செய். “

எட்டி அவர் கைகளை தொட்டேன். இச்சந்தர்பத்தில் அப்படித்தான் நான் எதுவோ செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியதால் அதைச் செய்தேன். நான் நிம்மதியடைந்தேன். நான் திரும்ப வேண்டிய விமானம் குறித்தும் பிரகாசமான கலிஃபோர்னிய கதிரொளி குறித்தும் சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.

அப்பாவிடம் ஏதோ முணுமுணுத்தார் அம்மா. அவர் தலையசைத்து அறையிலிருந்து வெளியேறினார்.

“ஜாக் ஒருவேளை – ” திடீர் இருமல்களின் தாக்குதலினால் பீடிக்கப்பட்டு அவரால் சிறிது நேரத்திற்குப் பேச முடியவில்லை.

“ஒருவேளை நான் தேறி வரவில்லையென்றால், நீ அதிகம் கவலைப்பட்டு உன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதே. உன் வாழ்க்கையின் மீது கவனத்தைச் செலுத்து. நீ பரணில் போட்டு வைத்திருக்கும் அந்த பெட்டியை மட்டும் உன்னோடு வைத்திரு, ஒவ்வொரு வருடமும் ‘குயிங்மிங்’ அன்று அதை வெளியில் எடுத்து என்னை நினைத்துக் கொள். நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்.”

‘குயிங்மிங்’ மரித்தவர்களுக்கான சீனப் பண்டிகை. நான் மிகவும் இளையவனாக இருந்தபோது அம்மா சீனாவில் இறந்துபோன தன் பெற்றோர்களுக்கு ‘குயிங்மிங்’ அன்று கடிதம் எழுதுவார். தன் அமெரிக்க வாழ்வில் சென்ற ஆண்டின் மகிழ்ச்சியான செய்திகளை அதில் எழுதியிருப்பார். அக்கடிதத்தை சத்தமாக எனக்கு படித்து காட்டுவார், நான் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதையும் அக்கடிதத்திலேயே குறித்துக் கொள்வார். பிறகு அதை காகித நாரையைப் போல மடித்து வடக்கு நோக்கி விடுவிப்பார். அந்நாரை தன் நீண்ட வடதிசைப் பயணத்திற்காக, பசிஃபிக்கை நோக்கி, சீனாவை நோக்கி, அம்மாவின் குடும்பத்தினரின் கல்லறைகளை நோக்கி தன் மொடமொடப்பான சிறகுகளை அசைப்பதை நாங்களிருவரும் கவனிப்போம்.

நான் அவருடன் சேர்ந்து இப்படிச் செய்து பல வருடங்களாகிவிட்டது.

“எனக்கு சீன காலண்டரைப் பற்றி எதுவும் தெரியாது” என்று சொன்னேன். “அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா”
அந்தப் பெட்டியை மட்டும் உன்னுடனே வைத்திரு. அவ்வப்போது ஒருமுறை திறந்து வைத்திரு. சும்மா திறந்து மட்டும் – ” அவர் மீண்டும் இருமத் தொடங்கினார்.

“அது பரவாயில்லை அம்மா” அவர் கரங்களை நான் தட்டுத் தடுமாறி தடவிக் கொடுத்தேன்.

“ஹைஜி, மாம்மா அய் நி – ” அவரை இருமல் மீண்டும் பற்றிக்கொண்டது. பல வருடங்களுக்கு முந்தைய படிமம் ஒன்று என் ஞாபகத்தில் பளிச்சிட்டது: அம்மா ‘அய்’ என்று சொல்லி தன் கையை அவர் இதயத்தின் மீது வைக்கிறார்.

“சரி, அம்மா. பேசுவதை நிறுத்துங்கள்.”

அப்பா திரும்பி வந்தார், நான் என் விமானத்தை தவறவிட விரும்பவில்லையென்றும் நிலையத்திற்கு கொஞ்சம் முன்னதாகவே செல்ல வேண்டும் என்றும் சொன்னேன்.

நெவேடாவின் மீது என் விமானம் எங்கோ பறந்துக் கொண்டிருந்த போது என் அம்மா இறந்து போனார்.

***

அம்மா இறந்த பிறகு அப்பாவிற்கு வேகமாக வயதாகியது. அவருக்கு அந்த வீடு மிகப் பெரியதாக இருந்தது, விற்க வேண்டியதாயிற்று. நானும் என் பெண் தோழி சூசனும் பொருட்களை தொகுத்து கட்டவும் இடத்தை சுத்தம் செய்யவும் சென்றிருந்தோம்.

சூசன் என் காலணிப்பெட்டியை பரணில் கண்டெடுத்தாள். காகித மிருக சாலை, நீண்ட காலமாக பரணில் காப்பற்ற காரிருளில் பொதிந்திருந்தவை, தற்போது உடைந்து போகக் கூடியவையாக, ஒளிர்ந்த காகித உறையின் வண்ணங்கள் வடிந்து போனவையாக மாறியிருந்தது.

“இதைப் போன்ற ஓரிகாமியை நான் பார்த்ததே இல்லை,” சூசன் சொன்னாள். “உன்னுடைய அம்மா ஒரு அற்புதக் கலைஞர்”
காகித மிருகங்கள் நகரவில்லை. ஒருவேளை எந்த மாயம் அவற்றுக்கு உயிரூட்டினவோ அது அம்மாவோடே மரித்துப் போனதோ. அல்ல இக்காகித கட்டுமானங்களுக்கு உயிரிருந்ததாக நான்தான் கற்பனை செய்துக் கொண்டேனோ? சிறுவர்களின் நினைவுகள் நம்பக் கூடியவை அல்ல.

***

அது ஏப்ரல் வாரயிறுதி, அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. சூசன் மேலாண்மை ஆலோசகராக தன்னுடைய இடைவிடாத பயணங்கள் ஒன்றுக்காக வெளியே சென்றிருந்தாள், நான் வீட்டில் சோம்பலாக டி.வி. சேனல்களை மாற்றியபடி இருந்தேன்.

சுறாவைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்ததும் இடைநிறுத்தினேன். சட்டென பார்த்தேன், என் மனதில் அம்மாவின் கைகள் நானும் லாஒஹூவும் பார்த்துக் கொண்டிருக்கையில் அலுமினிய காகிதத்தை மடித்து மடக்கி மீண்டும் மடித்து எனக்காக சுறாவை செய்து கொண்டிருந்தது.

ஒரு சலசலப்பு. எட்டிப் பார்த்தேன். காகித உறை பந்தும் கிழிந்த டேப்பும் புத்தக அலமாரிக்கு அடுத்து தரையில் இருந்தது. அதை குப்பையில் எறிவதற்காக எழுந்து நடந்தேன்.

அக்காகிதப் பந்து நகர்ந்தது, தன்னைத் தானே அவிழ்த்துக் கொண்டதும் கண்டுகொண்டேன் அது லாஓஹுவென. நீண்ட காலமாக அவனை பற்றிய எண்ணமே எனக்கில்லை. “ர்ர்ர்ர்ரவ்வ்-சாவ்”. நான் கைவிட்ட பிறகு அம்மா இவனை மீண்டும் ஒன்றாக இணைத்திருக்க வேண்டும்.

நான் நினைவில் வைத்திருந்ததைவிட இவன் சிறியதாக இருந்தான். அல்லது அந்நாட்களில் என் உள்ளங்கைகள் சிறியனவாக இருந்திருக்கலாம்.

சூசன் காகித மிருகங்களால் எங்கள் அடுக்குமாடி இல்லத்தை அலங்கரித்திருந்தாள். அநேகமாக அவள் லாஓஹுவை ஒரு நல்ல மறைவான மூலையில் வைத்திருக்கவேண்டும், அவன் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கிறானென்பதால்.

நான் தரையிலமர்ந்து விரலால் அவனைத் தொட்டேன். லாஓஹுவின் வால் சட்டென வெட்டியிழுத்தது, என் விரல்களின் மீது விளையாட்டாக பாய்ந்தான். நான் சிரித்தேன், அவன் முதுகை வருடிக் கொடுத்தேன். என் கைகளடியில் மெல்ல உறுமினான்.

“எப்படி இருக்கிறாய் என் முன்னாள் நண்பனே?”

லாஓஹு விளையாடுவதை நிறுத்தினான். எழுந்து ஒரு பூனையின் கருணையோடு என் மடி மீது தாவி தன் மடிப்புகளை அவிழ்த்து திறந்துக் கொள்ள தொடங்கினான்.

என் மடியில் மடிப்புத் தடங்களுடன் சதுர காகிதமொன்று வெற்றுப் பக்கம் மேலே பார்த்தபடி இருந்தது. அதில் அடர்த்தியான சீன எழுத்துருக்கள் நிறைந்திருந்தது. நான் சீன மொழியை வாசிக்கக் கற்றுக்கொள்ளவேயில்லை ஆனால் “மகன்” என்ற சொல்லுக்குரிய எழுத்துக்கள் எனக்குத் தெரியும். அவை மேலேயே இருந்தது, ஒருவருக்கு எழுதப்படும் கடிதத்தில் அவரை குறிப்பிட்டு விளக்குமிடத்தில், அம்மாவின் அலங்கோலமான, மழலைக் கையெழுத்தில்.

நான் சென்று கணினியில் இணையத்தை திறந்து ஆராய்ந்தேன். இன்றுதான் “குயிங்மிங்”.

***

நான் கடிதத்தை எடுத்துக் கொண்டு நகரத்திற்குள், நான் அறிந்த சீன சுற்றலா பேருந்துகள் நிற்குமிடத்திற்கு சென்றேன். ஒவ்வொரு பயணியையும் நிறுத்தி “நின் ஹுய் து ழோங்கவெண் மா?” உங்களால் சீனம் வாசிக்க முடியுமா? நான் சீன மொழி பேசி வெகுகாலம் ஆகியிருந்தது நான் பேசியதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.

ஒரு இளம் பெண் உதவ ஒப்புக்கொண்டார். நாங்களிருவரும் ஒரு நீள் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம், அவர் கடிதத்தை எனக்காக சத்தமாக வாசித்தார். நான் பல வருடங்களாக மறக்க நினைத்த மொழி மீண்டும் என்னிடம் திரும்பி வந்தது, வார்த்தைகள் என் தோலினுடாக என் எலும்புகளைத் துளைத்து, என் இதயத்தை இறுக்கமாக சுற்றி வளைப்பதை எனக்குள் உணர்ந்தேன்.

***

மகனுக்கு,

நாம் பேசி பல காலமாயிற்று. நான் உன்னைத் தொட முயற்சிக்கும்போதெல்லாம் நான் அச்சமுறும்படி நீ அதிக கோபம் கொள்கிறாய். இவ்வளவு காலமாக நான் அனுபவித்து வந்த வலி தற்போது தீவிரமடைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

அதனால் உனக்கு எழுதலாம் என்று முடிவெடுத்தேன். நான் உனக்கு செய்து கொடுத்த காகித மிருகங்கள் உனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்ததுண்டு என்பதால் நான் அதிலேயே எழுதப்போகிறேன்.

நான் மூச்சு விடுவது நின்றதுமே இவ்விலங்குகள் நகர்வதும் நின்றுவிடும். ஆனால் நான் உனக்கு இதயப்பூர்வமாக எழுதினால், நான் என்னையே கொஞ்சமாக இக்காகிதத்தின் பின்னால் இவ்வார்த்தைகளில் விட்டுச் செல்ல முடியும். பிற்பாடு, குயிங்மிங் அன்று நீ என்னை நினைத்துப் பார்க்கையில், பிரிந்து சென்ற ஆத்மாக்கள் தங்கள் குடும்பங்களைக் காண அனுமதிக்கப்படும் அந்நாளில், நான் விட்டுச் செல்லும் என் சில உணர்வுகளை உன்னால் உயிர்பிக்கச் செய்ய முடியும். நான் உனக்காகச் செய்த உயிரினங்கள் மீண்டும் குதித்து தாவி ஓடும், ஒருவேளை நீ இவ்வார்த்தைகளை காணும் வாய்ப்பை கூட பெறலாம். நான் இதயம் முழுதும் நிரப்பி எழுதவேண்டுமென்பதால், சீன மொழியிலேயே உனக்கு எழுத வேண்டியிருக்கிறது.

இத்தனை காலமாக என் வாழ்க்கை கதையை நான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன். நீ சிறுவனாக இருந்தபோது, நீ வளர்ந்து பெரியவனானதும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன், உன்னால் அப்போதுதான் புரிந்துக் கொள்ளமுடியும் என்பதால். ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு வாய்ப்பு வராமலே போனது.

நான் 1957ல் ஹெபேய் மாகாணத்திலுள்ள சிகுலு கிராமத்தில் பிறந்தேன். உன்னுடைய தாத்தா பாட்டி அதிக உறவினர்களற்ற மிகுந்த ஏழைக்கு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் பிறந்த சில வருடங்களிலேயே முப்பது மில்லியன் மக்களை பலி கொண்ட பெரும் பஞ்சங்கள் சீனாவைத் தாக்கியது. என் முதல் நினைவே என் அம்மா அவர் வயிற்றை நிரப்பிக் கொள்ள அழுக்கை உண்பதை பார்த்துக்கொண்டே விழிப்பதுதான், கடைசித்துளி மாவை எனக்காக விட்டு வைத்திருந்தார்.

அதன் பிறகு நிலைமை சற்று சீரானது. சிகுலு, காகித கைவினைகளுக்கு பெயர் போனது, என் அம்மா எப்படி விலங்குகளை செய்து அவற்றுக்கு உயிர் கொடுப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். இது எங்கள் கிராம நடைமுறைப்படி தினசரி வாழிவில் நிகழ்த்தும் ஒரு மாய வித்தை. நாங்கள் காகிதப் பறவைகளை செய்து வெட்டுக்கிளிகளை விரட்டுவோம், காகிதப் புலியால் எலிகளை விரட்டுவோம். சீன புத்தாண்டிற்கு நானும் என் நண்பர்களும் சிவப்பு டிராகன்களை செய்தோம். அக்குட்டி டிராகன்கள் தலைமீது வானத்தில் விரிந்து, சென்ற வருடத்தின் துர்நினைவுகளை விரட்டுவதற்காக வெடித்துச் சிதறும் பட்டாசுச் சரங்களை ஏந்தியபடி பறந்த காட்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது. நீ அதை கண்டிருந்தால் உனக்கு அவ்வளவு பிடித்திருக்கும்.

பிறகு 1966ல் கலாச்சார புரட்சி வந்தது. அக்கம் பக்கதினரும் அண்ணன் தம்பிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பினர். என் அம்மாவின் உடன் பிறந்தவர், என் மாமா, 1946ல் ஹாங்காங்கிறகு சென்றுவிட்டாரென்றும் அங்கே வியாபாரியாக இருக்கிறார் என்பதையும் யாரோ நினைவில் வைத்திருந்தார்கள். ஹாங்காங்கில் உறவினரைக் கொண்டிருப்பது நாங்கள் உளவாளிகளென்றும் மக்களின் எதிரிகளென்றும் அர்த்தம் கொள்ளும், அனைத்து விதத்திலும் அதை நாங்கள் எதிர்த்துப் போராடவேண்டியிருந்தது. பாவம் உன்னுடைய பாட்டி – இந்த வசைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் கிணற்றுக்குள் குதித்துவிட்டார். பிறகு சில பையன்கள் வேட்டை துப்பாக்கிகளுடன் உன் தாத்தாவை ஒருநாள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர், அதன் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

அங்கே நான் பத்து வயது அநாதையாக ஆனேன். இவ்வுலகில் எனக்கிருந்த ஒரே உறவு ஹாங்காங்கிலிருக்கும் என் மாமாதான். ஒரு இரவில் யாருமறியாமல் தெற்கே செல்லும் சரக்கு ரயிலில் ஏறிக்கொண்டேன்.

சில நாட்கள் கழித்து, குவாங்டாங் மாகாணத்தில் உண்பதற்காக வயலில் இறங்கி திருடியபோது யாரோ ஆட்கள் சிலர் என்னை பிடித்து விட்டனர். ஹாங்காங்கிற்குள் செல்ல முயற்சிக்கிறேன் என்று நான் சொன்னதை கேட்டு அவர்கள் சிரித்தனர். “இது உன்னுடைய அதிர்ஷ்ட நாள். எங்கள் வணிகமே பெண்களை ஹாங்காங் கொண்டு செல்வதுதான்”.

ஒரு பார வண்டியின் கீழே மற்ற பெண்களோடு சேர்த்து என்னையும் மறைத்து வைத்து எல்லையைத் தாண்டி எங்களை கடத்திச் சென்றனர்.

எங்களை ஒரு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு கூட்டிச் சென்று எங்களை வாங்குபவர்களின் பார்வைக்கு நாங்கள் ஆரோக்கியமானவர்களாகவும் அறிவாளிகளாகவும் தெரியும்படி எழுந்து நிற்கச் சொன்னார்கள். குடும்பங்கள் வந்து எங்களைப் பார்த்து அதில் ஒருவரை ‘தத்தெடுப்பதற்காக’ தேர்வு செய்ய இக்கிடங்கிற்கு கட்டணம் செலுத்தினர்.

சின் குடும்பம் தங்கள் மகன்களை கவனித்துக் கொள்வதற்காக என்னை தேர்ந்தெடுத்தனர். நான் தினமும் காலை நான்கு மணிக்கு உணவு தயாரிப்பதற்காக எழுந்துக் கொள்வேன். பையன்களைக் குளிப்பாட்டினேன் அவர்களுக்கு உணவளித்தேன். உணவு வாங்க கடைகளுக்குச் சென்றேன். நான் சலவை செய்தேன் தரையைத் துடைத்தேன். அப்பிள்ளைகளின் பின்னால் சுற்றி வந்தேன்.

அவர்களின் கட்டளைகளையெல்லாம் ஏற்றேன். இரவில் நான் தூங்குவதற்காக சமையலறையிலிருந்த ஒரு அலமாரியில் வைத்து பூட்டப்பட்டேன். நான் நிதானமாகவோ அல்ல தவறாகவோ எதையாவது செய்தால் தாக்கப்பட்டேன். பையன்கள் ஏதேனும் தவறு செய்தாலும் நானே அடிவாங்கினேன். நான் ஆங்கிலம் கற்க முயற்சிக்கும்போது பிடிபட்டால் அடிக்கப்பட்டேன்.

“நீ எதற்கு ஆங்கிலம் கற்க விரும்புகிறாய்” மிஸ்டர். சின் கேட்டார். “உனக்கு போலீஸிடம் போக வேண்டுமா? நாங்கள் போலீஸிடம் நீ மைய சீன நிலத்தை சேர்ந்தவள் என்றும் சட்டத்திற்கு புறம்பாக ஹாங்காங்கில் இருக்கிறாய் என்றும் சொல்வோம். அவர்கள் உன்னை சிறையில் அடைக்க பெரிதும் விரும்புவார்கள்.”

இப்படி நான் ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஒருநாள், காலைச் சந்தையில் என்னிடம் மீன்கள் விற்கும் ஒரு வயதான பெண்மணி என்னை தனியே இழுத்தார்.

“உன்னைப் போன்ற பெண்களை எனக்குத் தெரியும். உனக்கு என்ன வயதாகிறது, பதினாறு? உன் உரிமையாளர் ஒருநாள் குடித்துவிட்டு உன்னைப் பார்த்து வாரியிழுத்து தன்மீது போட்டுக் கொள்வார், உன்னால் அதை தடுக்க முடியாது. இதை மனைவி கண்டுபிடித்து விடுவாள். அதன் பிறகு நீ நேராக நரகத்திற்கே வந்து விட்டதுபோல் தோன்றத் துவங்கும். நீ இந்த வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரால் உனக்கு உதவ முடியும்.”

அவர்தான் ஆசிய பெண்களை மனைவியாகக் கொள்ள விரும்பும் அமெரிக்க ஆண்களைப் பற்றிச் சொன்னார். என்னால் சமைக்க சுத்தம் செய்ய என் அமெரிக்க கணவனை கவனித்துக் கொள்ள முடியுமென்றால் அவர் எனக்கொரு நல்வாழ்வைத் தருவார். அதுதான் அப்போது எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை. அப்படித்தான் எல்லா பொய்களோடும் அப்படியலில் சேர்ந்து பின் நான் உன் அப்பாவை சந்திதேன். இது ஒரு காவிய காதல் கதை அல்லதான், ஆனால் இதுதான் என் கதை.

கனெக்டிகட்டின் புறநகர்ப் பகுதிகளில் நான் தனித்திருந்தேன். உன் அப்பா என்னிடம் கனிவாகவும் மென்மையாகவும் நடந்துக் கொண்டார், நான் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்னாலும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அதன் பிறகு நீ பிறந்தாய்! நான் உன்னுடைய முகத்தில் என் அம்மாவின் அப்பாவின் என் சாயல்களைக் கண்டதும் நான் பெருமகிழ்ச்சி கொண்டேன். நான் என் மொத்த குடும்பத்தையும், சிகுலு முழுவதையும், நான் அறிந்த நான் விரும்பிய அத்தனையையும் இழந்திருந்தேன். ஆனால் அங்கே நீ இருந்தாய், அவை அத்தனையும் உண்மையென்பதற்கு சாட்சியாக இருந்தது உன் முகம். என் கற்பனையல்ல அது.

நான் பேசுவதற்கென்று ஒருவர் உண்டு இப்போது. நான் பற்றிக்கொண்டிருந்தது துறந்தது என அத்தனையையும் மீண்டும் சிறு துண்டுகளாக உன்னோடு சேர்ந்து செய்வேன். நீ என்னிடம் உன் முதல் சில சொற்களை பேசியபோது, சீன மொழியில் என்னுடையதும் என் அம்மாவுடைய உச்சரிப்பையும் அப்படியே கொண்டிருந்தது, நான் பல மணிநேரங்கள் அழுதேன். நான் உனக்கு முதன்முதலாக ‘ஷேஜை’ விலங்குகளை செய்து தந்தபோது, நீ சிரித்தாய், இவ்வுலகில் கவலைகளே இல்லையென்று உணர்ந்தேன்.

நீ சற்று வளர்ந்தாய், இப்போது உன்னால் உன் அப்பாவிற்கு உதவிகள் கூட செய்ய முடிந்தது, நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். உண்மையிலேயே எனக்கெனெ ஒரு இல்லம் இப்போது இருகிறதெனெ உணர்ந்தேன். கடைசியில் நான் ஒரு நல்ல வாழ்க்கையைக் கண்டடைந்தேன். ஆனால் அப்போது என் பெற்றோர்கள் என்னைச் சுற்றி இல்லை. சீனர்கள் இவ்வுலகிலேயே துயரமானதாகக் கருதுவது எதுவென உனக்குத் தெரியுமா? ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளும் ஆசை முழுதாக வளரும்போது, அவர்கள் பிரிந்து சென்று நீண்ட காலமாகிவிட்டது என்பதை உணர்வதுதான்.

மகனே, உனக்கு உன்னுடைய சீனக் கண்களைப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும், அவை என்னுடைய கண்கள். உனக்கு உன்னுடைய சீனத் தலைமுடி பிடிக்காது என்று எனக்குத் தெரியும், அவை என்னுடைய முடி. ஆனால் உன்னுடைய இருப்பே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது என்று உனக்குப் புரியுமா? நீ என்னுடன் பேசுவதை நிறுத்தியதும் என்னை உன்னுடன் சீன மொழியில் பேச விடாமல் தடுத்தபோதும் நான் எவ்வாறு உணர்ந்தேன் என்பது உனக்கு புரியுமா? நான் அத்தனையையும் மீண்டும் இழப்பதாக உணர்ந்தேன்.

நீ ஏன் என்னுடன் பேச மாட்டாய், மகனே? அவ்வலி இதை எழுதுவதை மேலும் கடினமாக்குகிறது.

***

அந்த இளம்பெண் காகிதத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். என்னால் அவர் முகத்தை நேரிட்டு பார்க்க முடியவில்லை.
தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே, அம்மாவின் கடிதத்தின் பின்புறத்தில் “அய்” என்ற வார்த்தை நிழலை கண்டுபிடிக்க உதவுமாறு அவரிடம் கோரினேன். என் பேனாவால் அம்மாவின் எழுத்தோடு பிணைத்து அவ்வெழுத்தின் மேல் மீண்டும் மீண்டும் எழுதினேன்.
அப்பெண் என்னை அருகி என் தோள்களின் மீது கைகளை வைத்தார். பின்னர் எழுந்துச் சென்றார், என்னை என் அம்மாவுடன் தனிமையில் விட்டுவிட்டு.மடிப்புத் தடங்களைப் பின்தொடர்ந்து நான் காகிதத்தை மீண்டும் லாஓஹூவாக மடித்தேன். என் கரங்களின் வளைவைத் தொட்டிலாக்கி அதில் அவனை வைத்தேன், அவன் செல்லமாக உரும, நாங்களிருவரும் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினோம்.

***

ஆசிரியர் குறிப்பு :

சீனாவில் 1976ம் வருடம் பிறந்தவர் கென் லியூ. இவருடைய பதினோராவது வயதில் இவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.

ken liu

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியமும் கணினி தொழில்நுட்பமும் பயின்ற இவர் சிறிது காலம் மைக்ரோசாஃப்டில் பணிபுரிந்து பின்னர் ஹார்வர்டிலேயே சட்டப் படிப்பும் முடித்து தற்போது கார்பொரேட் கம்பெனிகளின் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 2002 லிருந்து அபுனைவு கதைகளை பதிப்பித்து வரும் இவர் அறிவியல் புனைவு மற்றும் கற்பனை வகை கதைளின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். பல சீன இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். இவரின் இந்த காகித மிருக சாலை என்ற சிறுகதை 2013ல் அறிவியல் கற்பனை கதைகளுக்கு வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வென்றது. இருப்பினும் இக்கதை இவரின் மற்ற சிறந்த சிறுகதைகளைப் போல மாய எதார்த்தத் தன்மை கொண்டு இருக்கிறது. தொன்மங்களிலிருந்து பிறக்கும் மாயங்களாக, அறிவியல் கற்பனைகளாக புறத்தில் வித்தைகள் காட்டி அதன் அகத்தில் ஆழமான உறவுப் பின்னலை விரித்து வைக்கிறார் மை எழுத்து கடிதத்தின் பின்பக்க நிழற்கோடுகளைப் போல. 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

ம. நரேந்திரன், 1982ல் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

கல்லூரி காலங்களில் விகடன் மாணவ பத்திரிக்கையாளராக தேர்வாகி விகடன் குழும பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஆறு ஆண்டுகள் அமெரிக்க வாசத்திற்குப் பிறகு தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் : இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் (யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2020) தொடர்புக்கு – narendiran.m@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular