கடுக்ராண்டி மொவன்

0

கதை : ரமேஷ் ரக்சன் – 5

ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

“அங்க பாத்தியா மாக்கான் மொவன.  வேலியோரமா சுத்திட்டு கெடப்பான்… வயக்காட்ல நிக்கான் பாரு”

“ஏய் கடுக்ராண்டி மொவன ஓணான் புடிக்க போலயா…வயலுக்குள்ள கெடக்க?”

“ஆமாணே…”

“வெளாடிட்டு திரிஞ்சப்பய அப்பன் போனதும் வயலுக்குள்ள எறங்கிட்டான்…. பொழச்சிகிட்டா சரி தான்”

“ஆத்தாக்காரியும் அவ்ளோ கூறா இருந்தமாரி தெர்லயே”

“யயே! அவ ஒரு வெள்ளந்திமட்டப்பா”

“அதும் சரி தான்”

நஞ்சை நடவேண்டும் என்பதற்காக வரப்பு வெட்டிக் கொண்டிருந்தவன், வரப்பையும் தாண்டி  ‘நங்’கென பெருவிரலைப் பெயர்த்து வைத்திருந்தான் சுடலை. சைக்கிள் க்ரீச் சத்தத்தையும் தாண்டி மேக்காற்றில் அவர்களின் சொல் காது கடந்து கிழக்கே சென்றது.

காலில் வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை, வரப்பினோரம் காய்ந்து கிடக்கும் தொளி்யை அள்ளி அப்பி இரத்தத்தை நிறுத்திப் பார்த்தான் நிற்கவில்லை.

கொஞ்சம் பிந்தைய நடவு தான்:

வயக்காடு என்றாலே இடுப்பிலொரு துண்டோடு அப்பாவைக் காணும் சுடலைக்கு, இன்று – அதே டவல் கொடியில் கிடப்பது சொற்களுக்குள் அடக்கிவிடும் துயரமாய் இல்லை. எச்சில் தொட்டு வைத்து விடும் அந்த விரல்களும் இல்லை. இரு தென்னை மரத்திற்கிடையே காற்றாடும் அந்த டவலின் ஒரு பகுதியை கிழித்து கட்டிவிட்டு வரப்பினோரம் அமர்ந்திருந்தான்.

தோட்டத்தின் வரப்பில் புல் மேயவிட்டிருந்த கிழவி, “அங்கன வரப்பு வெட்டிட்டு இருந்தவன காணுமே” என்று சுற்று முற்றும் பார்க்க மோட்டார் அறையின் அருகில் இருந்திருந்தான் சுடலை. காலைப் பிடித்துக் கொண்டிருந்த பாட்டிக்கு பனைமூட்டு நிழலில் இருப்பு கொள்ளவில்லை. எருக்க மூட்டில் மாட்டின் கயிற்றினை கட்டிவிட்டு அவனை நோக்கி பதறியபடி வந்தாள்.

“என்னாச்சியா? கால்ல வெட்டிட்டேன்”

ஒன் ஆத்தாகாரி தேறிட்டாளா? அப்டியே தான் கெடக்காளா?

“நேத்து ராத்திரி சோறு பொங்குச்சி… நாத்து வளருதுனு அம்ம தான் கஞ்சி ஊத்தி குடுத்துவுட்டுச்சி…”

பாட்டி கேட்பதெல்லாம் சுடலையின் அப்பா பார்த்து வந்த வேலை, அவனின் அம்மாவுக்கும் தெரியும் என்பதால் தான். மாடு இழுத்துக் கொண்டு ஓடும் பொழுதெல்லாம் கயிறு பிடித்துக் கொடுக்கும் சுடலையாகவும், வேலியோரத்தில் கண்ணி கட்டி ஓணான் தலைக்கு காத்திருக்கும் சுடலையாகவும், ஓடையில் நீந்திக்கிடக்கும் சுடலையாகவும், கள்ளிப் பழம் திண்ணும் சுடலையாகவும், தெரிந்தும் பார்த்தும் வந்த பாட்டிக்கு மனது கொள்ளவில்லை.

மூச்சு பிடிக்க வரப்பு வெட்டுவது, உரமிடுவது, காவல் கிடப்பது, மடை மாற்றுவது என சகலமும் அப்பா கூட இருக்கும்போதே பார்த்தும் என்றாவது ஒருநாள் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதையும் பார்த்திருந்த பாட்டிக்கு,

“பள்ளேடம் உட்டதும் மேக்கமாக்கதான வாரானுவ”

இந்த சொல்லில் இனி சுடலை இருக்கப்போவதில்லை என்று தெரியும். “இந்த வயசுல இப்டி வரப்பு வெட்டிட்டு கெடக்கானே” இந்த முணுமுணுப்போடு தான் மாட்டை எருக்கலையில் கட்டிவிட்டு வந்தாள்.

சுடலையின் அப்பா போலவே சுடலையும், நஞ்சை நடும் காலங்களில் எலிக்கு கிட்டி வைக்கும் வேலை செய்தால் பணமும் நிறைய சம்பாதிக்கலாம், இந்த வயசுக்கேற்றார் போல ஊர் சுற்றவும் செய்யலாம். அப்பா இறந்த கவலையை மறப்பதற்கு அது ஒருபாலமாக இருக்குமென்பது பாட்டியின் எண்ணம்.

“கைய பாரு பொத்து கெடக்கு… உங்க அப்பன மாரி எலி புடிச்சா நல்ல வருமானம் தான?”

கிட்டதிட்ட ஒருமாதமாகியும் வீட்டைவிட்டு வெளியேறாமல், களையெடுக்கும் வேலைக்கு செல்லாமல் கிடக்கும் அம்மா. உலை கொதிக்க வைக்க பணமில்லாத நிலையில், துக்கம் விசாரிக்க வருபவர்கள் கொடுத்துப் போகும் அந்தப் பணத்தில் எத்தனை நாள் தான் சமாளிப்பது? ஊர்க்காரர்கள் பலரும் நஞ்சை நட்டு முதல் உரமும் இட்டிருந்தார்கள். பாட்டி சொல்வதும் நியாயமாகப் பட்டது.

“ஆனா எனக்கு தான் தெரியாதே ஒரு எலிக்கு எவ்ளோ வாங்கனும்னு?”

“அது ஒன்னும் மலைய சாய்க்ற வேல இல்ல”… 50ருவா வரைக்கும் வாங்குதானுவ, ஏக்கருக்கு 20காணும் வச்சாலும் போதும் நல்ல லாவம்லா..”

“அந்திக்கு வீட்டுக்கு வந்து ஒம்மட்ட சொல்றேன் சொல்லித்தருவா.” மீண்டும் மாடு இருக்குமிடம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள் பாட்டி. அவனுக்கும் அது பிடித்திருந்தது. வயலை யாருக்காவது “அடச்சி” கொடுத்துவிட்டு இந்த வேலையில் பணம் சம்பாதித்து கடனையாவது அடைக்கலாமென்று சுடலைக்கு எண்ணம்.

பாட்டி சுண்ணாம்பு வைத்து கட்டிவிட்ட காலோடு மீண்டும் வயலில் இறங்கி வலியோடு வரப்பு வெடடிக் கொண்டிருந்தான் சுடலை. . பதினோறு மணிவரை நின்றால் போதும் வரப்புவெட்டு முடிந்துவிடும். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கொண்டு வந்த பழைய சாதத்தையும், பூவரசன் இலையில்வைத்து கொடுத்து அனுப்பிய ஊறுகாயும் விரித்து, இரண்டு கால்களையும் விரித்து வரப்பிலிருந்தபடி தென்னைக்கு நீர் போகும் பாதையில் அமர்ந்து பசியமர்ந்தான். மோட்டார் ரூமை அடைத்துவிட்டுச் செல்லலாமென மணி பார்க்கையில் மணி ஒன்பதரை ஆகியிருந்தது.

யோசனையின் பின் யோசனை. கால்வலியையும் பொருட்படுத்தாது சைக்கிளை உருட்டிக்கொண்டு வீட்டைப்பார்த்து நடக்கலானான் சுடலை. மழை நின்றதற்கான அறிகுறியாக ஈசல்களும் தட்டான்களும் முன்னும் பின்னுமாய் பறந்து கொண்டிருந்தது.

“ச்சொடல வரான்… சொடல வரான்”

சிலாகித்தும் சிரித்தும் வந்த சுடலையின் நண்பர்கள் சடசடவென அடித்து ஓய்ந்த மழை போல அமைதியாகினர். கொஞ்சமாய் முடி முளைத்த அந்த மொட்டைத் தலையுடன் சுடலை அவர்களைப் பார்த்தான். அவர்களோ சிரிப்பதற்கே சிரமப்பட்டனர். வேகமாய் வீடு வந்து சேர்ந்தவன் திண்ணையினோரம் இருக்கும் தூணில் சைக்கிளை சாய்த்து போட்டு விட்டு திண்ணையிலேயே தூங்கினான்.

சைக்கிள் சத்தம், திண்ணையில் ஆள் நடமாடும் சத்தம் எதையும் உணரமுடியாதவளாய் சுடலையின் அம்மா வீட்டிற்குள் படுத்திருந்தாள்.

“ஏய் பொன்னம்மா…ஏளா?”

“ஒம்மொவன் வந்து திண்ணையில தூங்குதான் அதகூட பாக்காமால இருப்ப…”

“இந்த சேலகாரபய ஓயாம ருவாய்க்கு வாரான் அவன்னு நெனச்சேன்… இவுக இருக்கும்போது தொடோடியா ( தொடர்ச்சி) 3 சீலை எடுத்தேன். அந்த ருவா அப்டியே கெடக்கு”.

மகனுக்கு இந்த சங்கடமெல்லாம் தெரியக்கூடாதென தெளிவாய் இருந்தாள் சுடலையின் அம்மா. பாட்டியிடம் சொல்லும் போதும் காதும் காதுமாய் சொல்லி முடித்துவிட்டு திண்ணையில் வந்தமர்ந்தாள்.

வயலில் வைத்து சொன்னதையெல்லாம் மீண்டும் பாட்டி சொன்னதும், சுடலை போலவே அவனின் அம்மாவுக்கும் சரியான யோசனையாய் தெரிந்தது. அதற்குள் சுடலையும் முழித்திருந்ததால் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். எலி பிடிப்பதற்கான கிட்டியை எல்லாம் வரிசையாய் எடுத்து அடுக்கினான்.

“காலைல ஓடைல போட்டு ஒருக்கா கழுவி எடுத்துட்டு வா… ஒன் அப்பன் வேலையை செய்ய நீ இருக்கனு அப்ப தான் நாலு பேரு தேடி வருவான் நாலு பேருட்ட சொல்லுவான்”

அப்படிச்சொன்னதும் சுடலைக்கு கொஞ்சம் பெருமையாய் இருந்தது…

வயல் வேலையை பார்த்தபடி தெரிந்தோரிடமும் கேட்போரிடமும் சொல்லி வைத்திருந்தான் சுடலை. முன்னமே தன் வயலுக்கு எத்தனை எலி கிட்டியென்று ஒவ்வொருவராய் முன் பணமும் கொடுத்த வண்ணம் இருந்தனர். நாட்கள் மிக வேகமாய் நகரத்துவங்கியது.

சரியான நேரத்தில் நடவு தொடங்கியவர்களுக்கு பால் வெடிக்கத் துவங்கியிருந்தது. சுடலையை தேடத் துவங்கினர். பணம் கைகளில் புழங்கத் துவங்கியது. பணத்தின் வரவு இருந்தும் தினசரி சீட்டுக்காரர்களும், காரியத்திற்கு கடன் கொடுத்தவர்களும் வீடு தேடி வரத்துவங்கினர்.

சிநேகிதமாய் சுடலையின் அப்பாவிடம் பழகிய பக்கத்து ஊர்க்காரர்களில் சிலர், இங்கு நடப்பதைக் கேள்விப்பட்டு, போன முறை நடவுக்கென்று வாங்கிச் சென்ற எலி கிட்டியை திரும்பக் கொடுத்து அதற்கான பணத்தையும் கொடுத்தனர். அதோடு அவர்கள் ஊரிலும் எலி கிட்டி போடச் சொல்லி கேட்டுக் கொண்டனர். சுடலை பம்பரமாய் சுழலத் துவங்கினான்.

“கடுக்ராண்டி மொவன் அப்பன மிஞ்சிடுவான் போல. சிட்டா பறாக்கான…”

காதுபடவே புகழ்ந்தனர்

வீட்டுக்கு பணம் கேட்டு வர வேண்டாமென்று தெருவிலேயே மறைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிழமை இவ்வளவு பணம் தருவதெனவும் சீக்கிரமே கடனை அடைப்பதாகவும், சொல்லியனுப்பினான் சுடலை. வடக்கு நோக்கியிருக்கும் அம்மன் கோவில் மதிலையொட்டி ஒரு வேப்பமரமிருக்கும் அதனருகே பணத்தோடு அமர்ந்திருப்பான். சொன்னவர்களெல்லாம் பணம் பெற்றுச்சென்றார்கள்.

கருவாடு சுட்டு, பருப்புக் குழம்பு வைத்திருந்தாள் பொன்னம்மாள். சுடலை சாப்பிட்டுவிட்டு வயலுக்கு செல்லலாமென வீட்டிற்கு வந்தான். அருகிலிருக்கும் தூணில் அமர்ந்து, சம்மணமிட்டு இருப்பதுபோல ஒருகாலை மடக்கி ஒருகாலை முட்டுகொடுத்து தலையில் வைத்திருந்தாள்

“எம்மோ”

“இந்த சேலக்காரணுக்கு எவ்ளோ குடுக்கனும்? நான் வரதுக்குள்ள இருட்டிட்டுனு ஊருக்கு போய்ட்டானாம்? இங்க வந்தானா?”

“எம்மொவன்ட்ட பேசிகிடுங்கனு சொல்லிவுட்டேன்…”

“மொத்தமா எவ்ளோனு சொல்லு நாளைக்கு வந்தாம்னா அவன கணக்கு முடிச்சி அனுப்பு…”

“எதுக்கு மக்கா?”

“ஊரு கல்லுல ஒருமாதிரி பேசுதானுவ அதான்.”

எந்த சொல் ஊர் வாயிலிருந்து விழக்கூடாது என்று பொன்னம்மாள் நினைத்தாலோ அந்த சொல் விழுந்தது. அதும் தன் மகனிடமிருந்தே விழுந்தது.

சாப்பிட்ட தட்டில் கையைக் கழுவியவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் சாக்குகளின் மேல் கிடந்த டவலில் கையைத் துடைத்துவிட்டு வெளியேறினான் சுடலை.

“கதவ சாத்திக்கமோ… நான் வெள்ளனெ வாரேன்”

“எவஞ்சொன்னது” என கேட்டு கோபப்படவோ, சண்டையிடவோ வாய்ப்பில்லாமலிருந்தது பொன்னம்மாளுக்கு.

சொன்னது மகன்!

யோசித்தாள்..

நாளையே ஊரில் யாராவது பையனிடம் பேசிவிட்டால்! கைகலப்பு வரலாம். ஏன் கொலைகூட நிகழலாம். மீண்டும் யோசித்தாள்.

“அப்பனுக்குன்னு மொட்ட போட்ட தலைல முடி கூட மொளைக்கல. இந்தப்பயல பத்தி கொஞ்சங் கூட யோசிக்காம, ரோஷக்காரி புருஷன் பின்னாடியே போய்ட்டாளப்பா”

அதே ஊர்கல்லில் இருப்பவர்கள் பேசத்துவங்கினர் மறுநாள் …

 

 

1

       – ரமேஷ் ரக்சன்

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here