Wednesday, October 9, 2024
Homeஇலக்கியம்அபுனைவுகனவு மெய்ப்படும் கதை - 3

கனவு மெய்ப்படும் கதை – 3

சென்ற பதிவில் தமிழில் இது முதல் முயற்சி என்று சொல்லிவிட்டேன். எந்தவித Claiming அல்லது தலைக்கணத்திலிருந்து சொல்லாமல், ஒன்றை உருவாக்குகின்ற excitementல் இருந்துதான் சொல்லிச்சென்றாலும், அதற்கான கருத்து ஒன்றாக அமேசானில் கிடைக்கின்ற கிராஃபிக் நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றினைப் பட்டியலிட்டுக் கருத்திட்டத் தோழமை தான் இந்தப் பகுதி எழுதுவதற்கான காரணம். இப்படி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும், விவாதம் நடத்தினால். அந்தப் பக்கம் கிராஃபிக் நாவல் உருவாகும் பொழுது இந்தப் பக்கம் நல்லதொரு supplementary ஒன்றை உருவாக்கிவிடலாம்.

நாங்கள் கொண்டு வரும் முயற்சி, தமிழில் வருகின்ற முதல் மாங்கா வடிவம். மாங்காவைப் புரிந்து கொள்ள கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள அவற்றை மற்ற காமிக்ஸ்களுடன் பிரித்துப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

காமிக்ஸ் VS கிராபிக் நாவல்

ட்ராட்ஸ்கி மருது, கிங் விஷ்வா போன்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் இதற்கான விளக்கங்கள் அளித்து வந்திருக்கின்றனர். இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

காமிக்ஸ் எனும் சித்திரக்கதைகள் – பெரும்பாலும் ஒரு கதையை வரைவது என்கிற நோக்கத்தில் அல்ல, ஒரு கதாப்பாத்திரத்திற்கான கதையை என்று எடுத்துக் கொள்ளலாம். பேட்மேன், ஸ்பைடர்மேன், மாயாவி, மாடஸ்டி, இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லுக், மாண்ட்ரேக், சிக்பில் இப்படி யாரோ ஒரு கதாப்பாத்திரத்தின் சாகசங்களை அத்தியாயங்களாக பகுதிகளாகப் பிரித்துச் சொல்வது என்பது காமிக்ஸ் ஆகும்.

கிராஃபிக் நாவல் என்பது கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தி வரைவது. இது ஒரு நாவலென்றால் என்னவென்று நினைக்கிறோமோ அதையே கிராஃபிக் பண்ணுவது என்று புரிந்துகொள்ளலாம். வேறு எந்த வகையிலும் எடுத்துக்கொள்ள முடியாத வடிவங்களை நாவலென்று சொல்லலாம் என்று ஒரு சொலவடை இருக்கிறது இலக்கியத்தில். இதை நாவலின் இலகுத்தன்மைக்கு உதாரணமாகவும் சொல்லலாம். கிராஃபிக் நாவலின் சிறப்புத்தன்மை என்றும் இதையே சொல்லலாம். காமிக்ஸ் தனக்கென வைத்த எல்லைகளை தகர்த்தெறியும் போது தனக்குத் தானே சூட்டிய பெயராக கிராஃபிக் நாவலைச் சொல்லலாம்.

அதாவது கிராஃபிக் நாவலால் ஒரு எழுத்துவடிவம் சந்திக்கக் கூடிய அனைத்துச் சவால்களையும் சந்திக்க முடியும்.

அநேகமாக இந்த ஸ்டேட்மண்ட்டில் சிக்கல்களோ, சர்ச்சைகளோ எழலாம் என்பதால் இதை நானே அடிக்கோடிட்டு வைக்கிறேன். இதை விவாதிக்கும் முன் இன்னும் சில வித்தியாசங்கள்.
நானும் கணபதியும் சென்ற பதிவிற்கு வந்த, அந்த சில கருத்துகளுக்கு பதிலைச் சொல்லிப் பார்க்க மேற்சொன்ன வித்தியாசமே கிடைத்தது. ஆனால் அந்த வித்தியாசம் தான் இணையத்தில் தேடினாலோ எந்த விவாத்தில் தேடினாலோ கிடைக்கக் கூடிய பதில். ஆனால் நேரடியாக ஒரு கிராஃபிக் நாவல் உருவாக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டு வரும் எங்களால் வேறு ஒருத் தகவலையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அது கதாசிரியருக்கும், ஓவியருக்குமானத் தொடர்பு.

காமிக்ஸில் கதாசிரியர் என்பவர், ஓவியர் என்பவர் இருவருமே பெரும்பாலும் commissioned வேலையாட்களாக தனித்தனியாகவே வேலை செய்வார்கள். ஒரு காமிக்ஸ் தொடர் முழுக்க ஒரே ஓவியர் தான் வரைய வேண்டும் என்றில்லை, அவர்கள் வேறுவேறாக இருக்கலாம்.

உதாரணம் கதாசிரியர் போனாலியும் (Gian Luigi Bonelli), ஓவியர் கலேப்பினியும்(Aurelio Galleppini) சேர்ந்து உருவாக்கியக் கதாப்பாத்திரம் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஹீரோக்களில் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் வைத்திருக்கும் திருவளர்.டெக்ஸ்வில்லர் அவர்களுக்கு கதாசிரியர்களாக 11 நபர்களும், இல்லஸ்ட்ரேட்டர்களாக 39 ஓவியர்களும் இதுவரைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் கிராஃபிக் நாவலுக்காக இப்படி நடைபெற வாய்ப்பில்லை உதாரணமாக விகடனில் வந்திருந்த சந்திரஹாசன் நாவலைச் சொல்லலாம் (சு வெங்கடேசன் கதையும், க.பாலசண்முகம் ஓவியமும்).

மாங்கா ஜப்பானிய வடிவம், மாங்காவின் தந்தை என அழைக்கப்படும் ஜப்பானிய ஓவியர் ஹோகுசாயின் காலக்கட்டம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றால், ஜப்பானிய சித்திரக்கதைகள் என்பது ஒரு மரபாகப் பார்க்கப்படுகிறது. அந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற எழுதுப்பொருட்கள் கொண்டு மினிமலிசமாக ஆனால் மிகவும் ஆழமானதாக உருவாக்கப்பட்ட ஓவிய வடிவங்களே மாங்காவாகக் கருதப்படும். நமது முயற்சி கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒன்றே, கிராஃபிக் நாவலென்று முத்து திரைப்படத்தின் ஸ்டோரி போர்டை அப்படியே அச்சில் கொண்டுவந்தது போலன்று.

சந்திரஹாசம் வெளிவந்தபோது அது எதிர்கொண்ட விமர்சனத்தை நினைத்துப் பார்த்தேன். உண்மையில் அப்படியானதொரு புத்தகம் மாங்கா போன்று எளிமையாக வந்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த முயற்சி உருவாக்கிய தடத்தில் தொடர்ந்து நிறைய ஆக்கங்கள் உருவாகித் தொடர்ந்திருக்கும். ஒரு நிறுவனம் மேற்கொண்ட நல்ல முயற்சியாக அதைக் கவனத்தில் கொள்ளலாம் அவ்வளவு தான்.

இந்த நாவலுக்கான கதை ஒரு யதார்த்தப்பாணியிலான ஒரு புனைவு. ஆனால் கிராஃபிக் நாவலுக்கான சவாலாக சிலவற்றை அது ஓவியருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக “அது” என்கிற வார்த்தைப் பிரயோகம், எனது ஃபேஸ்புக் பதிவுகளிலேயே அது என்கிற பதிவுகளைப் பார்த்து எரிச்சல்கொண்டோர் பலரும் சிலாகித்த சிலரும் உண்டு. அது என்பது பல நேரங்களில் காதலாகவே எழுதப்பட்டாலும், அது ஆரம்பத்தில் ஒரு நோய்க்கு பயந்தே எழுதப்பட்டது, நோயினால் வந்த மரணபயம் அதுவானது, பின்னர் மரணபயத்தால் உருவான அல்லது அபயமளித்த ஆன்மீகம், எல்லாவற்றிட்கும் பின்னர் எஞ்சியிருக்கின்ற காமம் என அதுவாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது. இந்தக் கதை கூட “அது ஒரு கனவு மட்டும்” என்கிற தலைப்பு,, அது ஒரு பாதை மட்டும், அது ஒரு ஒளி மட்டும் என்கிற கதைகளைத் தொடர்ந்து எழுதப்பட்டிருந்த கதை தான். இப்படியான ஒரு வார்த்தைப் பிரயோகம் வருகின்ற இடங்களை, கணபதி எப்படி எதிர்கொள்கிறார். இந்த சவாலை மேற்கொள்ளும், கையாள்கின்ற இடமளிக்கும் வடிவம் தான் கிராஃபிக் நாவல், இதன் ஆன்மீக வடிவரீதியிலான கனெக்டிவிட்டி தான் ஜப்பானிய மாங்காவுடனானது.

pizap.com14900643146671
மாங்கா – சில உதாரணங்கள்

மற்றபடி இது சந்தைக்கு வரும்வரை முழுக்க முழுக்க தன்னை அறிந்து கொண்டிருக்கின்ற ஒரு கலைஞனது யோகப்பயிற்சி என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் புரிய வேண்டுமென்றால் – ஒரு கூழாங்கல்லினை எடுத்துத் தடவிப் பாருங்கள்.

ஜீவ கரிகாலன்

 

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular