கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

ஈக்வலைஸர்
*
காத்திருப்பை நிலவறை வரை
வெட்டிக்கொண்டே
போகிறேன்
பின்னும் மட்கிய நினைவு தப்பலில்
பிசுபிசுக்கிறது அர்த்தமின்மை

எப்போதுமே
நல்சுவாசம் வேண்டவில்லை

போதாமைகளை
எழுதி தீர்த்திட கையாண்ட முனைப்புகள் யாவும்
நோக்கங்களையே ரத்து செய்தவண்ணம்
குறைந்து ஒளிர்கின்றன

உங்களிடம் தருவதற்கோ பெறுவதற்கோ
இடம் இருக்கிறதா

அவை
தாள்கள்
தாள்கள்
மேலும் மேலும் தாள்கள்
புதிய வடிவத்தினை கொண்டிராத
தாள்கள்

இட வலம் என திசை நான்கிலும்
கீழும் மேலும் பக்கவாட்டு மற்றும்
எண்கோணங்களிலும்
சதா
டொட்ட் டட் டுட் டொட் டட் டட்
டட டட் டுட் டட் டடடட்

சீரான அலைவரிசை ஒழுங்கின்மையை
தப்பவிடாத
மென் தட்டச்சு சப்தத்தில் இருந்து தப்பிவிடவே
வெட்டியெடுத்து வீசிக்கொண்டிருக்கிறேன்
காத்திருப்பை

தனிமையை

மற்றும்
நீங்கள் தரவிருக்கிற அவகாசத்தையும்

***

முடிவிலியின் நீலப்பிரிகை
*
இப்போதும் வந்திருக்கிறாய்
என்னை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாய்
உடைகளை களைந்துவிட்டு சிகரெட் கேட்கிறாய்
பால்கனியின் சில்லிட்ட கம்பியில் உடலைத் தேய்க்கிறாய்

குளிர்ந்து உறைகிறது எனது காது மடல்
இம்சிக்கிறாய்

படியவில்லை உனது அடம்
உன்னைக் கொல்லும் கொலைக்கருவியைத் தேடுகிறேன்

அதனையே
உனது உடலுக்குள் இருந்து உருவி எடுக்கிறாய்
மின்னுகிறாய் கூர்மையாய்

மெல்ல என்னருகே வந்து
எனது இதயத்தில் செலுத்துகிறாய்
கடைசி சுவாசம் என நம்பி வாயைத் திறக்கிறேன்
முத்தமிடுகிறாய்

என்னிலிருந்து பிரிந்து நான் போய்க்கொண்டிருக்கிறேன்

எனது இருக்கையில் உட்கார்ந்தபடி
நான் மாயமாவதை
ஆவலோடு வேடிக்கைப் பார்க்கிறாய்

நாளையும் வருவேன்
உன்னை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாய்
நான் உடைகளை களைந்து விட்டேன்
அப்போதே

***


ஒரு முடிவுக்கு வரலாம்
*
ஏற்றுக்கொள்ளத்தக்க முட்டாள்தனங்களை
பரிசளிக்கும் உன்மத்தத்தை
சிறு பெட்டியில் அடைத்து
எனது மேஜை மீது வைத்திருக்கிறேன்

இந்த அறையை விட்டு
நீங்கும்போது
எடுத்துப் போய்விடுங்கள்

உங்கள் அனுபவம் உங்களுக்கானது
உங்கள் சந்தேகங்கள் உங்களுக்கானது
உங்கள் வாக்குறுதிகள் உங்களுக்கானது
உங்கள் தப்பிதங்கள் உங்களுக்கானது

மேற்கொண்டு
ஓர் உரையாடலை வீணாக்கும் பொருட்டு
என் கதவின் காலிங் பெல்லை
அழுத்தும்
பாசாங்குகளோடு

இனி
உங்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்

***


சுமை
*
புராதன இதயத்தின் அறைச்சுவர் மீது
கால் வைத்து
எக்கி
நயமாக உருவி எடுக்கிறேன்
ஒரு வார்த்தையை

மன உச்சியிலிருந்து

உங்கள் பேரம் படியும்வரை
அடிவாரம் நோக்கி
உருண்டு வர

கால அவகாசம் வேண்டும்

அதுவரை
கழுதைகளை மேய்ச்சலுக்கு விரட்டிவிடுங்கள்

***


முன்பொரு பாலையில் செத்துக்கிடந்த நெய்தல்
*
கானல் நீரின் விளிம்பில் துள்ளுகிறது
வெளிச்ச மீன்

செதில்களை இறைஞ்சும் பொழுதொன்றை
துக்கத்தில் மிதக்க விடுகிறாய்

ஒரு பெக் மதுவில் குமிழ்
உடைக்கிறது
ரசம் உய்ய
பெருமௌனத்தை

கபடுகளின் அடுக்குத் தொடரில் கவனமற்று
சரிந்து இறங்குகிறேன்

நீர்மையை மனங்கொண்டு
துடுப்பேதும் இல்லாமலே நீளுகிறது
இப்போதும்

ஒரு
பழைய விரல்

***


கவிதைக்காரன் இளங்கோ : கணையாழியின் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியரின் படைப்புகள்: பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன.. தொடர்புக்கு- [email protected] .


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here