Monday, October 14, 2024
Homeஇலக்கியம்அபுனைவுகனவு மெய்ப்படும் கதை - 5

கனவு மெய்ப்படும் கதை – 5

ணபதியோடு கடந்த பத்து நாட்களாகச் சந்திக்க இயலாமல் இருக்கிறேன். இருவருக்கும் பரஸ்பரம் மும்முரமென்று என்று சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றன. நானும் தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்டுரைகளுக்கு மத்தியில் ஆறு கதைகள் எழுதிவிட்டேன். எத்தனைத் தேறும் என்று கேட்காதீர்கள். கணபதி தன் ஓவியங்களோடு சேர்ந்து, முக்கியமான கலை விமர்சனங்கள், பதிவுகளை மொழிபெயர்த்துப் போடுகிறார். அவரது மொழிபெயர்ப்பு மிகவும் நேர்த்தியாகவும், அவர் உருவாக்குகின்ற கலைச்சொற்கள் அதைவிட மிக நேர்த்தியாக இருக்கின்றன. சமீபத்தில் வரைதலைக் கீற்றுதல் என்று சொல்லலானார். அதுபோல நிறைய புது கலைச்சொற்களை புதிதாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் கைகளுக்கு இப்போது பேனாவும் கச்சிதமாக இருக்கிறது அதற்கும் வேலை இருக்கிறது.

கிராஃபிக் நாவல் இப்போது காட்சிகளை திட்டமிட்டு முடித்தாகிவிட்டது. அடுத்ததாக கேரக்டரைசேஷனுக்குள் நுழைகிறோம். இதில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறது, அதைத்தான் உங்களுடன் பகிர்கிறேன்.

Alphaji – character – Athu oru kanavu – Ganapathy Subramaniam

என் நண்பரை (குருவாகவும் சொல்லலாம்) இந்தக் கதையில் ஆல்ஃபாஜி எனும் கேரக்டரில் எழுதியிருந்தேன்.  அவர் அந்த கேரக்டரை டிசைன் செய்த போது கிட்டத்தட்ட அவரே வந்துவிட்டார் என்கிற ஆச்சரியம். எப்படி இந்த தொடர்பு கதாசிரியருக்கும் ஓவியருக்குமிடையே நிகழ்ந்திருக்கிறது என்று யோசிக்கும் போது, கதாசிரியர்களுக்கும் – இல்லஸ்ட்ரேட்டர்களுக்குமான தொடர்பு பற்றி ஒரு யோசனை வந்தது (கிங் விஷ்வாவிடம் கேட்கலாம்) அதற்கு சப்ளிமெண்டரியாக் இன்னுமொரு யோசனை. ஆம் இந்த மாங்காவிற்கென ஒரு supplementary கொண்டு வந்தால் என்ன?. இது குறித்து அடுத்தக் கட்டுரையில் பேசுவோம். மேலே சொன்னது போல அவர் நாம் எழுதும் கதாப்பாத்திரங்களை அப்படியே கொண்டு வந்துவிடுவார் என்று முன்னமே தோன்றி தான், கண்ணமாவை வர்ணிக்காமல் விட்டுவிட்டோம்.

நேரடியாக உங்கள் முன் ஒரு மாங்காவை – இது தான் முதல் தமிழ்மாங்கா என்று நிறுவிவிட்டு அதனைச் சந்தைப்படுத்தி ஒருவேளை வெற்றியும் கூட பெற்றிடலாம். ஆனால் இது எங்கள் நோக்கமல்ல, இலக்கியங்களில் இருநூறு பிரதிகள் விற்றாலே சந்தோஷப்படும் கதாசிரியனின் கதை உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளுக்கும் குறைவானது அல்ல. ஆனால் அவனை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக லாபநோக்கைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத பீடங்களைச் சாடும் நோக்கில்லாததால் விட்டுவிடுவோம். மாங்கா வடிவத்தில் கதைகளைக் கொண்டுவருவது, வாசிப்பைக் குறைத்துக்கொண்ட மக்களுக்கு, வெகுஜனக் கதைகளென்று தரம்பிரித்து வாசிப்பின் தரத்தைக் குறைத்து அவர்களுக்கு இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஒவ்வாமைக்கு மாற்று மருந்தாகத் தான் இவை இருக்கும். அது மட்டுமன்று நல்ல தமிழ் இலக்கியங்களை மிக எளிதாக மொழிபெயர்த்து அதனை தமிழ்நிலம் தாண்டியும் கொண்டு சேர்க்க முடியும்.

ஆத்மாநாம், நகுலன், பிரம்மராஜன், ஞானக்கூத்தன் ஆகியப் பெயர்களை லலித்கலா கேலரியில் ஒரு கண்காட்சியின் தேநீர் விருந்தில் குறைந்தபட்சம் யாரோ ஒரு ஓவியர் அந்த கவிஞர்களின் பெயரையோ அல்லது ஒரு எழுத்தாளனின் பெயரையோ உச்சரித்திருப்பார்கள். அந்த காலக்கட்டத்தோடு ஒரு துண்டித்தல் நிகழ்ந்துவிட்டது, இப்பவும் ட்ராட்ஸ்கி மருது போன்ற சிலர் இலக்கியம் பேசும் மேடைகளில் காணக்கிடைத்தாலும். இலக்கியம் அந்நியப்பட்டிருப்பது தான் உண்மை. ஆக்டோவிய பாஜ்ஜைப் பற்றி பேசும் எந்த கவிஞனும் அவனுடன் சேர்ந்து ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் ஜே.ஸ்வாமிநாதனைத் தெரிந்து கொள்ளவேயில்லை. சரி புலம்பல்களை விடுவோம்.

என் எழுபத்து மூன்றாவது வயதில் தான் விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகளின் அமைப்புகள் பற்றி அசலானவற்றை சிறிதளவு தெரிந்துகொண்டேன். அதன் விளைவாக என் எம்பதாவது வயதில் அதில் சில முன்னேற்றங்களை உருவாக்கினேன். எனது 90வது வயதில் அதன் மர்மங்களில் நான் ஊடுருவியிருப்பேன். என் நூறாவது வயதில் நான் அற்புதங்களை வந்தடைவேன். ஆனால், எனது நூற்றிப்பத்தாம் தான் வயதில் நான் வரைந்த யாவற்றிலுமிருந்து மிகச்சிறிய புள்ளியொன்று உயிரோடு இருக்கும்.

ஜப்பானியக் கலைஞன் ஹோகுசாயின் வரிகள் அவை. தன் வாழ்வின் மொத்த உழைப்பையும் வரைவதற்காக அவன் செலவழித்திருக்கிறான். அதற்காக அவன் இன்னும் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பியிருக்கிறான். அது தான் வரைந்தவற்றில் ஏதோ ஒரு புள்ளியின் உயிர்பெறுதலுக்காக வேண்டியவை. தன் முழு ஆயுளையும் ஒரேயொரு படைப்பிற்கான வேலையைச் செய்து கொண்டிருப்பவனாகத் தான் (work in progress) அவன் தன்னை அறிந்திருக்கிறான்.

Art Edgeஎனப்படும் அமெரிக்க கலை இதழ் ஒன்றில், WIP பற்றிய விவாதங்கள் நிறையவே வாசிக்க நேர்ந்தது. கலைஞர்கள் வெறுமனே தங்கள் முழுமையடைந்த படைப்புகளை மற்றும் கண்காட்சியில் தமது பார்வையாளர்களுக்குக் காட்டுவது காலாவதியான விஷயமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றளவும் தங்களது நுட்பங்களை வெளியில் தெரியாமல் பாதுகாத்து வரும் பல கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்குமிடையே இருக்கின்ற நுட்பமான முரணை உணர்ந்து கொள்ள முடிகிறதா. தன் முழு வாழ்நாளையும் ஒரே வேலையைச் செய்து வருவதாக நினைக்கும் கலைஞர்களுக்கும், தன் கலை வேலைகள் எப்படி உருவாகின்றன என்பதை மறைத்து வரும் கலைஞர்களுக்கும் இடையே இருக்கின்ற சிந்தனைப் போக்கு, அல்லது கலை குறித்த அவர்களது தத்துவார்த்த இடைவெளி எத்தனை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

அவற்றுள் உயர்வு தாழ்வு குறித்த விவாதமாக இங்கு பேசுவதற்கு அல்ல அவர்கள் தங்கள் வாழ்க்கையை கலையோடு எங்கணம் தொடர்புபடுத்தி வாழ்கிறார்கள் என்று ஒரு தரிசனத்தைத் தருகிறது. இன்றைக்கு மேற்குலகின் கோட்பாடுகளில் கலைக்குச் சமமாக கலைவேலைப்பாட்டினையும் கருத வேண்டும் (Work & Work of art) என்று நிறையப்பேசப்படுகிறது. ஆகவே தான் இந்த தமிழ் மாங்கா வடிவம் உருவாகும் கதை என தொடர்ந்து பதிவிடக் காரணம்.

ஒருவேளை, இந்த வொர்க் இன் ப்ராக்ரஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தாமல் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஏதோவொன்றில் நிறைவு அல்லது ஏமாற்றம் கிட்டியதும் மேலும் ஒரு முயற்சியை எடுக்காமல் விட்டுவிட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாலும், வேறு யாரேனும் இந்தத் துறையில் இறங்கி சாதிப்பதற்கான இடர்களைப் பற்றி பேசிட ஒரு வெளி தேவைப்படுகிறது. அவ்வாறு பிரச்சினைகள் குறித்துப்பேசிட ஒரு வெளியை ஏற்படுத்தி அதில் இவற்றை எல்லாம் பதிவதால் கூடுதலாக ஒரு திருப்தி கிடைக்கிறது என்பதும் உண்மை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கலையை உருவாக்கலாம், ஆனால் அதற்கடுத்தக்கட்டம் மிகவும் திட்டமிடல், கவனம், ஒழுங்கு ஆகியன தேவைப்படும்.

ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன், உண்மையில் நம்மில் யாரேனும் 110 வயது கூட வாழ ஆசைப்பட வேண்டாம், 80,90 வயது வரைக்கும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோமா அல்லது கனவு கண்டிருக்கிறோமா? நம் வாழ்வியல் சூழலில் அதற்கான இடமிருக்கிறதா. யோசித்துப்பார்த்தால், அந்த சிந்தனை உங்களுக்கு சாத்தியமானால் விரக்தி மட்டுமே மிஞ்சும் இறுதியில் அது இயலவே இயலாது என்றும் தோன்றலாம்.

அதே சமயம், கலை அதனைச் சாத்தியப்படுத்துமா என்று குதர்க்கமாய் கேட்டால், பதில் சொல்லலாம் கலை குறைந்தபட்சம் அந்தக் கனவினைச் சாத்தியப்படுத்தும் என்று.

கனவு மெய்ப்படும் என்கிற இந்த தொடர், கிராஃபிக் நாவல்/தமிழ் மாங்கா என்கிற வடிவத்தை நாங்கள் கொண்டுவர இயலாமல் ஒத்திப்போட்டதால் இத்தொடரும் நிறைவு பெறுகிறது. மீண்டும் இது போன்ற ஒரு முயற்சி சாத்தியமாகும் என நம்புகிறேன்

ஜீவ கரிகாலன்.

[spider_facebook id=”1″]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular