பாரதிராஜா
முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையின் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் – கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர்-ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர-போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர்-ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர-போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர்.
“என் வலியை உணர்ந்து அதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லும் வெளியார்களை மதிக்கிறோம். ஆனால் என் வலியை நானே சொல்வதைப் போல வருமா?” என்று புறப்பட்ட படைப்பாளிகள்தாம் இத்தகைய படைப்புகளின் வேகத்தைக் கூட்டினார்கள்.
அதைத்தான் திரைப்படங்களும் செய்தன. பாரதிராஜாவும் அவரைத் தொடர்ந்து வந்த படைப்பாளிகளும் தஞ்சாவூரையும் சென்னையையும் தவிர்த்தும் ஒரு தமிழகம் இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லி நினைவூட்டினார்கள். அதில் இடைநிலை மக்களின் உண்மையான வாழ்க்கையோடு சேர்ந்து போலிப்பெருமைகளும் வெற்றுப் பெருமிதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. அதற்கு அடுத்த கட்டந்தான் ‘அசுரன்’களும் ‘கர்ணன்’களும்.
மேலே சொன்ன எல்லா கதைகளிலுமே பலவிதமான சொல்முறைகள் இருக்கின்றன. ஒன்று, தம் வாழ்க்கையை உள்ளபடியே சொல்வது. இன்னொன்று, பிறருக்கு உறுத்துகிற விதத்திலும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கு நெஞ்சு புடைக்கும் விதத்திலும் தம் வாழ்வின் பெருமையைப் பேசுகிற விதத்தில் சொல்வது. அடுத்தது, தம் வாழ்க்கைக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சொல்வது. அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளும் இந்த மூன்று சொல்முறைகளையும் பயன்படுத்தவே செய்கின்றன. ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்கிற கதைகளும் இருக்கின்றன. ‘நாங்கள் படும் பாட்டைப் பாருங்கள், எங்கள் மீது கருணை காட்டி எங்களையும் வாழ விடுங்களேன்’ என்று மனச்சான்றுள்ள மற்றவர்களிடம் கோருகிற-கெஞ்சுகிற கதைகளும் இருக்கின்றன. ‘உங்களிடம் பேசிப் பார்த்துவிட்டோம். இனி இது சரிப்பட்டு வராது போல’ என்று கலகம் செய்யும் கதைகளும் இருக்கின்றன. அசுரனும் கர்ணனும் அந்த வகை.
எத்தனையோ அரசியல்-சமூகக் கட்டுரைகளும் ஆய்வுரைகளும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை இதுபோன்ற படங்களும் புனைவெழுத்துகளும் ஏற்படுத்த முடியும். அதற்குக் காரணம், கட்டுரைகளிலும் ஆய்வுரைகளிலும் நம் அறிவுக்கு மட்டுமே வேலை இருக்கும். வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவராக இருந்தேதான் அவற்றைப் படிப்போம். ஒரு கதையில்-படத்தில் அதைப் படிக்கும்போதோ பார்க்கும்போதோ நமக்குத் தெரியாமலே அந்தப் பாத்திரங்களில் நம்மை வைத்துப் பார்ப்போம். அதுதான் அவர்களாக மாறி நம்மைச் சிந்திக்க வைப்பது. இந்தியாவில் சாதி ஒழிவதற்கு ஒரே வழி, அதன் வலியை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எல்லோருக்கும் அதை உணரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதைத்தான் இதுபோன்ற படங்கள் செய்கின்றன. இந்தப் போக்கு தொடரும்போது, இதுபோன்ற படங்களைப் பார்க்கும் பொதுச்சமூகம் ஒடுக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொள்ளத்தானே செய்யும்!
‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலை பிரபாகரனின் படத்தை வைத்துப் பாடிய காணொளிகள் நடமாடிக் கொண்டிருந்தன. அது பாடலை மட்டுமே வைத்து முடிவு செய்யப்பட்டது என்றுதான் எண்ணிக்கொண்டு இருந்தேன். படத்தைப் பார்த்த பின்பு இது அப்படியே ஈழத்தின் கதையை-பிரபாகரனின் கதையைச் சொல்வது போலவும் இருக்கிறதே என்றும் தோன்றுகிறது. ஆதிக்கம் குனியக் குனியக் குட்டும். அதை எதிர்க்க யாரோ ஒரு தனிமனிதன் நிமிர்ந்து நிற்கும் போதுதான் அவனோடு சேர்ந்து அந்தச் சமூகமே எழுந்து போரிடும். அப்படி நிமிர்ந்து நிற்பவனால் அவனுக்கும் அந்த எதிர்ப்பை விரும்பாத அவனது சமூகத்துக்கும் அளவில்லாத இழப்புகள் வரும். அப்போது எல்லோரையும் போலத் தானும் குனிந்தே கிடந்திருந்திருக்கலாமோ என்ற குழப்பம் வரலாம். அந்த இழப்புகளை எல்லாம்விடத் தம் குனிவுக்கு முடிவு கட்டுவதே முக்கியக் குறிக்கோளாகக் கருதும் அவனுக்கு அவ்விழப்புகள் பெரிதாகப் படாது. இனம், நிலம், காலம் எல்லாம் கடந்த நியதிதானே இது.
பொடியங்குளம் என்ற பெயர் கொடியங்குளத்தை நினைவுபடுத்துகிறது. அதற்குத்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறார். இது போன்றதொரு சம்பவம் கொடியங்குளத்தில் நிகழ்ந்தபோது, முதன்முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த ஜெயலலிதாவின் ஆட்சி அதன் பேயாட்டத்தின் உச்சத்தை அடைந்திருந்தது. சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பிராமணரல்லாத உயர் சாதியினர் என்று திமுகவுக்கென்று ஓர் ஆதரவுக் கூட்டம் இருப்பது போலத் தனக்கென்றும் ஒரு கூட்டம் வேண்டுமென்று கருதியவர், சில போலி ஆதிக்க சாதிகளின் மனதை வெல்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். தோழியும் தோழியின் குடும்பமும் வேறு உடனிருந்து அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவுதான் கொடியங்குளத்துக்குள் புகுந்து நடத்திய காவல்துறையின் வெறியாட்டம். அதை அவர் வாழும் காலத்தில் எவரும் துணிந்து சொல்லியிருக்க முடியாது. அவர் மறைந்த பின்பும் அதைச் சொல்லத் துணியாத இந்த மனநிலை அச்சத்தின் காரணமானது என்று மட்டும் சொல்லவும் முடியவில்லை.
கொடியங்குளம் சம்பவம் நடந்தபோது அந்த மக்களுக்காகப் போராட எவருமே இல்லை. அன்று துணிந்து முன் நின்றவரைத்தான் அவர்கள் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குத் தம் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கடைசிவரை அவர்களுக்காக நேர்மையோடு நின்றாரா அல்லது தன் குறுகிய சுயநல ஆதாயங்களுக்காக அந்த ஜெயலலிதாவிடமே சென்று மண்டியிட்டாரா என்பதையும் இந்த நேரத்தில் அம்மக்கள் விவாதிக்க வேண்டும்.
இந்தியாவைவிடத் தமிழகம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. குறிப்பாகச் சாதிப் பாகுபாடுகளைக் களைந்தெறிவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. சாதி நம் மனதைவிட்டுப் போக இன்னும் நீண்ட காலம் ஆகும் எனினும் சாதியின் அடிப்படையில் மனிதர்களை இழிவாக நடத்துவது மற்ற மாநிலங்களைவிட இங்கே வேகமாகக் குறைந்துதான் வருகிறது. மாற்றம் நடந்துகொண்டிருக்கும் அல்லது நடக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதுவும் படத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. சாதிப் பாகுபாடு இல்லாமல் சேர்ந்து கபடி விளையாடுவது என்பதே ஒரு சிறிய மாற்றந்தான். இதைச் சென்ற தலைமுறைத் தமிழகம் ஏற்றுக்கொண்டிருக்குமா? முன்னேறவே வழியில்லாமல் அடக்கி வைத்திருக்கும் போது வரும் கோபத்தைவிட முன்னேறப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும் போது வரும் கோபம் கூடுதலாகத்தானே இருக்கும். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. “பேருந்து நிறுத்தம் இருந்தால்தானே வெளியே போவாய்-முன்னுக்கு வருவாய்?”, “மாடசாமி மகன் எப்படிக் கர்ணன் என்று பெயர் வைக்கலாம்?”, “எங்களையே எதிர்க்கிறாயா?” போன்றவைதாம் போலி ஆதிக்க சாதி வெறியர்களின் பிரச்சனைகள். இதிலிருந்தே கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அம்மக்களுக்குள்ளேயே தாம் ஒடுக்கப்பட்டவர்களே அல்ல என்று சொல்கிறவர்களும் நிறையக் கூடியிருக்கிறார்கள். அது உண்மையாகவே வரலாற்றின் அடிப்படையிலான உரிமை கோரலா அல்லது போலியான திசை திருப்பலா அல்லது கொடியங்குளம் சம்பவம் நடந்தபோது இருந்த நிலைமை கடந்த 25 ஆண்டுகளில் பெரிதளவில் மாறியிருக்கிறதா என்பதையும் இந்தப் படம் கேள்வி கேட்க வைக்கிறது. கொடியங்குளத்திலும் திருநெல்வேலியிலும் பரமக்குடியிலும் நடத்தியது போன்ற ஒரு தாக்குதலை வேறு எந்தப் பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீதும் எந்த அரசும் நடத்தியிருக்கிறதா? நடத்த முடியுமா? இதற்கான விடையை வைத்து இதற்கு முந்தைய பெரிய கேள்விகளுக்கு விடை காண முடியுமா?
அவர்களுக்குள்ளும் முந்தைய தலைமுறையினர் ‘இதெல்லாம் எதுக்கு வேண்டாத வேலை!’ என்று அமைதியாகப் போவதை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கர்ணன் நிமிர்ந்து நிற்கும் போதுதான் அவனைப் போன்ற இளைஞர்கள் அவனோடு சேர்ந்து நிமிர்கிறார்கள். அதுதான் பெரியவர்களையும் பெண்களையும் கூட நம்பிக்கை கொண்டு நிமிரச் செய்கிறது.
படம் முழுக்கவும் யானை, குதிரை, கழுதை, பன்றிகள், நாய்கள், பூனை என்று பலவிதமான விலங்குகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஏதோவொரு குறியீடாகவும் இருக்கின்றன. முதற் காட்சியில் ஒரு சிறுமி நடுச்சாலையில் உதவ நாதியின்றி இறந்து போகிறாள். அதன் பின்பு அவள் படம் முழுக்கவும் அம்மக்களின் தெய்வம் போல வந்து மறையும் காட்சிகள் புல்லரிக்க வைக்கின்றன. தம்வீட்டுக் கோழிக் குஞ்சைத் தூக்கிச் செல்லும் பருந்தைப் போய் கடவுள் என்று வணங்கிக்கொண்டு அதனிடம் போய்க் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்களே என்று நொந்துகொள்ளும் காட்சியும் ஒரு குறியீடுதான்.
தன்சாதிப் பெருமை ஒருபுறம் என்றால், எந்த சாதிப் பெருமையை நோண்டிவிட்டால் நமக்குக் கூட்டம் சேர்க்க வசதியாக இருக்கும் என்று கணக்குப் போட்டுப் படங்களை முடிவு செய்யும் நடிகர் இல்லை போலத் தெரிகிறது தனுஷ். எது நல்ல கதையோ அதைச் செய்வதைப் பெருமையாகக் கருதுகிறார் போலத் தெரிகிறது. இது நல்ல போக்கு. போலி ஆதிக்க சாதி அடையாளங்களுக்குள் இருக்கும்-பிற படங்களில் போலி ஆதிக்க சாதி வேடங்களில் வரும் பல நடிகர்களை இப்படியொரு படத்தில் ஒடுக்கப்பட்ட வேடங்களில் நடிக்க வைத்திருப்பதே ஒரு சிறிய புரட்சிதான். அசுரன் படத்தில் கருணாஸ் மகனைக் கொண்டு வந்து நடிக்க வைத்தது போல. குறைந்த பட்சம் அவர்கள் மனதிலும் அவர்களைச் சார்ந்தவர்களின் மனதிலும் ஒரு மாற்ற விதை விழுந்திருக்குமே.
சாலை, வீடுகள், தெருக்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள், உடைகள்-குறிப்பாக தனுஷ் கட்டும் கைலி-என்று எல்லாமே தொண்ணூறுகளை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பெரும்பாலும் வட்டார வழக்கில் எல்லோருமே நன்றாகப் பேசியிருக்கிறார்கள். வெற்றிமாறன் படங்களில் வருகிற மாதிரியோ ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யில் வருகிற மாதிரியோ பிசிறில்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. சிலரிடம் சில சொற்களில் அவர்களின் இயல்பான மொழி வெளிப்பட்டு விடுகிறது. அது போல, ‘உட்றாதீங்க எப்போ’ என்றொரு பாடல் இருக்கிறது. ‘உட்றாதீங்க’ என்பது அந்த மண்ணின் மொழியல்ல. ‘விட்றாதீங்க’ என்பதே அங்கு பேசப்படும் மொழி. ‘புடி’ கிடையாது. ‘பிடி’தான். சிலர் அப்படியே அந்த ஊர்க்கார்களைப் போல் இருக்கிறார்கள். சிலர் சிறிது பொருந்தாதது போல இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் வில்லன் வயதான தனியார் பேருந்து உரிமையாளரை ‘வாயா போயா’ என்று பேசுவது கூட இயல்பாக இல்லை. காவல்துறை எந்த முதலாளியையும் இப்படி மரியாதையில்லாமல் பேசாது. படம் சொல்லும் கதையைப் பார்க்கும் போது இவையெல்லாம் பொருட்படுத்தாமல் விடத்தக்க சிறிய கோளாறுகளே. ‘பரியேறும் பெருமாள்’ எடுத்த மாரி செல்வராஜ் ‘கர்ணனில்’ காட்டியிருருப்பது காட்டுப் பாய்ச்சல். இதுபோன்ற சிறிய பிசிறுகளை நீக்கும்போது இன்னும் பலமடங்கு முன்னேற்றம் காட்டலாமே.
காவல் துறை அடக்குமுறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் பதம் பார்ப்பதில்லை. அது உண்மையிலேயே அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கும் அதிகாரத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கும் மட்டுமே எடுபிடி வேலை செய்கிறது. மற்றபடி பெரும்பான்மை மக்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பதாகவே இருக்கிறது. அதே தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் சாத்தான்குளம் காவல்நிலையக் கொலையுமே இதற்குப் பதில். இந்தப் படத்தை ஒடுக்கப்பட்டவர்களின் – இன்னும் பச்சையாகச் சொல்வதானால் நாதியற்றவர்களின்-கையறு நிலையைச் சொல்லும் படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். காவல் துறையின் மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது எல்லோருக்குமான பிரச்சனை. உண்மையிலேயே வளர்ந்த நாடுகளில் காவல்துறைக்கு இதுபோன்ற கட்டற்ற அதிகாரம் கிடையாது. இது எவ்வளவு விரைவாகச் சரிசெய்யப்படுகிறதோ அவ்வளவு நல்லது. தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய அரசின் தொடக்கச் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தை முன்வைத்து, தமிழக அரசு காவல்துறைச் சீர்திருத்தத்தைத் தீவிரமாக முன்னெடுக்கலாம். அப்படிச் செய்தால் வழக்கம் போல இது மொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக நாம் செய்த இன்னொரு சாதனையாக இருக்கும். வரலாறு நமக்கு நன்றி சொல்லும்.
***
பாரதிராஜா தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர். இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.