கடைசியில் சொல்கிறேன்

0

கவிதைக்காரன் இளங்கோ

-1-

காத்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. பல வருட அலைச்சலில் இது பழகிவிட்டது. தலைக்குள் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சி ஒரு தொடர் ஓட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. வெவ்வேறு காத்திருப்புகளின் அர்த்தப் புதிர்கள் எல்லாம் காலுக்குக் கீழே இருந்து பாதாளம் நோக்கி இழுக்க எத்தனிக்கின்றன. என் முறைக்காகக் காத்திருக்கத் தான் வேண்டும். இன்று எடுத்துக்கொள்ள இருப்பது இரண்டாவது அமர்வு. இந்த டாக்டரை பரிந்துரை செய்த என்னுடைய வக்கீலை ஒரு முறை மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். பல வருடங்களாக என்னைப் பற்றி நன்கு அறிந்தவர். சும்மா யாரிடமோ என்னை அனுப்பி வைத்துவிட மாட்டார். முதல் அமர்வின் அறிமுகம் வழக்கமான ஒன்று தான். அடுத்தடுத்த அமர்வுகளைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இந்த இரண்டாவது அமர்வு தீர்மானித்துவிடும். லேசில் அடங்கவோ ஒத்துக்கொள்ளவோ முனையாத மனம் என்னுடையது.

****

(ஒரு கோடை விடுமுறை)

1985.

ரண்டாவது மாடி, தெருவிலிருந்து நாற்பதடி உயரத்தில் இருந்தாலும் அங்கிருந்து கீழே பார்க்கும்போது துல்லியமாகவே தெரிந்தது. மன நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்திலிருந்த சிவாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். அவனது கையும் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்து அப்பால் நகர்ந்துவிடவும் முடியவில்லை. மனிதக் கூச்சல் அங்குமிங்கும் காற்றில் அலை மோதியது. மற்ற மாடிகளில் அதுவரை நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் எல்லாம் அலறியபடி வீடுகளுக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள்.

ரத்தத் துளிகள் தெருவில் கோடிழுத்துக் கொண்டு அவனுக்கு வழி காட்டியது போலிருந்தது. நானும் சிவாவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் தெற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டோடு வெட்டப்பட்ட உள்ளங்கையை இடது கையால் எடுத்துக் கொண்டான். அது துடித்துத் துடித்து மிச்ச ரத்தத்தைத் துப்பிக் கொண்டிருந்தது.

“வாடா.. வந்திரு.. வந்திரு..”

சிவா பயந்து போய்விட்டான். என்னைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.

“இர்றா.. என்ன வுடு. வேன்னா நீ போ”

முதல் பார்வைக்கே அது வெறும் குடிகாரர்களுக்கு நடுவே நடந்த சண்டைக் காட்சியாக இருக்கவில்லை என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. போன வாரம் ஒரு குத்துச் சண்டையைப் பார்த்திருந்தோம். அதிலும் இவன்தான்.

இந்த மார்க்கெட் சந்து என்பது சிறு பையன்களான நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடும் பகுதி. வசவு சொற்களைத் திட்டுக்களாக வாங்கியபடி யாரிடமும் பிடிபடாமல் நழுவி நழுவி ஓடுவதே அவ்விளையாட்டின் த்ரில். கறி கடைகளும் மீன் கடைகளும் அமைந்த வியாபாரப் பகுதி தனிச் சதுரமாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அது முழுவதுமாக சீமை ஓட்டுக் கூரைகள் கொண்டு வேயப்பட்ட கட்டிடப் பகுதி. கூரைகளில் கவுச்சி வாடைக்காக பூனைகள் ராஜாக்களின் மிடுக்கோடு அலைந்து கொண்டிருக்கும். தெரு நாய்கள் அவற்றைப் பார்த்து விரோதத்தோடு உறுமிக் கொண்டிருக்கும். பூனைகள் அந்த உறுமல்களை அலட்சியப்படுத்தியபடி நிதானமாக, தம் முன் பாதங்களை நக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும். உயரமான இடம் கர்வத்தைத் தர மறுப்பதில்லை.

காய்கறி கடைகள் வீதியின் இருமருங்கிலும் வரிசைக் கட்டியிருக்கும். நடுவில் இருக்கும் சொற்ப பாதையில் பெண்கள் வயர் கூடைகளோடு ஒருவரை மற்றவர் உரசாமல் நகரவே முடியாது. ஒரே சத்தக் காடாக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும் வேளை காலையில் தொடங்கி மதியத்திற்கு முன்பாக அடங்கிவிடும். அத்தோடு, மாலை ஆறு மணிக்குத் தொடங்கி எட்டரைக்கு முடிந்துவிடும். இதெல்லாம் மற்றக் கிழமைகளில் தான்.

ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் மதியத்தோடு ஏறக்கட்டப்பட்டுவிடும்.

அனைத்து தொழில் சார்ந்த தினக் கூலிகளும் வண்டிக்காரர்களும் ஓய்வாக அனுபவிப்பது ஞாயிறு மதியங்களைத் தான். சாராயம் பிரதானமான ஒன்று. தகராறு இல்லாத ஞாயிறு மாலைகளே கிடையாது. சாதாரணமாக இருக்கும் வேளையில் திடீரென மனித அலறல் எல்லோரையும் சுற்றியுள்ள தத்தம் மொட்டை மாடி விளிம்புகளுக்கு இழுத்து வந்துவிடும். அம்மாதிரியான சண்டைக் காட்சிகள் சகஜம் எங்களுக்கு.

ஆனால், இது வேறு என்பது தெரிந்து போயிற்று. ஏதோ கோஷ்டி மோதல். போன வாரத்தின் ஒரு தொடர்ச்சி. வெட்டுப்பட்ட இந்த மனிதன் அந்த சண்டையில் சரமாரியான பாக்ஸிங் குத்துக்களை தன் எதிராளியின் முகத்தில் விட்டுக் கொண்டிருந்தான். மூக்குடைந்து ரத்தம் சொட்டிய அவன் அப்போது திரும்பி ஓடிவிட்டான்.

இப்போது இவனை வெட்டியவர்கள், மேற்கொண்டு அவனைத் துரத்திப் போகவில்லை. வெட்டிவிட்டு எதிர்திசையில் ஓடிவிட்டார்கள். அவர்களின் இலக்கு, அவனுடைய வலது கை முஷ்டி என்பது புரிந்தது. அவன், நேரே ஸ்டான்லி ஹாஸ்பிடல் இருக்கும் தெற்கு திசை நோக்கித் தான் ஓடுகிறான். பார்ப்பவர்களுக்கு மயக்கம் வரும் அச்சம்பவத்தின் ஆள் ஓடிக் கொண்டிருக்கிறான்.

“அவனுக்கு மயக்கம் வந்து ரயில்வே கேட் தாண்டறதுக்குள்ள விழுந்துடுவானாடா சிவா?”

“வாயேன் பின்னாடியே ஓடிப் போய் பார்த்துட்டு வந்திரலாம். ஆளப் பாரு. உன் மூஞ்சி”

பின்னாள், ஹாஸ்டலில் படிக்கும்போதெல்லாம் கூட, அவனையே நினைத்துப் பார்த்ததுண்டு. அவன் இப்போது என்ன செய்வான்? பிழைத்தானா செத்தானா? எவ்ளோ பெரிய ரவுடி. யாருக்கும் பயப்படாதவன். ஒல்லியான அந்த தேகத்துக்குள் தான் எத்தனை நெஞ்சுரம்! தைரியம்.

பிறகே அக்கனவு வரத் தொடங்கியது.

****

-2-

ஒழுக்கமும் தண்டனையும் :

“ஒரு காகிதத்தின் இரண்டு பக்கங்களைப் போல இதனை நிறுவிய உலகம் எங்கிருந்து தொடங்குகிறது என்று யோசிக்கிறேன். பள்ளிக்கூடங்களில் தொடங்கி அனைத்து சமூகச் செயல்கள் வரை இவை ஊடுருவி இருப்பது என்ன மாதிரியான உத்திரவாதத்தை தோற்றம் கொள்கிறது. கட்டுப்படுத்தலின் வரையறையை தொடர்ந்து புத்தாக்கம் செய்வதற்கான அவசியத்தை நாம் பத்திரப்படுத்த பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா. அடித்துத் திருத்தி மாற்றியமைக்கப்பட வேண்டிய சட்ட நுணுக்கங்கள் மீதான ஓர் இறுதித் தீர்மானம் என்பது இல்லவே இல்லையே. ஒரு நீதிமன்ற வழக்கும் அதன் முடிவு காலமும், வாதத் திறமையின் விளைவைப் பொறுத்து அமைவதாக எடுத்துக் கொண்டால், அதில் ஒரு தனிமனித வாழ்வின் சிதைவை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது?”

அவர், என்னையே உற்றுப் பார்த்தவண்ணம் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

“நீங்க சைக்யாட்ரிஸ்ட பார்த்தீங்களா இல்லையா? போன முறை சொல்லியிருந்தேனே?”

நான், பேனாவின் மூடியைத் திருகித் திறந்தேன். நிதானமாக மூடினேன். மீண்டும் திருகித் திறந்தேன். மீண்டும் மூடினேன்.

****

-3-

“எனக்கு ஃபவுண்டன் பேனாக்கள் தான் பிடித்திருக்கின்றன. எழுத நினைக்கும் நினைப்புக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை அது, அதன் வடிவமைப்பிலேயே உண்டு பண்ணுகிறது. ஒரு நூலகத்துக்குள் நுழைவதைப் போல அதனுள் யோசனைகளின் வழியே நுழைய என்னை மெல்ல அனுமதிக்கிறது. அதன் உடலும், கழுத்துப் பகுதியும் முள்முனையும், அதன் கீழ் முள்ளைத் தாங்கிப் பிடித்திருக்கும் தடித்த நாக்கும், அந்நாக்கில் வரிவரிகளாக இழுபட்டிருக்கும் சிறு பள்ளக் கோடுகளும் அதனூடே கட்டுப்பாட்டோடு வடிந்து வெளிப்படுகிற மையும், எழுத எழுத ஊற்றெடுக்கும் ஆன்மாவின் ரத்தம் அல்லவா டாக்டர்!?”

ஆம் என்பதாக, அவர் தன் தலையை மையமாக மேலும் கீழும் மென்மையாக அசைத்தார். மனோதத்துவ மருத்துவர் என்றாலே நீளமான தாடி வைத்துக் கொண்டு அதனை வருடியபடியே நோயாளியின் பேச்சுக்குத் தலையசைத்தபடியே இருக்க வேண்டும் என்கிற விதியை இவர் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார் எனக்குள்ளே. சுத்தமாக மழிக்கப்பட்ட தாடையும், கச்சிதமாக திருத்தம் செய்யப்பட்ட அடர்ந்த மீசையும் கண்ணாடி அணியாத முகமும் தீர்க்கம் அற்ற சாந்தமான பார்வையும் புதிய அனுபவத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கிறது. இந்த அறையின் இளநீல நிற வண்ணம், அவற்றுக்கு ஒத்துப் போகும் எதிர் நிறத்திலான மற்ற பொருட்கள் அனைத்திலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது.

“ஆனால், டாக்டர் சமீபமாக..”

தொடங்கிய வேகத்தில் நிறுத்தினேன்.

“உங்களை டாக்டர் என்று அழைக்கலாம் தானே..?”

“ம். அது சரியே.. மேலே சொல்லுங்கள் சத்யன்”

“சமீபமா.. எழுத எழுத காகிதத்தில் ரத்தம் ஒழுகுகிறது. பேனாவை சந்தேகத்தோடு உதறினால் வழக்கமான கறுப்பு மை தான் தெறிக்கிறது. எழுதத் தொடங்கினாலோ ரத்தம் ஒழுகுகிறது. வேறு படிவங்கள் நிரப்புவதற்கோ காசோலையில் கையெழுத்து இடும்போதோ அந்த ரத்தம் இல்லை. இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையை ரத்தத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் டாக்டர். அது ஏன்?”

“என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு இதற்கு வருவோம்”

சொல்லியபடியே அவர், ஏதோ குறித்துக் கொண்டார்.

“ஒரு நாவல். உளவியல் பாதிப்பு உள்ள ஒரு தொடர் கொலையாளிப் பற்றின நாவல்”

“ஓ! அவன் தான் சப்ஜக்டா?”

“ஆம்”

“ஏன்?”

****

-4-

“இத்தனை வருடமாக நீதிமன்றத்துக்குள் போவதும் வருவதுமாக இருக்கிற உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது ஸார். உண்மைத்தானே?”

“ஆம். ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், ஏன்? ஒரு சீரியல் கில்லர் எதற்காக உங்களின் சப்ஜெக்டாக இருக்க வேண்டும்?”

“நிறைய மனிதர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பது எனக்குப் பிடித்தமான ஒரு செயல். குறிப்பாக கும்பல்கள். ஒவ்வொரு கும்பல் கூடுமிடமும் வேறு என்பது, சூழலின் பின்னணியைப் பொறுத்தது தானே. கோணமும் பார்வையும் வெவ்வேறாக பரிணமிக்கும் சந்தர்ப்பம் எனக்கது. தொடர்ந்து ஓரிடத்துக்கு ஒற்றைக் காரணத்துக்காக நான் சென்றடையும்போது ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை எனக்கு அப்பயணம் தரத் தொடங்குகிறது. அதற்கான முக்கியஸ்தானாக என்னை நான் முன்னிறுத்திக் கொள்கிறேன். அது அவசியம் என்றும் நினைக்கிறேன். கும்பலில் ஒருவன், அக்கும்பலாக சட்டென மாறுவதற்கான சந்தர்ப்பம் எக்கணமும் நிகழலாம் என நம்புகிறேன். அதை நான் போர்ட்ரெயிட் பண்ணும்போது கேள்விகள் எழ எழ பதில்களைத் தேடி ஓர் ஓட்டம் உருவாகிறது. எனக்கு என் கண்டடைதல் முக்கியம். இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன்”

“புரிகிறது. வழக்குக்கு இது எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதை முன்பே சொல்லிவிட்டேன். நினைவிருக்கிறது அல்லவா?”

“நான் உங்களின் கிளையன்ட் மட்டுமல்ல. இத்தனை வருடப் பழக்கத்தில் நண்பனும் கூட. எனக்குள் குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருப்பவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பியே இதோ இன்று வந்திருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை சரியான தேர்வுதான் இல்லையா? ஓர் எழுத்தாளனுக்கு, அவனுக்குள் எழும் சிக்கல்களுக்கு உதவ வேண்டியது உங்களின் கடமை. அது நீங்கள் நம்புகிற சமூக நலன் மீதான அக்கறையின் ஒரு நீட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்”

அவர் கையை உயர்த்தி, மென்மையாகச் சிரித்தார். அவருக்குப் பின்னால் இருந்த சுவற்றின் இடதுபுற உயரத்தில் ஒரு டிஜிட்டல் கடிகாரம், நொடியின் சிகப்பு நிற எண்களை மாற்றிக்கொண்டே இருந்தது.

“யூ ஆர் ஆல்வேஸ் அன்பிலீவபல்”

சிரிப்பு மெதுவாக மில்லிமீட்டர் அளவுக்கு தேய்ந்த பின்பு நிதானமாகத் தொடர்ந்தார்.

“கேட்ட கேள்வி இன்னும் அங்கேயே அம்போவென்று நிற்கிறது. ஏன் என்று சொல்லு மேன். ஒரு சீரியல் கில்லர் ஏன் சப்ஜெக்டாக மாற வேண்டும்?”

****

-5-

“நீங்கள் குறிப்பிட்டு எதையும் அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டாம் டாக்டர். நாம் தொடர்ந்து உரையாடுவோம். என்னுடைய ஆல்டர்-ஈகோ தான் காரணமாக இருக்க வேண்டும். அதுவேதான் என ஊர்ஜிதப்படுத்தி நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் போதுமானது. கொஞ்சம் தெளிந்துவிடுவேன் என்று நம்புகிறேன். கேன் யூ ஹெல்ப் மீ?”

“That is very purposeful. ஒரு செஷனை நாம் அப்படி முன்னெடுத்துப் போக முடியாதே சத்யன்?”

“உங்கள் ப்ரொஃபஷனையும் தாண்டி நான் கேட்கும் ஒரு நட்பான வேண்டுகோள் என்று இதைப் பரிசீலிக்க முடியாதா டாக்டர்?”

அவர், தன்னுடைய குறிப்பெழுதும் பென்சிலின் பின்பக்கத்தைக் கொண்டு குறிப்பேட்டின் மீது சின்னச் சின்னதாகக் குத்தியபடி சில நொடிகள் யோசித்தார்.

“ம்ம்.. சரி.. ஐ அக்ரீ. நீங்க சொல்லுகிற ஆல்டர்-ஈகோ என்கிற கோணத்திலிருந்து பார்த்தோமே என்றால், டுவாலிட்டியை கையில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதனைக் கதையாக எழுதுவதற்கு ஏற்ற ஒன்றுதான். ஆனால், அனலைஸிஸில் கிளினிகல் பக்கம் என நகர்ந்து வரும் போது அது ஓர் ஆபத்தான ஆராய்ச்சி. எங்களுடைய வாசிப்பும் அணுகும் முறையும் உங்களுதும் கொஞ்சம் ஒத்து வராது என்றுதான் நினைக்கிறேன். சொல்லுங்கள். இதுசார்ந்து எதையாவது வாசித்தீர்களா? வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நான் தெரிந்து கொள்ள வேண்டும்”

சற்று நேரம் தேவைப்பட்டது. மனம் சட்டென வாசித்த விஷயங்களின் உள்ளே நழுவி வீழ்ந்து கொண்டிருந்தது. பேனாவின் கழுத்தைத் திருகி மீண்டும் மூடியைக் கழற்றினேன். எதிர்த் திருகலாக மூடத் தொடங்கினேன். திறந்தேன். மூடினேன்.

****

-6-

“அதை மூடி, பாக்கெட்டில் வையுங்கள். என்னுடைய கவனத்தைக் குழப்புகிறது அது. ரொம்ப ஆழமாக யோசித்து ஒரு பதில் சொல்ல வேண்டாம். அஃப்கோர்ஸ் நான் சைக்யாட்ரீஸ்ட் இல்லை. உங்களின் வக்கீல். எனக்கு சிம்பிளாக சொன்னாலே போதுமானது. என்னுடைய தேவை உங்களின் தேர்வில் உள்ள காரணத்தின் Criminalised aspects மட்டும்தான். Non detail is fair enough”

****

-7-

நான் தொடங்கும்வரை காத்திருந்தார் அவர். சலனமில்லாத காத்திருப்பு.

“சிக்மென்ட் ஃபிராய்ட்ன் Civilization and its Discontents, மிகையில் ஃபூக்கோவின் Discipline and Punish, the birth of the Prison”

சொல்லிவிட்டு காத்திருந்தேன். அவர் குறித்துக் கொண்டார். புன்னகை  தவழத் திருப்பிக் கேட்டார்.

“நான் கூட, Ted Bundy, Jeffrey Dahmer,  Chikatilo இந்த மாதிரி சொல்லப் போகின்றீர்களோ என்று நினைத்தேன்”

“நோ. நோ. பின்னணியில் நுணுக்கமான செயல் விளைவுகளை உண்டு பண்ணுகிற அறிவியலும் தத்துவமும் அவசியம்னு தேர்ந்தெடுத்துக்கிட்டேன். சைக்கோ கொலைக்குற்றவாளிகள் பற்றின தகவல்கள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கேஸ் ஹிஸ்டரி தானே? That’s useless”

“அப்படி சொல்லிவிடக் கூடாது. அவர்களை ஆய்ந்ததில், உளவியலின் பங்கு கணிசமான ஒன்று. மனோதத்துவ இயலோ, சமூகவியல் தத்துவமோ அப்படியான குற்றங்களை, குற்றவாளிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றை மறுத்து இன்னொன்று என்று விவாதித்துவிட முடியாது. நாம் அனைவரும் அறிவியலால் பகுக்கப்பட்டிருக்கிறோம். பூமியின் கடைசி மனிதன் தீர்ந்துபோகும் வரை அனைத்து துறை சார்ந்த ஆராய்ச்சிகளும் இருக்கவே செய்யும். அது அவசியமும் கூட”

“ஹ்ம்ம்.. Deprivation of liberty பற்றி ஃபூக்கோ ஓரிடத்தில் பேசுகிறார். ஃப்ராய்ட் நாகரீகமும் அதன் அதிருப்தியையும் பற்றி பேசுகிறார். ஃபூக்கோவின் ஆய்வு சமூகத் தண்டனைகளின் வரிசையைச் சுட்டிக் காட்டுகிற போக்கில் ஓர் முக்கியமான அம்சம். அதன் தொடர்ச்சியாக, சுதந்திரத்தை இழப்பது அல்லது இழக்க வைக்கப்படுவது குறித்து நான் யோசிக்கிறேன். The deprivation of liberty. இது ஏதோ ஐரோப்பிய இறக்குமதி கருத்து சமாச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது என்று நினைக்கிறேன். நிறைய நடத்தைகளை நாம நமக்கு ஒத்து வந்தாலும் வரலை என்றாலும், அவற்றைத் தரவிறக்கம் செய்து பார்த்து, கொஞ்சம் அப்படி இப்படி என்று கலைத்துப் போட்டு பயன்படுத்தத் துணிந்துவிட்ட ஒரு சமூகத்துக்குள்ளே தான் வளைய வருகிறோம். ஸோ, தனிமனிதனோட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் உளவியல்கள், சும்மா கடந்து போய்விடுகிற செய்திகளுக்குள்ளே மறைந்து கிடக்கிறது. அதை எடுத்துப் பேச இங்கே யாருக்கும் நேரம் இல்லை. அல்லது, அதைப் பேச விருப்பமில்லை”

“இன்ட்ரஸ்டிங்..! ஸோ உங்களின் நாவலுக்கான சப்ஜக்டை நீங்கள் அப்படித் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?”

“ஆல்டர்-ஈகோவும் வேலை செய்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கு டாக்டர்”

“I need some time மிஸ்டர் சத்யன். மூன்று நாட்கள் கழித்து வாருங்களேன்”

“Am I alright டாக்டர்?”

“சொல்கிறேனே. அடுத்த அமர்வில் சொல்லுகிறேன். உங்கள் மகள் நெல்மலருடன் நீங்கள் தொடர்ந்து உரையாடுகிறீர்கள் தானே?”

“யெஸ்”

“அது நல்லது. அவள் இப்போது இந்த விடுமுறை நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கிறாளாம்?”

“கதை எழுதுகிறாள் டாக்டர்”

“அவளுமா!?”

சிரித்துக்கொண்டே அதையும் குறித்துக் கொண்டார்.

****

-8-

“க்ரிமினல் ஜூடிசியல் கோட் சம்பந்தமாக புத்தகம் வேண்டும் என்று போன முறையே கேட்டிருந்தீர்களே? எடுத்து வைத்திருக்கிறேன்”

“Oh! that’s lovely”

புத்தகம் கனமாக இருந்தது. எல்லாமே உச்ச நீதிமன்ற வழக்குகளும் விவாதங்களுமாக இருந்தன.

“இவ்வளவு வாசிக்க வேண்டுமா சத்யன்? சில சமயங்களில் உங்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாகவும் இருக்கு எனக்கு. You are a good man”

“நன்றி. சமூக அந்தஸ்து ரொம்ப முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆதர்ச ரோல் மாடல்கள் பருவத்திற்கேற்ப மாற்றம் ஆகிக்கொண்டே வருகிற விசித்திரத்தை நினைத்தால் ஆச்சரியமாகவும் இருக்கும். தொடக்கத்திலே நீங்களே என்னைப் பல வருடங்களாக நம்பவில்லை இல்லையா? இந்த மாதிரியான Professionalism ன் பிரச்சனையாக அதைப் புரிந்து கொண்டேன். சமூக அந்தஸ்து பற்றிய அக்கறையில் தனிமனிதன் கொஞ்சமாக ஒடுங்குகிறான் பாருங்கள், அதைத்தான் எழுதித் தீர்க்கணும் என்று மனதுக்குள் எரிந்து கொண்டே இருக்கு. அந்தத் துடிப்பை, நீதிமன்றத்துக்கான நுழைவாயில் சீட்டுப் பெற நிற்க நேரும் நீண்ட மனித வரிசை தருகிறது”

“அதை ஒரு சம்பிரதாயம் என்று எடுத்துக்கலாமே?”

“அதுவே, ஒரு தண்டனை என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? எல்லாவற்றையும் ஸ்மார்ட் கார்ட் என்று ரேஷன் கடை வரைக்கும் கொண்டுவர முடிந்த ஒன்று, இங்கே மட்டும் படிவத்தை நிரப்பிக்கிட்டு நில்லுடான்னு ஒரு பொது மனிதனைப் பார்த்து ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்? எழுதப் படிக்கத் தெரியாதவன் அங்கே அம்போவென நிற்கிறானே. வழக்கு வாதாடப்பட்டு, தீர்ப்பு எழுதி முடிப்பதற்கெல்லாம் முன்னாடியே தண்டனைகள் தொடங்குகிற இடம் ஒரு வக்கிரமா இருக்கு. இது என்ன மாதிரியான டிசிப்ளின்? நாகரீகத்தை Claim பண்ணிக் கொள்கிறோம் அல்லவா?”

“ஆமா. have to”

“அப்போ, அதன் அதிருப்தி இப்படிப் பட்டவர்த்தனமாக கண் முன்னாடியே இருக்கிறதே. வழக்கறிஞர்களுக்கான பிரத்யேக பாதையிலே நீங்களெல்லாம் சுலபமாக நுழைந்து விடுகிறீர்கள். உங்களுக்குப் பிழைப்பு கொடுக்கறவன் எல்லாம் மொட்டை வெயிலில் நிற்பதற்கு முந்தின நாளே தயாராக வேண்டும் என்பதெல்லாம் பெரிய போங்காக இருக்கிறதே ஸார்? ஏன் ஒருத்தர் கூட இதற்கான ஒரு பொதுநல வழக்குப் போட முன்வரவில்லை?”

“இந்தாங்க. தண்ணீர் குடிங்க”

“அடப் போங்க ஸார்.. ரூட்டை மாத்தறீங்க”

மீண்டும் பேனாவை எடுத்துத் திருகத் தொடங்கினேன். இம்முறை அவர் அதை ஆட்சேபிக்கவில்லை.

****

-9-

“நீங்கள் சொன்ன புத்தகங்களை நானும் ஒரு ஓட்டம் விட்டுப் பார்த்தேன். ரொம்ப நாள் ஆயிற்று. தீசிஸ் பண்ணும்போது வாசித்தது. நம் முந்தின அமர்வின் உரையாடலுக்குப் பிறகு உங்களை ஒரு தனிமனிதனாக, ஒரு பேஷண்ட்டாக மட்டுமே பார்க்க முடியவில்லையே. ஓர் எழுத்தாளரும் கூட”

அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

“நேற்றும் கனவு வந்தது டாக்டர்”

“அதே கனவு?”

“ஆம். நேற்றோடு 29  வது தடவை”

“அவ்வளவு துல்லியமான கணக்கா அது? 28 ம் இல்லை 30 ம் இல்லை. மிகச் சரியாக 29 ஆ?”

“ஆம். குறித்து வைத்திருக்கிறேன். இந்த வருஷம் தொடங்கி ஐந்து மாதங்கள் முடியப் போகின்றது. இந்த ஐந்து மாதத்தில் நேற்று இரவு அந்தக் கனவு 29 வது முறை”

அவர் என்னை உற்றுப் பார்த்தபடி, தன்னுடைய சுழல் நாற்காலியை அரைவட்ட சுழற்சியோடு அசைத்துக் கொண்டிருந்தார். இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. முழுமையாக ஆறு நிமிடங்கள் கரைந்த பிறகு அரைவட்டம் நின்றது.

“இம்முறையும் கனவு மிகச்சரியாக அதே இடத்தில் நின்று விடுகிறதா?”

“ஆம்”

****

கனவு

ணிக்கட்டோடு வெட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் என்னுடைய வலதுகையின் விரல்கள் ஃபவுண்டன் பேனாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதை, ரத்தம் சொட்டச் சொட்ட இடது கையில் பொத்திக் கொண்டு வெண்ணிற காகிதத்தின் மீது ஓடிக் கொண்டிருக்கிறேன். சொட்டும் ரத்தம் வழிக்காட்டுகிறது. ஒவ்வொரு சொட்டும் எழுத்துருக்களாக மாறுகின்றன. அதைத் தொடர்கிறேன். மூச்சிரைக்கிறது. எழுதிக் கொண்டிருக்கும் கதையின் கதாபாத்திரங்கள் அங்கங்கே காகிதத்திலிருந்து புடைத்து எழும்பி என்னைத் துரத்துகிறார்கள். சட்சட்டென முளைத்துத் திரும்பும் சந்துகளில் நுழைந்து நுழைந்து ஓடி கவுச்சி மார்க்கெட்டில் வந்து நிற்கிறேன். கூரையிலிருந்து கை நீட்டும் பூனையொன்று என்னைத் தூக்கி விடுகிறது. மேலேறும்போது அதுவரை பத்திரமாகப் பற்றியிருந்த வலது மணிக்கட்டு நழுவி தெருவில் விழுகிறது. நாயொன்று அந்த வலது கையைக் கவ்விக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. ரத்தத்துளிகளின் அடையாளத்தைத் தொடர்ந்து ஓடிவந்த கதாபாத்திரங்கள் நாயைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றன. ‘பரவாயில்லை விடு’ என்கிறது பூனை. வெட்டுப்பட்ட என்னுடைய வலது மணிக்கட்டின் மொண்ணைப் பகுதியிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் தொடர் ரத்தத்தை தன் நாவால் நக்கி நிதானமாக சுத்தப்படுத்தத் தொடங்குகிறது அப்பூனை.

****

-10-

“அந்தச் சீமை ஓடு வேய்ந்த உயரமான கூரையிலிருந்து, ஓடி வந்த பாதையைப் பார்த்தால் ஓர் அதிகார மிடுக்கு மண்டைக்குள் முட்டுகிறது டாக்டர்”

“வேறு எதையாவது நினைவுபடுத்துகிறதா அந்தக் கனவு? அதாவது அதைத் தொடர்புபடுத்தி வேறு ஒன்று என ஒரு சங்கிலித் தொடர் போல. கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்”

“எப்படிக் குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று இன்னும் சற்றுப் புரிய வையுங்களேன் டாக்டர்”

“உதாரணத்துக்கு. ஒரு மிஷ்கின் திரைப்படத்தில். வெட்டுப்பட்ட கைகள் ஆங்காங்கே நகரின் வெவ்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது மாதிரி. Any related images?”

“இல்லை. இல்லை. அவை முழுமையான முழங்கை அளவில் உள்ள கரங்கள் அல்லவா! நீங்கள் கேட்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு, முன்பு முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளும் ஒரு விருப்பம் ஏற்பட்டபோது, மனித Anatomy ல், கைகளும் விரல்களும் தொந்தரவுகளாக இருந்தன”

“பிறகு என்ன செய்தீர்கள்?”

“பயிற்சியை விட்டு விட்டேன். அதே போல, பிற்பாடு, டாவின்ஸியின் குறிப்புகளை ஒரு கட்டுரைக்காக ஒற்றுப் பார்க்கும்போது, அதிலும் கைவிரல்களின் மாதிரிகள் தொந்தரவு செய்தன. டாவின்ஸியின் விட்டோரிய மனித ஸ்கெட்ச் அத்தனைக் கறாரான கச்சிதத்தை விளக்க முற்படும்போது, மணிக்கட்டோடு வெட்டுப்பட்டு ஓடிய அந்த மனிதனின் தண்டனையை நினைத்துக் கொண்டேன். வியர்த்துவிட்டது. அன்றைய இரவில், இக்கனவு தீவிரமாக இருந்தது”

“நீங்கள் அந்த நாவலைத் தொடங்கிவிட்டீர்களா?”

“இன்னும் இல்லை டாக்டர்”

“சீக்கிரம் தொடங்கி முடித்து விடுங்கள் சத்யன். வேறு ஏதாவது புத்தகம் குறித்து சொல்ல மறந்து விட்டீர்களா?”

“ஆம். மார்க்ஸ் எங்கல்ஸ் திரட்டுகளில் முதல் தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன்”

“ஏன்?”

“சமூக உற்பத்தி உறவு, வர்க்க வித்தியாசம், மூலதனம், உழைப்பு-கூலி இதையெல்லாம் என்னவென்றே தெரிந்துகொள்ளாமல், ஆனால் நாம் எல்லோரும் அதுவாக அல்லது அதன் ஓர் அங்கத்தினராக ஏன் இருக்கிறோம் அல்லது எவ்வாறு இருக்கிறோம்? என்பதற்காக ஒரு மறுவாசிப்பு தேவை என நினைத்தேன் டாக்டர்”

“இது எப்படி உங்கள் சப்ஜக்டுக்கு பயன்படப் போகிறது? புரியவில்லையே!”

“உங்களுக்கு ஸ்டாலினைத் தெரியுமல்லவா?”

“எந்த ஸ்டாலின்?”

“ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின்”

“ஆம் தெரியும்”

“இன்னொருத்தர் அடால்ஃப் ஹிட்லர்”

“ஆம்”

“இரண்டாம் உலகப்போரில் ஒருத்தர் வீழ்ந்தார். மற்றவர் வீழ்த்தினார். இது வரலாறு”

“ஆம். என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இருவரின் சர்வாதிகாரத்தின் அளவை நாம் எப்படி அறுதியிட்டு வைத்திருக்கிறோம்? ஒன்று உலகத்துக்காக, இன்னொன்று தன் தேசத்துக்காக. பிம்பங்களும், சமூக அந்தஸ்து கோருகிற நடைமுறைகளும் ஒன்றையொன்று முரண்பட்ட தன்மையோடே நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என சந்தேகிக்கிறேன். லெனின் இல்லாமல் ஸ்டாலின் இல்லை. இதுவும் வரலாறு தான் இல்லையா?”

“ஆம்”

“ஆம் என்றால், இங்கு ஸ்டாலின் என்ற பெயர்கள் லெனின் என ஏன் சூட்டப்படவில்லை? அல்லது லெனின் என்ற பெயரெல்லாம் ஏன் மார்க்ஸ் என்று சூட்டப்படவில்லை? Order of Role model என்பது அசாதாரணமானது என்று நினைக்கிறேன்”

“ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?”

“நமக்கே நாம் நம் பெயரை சூட்டிக் கொள்வதில்லை. சூட்டப்படுகிறோம். அங்கே இன்னொரு மூளை வேலை செய்திருக்கிறது என்கிறேன்”

“ஓஹ்!”

“எழுத்தாளனுக்கு குறைந்தபட்சம் ஒரு வசதி இருக்கிறது”

“என்னது அது?”

“சூட்டப்பட்ட தன் பெயரை மாற்றிக்கொள்ளவோ புனைப்பெயர் வைத்துக் கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது”

“ஆல்டர்-ஈகோ?”

“அதே. A Duel என்று மாப்பஸான் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். அது, ஜெர்மன், ஃபிரான்ஸை வெற்றிக் கொண்டுவிட்ட ஒரு போருக்குப் பிந்தைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும். என்னை நிறைய யோசிக்க வைத்த ஒரு சிறுகதை. ஆனால், இங்கே ஆல்டர்-ஈகோ என்கிற எனக்கான Duality தான் மர்மங்கள் இல்லாத நிழலுக்குள் நின்று கொள்ள என்னை அனுமதிக்கின்றன”

“ஓ! அதன் அனுகூலம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”

“அந்த நிழலுக்குள் நின்றபடி ஒழுக்கங்களையும் தண்டனைகளையும் அவதானிக்க முடிகிறது”

“முழுமையாகவா?”

“இல்லை. ஓரளவுக்காவது”

“அதாவது, எழுதிப் பார்க்கும் அளவுக்காவது”

“Exactly..”

“சீக்கிரம் எழுதத் தொடங்கி விடுங்களேன் சத்யன்”

“நிச்சயமாக”

“ஒரு கண்டிஷன்”

“சொல்லுங்கள் டாக்டர்”

“எழுத, எழுத அவற்றை என்னிடம் வந்து காட்ட வேண்டும்”

“ஏன்?”

ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்.

“தொடர்பிலிருப்பதற்கு தான். அதற்கு கட்டணங்கள் தேவை இல்லை”

சிரித்துவிட்டேன். அவரும் சிரித்தார். கை குலுக்கினேன். எழுந்து கொண்டேன்.

“என் கனவை நான் என்ன செய்ய?”

“அது உங்களை ஒன்னும் செய்யப் போவதில்லை. Some childhood blast. ஆனால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு”

“என்ன அது?”

“நம்முடைய இந்த நான்கு அமர்வுக்கு உரிய கட்டணம். அதைத் தரவேண்டும்”

“ஓஹ்! ஐம் ஸாரி. அமர்வு முடிந்த வேகத்தில் மறந்து விட்டேன் டாக்டர். எவ்வளவு?”

“உங்களின் அந்த ஃபவுண்டன் பேனா”

“என்ன!?”

“அதுதான் கட்டணம். மேற்கொண்டு வளரக்கூடாத கனவுக்கான முற்றுப்புள்ளியும் கூட”

“ஓ! நல்லது. நான் வேறு வாங்கிக் கொள்கிறேன்”

என்றபடி, சட்டைப் பையிலிருந்து பேனாவை உருவினேன்.

“நோ.! ப்ளீஸ். வேறு ஒன்றும் கூடாது வாங்கக்கூடாது நீங்கள். ஃபவுண்டன் பேனாவை இனி பயன்படுத்த வேண்டாம். இதுவே என்னுடைய கவுன்சிலிங் பரிந்துரை”

நின்றபடியே சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த பேனாவைப் பார்த்தேன். சில்வர் நிறத்தில் இருக்கும் இந்தப் பேனாவுக்கு Gama என்பது பெயர். எத்தனையெத்தனை பக்கங்களை எனக்காக என்னோடு சேர்ந்து எழுதித் தள்ளியிருக்கிறது. ஏற்கனவே இருந்த ஒன்றை ஒரு வாக்குவாதத்தின் போது சுவரில் குத்தி அதன் முகத்தை உடைத்து விட்டிருக்கிறேன். அது கொலை.

இது இரண்டாவது. இப்போது தற்கொலை.

“ரொம்ப யோசிக்க வேண்டாம் சத்யன். இந்த நாவலுக்கு மட்டுமாவது முயற்சி செய்யுங்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். It’s going to be an observation. அதுவரை இந்தப் பேனா என்னிடம் இருக்கட்டும். அதுதான் சொன்னேன். தொடர்பிலிருங்கள்”

“ஓ! பிறகு நான் எதைக் கொண்டு எழுத?”

“பென்சில் போதுமே”

“ஆஹ்.. நல்ல ஐடியா டாக்டர்”

Gama வை அவரிடம் கொடுத்தபோது துக்கமாக இருந்தது.

“அடுத்த முறை உங்கள் வக்கீலிடம் என்னை சைக்யாட்ரீஸ்ட் என்று குறிப்பிடாதீர்கள்”

“பின்னே?”

“மருந்துகளைப் பரிந்துரைக்க விரும்பாத சைக்காலிஜிஸ்ட் நான்”

நான் சிரித்துக் கொண்டேன்.

“கடைசி வரை ஒன்றை நீங்கள் சொல்லவே இல்லை மிஸ்டர் சத்யன்”

“எதை?”

“எழுதவிருக்கும் உங்கள் நாவலின் பெயரை”

வாய்விட்டு சிரித்துவிட்டேன் பலமாக.

“இது ஒன்றும் கடைசி இல்லையே டாக்டர். நிஜமாகவே கடைசியில் சொல்கிறேன்”

சிரிப்பு மாறா முகத்தோடு கதவைத் தள்ளி வெளியே வந்தேன். தெருவில் நின்று அந்தப் பெயர் பலகையைத் திரும்பி அண்ணாந்து பார்த்தேன்.

டாக்டர்.இளங்கோ சைக்காலஜிக்கல் கன்சல்டன்ஸி என்று மட்டும்தான் போட்டிருந்தது.

****

-11-

“அப்பா..! எப்படி இருக்கு நான் வரைஞ்ச டிராயிங்ஸ்லாம்? எல்லாமே பிளாக் அன்ட் வொயிட் பார்த்தீங்களா?”

“சூப்பரா இருக்கு நெல்லு”

“நிஜமாவாப்பா?”

“ஆமாம்மா”

“எனக்கே ரொம்ப ஆச்சரியம்பா. எப்படி இப்படி வரையறேன்ல!?”

“எனக்குத்தான் ஆச்சரியம் நெல்லு. நான் உன் வயசுல, எதையுமே பார்த்துத் தான் வரைவேன். பார்க்காம வரையத் தெரியாது. நீ இப்பவே பார்க்காம வரையற. அது ரொம்ப அற்புதமான விஷயம். இன்னும் இன்னும் போகப்போக வேற லெவல் ஆகிடுவன்னு நினைக்கிறேன்”

“அதான்ப்பா.. நீங்க செய்யிறது எல்லாம் நானும் செய்யறேன். எனக்கும் ஒரே ஆச்சரியம்பா. எப்படிப்பா அது?”

“அது ஒரு மேஜிக்மா”

சிரித்துக் கொண்டே சந்தோஷத்திலும் பாராட்டிலும் என்னை இறுகக் கட்டிக் கொண்டாள். கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள். அவளுடைய டிராயிங் நோட் புத்தகத்தை, ஒவ்வொரு பக்கமாக நிதானமாகத் திருப்பி ரசித்துக் கொண்டே, ஒவ்வொறு ஓவியங்களைப் பற்றின அபிப்பிராயங்களையும் அவளிடம் சொல்லியபடி இருந்தேன். பரவசத்தோடு என்னருகே நின்றுக் கொண்டிருந்தாள்.

சமீபமாக, மனிதக் கைகளின் வெவ்வேறு கோணங்களை வரைந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கைகள், பிறரின் கைகள். ஒரு பொருளைப் பற்றியிருக்கும் கைவிரல்கள் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாக தோற்றம் கொள்ளும். அதனை வரைய வரையத் தான் பக்குவப்படும். அதனை நான் ஏற்கனவே அவளிடம் சொல்லியிருந்தேன்.

“ஏழு பாதைகள் கதை எழுதிக்கிட்டு இருக்கிறல்ல நெல்லு?”

“ஆமாப்பா”

“எனக்கு எப்பக் காட்டுவ? இப்ப என்ன பாதை எழுதிக்கிட்டு இருக்க?”

“அது சர்ப்ரைஸ். கடசியிலத்தான் சொல்லுவேன்”

டிராயிங் நோட்டின் ஒரு பக்கத்தைத் திருப்பினேன். அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டேன். ஒரு ரிக்-ஷாவின் ஹாண்டில் பேரை பிடித்திருக்கும் இரண்டு கைகள் வரையப்பட்டிருந்தன. அதிலுள்ள வலது கை, மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்டு மொன்னையாக இருந்தது.

குப்பென்று வியர்த்தது எனக்கு.

“இதை எப்படிம்மா வரைஞ்ச? ஏன் வரைஞ்ச?”

“இங்க ஒரு ரிக்-ஷா ஓட்டுற தாத்தாவுக்கு அந்தக் கை அப்படித்தான்பா இருந்துச்சி. அதுல ஒரு துணி சுத்தி வச்சிருக்காரு. இங்க மார்கெட்ல சின்ன வயசுல அவரு கையை யாரோ வெட்டிட்டாங்களாம்பா. மாமா சொன்னாங்க. பாவம்லப்பா?”

நான் அமைதியாக, அந்த ஓவியத்தையே பார்த்திருந்தேன். பென்சிலால் வரையப்பட்ட ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட வாழ்வின் ஒரு பகுதி.

“நீ எங்க வச்சி அவரைப் பார்த்த நெல்லு?”

“மார்க்கெட்லப்பா.. காய்கறி ஏத்திக்கிட்டு வருவாரு ரிக்-ஷால. பாவம்லபா?”

“ஆமாம்மா. ரொம்பப் பாவம்”

நோட்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். வேறு ஒரு நோட்டை கொண்டு வந்தாள். கதை நோட்டு. அவள் எழுதிக் கொண்டிருக்கும் ஏழு பாதைகள் கதை அடங்கிய நோட்டு.

“ஃபர்ஸ்ட் சாப்டர் மட்டும் தான் பார்க்கணும். முழுசா முடிஞ்சப்புறம் தான் மற்ற எல்லாமும் படிக்கணும். அதுவரை சர்ப்ரைஸ். இப்ப ஓபன் பண்ணி பார்க்கக் கூடாது ஓகேவா?”

“ஓகே”

“ப்ராமிஸ்?”

“சரிம்மா ப்ராமிஸ்”

வாங்கிக் கொண்டே கேட்டேன்.

“சொல்லு ஃபர்ஸ்ட் சாப்டர் பேரு என்ன? அது என்ன பாதை?”

கையைக் குறுக்காக பெருக்கல் குறி போட்டுக் கட்டிக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள்.

“டிராயிங் பாதை”

****

       சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here