Sunday, October 1, 2023

கன்னிச்சாமி

கா. சிவா

றையத் தொடங்கிய மாலைச் சூரியன் சுமங்கலியின் நெற்றிப் பொட்டுபோல சிவப்பாக, கண்கள் கூசாமல் பார்க்கும் வண்ணம் தண்மையுடன் இருந்தது. கோவில் வீட்டிற்கு ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். வந்த ஒவ்வொருவருக்கும், இன்று முதல்முறையாக சாமியாடப்போகும் சின்னையாவிற்கு தடங்களேதுமில்லாமல் சாமி வரவேண்டுமே என்ற லேசான பதட்டம் இருந்தது.  ஆடிமாத பூசைக்கான ஏற்பாடுகள் தொடங்கி ஒருமாதமாகிறது. அதன் முத்தாய்ப்பான உச்சம் இன்றைக்குதான்.

வைராத்தாள் மற்றும் நல்லாத்தாளுடன் இருக்கும் அகோர வீரபத்திரருக்கும் தனித்திருக்கும் கருப்பசாமிக்கும் ஆண்டுதோறும் ஆடிமாசம் கொடை பூசை. இதில் பங்கு கொள்பவர்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கும் ஒரே இனத்தைச் சேர்ந்த பங்காளிகள். இந்தச் சாமியைக் கும்பிடுபவர்களின் மாமன் மச்சான்களுக்கு வேறு சாமிகள். வேறு பூசைகள். அவர்கள் இந்தப் பூசையில் கலந்துகொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு எதுவுமில்லை. ஆனால் புள்ளியோ காழாஞ்சியோ அவர்களுக்கில்லை. எனவே அருகிலுள்ளவர்கள் ஒருசிலர் மட்டும் வருவார்கள்.

கோயில் வீடு என்றால் வீடுதான். நடுவே முற்றம் வைத்து இரண்டு பக்கமும் தாழ்வாரமும், வடக்கு பக்க தாழ்வாரத்தை ஒட்டியபடி நீண்ட அறையுமாக கட்டப்பட்ட நாட்டு ஓடு வேயப்பட்ட வீடு. தாழ்வாரத்தில் கருப்புவின் இருப்பு. உள் அறை வீரபத்திரரின் புழக்கத்திற்கு. முற்றத்தை ஒட்டி கிழக்கில் வாரம் இறக்கியிருந்தது. அங்குதான் சமையல்.  சாமிகளுக்கு சிலைகளோ படங்களோ கிடையாது. வீரபத்திரருக்கு இரண்டு கையளவிற்கு அகலமான ஒரு ஆள் உயரத்தில் கருப்பாக தோற்றமளிக்கும் அரிவாள். அதில் பாதியளவிற்கு இருப்பது கருப்பசாமி. விபூதிப் பட்டையடிக்கப்பட்டு சந்தனம் வைத்து அதன் நடுவில் குங்குமத்துடன் துலக்கமாக இருக்கும் சாமிகளுக்கு பூசைநாளில் மட்டும் வேட்டியும் துண்டும் அணிவித்து மாலைகளிட்டு அலங்கரிக்கப்படும். அந்த அலங்கார வேலைகளெல்லாம் இந்தக் கோவில் வீட்டின் அருகிலேயே வசிக்கும் ராமய்யா கவனித்துச் செய்வார். கோவில் வீட்டின் வரவுசெலவு மற்றும் பூசைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவர்தான் நிர்வகித்தார். இதனால் இவரின் சொல்லுக்கு பெரும் மதிப்பு இருந்தது.

இந்நிகழ்வில் வீரபத்திரருக்கு சாமியாடியாக இருக்கும் சுப்பையா பெரியசாமி எனவும் கருப்பசாமிக்கு ஆடும் சின்னய்யா சின்னச்சாமி எனவும் அழைக்கப்படுவர். சுப்பையா பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். சின்னய்யா இந்த வருடம்தான் முதல்முறையாக ஆடப்போகிறார். சென்றமுறை சின்னச் சாமியாடியாக இருந்த கந்தய்யா போனவருடம் காய்ச்சல் வந்த மறுநாள் நல்லசாவு என்று எல்லோரும் சொல்லும் வண்ணம் இறந்தார். எனவே, பனங்குடி காமாட்சியம்மன் கோவிலில் சாமியழைத்துப் பார்த்து சின்னய்யாவை சின்னச் சாமியாடியாக தேர்ந்தெடுத்தார்கள்.  சுருட்டை முடியும் அலைபாயும் விழிகளுடனும் இருக்கும் முப்பது வயதான சின்னய்யா எப்படி சாமியாடப் போகிறான் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. பெரும்பாலானவர்கள் இந்தப் பூசைக்கு வருவதன் முக்கிய காரணம் சின்னச் சாமியாடி கூறும் அருள்வாக்கு.

பெரியசாமி குறி சொல்வதில்லை. அவரிடம் விபூதி வாங்கிக் கொள்வதோடு சரி. பெரியவர் இம்மாதிரி விவகாரங்களில் தலையிடக் கூடாது என இருப்பார் போலிருக்கிறது. உயரதிகாரி கூற வேண்டியதை அவரின் நேர்முக உதவியாளர் மூலமாக கூறுவதுபோல வீரபத்திரரின் சொல் கருப்பசாமி வழியாக அருள்வாக்காக வெளிப்படுகிறது என்று நம்பிக்கை.

*                      

பூசைக்கு வருபவர்கள் எல்லோருமே முதலில் சின்னய்யாவைத்தான் நோக்குகிறார்கள். அவர்கள் பார்வையில் தெரிவது எதிர்பார்ப்பா அவநம்பிக்கையா என்பதை பகுத்தறிய முடியவில்லை. ஆனால் வெளியே சொல்லவோ விவாதிக்கவோ முடியாத ஒன்றிற்கான மெல்லிய பதட்டம் இருந்தது. அதே பதட்டம் பல மடங்கு அவனுக்கும் இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன் இதுபோல இத்தனை பேரின் எதிர்பார்ப்புக்கு ஆட்படுவோமென்று எண்ணக்கூட முடியாதவாறு சின்னய்யா வேலைசெய்து கொண்டிருந்தான். திருப்பூர் நகரின் ஒதுக்குப்புறத்தில், சுற்றி இருந்த பத்து பனியன் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களை நம்பியிருந்த ஒரு நடுத்தர உணவகம் அது, ஆஸ்பெடாஸ் கூரையுடன் கரிபடிந்த குழல் விளக்குகளுடன் எல்லாச் சுவர்களும் சாம்பல் படிந்திருக்கும். டீ மேடையும் தோசைக்கல்லும் கோவிலின் துவார பாலகர்கள்போல வாசலின் இருபக்கமும் இருக்கும். இட்லி, பரோட்டா, சாப்பாடு, பிரியாணி, துரித உணவு என வாடிக்கையாளர் கேட்டு, இல்லையென்று திரும்பிவிடாதவாறு எல்லாவித உணவுகளும் சராசரி தரத்தில் அங்கு கிடைக்கும். ஊரில் சின்னய்யாவின் பக்கத்து வீட்டில் இருப்பவரின் மகன்தான் உரிமையாளர். மேற்பார்வைக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என்பதற்காக இவனை வைத்திருந்தார்கள். இவனுக்கு எல்லா வேலைகளும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எந்த வேலைக்கான ஆள் வரவில்லை என்றாலும் சமாளிக்க முடிகிற அளவிற்கு.

மதிய வேலை முடித்து நான்கு மணிக்கு சாப்பிட்ட பிறகு கடையின் அருகிலேயே இருந்த அறையில் கண்மூடிப் படுத்திருந்தான். சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி அனல் காற்றை பரப்பிக் கொண்டிருந்தது.  அருகில் மூன்று பேர் படுத்திருந்தார்கள். வெளிவந்தபோது யாராலும் சீண்டப்படாத ஒரு படம், தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் படம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நாயகனைப் போற்றிப் பாடப்பட்ட பாடலில் உறுமியைக் கொண்டு அழுத்தி இழுத்திருந்தார்கள். அந்த இழுப்புக்கு இயைந்ததுபோல இவன் கால்கள் அசைந்து கொண்டிருந்தன. அந்த இரைச்சலிலும் இருவர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்காக மட்டும் படம் ஓடிக்கொண்டிருந்தது. இவன் அலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா பேசினார். “தம்பி, நல்லாருக்கியா… சாப்பிட்டாயா” என்ற விசாரிப்புகளுக்கு பதில் சொன்னவுடன் “வர்ற செவ்வாக்கெழமன்னைக்கு ஊரு வாப்பா” என்றார்.

‘ஏம்மா என்னாச்சு”

“நம்ம கோயில் வீட்ல சின்னச் சாமியாடியா இருந்த கந்தய்யா காலமாயிட்டாருப்பா”

“அப்படியா. அதுக்கு எப்பவும் போல நீயே போயிட்டு வர வேண்டியது தானே”

“அதெல்லாம் போயிட்டு வந்தாச்சு. உன்னக் கூப்பிடறது அதுக்கில்ல… வேற புது சாமியாடி வேணுமில்ல”

“அதுக்கு” புரியாமல் கேட்டான்.

“நம்ப காமாச்சியம்மன் கோயில்ல சாமியழச்சு புது சாமியாடிய கண்டுபிடிக்கணும்”

“அதுக்கு நான் ஏம்மா வரணும்”

“சாமியாடிகளோட வாரிசுகள்ல இருந்துதானே புது ஆள கண்டு பிடிக்கணும். உங்க தாத்தா சாமியாடியா இருந்தது ஒனக்குத் தெரியாதா” என்று கேட்டபோது குரலில் லேசான அலுப்பு தெரிந்தது.

“இப்ப என்னம்மா பண்ணனுங்கிற”

“ரெண்டு நாளைக்கி கவுச்சி சாப்பிடாத. திங்கக் கெழம கெளம்பி ஊருக்கு வந்து சேரு” என்றார். அம்மாவின் வார்த்தையை மறுக்கும் வழக்கம் இவனுக்கில்லை.

*

பனங்குடியில் காலை ஆறு மணிக்கு பேருந்திலிருந்து இறங்கி அம்மாவுடன் சேர்ந்து காமாட்சியம்மன் கோவிலை நோக்கி நடந்தான்.  பதினைந்தடி சாலையின் இருபுறமும் சவுக்குக் கட்டைகளை ஊன்றி, தென்னை ஓலையால் வேயப்பட்ட கொட்டகைகள் இருந்தன.  பொம்மைகளும் போட்டோக்களும் குங்குமம் மஞ்சள் போன்ற பூசை பொருட்களும் விற்கும் கடைகள். பொருட்கள் எல்லாம் கடைக்கு முன்புறம் வெள்ளை உரச்சாக்குகளால் மூடப்பட்டிருந்தன. கடைகளை எப்போதும் பத்து மணிக்குமேல்தான் திறப்பார்கள்.

சாலையின் முடிவில் மணற்பரப்பான பெரிய மைதானம் இருந்தது. அதன் வடக்கில், பாவாடை கட்டி அமர்ந்திருக்கும் பெண் குழந்தைபோல பாந்தமாக கோவில் தனியாக நின்று கொண்டிருந்தது. திறந்தவெளியின் தெற்கில் குளத்தின் சுற்றுச்சுவர் தரைக்குமேல் நான்கடி உயரத்திற்கு தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர். கோவிலிலிருந்து எழுந்த மணியோசை லேசாக கேட்டது.

குளத்தை நோக்கிச் சென்றார்கள். சிறுசிறு பூச்சிக்கூடுகளை இறுக்கமாக பிணைத்தது போன்று காட்சியளித்த செம்பாறைகளை அடுக்கி சுவரும் படியும் அமைத்திருந்தார்கள். சுவர்களில் ஆங்காங்கே பாசிகள் படர்ந்து காய்ந்து கருப்பாக காணப்பட்டது. குளத்தினுள் பத்துப் படிகளுக்குக் கீழ் இளம்பச்சை நிறத்தில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. கரும்பச்சை வண்ணத்தில் அல்லி இலைகள் படர்ந்திருந்தன. செவ்வல்லியும் வெண் அல்லியும் ஒன்றிரண்டு மலர்ந்திருந்தன.

சட்டையை அவிழ்த்து அம்மாவிடம் கொடுத்தபின் வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு, குளத்தினுள் இறங்கினான். நீரின் தண்மையால் உடல் ஒருமுறை தானாக உலுக்கிக்கொண்டது. மூன்று முறை முழுதாக முழுகியவுடன் சிறிது நேரம் நின்றுவிட்டு மேலேறி வந்தான். அம்மா கொடுத்த துண்டை வாங்கி, தலையை துவட்டியபின், இடுப்பில் வேட்டியின் மேல் கட்டிக் கொண்டு கோவிலை நோக்கி மணலில் கால் புதைய நடந்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. இருபது பேருக்குமேல் உள்ளே இருந்தனர். சாமியழைத்துப் பார்ப்பதற்கென ஏற்கனவே நான்குபேர் வந்திருந்தார்கள். இன்னும் ஒருவர் வரவேண்டியிருந்தது. சின்னய்யா அம்மாவுடன் அர்த்த மண்டபத்தைக் கடந்து சன்னதி அருகில் சென்றான். முழு அலங்காரத்துடன் அருள் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள் காமாட்சி.  கைகளைக் கூப்பி வணங்கியபோது மனதில் வேண்டுதல் எதுவும் எழவில்லை. எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இப்படித்தான். என்னென்னவோ வேண்டிக்கொள்ள வேண்டுமென நினைத்து கோவிலுக்குச் செல்வான். சுடராட்டின் போது அதன் ஒளியில் தெரியும் அழகில் லயித்துப் பார்த்திருப்பான். வெளியில் வந்தவுடன்தான் நினைவுக்கு வரும் வேண்டிக்கொள்ளவில்லை என்பது. இப்போதும் தனக்கு சாமி வரக்கூடாது என வேண்டிக் கொள்ளவே எண்ணியிருந்தான். ஆனால் கைதொழும்போது எதுவும் தோன்றவில்லை. “என் அன்னை, அவளுக்குத் தெரியாதா என் வேண்டுதல் என்னவென்று” என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

சாமியழைத்துப் பார்ப்பதற்காக வந்திருந்தவர்களுடன் சென்று நின்றான். இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் விரைந்து வந்து இவனருகில் நின்றான். மற்ற நான்கு பேரில் இவன் வயதையொட்டிய இருவரும் ஒருவர் நாற்பது வயது மதிக்கத்தக்கவராகவும், இன்னொருவர் இன்னும் அதிக வயதானவராகவும் இருந்தார். எல்லோர் முகமும் தெரிந்த முகங்களாகவே இருந்தன. ஆனால் என்ன உறவு என்பதை மனதில் பதிந்திருக்கவில்லை.  அவர்களில் யாருக்கு சாமி வருமென்று அறிந்துகொள்ள இவனுக்கே ஆர்வமாக இருந்தது. சாமி வந்தால் எப்படி ஒவ்வொருவரும் ஆடுவார்கள் என கற்பனை செய்து பார்த்தான். இவன் முகத்தில் தோன்றிய முறுவலைப் பார்த்ததும் முறைத்த அம்மா, சும்மாயிரு என்னும் பாவனையில் உதட்டில் கைவைத்து அதட்டினார்.

அறுவரையும் சன்னதிக்கு முன் நிற்க வைத்து சம்பங்கியும் மரிக்கொழுந்தும் இணைந்து தொடுக்கப்பட்ட சிறிய மாலைகளை அணிவித்தார்கள். அம்மனுக்கு அருகில் தூபக்காலில் இருந்த தணலில் சாம்பிராணி பொடியைத் தூவ புகையுடன் மெல்லிய வாசணை எங்கும் பரவியது. சுற்றிலும் தூண்களில் சிற்பமாக நிலைத்திருந்தவர்களின் முகங்களிலும் அடுத்த சாமியாடி யாரென்பதை அறியும் ஆவல் தொனித்தது.

பூசாரி மணியை அடித்தபடி அம்மனுக்கு முன் சுடரைக் காட்டினார். ஆகா என்னவொரு மோனச் சிரிப்பு. அன்னை அமர்ந்திருந்த கோலம் இவன் மனதிலிருந்த பதட்டத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்தியது.  உடுக்கையுடன் வந்த பூசாரி அதைச் சுழற்றி அடித்தபடி கருப்பனை அழைக்க ஆரம்பித்தார்.

எங்கள் குலம் காப்பவனே
விரைந்து வா கருப்பா!

உன்னை எண்ணி அழைக்கிறோம்
விரைந்து வா கருப்பா!

உன்னை நம்பி வாழ்கிறோம்
விரைந்து வா கருப்பா!

ஒப்பில்லா மாமணியே
விரைந்து வா கருப்பா!

உன்னையன்றி யாருமில்லை
விரைந்து வா கருப்பா!

சின்னய்யா அருகிலுள்ளவர்களைப் பார்த்தான். அனைவரும் சிலைகள் போல நிலைத்து நின்றார்கள். இவன் கால்கள் அந்த மணியோசையையும் உடுக்கையொலியையும் கேட்டு லேசாகத் துடிக்கத் தொடங்கியது. இந்த ஓசையைக் கேட்டும் உடலை அசையாமல் வைத்திருக்க பெரும் மனக்கட்டுப்பாடு வேண்டும் என்று எண்ணியபடி ஆடிவிடக் கூடாது என்று உடலை இறுக்கிக் கொண்டான்.

கண்ணீருடன் வேண்டுகிறோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் கண்ணின் ஒளியே
விரைந்து வா கருப்பா!

கறியும் சோறும் படைத்திடுவோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் குறை தீர்க்கவே
விரைந்து வா கருப்பா!

பூசாரியின் சொற்களை காதில் வாங்கக் கூடாது. உடுக்கையொலி உள்ளே நுழையக்கூடாது என இவன் எத்தனை முயன்றபோதும் அவை குழம்பில் கரைந்து பரவும் உப்பைப்போல மெல்ல உடலுக்குள் புகுந்து பரவ ஆரம்பித்தது. இவன் உடல் இவன் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்தது. நுழையாமல் காத்துக் கொள்ளவேண்டும் என எண்ணி கூர்ந்து கவனித்ததுதான் இதற்கு காரணம் என்று இன்னொரு குரல் உள்ளிருந்து சீண்டியது.

உன்னையே நம்பி வந்தோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் குல சாமியே
விரைந்து வா கருப்பா!

உன்னைத்தவிர கதியில்லை
விரைந்து வா கருப்பா!

மன்றாட்டு கேட்கலையா
விரைந்து வா கருப்பா!

உடலை இறுக்க முயன்று, மேலும் இறுக்கியதால் ஒரு எல்லையில் முடியாமல் கட்டுப்பாடு அறுந்து, இழுத்து கட்டப்பட்ட மூங்கில் விடுபட்டதென சட்டென்று ஒருகணத்தில் உடல் துடித்து குதித்தது. துள்ளித் துள்ளி ஆட ஆரம்பித்தான்.  நினைத்து வந்ததென்ன… நடப்பதென்ன என்று உள்ளிருந்து தன்னையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டான். மற்றவர்கள் எல்லாம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தார்கள். இவனோ ஆடக்கூடாது என எண்ணியே சரியாக அதில் மாட்டிக் கொண்டான்.

*

அந்த உடுக்கையொலியும் பூசாரியின் குரலும் ஏற்படுத்திய ஒருவித தூண்டுதலில் அன்று ஆடிவிட்டான். ஆனால் சாமி வந்துவிட்டதாக நினைத்து இவனையே சாமியாடி என முடிவு செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் தனக்கு சாமி வரவில்லை என்று இவனால் கூறமுடியவில்லை. ஆனால், இன்று எல்லோருக்கும் அருள்வாக்கு சொல்ல வேண்டுமே.

எல்லோருமே இவன் உறவினர்கள்தான் என்றாலும் அவர்களின் குடும்பப் பிண்ணனி எதுவும் இவனுக்குத் தெரியாது. எல்லா நல்லது கெட்டதுக்கும் அம்மாதான் செல்வார். எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் தலை கிறுகிறுத்தது. இதில், வருபவர்கள் அத்தனை பேரும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் தந்தூரிக் கோழியை உற்றுப் பார்ப்பது போலவே இவனைப் பார்ப்பதாக இவனுக்குத் தோன்றியது.

அப்போது ஐந்து வயது பெண் குழந்தை அவள் அண்ணனை கையைப் பிடித்து இழுத்து வந்தது. அறைக்குள் எட்டிப் பார்த்தது. தாழ்வாரத்தில் இருந்த கருப்பருக்கான அலங்காரத்தைப் பார்த்தது. புரியாமல் திகைத்தது. “என்னம்மா பாக்குற” என்று சின்னய்யா கேட்டான்.

“சாமி கும்பிட வந்தோம். சாமியக் காணாமே” என்று மழலையில் சொன்னது.

“உள்ள இருக்கிறது தான் சாமி”

“இல்ல… அங்க அருவாதான் இருக்கு”

“இங்க அருவாவத்தான் சாமியாக் கும்பிடுவோம்”

“ஏன் அப்படி. எங்க வீட்ல போட்டோல வேற சாமியில்ல இருக்கு”

“அதெல்லாம் பெரியசாமிங்க. இது நம்ம சாமி”

“இதுக்கு ஏன் படம் வரையாம அருவாள வச்சிருக்காங்க” என்று அந்தப் பையன் கேட்டான்.

இந்தக் கேள்வி ஒரு கணம் இவனுக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. இதுவரை இதை யோசித்ததும் இல்லை. யாரிடமும் கேட்டதும் இல்லை. என்னவாயிருக்கும் என்று யோசித்து “அது வந்து… சாமி ஒன்னுதான். ஆனா சாமியாடிங்க மாறிகிட்டே இருக்காங்கள்ல. படம் வரைஞ்சுட்டா உள்ள இருக்குற சாமியும் ஆடற சாமியும் வேற வேறயா இருந்தா கொழப்பம் வந்திரும்ல. அதனாலதான் இப்படியே வச்சிருக்காங்க” என்று சொல்லிவிட்டு மனதிற்குள் தன்னையே மெச்சிக்கொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த பெரிய சாமியாடியைக் காட்டி “அவர்தான் உள்ள இருக்கிற சாமி” என்றான்.

“அப்ப இந்தச் சாமி” என அந்தப் பெண் கருப்பரைக் காட்டிக் கேட்டாள்.

நான்தான் சாமி என்று எப்படிக் கூறமுடியும் என சின்னய்யா திகைத்தான். அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும் விதமாக அவளின் அண்ணன்

“இவர்தான்… இந்தச் சாமி. அம்மா சொன்னாங்க” என்று கூறினான்.

“யாருப்பா உங்க அம்மா” எனக் கேட்டான். அவன் கை காட்டிய திசையில் இளநீல வண்ணத்தில் புடவை கட்டிய பெண் அமர்ந்து இவனை முறைத்துப் பார்ப்பதாகத் தோன்றியது. குறைவான வெளிச்சத்தால் முகம் சரிவரத் தெரியவில்லை. அவளா… அவளாகயிருக்குமா இவன் மனம் ஒருகணம் அதிர்ந்தது.

“தம்பி உங்க அம்மா பேரு என்ன”

“மீனாட்சி” என்று அவன் கூறினான்.

*

அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் கோவில்வீட்டு பூசைக்கு வந்த இடத்தில் சாமியாடியாக சின்னய்யாவைப் பார்த்ததும் மீனாட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சின்னய்யா இவள் ஊர்காரன்தான். ஒன்றாகவே வளர்ந்தார்கள். ஊரில் எல்லா பிள்ளைகளும் எந்தவித விகல்பமும் இல்லாமல் பழகுவதுதான் வழக்கம். ஏன், எதற்காக என்று கூறமுடியாத ஒரு கணத்தில் சின்னய்யா மீது மீனாட்சிக்கு ஒரு தனிப்பட்ட நேசம் தோன்றியது.

அது ஏனென்று பிறகு பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறாள். அன்றொரு நாள், கொத்துக் கொத்தாக சாம்பல் வண்ணக் கூடுகளாய் பழத்தைச் சுமந்திருந்த புளிய மரத்தினடியில் இளையவர்கள் பலர் கூடி பொருளற்ற அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும் புளியம்பழம் இருந்தது. ஓட்டை தட்டிவிட்டு அதை வாயில் வைத்து சப்பினார்கள். புளிப்பும் இனிப்புமான சுவையில் லயித்து ஸ்ஸ்ஸ்… என்று நாக்கை உச்சுக் கொட்டும் சப்தம் அவ்வப்போது எழுந்தது. பேச்சுவாக்கில் திரும்பிய மீனாட்சியின் விழிகள் சின்னய்யாவின் விழிகளை யதேச்சையாக சந்தித்தன. அக்கணத்தில், இல்லையில்லை… மில்லி கணத்தில்… அதில் தெரிந்த இவளுக்கேயான பிரத்யேக ஒரு பித்தேறிய மன்றாட்டை, அர்ப்பணிப்பை இவள் மனம் திகைப்புடன் உணர்ந்து, சிலிர்த்தபடி ஏற்றுக் கொண்டது என்று தோன்றியது.

பிறகு ஒருநாள் மதியம் கண்மாய்க் கரையில் சின்னய்யாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது “என்மேல் ஏன் அவ்வளவு பிரியம்’ எனக் கேட்டாள். இவள் முகத்தை அழுத்தமாக நோக்கிவிட்டு “எல்லாவற்றையும் வார்த்தையாக சொல்லிவிட முடியுமாயென்ன” என்று புதிர்போல கூறிவிட்டு கால்களை நீட்டிக்கொண்டு வாகை மரத்தில் சாய்ந்தபடி தனக்குள் ஆழ்ந்தான். அந்த பிரியம் தோன்றிய ஆரம்ப கணத்திற்கே சென்று அந்த உணர்வை அனுபவிப்பதுபோல ஒரு பரவசம் அவன் முகத்தில் தோன்றியது. காற்றடித்ததால் மரத்தின் நிழல் லேசாக நகர, சூரிய ஒளி அவன் முகத்தில் பட அந்தப் பிரகாசம் கண்ணை கூச வைத்தது. ஒருகணம் இவள் உடலெங்கும் மின்னதிர்வு பட்டதுபோல ஓர் இன்ப அதிர்வு ஓடிப் பரவியது. இப்படி ஒரு இன்பத்தை ஒரு மனிதனுக்கு தன்னால் கொடுக்க முடிந்ததென்றால் வாழ்வில் இதைவிட அடைவதற்கு வேறெதுவும் இல்லையென்று இவளுக்குத் தோன்றி விழிகளில் நீர் கோர்த்தது.

ஒரே பெண்ணென்பதால் இவளுக்காக அப்பா தினமும் எதாவது வாங்கிக் கொண்டு வருவார்.

“செல்லம் மீனு, ஓடி வாங்க. அப்பா ஒங்களுக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க” என அழைப்பார்.

அது பெரும்பாலும் அவருக்குப் பிடித்ததாக இருக்கும். அவர் சிறுவயதில் தின்ன ஆசைப்பட்டு, கிடைக்காததால் அதைத் தின்பதை இப்போதும் விரும்பக் கூடிய மனநிலையில் இருப்பார். அப்போதே அவருக்கு அது கிடைத்திருந்தால் அதன்மீது இப்போது இவ்வளவு ஆசை இருக்காது என மீனாட்சிக்குத் தோன்றும்.

வெங்காய போண்டா, தேன் மிட்டாய், கமர்கட்டு, இனிப்பு முறுக்கு, பொட்டுக்கடலை மிட்டாய், அச்சு முறுக்கு போன்றவைதான் அப்பாவுக்கு பிடித்தவை. இவற்றில், இவளுக்கு பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. சாக்லேட், மிக்சர், பிஸ்கட் போன்றவற்றிலுள்ள வெவ்வேறு மாதிரிகள் மேல்தான் இவளுக்கு பெரும் மோகம். இவை அதிகமாகக் கிடைக்காதனால் கூட இருக்கலாம். இவற்றை தன் பிள்ளைகளுக்கு வாங்கித் தரக்கூடும் என்ற ஓர் எண்ணம் இவளுக்குள் எழுந்தது.

பிடிக்காத பண்டமென்றாலும் அப்பா அவ்வளவு ஆசையோடு கொண்டுவந்து தரும்போது எப்படி மறுப்பது. அதனை மறுத்து தனக்குப் பிடித்தது இதுவென்று எப்படிக் கூறமுடியும். ஆவலுடன் பெறுவது போன்ற பாவனையுடன் வாங்கிக் கொண்டு உள்ளே வந்துவிடுவாள். பிரித்து ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்வாள். இவள் தின்கிறாளா இல்லையா என்பதை அப்பா கவனிப்பதில்லை. பிரிக்கப்பட்டு மீந்திருப்பதை மறுநாள் இவள் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் மாலை, இவள் ஊருக்கு தெற்கேயுள்ள புளியம்பட்டியில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், ரொம்ப நல்ல பையன் என்றும் மலர்ந்த முகத்துடன் வந்த அப்பா சொன்னார். அப்பா அம்மாவிற்கு மீனாட்சி ஒரே பெண். அவர்கள் வாழ்கை முழுவதுமே இவளைச் சார்ந்துதான் இருக்கிறது. இவள் மனம் வருந்துவதை அவர்களால் தாங்க முடியாது. தன் மனதில் சின்னய்யா இருப்பதை சொல்லிவிட இவள் மனம் துடித்தது. அப்பாவின் விழிகள் இவளையே நோக்கிக் கொண்டிருந்தன.  அதில், அவர் கூறியதைக் கேட்டு மகளின் மலரப்போகும் முகத்தை எதிர்பார்க்கும் ஆவல் அப்பட்டமாய் துருத்திக் கொண்டு தெரிந்தது. அருகிலிருந்த அம்மா அப்பாவின் முகத்தை இதுவரை கண்டிராத தனிப்  பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகணம் அம்மாவிற்கு அவரது அப்பாவின் நினைவு மனதில் எழுந்திருக்கக் கூடும். இப்போது, சின்னய்யா பற்றிச் சொன்னால் காணச் சகிக்காத இறுக்கத்துடன் மாறும் அவர் முகம்  ஒருகணம் இவள் மனதிற்குள் தோன்றி மறைந்தது. இத்தனை ஆண்டுகள் பாசத்துடன் வளர்த்தவர்களின் முகத்தில் வேதனையைப் பார்க்க வேண்டுமாயென இவள் மனம் மருகியது. ஒன்றை ஏற்கக் கூடாது என மனம் உறுதியாக முடிவு செய்துவிட்டால் மறுத்துவிடலாம். ஆனால், லேசாகவேனும் தயக்கமோ குழப்பமோ வந்துவிட்டால் மறுப்பதற்கான வாய்ப்பு குறைந்து, அதை ஏற்பதற்கான நியாயங்களை மனமே ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கத் தொடங்கிவிடுகிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் பாசமாக இருந்த கணங்கள் மட்டும் துணுக்குக் காட்சிகளாக மனதில் ஓடியது. இதன்பின் இதிலிருந்து மீட்பு இல்லையென்று தோன்றிய ஒருகணத்தில் முடிவெடுத்தாள். எப்போதும் சின்னய்யாவைப் பற்றி வீட்டில் பேசுவதில்லை என. சின்னய்யா இவள் மேல் உயிரை வைத்திருப்பவர்தான். ஆனால் இவர்கள் இவளுக்கு உயிர் கொடுத்தவர்களாயிற்றே.  அப்பா விரும்பிய வண்ணம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் கணவரின் ஊருக்குச் சென்றுவிட்டதால், அதன் பிறகு சின்னய்யாவை பார்க்கவே இல்லை. மீனாட்சியின் திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளில் அவள் அப்பா இறந்துவிட்டார்.

கணவனாக வந்தவர் அவளை நன்றாகவே வைத்துக் கொண்டார். அவருக்கு மனைவியாக தன் கடமைகளை செய்தாள். சின்னய்யாவின் நினைவு எப்போதாவது தோன்றி இவள் மனதில் சற்று பாரத்தைக் கூட்டும். பிள்ளைகள் பிறந்த பின்பு அது குறைந்து ஒருவித ஏக்கத்தை மட்டும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

மீனாட்சியின் கணவர் சென்னையில் இயந்திரங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதிகமாக வேலை செய்து ஊதியம் குறைவாகப் பெறுவதாக அவருக்கு தோன்றியது. “இப்போது பெறுகிற சம்பளத்தை வைத்து பிள்ளைகளை ஆளாக்குவது பெரும் சிரமமாக இருக்கும், எனவே வெளிநாட்டிற்குச் சென்று வரலாம்” எனக் கூற ஆரம்பித்தார்.

“இந்த ஆசையை அவர் மனசுல ஏஜெண்டுகதான் ஏத்தியிருப்பானுங்க. வெளிநாட்டுக்கு போற எல்லோருமா சம்பாதிச்சுக் கொட்றாங்க. அங்க போய் கட்டிய பணத்தையுமே எழந்துட்டு வர்றவங்கதான் அதிகம்” என்று மீனாட்சியின் அம்மா கூறுகிறார்.

“உங்கம்மா கிட்ட பணம் கேக்கறதாலதான் அப்படிச் சொல்றாங்க. பணத்த சும்மா ஒன்னும் கொடுக்க வேண்டாம். கடனாக் கொடுக்கச் சொல்லு. வட்டியோட திருப்பிக் கொடுத்தர்றேன்” என இவள் கணவர் குதிக்கிறார். எந்த முடிவை எடுப்பதென்று திகைத்துக் கொண்டிருந்தபோது தான் கோவில் வீட்டு பூசை பற்றிய தகவல் கிடைத்தது. அப்பா இறந்த பிறகு அம்மா பூசைக்கு செல்வதில்லை.

“ஏன் நாமே கொழம்பிக்கிட்டு இருக்கணும். சாமிக்கிட்ட கேட்டாயென்ன” என அம்மா கேட்டார்.

“சாமிக்கிட்ட கேக்கறதுன்னா… பூக்கட்டிப் போட்டு பாக்கலான்றியாமா”

“அதில்லடி. கோயில் வீட்டு பூசையில அருள் வாக்கு கேக்கலாம்ல”

“முன்னாடி எப்பவாச்சும் கேட்டுறுக்கியா. அது நடந்துருக்கா” என்று மீனாட்சி கேட்டாள்.

“ஏண்டி ஒன் கல்யாணமே சாமி சொன்னபடிதானே நடந்துச்சு”

“எப்படிமா… நீ சொன்னதே இல்லையே” ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“ஒன் அப்பாதான் போயி கேட்டுட்டு வந்தாரு. நம்ம வீட்டுக்கு தெக்கு தெசையில இருக்கிறவரை கல்யாணம் பண்ணாத்தான் ஒன் வாழ்க்கை சந்தோசமாயிருக்கும்னு சாமி சொன்னுச்சாம். அதுக்காகத்தான் இந்த மாப்பிளையப் பாத்தாரு. இதுவரைக்கும் பெருசா தொந்தரவில்லாம நல்லாத்தானே வச்சிருக்காரு” என்று முடித்தபோது “சின்னய்யா வீடும் நம்ம வீட்டுக்கு தெற்கில்தானே உள்ளது” என்று மீனாட்சியின் மனதில் எண்ணம் ஓடியது.

கோவில் வீட்டுக்கு வருவதற்கு இவளுக்கு பெரியதாக ஆர்வமில்லை. அம்மா தொடர்ந்து கூறிக் கொண்டேயிருந்ததால் பிள்ளைகளுடன் இங்கு வந்தாள். வந்தபின்தான் தெரிகிறது சாமியாடியே அந்த சின்னய்யாதான் என்று. முதல் முறையாக ஆடுவதாகவேறு கூறுகிறார்கள். பழையவற்றை மனதில் வைத்துக் கொண்டு தவறாக எதையாவது கூறிவிடுவாரோ என்று அவளுக்குப் பயம் ஏற்பட்டது. சாமி வாக்கென்று ஒன்று சொல்லப்பட்ட பிறகு அதைச் செய்யாமல் தவிர்க்க முடியாதே. தவிர்த்துவிட்டு பின் தவிக்க நேர்ந்தால், சாமி சொன்னதைக் கேட்காததாலதான் இப்படி ஆகிவிட்டது எனக் கூற ஆரம்பித்து விடுவார்கள். அப்படி யாரும் கூறாவிட்டாலும் மனம் பதைப்பதை தடுக்கவா முடியும். என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் அவளை தொற்றிக் கொண்டது.

*

அது மீனாட்சியேதான் என்று தெரிந்தவுடன் சின்னய்யாவின் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது.  மீனாட்சியை இந்த மாதிரியான சூழ்நிலையில் சந்திக்க நேருமென இவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எப்போதேனும் ஏற்படும்போது எவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பலநூறுமுறை மனதில் ஓட்டிப் பார்த்திருக்கிறான். ஓடிச்சென்று கரங்களைப் பிடித்துக் கொள்வதாக. அவள் ஓடிவந்து இவனை இறுக்க அணைத்துக் கொள்வதாக. நிராதவராக அவள் நிற்கும்போது திடீரெனத் தோன்றி உதவுவதாக. இன்னும் இன்னும் இதுபோல. ஆனால் இப்போது அது எதுவுமே நடக்கவில்லை. என்ன செய்வது, எதைப் பேசுவது என்பதெல்லாம் புரியாதவாறு, வெறுமையான மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாமியாடியாக அமர்ந்திருக்கும்போது போய் பேசலாமா. பேசினால் பழைய சின்னய்யாவாகப் பேசவேண்டுமா அல்லது சாமியாடியாகவா… அவள் முகத்தில் தெரியும் அந்த அதிர்ச்சி இவனைப் பார்த்ததற்காகவா அல்லது சாமியாடியாக இவன் இருப்பதற்காகவா. அநேகம் பேர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடத்தில் பேசுவதென்ன, பார்க்கக்கூட இவனுக்கு தயக்கமாக இருந்தது.

ஆனால், அன்று ஊருணிக்கரையில் எந்தத் தயக்கமுமின்றி தன்னையே மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். மண்குடத்தில் நீரை மொண்டபின் ஒருகையால் தூக்கிக்கொண்டு மறுகையால் சிறிது நீர் அள்ளி குடத்தின் அடியை கழுவியபடி நளினமாக முன்னும் பின்னும் அசைத்தபடி ஒசித்த இடுப்பில் வைத்தாள். வலது காலை லேசாகத் தூக்கி பாதத்தோடு இறுகியிருத்த வெள்ளிக் கொலுசை தளர்த்தினாள். அப்போது நீரில் தெரிந்த அவள் பிம்பத்தைக் கண்டு ஒரு பெருமிதமும் இறுமாப்பும் முகத்தில் படர, முன் நெற்றியில் விழுந்திருந்த சிறுகற்றைக் குழல்களை இடது கையால் செவியையொட்டி சொருகினாள். சுற்றிலும் வேகமாக விழி சுழற்றி ஒருமுறை பார்த்தபின் துள்ளலாக அடிவைத்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இவன் கரையில் நின்றிருந்த பருத்த ஆலமரத்தின் பின்னால் அவள் பார்வையில் படாமல் மறைந்து நின்றான். யாரும் பார்க்கவில்லை என்று அவள் எண்ணியபோது அவளிடம் தோன்றிய விடுதலை உணர்வையும், உடலெங்கும் பரவிய மெல்லிய சிலிர்ப்பையும் அருகிலென துல்லியமாகப் பார்த்தான். பெண்ணின் அழகென்பது முகத்திலோ நிறத்திலோ அல்ல, யாரும் தன்னை கண்காணிக்கவில்லை என்று தோன்றும்போது அவளின்  மனதாழத்திலிருந்து கட்டுகளை அறுத்துக்கொண்டு வெளிப்படும்  அந்தச் சிறுமியின் குறும்பும் துள்ளலும்தான் என்று இவனுக்குத்  தோன்றியது. அந்தக் கணம் உணர்ந்தான் அவள்தான் அவளேதான் தன் தேவதை என.

தன்மேல் பிரியம் ஏன் ஏற்பட்டதென மீனாட்சி பின்பொருமுறை இவனை கேட்டாள். எப்போது எண்ணினாலும் பரவசம் ஏற்படுத்தும் அந்நிகழ்வை  அவளிடம் கூறவில்லை. அதைக் கூறிவிட்டால் அவ்வப்போது அவளில் எழும் சிறுமியை அவள் பிரக்ஞைபூர்வமாக தடுத்துவிடக் கூடும் என்ற பயத்தினால்தான்.

அவளுக்கு வேறொவருடன் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது இவனுக்குள் எழுந்தது அவள் வாழ்வைப் பற்றிய கவலை தான். இவன் விருப்பமெல்லாம் அவள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான். இன்னொருத்தர் மூலமாக அது கிடைத்தால் இவனுக்கும் மகிழ்ச்சிதான். மாப்பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகவே சொன்னார்கள். அவள் எந்த நிலைமையில் ஒத்துக் கொண்டாளோ, அவள் எடுத்த முடிவிற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என முடிவு செய்தான். இனி அவளை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே திருப்பூரிலேயே கிடந்தான். அம்மா எவ்வளவோ வற்புறுத்தியபோதும் திருமணம் செய்துகொள்வதற்கு இவன் மனம் தயாராகயில்லை.

“சாமி, எங்களை இப்படிக் கொண்டுவந்து சந்திக்க வைத்துள்ளதே. என்னிடம் அருள்வாக்கு கேட்க வந்திருக்கிறாளே. எப்படி சொல்லப் போகிறேன்… ஏற்கனவே சாமி வருமா என்று பயந்து கொண்டிருக்கும் போது இவள்வேறு வந்திருக்கிறாள். என்னைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறாளோ. உண்மையாகவே சாமிவந்து அவள் விரும்பாத எதையாவது கூறினாலும், நான் பழைய கோபத்தில் கூறியதாகத்தானே எண்ணுவாள். அவளுக்கு இப்போது என்ன பிரச்சனையோ தெரியவில்லையே. முகத்தைப் பார்க்கும்போது பெரியதாக கவலையோ சோகமோ இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பம்தான் தெரிகிறது. ஆனாலும் சாமியைத் தேடி வந்திருக்கிறாளென்றால் ஏதோ பிரச்சனை பெரியதாகத்தான் இருக்கவேண்டும். என்ன நடக்கப் போகிறதோ… அப்பா கருப்பா… காப்பாத்தப்பா…” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான் சின்னய்யா.

*

முதல் சாமியழைப்பிற்கு அழைக்கும் விதமாக மணி ஒலித்தது. பெரிய சாமியாடி சுப்பையா எழுந்து சென்று சற்று தள்ளி அமர்ந்திருந்த சின்னய்யாவை தோளில் தொட்டு அறைக்குள் செல்லவேண்டும் என கையால் சைகை காட்டிவிட்டு வீரபத்திரர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

இந்த முதல் சாமியழைப்பு வெள்ளாட்டினை பலி ஏற்பதற்காக. இரண்டு வெள்ளாடுகளை பிடித்திருந்தார்கள். வீரபத்திரருக்கு பூரண அலங்காரம் செய்திருந்தார்கள். அரிவாளுக்கு திருநீரால் பட்டை அடித்து அதன்மேல் மஞ்சளும் குங்குமமும் இட்டிருந்தார்கள். சாமந்தியையும் ரோஜாவையும் இணைத்து இடையிடையே மரிக்கொழுந்தை நுழைத்துக் கட்டிய மாலையை உச்சியிலிருந்து பாதம்வரை சாத்தியிருந்தார்கள்.

வீரபத்திரருக்கு இருபுறமும் இருந்த வெள்ளையம்மாவிற்கும் வயிராத்தாளுக்கும் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் பட்டுப்புடவை சார்த்தி மல்லிகை மற்றும் முல்லை மலர்களால் அலங்கரித்திருந்தார்கள்.

உள்ளே வர வேண்டியவர்கள் வந்தவுடன் கதவைச் சாத்தினார்கள். சுற்றி நெருக்கியபடி நின்று கொண்டிருந்தவர்கள் முகத்தில் எதிர்பார்ப்பும் ஆர்வமும் படர்ந்திருந்தது. பெரிய தூபக்காலிலிருந்த தணலில் சாம்பிராணித் தூளை தூவினார் பூசாரி. குள்ளமாக இருந்தாலும் திடகாத்திரமாக இருந்த பூசாரியின் உடலில் ஊறிய வியர்வை வடியும் நிலையில் இருந்தது.

அறை முழுவதும் புகை சூழ்ந்து சூழலை மேலும் இறுக்கமாக்கியது. சுப்பையா அருகிலிருந்த சின்னய்யாவை நோக்கினார். வெளியில் அமர்ந்திருந்தபோது இருந்த குழப்பமும் பயமும் அவன் முகத்திலிருந்து அகலாமல் அப்படியே இருந்தது. மணியையும் உடுக்கையையும் அடித்தபடி வீரபத்திரருக்கான போற்றிகளைக் கூற ஆரம்பித்தார் பூசாரி. எல்லோருடைய உடலுமே லேசாக விதிர்த்தது.

மெல்ல மெல்ல வேகமெடுத்த போற்றி உச்சத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது சுப்பையா உடல் அவரின் கட்டுப்பாட்டிலிருந்து உதறிக் கொண்டு துடித்தது. இறுக்கிக் கொண்ட உதடுகளிலிருந்து “ம்ம்ம்” என்ற ஒலி அழுத்தமாக எழுந்ததை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் கையிலிருந்த சூலம் முதல் ஆட்டின் கழுத்தின் மீது குத்தியது. அதை பின்புறமாக இழுத்துக் கொண்டு அடுத்ததை முன்பக்கம் கொண்டு வந்தார்கள். இன்னும் ஒருமுறை இவர் வாயிலிருந்து உறுமல் எழுவதையும் ஆட்டின் கழுத்தின்மீது சூலத்தால் குத்தப்படுவதையும் பார்த்தார். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்கள் பரவசத்தில் மிளிர கைகூப்பிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுப்பையாவின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து தொய்ந்தது. இதை எதிர்பார்த்து இவர் அருகிலிருந்த இருவர் கீழே விழாமல் இவரைப் பிடித்துக்கொண்டு அறைக்கு வெளியே கூட்டிவந்து அமர வைத்தார்கள்.

சாமி சூலத்தால் ஆடுகளை குத்துவது பலிக்கு ஒப்புதல் அளிப்பதுதான். இனிமேல் அந்த ஆடுகளை அறுத்து, உரித்து, வெட்டி, சமைத்து படையலிடும் வரை சுப்பையாவும் சின்னய்யாவும் வெறுமனே அமர்ந்து தான் இருக்கவேண்டும்.

இவருடைய பணி பாதி முடிந்துவிட்டது. பெரியசாமி இவருடலில் தோன்றுவது சில நிமிடங்கள்தான். அதற்கே உடலெல்லாம் மூன்று நாட்களுக்கு வலி இருந்து கொண்டிருக்கும். சின்னச் சாமியாடிகளுக்கு ஒருமணி நேரம்வரை சாமி உடலில் இருக்கும். ஒரு வாரத்திற்கு அவர்களால் வேலைக்கு போகமுடியாது. சின்னய்யா அதேபோல பிரமை பிடித்தவன்போல அமர்ந்திருந்தான். இயல்பாக இருந்தவன் முகத்தில் குழப்பமும் கவலையும் படர்ந்தது, அந்தக் குழந்தைகள் வந்து பேசிச் சென்றபின் தான் என்று சுப்பையாவிற்குத் தோன்றியது.

கோவில் வீட்டிற்கு வெளியே வராண்டாவில் இரவு பந்திக்கு மக்கள் தயாராகினர். எளிமையான டிபன்தான். இட்லி பொங்கலுடன் ஒரு இனிப்பும் இருக்கும். உண்டவுடன் அனைவரும் இரண்டு மணிநேரம் ஆங்காங்கே அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுப்பார்கள். மணிச்சத்தம் கேட்டவுடன் எழுந்து வருவார்கள்.

சுப்பையா சின்னய்யாவை நோக்கினார். தான் முதல்முறை சாமியாடியாக வந்த நினைவுகள் எழுந்தன. இவரின் அப்பா மாட்டு வண்டியில் செல்லும்போது சிறிய கல்லில் ஏறியிறங்கியது. அதை எதிர்பாராதவர் சட்டென்று கீழே விழுந்துவிட்டார். அவரின் கால்மீது வண்டி ஏறி இறங்கியது. வண்டியில் சுமை ஏதும் இல்லாததால் முடத்தோடு போயிற்று. காலில் ஒரு கோணல் உண்டாயிற்று. ஊனத்துடன் இருப்பவர் சாமியாடக் கூடாதென்பதால் புது சாமியாடியை தேர்வதற்காக சாமியழைத்துப் பார்க்க இவரையும் அழைத்தார்கள்.          

காமாட்சியம்மன் சன்னதியில் என்ன நடந்ததென்பது இன்னுமே இவருக்கு சரியாகப் புலப்படவில்லை. ஏதோவொரு வேகத்தில் இருமுறை துள்ளியதாகக் கூறினார்கள். இவரேயே பெரிய சாமியாடியென முடிவு செய்தார்கள். வாரிசு அரசியல் போல அமைந்தது இவரது அப்பாவிற்குமே ஆச்சர்யம்தான். முதல் பூசைக்கு வரும்போது இவரிடம் அப்பா கூறியது “உடலை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்” என்பதை மட்டும்தான். முதலில் அது எப்படியென்று புரியாமல் இருந்தாலும் சாமியழைத்து மணியடித்தவுடன் அப்பா சொன்னபடி, தோல்பாவை பொம்மைபோல தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தார். உடல் அதுவே இறுகியது துள்ளியது பேசியது பின்பு துவண்டது. 

பல ஆண்டுகள் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவனுக்கு முதல்முதலாக பள்ளியில் சேர பயமும் தயக்கமுமாக வரும் பிள்ளையிடம் தோன்றும் கரிசனம் போல சின்னய்யாவைப் பார்க்கும்போது சுப்பையாவிற்கு ஒருவிதப் பிரியம் தோன்றியது. அவன் அருகில் சென்று, அவன் தோளில் இடது கையை வைத்து கரங்களின் மேல் வலது கையை வைத்தபடி அமர்ந்தார். அவன் உடல் தயக்கத்தில் குறுகியது. நிமிர்ந்து இவர் முகத்தில் தெரிந்த புன்னகையை பார்த்தவுடன் முகத்தை இயல்பாக்க முயன்றான்.

“சின்னய்யா, ஏன் கவலையா இருக்க மாதிரி தெரியுது” என்றார்.

“இல்லண்ணே, பயமா இருக்கு” என்றான்.

“ஏன் சாமி வருமான்னா”

“ஆமாண்ணே”

“அதுக்கு மத்தவங்கதான் கவலப்படணும். நீயோ நானோ கவலப்பட்டு என்ன செய்யறது. நம்ம கையிலயா இருக்கு”

“அதுகூட பரவாயில்ல. சாமிவந்து அவங்களுக்கு விரும்பாதத சொல்றப்ப நாம சொல்றோம்னு தப்பா நெனச்சுக்கிட்டாங்கன்னா”

“நெனச்சுக்கிட்டு போறாங்க. அதுக்கு நாம என்ன செய்யறது. அந்த நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு இங்க வாராங்க”

“சொல்றது நடக்கலைனா”

“அது சாமிக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சனை. அதுல நீயோ நானோ என்ன செய்யமுடியும்”

“ஆமால்ல” என்று மெல்லக் கூறியவன் முகத்தில் லேசாக தெளிவு வரத் தொடங்கியது.

“சின்னய்யா… எங்கப்பா என்கிட்ட சொன்னத ஒனக்கு சொல்றேன். ஒன் ஒடம்ப கட்டுப்படுத்தாம அது இஷ்டத்துக்கு விட்டுட்டு வேடிக்க மட்டும் பாரு. நடக்கறதுக்கும் ஒனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லேன்னு புரிஞ்சுக்க. மனசுல கவலையோ குழப்பமோ எதுவும் வராது” என்றார்.

இவர் சொன்னதை சின்னய்யா மெதுவாக உள்வாங்குவது தெரிந்தது. முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்தது.  மலர்ந்த அவன் முகத்தில் இவருக்கான நன்றி மிளிர்ந்தது.

*

சுப்பையா அண்ணன் சின்னய்யாவின் தோளைத் தொட்டு பேசியது இவனுக்கு தன் தாத்தா பேசியது போல இருந்தது. இவனுக்கு ஐந்து வயதாக இருந்தபோதே அவர் காலமாகிவிட்டார். ஆனாலும் தாத்தாவைப் பற்றி யாராவது கூறினால், சின்னப் பையனான தன் தோள்மீது கை வைத்து அணைத்தபடியே அவர் நடந்து வந்தது மிகப்பழைய கருப்பு வெள்ளை சினிமாபோல இவன் மனதில் தோன்றும். அவர் இருந்திருந்தால் சாமியாடும் அனுபவத்தை அவரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

ராமய்யா அண்ணன் அவர் அப்பா கூறியதாச் சொன்னது மனதின் இறுக்கத்தையும் பயத்தையும் மட்டுப்படுத்தியது. நடக்கப் போவதில் இவனுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என அவர் கூறியபோது பெரும் விடுதலையுணர்வு தோன்றியது. நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் என்ற நினைப்பே உடலையும் மனதையும் உற்சாகம் கொள்ள வைத்தது.

பூசாரி மணியடித்தார். வெளியே மலர் அலங்காரத்தோடு இருந்த கருப்புசாமிக்கும் வாழையிலை விரித்து படையல் போட்டிருந்தார். இலையை நிறைத்து சோறு வைத்து எண்ணெய் மிதக்கும் குழம்பை கறியுடன் பரிமாறியிருந்தார். சிவந்து எண்ணை மிளிரும் பிரட்டிய கறி ஒருபக்கமும், கடலைப் பருப்பு போட்டு செய்த இரத்தக் கூட்டினை மறுபக்கமும் வைத்திருந்தார். அவற்றிலிருந்து ஆவி எழுந்து எல்லோருடைய நாசியையும் நிறைத்து உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை உண்டாக்கியது.

சுப்பையாவும் சின்னய்யாவும் வீரபத்திரரின் அறைக்குள் நுழைந்தார்கள். உள்பக்கம் மூன்று தலையிலைகளை விரித்து அதேபோல பரிமாறப்பட்ட சோற்றிலிருந்து எழுந்த ஆவி சாம்பிராணி புகையுடன் ஒன்றாகக் கலந்திருந்தது. பூசாரி, இடக்கையில் மணியையும் வலக்கையில் உடுக்கையையும் அடித்தபடி சாமிகளை அழைக்க ஆரம்பித்தார்.

சுற்றியிருந்த அத்தனை பேரின் உள்ளமும் ஒன்றேயாகி சாமியாடிகளை மட்டுமே கவனித்தது போலத் தோன்றியது. ஆனால், சின்னய்யா, சுப்பையாவையும் தன்னையும் தனித்தனியாக நோக்கினான்.

பூசாரியின் குரல் உடுக்கையொலியுடன் இயைந்து ஒலிக்க ஆரம்பித்தது.

வானும் மண்ணும் ஆனவரே

நீரும் காத்தும் ஆனவரே

எங்கள் குலம் காக்க

வந்துவிடு அய்யா…

மாட்டையும் வீட்டையும் காப்பவரே

மரத்தையும் பயிரையும் காப்பவரே

எங்கள் குலம் காக்க

வந்துவிடு அய்யா….

சுப்பையா அண்ணனின் உடல் அவர் கட்டுப்பாட்டில் இருந்து மெதுவாக நழுவுவது இவனுக்குத் தெரிந்தது. அதே நேரம் இவனுக்கு லேசான கிறுகிறுப்பு தோன்றியது. நில அதிர்வின்போது ஏற்படுவதுபோல உடல் பரிதவித்தது.

பூசாரியின் குரலில் கார்வை அடர்ந்து செவியில் வந்து அறைந்தது. அவரின் குரலும் உடுக்கையொலியும் சின்னய்யாவின் முழுப் பிரக்ஞையையும் கட்டுப்படுத்தியது.

சூரிய சந்திரன் ஆனவரே
வெயிலும் மழையும் ஆனவரே
எங்கள் குலம் காக்க
வந்துவிடு அய்யா 
உன் நிழல்தேடி வந்துள்ளோம்
உன்னை அண்டி வந்துள்ளோம்
எங்கள் குலத்தைக் காக்கவே
விரைந்து வா அய்யா
வந்துவிடு அய்யா
வந்துவிடு அய்யா
அண்டியவரைக் காக்கவே
பெண்டு புள்ளையைக் காக்கவே
விரைந்து வா அய்யா
வந்துவிடு அய்யா

இவன் உடல் இவனின் எந்தப் பிரயத்தனமும் செய்யாமலேயே குதித்தது. இவன் வாயிலிருந்து இதுவரை கேட்டிராத உறுமல் வந்ததை திகைத்தபடி பார்த்தான். இவன் காலில் கட்டியிருந்த சலங்கை பூசாரியின் உடுக்கையொலிக்கு ஏற்றபடி இசைத்தது. பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் கைகூப்பித் தொழுதனர். விம்மலை அடக்கிய சிலரின் விழிகளில் கண்ணீர் துளிர்த்துச் சொட்டியது. பெண்களின் பக்கமிருந்து ஒரே நேரத்தில் எழுந்த குலவைச் சத்தம் அறையெங்கும் நிறைந்து வழிந்தது.

சில நிமிடங்கள் குதித்துவிட்டு இவன் உடல், கோவிலைச் சுற்றி ஓட ஆரம்பித்த சுப்பையாவைத் தொடர ஆரம்பித்தது. பின்னால் தோளில் கைவைத்தபடி ஓடியவர்களுடன் பதறியபடி இவனும் ஓடினான். மூன்று சுற்று சுற்றியவுடன் ஓரிடத்தில் நின்றார்கள். இவனும் வந்து இணைந்து கொண்டு ஆசுவாசமடைந்தான்.

ஒவ்வொருவராக பெரியசாமியை வணங்கி திருநீறு பூசிக் கொண்டு இவனருகில் வந்தார்கள். வலது கையிலிருந்த அரிவாளை இடது கைக்கு மாற்றி அதனை வாகாக தரையில் ஊன்றிப் பிடித்துக் கொண்டு கருப்பர் நின்றார். ஒவ்வொருவராக இவனைச் சுற்றி குழுமினார்கள். எல்லோருடைய முகங்களிலும் எதிர்பார்ப்பு தெரிந்தது. சுற்றி நின்றவர்களைப் பற்றி எந்த விவரமும் இவனுக்குத் தெரியாது. இவன், இவ்வளவு நேரமும் ஊரெல்லாம் சுற்றும் வண்டியின் சக்கரத்தில் இருந்த பல்லியைப் போல தன் உடலோடு சுற்றி வந்தான். இப்போது, யானையின் மேல் அமர்ந்து அது ஆற்றுவனவற்றைப் பார்க்கும் பயமறியாச் சிறுபிள்ளையென எல்லாவற்றையும் நோக்கிக் கொண்டிருந்தான். சுற்றியிருந்தவர்களுக்கு உள்ள அதே எதிர்பார்ப்போடு.

மீனாட்சி கூட்டத்தின் சுற்றுக்கு வெளியே தயக்கத்துடன் நின்றாள். கருப்புசாமி கைநீட்டி அவளை அழைத்தது. அவள் ஒரு கணம் திகைத்து பின் தெளிந்து கூட்டத்தை விலக்கிக் கொண்டு அருகில் வந்தாள். கருப்பரின் விழிகளை நோக்கியவுடன் கைதொழுதாள். கருப்பர் சின்னய்யாவின் கையை அவள் தலைமேல் வைத்தார்.

“ஏம்மா உனக்கு குழப்பம். இனிமே எந்தக் குழப்பமும் தேவையில்லை…” என்று வெளிவந்த கருப்பசாமியின் சொற்களைக் கேட்டு நெகிழ்ந்து வணங்கினாள். அதைக் கண்டபோது சின்னய்யாவின் முகத்தில் பெரும் நிறைவு தோன்றியது.

***

கா. சிவா – “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது. தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular