Monday, September 9, 2024
Homesliderகல்யாண ராசி

கல்யாண ராசி

ரமேஷ் ரக்சன்

“செத்துரட்டா..”

என்று போகும் அளவிற்கு சின்னதுரை சொன்னதும் தான் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தெடுத்த ஓட்டுப்பழத்தை இடைமறித்தேன். எனக்கும் நிறைய கேள்விகள் இருந்தது. எனக்கும் சேர்த்துதான் அவனிடம் ஓட்டுப்பழம் கேட்டான். டிரைவரும் ஸ்டெல்லாவும் பேசிக்கொள்ளவோ, பேசி காதலை வளர்க்கவோ இருவரிடமும் செல்போன் கிடையாது. ஸ்டெல்லா வேலை செய்யும் இடத்திற்கு சென்றும் அவனால் பார்க்க முடியாது. வேலை முடிந்து ஊருக்குள் வந்து விட்டால் சுத்தம். அந்த வகையில் டிரைவர் ஒன்சைடாக காதலிக்கிறான் என்று சின்னதுரைக்கும் சேர்த்து நான் சமாதானம் அடைந்திருந்தேன். மாலையில் அவள் அதே வேனில் வருவதில்லை என்பது எங்களுக்கு கூடுதல் நிம்மதியாக இருந்தது. டிரைவர் காலேஜ்-க்கு பெண்களை ஏற்ற சென்றுவிடுவதாக சொன்னது நம்பும் தகவல்தான்.

ஸ்டெல்லாவின் ஊரில் இருந்து நாங்கள் கிளம்பி, இருவரும் வேன் வரும்வரை நிகழ்த்தி வந்த வாக்குவாதத்தை வைத்து வீட்டிற்கு போகிற வழியிலேயே அவளுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வோம் என்று முடிவெடுத்திருந்த எண்ணத்தை தள்ளிப்போடத் தோன்றியது. ஆனால் மூவருக்குமே வாய் திறக்க விருப்பமில்லை. வேனில் எறிக்கொண்டோம்.

சின்னதுரையின் குதிரை மனது இப்போது எங்கு மேய்ந்து கொண்டிருக்கும்? எங்கள் ஊருக்கான துட்டை ‘கிளி’யிடம் கொடுத்துவிட்டு பேசாமல் இருந்தோம். நல்லநேரம் வேனில் பாட்டு எதுவும் ஓடவில்லை என்று நினைத்துக் கொண்டேன். வேனில் இருந்த நான்கு கிலோ மீட்டரும், நடுவில் எந்த ஊரிலும் ஆள் இறக்கம் இல்லாமல் எங்கள் ஊரில் வேன் நின்றது. ஆளுக்கொரு திசையில் மனம் போயிருந்தாலும் கால்கள், பொருத்தம் பார்க்க தெற்கு நோக்கியே நடந்தன.

ஜோசியக்காரரிடம் இளம்பெண் ஒருத்தியின் தகவலை மட்டும் சொல்லி கட்டம் பார்த்து எப்படி பொருத்தம் பார்க்கச்சொல்லி கேட்பது? சின்னதுரைக்கு எங்கிருந்தோ குற்றவுணர்ச்சி மேலெழுந்தது. நொண்டியார் கடையை சென்றடையும் முன் மூன்றுமுறை வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்றும் இரண்டுமுறை டிரைவரைக் கொன்று விடுவதாகவும் சொல்லிக் கொண்டே நடந்தான். “பேசாம அவளுக்கு வசியம் வச்சிடுவமா” என்றான் ஓட்டுப்பழம்.

“அவா ஒத்துக்கிடலனாலும் பரவால்ல நான் அவள ஒன் சைடா லவ் பண்ணிட்டு போறேன். நீ ஒன் வேலப் ..ண்டைய மட்டும் பாரு”

ஜோசியம் பார்க்க உள்ளே நுழையும் முன், பழக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் நிற காயின் பாக்ஸ் போனில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு சின்னதுரை எங்களைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு ஸ்டெல்லா வீட்டு லேண்ட்-லைன் எண் தெரியாது. கண்கலங்கி சிவந்து போயிருந்தது. கண் தட்டாமல் எங்களையே பார்த்து நின்றான். அவன் விரும்பி வரவைக்கப்பட்ட அழுகை. காதலின் வீரியத்தைக் காட்டுவதற்க்காக வெட்கத்தை விட்டு எடுத்த முடிவு. “குட்டி” அடிவாங்கும் போது பொங்கியதைவிட அதிகமாக பொங்கியது. “கிறுக்குப் ..ண்ட கொண்டா” ஓட்டுப்பழம் ரிஸீவரை பிடுங்கி வைத்தான். கண்ணாடி நிற நாக்கை விரலால் உள்ளே தள்ளி வந்து விழுந்த ஒரு ரூபாயை ஓட்டுப்பழம் எடுத்தான். எடுத்த கையோடு,

“இப்ப என்ன அவன கொன்னுருவமா?”

***

இது நான் அவனுக்கு எழுதிக் கொடுக்கும் நாலாவது காதல் கடிதம். சின்னதுரைக்கு ஒரு ராசி உண்டு. எனக்குத் தெரிந்த வரைக்கும் அவனுக்கு ஒருபக்க காதல் என்ற ஒன்றே கிடையாது. இவன் காதலைச் சொல்லி அந்தப் பெண்ணும் காதலை ஏற்றுக் கொண்டிருப்பாள். அதற்குச் சான்றாக அந்தப் பெண்ணிடமிருந்து, இன்னொரு நாள் காதலை ஏற்றுக் கொண்டதாக பதில் கடிதமும் வரும் அதோடு சரி, காதல் முடிவுக்கு வந்துவிடும். இவன் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு பதில் கடிதம் எழுதுவான். எழுதி கொடுத்த கடிதத்தை கொடுத்தும் விடுவான். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஒரே வாரத்தில் பணியிடத்தில் சொல்லாமல் கொள்ளாமல் அந்தப் பெண் ஒருநாள் விடுப்பு எடுப்பாள். அன்று சாயங்காலமே பயமாக இருப்பதாக புலம்புவான். சொல்லி வைத்தது போலவே அந்தப் பெண்ணை ஒருவன் மாப்பிள்ளை பார்க்க வந்திருப்பான், பார்த்தவனும் வீட்டிற்குப்போய் பதில் சொல்கிறேன் என்கிற சம்பிரதாயம் எல்லாம் இல்லாமல் பெண் வீட்டில் வைத்தே சரி என்றிருப்பான். நகை குறைவாக கேட்கிறார்களே என்று பெண்ணின் அம்மாவும் சந்தோஷப்பட்டிருக்கும். அந்தப்பெண்ணும் மறுபேச்சின்றி ஒத்துக்கொள்வாள். மறுநாள் பணியிடத்திற்கு வந்து மாப்பிள்ளைப் பார்த்து விட்டார்கள் ‘இந்த’ மாதத்தில் “எனக்கும் அவருக்கும்” கல்யாணம் என்று ஒரு மாதத்தை சொல்லுவாள். சின்னதுரையிடமும் கண் கசக்கிவிட்டுச் செல்வாள். இதுவரை அவனுடைய ஏழு காதலுக்கு இப்படி நடந்திருக்கிறது.

மறுபடி இரண்டு மாதம் போல சும்மா இருப்பான். இதயம் கணப்பட்டுப்போன அந்த நாட்களில் “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தை டிவிடி தேயத்தேய பார்த்து கண்ணீர் சிந்துவான். சிடி கடைக்குச் சென்று இன்னொரு காபி வாங்கி வருவான். இது, தொடரும்…

புதிது புதிதாக பெண்கள் வேலைக்குச் சேர்ந்து கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு பெண்ணை பிடித்து விடும். மதிய சாப்பாட்டு நேரத்தில் பேசுவான், எடுத்த எடுப்பில் பலநாள் பழக்கம் போல உரிமை எடுத்துக் கொள்வான்.

“ஏட்ட, என்ன வேலைக்கு புதுசா? இன்னைக்கு தான் பாக்கேன்? – ஆமாணே.

நா ஒனக்கு அண்ணனாட்ட? எந்தூரு

அப்பா, கூடப்பிறந்தவர்கள் பற்றி எல்லாமே பேச ஆரம்பித்த ஒரேநாளில் தெரிந்து கொள்வான். ‘அவள்’ பற்றிய கதைகளை அவள் குணாதிசயங்களை, அவள் செய்கைகளை, அவள் ஜாதியை என, அவன் வேலை முடிந்து வந்ததும் தெருவின் ஓரத்தில் அடுக்கி வைத்திருக்கும் மூங்கில் பந்தல் கம்பில் அமர்ந்து பேசும்போது எங்களிடம் நீட்டி முழக்குவான். பிறகு ஒருநாள் “இன்னைக்கு ராத்திரி உங்ககூட ‘தீ’ போட சும்மா வாராம்ல என்பான்” எனக்கு மட்டும் விறகு சுமக்க உதவி செய்வான். பன்னிரெண்டு மணிவரை கண் விழித்திருப்பதாக உறுதியளிப்பான். அதன்படியே நடந்தும் கொள்வான். இரவு எட்டுமணி வாக்கில் எரிந்தவரை அடுப்பின் வாய் நிரம்ப விறகு ஏத்திவிட்டு நாங்கள் கிளம்புகையில் எங்களோடே வருவான். வந்து அவரவர் வீட்டில் சாப்பிட்டுப் போனவுடன் என்னிடம் பேசிப்பேசி ஒரு கடிதம் எழுதி வாங்கிவிட்டு தூங்கி விடுவான். காலையில் தீ போட்டு செங்கல் சூளை ஓனர் வந்து கல் பழுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ‘சரி அடைங்க’ என்பார். அடுப்பை ஓடு வைத்து அடைத்து மண்கொண்டு பூசி விட்டு அவனை எழுப்புவோம். கடிதத்தோடு வேலைக்குத் தயார் ஆவான்.

ஸ்டெல்லா ஊரிலிருந்து வேலைக்கு வரும் ஒருவனை சின்னதுரைக்கு தெரிந்திருந்தது. நான்கு கிலோ மீட்டர் தூரம். தினமும் சைக்கிளில் வந்து போவான். நாங்கள் ஊருக்குள் போகும்போது தெரு நல்லியில் ஸ்டெல்லா சில்வர் குடத்தை கழுவிக் கொண்டிருந்தாள். குடத்தினுள் கேட்கும் சலங்கைச் சத்தம் சின்னதுரையை ரொம்பவே சந்தோஷமாக மாற்றியிருந்தது. இன்னொரு ஊருக்கு வந்திருக்கிறோம் என்ற பயமே இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நடையின் வேகம் குறைந்திருந்தது. வேண்டுமென்றே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு வந்தான். ஷால் இல்லாத ஆமை ஓடு டிசைன் போல ஏதோ ஒரு நைட்டி அணிந்திருந்தாள். முன் பக்கம் ஜிப் வைத்திருந்தது. வெள்ளை நிற ஜிப் இழுவையைப் பார்த்துவிட்டு எங்களைப் பார்த்தான். நாங்கள் காணாதது போல நடந்து கொண்டோம். மூன்று ஜோடி கண்களுக்கும் ஒரே பார்வை.

மழைக்கு பறிக்கப்படாமல் அதன் மூட்டிலேயே உதிர்ந்து கிடந்தது பவழமல்லி பூ. மல்லியும் பிச்சி செடியுமே எங்கள் எல்லோர் வீட்டுமுன் நிற்க, அவள் வீட்டின் முன் பவழமல்லி நன்கு மரம் போல வளர்ந்து நின்றது. எங்கள் மூவருக்குமே அது “என்ன பூ-ல” என்பதுதான் கேள்வியாக இருந்தது. அதையொட்டியே வானுயர அசோக மரமும் நின்றிருந்தது. மஞ்சள் ரோஜா ஒன்று மலர்ந்திருந்தது. மதில் சுவருக்கு வெளியே செடி வைக்க இடம் ஒதுக்கி, ஒற்றைக்கல் செங்கல் கட்டில் ஒன்றரையடி கட்டப்பட்டிருந்தது. “கலர் பெயிண்ட் எல்லாம் அடிச்சிருக்கு; இவா எதுக்குல வளையல் கடைக்கு வேலைக்கு போறா?” – ஓட்டுப்பழம் கேட்டான்.

“நீ ஒம் சோலிய மட்டும் பாரு.”

***

வேனிற்குள் ஏறும்போதே கிளியிடம் (வேன் கிளினர்) நான்கு ரூபாய் கொடுத்து விடுவாள். எல்லா நாளும் சில்லறையை வேறு மாற்றி வைத்திருப்பாள். கடைசி இருக்கையை பார்த்தபடியேதான் ஏறுவாள். சின்னதுரை அதற்கு முந்தைய இருக்கையில் அவள் துப்பட்டா குறைந்தபட்சம் தோளிலாவது உரசி செல்லும்படி ஓரமாய் அமர்ந்திருப்பான்.

தினந்தோறும் பூ வைத்து பொட்டு வைக்கும் பழக்கம் அவளிடம் இருந்தது. அவளுக்கு அவள் ஊரில் “பான்ஸ்” என்ற பட்டப்பெயரும் இருந்தது. அவள் ஆர்.சி கிறிஸ்டியன். அவள் பெயர் “ஸ்டெல்லா” என்று தெரிந்த நாளில் வேனின் இரண்டாவது படிக்கட்டில் காதல் லேசாக நழுவியது. நல்லநேரம் காதலுக்கு அடிகிடி எதுவும் படவில்லை.

சின்னதுரை துணி தைக்கும் கம்பெனியில் அயர்ன் மேன். மதிய உணவு வேளையில் கேண்டினில் சாப்பிடக்கூட மனம் ஒட்டாமல் படிக்கட்டில் நழுவிய அன்றே வேப்பமரத்தையொட்டி இருக்கும் வளையல் கடைக்கு வந்து அவளைப் பார்த்தான். அனுதினமும் வேனில் ஏறும்போது கண்ணில் படாதவனை முதன்முறையாக ஸ்டெல்லா எதிர்கொண்டாள். வியர்வை வழிந்த அவன் கழுத்து, அவளை நோக்கி சிரிக்க விடவில்லை. கடைக்குள் செல்லாமலே திரும்பிவிட்டான்.

ஸ்டெல்லாவிடம் முகத்தை பதிவுசெய்த மறுநாளே சின்னதுரைக்கு காதலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

வழக்கமான “இந்தாபிடி” வகையில் லெட்டரை திணிக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம். மிகத்தீவிரமான யோசனைக்குப் பிறகு கிட்கேட் சாக்லேட் வாங்கிவிட்டு தெருவுக்குள் திரும்பினோம். பேசி காதலை வளர்க்கும் பொறுமை எல்லாம் இம்முறை காணாமல் போயிருந்தது. என்னுடைய கல்லூரி நோட்டிலிருந்து பேப்பரை மடித்து கிழித்தால், அதன் பிசிறு அசிங்கமாகத் தெரியுமென்று பிளேட் ஒன்றை வாங்கி (சலூன் கடையிலிருந்து எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை) நாலாபக்கமும் அடி ஸ்கேல் வைத்து கிழித்து எடுத்தோம். “இந்த புனிதப் ..ண்ட காதல் என்ன ஆவுதுன்னு நானும் பாக்கேன் என்றான் ஓட்டுப்பழம். சிகப்புக்கவர் கிழியாமல் சாக்லெட்டை விரலால் கொஞ்சம் கொஞ்சமாக முன்பக்கம் தள்ளி, உருவி எடுத்துவிட்டு ஒரு “சுமால் லவ் லெட்டர் எழுதி மடித்து சாக்லேட் மேலே வைத்து மறுபடியும் கவர் போட்டு சாக்லேட் கொடுப்பது போலவே கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். எழுத ஆரம்பிக்க தொடங்கும்போது ஒரேயொரு வரி மட்டும் போதும் என்று முடிவானது. அதையும் சின்னதுரையே சொன்னான். “டெய்லி உன் ஸால் என் மேல படுமே அது உனக்கு (ந்)யாவம் இருக்கான்னு கேட்டு அப்டியே முடி. பதினொன்னாம் கிளாஸ் பாதின்னு சொல்லிருக்கேன் கையெழுத்தும் நீயே போட்ரு. அப்பதான் படிச்சவன் போட்ட மாதிரி இருக்கும்”

“அது ஒனக்கு தெரியுமான்னு தானல கேக்கணும்? (ந்)யாவம் இருக்கான்னு கேக்குற அளவுக்கு முருகன் கோயில் பின்னாடி கெடக்க தெப்பக்குளம் படிக்கட்டுல ரெண்டு பேரும் உருண்டிய பாரு?”

ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரை நேயர் விருப்பப் பாடலை ஒளிபரப்பும் “இதயம்” சேனலுக்கு அழைத்து “மேகமாய் வந்து போகிறேன்” பாடலைப் போடச்சொல்லிக் கேட்டுக் கொண்டோம். ஊர் பெயரைக் கூட போடாமல், இன்னார் என்ற பெயர் மட்டுமே வந்து போகும் சேனலில், “அந்தோணியார் வேன் தேவதை” என்று சொன்னால் எப்படி போடுவான்? இனிமேல் போன் செய்து பாட்டே கேட்பதில்லை என்ற முடிவோடு துள்ளாத மனமும் துள்ளும் டிவிடி-ஐ டிவிடி கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் அட்டைப்பெட்டியில தேடி எடுத்தோம். பிளேயருக்குள் கிடந்த WWF என்று எழுதியிருக்கும் கேசட்டை எடுத்து கவர் போட்டு ரகசியமாக ஓலைபிறையின் மூன்றாவது அடுக்கில் பதுக்கிவிட்டு யோசிக்கத் தொடங்கியிருந்தோம்.

ஒத்தைக்கொரு மகளாகிப் போன ஸ்டெல்லாவின் பிறந்த தேதி பிறந்த வருடம் பிறந்த நேரத்திற்கு எங்கே போவது? ஓட்டுப்பழம்தான் இந்த ஐடியாவை கொடுத்தது. இதற்குப்பிறகு காதல் தோல்வியே கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டோம். ஜாதகம் பார்த்து பொருத்தம் இருந்தால் காதலைச் சொல்வோம். இல்லையென்றால் இத்தோடு காதலை கைவிடுவதென ஒட்டுப்பழம் விடாமல் தொணதொணத்துக் கொண்டிருந்தான். சின்னதுரை ஒத்துக் கொள்வதாகவே இல்லை. ஜாதகம் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் ஸ்டெல்லாவே கடைசி என்று சத்தியம் எல்லாம் செய்தான். ஸ்டெல்லா விஷயத்திலும் கல்யாண ராசி பழித்துவிட்டால் வீட்டில் பெண் பார்க்கச் சொல்லிவிடுறேன் என்றான்.

காதலின் புனிதத்தைக் காப்பாற்ற இன்றிலிருந்து, ஸ்டெல்லாவிடம் காதலைச் சொல்லி அவள் பதில் சொல்லும்வரை “மேட்டர் படம்” பார்ப்பதில்லை என்றும் மேற்படி ஏதும் நிகழ்த்தப் போவதில்லை என்றும் சபதம் எடுத்தான். கையோடு தட்டிக்குள் இருந்த கேசட்டையும் எங்களை எடுத்துப்போகச் சொன்னான். எங்களுக்கு இந்த அணுகுமுறை விசித்திரமாகவே பட்டது. “செருக்கியுள்ளைக்க லவ்வு என்னத்த எல்லாம் பேச வைக்கி பாரு” ஒட்டுப்பழம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“நொண்டியார்ட்ட பாப்போம்ல எங்க அக்காளுக்கு எங்க அம்ம அங்கதான் பாத்தா. அவரு சொன்ன மாதிரியேதான் எங்க அத்தான் அமைஞ்சாரு” – ‘ஸ்டெல்லா’விற்கு ஜாதகம் இருக்க வாய்ப்பில்லை என்றானதும், ஜாதகம் எழுத தேவையான தகவல்களை சேகரிப்பது என்று முடிவானது.

“மொதல்ல ஒனக்கு இருக்க கல்யாண ராசி எப்போ முடியும்னு கேப்போம்ல. பொறவு அவளுக்க ஜாதாகத்த நொட்டலாம். கடைசியா என்ன சொல்வாருன்னு நெனைக்கா? வாழ மரத்துக்கு தாலி கட்ட சொல்வாரு. எவன் தோப்புக்குள்ள போய் தாலி கட்டுவா நீ? அதும் மூக்கன் ஓட்ட போட்டு ஏறாத வாழ மரமா வேற இருக்கணும் பாத்துக்க.”

“நம்மூர்ல எந்த ஜோசியக்காரம்ல இப்டி சொல்லிட்டு அலைதானுவ? தூம நீ ஒங்க தாய்கூட சேந்து நாடகம் பாக்கத விடு?

சின்னதுரைக்கு முதல் காதல் போலவே உள்ளங்கை எல்லாம் வியர்த்திருந்தது. முக்கில் சாய்த்து வைத்திருந்த பாயை எடுத்துப் போட்டவன் போர்வையை விரித்து, அசையில் ஒருவழியாக சட்டையைக் கண்டுபிடித்து எடுத்தவன், கையை சாரத்தில் துடைத்து விட்டு, என்னிடம் “அயர்ன் பண்ணி தால” என்றான்.

கிடுவையை இழுத்து மறைக்காமல் பாசி ஏறிய சிமெண்ட் தொட்டியில் கிடந்த தண்ணியை வேக வேகமாக ஜட்டியோடு நின்று கோரிக்கோரி தலையில் ஊற்றினான். “ரொம்ப பயமா இருந்தா ஒரு தடவ கையடிச்சிக்க” என்றான் ஓட்டுப்பழம்.

குளித்துவிட்டு திருநீறை கையில் எடுத்தவன், கட்டியிருந்த டவலில் வேகவேகமாக துடைத்துக் கொண்டான். தரையை உரசிக்கொண்டே வரும் கதவை கொஞ்சம் மேலாக தூக்கிச் சாத்தினான். மூன்றாவது தட்டியில் யாருக்கும் தெரியாதவாறு டிவிடி-ஐ சொருகினோம். தார்ச்சாலை சூட்டையும் பொறுத்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்ட் எதிரிலிருந்த செருப்பு கடையில் லூனாரஸ் வாங்கினான் சின்னதுரை.

***

டிரைவர அண்ணன்னு கூப்ட்டான்னு தான் நெனைக்கேன்.

கேனக் … நேத்து சாயங்காலம் தான இதுவரைக்கும் அவா கொரலையே கேட்டதில்லன்னு சொன்னா நீ? சரி அதாவது போவட்டும்டா; மொதல்ல நீ நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு; நெதம் ஒரே வேன்ல அவா எதுக்கு ஏறனும்.

செத்த அறுதலி அவிய ஊர் வேன்ல அவா ஏறுதா இதுலாம் ஒரு கதையா?

சரி அத உடு. அதே டயத்துக்கு எப்படி அவன் வண்டிய கொண்டுட்டு வாரான்? அதும் கடைசி ஓரம் சீட்ட அவளுக்குன்னே எதுக்கு சும்மா போட்டுட்டு வரணும்? நம்மூருக்கு வண்டி வரும்போதே அந்த சீட் காலியாதான் வருதுன்னு நீ சொல்லுதா. ஆனா லவ்வு இல்லையாம். நம்புற மாதியால இருக்கு. அதும், அது என்ன பாட்டு? ஆங் அதே காடாத்து தான். அவன், அவிய ஊர் அம்மன் கோயிலுக்குதான வரி கொடுக்கான் பொறவு என்னப் ..ண்டைக்கு வேனுக்கு அந்தோணியார்னு ஸ்டிக்கர் ஒட்டிருக்கான்?

அது, அவளுக்க அக்கா மொவளுக்கு மொட்ட போட வேளாங்கண்ணி போவும்போது அவன் வேன்ல தொங்குத அந்த ஜெபமாலையும் ஸ்டிக்கரும் அடிச்சானாம் வேற ஒன்னும் இல்லையாம்.

அப்போ இன்னும் அவிய ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்லனு நம்புதா? ஆனா அவளுக்க எல்லாத்தையும் அவன் தெரிஞ்சி வச்சிருக்கான்? அவா சொல்லாமயா?

நான் லெட்டர் குடுக்கதான் போறேன். அவா அவன லவ் பண்ணல. இதான் நெசமா இருக்கும்.

அப்போ நொண்டியார பாக்காண்டாம்லா? நேரா வீட்டுக்கு தான போறோம்?

இப்ப என்ன? வார வண்டில வுழுந்து

செத்துரட்டா..?

***

ரமேஷ் ரக்சன் – இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் ஒரு நாவல் வெளிவந்துள்ளது. நெல்லை மாவட்டம் பனகுடியைச் சேர்ந்த இவர், தற்போது வசிப்பது ஓசுரில். ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. 🥰மிக இயல்பான நடை. எப்போதும் போல தனித்துவமான ஆரம்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular