Monday, September 9, 2024
Homeநூல் விமர்சனம்கனவு மிருகம் -விமர்சனம்

கனவு மிருகம் -விமர்சனம்

கனவு மிருகம்

– விமர்சனம் – விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான உறவு நெடுங்காலமானது. கவிதையின் முக்கியக் கூறுகளான இருண்மையும் படிமமும் சிறுகதைகளில் பயன்படுத்தும்போது சிறுகதையின் நிறம் மாறுகிறது. பொதுவாக தமிழில் சிறுகதைகளின் போக்குகளை இரண்டாக பிரிக்கும் வழக்கமுண்டு. ஒன்று எளிய மனிதர்களின் வாழ்வியல் பாடுகளை பேசுபவை. மற்றொன்று எழுத்தாளர் தன் உள் மனத்தின் நெருக்கடிகளையும் அரிதினும் அரிதாக பரவசங்களையும் பகிர்வது.

இப்படி இரண்டாக பிரித்துப் பார்ப்பதிலும் உள்ளடங்கிய ஒரு விஷயம் இருக்கிறது. இரண்டு பிரிவுகளும் வாழ்வியலில் கூறுகளைச் சொல்வதுதாம். ஆனால் தன்னிலிருந்து பகிர்ந்து கொள்பவையில் தான் அக்மார்க் கலைத்தன்மை கொண்டதென்றும் மற்றவை பிரச்சாரத் தன்மையில் செகண்ட் கிரேடு கலைத்தன்மை கொண்டது என்றும் காலந்தோறும் விமர்சகர்கள் இலக்கிய வரலாறாக அடுத்த தலைமுறைக்கு தந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு வகையில் உயர் வர்க்கத்தில் பிறந்த ஆதிக்கசாதி மனநிலைதான் என்று தோன்றுகிறது. மொழியை பயன்படுத்துதலை மையப்படுத்தியே தரம் பிரிக்கப்படுகிறதோ எனும் சந்தேகத்தை எழுப்புகின்றன. சிறுகதைக்கும் கவிதைக்குமான தொடர்ப்பை, அநேகம் அதன் உள்ளடக்கத்தினை வைத்தே நிறைய பேசியிருக்கிறோம். சிறுகதையின் வடிவத்தை மாற்றி அமைத்த்திலும் கவிதைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

நாவலின் வடிவம் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மாற்றமடையும். சிறுகதையின் வடிவம் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றமடையும். கவிதையின் வடிவ மாற்றம் நாளுக்கு நாள் நிகழக் கூடியது எனும் கருத்து பலராலும் சொல்லப்படுவதுண்டு. கவிதையின் உள்ளடக்கத்தினைப்போலவே அதன் வடிவமாற்றத்தையும் சிறுகதைகளில் பயன் படுத்தும் முயற்சிகள் தமிழ்ச்சூழலில் கடந்த பத்தாண்டுகளாக பெருமளவில்  நிகந்துவருகின்றன.

பாலாவின் ’கனவுமிருகம்’ தொகுப்பில் அவ்விதமான வடிவ மீறல் அல்லது மாற்று வடிவ முயற்சி கதைகள் இருக்கின்றன. அவை கதையை வாசகனுக்கு இன்னும் நெருக்கமாக சொல்வதற்கு உதவுகின்றன. குறிப்பாக கொலையும் மூன்று உரையாடல்களும்.. பொதுவெளியில் நடந்த நிகழ்வு ஒன்றின் மீதான மூன்று விதமான கோணங்களை மூன்றுவிதமான நியாயங்களை மூன்றுவிதமான தப்பிதல்களை விரிக்கிறது இக்கதை. மூன்றில் எதன் ஒன்றிலாவது நாம் பொருந்திபோவோம். அல்லது எல்லாவற்றிலும் ஒரு கூறாக நாம் இருப்போம்.

அதேபோல காணாமல் போயிருந்தவனின் கதையும். சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போவது பற்றிய கனவில் இருப்பவனில் துவங்கி, அவனின் சின்ன குற்றச்செயலுக்கு தண்டனையாக ஒருநாள் வீட்டைபிரிபவனின் சூழலில் முடிகிறது. கதை சொல்லும்போது இடையிடையே அடைப்புகுறிக்குள் இருப்பவை தனிக்கதை. அல்லது அந்த அடைப்புகுறிக்குள் இருப்பவையே அக்கதைக்கான நினைவுகளை பத்திரப்படுத்தி வைத்திருப்பவை.

பாலாவின் முதல் கதை தொகுப்பு இது. அநேக முதல் தொகுப்பு கதைகள் தன் பால்ய நினைவுகளும் பால்ய கனவுகளுமாக நிறைந்திருக்கும். தன் சிறுவயது அல்லது பதின்மவயதில் வியந்த மனிதர்கள், வியந்த உறவுகள், வியந்த அனுபவங்களை நினைவுப்படுத்தும் விதமான கதைகளும் இருக்கும். இந்தத் தொகுப்பின் நீச்சல், முள் உள்ளிட்ட  கதைகள் அவ்விதமான நினைவுக்கதைகளே.

இன்னும் ஒவ்வொரு கதை குறித்தும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் பாலாவின் கனவுமிருகம் தொகுப்பின் வழியே எனக்கு நான்கு சிறுமிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய உரையாடலாக இதை அமைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்.

முதல் சிறுமி… இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த  ஆப்பிள் கதையிலிருக்கும் ஆர்த்தி..  தன் மாமாவிற்கு சிறுமை நெடியேறிய ஆப்பிளைப் பரிசளிப்பவள். அந்தச் சிறுமைக்கு அவள் எந்த வித்ததிலும் காரணமில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சிறுமையை சராசரி மனிதனின் இயல்புகளில் ஒன்றுதான் என்று அவனுக்கு கற்றுக்கொடுத்து போகிறாள். மழையில் நனைந்துகொண்டிருக்கும் வாசற் கேட்டில் விளையாட அழைத்த ஆர்த்தியின் குரலுக்கும்; எனக்கு தெரியாமல் ஆப்பிள் தின்கிறியா எனும் ஆர்த்தியின் குரலுக்கும் எவ்வித மாற்றமில்லை. அதில் விளையாட்டுக்கான அழைப்பைபோல எனக்கு தெரியாமல் செய்கிறாய் எனும் புகார் இதில் இருக்கிறது. முன்,பின் திட்டங்கள் ஏதுமற்ற குரலில் வழியும் குழந்தைமைதான் அவனையும் அந்த ஆப்பிளை தின்னமுடியாமல் செய்கிறது.

இரண்டாவது சிறுமி… ’கிறுக்கல் சித்திரங்கள்’ கதையில் சுவரில் வரைந்துகொண்டேயிருக்கும் சுவேதா. சுவேதா புதிதாக ஏதும் செய்யவில்லை. குழந்தமைக்கேய உரிய ஓவியங்களை சுவரில் வரைந்து கொண்டிருக்கிறாள். சுவேதாவின் ஓவியங்களை ரசிக்கும் அவள் அப்பாவிற்கு அந்த ரசனையைத் தாண்டிய பயணம் கைக்கூடவே இல்லை. ஆனால் அதை திட்டிகொண்டிருந்தாலும் அவளின் அம்மா தனக்குள் வளர்த்தோ அல்லது வளர்ந்தோ வரும் இருண்மையை அடையாளம் காண்பதற்கும் அதை ஓவியங்கள் வழியே கலைப்பதற்கும் முடியுமென நம்புகிறாள். குழந்தை இல்லாத வீட்டின் உரிமையாளருக்கு சுவேதாவின் ஓவியங்கள் ஓயாமல் மூளையில் நெளிகின்றன. சுவேதா திட்டமிட்டு ஏதும் புதிதாக செய்யவில்லை. அவள் அவளின் இயல்புக்கு ஓவியங்கள் வரைந்துகொண்டிருக்கிறாள். ஆனால் அவ்வோவியங்கள் அவள் வீட்டின் இயக்கத்தையே மாற்றியமைக்கின்றன. தன் ஓவியங்களின் வழியே அச்சமுறும் வீட்டின் உரிமையாளரின் வீட்டிற்கும் தன் ஓவியங்களால் நட்சத்திர ஒளி தந்துவிட்டே செல்கிறாள். மனித அச்சமடைவதற்கும், வேறு திசையில் பயணிக்கவும் புரட்டி போடும் பெரும் சம்பவங்கள் தேவையில்லை. தான் நம்புவதை, நம்புவது போலவே செய்யும் ஒருவரின் எளிய செயல் போதும்.

மூன்றாவது சிறுமி… கனவில் யானை வரும்போது உடல் துள்ளிக்குதிக்கும் ரிதன்யா.. வாழ்வின் உயிர்ப்பானத் தருணங்களை எல்லாக் காலங்களிலும் குழந்தைகள்தான் பெரியவர்களுக்கு அடையாளம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். அந்தக் கணத்தில் வாழவும் அவர்களிடமிருந்தே பழகிகொள்ள வேண்டியிருக்கிறது. ரிதன்யாவின் கனவில் யானை புகாமலிருக்க சன்னலைச் சாத்தும் அவள் அப்பாவுக்கு தெரிவதில்லை அடுத்த நாள் மயில் வருமென்று. இக்குறுங்கதையில் வரும் கனவு கனவு மட்டுமல்ல. குழந்தைகளின் உலகம் நொடிக்களுக்குள் மாறக்கூடியது எனும் புரிதலை சொல்வதே முக்கியமானது. அந்தப் புரிதலில்தான் அவர்களுக்களுடன் உரையாடல் சாத்தியாகும். தன் குழந்தைகளிடன் உரையாடலை சாத்தியப்படுத்த தெரியாத எந்த மனிதருக்கும் வேறு எந்த மனிதரோடும் எந்த ஒன்றோடும் நிறைவான உரையாடல் சாத்தியமே இல்லை.

நான்காவதாக எப்போதும் பூக்கள் பூக்கிற பாவாடை அணிந்திருக்கும் சலவை தொழிலாளியின் மகள். மத்திய தர வர்க்க/வர்ண வீட்டின் தம்பதியினரில் ஒருவர் மட்டும் அனுமதிக்க அவ்வீட்டிற்குள் நுழையும் அந்த சிறுமியைப் பற்றிய கதை. கதையின் தலைப்பு மொழியறிவு..  இக்கதைக்கான தலைப்பு கதையை விட ஈர்த்தது. அந்த சில ஜாதிகள் அழுக்கோடவே பொறக்குது” என அவன் மனைவியின் மொழியறிவும்,, தேவியடியா ந்னு தன் அம்மாவை அப்பா அழைப்பதை புகாராகவோ, பதிவாகவோ பகிரும் அந்தச் சிறுமி. உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் நேரிடையான அர்த்தத்தில் புழங்குவன இல்லை. அது வலியில், இரக்கத்தில், தாழ்வுமனப்பாண்மையில் என பலவும் கலந்து உழல்கிறன. அவை அழுக்குச் சொற்கள்தான்.

தூய்மையிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது அழுக்குச் சொற்கள்தான். பள்ளிக்குச் செல்ல மறுக்க இந்தச் சிறுமி சொல்லும் காரணம் பெரிய புனைவுலகை நம் முன் விரிக்கிறது. சீரூடை என்பது ஏற்றத்தாழ்வை மறைக்க எனும் சொல்லப்படும் பொதுச்சிந்தனைக்கு மாறாக என் பூக்கள் பூக்கும் பாவாடையை இழந்துவிட செய்யும் என்பதால் பள்ளியை மறுப்பதாக சொல்கிறாள். நம்முள் இருக்கும் கலைஞன் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட நினைக்கையில், சமுக மனிதன் அவளின் சிந்தனையை கண்டு அச்சமுறுகிறான். குழந்தைமையை சிதைக்காத பள்ளிக்காக நாம் காத்திருப்போம்.

கணந்தோறும் மாற்றமடைந்துவரும் அறத்திற்கான விளக்கங்களை  இந்தச் சிறுமிகளின் வழியே பாலா முன்வைத்து உரையாடுகிறார். எவருக்கான அறம் எனும் துணைக்கேள்வி யிலிருந்தே அறத்திற்கான விளக்கங்கள் விரியவும் சுருங்கவும் செய்கின்றன.

பாலாவின் கதைகளில் நெருடலாக எனக்குத் தென்பட்டது அவரது கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள்தாம். குழந்தைகளை அதட்டும் அம்மா, ஓவியம் வரைய தடை சொல்லாத அப்பா, அழுக்கு சாதி என சலவைத் தொழிலாளி மகளை வீட்டிற்குள் அனுமதிக்காத அம்மா  அந்த பேதம் பார்க்காத ஒரு அப்பா, ஒரு இடதுசாரி உறவினர் இறந்த்தை நினைத்து துக்கப்பட்டு சாப்பிடாமல் தூங்கும் ஒருவன், அதே வீட்டில் அவர் இறந்ததை நினைத்து டிவி பார்த்துகொண்டிருக்கும் ஒரு பெண், (விதிவிலக்காக சந்தன எண்ணெய் பார்கவி பாத்திரம்).

குழந்தைமையை அனுமதிக்கிற, புத்தகம் படிக்கிற அறிவுத்துறை சார்ந்த, சாதிய அடுக்கு முறையை உதறித்தள்ளும் எனும் பெருங்குணங்கள் கொண்டவனாக ஆண் பாத்திரங்களும் அதற்கெதிரான நிலையில் பெண் பாத்திரங்களும் உலவுவது பொதுப்புத்தியில் ஊறிபோனதை இன்னும் கொஞ்சம் அழுத்தம் தந்திருக்கிறது என்பதாகவே பார்க்க முடிகிறது. தனது சிறந்த எழுத்துகள் மூலம் தன் அனுபவத்தை வாசகனுக்கு கட்த்த முடிகிற பாலாவால், இடதுசாரி த்த்துவத்தோடு தொடர்ந்து பயணிக்கிற பாலாவல் இந்த இடத்தை வெகுவாக கடந்துவிட முடியும் என்றே நம்புகிறேன்.

நன்றி

–  விஷ்ணுபுரம் சரவணன்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular