Monday, December 9, 2024

கறுப்பு

பாலைவன லாந்தர்

               கறுப்பு 

”எட்டடி குச்சிக்குள்ளே எட்டய்யா.. எத்தினி நாளிருப்பே..
எட்டடி குச்சிக்குள்ளே எட்டய்யா.. எத்தினி நாளிருப்பே..”

“ஐயே அதுக்குத்தான் மலயேறலன்னு தெரியுதுல்ல? சும்மா எம்மாந்நேரம் அத்தயே கூவிக்கினிருப்பே? அட்த்தசாமிய இட்டுக்கினு வர்லாமுல்ல.. டைம் போயிக்கின்னே இருக்குல்ல சாமி”

கெஜலட்சுமி சத்தமாகச் சொன்னவுடன் பூசாரி சற்று முறைப்பும் அச்சமும் கலந்தவாறு கூட்டத்தைப் பார்வையிட்டார். அனைவரின் முகத்திலும் சற்றேனும் எடைக்கூடி ஏறிய கலவரமாக இருந்தது. சாமிக்குத்தம் வந்துடக்கூடாதுன்னு பார்த்துப்பார்த்து செய்த காரியங்கள் கண்முன் நிழலாடின. ஒவ்வொரு வருடமும் எப்படியாவது ஒரு குத்தம் கைகால் முளைத்து எதிரே நின்றுவிடுகிறது. இந்தக் குற்றத்திற்காகவே அடுத்த வருடம்வரை நிகழும் விபத்துகள், நோய்கள், ஆபத்துகள், சண்டைகள், மரணங்களென அடுக்கிக்கொண்டே போகும் கற்பனைக் குதிரையை அந்தக் கூட்டத்திற்கு நடுவே கட்டிவைக்க இயலவில்லை. 

தெருவின் இறுதிவரை சாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். கன்னிச்சாமிகளுக்குத் துணையாக அவர்களின் உறவினர்கள் அருகிலேயே நின்று கற்பூரம் காட்டி கால்களில் மஞ்சத்தண்ணி ஊற்றிக்கொண்டிருக்க, குருசாமிகள் பொறுப்புணர்வுடன் கூட்டத்தை நிர்வகித்தும் அடுத்தடுத்த காரியங்களுக்கு வழிவிடுவதுமாக இருந்தனர். தெரு முழுக்க புகையால் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் சன்னல் கதவுகளின் வழியாக தலைகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்து அடுத்த தெரு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல, சாமிகளின் உப வேலைகளுக்கென இளவட்டங்களின் படை ஒன்று மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. 

“இந்த வாட்டி கன்னிசாமிங்க லிஸ்ட் ரொம்ப அதிகமாக்கிது இன்னாவாம் எதுனா மேட்டர் நட்ந்துகிச்சா இன்னா” 

“ஏய்ய் அடிங்க.. சாமி மேட்டர்ல ரவுசு பேசாதன்னு எத்தினி தபா உன்னாண்ட சொல்லிக்கினேன், எத்தயும் நல்லா மாரியே எட்த்துக்க மாட்டியா நீயி, நாடுநல்லாருக்கனும் நாமநல்லாருக்கனும் நம்மாண்டையும் நாலுகாசு பொழங்கிக்கனும் நம்மாளுங்களும் சோக்கா சட்டயத்தூக்கிவிட்டுக்கினு திரியனுன்னு புள்ளைங்கோ நேந்துக்கினு மாலபோட்டிருக்குங்க நீ என்னாடான்னா சந்துல டபாய்ச்சி வுடுறே போடா பொறம்போக்கு பையா”

கூட்டம் நான்கு திசையிலும்  நான்குவிதமாகப் பேசித்திரிந்தது.

விடியற்காலையில் தொடங்கிய பூசைக்குப் பிறகு வரிசையாக நிற்கவைக்கப்பட்ட சாமிகள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கொட்டுகள் அதிர உடுக்கைகள் பிளக்க உக்கிரமாக மலை ஏறியவுடன் பெண்கள் கூட்டம் நாக்குகளைச் சுழற்றி குலவையிட, நீளமான வேல் ஒன்றின் கூர்மையான முனையில் விபூதியைத் தடவி கன்னங்களின் ஒருமருங்கின் வழியே நுழைத்து மறுவழியே எடுப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். இவ்வாறாக வேல் குத்தப்பட்ட சாமிகள் ஒருபுறமும் வேல் குத்துவதற்காக நிற்கப்படும் சாமிகள் மறுபுறமுமாக மதியவேளையைத் தாண்டிவிடும். கன்னி சாமிகளுக்கு சிறிய வேல்களும் அனுபவ மூத்த சாமிகளுக்கு நீண்ட வேல்களுமாக தெரு முழுக்க பக்திப் பரவசமாக காட்சி தரும். வேல்களின் கூர்முனையில் எலுமிச்சை செருகப்பட்டு இருப்பதை குழந்தைகள் வேடிக்கையாகப் பார்த்து தொட முயற்சிப்பார்கள்.

கெஜலட்சுமிக்கு சாமி நம்பிக்கை இல்லையென்றாலும் ஊரோடு ஒத்துப்போக இந்த மாதிரியான நாட்களில் மட்டும் நெற்றியில் நீளமாக விபூதியைப் பூசிக்கொள்வாள். கணவனும் மகனும் ஒரே விபத்தில் இறந்துப்போனவுடன் நாதியற்று அக்கம்பக்க மக்களையே சார்ந்து பூ விற்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்தாள். தொடக்கத்தில் இவள் கையால் பூ வாங்கத் தயங்கியவர்கள் சர்க்கரைத் தடவிய பேச்சுக்களால் கவரப்பட்டு நெருக்கமாகத் தொடுக்கும் அடர் மல்லிச்சரத்துக்கும் பிச்சிப்பூ சரத்துக்கும் வாடிக்கையாளர்களாக மாறிப்போனார்கள். தன்னையும் மீறி தனக்கு நடந்த அநியாயங்களை நினைத்து எப்போதாவது சட்டென வார்த்தைகளை உருட்டி விடுவாள்.

“சாமியாவது பூதமாவது, மனுசனுக்கு மனுசன்தான் சாமி பேயி எல்லாமே. ஒழைக்காம தின்னா காக்காசு வய்த்துல நிக்குமா சொல்லு.. தூக்கிட்டு வந்துட்டானுங்க உண்டியல” அவள் நிலையை நினைத்து மற்றவர்களும் புன்னகைத்து கடந்துவிடுவார்கள்.

“ஏண்ணே.. எம்மாந்தேரம் ஒனக்குப் பூசபோட்டும் கல்லுபோல ஜம்முன்னு நின்னுக்கிட்டுருந்தே.. என்னா கேடு ஒனக்கு.. எத்தயாவது குடிச்சு தொலச்சுட்டியா.. இல்லாங்காட்டி சரசா ஊட்டாண்ட..” 

”இந்தா.. மருவாத கெட்டுப்போயிரும் பாத்துக்கோ.. மால போட்டதால எதும் பண்ணமாட்டேன்னு நெனப்பா? கோழியாட்டம் அறுத்து தூக்கி போட்டுருவேன்” என்றான் கோபாலு.

“ஐயே.. இப்ப இன்னாத்துக்கு துள்ளுறே.. நா மட்டுமா பேசறேன்… ஏரியா பூரா ஒம்பேச்சுத்தான் கவனி.. பூசாரி முச்சூடும் ஒன்னையே மொறச்சுக்கினு கெடந்தாரு.. அல்லாத்துக்கும் மெர்சலாக்கீது ஆனா எனக்கு அப்டிலாமில்ல மன்சுல பட்டத பட்டுன்னு கேட்டுக்குவென் ஆங்“

கோபாலு தலையை திருப்பிக்கொண்டான். ஆளாளுக்கு இவனையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. காதுபட சிறுசுபெருசு எல்லாரும் கலாய்க்கத் தொடங்கி இருந்தனர். இத்தனை நாட்களாக சுத்தபத்தமாக விரதமிருந்ததைப் பற்றி யாருக்கும் தான் சொல்லப்போவதுமில்லை யாரைப் பற்றியும் கவலைப்படப் போவதுமில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தான். பொதுவாக இந்த விரதம் பிடிக்கும் நாட்களில் இவர்களைப் போன்ற மக்களுக்கு பெரிதும் சவாலாக இருப்பது அடிக்கடி வாயில் வரும் ***** ****** கெட்ட வார்த்தைகள் தான் “****** சாப்ட்டியா, ***** டீ அடிக்கலாமா” என சரமாறியாகப் புரளும் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து “வா சாமி.. போ சாமி” எனப் பேசுவது கடினம்தான்.

அதையும் சரிவரச் செய்திருந்தான் கோபாலு. வருடத்தின் அத்தனை இரவுகளுக்கும் குத்தகை கொடுத்திருக்கும் சாராயக்கடை மரப் பெஞ்சிலிருந்தும் தள்ளாட்டத்தோடு விழுந்துக் கிடக்கும் வீதிகளிடமிருந்தும் இந்த விரத நாட்கள் மட்டுமே விலக்காக இருந்தது. மாங்கு மாங்கென சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் கோபாலுவைக் குடிக்காதே என்று யாரும் சொல்வதில்லை. ரிக்‌ஷா இழுக்கும் பணியோடு சமயங்களில் கொத்தனாராகவும் வேலைக்குச் செல்லும் கோபாலு தனது உடல் வலியைப் போக்கிக்கொள்ளும் மருந்தாக சாராயத்தை மட்டுமே நம்பி இருக்கிறான். ஒரு குவார்ட்டர் போதும் அன்றைய இரவை தூங்க வைப்பதற்கு. 

சமயங்களில் செல்வியும் ஒரு டம்ளரோடு ஜோதியில் இணைந்துகொள்வாள். பத்து மணிக்கு மேலாக பாதி அடங்கிய சாலையில் மீன்பாடி வண்டி ஒன்றில் இருவரும் அமர்ந்து கொள்வார்கள். அது ஒரு அலுவலக கட்டிடத்தின் முற்புர தெருவாசல். அதன் குடௌன் ஷட்டருக்கு வெளியே நீண்ட திண்ணையோடு எப்போதும் திறக்காத கதவு ஒன்றின் வெளிப்புறத்தில் மரப்பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அதில் துணிமணிகள், பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்களை அடுக்கி வைத்திருப்பார்கள். 

அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு மாட்டுக்கொட்டகையாக இருந்ததிலிருந்தே பலகாலமாக இதுதான் அவர்களின் வீடு. அந்த ஏரியா முழுக்க இதுபோன்ற தெருவோர மக்களால் சூழப்பட்டிருந்தது. இரண்டு மூன்று கட்டிடங்களுக்கு இடைவெளியில் இன்னொரு குடும்பம் இருக்கும். அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடியும் இடம் ஒரு குட்டிச்சுவர் கூட இல்லாத வெட்டவெளித் தெரு மட்டுமே. தெருக்குழாயில் வரும் அடிபம்பில் வரிசையாக நின்றுநிரப்பி அடுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடங்களால் குட்டியாக ஒரு கோட்டைச்சுவர் இரவு உருவாக்கப்பட்டு காலையில் கலைக்கப்படும் அது ஒரு எல்லைக்கோடு.

கோபாலுக்கும் செல்விக்கும் ராமு, சேகர் என்று இரண்டு ஆண் மகன்களும் கனியம்மாள் என்ற பெண் பிள்ளையும் இருந்தார்கள். இதைத்தவிர இவர்களில் குடும்பத்தில் ஒருவராக இருந்தது “கறுப்பு”. 

தெருநாய் என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாத வனப்பில் இருந்தது கறுப்பு. வளழவளழப்பாக மேல்நாட்டு வனப்புடன் பழைய அரசுமருத்துவமனைக்கு பின்புறமுள்ள குப்பைமேட்டில் பிறந்து சிலமணித்துளிகளே ஆகியிருந்த கறுப்பை சிறுநீர் கழிக்க ஒதுங்கிய ராமு தூக்கிக்கொண்டு ஓடிவந்தான்.
 
“நைனா நைனா.. இந்தாரேன் நாக்குட்டி நைனா.. எம்மாம் பொடிசா கீதுன்னு பாரு.. கண்ணப்பாரேன் தொறக்க கூட இல்ல.. ஐஐஐ.. நக்குது நைனா.. யம்மா யம்மா இத்த நாம்பளே வளப்போம்மா.. என்னாண்டயே கெடக்கட்டும்மா.. நைனா வோனான்னு சொல்லிராதேப்பா“

சேகருக்கும் கனியம்மாளுக்கும் கூட கறுப்பை பிடித்துப்போனது. பால் புட்டியில் உறிஞ்சிக்கொண்டே ராமுவின் மடியில் தஞ்சம் அடைந்து கிடந்தது. பிள்ளையைப் போல வளர்ப்பதற்கும் பிள்ளையாகவே வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கோபாலு பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டான். ராமு பிள்ளையாகவே வளர்த்தான். முதலில் கறுப்புவுக்கு சிவப்புநிறக் கயிறு கழுத்தில் அணிவிக்கப்பட்டு தெரு முழுக்க ஓடவைத்து அழகு பார்த்தான் ராமு. பகல் பொழுதுகளில் நெருக்கமான போக்குவரத்தில் ஓடுவதற்கு கறுப்பு மிகவும் திணறியது. ராமு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கீழே இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்வான். சட்டென கடக்கும் ஆட்டோ, கார், சரக்குகள் ஏற்றிவரும் மாட்டு வண்டிகள், லாரிகளை மிரட்சியுடன் கறுப்பு பார்ப்பதை ராமு கவனித்துக்கொண்டான். அதனாலேயே மடியைவிட்டு இறக்கிவிடாமல் கவ்விக்கொண்டு அலைந்தான்.

ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. கறுப்பு ஒரு ஹீரோவைப்போல ஏரியா முழுக்க வட்டமிடத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய் என்று ஏரியா முழுக்கப் பேசத்தொடங்கி பத்தாயிரம் பதினைந்தாயிரம் தருகிறேன், கறுப்பைக் கொடுங்கள் என்று அடுக்குமாடிவாசிகள் அலுவலகப் பணியாளர்கள் வந்துக்கேட்டும் கொடுக்க மறுத்து மொத்த குடும்பமும் உயிராக வளர்த்தது. 

கனியம்மாள் குளிக்கும்போதும் இயற்கை உபாதையால் ஒதுங்கும் போதும் கறுப்பு காவலுக்கு நின்றுக்கொள்ளும். எதேச்சையாக யாரேனும் அவ்வழியில் கடந்தால் கூட பவ்பவ்பவ் எனக் குரைத்து விரட்டிவிடும்.

சரியாக இரண்டு வாரங்களுக்கு முந்தைய சனிக்கிழமை ஒன்றில் பக்கத்து ஏரியாவில் நடந்த விசேஷத்திற்கு எடுபிடி வேலைக்குச் சென்ற கனியம்மாளுடன் துணைக்குச்சென்ற கறுப்பு திரும்பவில்லை. கணநேரத்தில் ஏரியா முழுக்க இரண்டாக்கி விட்டார்கள். கனியம்மாள் வேலை மும்முரத்தில் கறுப்பைக் கவனிக்கத் தவறியிருந்தாள். ஆளாளுக்கு ஒவ்வொரு புறமாக தேடித்திரிந்தார்கள். ராமு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன்போலச் சுற்றிச்சுற்றித் தேடினான். பள்ளிக்கூடம் ஆஸ்பத்திரி, ரேசன்கடை, கிருஷ்ணன் கோவில், இரும்பு க்டௌன் என இவர்கள் போகும் அனைத்து இடங்களுக்கு பதைபதைப்போடு ஓடினார்கள். 

“கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு” கறுப்பு வரவே இல்லை.
  
“ந்தா.. ஏய் எம்மாந்தேரம் கூவுறேன்.. இன்னா நெனப்பு ஒனக்கு.. அப்டியே குந்திக்கினுக்கீரே”

செல்வி தோள்களைப் பிடித்து உலுக்கினாள். நினைவுகளிலிருந்து மீண்டவன் கறுப்பும் கறுப்புசாமியும் தன்னை கைவிட்டதற்கான காரணத்தை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“இல்லம்மே மன்சே சரியில்லமே இந்த சாமிக்கு இன்னாக்கேடு வந்திச்சு எம்மேல ஏற.. இன்னா ப்ரச்சன நாயென்ன அவ்ளோ ஆகாம போய்ட்டேனா என்னா.. எம்மாந்தேரம் பூசாரி விபூதி போடறாரு அப்டியே கிங்காங்கணக்கா நிக்குறேன்.. ஒருப்பொட்டு ஏறலேன்னா என்னா அர்த்தம் கேக்கறனுல்ல.. இன்னா அர்த்தம்.. டேய் கய்த கோவாலு.. ஒனக்கு இன்னா மய்த்துக்கு சாமின்னுதானே எங்கைல சொல்லிக்குது“

“ஐயே மஸ்த்து சும்மா வாயவச்சுக்கினு கம்முன்னு கெடம்மே.. நீ இன்னியும் மாலய கலட்டிக்கல கவ்னம் வச்சுக்கோ வாயுல எதுனா கெட்ட வாத்த வச்சுக்காத புர்ஞ்சுதா..” செல்வி கடிந்துக்கொண்டாள்.

இரவு.. ஏரியா முழுவதும் நாற்புறச்சந்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வெள்ளைத்திரையில் ப்ரொஜக்டர் உதவியுடன் திருவிளையாடல் படம் பார்த்துக்கொண்டிருந்தது. பெட்சீட், பாய், தலகாணி, சொம்பில் தண்ணீர், நொறுக்குத்தீனி ஆகியவற்றுடன் பெண்கள் கூட்டமாக அமர்ந்திருக்க வேல்கம்பி குத்தியதுளை கன்னத்தில் மூடுவதற்கு முன்னமாக பலநாட்கள் விரதத்தை முடித்த உற்சாகத்தில் நேற்றைய சாமிகள் சாராயக்கடையை ஒட்டுமொத்தமாக காலிசெய்து மிதந்துகொண்டிருந்தது. உடல்வலித்தீர நிறைபோதையுடன் மல்லாக்கக் கிடந்து வெள்ளைத்திரையில் சிவாஜிகணேசன் சாவித்திரியின் நடிப்பை உச்சுக்கொட்டி ரசித்தார்கள்.

கோரைப்பாயின் மத்தியில் மல்லாந்தபடி வானத்தை வெறித்துக்கொண்டே “யம்மா கறுப்பு.. நைட்டுக்கு நாஸ்தா துன்னிருக்குமா.. எம்மூஞ்ச தேடித்தேடி எம்மாந்தூரம் அலயுதோ என்னமோ.. எனக்கு வாழவே புடிக்கலம்மா நாவேனா செத்துப்போயிடவாம்மா” என்றான் ராமு.

“**** இன்னாடா சொல்லிக்குனே நீய்யி எடுபட்டப்பயலே.. அதுக்காடா ஒன்னய பெத்துக்குனேன் கய்த கஸ்மாலம்.. ஒன்னய வாரி கொட்த்துட்டு நாம்மட்டும் உயிரோட கெடப்பேன்னு நெனச்சுக்கினியா.. இன்னொரு தபா இதுமேரி சொன்னே.. மவனே நானே ஒன்னய கொன்னுட்டு தண்ணி லாரி மின்னாடி பாஞ்சுடுவேன் பாத்துக்கோ”

கோபாலு முழு போதையில் கைலி மேலேறியது தெரியாமல் புரண்டு படுத்தான். சேகர் ஆழந்த உறக்கத்தில் கிடக்க கனியம்மாள் மட்டும் படத்தையும் இவர்களையும் கவனித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தாள். திரையில் சிவாஜிகணேசன் கண்களை அகலத்திறந்து நாகேசிடம் “குற்றமா.. என் பாட்டிலா.. எவன் சொன்னான்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

“டேய் அழுவாதடா.. நம்ம கறுப்பு அறிவுள்ள கொய்ந்துடா.. அது எம்மாந்தூரம் போனாலும் பொழச்சுக்கும்.. அதுக்கு இப்ப நம்ம ஒதவிலாம் இல்லாமலயே தின்னத்தூங்க தெரியுண்டா.. நீ கவலப்படாம கெட. என்னிக்காச்சும் உன்னியத்தேடி வரும்பாரு” செல்வி ராமுவை ஆற்றுப்படுத்தினாள்.

பனி பொழியத் தொடங்கியது.

“இந்தாப்பா கோவாலு.. சாருதான் நமக்கு இனி புதுமொதலாளி.. என்னபாக்கறே.. சார் வீட்டுக்குத்தான் அடுத்தமாசம் முழுக்க வேல பாக்கப்போறோம். சுமார் ஐம்பது வருசப் பழைய வீடு பாத்துக்கோ.. அத்த அப்படியே அஞ்சடிலேந்து எட்டடி வரைக்கும் மேல தூக்கணும் ரெண்டு மாசங்கூட வேல இழுத்துக்கும்னு நெனக்கிறேன்.. காண்ட்ராக்ட நம்ம இஞ்சினியர் கிட்டத்தான் கொடுத்திருக்காரு.. நீயும் உன் எரியா டீமும் ரெண்டுநாள்ள வந்திடுங்க வெள்ளிக்கெழம காலைல ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடணும். நல்லநேரம் தாண்டகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்ட்டாங்க. கரெக்டா வந்துடுங்க.. பத்துபேர இட்டுட்டு வந்துடு பொறவு தேவப்பட்டா கூட்டிக்குவோம்.. நாலு பொம்பளைங்களும் மீதி ஆம்பளைகளா இருக்கட்டும்.. சரியா மேட்டர காதுல வாங்கிக்கிட்டியா… இல்ல மறுவடி சொல்லணுமா”

“வோணாம் மேஸ்திரி.. கரிட்டா வாங்க்கிக்கினேன்.. இன்னிக்கு தேதிக்கு ஊட்ட தூக்குறதுல்லாம் மேட்டரே இல்ல.. அல்லாமே சுலூவா முடிஞ்சுடும் பாத்துக்கலாம்”

“அப்ப சரி. அட்வான்ஸ் எதும் வேணுமா என்னா”

“ஆமாங்க.. அஞ்சாய்ரம் ரூவா கொடுங்க பசங்களுக்கு தரணும். மத்தத கணக்கு பாத்துக்குவோம்” பெற்றுக்கொண்டு நகர்ந்தான்.

அது ஒரு பிரசித்திப்பெற்ற தெருவின் மத்தியில் அமைந்திருக்கும் பழையவீடு. இடமும் வலமும் எதிர்ப்புறமும் வீடுகளால் மட்டுமே சூழப்பட்டிருந்தது. தொண்ணூறு சதவீத வீடுகள் நவநாகரிக அமைப்பிற்கு மாறியிருந்தன. கண்ணாடி பால்கனிகள், ஆளுயர இரும்புகேட், தேக்குமரகேட் என வகையாகப் போடப்பட்டு தெருவின் கால்வாசிவரை கார்கள் இறங்க பார்க்கிங் தரையை இழுத்துப் போடப்பட்டிருந்தது. வேப்ப மரங்களும் சரக்கொன்றை மரங்களும் தெருக்களில் அடுக்காக நிற்க, வீடுகளுக்குள் பெயர்தெரியாத அயல் தேசத்துமரங்கள் காற்றுக்கும் உதவாமல் இலைக்கும் உதவாமல் தேமே என்று நின்றிருந்தன.

மொதலாளி என்று அழைக்கப்படும் முருகானந்தத்தின் வீடு முற்றிலும் பழைமையில் மூழ்கி இருந்தது. சுமார் நான்காயிரம் சதுர அடிகள் இருக்கும் அவ்வீட்டில் வெளிப்புறத் திண்ணையைத் தவிர்த்து உள்ளே தூண்களும் தடித்த சுவர்களும் பிரமாண்டமான அறைகளும், பெரிய அடுக்களையுமாக கம்பீரமாக இருந்தது. இன்றைய தேதியில் உடைத்துக் கட்டினால் அவ்வளவு ஜோராக அடுக்குமாடி குடியிருப்பைக்கூடக் கட்டலாம். அத்தனை பிஸியான சாலை இது. இந்த வீட்டினை மராமத்து செய்ய என்ன இருக்கிறது என அக்கம்பக்கத்தில் புரசலாகப் பேசிக்கொண்டனர்.

கோபாலு தனது சக கொத்தனார்களுடன் நான்கு பெண் உதவியாளர்களுடன் ஷேர் ஆட்டோவில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து இறங்கிவிட்டான். அந்த வீட்டின் வாசலில் பூஜை செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்துகொண்டிருந்தார்கள். முருகானந்தத்தின் பேரன் செல்வம் அங்கேயும் இங்கேயும் ஓடி பூஜைப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தான். இரண்டு ஐயர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கி தயாராக இருந்த பலகையில் அமர்ந்து வேலைகளைத் தொடங்கினார்கள். பூஜை முடியும்வரை தெருவிலுள்ள திண்ணையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த கோபாலுவின் குழு பூஜை முடிந்தவுடன் தங்களின் பணியைத் தொடங்கச் சித்தமானார்கள்.

“மொதலாளி அப்டியே எங்களுக்கும் வேலயத் தொடங்க மின்னாடி சின்ன பூச போடணும். கோழி ஒன்னு வாங்கியாந்து பலிபோட்டு ரத்தத்த தெளிச்சுவுட்டோமுன்னா சுலூவா இஸ்டாட் பண்ணிடலாஞ்சார்”

கோபாலு சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து அலறிக்கொண்டு ஒரு பெண் ஓடிவந்து பூஜைக்காகப் போட்டிருந்த சுடுமண்ணை அள்ளி வீசினாள்.

“நாசமாப்போறவனுகளா.. நாசமாய்ப் போயிடுவேடா நாசமா.. நானு இங்கன இருக்குற வரையும் யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்ல அனுமதிக்க மாட்டேன்.. போங்கடா வெளில.. இது என் தங்கத்தோட வீடு. இங்க யாருக்கும் அனுமதி இல்ல. போங்கன்னு சொல்லுறேனில்ல.. போங்கோ”

கோபாலு வெலவெலத்துப் போய்விட்டான். என்ன நடந்ததென அணுமானிக்கும் முன்னம் முருகானந்தம் தனது பேரனுக்கு கண்ணைக்காட்ட செல்வம் அந்தப் பெண்ணை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். 

இஞ்சினியர் தடதடவென ஓடிவந்து, “ஏய் பொறம்போக்குப் பயலே அறிவிருக்கா ஒனக்கு. எங்க எதக்கேட்கணும்னு கொஞ்சமாச்சும் வெவஸ்தையே கெடயாதா மயிரு“

“ஸாரி சார்.. எதுனா மிஸ்டேக்கா கேட்டுக்கிட்டனா என்ன? மேட்டர் என்னான்னா நம்ம சனங்க பூரா கட்டட வேலக்கில்லாம போயி பெருசா பயக்கமில்ல. இப்பத்தான் அஞ்சுபத்து வருஷமா போறோம். பயபுள்ளைக நம்மல நம்பி பொழப்புக்கு வருதுக. வந்த இடத்துல கல்லுமண்ணு இடிச்சி வாரும்போது எதுனா ராங்கா நட்ந்துகிச்சுன்னா அவ்ளோதான். ஏரியால கால் வெக்கமுடியாது. ஒன்னாக்கூடி எனக்கு நலங்கு வச்சிடுவானுங்க.. அதான் முன்சாக்கிரதையா சொன்னேன்”

இஞ்சினியர் குமார் சற்று நிதானத்துடன் கோபாலுவை தோளைத்தொட்டு அழைத்துக்கொண்டு தெருவோர தேநீர்க்கடைக்கு சென்றார். அவர்களைத் தொடர்ந்து மாரி, சங்கர், ராஜா, வெங்கட் ஆகியோரும் வந்தார்கள். ஆளாளுக்கு பீடி சிகரட்டைப் பற்றவைத்து இழுத்துக்கொண்டே

“இந்தாப் பாருப்பா.. இந்த வீட்டப் பொருத்தவரைக்கும் உங்களுக்கு மூனு கண்டிஷனுங்க. நல்லா தெளிவா கேட்டுக்கங்க.. அதுக்கு ஒத்துகிட்டா வேலையப் பாப்போம். இல்லன்னா நா வடநாட்டு ஆளுங்கள வேலைக்கு இறக்கிடறேன். நீங்க போய்கிட்டே இருக்கலாம்” 

“என்னாசாமி ரொம்பசுத்துறே மொதல்ல மேட்டரசொல்லு ஒத்து வந்தா பாப்போம் இல்லாங்காட்டி நீ என்ன சொல்றது.. நாங்களே போய்க்கின்னே இருப்போம்.. ஆங்”

“இங்க பாருப்பா இது ஒன்னும் சாதாரண விஷயமில்ல. நீங்க பாட்டுக்கு கவனமில்லாம இருந்துடக் கூடாது. இந்த வீட்ட நாம முழுசா இடிக்கப் போறதில்ல. ரொம்ப பாரம்பரியமான வீடு. கொஞ்சமா ஆல்டர். அதான் மராமத்துப் பண்ணப்போறோம். முன்னாடி இருக்குற திண்ணைய இடிச்சுட்டு கார் பார்கிங் போடணும், அப்புறம் வீட்டுக்குள்ள மொத மாடிய கை வைக்காம ஜாக்கி போட்டு நிறுத்திட்டு கீழத்தரையை இடிச்சுட்டு கொத்திப்பூசி கிரானைட் போடணும். வீட்ட சுத்தி பார்டர் போல இடிச்சுத்தள்ளிட்டு புதுடிசைன்ல எலவேசன் வைக்கணும், நடுப்பகுதி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அதத்தான் ஜாக்கி போட்டுத் தூக்கப் போறோம். அப்புறம் கொஞ்சமா இண்டீரியர் வேலைகளும் இருக்கும். அதுக்கெல்லாம் மொறப்படி படிச்ச டிசைனர்களை வச்சு செஞ்சுடுவேன். நீங்க கொத்தனார் வேலையையும் ஏத்தி இறக்குற வேலைகளை மட்டும் பாத்தா போதும். ஐயோ சொல்ல மறந்துட்டேனே.. அந்த மூனு கண்டிசன் என்னான்னா.. நீங்க யாரும் வேலைபாக்குற வீட்டுக்கு உள்ளாற என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கவனிக்க கூடாது. அவங்ககிட்ட போயி ஏன் என்னான்னு பேசக்கூடாது. முக்கியமா அதப்பத்தி வெளில யாருகிட்டயும் போயி எதுவும் சொல்லவும் கூடாது கேக்கவும் கூடாது. மத்த வீடுங்கள்ள வேலை பாத்தா மாதிரி உரிமையெடுத்துகிட்டு பேசி சிரிக்கலாம்னு நினச்சுக்கூட பாக்காதிங்க. இதுக்குலாம் ஓகேன்னா கடப்பாரய மண்வெட்டிய எடுத்துக்கிட்டு உள்ளார போங்க இல்லன்னா”

“ஐயே இம்புட்டுத்தானே, இத்த சொல்ல இம்மாம் பெரிய பில்டப்பு வேற! அடப்போசாமி.. யாரு இன்னா பண்ணுனா எங்களுக்கென்னா? எங்க வேலய நாங்க பாக்கறோம். கையில துட்டு வாயில தோச. அம்மாந்தேன் சர்தானே மச்சி” கூட்டத்தோடு சிரித்தார்கள்.

முதலில் திண்ணையை இடிக்கத் தொடங்கினார்கள். பாறாங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட திண்ணை. கடப்பாரை இறங்கவே திணறியது. வந்ததில் இளசான முறுக்குடனிருந்த மாரி வேகமாக கடப்பாரையை இறக்க கைவழுக்கி மடித்துக்கட்டியிருந்த லுங்கியைத்துளைத்து தொடையில் பாய்ந்து இறங்கியது. ஆவென அலறித்துடித்தவனை எல்லாரும் சேர்ந்து அள்ளி ஆட்டோவில் போட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

நல்லவேளையாக பெரிய பாதிப்பில்லாமல் எட்டுத்தையலோடு தப்பினான். திரும்பவும் மாரியை ஏரியாவுக்கு அனுப்பிவிட்டு மற்றவர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். வரும்வழியிலேயே கோபாலு ஆட்டோவை கோழி மார்க்கெட்டுக்குத் திருப்பி நல்ல கொழுத்த வெடைக்கோழி ஒன்றை வாங்கி ஏரியா பூசாரியிடம் கொடுத்து அவசரகதிப்பூசைப் போடச்சொல்லி கண்களை மூடி எல்லோரையும் வேண்டச்சொல்லி கேட்டுக்கொண்டு கழுத்தைத்திருகி போட்டுவிட்டு வந்தான். 

திண்ணையை முழுவதுமாக இடித்து கார் பார்கிங் அமைக்கத் தோதாக இடத்தை ஒதுக்கிவிட, வீட்டின் உள்பக்க வேலைகளும் ஜரூராகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு பழைய வீட்டின் அடையாளத்தைத் திறந்து நாகரிக மாற்றத்தை அணிவிக்க இஞ்சினியர் தலைமையில் போராடிக் கொண்டிருந்தனர். புதிதாக வீட்டைக் கட்டுவதற்கும் மராமத்து செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இவர்கள் வேலை செய்வதற்கு இடையூறு இல்லாமல் முருகானந்தத்தின் குடும்பம் எதிரே காலியாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளத்தில் தற்காலிகமாகக் குடிபெயர்ந்திருந்தது. செல்வமும் அவனது தங்கை அனிதாவும் அடிக்கடி வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள். காபி டீ குடித்துக்கொண்டே அரட்டையாகப் பேசி அனைவரிடமும் பழகியும் விட்டார்கள். வீடு முழுக்க ஊன்றப்பட்ட ஜாக்கி ஒரு மில்லிமீட்டர் கூட அளவில் வேறுபாடு இருந்து விடக்கூடாதென்பதில் இஞ்சினியர் கராராக இருந்தார். ஜாக்கியை மேஜிக் பூதமென்றே பெயர்வைத்து அவர்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர். 
 
”இந்தாருடா பெரிய்ய அல்லாவுத்தீன் பூதம் வூட்ட அப்டியே மேலாக்க தூக்கி நிறுத்துது பாரு. இத்தனூண்டு கம்பி. கொஞ்சூண்டு ஸ்க்ரூ டூல்ஸ். இம்மாம் பெரிய ஊட்ட பள்ளத்துலேந்து மேட்டுக்கு இட்டாந்துதுடுது. படா ஜோராக்கீதுப்பா”

“இத்தெல்லாம் அவ்ளோ பெரிய்ய மேட்டரெல்லாம் கெடயாது கேட்டுக்கினியா.. பெல்ட் காங்கிரிட்டிடுன்னு வச்சுக்கோயேன் ஒன்னியும் பண்ணிக்க மிடியாது. அப்போதைக்கு மேஸ்திரி கட்டுக்கல்லு வச்சு அடுக்கி் கட்னதால ஈஸியா தூக்கிடறாங்க”
“அதான.. ஒன்னியுமே இல்லாத காலத்துலயே அனுமாரு சாமி பரங்கி மலையப் பேத்து மருந்துக்கோசரம் பறந்துப்போயி சரியான நேரத்துக்கு சேக்கலையா என்னா”

“ஆமா அவரு பரங்கிமலையப் பேத்தாரு நீயி எமய மலையப் பேத்தே.. போடா கிறுக்குப்பயலே”

“என்ன எப்பா பாரு ஒரே பேச்சுத்தானா வேலையப் பாருங்கப்பா.. இதுக்குத்தான் ஹரியானா குஜராத்துலேந்து பசங்கள வரவழைக்கலாம்னு ஓனர்ட்ட சொன்னேன். வேணாம் நமக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு செய்யுன்னு பிடிவாதமா மறுத்துட்டாரு. இன்னிக்கு தேதிக்கு ஜாக்கி போட்டு வீட்டதூக்க எங்க கம்பெனிய விட்டா இந்த ஏரியலேயே ஆளு கெடயாது பாத்துக்கங்க. அம்பது லட்சத்துக்கு கட்ட வெண்டிய வீட்ட பத்து லட்சத்துக்கு தூக்கி நிறுத்திட்டா போதும். பதினஞ்சு இருவது வருஷத்துக்கு சும்மா ஜம்முன்னு வாழலாம்.. யப்பா  கோபாலு ஒன்னோட பொறுப்புலத்தான் எல்லாரும் வந்திருக்காங்க அப்பப்ப எடுத்துச்சொல்லி ஏவனுமுல்ல எழவு ஊட்டுல கவுந்து கெடக்குற மாதிரி இடிஞ்சுபோயி வேலப்பாத்தா என்னா பண்றது” என்றார் எஞ்சினியர்.

கோபாலு இத்தனையும் காதில் வாங்கிக்கொண்டும் ஒரு ஜாக்கியின் மீது அடுக்கியுள்ள மரச்சட்டத்தை கட்டிடத்தின் அடியில் முறுக்கேற்றி டைட் செய்துக்கொண்டிருந்தான். தன்னைச்சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மீதும் பற்றிருந்தும் இல்லாமலுமாக இரண்டுங்கெட்ட மனநிலையில் இருந்தான். ஒவ்வொரு இரவும் சாராயக்கடையில் முழு போதையில், “எனக்கேண்டா சாமி வரல”

“கறுப்பு எங்கடா போச்சு”

வீடு ஓரளவு முடிந்திருந்தபோது முருகானந்தம் தனது மனைவி, மகன், பேரனோடு கொஞ்சம் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே வந்திருந்தார். மாடியில் இருந்தபடியே கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தார். வெளியே போகவர புறக்கடைப் படிகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒருவார காலத்தில் வீடு குடியேற தயாராகிக்கொண்டிருந்தது.

முருகானந்தத்தின் மனைவியின் செயல்பாடுகள் அனைவரையும் கலவரப்படுத்தியது. கைகளின் மணிக்கட்டுகளில், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு காய்த்திருந்த புண்களின் முற்றிலும் ஆறாதவடு தெரிந்தது. தொடக்கத்திலேயே மண்ணை அள்ளிவீசி சாபமிட்டுச் சென்றவள் இப்போது வரை அதன் குணம் மாறாமல் இவர்களை முறைத்துக்கொண்டே தான் இருக்கிறாள். புறவாசல் வழியாக இறங்கும் படிக்கட்டுகளுக்கு கீழாக இருக்கும் இடைவெளியில் பழைய துணிகள் மரச்சக்கைகள் ப்ளாஸ்டிக் பொருட்களை தற்காலிகமாகப் போட்டு வைத்திருந்தார்கள். அதன் மத்தியில் சுருண்டுக்கிடந்து நாளெல்லாம் கண் இமைக்காமல் கொல்லையில் மூடப்பட்டு புழங்காமல் கிடந்த கிணற்றையே வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தாள். மனநிலைப் பிறழ்ந்தவளென ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு சர்வ அமைதியுடனும் சிவப்பேறி வெறிக்கும் கண்களைத் தவிர எந்த மாற்றமுமில்லாத முதியவளாகவே தெரிந்தாள். ஆனால் யாராவது அந்தக் கிணற்றின் மூடப்பட்ட இரும்புத்தகரம் தெரியாத அளவிற்கு பூசப்பட்டிருந்த திண்டின்மீது அமர்ந்தாலோ நடந்தாலோ சட்டென வெகுண்டு கத்தத்தொடங்கி விடுவாள். 

“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத ஸார்.. ஒம்பொஞ்சாதிக்கு என்னா நோவு.. எதுனா பேயி பிசாசு புடிச்சுக்கிட்டிருக்கா சொல்லுபா எனக்கு தெரிஞ்ச பெரிய சாமியாரு ஒருத்தரு தாம்பரத்துல இருக்குறாரு. மந்திரிச்சு விபூதி போட்டாருன்னா குட்டிச்சாத்தான்லேந்து ரத்தக்காட்டேரி வரைக்கும் தெறிச்சு ஓடிப்போயிடும்.. யாருக்கும் தெரியாம காதுங்காதும் வச்சாமாரி இட்டுக்கினு வரவா? சொல்லு”

கோபாலு பேசிக்கொண்டிருக்கும் போதே கீழே கிடந்த செங்கல் ஒன்றை எடுத்து கோபாலுவின் மண்டையின் மீது எறிந்தார் முருகானந்தம்

“எச்சல நாயி வெளக்கம் கேக்குதுப்பாரு சனியனே, கொஞ்சம் சிரிச்சு பேசுனா சரிக்கு சமானம் ஆகிடுவியோ.. ஈத்தரநாயே, நான் யாரு என்ன ஆளுன்னு தெரியாம எங்குடும்ப விஷயத்த அத்தனை பேரும் பார்க்கிறமாதிரி சத்தமா பேசுதுப்பாரு. பொறம்போக்கு நாயி.. நாயி.. நாயி.. இனிமே உன் மொகத்த இங்கன பாக்கவே கூடாது காசத்தூக்கி எறியுறேன். எலும்பக் கவ்வுற மாதிரி கவ்விக்கிட்டு போடா நாயே.. நாயே.. நாய்க்கு பொறந்த நாயே”

கிட்டத்தட்ட அவருடைய வெந்தாடி தோள்பட்டை வயிறு தொடைகள் எனச் சர்வமும் அதிரக் கத்தினார். கோபாலுவும் அவனுடன் வந்த அத்தனைப்பேரும் பேயறைந்ததுப் போல உறைந்து நின்றார்கள். சில நொடிகள் கடந்தே கோபாலுவுக்கு ஒவ்வொரு வார்த்தையாக மீள்பிறழ் ஆனது. ஒவ்வொரு வார்த்தைக்கும் கோபப்பட்டான். கடப்பாறை அல்லது ஜாக்கியால் முருகானந்தின் மண்டயைப் பிளந்துவிடத் தேடினான். அவனது உடல் மொழியைப் புரிந்து கொண்ட வெங்கட், சங்கர் கோபாலுவை இழுத்துக்கொண்டு வெளியேறி தெருவில் வந்த ஒரு ஆட்டோவில் அழுத்தி போகச்செய்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தீர்ந்து போயிருந்தன. கோபாலு ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். கறுப்பிற்கு பகரமாக மைக் டைசன் என்று பெயரிடப்பட்ட நாயொன்றை வளர்க்கத் தொடங்கியிருந்த மகனிடம், “அத்த கறுப்புன்னே இஸ்த்தாதான் இன்னாவாம்.. என்ன இருந்தாலும் எங்கறுப்பு மாதி வருமாடா” என்றான். செம்பட்டை நிறத்தினாலான மைக்டைசன் அவனுடைய கால்களை நக்கியது. உற்றுப்பார்த்து சிரித்துக்கொண்டான். 

முருகானந்தத்தின் மனைவி மரகதம் இறந்த செய்தியை இரங்கல் நோட்டிஸ் ஒட்டப்பட்ட சுவரில் சிறுநீர் கழிக்கையில் கவனித்த கோபாலு மரணவீட்டிற்குச் சென்றான். மிகப்பெரிய கூட்டத்தில் அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை. தன்னுடைய கைகளால் தூக்கி நிறுத்தப்பட்ட வீட்டினுள் நுழைவதை சற்று மிதப்பாக உணர்ந்தான். முருகானந்தத்தின் மூத்த மகள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். அவளுடைய இரட்டை மகள்கள் ஆங்கிலப் படங்களில் வரும் வெள்ளை கொழுகொழு சிறுமிகளைப் போல் வீடுமுழுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனுக்கு பிறந்த மகள்களென ஊரார் புறம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

நடுஹாலில் மரகதம் கிடத்தப்பட்டிருந்தாள். அவளின் கால் புறத்தில் ஈஸிசேர் ஒன்றில் முருகானந்தம் அழுவதைப்போல் பாசாங்கு செய்து கண்களில் தீர்க்கமான நிம்மதியும் கடைவாயில் புன்னகையும் வழிவதை மறைக்க போராடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோபாலுவின் காதுகளில் தெளிவாக மிகத்தெளிவாகக் கேட்டது.

“அடப்பாவிகளா.. கொலைகாரப்பாவிகளா… எங்கம்மாவையும் கொன்னுட்டிங்களேடா.. உங்க சங்காத்தமே வேணான்னு தானே தொலதூரமா தொலஞ்சுப் போனேன் இப்படி தலையில இடியத்தூக்கி போட்டுடிங்களே.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருக ஜென்மங்கள் நீங்கதாண்டா.. டேய்.. மகாப்பாவி.. நீயெல்லாம் எங்கூடப் பொறந்தவனா!?.. ச்சீய், நீயும் அந்தாளும் சேர்ந்து செஞ்ச அநியாயங்களுக்கெல்லாம் உங்களுக்கு நல்ல சாவே வராதுடா. ஓடுற லாரில அடிபட்டு நடுரோட்டுல நசுங்கித்தான் போவிங்க.. ஐயோ.. அம்மா என்னப்பெத்தவளே.. நீ மட்டுந்தானே எனக்குன்னு இருந்து இவனுங்களோட போராடிக்கிட்டுக் கெடந்தே.. இப்ப நீயும் போயிட்டியே.. சரிம்மா.. சரிம்மா.. நீ நிம்மதியா தூங்கும்மா என் செல்லமே”

மரகதத்தின் தலையை தடவியபடியே..
“அம்மா.. ம்மா.. அன்னிக்கு நடுராத்திரி இந்தக் கொலகாரப்பாவிங்க எம்பச்சக்கொழந்தய கதறக்கதற உயிரோட கிணத்துல தூக்கிப்போட்டானுங்களே.. அன்னிக்கே நானும் செத்துப்போயிருக்குணும்.. நீதான் தடுத்துட்டே.. ஈரக்குல கருகி பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியஎரிய உனக்காக மட்டுந்தான் உயிரோட இருந்தேன்.. என்னிக்காவது நானும் கெணத்துல விழுந்துடுவனோன்னு கெணத்த மூடிப்போட்டானே ஒம்புருசன்.. அவன மட்டும் எப்பயுமே மன்னிக்க மாட்டேம்மா.. எங்கூடப்பொறந்த பரதேசிப்பய இந்த வீட்ட விக்கணுன்னு கையெழுத்துப் போடச்சொல்லி கெஞ்சினாம்மா.. நா போடலம்மா.. இவனுங்க புழுபுழுத்துப் போனாலும் இந்த வீட்ட விக்க விடமாட்டேம்மா.. எம்புள்ள கெணத்துக்குள்ள நிம்மதியா தூங்கணுன்னா இவனுங்களோட உயிர எங்கையாள எடுக்கணும் பாவிமனசு கேக்கமாட்டேங்குது.. இவனுங்கள மீறிப்போயி அப்துல்லாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு லாரிய ஏத்திக்கொன்னுப் போட்டானுங்க. அப்பயும் வெறி அடங்காம அப்துல்லாட புள்ளைய உயிரோட கெணத்துல போட்டு சாவடிச்சானுங்க.. இப்ப ஆண்ட்டனியோட புள்ளைகள பெத்துட்டு வந்திருக்கேன். இப்ப என்ன பண்ணுவானுங்களாம்.. மூஞ்சிமேல மீசைவச்ச ஆம்பளைங்கற நினைப்பு இருந்தா இந்தப்புள்ளைங்க மேல கையவைக்கச் சொல்லும்மா.. டேய் ஈத்தரப்பயலே.. இப்ப வையுடா கைய.. ஆண்டனியோட துப்பாக்கிலேந்து குண்டு வெடிச்சு நீயும் உங்கப்பனும் சாகறத பாத்துட்டு நிம்மதியா எங்கம்மா போகட்டுண்டா”

கோபாலு விக்கித்து நின்றான். அத்தனை உண்மைகளும் கட்டவிழ்ந்த தருணம். ஆம்.. அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்த அற்புத தருணம்.. நூறு சாமிகள் தனக்குள் புகுந்து அருளேறியவனாக சிலிர்க்கத் தொடங்கினான். அன்றைக்கு வரமறுத்த அருள் இப்போது தெள்ளத்தெளிவாக ஏறியிருந்ததை உணர்ந்தான். வேட்டைக்குப் போகும் கறுப்பும் அவனையே சுற்றிவந்த கறுப்பனும் அவனுக்குள் இறங்கி உறுமத் தொடங்க கைப்பேசியை எடுத்தான்.

“ராபட்டு ஒரு சம்பவம் செய்யணும்.. இனிமேட்டிக்கு எந்தப் புடுங்கியும் எந்தப் பொறம்போக்கும் பொறப்ப வச்சு உசுரப் புடுங்காத மாரிக்கி காவு வாங்கணும்டா.. கறுப்பனுக்கு பசிக்கு ராபர்ட்டு.. ரத்தம் பாக்க நேரம் வந்திடுச்சு ஆமா.. ப்ரேக்குப் புடிக்காத தண்ணி லாரி வேணும். எங்கறுப்பன் செத்த அதே சனிக்கெழமக்கி தான்”.

****

பாலைவன லாந்தர் 
Palaivanam999@gmail.com

****

பாலைவன லாந்தர் 
Palaivanam999@gmail.com

சென்னையில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular