Sunday, October 1, 2023
Homesliderகறை படியும் கவசங்கள்...!

கறை படியும் கவசங்கள்…!

ஐசக் பேசில் எமரால்ட்

ல்லா முகங்களும் மேலும் கீழுமாக லேசான அசைவுடன் இருந்தது. ஊர்சாலைகளில் போகையில் தலைகள் பேயாட்டம் ஆடும். அதற்கு இந்த நகரம் பரவாயில்லை எனலாம். சகப்பயணிகளின் முகத்தோல்களில் எண்ணை பிசுபிசுப்புடன் கண்களில் வற்றாத சோகமும் சேர்ந்திருந்தது. நெடுந்தூர பிரயாணங்கள் என்பதால் அசதியாக இருக்கும் என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அதிகாலை நேர சென்னையை கவனிக்க தொடங்கினேன். ஏன் இந்த பஸ்ஸில் மட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது  என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. டீக்கடைகள், மருத்துவமனைகள், சினிமா கேரவன் வண்டிகள், பேப்பர் எடுத்து செல்லும் சிறுவர்கள் என அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன். தூரம் போகப்போக சென்னையை கவனிப்பதை தவிர்த்து மனிதர்கள் மேல் கவனம் குவிந்தது. இந்த மனிதர்களின் அசதியும், களைப்பும், சோகமும் என்மீது சேர்ந்து இறங்குவதாய் நினைத்துக் கொண்டேன். பஸ் சின்னமலையை கடந்தாலும் கூட்டம் குறையவில்லை. ரோட்டோர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தை மீறி இயற்கையொளி மெல்லப் படர்ந்து விரியத் தொடங்கியிருந்தது.

சி.எல்.ஆர்.ஐ பேருந்து நிறுத்தம் வந்தபோது பஸ்ஸில் இருந்த அனைவரும் இறங்கத் தொடங்கினர். திருவான்மியூர் என்று போர்டு வைத்திருந்தார்களே…! இதற்கு மேல் பஸ் போகாதா என ஐயம் எழுந்தது. இறங்கிய மனிதர்கள் அனைவரும் ரோட்டைக் கடந்து சென்று மறுப்பக்கம் இருக்கும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்குள் சாரை சாரையாக நுழைந்து கொண்டிருந்தனர். பஸ் கிளம்பியது. பஸ்ஸில் திரும்பிப் பார்த்தேன். நான் உட்பட நான்கைந்து பேர் மட்டுமே இருந்தோம். பஸ் கிளம்பும் வரை சாலையை கடக்கும் மனிதர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். காலை நேர வெக்கையுடன் கடந்து சென்ற மனிதர்களின் அகத்துயர்களும் ஒன்றாகி ஒட்டுமொத்த பிரமாண்ட வடிவ துன்பமாய் என் மீது படிந்துருகி விழுந்து கொண்டிருந்தது. அந்த பிரமாண்ட துன்பத்துடன் தனிப்பட்ட துயர்களை ஒப்புமைப்படுத்தியதன் விளைவால் என் துயரங்கள் சிறிதாகி போனதையும்  உணர்ந்தேன். பஸ் வேகமாக சென்றதால் குளிர்க்காற்று வேகமாக தீண்டியது. அந்த ஏகாந்த உணர்தலில் திளைத்துப்போன உணர்வு. மனிதர்கள் அல்லாத மரங்கள் படர்ந்த சாலை என்பது எதேச்சையான ஒன்றாக தோன்றவில்லை. காரணம் மனிதர்கள் அல்லாத அல்லது அவர்கள் அங்கே குடியேறாத இடமாக அந்த இடம் வைக்கப்பட்டிருந்ததால் தானே எனக்கு அந்த குளிர் காற்று வந்து தீண்டியது.

வெளிச்சம் பரவியிருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கினேன். இருவழிச் சாலையை ஒருவழி சாலையாக மாற்றியிருந்தார்கள். இந்தியாவில் வைரஸ் இறக்குமதி ஆன காரணத்தினால் ஒருவழிச் சாலை முழுவதும் மனித இடைவெளியை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பதாகை ஏந்தி, முகத்தில் மாஸ்க், செந்நிறத் தொப்பிகளுடன் சிறியவர்களும் பெரியவர்களுமாக நடந்து கொண்டிருந்தனர். இன்னும் சில தினங்களில் கொடிய வைரஸ் சமூக பரவலாகி எண்ணற்ற உயிர்களை காவு வாங்க போகிறது என்றார்கள். அதனால் அரசாங்கங்களும் ஓரிரு நாட்களில் ஊரடங்கை அறிவிக்கலாம் என்று தகவல். மிகப்பெரிய ஆபத்தை மனிதர் உலகம் அறிய செய்யும் வண்ணமாக விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மனிதர்களின் முகத்தில், அவர்கள் செயல்படுவதற்கான காரணத்தில் துக்கம் படிந்திருந்தாலும், அவர்கள் அதற்கு எதிர்க்கும் பொருட்டு புரியும் செயல்பாடுகளினால் பெரிய அக மகிழ்ச்சியோடு இருப்பதாக உணர்ந்தேன். அது என்னை அந்தப் பேரணியில் இடைவெளி இல்லாமல், தொப்பி போடாமல், மாஸ்க் அணியாமல் என்னையும் அழைத்துச் சென்றது. அவர்களில் நான் மட்டும் மனமகிழ்வு அற்றவனாக, நான் மட்டும் தன்னந்தனியனாக நின்று கொண்டிருந்தேன். ஒரேயொரு செவலைநிற நாய் மட்டும் அருகில் நிற்பதைத் தவிர சுற்றியிருக்கும் வேறேதும் என் கண்ணிற்கு தெரியவில்லை. அப்படியே மூச்சை உள்ளிழுத்து தலையை மேல்தூக்கி ஒரு நொடி இமைகளை மூடி அந்த நாயை மீண்டும் பார்த்தபோது அதன் தலைப்பகுதி மரநாயாகவும், வால்பகுதி புனுகாகவும் உருமாற்றம் அடைந்திருந்தது.

2

கொடிய வைரஸுக்கு எதிரான முன்னெடுப்பில் முதல்கட்டமாக அடுத்த நான்கு நாட்கள் முழு  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தேவையான மளிகை, காய்கறி, சானிடைசர், மாஸ்க், டெட்டால், ஹேன்ட்வாஷ், ஒரு வாரத்திற்கு தேவையான சிகரெட் என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். கதவை வேகமாக அடைத்த சப்தத்தில் எதிரொலி என் காதில் விழுந்து கொண்டே இருந்தது. அது என் மனதில் தோன்றிய பயம்தான் என அப்போது உணர்ந்தேன். அதற்கான காரணமும் அறிந்ததே. கூட்டத்தோடு இருக்கையில் பாதுகாப்பின்மையாக உணர்வது புதிதல்ல. ஆயினும் பழக்கப்பட்டிருந்தேன். இன்று அனைவரும் அப்படியே உணர்வது என்னை அதற்கு அடுத்த நிலைக்கு இட்டு சென்றது.

அறையினுள் பேரமைதியில் நின்றுகொண்டு நான்கு சுவர்களையும் சுற்றும் முற்றும் பார்த்தேன். இனி வரப்போகும் நாட்கள் அனைத்தும் இந்த நான்கு சுவர்களுக்குள் தனியாக வாழப்போகிறேன். வாங்கிய பொருட்களை அலமாரியில் சரியாக அடுக்கி வைத்தேன். அரிசியை மட்டும் அலமாரியின் கீழ் அடுக்கு மூடையில் நன்றாக முடிச்சுகள் போட்டு கட்டி வைத்தேன். ராத்திரியானால் சின்னச்சின்ன கரப்பான் பூச்சிகள் வருவதால் இத்தனை முடிச்சுக்கள். பருப்பு, உளுந்து ஆகியவற்றை பாட்டிலில் தட்டி வைத்துவிட்டு பாலித்தீன் கவர்களை எதற்காகவது உபயோகப்படும் என ஒதுக்கி வைத்தேன். ரொட்டி பாக்கெட்டுகளையும், ஜாமையும் குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்தேன். பால் பாக்கெட்டுகளை ஃப்ரீசரில் வைத்தபோது, அனைத்திலும் ஒரு அவசரத்தை என்னால் உணர முடிந்தது. காபி பொடி ஒரு மாதத்திற்கு போதும். முட்டைகளை உடையாதவாறு பொறுமையாக எடுத்து வைத்தேன். ஏதோ ஒரு மூச்சு முட்டல். தொண்டையிலிருந்து குமட்டல். ஆம், மாஸ்கை கழற்ற மறந்திருந்தேன். ஆகா…! என ஆசுவாசமைடைந்து ஒரு மிடறு நீரை அருந்திவிட்டு கண் அயர்ந்தேன்.

தூக்கம் முழித்து, கண் விழிக்கையில் மாலை ஏழு மணி ஆயிருந்தது. பால்கனியில் நின்று தெருவை பார்த்தேன். மழை இரவுகளில் கருமேகங்களினால் நட்சத்திரங்கள் இல்லாமல் தெரியும் அத்துவானவெளி போல் தெரு காணப்பட்டது. அந்த தெரு வீடுகளின் கதவு ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. செல்போனில் பாட்டை ஒலிக்கவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்த முதலில் கழிவறையிலிருந்து துவங்கினேன். ஹார்பிக்கில் நன்றாக ஊற வைத்த க்ளோசெட்டை ப்ரெஷ்ஷினால் நன்றாக தேய்த்து துடைத்துக் கொண்டிருந்தபோது, சட்டை பாக்கெட்டிலிருந்த செல்போன் க்ளோசெட்டில் விழுந்தது. பெனாயிலின் பதத்தன்மை வெண்ணிறமாக கொப்பளித்துக் கொண்டிருந்த துளையில் மூழ்கி மறைந்தது. உறைந்து போய் நிற்க வாய்ப்பிருந்தும், அதற்கு இப்போது நேரமில்லை என உணர்ந்து பருப்பு வாங்கிய பாலித்தீன் கவருக்குள் கையை நுழைத்து துளையினுள் கைவிட்டு செல்போனை எடுத்தேன்.

நீரும், பெனாயில் கெமிக்கலுக்குள் செல்போன் ஊறியிருந்தது. இதை இதற்குமேல் நல்ல நீரில் கழுவ முடியாது. ஒரு பழைய சட்டையை எடுத்தேன். அது இன்னும் ஓரிரு மாதங்கள் அலுவலகத்திற்குபோட்டுச் செல்லலாம் என எண்ணிய சட்டை தான். சட்டை போட ஊரடங்கு முடியும் என நம்பிக்கை வரவில்லை.  அதனை எடுத்து நன்றாகத் துடைத்தேன். துடைத்து விட்டு ஆன் செய்து பார்த்தபோது, நினைத்த மாதிரியே நடந்தது. எப்போதும் இதமான சூட்டோடு இருக்கும் செல்போன் குளிர்ந்து போயிருந்தது.

அழுக்கேறிய கண்ணாடி சீசா ஒன்றில் சிறிதளவு சோப்புநீரை கலக்கி, அதை தொட்டுத்தொட்டு சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திய பின் மீண்டும் துடைத்தேன். மேஜையில் வைத்து டேபிள் ஃபேன் காற்று நேராக செல்போனில் வீசுமாறு வைத்தேன். காய வைத்துவிட்டு செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்றே ஒன்று இதுதான். “ஊரடங்கு நாட்களில் செல்போன் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன்…?” ஆழமான மனசோர்வு என்னை ஆக்கிரமித்திருந்தது. பொறியியல் இறுதியாண்டு படிக்கும் தெரிந்த ஒருவரின் மகனுக்காக லேப்டாப்பை அளிக்க வேண்டியதாகப் போயிற்று. மளிகை, காய்கறி கடைகள் தவிர எந்தக்கடையும் திறக்க மாட்டார்கள். ஆன்லைனில் புதிய செல்போன்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே இடுக்குகள் நீர் கசிந்திருந்தது. அரிசி மூடையின் முடிச்சுக்களை அவிழ்த்து அரிசிக்குள் செல்போனை புதைத்து வைத்து  மூடையை நன்றாக இறுக்கி கட்டினேன்.

நான் செய்வதற்கு எதுவுமற்றவனாக மாறிப்போயிருந்தேன். தூக்கம் வரவில்லை. நள்ளிரவு தாண்டியது. லேசாக என்னை அறியாமல் கண்ணயர்ந்த போது உள்ளத்தில் சலனத்தை உணர்ந்தேன். சரிந்து படுத்தபோது என் முன்னே ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதின் நிழல் முகத்தில் விழுவதை உணர முடிந்தது. அதன்பின் கால் விரலிலிருந்து மயிர்கால்களை லேசாக உரசும் வண்ணம், கிளுகிளுப்படைய வைப்பது போலிருந்தது. போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டேன். ஏதோ மிகப்பெரிய கனம் என் மீது ஏறுவதை என்னால் உணர முடிந்தது. இப்படியொரு கனத்தை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. இந்த கனத்தை நான் சுமப்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. அதனால் இதுவும் கனவாகவே இருக்கக்கூடும் என மனம் எத்தனித்தது. அப்போது குறியில் ஏதோ திரவத் தன்மையுள்ள உராய்வு ஏற்பட்டு முதுகுத்தண்டு சில்லிட்டது. அப்போதுதான் கண்விழித்துப் பார்த்தேன். போர்வை உப்பிப்போய் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை விட பிரமாண்டமாக இருந்தது. பதறிபோய் போர்வையை விலக்கி பார்த்தேன். மின்சாரம் பாய்வது போல் இரு மின்கம்பிகள் முன்னே நீண்டது. வெல்வெட் தோலை போர்த்திக்கொண்டு அது என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. சுருண்டு படுத்திருந்த அந்த மலைப்பாம்பின் சிறிய கண்கள் அந்த கும்மிருட்டிலும் பளிச்சென்று மினுங்கியது.

3

அரிசி மூடை கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. நானும் மலைப்பாம்பும் தன்னந்தனியாக வீட்டில் இருந்தோம். அதன் வால் முகப்பு அறையிலும், தலை படுக்கும் அறையிலும் இருந்தது. நான் படுக்கையறையில் இருந்தேன். பார்க்க அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது. அதன் தலையை மெல்ல வருடினேன். அப்போது அதற்கு கிடைத்த உற்சாகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் முகப்பு அறையில் இல்லை. கொஞ்சம் நேரத்தில் அதன் கண்கள் பசியால் சொக்கியதோ என உணர்ந்தேன். அதற்கு என்ன சாப்பிட அளிப்பது..?, வாங்கிய சாமான்கள் அது உண்ணும் எனில் கூட ஒருநாள் போதாதே. இந்த வீட்டில் அதற்கான உணவாக இருப்பது நான் மட்டுமே. அதுவும் ஒருநாள் அல்லது சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ளுமேயானால் மூன்று நாள். ஆடு, மனிதன், கோழி மற்றும் இன்னபிற விலங்குகளை தவிர வேறு என்ன உண்ணும் என இணையதளத்திலும் பார்க்க முடியாது. விடியவிடிய இருவரும் கொட்டக்கொட்ட கண் விழித்திருந்தோம்.

வானம் வெளுக்கத் துவங்கிய போது கண்ணயர்ந்தேன். தூங்கி எழுந்தபோது மணி மூன்று ஆகியது. மலைப்பாம்பு எங்கேயென தேடியபோது காணவில்லை. வீடு முழுவதும் தேடினேன். எங்கேயும் இல்லை. வெளியே பார்த்தேன். சில மனிதர்கள் அரசின் ஊரடங்கை மதிக்காமல் விழிப்புணர்வற்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். தூங்கும் முன்புவரை என் அருகே இருந்த மலைப்பாம்பு எங்கே போனது என்று குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன். அப்போதுதான் அந்த உணர்வு ஏற்பட்டது கீழ் அலமாரியில் இருந்த அரிசி மூடையை பார்த்தேன். அது நிறைய முடிச்சுகளுடன் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. நான் போட்ட அதே முடிச்சுகள். அவசர அவசரமாக முடிச்சுக்களை அவிழ்க்கத் தொடங்கினேன். எந்த முடிச்சும் அவிழவில்லை. பின் நிதானமாக ஒவ்வொரு முடிச்சுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்தேன். ஒருவழியாக அவிழ்த்து முடித்து கையை உள்ளே விட்டேன். நன்றாக கையைவிட்டுக் குடைந்து பார்த்தேன். செல்போன் அகப்பட்டது. நேற்றைவிட சற்று சூடேறி காணப்பட்டாலும் ‘ஆன்’ ஆகவில்லை. மீண்டும் அரிசியினுள் வைத்து புதைத்து இறுக்கி அதே முடிச்சுக்களோடு கட்டிவிட்டேன்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு காட்சிப்படிமங்கள் கனவுகளாக வருவதுண்டு. அது கொஞ்சம் காலம் தொடர்ந்து வரும். சில இட மாறுதல்களில் நம் பிரக்ஞையின்றி கடந்து போவதுமுண்டு. இன்று அந்தி தொடங்கும் முன் கண்ட பகல்கனவு சோர்வுக்குள் ஆக்கி என்னை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அது ஒரு துர்காட்சி கொண்ட கனவு. நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி நிர்வாணமாக மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் யோனியிலிருந்து குருதித் துளிகள் சொட்டு சொட்டாக என் முகத்தின் மீது விழுந்தது

கையினால் குருதித்துளிகளை தடுத்துப் பார்க்கிறேன். என்னென்னவோ செய்தும் பார்க்கிறேன். முயற்சி படுதோல்வி அடைகிறது. என்மீது ரத்தக்கறை படிவத்தை என்னால் தடுக்க முடியவில்லை. அந்த ரத்தவாடை என் மூக்கில் சென்று கொண்டே இருக்கிறது. பகல் முழுவதும் குருதிவாடை என்னை மயக்கத்தில் இருந்து கொண்டிருந்ததால் அந்த வாடையில் இருந்து தப்பிக்க கொடிய வைரஸுக்காக வாங்கிய மாஸ்க்கை வீட்டினுள் அணிந்து கொண்டேன். அது சற்று சிரமமாகத்தான் இருந்தது. பகல் மங்கி இரவாக, குருதி வீச்சம் என்னை விட்டு மெல்ல அகன்று சென்றது. அவ்வப்போது மாஸ்கை அகற்றி பார்த்து உணர்ந்து கொண்டேன். நேரம் செல்லச்செல்ல வாடை அறையை விட்டு சென்றது.

ஒரு கட்டத்தில் அந்த வாடை முழுவதும் மறைந்து போனது. மாஸ்க்கை கழற்றிக் கொண்டு நன்றாக இழுத்து காற்றை முகர்ந்தேன். குருதி வாடை இல்லை. முகப்பு அறைக்கு வந்தேன். அங்கே மலைப்பாம்பு என்னைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. தலையை திருப்பி அரிசி மூடையைப் பார்த்தேன் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு பயங்கர புத்துணர்வுடன் கூடிய பரவசம் என்னில் பரவுவதை தனியாக உணர முடிந்தது. அப்படியே அமர்ந்து அதனைப் பார்த்தேன். அதன் உடலைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் நேற்று இருந்த அளவில் அது இல்லை. அதன் கால்பங்கு எடை அளவிற்கு குறைந்து மெலிந்துக் காணப்பட்டது. அதற்கு உணவு அளிக்காததால் தான் இப்படி ஆயிற்று என குற்ற உணர்வு அடைந்தேன். இதற்கான முழு குற்றத்தை நான் சுமந்து கொண்டு அதன்முன் அமர்ந்து தலையை மெல்ல வருடினேன். அதன் கண்களில் நான் இருப்பதை அப்போது தான் பார்த்தேன். அவ்வளவு கரிய கண்கள்.

உடம்பின் செதில்கள் அனைத்தும் அவ்வளவு கச்சிதமாக நவீன ஓவியம்போல் செதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செல்களின் அளவும் ஒரே அளவில் இருந்தது. அந்த தோலின் நிறம், மற்றும் அழகை ரசிக்க அளவான வெளிச்சம்தான் வேண்டும். அதற்கான வெளிச்சம் எந்த திசையில் இருந்து வந்தால் அதன் முழு அழகை ரசிக்க முடியும்..? உடனே மெழுவர்த்தியை கொளுத்தி அதற்கு ஏற்றவாறு வெளிச்சத்தை வலதிலிருந்து அதனை நோக்கி பாய்ச்சினேன். ஒரு அழகான சிற்பம், ஓவியம் இரண்டையும் கலந்த நுண்கலையை தரிசிக்க முடிந்தது. அப்போது அந்த மலைப்பாம்பில் தன் நிலத்தை சுமந்துக் கொண்டிருப்பது உணர முடிந்தது. அதனுள் எந்த அந்நியத்தன்மை அல்லை. அது அசலான இந்திய சாயல் கொண்ட மலைப்பாம்பு. அதிலும் தென்னிந்திய சாயல் அதற்கு இருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்திருக்கலாம் என சிந்தனையில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அதன் மின்கம்பிகளை என்னை நோக்கி அச்சுறுத்த முனைந்தது. நான் புன்னகைத்துக் கொண்டேன். உடனே ஃப்ரிட்ஜில் வைத்த ரொட்டித் துண்டுகளை ஓரத்தில் இருக்கும் செவலைநிற தோல்களை அகற்றி சிறுசிறு துண்டுகளாக ஒரு பாத்திரத்தில் பிய்த்துப்போட்டேன். மாலையிலே ஐஸ் கட்டி ஆகியிருந்த பால் பாக்கெட்டை சாதாரண தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். மேலும் கடகடவென முட்டைகளை உடைத்து ஊற்றி, நீரில் போட்டிருந்த பாலை எடுத்து கலக்கலாம் என எடுத்தேன். பச்சைப்பால் குடித்தால் பாம்பிற்கு ஏதாவது தொற்றுப் பிரச்சனை வந்துவிடும் என உள்ளம் கூறியது. அதென்ன ரெண்டு நிமிஷம் ஆகப்போகிறது என்று நன்றாகச் சுண்ட பாலைக் காய்ச்சி எடுத்து, அதை ரொட்டிக் கூழில் கலந்து உருட்டி எடுத்தேன். அதை பெரிதாக உருட்டி அதன் முன்பே எடுத்து வைத்தேன். அது ரொட்டி உருண்டையையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிடச் சொல்லி எவ்வளவு வற்புறுத்திய பின்னும், என்னால் சாப்பிட வைக்க முடியவில்லை. ஒருவேளை நான் சாப்பிடவில்லை என்று உண்ணாமல் இருக்கிறதா என நினைத்து, கொஞ்சமாக பிய்த்து எடுத்து உண்டேன். அப்போதும் அது சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தோம். ஆனால் மனதில் சமாதானம் இருந்தது. நேர்மறையான அதிர்வலைகள் என்னை சுற்றுவதாக உணர்ந்தேன். ஆம், மெல்ல கால் வழியாக ஏறி இடுப்பு, முதுகு, கழுத்து என சுற்றிக் கொண்டது. அந்த இதமும், மலைப்பாம்பின் கதகதப்பும் என்னை பரிசுத்தமாக உணர செய்தது. அது என்னை சுற்றிக் கொள்ளும் போதெல்லாம் அடர்ந்த மலைக்காட்டினுள் சென்று நுகர்தலின் போது கிடைக்கும் மூலிகை வாசம் எப்போதும் எனக்கு கிடைக்கும். அதுதான் பரிசுத்தமாக உணர செய்ததற்கு முக்கியக்காரணம் என உணர்ந்தேன்.

அந்த கனவின் இறுதியில் ஆவாறி முழித்தேன், குடலை புரட்டிக்கொள்ளும் அளவிற்கு குருதி வாடை. பிணவறையில் இருந்து கழிவறைக்கு தாவுவது போல் நேராக பாத்ரூமில் சென்று வாந்தி எடுத்தேன். குருதி வாடை அறையெங்கும் பரவியிருந்தது. மாஸ்கை அணிந்துக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டேன். போர்வையை விலக்கிப் பார்த்தபோது ரொட்டி உருண்டை இல்லை. மலைப்பாம்பும் இல்லை, அரிசி மூட்டை கட்டப்பட்டிருந்தது.

மூன்றாவது நாள் இரவில் நான் கொஞ்சம் சமநிலையை உடையவானாகவே எண்ணினேன். உணர்வுகள் என்னை மீறிச் செல்லவில்லை. நான் தனிமைப்படுத்திக் கொண்டதில் என் உணர்வின் சமமின்மை அதிகரிக்கும் என்ற எண்ணம் தவிடுபொடியாகி இருந்தது. அதையுணர்ந்த தருணம் முதலே அந்த மலைப்பாம்பிற்காக காத்திருக்க தொடங்கினேன். என் மூச்சுக்காற்று சீரற்று காணப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். பத்மாசன நிலையில் கால்களை மடக்கிக்கொண்டு கண்களை மூடி, மூச்சை இழுத்துவிட்ட போது முதுகிலிருந்து ஊர்ந்து மேலே வருவது என்னால் உணர முடிந்தது. என் எதிரே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் பார்ப்பதற்காக காத்திருந்தேன். என் உடலைச் சுற்றும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம், காரணம் அது என் கழுத்தை மட்டுமே சுற்றியது. கண்ணாடியில் பார்த்தபோது பரமசிவன் மட்டுமே தெரிந்தார். நான் இப்படி நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் உடல் நான்கு மடங்கு  சுருங்கிப்போய் மெலிந்து ஒரு சாரைப்பாம்பு அளவை விட சிறியதாகவும், ஓட்டுப் பாம்பைவிட கொஞ்சம் பெரியதாகவும் இருந்தது. நான் கடவுளாக உணர முடியாத கோபத்தில் கண்ணாடியை ஓங்கி உடைத்தேன். சில்லுசில்லாக கண்ணாடி உடைந்து சிதறியது. என் கையில் குருதித்துளிகள் தரையில் சொட்டிக்கொண்டே இருந்தது. காரணம் புரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன். அரிசி மூடை முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டாலும் சிறிதளவே திறந்து காணப்பட்டது. அந்த இரவில் குருதி வாடை இல்லை என்றாலும் ஏகாந்தமான மனநிலை இல்லை. அது என் கழுத்திலிருந்து கீழே இறங்கியது. அது இப்போது மலைப்பாம்பு இல்லை. அதற்குள் ராஜநாகத்தின் கொடிய விஷம் கூட இருக்கலாம் என்று எண்ணினேன். ஏனென்றால் முன்பைவிட அதன் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அது என்னிடமிருந்து வெளியேறி படுக்கையறைக்குள் புகுந்தது.

மகிழ்ச்சியும், கவலையும் மாறி மாறி கட்டுக்குள் வந்த அதிசயம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. அதன் நிலையைக் கண்டு கொஞ்சம் வருத்தமடைந்த நான், என்னுள் நடக்கும் மாறுதல்களை உணர்ந்தபடியினால், எனக்குள் இருந்த மற்றொரு நான் விழித்துக் கொண்டது. அது என்னிடம் “அந்தப் பாம்பை விடாதே, அடித்துக் கொன்று விடு, அது ராஜநாகத்தை விட கொடிய விஷத்தை கொண்டது, அது இன்றைக்கு கண்டிப்பாக உன்னைக்கொன்று விடும், இப்போது அது மலைப்பாம்பு அல்ல” என்றான். நான் விறுவிறுவென ரூல்தடியைத் தேடி எடுத்துக்கொண்டு பாம்பை தேடினேன். கையில் கட்டையோடு நிற்கும் என்னை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தது. என்னைக் கொன்றிருக்க வேண்டும் என்றால் முதல்நாள் கொடூர பசியில் விழுங்கி கொன்றிருக்க வேண்டுமே, அப்போது அதன் வயிறு இதைவிட பலமடங்கு. அப்போது கொல்லாத பாம்பு இப்போது கொல்லப் போகிறதா..? எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் என்ற நான் சொன்னதுபோல் மலைப்பாம்பு வடிவில் இருக்கும் விஷப்பாம்பு எனில் கொத்திக் கொன்று விடும் இல்லையா…? இல்லை அதன் மரபுவழி குணம் என்று ஒன்று உண்டு. மேலும் அந்த கண்களின் கருணையில் அப்படி எதுவும் இல்லை. ரூல் கட்டையை தூக்கிப்போட்டு, அந்த மலைப்பாம்பின் முன் கண்ணீருடன் மண்டியிட்டேன். கண்திறந்த போது மலைப்பாம்பு மாயமாகி இருந்தது. சுற்றும் முற்றும் தேடினேன். நினைத்தது போலவே நடந்தது. ஆம், அரிசி மூடை முடிச்சுக்களுடன் இறுக்கி கட்டப்பட்டிருந்தது.

காலையில் குருதி வாடை வந்துவிடும் என்பதால் மாஸ்க் அணிந்து கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றேன். தூங்கப்போகும் முன் கிடைக்கும் மூலிகை வாசத்தை இழந்து விட்டேன், அதற்கு காரணம் நான் தான் என நினைத்துக் கொண்டுதான் தூங்கினேன்.

விடியற்காலை நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் அந்த கனவு மீண்டும் வந்தது. அந்த நிர்வாண உடலின் யோனியில் இருந்து விழும் குருதித்துளிகள் மாஸ்கில் விழுந்து கறைபட்டுக் கொண்டிருந்தது. விழுந்து கொண்டிருந்த குருதித்துளிகள் நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் அவள் யோனியில் இருந்து தொப்புள் கொடி மூலமாக, ரத்தங்களும் கழிவுகளுமான பச்சிளம் சிசு தொப்புள் கொடியில் தொங்கி ஆடிக்கொண்டிருக்கிறது. அவளின் வயிறு பலநாள் பட்டினி கிடந்தவளின் வயிறாக மாறிப்போனது.

ஒரு உடலுக்கு கீழ் இன்னொரு உடலும் சேர்ந்து ஆடும் அந்தக் குழந்தையின் கண்களை பார்த்தேன். அது வேறெதுவுமில்லை. அந்த மலைப்பாம்பின் கண்கள் தான்.  அய்யோ… என்று உரக்க அலறிக்கொண்டே எழுந்தேன். உடலெங்கும் வியர்த்துப் போயிருந்தது. கதவைத் திறந்தேன். வெயில் அறை முழுவதும் படர்ந்தது. மக்கள் வெளியே செல்லத் துவங்கி இருந்தார்கள். திறக்கலாம் என தளர்த்தப்பட்ட கடைகளில் செல்போன் கடைகளும் அடக்கம். வேகவேகமாக அரிசி மூடையை அவிழ்க்க முனைந்தேன். முடியவில்லை. ஓடிச்சென்று பால்கனியில் நின்று சிகரெட்டை பற்ற வைத்தேன். ஒரு காகம் என் அருகே வந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்களை பார்த்துவிடக் கூடாது என முடிவு செய்து உடனே உள்ளே வந்தேன்.

மழை நன்றாக பெய்ததன் விளைவாக மேல் காங்கிரீட்டில் நீர் குடிகொண்டு, பயங்கர போராட்டத்திற்கு அப்புறமாக ஊடுருவி குமிழ்களாக நீர்த்துளிகள் மேல்கூரையில் இருந்து ஒவ்வொன்றாக விழுந்தது. கண்முன்னால் சென்ற துளி காலருகில் விழுந்தது. மெல்ல குனிந்து அந்த நீர்த்துளியைப் பார்த்தேன். அந்த துளிக்குள் ஒரு கூத்தாடிப்புழு(கொசு உருவாகும் புழு) படுசுறுசுறுப்பாக நெளிந்து கொண்டிருந்தது. உடனே பெருவிரலால் அந்தத் துளியை அழுத்தினேன். விரலை அகற்றிப் பார்த்தபோது கூத்தாடிப்புழு இறந்ததற்கான எந்த தடையமும் இல்லை. இப்போது பதற்றமடைந்தால் முடிச்சுகளை அவிழ்க்க முடியாது என கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு நிதானமாக ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்க தொடங்கினேன். முடிச்சுகள் அவிழ்ந்தது. கையை அரிசிக்குள் விட்டு செல்போனை எடுத்தேன். எடுத்துக்கொண்டு வேகமாக அறையை விட்டு செல்போன் ரிப்பயர் செய்யும் கடையை நோக்கி ஓடினேன். சுற்றி இருக்கும் மனிதர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியில் செல்பவர்களும் ஒரு நொடி நிறுத்தி என்னைப் பார்த்து அச்சத்துடன் நகர்ந்தார்கள். ஒரு குழந்தை பயத்தில் அழுது கொண்டே ஓடி ஒளிந்தது. வயதான முதிர்கன்னி அசிங்கமாக என்னை திட்டினாள். அப்போது தான் எனக்கு அந்த விஷயம் பிரக்ஞைக்குள் வந்தது.

நான் மாஸ்க் அணிந்துள்ளேன். அதில் ரத்தக்கறை படிந்துள்ளது. மீண்டும் சுற்றி நின்ற மனிதர்களின் அனைத்து உணர்வுகளும் ஒன்றாகி என்மீது படியத் தொடங்கியது.

  • ஐசக் பேசில் எமரால்ட் திரைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். அவரது நாவல் அபினி சமீபத்தில் வெளியாகியது. தொடர்புக்கு – [email protected]
RELATED ARTICLES

4 COMMENTS

  1. மிக சிறந்த கதை….. இடை நில்லா பயணம், ஓர் அறைக்குள்!!!! அற்புதம். நிறைய எதிர்பார்க்கிறேன்.. நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular