Monday, September 9, 2024
Homesliderகலைமாமணி

கலைமாமணி

பாக்கியராஜ் கோதை

*

இன்று

“மாமா

மா.. மா…

மா ன்னா பெரியன்னு பொருள், மாநகரம் – பெரிய நகரம், மாநிலம் – பெரிய நிலப்பரப்புன்னு புரியுது, அது போல

மாமா-ன்னா மிகப்பெரியவன்னுதானே பொருள்,

அப்ப மாமான்னா எல்லாத்துக்கும் மேலானவன், பெரிய ஆளு அப்படித்தான. இந்தத் திராவிட கல்சர்ல, அதான் ‘மாமா’ முக்கிய ஆளா இருக்காங்களா” என்று தன் சொல் விளக்க ஐயத்தை, ஐயா ஆறுமுகத்திடம் கேட்டார் மெய்க்கண்டார்.

கேட்டதும் குபுக்கென வெடித்துச் சிரித்துவிட்டார் ஆறுமுகம்.

#

நேற்று..

கலைவாணர் அரங்கின் வெளியே பெரிய தொலைக்காட்சித் திரையின் முன்னே கூட்டம் அலைமோதியது. தன் விருப்பத் திரைநாயக நாயகியர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் அரங்கைத் தாண்டி அலைமோதி முண்டி அடித்தது. கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் திணறினர்.

முதல்வர் பங்கேற்றிருக்கும் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மஞ்சள் பச்சை வண்ணங்கள் ஒளிரும் மாபெரும் மேடையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தாளில் எழுதப்பட்ட செய்தியினைப் பார்த்து முதலைமைச்சர் பேசிக் கொண்டு இருக்கின்றார்.

‘’எங்கள் திராவிடப் பொன்னாடே

கலைவாழும் தென்னாடே

இயல் இசை நாடகம், அறம், பொருள், இன்பம் இயங்கும் செந்தமிழ் நாடே..

என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் கூறி இருக்கிறார்கள்”.. என்று பார்வையாளர்களைப் பார்த்தார் முதல்வர். மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் சிலர் சிலநொடிகள் கழித்து தன் கைகளைத் தட்டினர். எப்படா விருது கொடுப்பார்கள், எழுந்து சென்றுவிடலாம் எனக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்தனர் விருதாளர்களும் பார்வையாளர்களும்.

எட்டு நாள்களுக்கு முன்பு.

“நம்மவீட்டு ஹால்ல சி.எம் கையால வாங்குன போட்டோவ மாட்டித் தொங்கவிடணும். அந்த விருதுனால சுத்தி இருக்கிறவங்க நம்பளப் பாத்து எந்திரிச்சு நடுங்கணும். நாம செத்தா தேசியக் கொடி போத்தி துப்பாக்கி குண்டு தெறிக்க மண்ணுக்குள்ள பொதைக்கணும். எல்லாத்துக்கும் இந்த மாதிரி விருதுதான் ஸ்டார்ட்டிங் காமு” என்று கையை அகல ஆட்டி ஆட்டி டபுள் டக்கர் விளக்கிக் கொண்டு இருந்ததைத் தலைவலித் தைலத்தை மோந்து பார்த்தபடியே ஊமத்தம் பூ சீரியல் புகழ் நடிகை காமு கேட்டுக்கொண்டிருந்தார்.

“உனக்கு இந்த விருது மேலல்லாம் ஆச இல்லையா” என்று உரக்கக் கேட்டார் டபுள் டக்கர்.

ஏழு நாள்களுக்கு முன்பு..

“யாரு சார் அந்த ஆறுமுகம்?” என்றார் மாண்புமிகு அமைச்சரின் உதவியாளர்.

கலைமாமணி விருது பெறப்போகும் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டிய கடைசிப் பொழுதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை மூழ்கி இருந்தது. மாண்புமிகு அமைச்சரின் வருகைக்காக அதிகாரிகள் அவர் அறையில் காத்திருந்தனர்.     புகழ்பெற்ற பெரிய கதாநாயகர்களும் தமிழறியா நாயகியர்களும், நகைச்சுவை நடிகர்களும் வழக்கம் போல முதல் ஆறேழு இடங்களை நிரப்பி இருந்தனர். ஆளும் கட்சிக்கு விசுவாசியாகவும், உறுப்பினர்களாவும் இருக்கிற துணை நடிகர்கள் அடுத்தடுத்து வரிசையாக இடம் பிடித்து இருந்தனர். மற்ற மற்ற சிபாரிசு ஆட்கள் நடுவே, ஆங்காங்கு நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், சிற்பிகள், பாடகர்கள், இடம் பிடித்து இருந்தனர். 30 பேரை இறுதி செய்தாக வேண்டும். 29 பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டது. மீதமிருக்கும் ஒன்றிற்கு 37  பெயர்கள் சிபாரிசுக்கு வந்து இருந்தன.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரின் முடிவே இறுதி. தமிழ் வளர்ச்சித்துறையும் மாண்புமிகு அன்னாரின் கையில்தான் தங்கியிருந்தது.

முப்பதாவது பெயராகச் சொல்லாய்வு அறிஞர் ஆறுமுகத்தை இணைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஏக்கமாக நின்றார் செய்திப் பண்பாட்டுத் துறை இணைச் செயலாளர் மெய்க்கண்டார். அமைச்சரின் உதவியாரிடம் நேற்றில் இருந்தே நான்கைந்து முறை நினைவுபடுத்தி இருந்தார்.

மெய்க்கண்டாருக்கு அமைச்சர் அலுவலகத்திலும் அமைச்சரிடமும் நல்ல பெயர் இருந்தது. அமைச்சருக்கும் பல அறிக்கைகள், மேடைப்பேச்சுகள் எழுதிக்கொடுத்து இருக்கிறார். அந்த அறிக்கைகளுக்கெல்லாம் நல்ல பெயர் கிடைத்திருந்தது. அமைச்சர் புன்னகையோடுதான் எப்பொழுதும் தன்னிடம் பேசுவார். தோள்மீது கைபோட்டுப் பேசும் அளவு இணக்கம். கண்டிப்பாக இந்தச் சிபாரிசினை மறுக்க மாட்டார் என்று உறுதியோடு நம்பி இருந்தார் மெய்க்கண்டார்.

வந்து நுழைந்தும் தன் மேசையில் இருக்கும் தெய்வத்தின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்து முதல் வார்த்தையாக – “யாருங்க இந்த ஆறுமுகம்” என்று விளித்தார் மாண்புமிகு அமைச்சர். “ரைட்டர்ங்கியா” என்றார் உதவியாளர். “எந்த ஸ்டேசன்ல  என்றார். “ஐயா புக்கெல்லாம் எழுதுவாங்கல்ல.. அந்த ரைட்டர்.. தமிழ் ரைட்டர்” என்ற பதில் அமைச்சருக்குக் கிடைத்தது.  

“எப்பா இது நடிக்கிறவங்க, பாடுறங்க, ஆடுறவங்கன்னு ஆர்ட்டிஸ்ட்டுங்களுக்குக் குடுக்கிற விருதுல்லா.. இத எப்படிய்யா இவருக்குக் குடுக்க முடியும். ? என்றார் அமைச்சர்.

“குடுக்கலாங்கய்யா” அதிகாரிகள் அவர் வினாக்களுக்கு உடனுக்குடன் பதிலுரைத்தனர்.

“எப்படி?”

“இதுக்கு முன்னாடி தி.ஜான்னு ஒருத்தருக்குக் குடுத்திருக்கு..

“யாரு அந்த தி.ஜா ?” என்றார் அமைச்சர்.

“ஐயா தி.ஜாங்கிற, தி.ஜானகிராமன் தமிழ்நாட்டுல ஒரு பெரிய எழுத்தாளர்”.

“எங்க இருக்காரு, நான் கேள்விப்பட்டதில்லையே ?” என்றார் அமைச்சர்.

“ஐயா அவரு தஞ்சாவூரு பக்கம். இப்ப இல்ல, செத்துட்டாரு. போன புத்தகக் கண்காட்சி திறப்பு விழாவுலகூட நீங்க பேசும்போது, அவரப்பத்தி பேசுனீங்க, மெய்க்கண்டார்தான் நோட்ஸ் கொடுத்தாரு”

“அப்படியா” தலையாட்டியபடி பல் தெரியச் சிரித்தார் மாண்புமிகு.

மெய்க்கண்டார் உரையாடலில் நுழைந்தார்.

“ஆனா நான் சொல்ற ஆறுமுகம் ஐயா, தமிழறிஞரு.. தமிழ் பத்தி நிறைய எழுதி இருக்காரு.. தமிழ் மொழிக்கும் உலகத்துல இருக்கூற வேற வேற மொழிகளுக்கும் நடுவுல இருக்கிற தொடர்ப, எப்படி அந்த மொழி சொற்களெல்லாம் தமிழ்ல இருந்து வந்தது அப்படின்னாலும் எழுதி இருக்காரு. பேரறிஞரு.. அமெரிக்கா, லண்டன்ல இருக்குற மொழியியல் துறை அறிஞர்களெல்லாம் இவரோட ஆய்வுகளப் பாராட்டி எழுதிருக்காங்க. பெரிய பெரிய வெளிநாட்டுப் பத்திரிக்கைலலெல்லாம் இவரோட ஆய்வுக்கட்டுரை வந்துருக்கு. ஆனா தமிழ்நாட்டுல இவரு மேல அதிக வெளிச்சம் விழல.. “

மீசையைச் சொறிந்து கொண்டார் அமைச்சர். “இந்த மாதிரி எழுதுறவங்களுக்கெல்லாம் மத்தில இருந்துல.. அது, சாகித்தியா அகாடமி அந்த விருதுதான.. கொடுப்பாங்க, ஸ்டேட்டுல கொடுப்போமா ?”  

உடனே அலுவலக இன்னொரு அதிகாரி, “மெய் சார் சொல்றது சரிதாங்க, தி.ஜானகிராமனுக்குக் இந்தக் கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க, ஆனா எழுத்தாளர்ன்னு போடல.. நாடக ஆசிரியர்ன்னு போட்டு இருக்கு..

“என்னங்க மெய்யி.. ட்ராமா ஆளாம்.. நீங்க சொல்ற தி.சா வேறயா..” என்ற அமைச்சரின் வினாவிற்கு, மெய்க்கண்டார் “இல்லங்கய்யா.. அவர் நாடகமும் எழுதி இருக்காரு.. ரேடியோ ஸ்டேசன்ல வேலை பாத்தவரு”.

“பின்ன எப்படி எழுத்தாளர்ன்னு கொடுக்குறதாம். பத்திரிக்கைகாரங்க நம்மளக் காரித் துப்பிறப் போறாங்க மெய்யி..”

“ஐயா கலைஞரு, அண்ணாக்கெல்லாம் கொடுத்திருக்காங்க..”

“இவரு.. நீங்க சொல்ற இந்த ஆறுமுகம் சினிமாக்கு வசனம் எழுதிருக்காரா?”

“இல்லங்கங்யா”

“கண்ணதாசன், வைரமுத்து மாறி சாங்கு கீங்கு எதாவது”

“இல்லங்க..”

“பின்ன எப்படிங்க கொடுக்குறது..”

“ஐயா, தி.ஜாங்கிற, ஒரு எழுத்தாளருக்கு மட்டுமில்ல, இப்ப பிரபலமா இருக்குற நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி மாறி நாலஞ்சு எழுத்தாளருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டுருக்கு..”

“நீதான்யா எழுத்தாளர்ன்னா பிரபலம்ன்னு சொல்ற.. வெளில்ல ஒரு நாய்க்கும் அவங்களத் தெரியாது. எனக்கே தெரில.  நீங்க சொல்ற கந்தசாமி, மாடசாமில்லாம் எதாவது படத்துக்கு வசனம் கிசனம் எழுதிருப்பாங்க.. அதுக்காகக் கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

மெய்க்கண்டார் முட்டாள்தனமான பேச்சிற்கு எப்படி மறுமொழி கொடுப்பதென விழித்தார்.

அமைச்சர் விருதாளர்கள் வரிசையைப் பார்த்து “இதப்பாருங்க மெய்யி.. அடுத்தவாட்டி பாப்போம்.. உங்க ஐயாவ அதுக்குள்ள எதாவது டிவி நாடகத்துக்காவது ஒரு பாட்டு எழுதச் சொல்லுங்க. கலைஞனா மாற்ன பின்ன தூக்கிவிட்டு தமிழ வாழவைப்போம்”

அதிகாரிகள் அனைவரும் அமைதியாக இருக்க மெய்க்கண்டார் மெதுவாக “ஐயா, எழுத்தாளர்க்கும் கலைமாமணி கொடுக்கலாங்கய்யா.. இயற்றழிழ் கலைஞர்ங்கிற பேர்ல கொடுக்குறாங்க. இயல் இசை நாடகத்துல…. ‘இயல்’ன்னா எழுத்தாளர்களும் சேப்புதாங்க. எழுத்தாளர்ன்னு இல்லைங்கய்யா.. தெ.பொ.மீனாட்சி சுந்தம், வெள்ளைவாரணனார், அப்பாதுரையார், தமிழண்ணல் மாதிரியானவங்களுக்கும் கொடுத்துருக்காங்க..

“யாரு இவங்க?” என்றார் மாண்புமிகு.

உதவியாளர் பதறி “ஐயா.. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் நம்ப நிகழ்ச்சி எல்லாத்துலயும் ஓப்பனிங் சாங்கா இருக்குற தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுனவரு..”

“உனக்கெப்படிப்பாத் தெரியும்”

“நீங்க பிக்பாஸ் பாக்குறதில்லங்கய்யா.. அதான் தெரில.. அப்ப அப்ப சீரியல் மட்டும்தான் பாக்குறீங்க.. அவரு பிக்பாஸ வச்சு மக்களோட பல்ஸ பிடிச்சு ஆட்சிய புடிக்கலான்னு பாக்குறாரு, என்னங்கய்யா நீங்க, உலகம் புரியாம இருக்கீங்க, இதே போன ஆட்சில எல்லா மினிஸ்டரும் அப் டூ டேட்ல இருப்பாங்க”, “அவங்க தலைவரே நாடகத்துல இன்னிக்கு என்னென்ன நடந்துச்சுன்னு கேள்வி கேப்பாராம்?”

தமிழ்த்தாய் வாழ்த்து தெ.பொ.மீனாட்சி சுந்தரமில்ல இல்ல.. அது மானோன்மணியம் சுந்தரம்.. என்று பொறுமையாகச் சொன்னார் மெய்க்கண்டார்.

இரண்டுமே சுந்தரம்ங்கிறதுல கொஞ்சம் குழம்பிட்டேன்ங்யா, என்றார் உதவியாளர். அமைச்சர் முறைக்க உதவியாளர் வாயை அடைத்துக் கொண்டார்.

“இப்ப என்ன மெய்யி பண்ணலாம்” இறுதியாகக் கேட்பது போலக் கேட்டார் அமைச்சர்.

“அய்யா.. அவரு தமிழுக்காகத் தன்னோட வாழ்க்கையே தொலைச்சவரு.. 17 மொழி தெரியும். 43 புக்கு எழுதிருக்காரு. லத்தீன், கிரேக்கம், பிரஞ்ச், செர்மன், இங்கிலீஷ்ன்னு பல ஐரோப்பிய மொழி வார்த்தைக்கே தமிழ்தான் மூலம்ன்னு பாவாணர் வழில கண்டுபிடிச்சவரு.. உலகத்துல இருக்கிற மற்ற பெரிய பெரிய மொழியறிஞர்களோட வச்சு ஒப்பிடத்தக்க அளவுக்கு அறிஞரு“

பாவாணர் யார் என்று அமைச்சருக்குத் தெரியுமா, என்ற ஐயம் வந்தது இடை நிறுத்தினார் மெய்க்கண்டார். இனி இப்படிப்பட்ட பெயர்களைச் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தார்.  அமைச்சர் நம்மை அதிக அறிவாளி என்றும் நினைத்துவிடக் கூடாது. அது ஆபத்து. எந்த நேரத்திலும் பணி மாற்றம் வரலாம். அதனால் அவ்வப்பொழுது முட்டாள் போலவும் நடந்துகொள்ள வேண்டும், என்ற விதி மெய்க்கண்டாருக்குத் தெரிந்திருந்தது.

அமைச்சர் மீசையைத் தடவ,

“நம்ம பேசுற மீட்டிங் பலதும் சிறப்பா வர்றதுக்கு ஆறுமுக ஐயாவோட ஆய்வும் ஒரு காரணம். அவர் எழுதின புக்குல இருந்து பல குறிப்பு எடுத்திருக்கோம்” பொறுமையாகச் சொன்னார் மெய்கண்டார்.

“ஓ.. பஞ்சு.. ஸ்பாஞ்ச்.. தாக்கு .. அட்டாக்-ன்னு இந்தக்கை உசத்திப் பேசுற ஆளுக்கு எதிரா ஒரு கூட்டம் போட்டு.. கண்.. ஞான்.. க்னொ.. நோ[KNOW].. நாலட்ஜ்[KNOWLEDGE].. நாலட்ஜ்ங்கிற சொல்லே கண்ணுங்கிற தமிழ்ல இருந்துதான் வந்ததுன்னு பேசி – முதல்வர்க்கிட்ட கூட பாராட்டு வாங்குனமே.. அத எழுதினவரா இவரு.. ம்ம்..” என்று கூறி உற்சாகமானார் அமைச்சர்.

அமைச்சரின் அரிய நினைவாற்றலுக்கு நன்றி தெரிவித்து, ஆமாம் என்று தலையாட்டினார் மெய்க்கண்டார். அமைச்சர் தன் பையில் இருக்கும் பச்சை வண்ணத் தூவலின் மூடியை எடுத்து எழுதுவதற்கு முன்பு..  

“எந்த கேட்டகிரில பேரப் போடுறது..” என்று கேட்டார்.

“இயற்றமிழ் கலைஞர்” என்று அருகிருக்கும் அதிகாரிகள் முடிவு செய்து சொன்னார்கள்.

விருதாளர்களில் முப்பதாவது பெயராகச் ‘சாத்தனூர்.மு.ஆறுமுகம் – இயற்றமிழ் கலைஞர்” என்ற பெயரை அமைச்சரே தன் கைப்பட எழுதினார்.

கண் கலங்கிய மெய்க்கண்டார் அமைச்சரிடம் மெதுவாக, “மனைவி மக்கள்ன்னு வசதியா யாருமில்லங்க அவருக்கு… எழுதுனத புத்தகமாப் போடக்கூட வசதியில்ல.. சொல் ஆராட்சி பண்ணி.. பண்ணி.. கண்ணுகூடச் சரியாத் தெரில.. விருதும், கேடயமும்  கொடுக்குறதோட – இலச்ச ரூபா பொற்கிழியும் கொடுத்தா தமிழுக்கு நன்றி கடன் செஞ்ச மாதிரி இருக்கும். அதுக்கு உங்களுக்கு அதிகாரமிருக்குங்கய்யா. நிறைய பேருக்கு இந்தப் பொற்கிழி கொடுத்திருக்காங்க”

உற்றுப் பார்த்து … “பாப்போம்”  என்று நடுவமாகத் தலையாட்டினார் அமைச்சர்.

மெய்க்கண்டார் அகன்ற பிறகு, “அந்தாளுகிட்ட ஏதும் காசு கீசு கமிசன் கேட்டு இருப்பானோ.” என்றார் அமைச்சர். “மெய்யி கறைபடியாத கையி” என்றார் மோனையாக உதவியாளர்.

அமைச்சர் அறையின் வெளியே காத்திருந்தார் டபுள் டக்கர்.

ஆறு நாள்களுக்கு முன்பு

அந்த வீட்டில் வறுமை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று எங்கும் காணக் கிடைத்தது. சட்டையில்லாத மேனியோடு தான் அணிந்திருக்கும் சோடாபுட்டி கண்ணாடி வழியாகப் பெரிய பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு ஸ்பானிஷ் மொழி அகராதியில் மூழ்கி இருந்தார் ஆறுமுகம். அவர் தன்னைப் பார்ப்பதற்காகப் பொறுமையாக ஓரமாக நின்று கொண்டிருந்தார் மெய்க்கண்டார்.  

நேற்று

மேடையில் முதலமைச்சரின் உரை…

“மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் வறுமை அடைந்துவிடக் கூடாது, அவர்கள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும், மன மகிழ்வோடு இருந்து மேலும் மேலும் கலைகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே மாண்புமிகு தெய்வத்தின் அரசு ஆயிரத்தி தொள்ளாராயிரத்தி….”

எட்டு நாள்களுக்கு முன்பு

“பேருக்கு முன்னாடி ஊமத்தம் பூ புகழ் அப்படிங்கிற பட்டம் நல்லா இருக்கா.. இல்ல, கலைமாமணி அப்படிங்கிறது நல்லா இருக்கா” ஏற்ற இறக்கத்தோடு பேசினார் டபுள் டக்கர்.

நண்டு பிடித்திருப்பது போலத் தன் தலையில் பிடித்திருக்கும் இரண்டு கூலிங்கிளாஸினை மாற்றிப் போட்டப்படி,  அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காமுவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் போட்டிருக்கும் இந்த இரண்டு கூலிங்கிளாஸினாலேயே இவருக்கு டபுள் டக்கர் என்ற சிறப்புப் பெயர் தங்கிப் போனது.

ஆறு நாள்களுக்கு முன்பு

“துளி கூட உங்களுக்கு விருப்பமில்லைன்னு எனக்குத் தெரியுங்கய்யா.. இருந்தாலும் விருது இவங்களுக்குக் கொடுக்கலான்னு முடிவு பண்ற இடத்துல  நானும் இருக்கேன். ஒரு இலச்ச ரூபா சும்மா காசா, கடேசி காலத்துலயாவது அத வச்சி தேவைய செய்திகிடலாம்ல. ஒரு நல்ல கண் டாக்டரப் பார்த்து கண்ணு சரி பண்ணலாம். நீங்க கேக்குற டிக்ஸனரி எல்லாம் யாருடா அனுப்பி வைப்பாங்கன்னு எதிர்பாக்காம நீங்களே வாங்கிக்கலாம்.”

ஆறுமுகம் மெல்லிய புன்னகையோடு பார்க்க, மெய்க்கண்டார் தொடர்ந்தார்.

“நீங்க மரியாதைக்கு வாங்க போதுங்கய்யா. மத்தத எல்லாம் நான் பாத்துகிடுறேன்”. பிடிவாதமாகச் சொன்னார் மெய்க்கண்டார்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும். நினைக்கப்படுன்னுதான் சொல்லிருக்கான் வள்ளுவன்.. நினைச்சிப் பாக்கணும்ல..

“எனக்கு எந்த வருத்தமுல்ல.. கேடுமில்ல. எனக்கு நடமுற தெரியும், இந்தத் தமிழ் ஒன்ன வச்சிக்கிட்டு இன்னும் ஆயிரம் உகத்துக்கு என்னால மகிழ்ச்சியா வாழ்ந்துட முடியும். எனக்கு அது போதும். இந்த விருது, பகட்டு எல்லாம் போலிகள் எதிர்பாக்குறது. எனக்கு அது தேவையில்ல “ என்றார் ஐயா ஆறுமுகம்.

“நான் ஒருத்தன் இருக்கும் போது இப்படி உங்கள விட்டுற முடியுமாங்கய்யா ?”

“மெய்யி.. உங்கள மாதிரி ரெண்டு பேர் என் மேல காட்டுற அன்பே போதும், அதுவும் நான் எதிர்பாக்கல, நீங்களா கொடுக்குறது,  உங்க முதல்வர் கையால விருது வாங்குனா அது தமிழ அவமானப்படுத்தின மாதிரி. நான் ஆணவத்துலப் பேசல, உண்மையச் சொல்றேன், உங்களுக்கே புரியும்” .

விருதுக்கு ஐயா மகிழ்வார் என்று எண்ணி இருந்தால் இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாரே என்ற எண்ணம் மெய்க்கண்டாருக்கு. எப்படி இவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதென்று குழம்பிப் போனார்.

ஐந்து நாள்களுக்கு முன்பு

“சீரியல்ல போட்ட அதே கெட்டப்புல போனா மின்ஸ்டருக்கு ரொம்பப் பிடிக்கும். ஊமத்தம் பூவோட பேன் அவரு” என்றார் டபுள் டக்கர்.

நான்கு நாள்களுக்கு முன்பு..

கையோடு வாங்கிச் சென்று இருந்த புதிய வேட்டி சட்டையினை ஐயாவிற்குக் கொடுத்தார். தன்னுடைய வற்புறுத்தலினால் ஐயா விருதுக்கு இசைவளித்துவிட்டாரே என எண்ணி உளம் மகிழ்ந்தார் மெய்க்கண்டார்.

நேற்று..

முதலமைச்சர் உரை..

“இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், திரைப்படம், சின்னத்திரை, விகடம், கிராமியக்கலை மற்றும் அவற்றின் உள் பிரிவுகள் என்று மட்டுமில்லாமல் இந்த ஆண்டிலிருந்து பண்பாட்டுக் கலைப்பரப்புனர்கள் எனச் சிலருக்கும் விருதுகள் வழங்கி கலைத்தாயின் மணிமகுடத்திற்கு மாண்புமிகு தெய்வத்தின் அரசு மேலும் ஒளி சேர்க்கும் என்பதைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு நாள்களுக்கு முன்பு..

அந்தத் தொலைக்காட்சித் தொடர் அலங்காரத்தினைச் சூடியபடியே பம்மல் பண்ணைத் தோப்புக்குச் சென்றாள் ஊமத்தம் பூ காமு. 

நேற்று..

நிகழ்ச்சிக்காகப் பட்டுப்புடவை அணிந்த பெண், வரிசையாக விருதாளர் பெயரைப் படித்துக் கொண்டிருக்கிறார்.  முதலமைச்சர் எழுந்து வரிசையாக வரும் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கி வணக்கம் வைக்கிறார்.

மூன்று நாள்களுக்கு முன்பு..

மெய்க்கண்டார் கலைமாமணி இறுதி செய்யப்பட்ட கலைஞர்களின் வரிசையினைப் பார்த்து அதிர்ந்தார். அதில் சாத்தனூர் மு. ஆறுமுகம் – இயற்றமிழ் கலைஞர் என்ற இடம், அதே பச்சை வண்ண மையால் அடிக்கப்பட்டு  வேறு பெயர் எழுதப்பட்டு இருந்தது, அருகே அமைச்சரின் கையொப்பமும் இருந்தது.

நேற்று

“அடுத்ததாக கலைமாமணி விருது பெறுகிறவர் – திரு .மா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  – பண்பாட்டுக் கலை பரப்புச் சேவைகளுக்காக இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.”

டபுள் டக்கர் எனும் மா.கிருஷ்ணமூர்த்தி பளீர் என வெள்ளைவேட்டி சட்டையில் எழுந்து மேடை சென்று விருதினை வாங்கி ஒளிப்படங்களுக்கு புன்னகை செய்தார்.

இன்று

சிரிப்பை அடக்க முடியாமல் ஆறுமுகம்

“அது அப்படியில்லங்க மெய்யி, உலகத்துல இருக்கிற முகமையான ஒலிகள்ல இந்த ‘மா’ங்கிற ஒலியும் ஒன்னு, ஆவினம் இருக்குதுல்ல.. இந்த மாடுங்க கத்துற ஒலி ‘மா’. அந்த ‘மா’ ஒலிதான் மனுசங்க மாதிரி பெத்தவங்களக் குறிக்கிறச் சொல்லாவும் மாறி வந்திருக்கு. நமக்கும் இயல்பா வாயத் தொறக்கும் போது ‘அ’ – ங்கிற ஒலி பிறக்கும். அந்த அ+மா தான் அம்மா. அம்மாங்கிற சொல்ல இப்படித்தான் தமிழ் தந்திருக்கு”

“இந்த அம்மா உடன் பிறந்தவந்தான் அம்மான், இந்த அம்மான்தான் காலப்போக்குல திரிந்து அம்மான், அம்மான்னு மாமாவாகிருக்கு. தமிழ்நாட்டுல சில இடங்கள்ல இன்னமும் தாய்மாமன அம்மான்னுதான் சொல்வாங்க.. “

“நீங்க சொல்ற மாதிரி.. மாமான்னா பெரிய ஆளுங்கிற பொருளெல்லாமில்ல” என்று விளக்கினார் ஆறுமுகம் புன்னகை மாறாமல்.

“இல்லங்கயா ‘மாமா’ன்னா மிகப் பெரிய ஆளுன்னுதான் பொருள், எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாது, என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார் மெய்க்கண்டார்.

***

பாக்கியராஜ் கோதை – சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். தற்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு சில கதைகள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular