Thursday, December 5, 2024
Homesliderகவி

கவி

  • மணி எம்.கே மணி

கவி

ஒரு சிறுகதை 

என்னைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருப்பேன். முதல் பார்வையில் நல்லவன் என்பதாக முடிவு செய்து பலரும் எனக்கு மரியாதை கொடுப்பார்கள். எனது கண்கள் உள்ளே மிகவும் ஆழத்தில் தேமே என்றிருப்பதை பலரும் அனுதாபம் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மட்டுமீறி கட்டுமஸ்தாக இருக்கிற சாந்தியை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு ஒருவரும் அறியாமல் நான் என் பார்வையால் வாரி விழுங்கி சேகரித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கம் திரும்பின அவள் புன்னகைத்தாள். பதிலுக்கு புன்னகை வராமல் மனம் கிடந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தது.

“ காலேஜ் படிக்கிறியா ? “

“ ம் “       

அவள் என்னையும், நான் அவளையும் ஒரு மாதமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் என் கையில் வைத்திருப்பது ஒரு ரஷ்ய நாவல். தினமும் இது மாதிரி ஓரிரு புத்தகங்கள் கையில் இருக்கும். அதனால் அவள் நான் கல்லூரி படிப்பதாக நினைக்கிறாள். இரவு சென்று நண்பர்களுடன் கூத்தடித்து விட்டு நாளை காலை திரும்பும்போது நூலகத்தில் புத்தகத்தை மாற்றிக் கொண்டு வருவேன். நான் படிப்பை விட்டு வெட்டியாக சுற்றத் துவங்கி எவ்வளவோ காலமாகிறது. இரவு ஏழு பதினைந்துக்கு வருகிற இந்த வண்டியை நிரந்தரமாக பயன்படுத்துவதற்கு ஒரே காரணம் இவள் தான். என்ன மாதிரி கட்டை என்கிறீர்கள் ? பெரிய கண்களும், தடித்த உதடுகளும் இடுப்பும், பாதங்களும் எனக்குள் பரபரவென்றிருக்கின்றன. தூக்கம் விழிக்கிறேன். ஒன்றும் செய்வதில்லை என்றாலும் திட்டங்கள் போட்டவாறு இருப்பேன்

ஆனால் அவளேதான் ஒருநாள் வா என்றாள். எட்டாகி விட்டிருந்தது. பஸ் வரவில்லை. ஒரு ஆட்டோ பிடித்து அதில் என்னை ஏற்றிக் கொண்டாள். உன் இடத்தில் உன்னை இறக்கி விட்டுப் போகிறேன் என்பதாக சொன்னாள். போகிற வழியெல்லாம் அன்று கரண்ட் கட், சினிமா மாதிரி. நான் அவளது இடுப்பை தடவினேன். அவள் எந்த பாவமும் காட்டவில்லை. சரி போயிட்டு வாப்பா என்று என்னை இறக்கி விட்டது ரொம்ப சாதாரணமாக இருந்தது. எப்படியும் அவள் என்னைக் காட்டிலும் பத்து வயது மூத்தவள் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவள் என்னை ஒரு தம்பி போல எல்லாம் நடத்த முடியாது. எனக்கு நிறைய சந்தேகம். நான் இடுப்பில் தடவும்போது அவள் கொஞ்சமாவது நெளிந்திருக்க வேண்டும். ஒரு சின்ன முனகல் வந்திருந்தாலுமே ஒரு தெம்பு கிடைத்திருக்கும். ஒருவேளை என்னை சோதனை செய்கிறாளா?

இரண்டு நாள் கழித்து அவளது உள்ளத்தில் பதிவதற்கு ஒரு திட்டம் வந்து விழுந்தது.

நான் திட்டங்களை நிறைவேற்றுபவன் அல்ல.

ஆனால் அன்று பஸ்சை விட்டு இறங்கிய உடன் சன்னலோரம் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடி அவளிடம் ரகசியம் சொல்லுவது போல செய்தேன். அவளும் தலையை குனிந்து காதைக் காட்டினாள்.

“ஐ லவ் யு ! “

இருவரும் விலகினோம். 

அவள் என்னை ஒரு கணம் பார்த்தாள். பாரத்தாளா.? அப்படித்தான் இருந்தது.

” சரி, போ, பத்ரம் ! “

எனக்கு போதவில்லை. ஐ லவ் யு சொன்னதெல்லாம் அதிகம். வெட்கமாகக்கூட இருந்தது. நண்பர்கள் யாராவது இதைக் கேள்விப்பட்டால் சிரித்தே சாவான்கள். இருந்தாலும் ஒரு பெண் மனதை வென்று எடுக்கத்தான் அதை செய்தேன். உள்மனதில் இருப்பதை வெளியே காட்டாதிருந்து ஒருவேளை இனிமேல் கூட நான் சொன்னதெல்லாம் எதிரொலித்து என்னை அவள் உருக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா. நான் அவளோடு இருக்கப் போகிற தினத்தின் வாத்ஸாயன சர்க்கஸ்களை பற்றித் திளைத்தேன்.

அவளே சொன்னாள்.

” நீ காலேஜ் படிக்கற. உனக்கென்ன, லைஃபை என்ஜாய் பண்ணணும். நானும் உன் டைப் தான். ஆல் என்ஜாய். புள் என்ஜாய் ! “

” ம், ம், “

” என்ன அப்பிடி பாக்கறே ? “

” உங்கள நான் அப்பிடியே போட்டு கசக்கிப் பிழியணும் !

” வுடு, புழிஞ்சுக்கலாம்.  பிளாட் ல இருக்கியா? – தனியா இருக்கியா, பசங்க கூட இருக்கியா? “

” இங்க இருக்கறது என் வீடு. அப்பா அம்மா தங்கச்சி ..”

” சரி, சரி- நாம வேற எடத்துக்கு போலாம். எப்பன்னா நானே கூட்டிட்டு போறேன். நீ நாளைக்கு எனக்கு ஒரு ஹெல்ப்பு பண்றியா ? “

நான் அன்றுடன் அவளைப் பார்ப்பதை நிறுத்தினேன். வேறு பக்கமிருக்கிற பஸ் ஸ்டாண்ட்டுக்கு வேறு நேரத்துக்கு போனேன். எங்கேயாவது பார்க்க வேண்டி வந்து விடுமோ என்று பயந்தவாறு இருந்தேன். உங்களுக்கு புரியலாம், இப்படி பஸ்ஸுக்கு போக வர வேண்டிய காசுக்கே நான் நான்கு பேரை பிடித்துத் தொங்க வேண்டும். அவள் கேட்டது ஐநூறு ரூபாய். எப்படி? அது மட்டுமல்ல, நான் ஏதோ ஒரு குடும்ப பெண்ணைக் கவிழ்த்து வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்றிருந்தேன். அவள் அதுவல்ல. காசுக்கு அடி போடுகிறாள், தேவையே இல்லை. ஏமாந்தவன் என்று நினைத்துக் கொண்டாளா? சொன்னேன் இல்லயா, நான் பார்ப்பதற்கு மட்டும் தான் பாவமாக இருப்பேன். நல்லவர்களுக்கு நல்லவன். கெட்டவர்களுக்கு கெட்டவன்.  

பின்னால் விஷயம் தெரிய வந்தது

அவள் ஒரு இரவு டிஸ்பென்சரியில் ஆயா வேலை பார்க்கிறாள். பக்கத்தில் மசாஜ் பார்லரில் இருக்கிற ஒரு ஆசாமி ஏதாவது கிராக்கிகள் சிக்கினால் அவளை தொழிலில் ஈடுபடுத்துவது வழக்கம். பகல் நேரத்து பேசஞ்சராக கூட பிரத்யேக நாட்களில் பயணப்படுவதுண்டு. எனக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. வேறு இரைகளுக்கு பின்னால் ஓடிப்பார்க்க வேண்டியிருந்தது அல்லவா? படுக்கும்போது காட்டி அவளை குஷிப்படுத்த வேண்டும் என்று சிரமப்பட்டு செதுக்கியிருந்த ஒரு கவிதையைக் கிழித்துப் போட்டேன்.

அவளை எனது மன அறையில் வைத்து நசுக்கும்போது கொஞ்சுவதற்கு சாந்தி என்கிற புனைப்பெயரை எடுத்துக் கொண்டிருந்தேனே தவிர அவளது உண்மையான பெயர் என்ன என்பது கூட எனக்குத் தெரியாது. இப்போது தெரிந்து விட்டது. டிஜிட்டல் போர்டில் தெளிவாக போட்டு இருக்கிறார்கள். மகளை வாழ்த்துகிற கவிதைக்கு கீழே இங்கனம் அப்பா பூமாலை, அம்மா தில்லை நாயகி.

தில்லை என்பதுதான் அவளது பெயர்.

அவளையும் இங்கிருந்து பார்க்க முடிகிறது. தடித்து பெருத்து முடியெல்லாம் நரைத்து கிழவியாகி விட்டிருக்கிறாள். ஆக மாட்டாளா என்ன. நானே பெரும்பாலும் கிழவன் தான். நடுவில் இருபது வருடம் ஓடி விட்டிருக்கிறது.    

என்னவெல்லாம் நடந்தது என்று கதை சொல்லப் போனால் அதில் ஒன்றுமே இல்லை. எனக்கு உருப்படுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வளவு தான். நகரத்தின் மையத்தை விட்டு விலகி உள்ளே செல்லுகிற சேரி ஒன்றை அணைத்துக் கொண்டு பிரம்மாண்டமான சுடுகாடு ஒன்று இருக்கிறது. ஊசி போட்டுக்கொண்ட பிறகு மக்களுடன் சேர்ந்து நானும் பல பாட்டுகள் பாடுவேன், அவை நானே சொந்தமாக எழுதின கவிதைகள். வந்தவன்கள் அனைவரும் அரை வயிறு, கால் வயிறில் போதை வற்றி சோர்வில் தூங்கி விடும்போது நான் பேய்களுக்கு அவற்றை சொல்லிக் காட்டுவது வழக்கம். பகலில், வெளிச்சம் முகத்தில் இருக்கும்போது, மூளையிலோ மனசிலோ கிறக்கம் இல்லாதிருக்கும்போது எனக்கு எழுத தெரியும் என்கிற காரியத்தில் இருந்து நானாக நழுவி விடுவேன். என்ன சொல்லி, சொல்லாமல் இருப்பதில் இல்லாமலிருப்பதில் என்ன இருக்கிறது என்பதே எனக்கு விளங்குவதில்லை. எனக்கு சோறு போடக் காத்திருக்கிற அம்மாவுக்கு மூளை விளங்காமல் கீழ்பாக்கத்துக்கு போனதில் இருந்து நான் வீட்டுபக்கம் போவது கிடையாது. போனாலும் வெளியே நின்று கூப்பிட்டு மகளைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். முதலில் அவள் என் மகள்தானா என்பதில் சந்தேகம் இருக்கிறது, அதை நான் பொருட்படுத்துவதில்லை. அப்பா என்று கூப்பிடுவாள், அது அவளது அடிவயிற்றில் இருந்து வரும். அவளுக்கு படிப்பு மீது ஆசை. அவளது அம்மா எவனுக்காவது தள்ளி விடுவதற்குள் நான் கொஞ்சம் பணம் உண்டாக்க வேண்டும். எனக்கு எழுதுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நான் எழுதுவேன் என்பதே யாருக்கும் தெரியாது

அப்படிச் சொல்ல முடியாது

கோதண்டம் தான் இந்த வாய்ப்புக்கு கூப்பிட்டான். அவனுக்கு எழுத படிக்க வராது. அதனால் என்னை அவன் ஒரு பாரதியாராக கொண்டு விட்டான். நீ ஒரு கவிதை எழுத வேண்டும் என்றான். சேத்துப்பட்டு பெரியசாமி குடும்பத்தில் விசேஷம் என்றான். அந்த ஆளின் மூன்றாவது பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்றும், மந்திரி முந்திரிங்க எல்லாரையும் வர வைத்து பெரிய விழா என்றும் சொன்னான். அந்தப் பொண்ணு மேல இருக்கற பாசத்தப் பத்தி அவளோட அப்பா அம்மா சொல்றா மாதிரி நீ தான் ஒரு கவிதை எழுதிக் குடுக்கணும் பாரதியாரே ! எனக்கு எரிச்சல் வந்தது. அவனுக்கு ஒரு கவிஞன் என்றால் யாராக இருப்பான் என்பதை விளக்க ஒரு சொல்லும் இல்லாமல் மலைத்துக் கொண்டிருந்த போது அவன் ஆயிரம் ரூபாயைக் காட்டினான். அப்போதே விரைந்து சென்று இருவரும் குடித்தோம். காசு காலியாகும் தருணம் நெருங்குவதற்குள் கோதண்டம் அந்தக் கழிசடைக் கவிதையை எழுதி வாங்கிக் கொண்டான்.

இன்றைய விழாவில் வித விதமான உணவு வகைகள் இருக்கின்றன என்றார்கள்.

அப்புறம் குடி. போதாதா?

எப்படியோ இருந்த ஒரு துவைத்த சட்டையைப் போட்டுக்கொண்டு கோதண்டத்துடன் வந்து சேர்ந்து விட்டேன். வயசுக்கு வந்த பெண்ணின் அம்மா நம்ம தில்லை.

பெரிய மண்டபம். மொத்த மக்களும் செல்வ செழிப்புடன் இருப்பவர்கள் என்பது புத்தியில் உறைத்துக் கொண்டே இருந்தது. பணம் தண்ணீராக ஓடுவது பற்றி சொல்லுவார்களே, அதை இப்போதுதான் பார்க்கிறேன். கூட்டத்தில் முன்னேற முடியாமல் பிதுங்கிக் கொண்டே குடிக்கிற இடத்துக்கு போக போராட்டம் செய்து சோர்ந்து விட்டேன். பாவிப்பயல், கோதண்டம் விட்டுவிட்டு சென்று விட்டான். மூட்டுவலி நான் இருக்கிறேன் என்று நினைவுபடுத்தியது. எங்கேயாவது உட்கார வேண்டுமே?  சுவரில் சாய வேறு பக்கம் நகர்ந்தேன். கொஞ்சம் சென்றதும் நாற்காலிகள் இருந்தன. பெரியசாமி இன்ன தொழில் தான் செய்கிறான் என்றில்லை. பத்து பர்னிச்சர் கடைகளாவது இருக்கும் என்றார்கள். மற்றும் ஹார்ட்வேர்ஸ், பார்கள். போலீஸ் அதிகாரிகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு போதை மருந்து வியாபாரம் சக்கை போடு போடுகிறது என்று கிசுகிசுக்கிறார்கள். அதிலிருந்து தான் இவ்வளவு மொசைக்கு, வேறு எப்படி? பத்து அய்யருமார்கள் சூழ்ந்து அந்தப் பெண்ணை மந்திரம் சொல்ல வைத்து திணறடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு தாம்பாளத் தட்டை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு புஷ்பம் கொடுத்தவாறு வந்து கொண்டிருந்தாள் தில்லை. என்னிடம் வந்து தான் ஆக வேண்டும். நான் இப்போது எழுந்து நகர்ந்து சென்றாக வேண்டுமே?

அவள் என்னிடம் வந்ததும்  ”  என்னைத் தெரியுமா? ” என்றேன்.

” யாரு? “

என்ன சொல்லுவது என்பது பிடிபடவில்லை. பேச்சு வராது என்பது போல தோன்றியதால் நீங்க போங்க என்பது போல சைகை செய்தேன்.

அவள் கொஞ்சம் நகர்ந்தாள். திரும்பினாள். என் அருகே அமர்ந்து இருந்தவர்களை அதட்டி எழுப்பி வேறு எங்கோ சென்று உட்கார சொன்னாள். பக்கத்தில் உட்கார்ந்தாள். என்னையே பார்த்தாள்.

”  தெரியுதுப்பா எனக்கு. ஐ லவ் யு சொன்னியே, நீ தானே ? “

ஆமென்று தலையசைப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”  சௌக்கியமா?  “

”  ஆங் – ஒரு கொறச்சலும் இல்ல. பாத்தியா? “

” ம் “

”  அப்ப எனக்கு பத்து பேராச்சும் ரெகுலர் கஸ்டமர் இருந்தாங்க. அதில ஒருத்தரா இருந்தவரு தான் என் புருஷன். கல்யாணம் பண்ணிக்லாமான்னு கேட்டாரா, அப்ப எதுக்கோ சரி னு  பட்டுது. “

நான் அவளிடம் அந்த அழகு இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். இல்லை. கண்டிப்பாக இல்லை. ஆனால் முன்பு ஒரு கணம் நினைத்து விட்ட மாதிரி கிழவியெல்லாம் கிடையாது.

”  அப்ப சும்மா பிக் பாக்கெட்டு தான் அடிச்சிக்கிட்டு இருந்தாரு. சொல்லிச் சொல்லி பல தொழிலையும் செய்ய வெச்சு நான் தான் மேல கொண்டாந்தேன், ஆமா நீ என்னப்பா பண்றே ?  “

அதற்குள் யாரோ அவளைக் கூப்பிட்டார்கள். அவள் எழுந்து போனாள். நான் சிந்தனையே இல்லாமல் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு திடுக்கிடல் ஒன்று வந்து எழுந்து எனது வயதை மீறின ஆவேசத்துடன் பாட்டில்கள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். முதலில் பிராந்தி இரண்டு பெக் போட்டேன். விதவிதமாக குடிக்க தோன்றியது. அப்புறம் விஸ்கி.  அப்புறம் ஓட்கா. தாகம் போல வரும்போதெல்லாம் கையில் கிடைத்த பியர் பாட்டில்களை கவிழ்த்துக் கொண்டேன். உன் வாழ்க்கை எப்படி இருந்தது, நீ எப்படி குப்பைத் தொட்டிகளில் எச்சில் தின்று பிழைத்துக் கொண்டிருந்தாய். நான் இதை இந்த ஊர் முழுக்க சொல்லுவேன். அப்படி சொல்ல நான் வாய் திறக்கக் கூடாது என்றால் நீ எனக்கு எவ்வளவு பணம் தருவாய்?                       

நான் ஆங்காரத்துடன், ஒரே நேரத்தில் பெருகுகிற லட்சம் கோபங்களுடன் கண்களை அடைத்துக் கொண்டு, மேலே வந்து இடிக்கிறவர்களை எல்லாம் தள்ளி விட்டுக் கொண்டு படிக்கட்டுகளில் கூட வழுக்கிக் கொண்டு இறங்கினேன். எங்கோ தடுக்கினேன். எங்கோ விழுந்தேன். எங்கோ ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். நான் பாரதியார் டா என்று கோதண்டத்திடம் கூச்சலிட்டேன்.

தேவடியாளுங்க எல்லாம் எப்பிடி வாழறாளுங்க பாத்தியா. வழக்கம் போல தூங்கி எழுந்தது அதே கடைத்தெருவில் தான். ஒத்தா, எப்ப ராத்திரியெல்லாம் மகாராஜா மாதிரி குடிக்கிறோமோ மறுநாள் காத்தால குடிக்கறதுக்கு சிங்கிள் டீ கெடைக்காது. எலும்பை முறிக்கிற வலியை மென்று முழுங்கிக் கொண்டு மெதுவாக நடந்தேன். முதலாளி வரவில்லை போல, கோதண்டம் தான் ஷெட்டை திறந்து கொண்டிருந்தான்.

” டீ  வாங்கிக் குடுறா “

” அப்டி உக்காரு, ஒரு விஷயம் சொல்றேன் !  “

” நீ  இப்ப வாங்கித் தருவியா, மாட்டியா ? “

கோதண்டம் என்னை அறைவது போல வந்தான். அறையவில்லை. வண்டியை எடுத்து என்னையும் உட்கார வைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு தான் போனான். எனது மனைவி அந்தப்பையை கொண்டு வந்தாள். தில்லை கோதண்டத்திடம் கொடுத்த பணம். சொன்னால் யாராலும் நம்ப முடியாது. மகளின் மூன்று வருட கட்டணத்தை மொத்தமாகக் கட்டினோம். அன்று மதியம் வீட்டில் ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டேன். இரவு பக்கத்தில் படுக்க சொன்னாள். கட்டியணைத்துக் கொண்டு அவளை அறிந்தவாறு இருந்த பிறகு நான் ஓவென்று அழுதேன்,  சிறிதும் ஆண்மை எழுச்சி கொள்ளவில்லை. அப்போதே இனிமேல் வீட்டில் படுப்பதில்லை என்றும், கடைதெருவில் படுக்கும்போது குடிக்காமல் தூங்குவதில்லை என்றும் சபதம் செய்து கொண்டேன்.

குடிப்பதற்கு கனடாவில் இருக்கிற தங்கை காசு அனுப்புவாள். குடித்துக் குடித்து சீக்கிரமாக உன்னை முடித்துக் கொள் என்று சொல்லியிருக்கிறாள், நானும் சரியென்றிருக்கிறேன். பணம் அப்படி எப்போதேனும் வராதபோது ரொம்ப முட்டினால் தில்லை வீட்டுக்கே நேரடியாக சென்று கூழை கும்பிடு போட்டு விடுவது தான்.

இப்போதும் ஆயிரம் ரூபாய் கொடுத்தாள்.

வரட்டுமா என்று விடைபெறப் போன போதுதான் இந்தக் கதையை முடிக்கப் போகிற அந்தக் கேள்வியைக் அவள் கேட்டாள். ” அப்போ நான் உன்ன ஐநூறு ரூபா கேட்டேனே, நீ என்ன தப்பா நெனைச்சுக்கல தானே ?

********            

மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் வெளியாகியுள்ளன. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

RELATED ARTICLES

7 COMMENTS

  1. கதையாசிரியர் சொல்வதுபோல் இது ஒரு ஐ லவ் யு கதைதான்..ஆனால் வெகு நிச்சயமாக இது வெறும் ஒரு ஐ லவ் யூ கதை மட்டுமே கிடையாது என்பது எனது அபிப்பிராயம்..
    கதையாசிரியர் அடிக்கடி சொல்லும் காயிதம் பொறுக்கி கலைஞர்களில் ஒருவன்தான் இக்கதையின் நாயகன்.. அவர்கள் எப்போதுமே இருக்கிறார்கள்..நம்மிடையே தான் இருக்கிறார்கள் ..அதனால் தான் என்னவோ அவனுக்கு அவர் பெயர் ஏதும் சூட்டவில்லை.. நாமே ஒரு பெயரை அவன் தில்லை நாயகிக்கு சாந்தி என புனைப்பெயரிட்டது போல ரவி, பாலு, வினோத் என சூட்டிக் கொள்ளலாம்..
    ‘என்னவெல்லாம் நடந்தது என்று கதை சொல்லப் போனால் அதில் ஒன்றுமே இல்லை ‘என்கிற வரிகளை கொண்ட இந்த சிறுகதை எப்படி வெறும் ஒரு ஐ லவ் யூ கதையாக இருக்க முடியும்.. சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பது தானே வாழ்க்கை.. ஒரு வாழ்க்கையை கூறிவிட முடியுமா எளிதில் ?ஆனால் அதைத்தானே எழுத்தாளர்கள் சொல்ல முயன்று கொண்டே இருக்கிறார்கள்.. அப்படி எம். கே.மணி அவர்கள் ஒரு 20 வருட வாழ்க்கையை அனாயசமாக அவனையும், தில்லையையும்,கோதண்டத்தையும் வைத்துக்கொண்டு நமக்கு சொல்லி செல்கிறார்.. இந்த இருபது வருடத்தில் காலம் இவர்களுக்கு புரட்டிப்போட்டு தந்த மாற்றங்கள் வெகு சிறப்பாக இந்த கதையில் வந்திருக்கிறது.. தான் பாரதி என நினைத்துக் கொள்ளும் அந்தக் கவிஞன் கிட்டத்தட்ட உருப்படாமல் ஒரே விதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. தில்லை சாந்தியாக அவனுக்கு மட்டுமல்ல பலருக்கும் தன்னை பாவித்துக் கொண்டு இரவுநேர ஆஸ்பத்திரியில் ஆயாவாக வேலை செய்து கொண்டும், மசாஜ் பார்லரில் டியூட்டிக்கு சென்றும் ,பின்பு ஒரு கஸ்டமரை கட்டிக்கொண்டு முற்றிலுமாக மாறி இருக்கிறாள்.. ஆனால் பிழைப்புக்காக கஷ்டப்பட்டும் அவளது வாழ்க்கைக்காக தன்னை adapt செய்துகொண்டு சமூக அந்தஸ்து பெற்றுவிட்ட ஒரு கிழப்பருவத்தில் அவளை நம் முன் நிறுத்தி.. அவள் மீது உண்மையில் இரக்கத்தையும்,மரியாதையையும் வாழ்வு குறித்து ஒரு புரிதலையும் கதையாசிரியர் நம்மிடையே ஏற்படுத்தி விடுகிறார்..அவளுக்கு அவன் மீது ஒரு கனிவு தான் இருந்திருக்கிறது.. அவனுக்கு அப்படி நிச்சயமாக சொல்ல முடியாது..
    சரசரவென ஓடும் ஒரு மொழியை தனது எழுத்தில் புகுத்திக் கொண்டு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் இதன் எழுத்தாளர் .. ஏனென்றால் நிறைய வரிகளை நான் உதாரணமாக எடுத்துக் காண்பித்தால் அவர் எழுதிய சிறுகதையின் அளவைவிட மிக நீண்டதாக மாறிவிடும்..
    எனக்கு அந்த ஏழு 15க்கு வருகிற அந்த பஸ் ஸ்டாண்ட்டையும், நகரத்தின் மையத்தை விட்டு விலகி உள்ளே செல்கின்ற அந்தச் சேரியையும்..பெரிய கண்களும், தடித்த உதடுகளும், பாதங்களையும் கொண்ட சாந்தியையும், அவனை ஆட்டோவில் இறக்கி விடும் போது ஒரு ஹெல்ப் கேட்கும்போது .. உடனடியாக அன்றுடன் அவளைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்ட அவனையும், அவனது ஜிவிதத்திற்கு உதவி செய்யும் சக குடிகாரன் கோதண்டத்தையும், முந்திரி மந்திரிகளை தனது இல்ல விழாவிற்கு அழைக்கும் அளவிற்கு உயர்ந்த திடீர் தொழிலதிபரான பூமாலையும் மிக அருகாமையில் பூதக் கண்ணாடியில் பார்த்தது போன்ற ஒரு.. ஒரு உணர்வு..
    சரியாக சொல்லத் தெரியாத ஏதோ ஒரு துயரை இதை வாசிக்கும்போது அடைந்தேன்.. ஹனிபன் டேஸ்ட் உடைய ஒரு காதல் கதை அல்ல இது. காலம்.. கஷ்டம் ..பிழைப்பு.. என அதற்குரிய துவர்ப்பும் அதற்குரிய சிறுசிறு இனிப்பும் கொண்ட ஒரு ஒரு வோட்காவினுடயை அல்லது ஒரு நெல்லிக்காய் பானத்தைப்போலத் தான் இதன் சுவை என் நாவிற்கு கிட்டியது.. ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் “அற்புதம்”.
    கதை ஆசிரியருக்கு எனது அன்பும்.. மரியாதையும்…,
    ஆல் எஞ்சாய் ..ஃபுல் எஞ்சாய்.. சியர்ஸ்.. சியர்ஸ்..
    முரளி திருஞானம்.

  2. Kavi short story,. Happens in 90’s ends in this era
    Very nicely connected the time lap transition ,
    Mani sir coveys with small words ,. It is happening between practicality and unpracticality,
    Very good story impressed Mani sir…..

  3. வாழ்க்கை பல விநோதங்களை நடத்திக்காட்டுகிறது.
    பெரும்பாலோருக்கு, அமையும் வாழ்க்கை மட்டுமே நிதர்சனமானது என்று ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இயல்பாகவே இருக்கிறது. மற்றவர்கள் எனது வாழ்க்கை இதுவல்ல என்று எப்பொழுதும் ஓர் தேடல்
    மனநிலையிலேயே வாழ்கிறார்கள். வாழ்கை வாழ்வதற்கே….சமரசங்கள் செய்தபடி.

  4. ஒரு சிறு தொகையை கேட்டதும்.. நான் மையல் கொண்டு கிடந்த எத்தனை பெண்களை.. முற்றாக முகம் தவிர்த்திருப்பேன்.. என் வாழ்நாளில்?

    காசு என்றதும் அவள் என் மீது துளியும் வாஞ்சை கொள்ளவில்லை அத்தனையும் வேசித்தனம் என முடிவுகட்டும் நான் அந்த நொடியிலிருந்து அவளை சல்லிசாக நினைத்து ஒதுக்குவது மட்டும் கயமைத்தனம் இல்லையா.. என்பதை எவ்வளவு கவித்துவமாக கேட்கிறது ‘கவி’.

    காலம் நம் பிடியிலிருந்து எவ்வளவு எளிதாக நழுவிச்செல்கிறது என்பதையும் அதை கைப்பற்றும் உத்தி என்பது எல்லோரும் கைக்கொள்ளும் வித்தையல்ல என்பதையும் சுய எள்ளலோடும் அவல நகைச்சுவையோடும் விவரித்து செல்லும் போக்கில்..
    கால மாற்றங்களும் காட்சி மாற்றங்களும் மிக அற்புதமாக கூடி வந்திருக்கிறது கதையில்.

    மனவுலக சஞ்சாரமாக விரிந்து செல்லும் கதையில்..எதை விரும்பினோமோ அதையே வெறுப்பதும் எதை மறுக்கிறோமோ அதையே ஏற்பதும் எதன்பொருட்டாவது வாழ்க்கையில் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது என்பதை சொல்லிச்செல்வது கதையின் அற்புதங்களில் மற்றொன்று.

    கவிதைகளுக்கே உரிய சொற்சிக்கனத்தை மிகத்துல்லியமாக கைக் கொண்ட இக்கதை ஒரு கவிஞனை பற்றியதாக இருப்பதும் அதன் தலைப்பே கவி என்பதாக இருப்பதும் ஒரு சாதாரண நிகழ்வு தானா என்கின்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

    ஒருவேளை ஜி.நா மட்டும் உயிரோடு இருந்திருந்தால்..’கவி’யை படித்து விட்டு பலரும்.. கோஸ்ட்ரைட்டர் பட்டம் தந்திருக்கக்கூடும்.

    ஆனால் ஜி.நா ‘கவி’யை படித்திருந்தால் நிச்சயம் ஒரு இரவையாவது மணியோடு செலவிட்டிருப்பார்.

    சரி.. அதனால் என்ன..

    வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் என்பார்களே.. அதைப்போல மணி மிகவும் விரும்பும் எழுத்தாளர் ஜெயமோகனே.. இப்போது பாராட்டி…’ஜி.நாகராஜன் பற்றிய பேச்சில்..’ என வரிசைப் படுத்தியும் விட்டார்.

    சினிமா வேலைகளோடு.. சிறுகதை வேலைகளையும் மணி துரிதப்படுத்த வேண்டிய தருணம் வந்திருப்பதாகவே.. தோணுகிறது.

    தொடர்ந்து இயங்குங்கள் என்ற வேண்டுகோளோடு… வாழ்த்துக்கள்.. மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular